Tuesday, June 28, 2016

தனக்குத் தானே ஆப்பு வைத்துக் கொண்ட பஷீர்.

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளரும் முன்னாள் அமைச்சருமான பஷீர் சேகுதாவூத் இனி எந்தவொரு தேர்தலிலும் போட்டியிடுவதில்லை என்று எடுத்திருக்கும் தீர்மானம்தான் இன்று முஸ்லிம் அரசியல் அரங்கில் பரபரப்பாகப் பேசப்படும் தலைப்பாக மாறியுள்ளது.

அவரது அந்தத் தீர்மானத்தின் பின்னணி என்ன ?அவர் இந்த நிலைமைக்குத் தள்ளப்படுவதற்கு காரணம் என்ன?என்று ஆராய்ந்து பார்த்தால் அவரது பிழையான அரசியல் நிலைப்பாடே இதற்கு காரணம் என்பதை அறியலாம்.

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரபின் மறைவைத் தொடர்ந்து அந்தக் கட்சி பிளவு என்ற தலையிடியைச் சந்திக்கத் தொடங்கியது.அஷ்ரப் உயிருடன் இருந்தபோது தங்களது பதவி ஆசையை நிறைவெற்றிக்கொள்ள முடியாமல் இருந்தவர்கள் அஷ்ரப் மரணமடைந்தபோது உள்ளார மகிழ்ந்தார்கள்.

கட்சியின் அடுத்த தலைவர் ரவுப் ஹக்கீம் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர் அல்ல என்ற ஒரு காரணத்தை முன்வைத்து-பிரதேசவாதத்தைத் தூண்டி அதனூடாகக் அவர்கள் கட்சி தாவி அமைச்சுப் பதவிகளைப் கொண்டு நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றிக் கொண்டனர்.

அவர்களின் திட்டப்படி கட்சி பிளவுபட்டது.அமைச்சுப் பதவிக் கனவும் நிறைவேறியது.அதன் பிறகு,2005 இல் மு.கா மற்றுமொரு பாரிய பிளவைச் சந்தித்தது.சந்திரிக்கா அம்மையார் ஜனாதிபதியாக இருந்த அந்தக் காலப்பகுதியில் மு.காவில் இருந்து ஹுசைன் பைலா,ரிசாத் பதியுதீன் ,அமீர் அலி மற்றும் நஜீப் ஏ மஜீத் ஆகியோர் அரசு பக்கம் பல்டி அடித்து அமைச்சுப் பதவிகளையும் பெற்றுக்கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து இடம்பெற்ற 2005 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த வெற்றி பெற்று அவரின் ஆட்சி ஆரம்பமானது.அவரது ஆட்சியின்போதும் மு.காவுக்குள் பிளவுகள் ஏற்படும் அறிகுறிகள் தென்பட்டன.மஹிந்தவின் உறவினர்களுடன் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொண்டு அவர்களின் ஊடாக அமைச்சுப் பதவிகளைப் பெறுவதற்கு மு.கா உறுப்பினர்கள் சிலர் ரகசியமாக முயற்சி எடுத்தனர்.

இந்தச் சதியை நன்கு உணர்ந்து -தொடர்ந்தும் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்தால் தான் மட்டும்தான் கட்சியில் மிஞ்சுவேன் என்பதை அறிந்து ரவூப் ஹக்கீம் கட்சியின் பிளவைத் தடுப்பதற்காக அறைகுறை மனதுடன் மஹிந்த அரசில் போய் இணைந்து கொண்டார்.

தேசிய பட்டியலுக்கான பஷீரின் போராட்டம்


அவ்வாறு இணைந்தும் கூட,அமைச்சுப் பதவிக்காக அங்கு இன்னுமொரு தடவை பிளவு ஏற்பட்டது.கட்சியின் தவிசாளராக இருந்துகொண்டு கட்சியின் தலைவருக்கே தெரியாமல் பஷீர் சேகுதாவூத் அமைச்சுப் பதவியைப் பெற்றுக் கொண்டமைதான் அந்தப் பிளவுக்குக் காரணம்.ஆனால்,அவர் கட்சியை விட்டு வெளியேறவில்லை.

கட்சிக்குள் ஏற்பட்ட பிளவுகள் உட்பட அனைத்துப் பிரச்சினைகளுக்குமான தீர்வாக ஹக்கீம் ஆட்சி மாற்றத்தையே நாடினார்.இதனால்தான் ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களில் மஹிந்தவுக்கு எதிரான அணியில் நின்று போராடினார்.

2015 இல் அவர் எதிர்பார்த்த ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.கட்சியை மீளக் கட்டியெழுப்புவதற்கான சாதகமான நிலைமையும் தென்பட்டது.இருந்தாலும்,அதே வருடம் இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தல் மு.காவுக்கு சாதகமானதாக அமையவில்லை.கடசியைப் பலப்படுத்துவதற்கு ஏதுவான பெறுபேறுகள் அந்தத் தேர்தலில் கிடைக்கவில்லை.

2010 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் இரண்டு தேசியப் பட்டியல் ஆசனங்கள் உட்பட எட்டு ஆசனங்களை மு.கா பெற்றிருந்தது.ஆனால்,2015 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் இரண்டு தேசிய பட்டியல் ஆசனங்கள் உட்பட ஏழு ஆசனங்களை மாத்திரம்தான் பெற்றது.இருந்த ஒன்று பறிபோனது.

திருகோணமலை மற்றும் வன்னி ஆகிய மாவட்டங்கள் மு.காவுக்கு அதிர்ச்சித் தோல்வியைக் கொடுத்தன.அந்த மாவட்டங்கள் கொண்டிருந்த தலா ஒவ்வோர் ஆசனமும் பறிபோனது.பதிலுக்கு அம்பாறை மாவட்டத்தில் ஓர் ஆசனம் அதிகரித்தது.மொத்தத்தில் ஓர் ஆசனம் பறிபோனது.இந்தப் தோல்விதான் தேசியப் பட்டியல் ஆசனப் பகிர்வில் மு.காவுக்கு சிக்கலை ஏற்படுத்தியது.

திருகோணமலை மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் ஒருவரும் அமைச்சர் ரிசாத் பதியுதீனின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் சார்பில் ஒருவரும் என இருவர் தெரிவான அதேவேளை,வன்னியில் ரிசாத் பதியுதீனின் கட்சியில் ஒருவரும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் ஒருவரும் என இருவர் தெரிவு செய்யப்பட்டனர்.

இவ்வாறு இரண்டு மாவட்டங்களிலும் தலா இரண்டு எதிரணி எம்பிக்கள் இருக்கின்ற நிலையில்,மு.கா சார்பில் ஓர் எம்பியும் இல்லாவிட்டால் இந்த மாவட்டங்களில் மு.காவை வளர்த்தெடுக்க முடியாது என்பதை
நன்கு உணர்ந்த மு.காவின் தலைவர் ரவூப் ஹக்கீம், கிடைத்த இரண்டு தேசியப் பட்டியல் ஆசனங்களில் ஒன்றை திருகோணமலைக்கு வழங்கினார்.

இப்படியானதொரு இக்கட்டான நிலையில்தான் தொடர்ச்சியாக தேசிய பட்டியல் எம்பி பதவிகளை அனுபவித்து வந்த அக்கட்சியின் தவிசாளர் பஷீர் சேகுதாவூத்தும் செயலாளர் நாயகமாக இருந்த ஹஸன் அலியும் மீண்டும் தேசிய பட்டியல் எம்பி பதவி கேட்டு போராட்டத்தைத் தொடங்கினர்.அந்தப் போராட்டத்தில் தீவிரமாக நின்றவர் பஷீர்.போராட்டம் தோல்வி கண்டத்தைத் தொடர்ந்துதான் இனி எந்தவொரு தேர்தலிலும் போட்டியிடுவதில்லை என்ற முடிவை பஷீர் எடுத்துள்ளார்.

தலைமைத்துவப் பதவியை கைப்பற்ற பஷீர் செய்த சதி

பஷீருக்கு இந்த நிலைமை ஏற்படுவதற்குக் காரணம் அவருக்கும் கடசியின் தலைமைத்துவத்துக்கும் இடையில் ஏற்பட்ட முறுகல்தான்.கடசியின் தலைவர் பதவியைக் கைப்பற்றுவதற்கு பஷீர் 2010 இல் எடுத்த பிழையான நடவடிக்கைதான் அவரை இந்த நிலைமைக்கு இட்டுச் சென்றுள்ளது.

மஹிந்த ஆட்சியில் மஹிந்தவின் சகோதரர் பஸில் ராஜபக்ஸவுடன் நெருங்கிய உறவைக் கொண்டிருந்தார் பஷீர்.பஷீரைக் கொண்டு காட்சியைப் பிளவுபடுத்துவதற்கு பஸில் தீட்டிய திட்டத்துக்கு பஷீர் பலியாகிப் போனார்.

மு.காவின் தலைமைத்துவப் பதவியைப் பறித்து பஷீருக்கு வழங்குவதோடு அவருக்கு ஒரு கெபினட் அமைச்சுப் பதவி மற்றும் அவருடன் வருபவர்களுக்கு இரண்டு பிரதி அமைச்சுப் பதவிகள் வழங்கப்படும் என்று பஸில் வழங்கிய வாக்குறுதிக்கு பஷீர் மயங்கிப் போனார்.

2010 ஆம் ஆண்டு நோன்பு மாதம் மு.காவின் அரசியல் உயர்பீட உறுப்பினர்களுல் ஒருவரான முழக்கம் மஜீதை கொழும்புக்கு அவசரமாக அழைத்த பஷீர் அரசுடன் இணையும் யோசனையை அவரிடம் தெரிவித்தார்.தலைவர் ஹக்கீமிடம் பேசி இது தொடர்பில் முடிவெடுப்போம் என்று மஜீத் சொன்னதும் அதை நிராகரித்து தனது திட்டத்தை பஷீர் மஜீதிடம் கூறினார்.

ஹக்கீம் தலைமைத்துவத்துக்குத் தகுதி அற்றவர்.மு.காவின் தலைவர் பதவியை தனக்குப் பெற்றுத் தருவதாக பஸில் உறுதியளித்துள்ளார் என்று பஷீர் கூறினார்.இப்போதைய பிரதி அமைச்சர் ஏ.எச்.எம்.ஹரீஸையும் இவ்வாறே கொழும்புக்கு அழைத்து இதே விடயத்தில் கூறினார்.

பஷீரின் இந்தத் திட்டத்துடன் ஹரீஸும் முழக்கம் மஜீதும் உடன்படவில்லை.இந்த சம்பவம் எதுவும் தெரியாமல் அப்போது ரவுவ் ஹக்கீம் LLP பரீட்சைக்காக நுவரெலியாவில் படித்துக் கொண்டிருந்தார்.ஹரீஸ் இந்த விடயத்தை உடனடியாக ஹக்கீமிடம் எத்திவைத்தார்.பஸீரின் சதியால் கட்சி மீண்டும் உடைய போகிறது என்பதை உணர்ந்த ஹக்கீம் அரசுடன் இணையும் முடிவை எடுத்து அரசுடன் இணைந்து கொண்டார்.

தனது திட்டம் பிழைத்துப் போனதால் தனித்துச் சென்று கெபினட் அமைச்சுப் பதவியைப் பெற்றுக் கொண்டார் பஷீர்.அப்போது இருந்துதான் தலைவர் ஹக்கீமுக்கும் பஷீருக்கும் இடையிலான பணிப் போர் தொடங்கியது.

பஷீரை ஓரங்கட்டிய ஹக்கீம்

கட்சிக்கும் தலைமைத்துவத்துக்கும் பஷீர் ஆபத்தானவர் என்பதை உணர்ந்த ஹக்கீம் அந்த ஆபத்தில் இருந்து தப்புவதற்காக அவருக்கே உரிய பாணியில் காய் நகர்த்தினார்.பஷீருக்கு எதிராக பஷீரின் சொந்த ஊரான ஏறாவூரில் மாற்று ஏற்பாட்டை ஹக்கீம் செய்யத் தொடங்கினார்.

அந்த வகையில்,2012 கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஏறாவூரில் இருந்து ஹாபீஸ் நஸீர் அஹம்மட்டைக் களமிறக்கி முதலமைச்சராக ஆக்கினார்.2015 நாடாளுமன்றத் தேர்தலில் செய்யித் அலி சாஹீர் மௌலானாவைக் களமிறக்கி எம்பியாக்கினார்.

இந்த இரண்டு பேரையும் கொண்டு பஷீருக்கு எதிரான தனது திட்டத்தை ஹக்கீம் செவ்வனே நிறைவே ற்றினார்.இனி எந்தவொரு தேர்தலிலும் போட்டியிடுவதற்கு தனக்கு கட்சிக்குள் வாய்ப்பு கிடைக்காது.அவ்வாறு கிடைத்தாலும் வெல்ல முடியாது என்ற நிலை தோன்றியதும் பஷீர் இப்போது தானாகவே ஒதுங்கிக் கொண்டார்.

மேற்படி இருவரும் இல்லாத நிலையில்,பல வருடங்கள் ஏறாவூரில் தனி ராஜ்யம்நடத்தியபோதுகூட தேர்தல்களில் வெல்ல முடியவில்லை என்றால் இனி எப்படி வெல்லமுடியும் என்ற உண்மையை பஷீர் இப்போது நன்கு உணர்ந்ததால்தான் இனி எந்தவொரு தேர்தலிலும் போட்டியிடுவதில்லை என்ற முடிவை எடுத்துள்ளார்.

ஆரம்பத்தில் மிகவும் திறமையான-அரசியல் சாணக்கியமிக்க அரசியல்வாதியாகத் திகழ்ந்த பஷீர் காலப் போக்கில் அவர் அரசியலில் எடுத்த பிழையான-தூரநோக்கமற்ற நிலைப்பாடுகள் இன்று அவரை இந்த நிலைமைக்குக் கொண்டு வந்துள்ளது.

[எம்.ஐ.முபாறக் ]

Read more...

Saturday, June 25, 2016

ஐ.எஸ் இயக்கத்தின் கதை முடியப் போகிறது. எம்.ஐ.முபாறக்


முழு உலகமும் இன்று மிகவும் மகிழ்ச்சியுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் விடயம்தான் சர்வதேசத்தையே ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் .ஐ.எஸ் பயங்கரவாதிகளின் அஸ்தமனம்.அவர்களை முற்றாகத் துடைத்தெறியும் படை நகர்வுகளின் முன்னேற்றம் சர்வதேசத்துக்கு மகிழ்ச்சியைக் கொடுத்திருக்கின்றது.முழுமையான வெற்றியுடன் அந்த நகர்வுகள் அனைத்தும்முடிவடைய வேண்டும் என உலக நாடுகள் அனைத்தும் விரும்புகின்றன.

குறிப்பாக,உலக முஸ்லிம்களுக்குப் பெரும் தலையிடியைக் கொடுத்துள்ள-முஸ்லிம்கள் அனைவரையும் பயங்கரவாதிகளாகச் சித்தரித்துள்ள இந்த ஐ.எஸ் இயக்கம் முற்றாக ஒழித்துக்கட்டப்பட வேண்டும் என்ற விருப்பம் முஸ்லிம்களிடம்தான் அதிகம் உள்ளது.

ஐரோப்பிய நாடுகளில் இருந்து அதிக எண்ணிக்கையிலான முஸ்லிம் இளைஞர்கள் இந்த இயக்கத்தில் இணைவதாலும் ஐரோப்பிய நாடுகளையே இந்த இயக்கம் அதிகம் குறி வைத்துத் தாக்குவதாலும் அந்நாடுகளில் வாழுகின்ற முஸ்லிம்கள் உடல் மற்றும் உளரீதியாக அதிக தொல்லைகளை எதிர்நோக்கி வருகின்றனர்.ஐ.எஸ் பயங்கரவாதிகளைத் தேடும் சாக்கில் பொலிஸார் நடத்தும் நாடகத்தால் ஐரோப்பிய முஸ்லிம்கள் வெகுவாகப் பாதிக்கப்படுகின்றனர்.

பிரான்ஸ் மற்றும் பெல்ஜியம் ஆகிய நாடுகளில் ஐ.எஸ் நடத்திய தற்கொலைக் குண்டுத் தாக்குதலின்போது முஸ்லிம்கள் பல துன்பங்களை அனுபவித்தனர்.

வன்முறை என்றால் என்ன-ஆயுதக் கலாசாரம் என்றால் என்ன என்று தெரியாமல் வாழ்ந்து வரும் ஐரோப்பிய முஸ்லிம்கள் இன்று பயங்கரவாதிகளாகப் பார்க்கப்படுவதற்கு இந்த ஐ.எஸ் அமைப்புத்தான் காரணம்.

இந்த இயக்கம் இஸ்லாத்துக்கு முற்றிலும் முரணானது. இஸ்லாமிய பெயரில் இஸ்லாத்தை அழிக்க வந்த இயக்கம்தான் இது என்ற பிரசாரம் போதியளவில் முன்னெடுக்கப்படாததால் ஐரோப்பிய நாடுகளில் உள்ள பல முஸ்லிம் இளைஞர்கள் இன்னும் ஐ.எஸ் இயக்கத்தால் கவரப்படவே செய்கின்றனர். இப்போதும்கூட, அந்த நாடுகளில் இருந்து முஸ்லிம் இளைஞர்கள் அந்த இயக்கத்தில் இணையவே செய்கின்றனர்.

ஆனால்,அந்த இயக்கம் இப்போது அதன் முடிவு காலத்தை நெருங்கிக் கொண்டிருப்பதை அவதானிக்கக்கூடியதாக இருக்கின்றது. அந்த முடிவு பூரணமாக இல்லாவிட்டாலும் அவர்கள் நிலங்களை இழந்து கெரில்லாத் தாக்குதலுக்கு மாறுவர் என்பது நிச்சயம்.

2014 ஆம் ஆண்டு சிரியாவில் ஒரு பகுதியையும் ஈராக்கில் ஒரு பகுதியையும் கைப்பற்றி கிலாபத் [இஸ்லாமிய பேரரசு] ஆட்சி முறையை ஐ.எஸ் இயக்கம் பிரகடணப்படுத்தியது. அப்போது அவர்கள் வலிமையான நிலையில் இருந்துகொண்டு பல இடங்களை விறு விறுவெனக் கைப்பற்றி அவர்களின் போலிக் கிலாபத்தை இந்த இரண்டு நாடுகளிலும் விஸ்தரித்துக் கொண்டு சென்றனர்.

ஆரம்பத்தில் அவர்கள் இருந்த அசூர வேகத்தால் அரச படையினர் பின்வாங்கவே செய்தனர். பின்னர் சுதாகரித்துக் கொண்ட அரச படையினரும் அவர்களுடன் இணைந்த துணைப் படையினரும் அமெரிக்க மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளின் உதவியுடன்-விமானப் தாக்குதல்களின் பலத்துடன் முன்னேறத் தொடங்கினர். இதனால் ஐ.எஸ் இயக்கம் கைப்பற்றி இருந்த இடங்கள் ஒவ்வொன்றாகப் பறிபோயின.

ஈராக்கின் குர்திஸ்தான் பகுதியில் அமைந்துள்ள சின்ஜார் நகர் , அன்பார் மாகாணத்தின் ரமதி நகர், மொசூல் மற்றும் பலூஜா ஆகியவை ஐ.எஸ் இயக்கத்திடம் ஆரம்பத்தில் வீழ்ந்தன. பின்னர் ஈராக்கிய படையினரின் முன்னேற்றகரமான படை நகர்வால் சின்ஜார் மற்றும் ரமதி நகர் மீட்கப்பட்டன.

இப்போது ஈராக்கில் ஐ.எஸ் இயக்கத்திடம் எஞ்சி இருப்பது மொசூல் மற்றும் பலூஜா ஆகிய இரண்டு முக்கிய இடங்களும் வேறு சிற்சில கிராமங்களும்தான். மேற்படி இரண்டு இடங்களும் வீழ்ந்தால் ஈராக்கில் ஐ.எஸ் முழுமையாக வீழ்ந்தமைக்குச் சமமாகும்.

இந்த நிலையில், பலூஜா நகரை நோக்கிய படை நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டு அது இப்போது வெற்றியின் விளிம்பில் நிற்கின்றது. பலூஜாவை அண்டியுள்ள பல இடங்களை ஈராக்கிய படையினர் இப்போது மீட்டெடுத்துள்ளனர். இன்னும் ஒருசில நாட்களில் பலூஜா முற்றாக வீழ்ந்துவிடும் நிலையில் உள்ளது.

மறுபுறம், சிரியா படையினரும் சமகாலத்தில் ஐ.எஸ் இயக்கத்துக்கு எதிரான தாக்குதலைத் தொடங்கியுள்ளனர். சிரியா அரசுக்கும் அந்நாட்டின் எதிர்கட்சிகளுக்கும் இடையில் செய்துகொள்ளப்பட்ட போர் நிறுத்த உடன்படிக்கையைத் தொடர்ந்து சிரியா படையினர் ஐ.எஸ் இற்கு எதிரான தாக்குதலைத் தீவிரப்படுத்தினர்.

இதனால், பல்மைரா நகரை ஐ.எஸ் இயக்கம் இழந்தது. தொடர்ந்து ஐ.எஸ்ஸின் தலைநகராகத் திகழும் ரக்கா நகரைக் கைப்பற்றுவதற்கான படை நடவடிக்கை இடம்பெறுகின்றது. இந்த நகரம் மீட்கப்பட்டால் சிரியாவில் ஐ.எஸ்களின் கதை முடிவுக்கு வந்துவிடும்.

சிரியாவும் ஈராக்கும் பறிபோகும்பட்சத்தில் லிபியாவையே அவர்கள் தளமாகப் பயன்படுத்தத் திட்டமிட்டிருந்தனர். 2014 ஆண்டு முதலே அவர்கள் அங்கு கால் பதிக்கத் தொடங்கிவிட்டனர். ஆனால், அவர்களுக்கு எதிராக சம காலத்தில் அங்கும் தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. அவர்கள் கைப்பற்றி இருந்த எரிபொருள் துறைமுகம் மீட்கப்பட்டுள்ளது. ஏனைய இடங்களையும் மீட்டெடுக்கும் சண்டை உக்கிரமடைந்துள்ளது.

இவ்வாறு ஐ.எஸ்கள் நிலைகொண்டிருக்கும் மூன்று நாடுகளில் ஒரே நேரத்தில் தாக்குதல் நடத்தப்பட்டு அவர்கள் தோல்வியின் விளிம்புக்குத் தள்ளப்பட்டுள்ளனர். அவர்கள் ஒரே நேரத்தில் மூன்று நாடுகளையும் இழக்கப் போவது சாத்தியமாகும் எனத் தெரிகின்றது.

அவ்வாறு அந்த நாடுகளை இழக்கும்பட்சத்தில் அவர்களின் போலிக் கிலாபத் வலுவிழந்துவிடும்.அவர்கள் கெரில்லாத் தாக்குதலுக்கே மாற வேண்டி வரும்.அந்த கெரில்லாத் தாக்குதல் மூலம் எதையும் பெரிதாகச் சாதிக்க முடியாது; அவர்களின் கிலாபத்துக்கு உயிரூட்ட முடியாது.

ஆகவே,உலகம் இன்று ஐ.எஸ் பயங்கரவாதிகளின் வீழ்ச்சியை மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து நிற்கின்றது.மிக விரைவில் ஐ.எஸ் இயக்கத்தின் கதை முடிவடையப் போவது நிச்சயம்.

Read more...

பெண்களே 'கண்கள்!' அழகுநோக்கிய அபாயம்? விஜிதா லோகநாதன், ஜெர்மனி.

இன்றைய உலகம் விளம்பரயுக்திகளுக்குள் கட்டுண்டுகிடக்கிறது. உணவு முதல் வைத்தியம், அழகு முதல் ஆடைகள், அநாவசிய தேவைகள்-சேவைகள் என அனைத்திலுமே விளம்பர இருட்டையே வெள்ளொளியாகக் கருதவைத்துவிட்டார்கள். சுவாசக்காற்றும் பைகளில் அடைத்து விற்பனைக்கு வந்தாற் கூட ஆச்சரியப்படுவதற்கில்லை. இலகுவாக இலவசமாகக் கிடைக்வுள்ள மனிதவளம் அனைத்தையும் வர்த்தக்குழுமங்கள் தம் லாபத்தேவைக்காகக் காவுகொண்டுவிட்டன.

அதிலும் ஆண்களைவிட விசேடமாகப் பெண்கள் விளம்பர வலைக்கண்களுக்குள் வேடன் வலையின் மான்களாகச் சிக்கிக்கொண்டனர். அழகு என்பது பெண்களுக்கு உணவை, நீரை விடவும் முக்கியமாகப் பார்க்குமளவுக்கு கற்பிதப்படுத்திய கலை-கலாச்சாரப் பாங்குகளும் இன்றைய விளம்பர வர்த்தகர்களுக்கு பெரிதும் துணைநிற்கின்றன.

இந்தவகையில் இன்றைய இளம் தலைமுறைப் பெண்கள் மட்டுமல்ல தாய், பேத்தியரும் கூட அழகுபடுத்துகிறோம் என்ற பெயரில் தம் ஆயுள்நீட்சியையும், ஆரோக்கியத்தையும் அழிப்பதோடு பணத்தையும், நேரத்தையும் வீண்விரயம் செய்கிறார்கள்.

அழகுநிலைய(Beauty Parlor)ங்கள் சந்திக்கு சந்தி தெருவுக்கு பத்து எனப் பெருகிவருகின்றன. குறைந்த நாட்கள் பயிற்சி, குறைந்த முதலீடு என்பதால் வேலையற்றிருக்கும் பெண்களும் இதைத் தொழிலாக்கிக்கொள்ள முனைவதால் கிராமங்களிலும் குடிசைக் கைதொழிலாக வியாபித்துவிட்டிருக்கிறது.

இதைதொட்டு ஒப்பனைப்பொருட்கள்(Kosmetik) உற்பத்தி அது தொடர்பான விற்பனைகளும் லாபமீட்டும் அதிக வழிகளாக அறியப்பட்டுவிட்டன.

ஓப்பனைபொருட்களினதும் அவைகள் அகற்றி(Remover) களினதும் தரமென்பது தாக்கமான இரசாயனங்களின் பங்களிப்புடனே தான் தயாராகின்றன. இந்த இரசாயனங்களின் தாக்கம் என்ன? எவ்வளவு காலத்தில் இவை வெளிப்படும் என்பதுபற்றிய ஆய்வுகளோ, மனித உடல் உறுப்புகள் அமைப்புகள் பற்றிய அறிவோ இத் தொழில் செய்பவரிடமோ, இதற்காகப் போகும் பெண்களிடமோ இதுவரை தெரிந்திருக்க வாய்ப்பேயில்லை.

பிளாஸ்டிக் யன்னல் சட்டங்கள், பொருட்களின் மேற்தளங்களில் அகற்றமுடியாத கறை, புகைப்படிவுகளிருந்தால் நகங்களில் மை அகற்றும் Remover சிறிய பஞ்சிலெடுத்துப் போட்டுப்பாருங்கள் ஒற்றைப் பாவனையோடு பளிச்சென்றிருக்கும். காரணம் நுண்ணிய மேற்படையோடு சேர்த்தே அழுக்கைக் அகற்றுகிறது என்பதுதான் உண்மை.

நகங்கள், முடிகள் இறந்த கலப்படைகள் என்றாலும் அவை அடியிலிருந்து தள்ளப்படுவதால் தலை, விரல் நுனிகளில் உள்ள உயிர்க்கலங்களுடன் இணைப்பிலுள்ளவை. தலைச்சாயம், நகப்பூச்சுகளின் இராசாயனங்கள் சிறுநீரகங்கள் வரை செறியவும் தாக்கவும் செய்வதாக அண்மையில் அறியப்பட்டிருக்கிறது. மீசைக்கு மையடித்தாற் சிலருக்கு மூச்சுத்திணறல், சொண்டுவீக்கம் என்பன எற்படுவதுண்டு. இது மென் பகுதி என்பதால் உடனே வெளிபடுகிறது. தலை ஓட்டிலுள்ள தசை, தோல் கலங்களிலும் இதன் தாக்கம் இருக்கவே செய்யும். காலப்போக்கில் வெளிப்படும்.

நாற்பதாயிரம் கோடி மயிரில் நாலு மயிர் வெள்ளையானால் மையடிக்கத் தொடங்கிவிடுகிறோமே அப்படியொரு பொய் அழகு அவசியம் தானா? இயற்கையின் அவ்வப்போதைய மாற்றங்களுக்கும் அழகுண்டு, அதுதவிரக் காரணங்களும் உண்டு. இரத்த அழுத்தம் வயதாக அதிகரிக்கும் போது தலையில் கறுப்புமுடிகளைவிட வெண்முடிகளின் பாதுகாப்பு சாதகமானது! மூக்குமயிர் உட்பட அனைத்தும் பலகோடி ஆண்டுகளின் பரிணாமத்தால் உடலுக்குத் அவசியம் தேவையெனக் கண்டு இயற்கையால் சேர்க்கப்பட்டவை. இவற்றில் எதை நீக்கினாலும் பாதிப்புண்டு. எனவே உடலிலிருந்து எதையாவது அகற்றி அழகுபடுத்தல் மரணத்தை விரைவுபடுத்தலுக்கு சமமானது!

கண்மயிர் பிடுங்குதல், முக-மார்பக பிளாஸ்டிக் சத்திரசிகிச்சை, அளவுமீறிய எடைக்குறைப்பு இவை இத்தகைய ஆபத்தானவை. மறைந்த சில கலையுலகப் பிரபலங்கள் இதற்கு உதாரணங்கள்.

புருவமயிர் பிடுங்குதல்-திருத்தல்;(Threading) இப்போ அனேகமான இளம் பெண்கள் தினசரி செய்கிறார்கள். இதற்கான இடுக்கிகளை தமது ஒப்பனை(Kosmetik) மடுப்பெட்டியில் போக்கு-வரத்திலும் தம்மோடு எடுத்துத் திரிகிறார்கள். இந்தப் புருவமயிர்கள் தோன்றும் வலயம் உடலிலும் குறிப்பாகக் கண்ணிலும் சக்திக்குரிய வலயம். நாம் சக்தியிழந்து இறப்பை நெருங்கும் போது இவையும் தாமாகக் கொட்டும் நிலைக்கு வந்துவிடுவன. இவை உயிர்ப்புள்ள புருவக்கலங்களின் இணைப்பில் கண்ணைப் பாதுகாத்து சக்தி வழங்குவன! உயிர்ப்போடு தொடர்புடையன!

பொருட்களில் பட்டுத் தெறிக்கும் ஒளிக்கதிர்கள் விழித்திரையில் விழுந்து காட்சியாவது பார்வை என்பது எம் பௌதீக அறிவு. இருந்தும் வெறும் புகைப்படக் கருவிபோலன்றி இதற்கப்பாலும் கண்ணில் காட்சியாகும் பொருட்களை ஒருவகை அதிர்வலைகள் சென்றடைவதாக அறியப்பட்டிருக்கிறது.

• எதிரெதிரா வரும் இரு நபர்களின் இடைவெளி அதிகமிருந்தாலும் ஒருவர் மற்றவரைப் பார்த்தால் அவரும் திரும்பிப்பார்ப்பார். அனேகரிடம் நடப்பது!
• நுண்ணுணர்வின் துணையின்றி எண்ணங்களைச் செயலாக்கும் ரெலிப்பதி (Telepathy) அடிப்படையில் ஒத்தகருத்துள்ள ஒருவரின் கண்மூடியிருக்க அவரது எண்ணம் மற்றவரின் பார்வையில் செயலாவதை பலர் நிரூபித்துக் காட்டியிருக்கிறார்கள்.
• ஓரிருவர் பார்வையில் பட்ட எடை குறைந்த கண்ணாடிப் பொருட்கள் நடுங்கி விழுந்து நொறுங்கிய செய்திகள் அறிந்தவை . . . . . .
• வெளவால், பூனை, சிலவகை மீன்கள் கண்களிலுள்ள ஒளி விசேடங்கள்!

இந்த வகையில் உடலில் ஓர் அரியவகை உறுப்பு விழி என்பதாலல்லவா அரிய எதையும் கண்போல் என்கிறோம். சிரசில் கண்ணின் சுற்றுவட்டப் பரப்பைச் சூழ காமபூரி, திலர்தம், பொட்டு, மின், நேமம், அடக்கம், பட்சி, கண்ணாடி, பால எனப் யோகிகளால் பெயரிடப்பட்ட வர்மப் புள்ளிகள் இருப்பதாக அண்மையில் வாசித்தறிந்தேன். இவற்றின் வெப்பத் தணிப்புக்காகவும் பாதுகாப்புக்காகவுமே அடர்ந்த புருவமயிர் பிரதேசமுள்ளது. எனச் சொல்லப்படுகிறது. இதுவரை இதை அறிந்திருக்க நமக்கு வாய்ப்பில்லை. ஆனால் அறிந்தபின் அவற்றை அகற்றுவதைக் கைவிட வாய்பிருக்கிறது. மற்றவை பிளாஸ்டிக் சத்திரசிகிச்சை மிக அரிதாகவே இடம்பெறுவது. அதுபோல் எடைக் குறைப்பினவசியத்தை இல்லாமலாக்க நேர்-சீரான உணவுப்பழக்கம், உடலுழைப்பு, உடற்பயிற்சிகள் கைகொடுப்பன. அவையே சரியான மார்க்கமுமாகும்.
Read more...

Saturday, June 18, 2016

இந்திய விமானப்படையில் முதல் முறையாக போர் விமானங்களை இயக்க 3 பெண் பைலட் சேர்ப்பு

இந்திய விமானப்படை வரலாற்றில் புதிய சாதனையாக போர் விமானங்களை இயக்குவதற்கு முதல் முறையாக 3 பெண் பைலட்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இன்று விமானப்படையில் பணியை துவக்கிய இவர்கள் உள்பட பயிற்சி முடித்த வீரர்களின் அணிவகுப்பை மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் மனோகர் பரிக்கர் பார்வையிட்டார். இந்திய விமான படையில் பெண்கள் ஏற்கனவே இடம்பெற்றிருந்தாலும் போர் விமானங்களை இயக்கும் பணியில் ஆண் பைலட்களே ஈடுபடுத்தப்பட்டு வந்தனர். தற்போது முதல் முறையாக பெண் பைலட்களும், போர் விமானங்களை இயக்கும் பயிற்சி பெற்று வந்தனர். இதில் பயிற்சி முடித்த பீகாரைச் சேர்ந்த பாவனா கந்த், மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த அவானி சதுர்வேதி, ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த மோகனா சிங் ஆகிய மூன்று பெண் பைலட்களும் விமானப்படையில் இன்று தங்கள் பணியில் சேர்ந்தனர்.

இவர்கள் 3 பேருக்கும் இங்கிலாந்து நாட்டின் தயாரிப்பான ஹாக் போர் விமானத்தை இயக்குவதற்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இந்திய விமான படையில் பெண் பைலட்களை சேர்ப்பதென மத்திய அரசு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முடிவு செய்து அறிவித்தது. இதை தொடர்ந்து, முதல் கட்ட பயிற்சியில், மூன்று பெண் பைலட்களும் சுமார் 150 மணி நேரம் இங்கிலாந்து போர் விமானத்தை ஓட்டி சாதனை படைத்தனர். இந்நிலையில், ஐதராபாத் துண்டிக்கல் விமான படை தளத்தில் விமானப் படை பயிற்சி முடித்த இளம் வீரர்களின் அணிவகுப்பு இன்று காலை நடைபெற்றது. இதில் மூன்று பெண் பைலட்களும் இடம் பெற்றனர். மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் மனோகர் பரிக்கர் கலந்து கொண்டு அணிவகுப்பை பார்வையிட்டார்.

பெண் பைலட் மோகனாவின் தந்தை விமானப் படையில் அதிகாரியாக உள்ளார். அவரது தாத்தாவும் விமானப் படையில் பணி புரிந்தவர். பாவனாவின் தந்தை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் இன்ஜினியராக பணியாற்றி வருகிறார். அவானியின் தந்தை மத்திய பிரதேச அரசில் இன்ஜினியராக பணியாற்றி வருகிறார். விமானப் படை தளபதி அரூப் ராகா கூறுகையில், ''பெண் பைலட்கள் என்பதால் சிறப்பு சலுகை எதுவும் அளிக்க முடியாது. விமான படையின் விதிமுறைகளின்படி அவர்கள் பணியாற்றுவார்கள்'' என்று தெரிவித்தார்.

பெண் பைலட்கள் கூறுகையில், ''இப்படியொரு பொன்னான வாய்ப்பு எங்களுக்கு கிடைத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. எங்கள் கனவு நிறைவேறியுள்ளது. நாங்கள் எங்களது திறமையை முழுமையாக வெளிப்படுத்துவோம்'' என பெருமிதத்துடன் தெரிவித்தனர்.


Read more...

சாத்தான்களின் சட்டத்தரணிகள்

தமிழ் தேசியக் கூட்டமைப்பு, பிரித்தானிய தமிழர் பேரவை, உலகத்தமிழர் பேரவை, நாடு கடந்த தமிழீழம் போன்ற வலதுசாரிப் பிற்போக்கு தமிழ்த்தேசியவாதிகள் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், இந்தியா போன்ற உலக மகா அயோக்கியர்களினால் தமிழ் மக்களின் பிரச்சனைகளிற்கு தீர்வு கிடைக்கும். பாதிக்கப்பட்ட எம் மக்களிற்கு இந்த மலைவிழுங்கி மகாதேவன்கள் நீதி பெற்றுத் தருவார்கள் என்று இன்றைக்கு வரைக்கும் கூசாமல் பொய் சொல்கிறார்கள். இவர்கள் எல்லோரும் தான் இலங்கை அரசுடன் சேர்ந்து எம்மக்களை கொன்றார்கள் என்ற உண்மையை, ஆயிரக்கணக்கான எம்மக்களின் மரணங்களை தூசியை தட்டி விட்டு போவது போல போய் தம் பிழைப்புவாதங்களை தொடரலாம் என்று நாக்கை தொங்க போட்டுக் கொண்டு பதவிகளிற்காகவும், பணத்திற்காகவும் பொய் சொல்கிறார்கள்.

அண்மையில் பிரித்தானிய ஒளிபரப்பு கூட்டுத்தாபனத்தின் (B.B.C) செய்தி அறிக்கையில் பிரித்தானிய அரசின் வெளிநாட்டு புலனாய்வு பிரிவான (MI6. Military Intelligence, Section 6) அமெரிக்க கொலைகாரர்களான (C.I.A) உடன் சேர்ந்து இரு லிபிய குடும்பங்களை தாய்லாந்தில் இருந்து லிபியாவிற்கு 2004 இல் கடத்திய செய்தி வெளியானது. அப்துல் கக்கிம் பெல்கஜ் (Abdel Hakim Belhaj), அந்த நேரத்தில் ஆறு மாதக் கர்ப்பணியாக இருந்த அவரது மனைவி பாத்திமா பூட்சார் (Fatima Boudchar) மற்றும் சாமி அல் சாடி (Sami al-Saadi) அவரது குடும்பம் என அந்த நேரம் லிபியாவில் அதிகாரத்தில் இருந்த மும்மார் கடாபியின் எதிர்ப்பாளர்களை பாங்கொக்கில் வைத்து கடத்தி லிபியாவிற்கு அனுப்பி வைத்தார்கள்.

2004 இல் மும்மார் கடாபி அமெரிக்காவினாலும், மேற்கு நாடுகளினாலும் சர்வாதிகாரியாகவும், உலகப் பயங்கரவாதிகளின் தலைவனாகவும் காண்பிக்கப்பட்டவர். 21.12.1988 அன்று ஜேர்மனியில் இருந்து பிரித்தானியா ஊடாக அமெரிக்கா செல்லவிருந்த பான் அமெரிக்கா 103 விமானம் குண்டு வைக்கப்பட்டு ஸ்கொட்லாந்தின் லொக்கர்பி நகரத்திற்கு அருகாமையில் விழுந்து நொறுங்கியது. விமானத்தில் இருந்த 243 பயணிகள், 16 விமானசேவையாளர்களுடன் விழுந்த இடத்தில் இருந்த 11 லொக்கர்பி நகரத்தைச் சேர்ந்தவர்களும் உயிரிழந்தனர். இக் குண்டுவெடிப்பிற்காக அமெரிக்காவினாலும், பிரித்தானியாவினாலும் அழுத்தம் கொடுக்கப்பட்டு லிபியா மேல் ஐக்கிய நாடுகள் சபையினால் பொருளாதாரத்தடை விதிக்கப்பட்டது.

இவ்வாறு லிபியாவை பயங்கரவாத நாடாக, தமது பரம எதிரியாக தமது நாட்டு மக்களிற்கும், உலகத்திற்கும் படம் காட்டிக் கொண்டிருந்த அதே நேரத்தில் தான் கடாபியிற்கு எதிராக இயங்கி கொண்டிருந்த இவர்கள் இருவரையும் கடத்தி அனுப்பி வைத்து கடாபியுடன் ஒப்பந்தம் போட்டார்கள். இதன் பிறகு தான் 2004 இல் ஜோர்ஜ் புஸ்சின் வளர்ப்புப் பிராணியான பிரித்தானிய பிரதமர் ரொனி பிளேயர் கடாபியை லிபியாவில் வைத்து சந்தித்தார். பொருளாதார ஒப்பந்தங்கள் போடப்பட்டன. மேற்கு நாடுகளின் டீல்களிற்கு கடாபி ஒத்துக் கொண்டதால் வில்லனாக இருந்த கடாபியை "இவன் ரொம்ப நல்லவன்டா" என்று புஸ்சும், பிளேயரும் பாராட்டினார்கள்.

பின்பு "அரபு வசந்தம்" என்று அழைக்கப்பட்ட அரபு நாடுகளின் அரசுகளிற்கு எதிரான போராட்டங்களின் போது 2011 மாசி மாதத்தில் லிபியாவிலும் போராட்டங்கள் எழுந்தன. ஐக்கிய நாடுகள் சபை "மக்களைப் பாதுகாப்பதற்காக தேவையான எல்லா நடவடிக்கைகளையும் " எடுக்க வேண்டும் என்று தீர்மானம் போட்டது. (B.B.C, 16.12.2013, Arab Uprising country by country - Libya). கடாபியுடன் ஒப்பங்கள் போட்ட அமெரிக்காவும், பிரித்தானியாவும் அங்கம் வகிக்கும் நேட்டோ (NATO) அமைப்பின் விமானங்கள் அதே கடாபியின் அரசபடைகளிற்கு எதிராக குண்டுகள் போட்டன. மறுபடியும் வில்லனாக்கப்பட்ட கடாபி மேற்கு நாடுகளின் ஆதரவு சக்திகளினால் கொல்லப்பட்டார்.

கடாபியின் வீழ்ச்சிக்குப் பின்பு சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட பெல்கச்சும், அல் சாடியும் பிரித்தானிய அரசிற்கும், பெயர் குறிப்பிடப்பட்ட புலனாய்வு பிரிவைச் சேர்ந்தவர்களிற்கு எதிராகவும் வழக்கு தொடர்ந்தார்கள். லிபிய அரச ஆவணங்கள் பல அவர்களினால் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன. "மார்க்" என்பவர் கையெழுத்திட்டு கடாபியின் புலனாய்வு பிரிவின் தலைவராக இருந்த மூசாவிற்கு அனுப்பப்பட்ட கடிதம் ஒன்றில் "கடாபியையும், ரொனி பிளேயரையும் சந்திக்க உதவியதற்கு நன்றி தெரிவித்திருந்தார். மேலும் அதில் பெல்கச் லிபியாவிற்கு போய்ச் சேர்ந்ததை குறிப்பிட்டு "அது எங்களால் உங்களிற்கும், லிபியாவிற்கும் செய்ய முடிந்த சிறிய உதவி" என்றும் குறிப்பிட்டிருந்தார்.

பிரித்தானியாவின் அரச வழக்கு தொடரும் சேவை (Crown prosecution Service) பிரித்தானியாவின் உளவு நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் இவ்வாறான கடத்தல்களைச் செய்யும் தனிப்பட்டவர்களுடன் தொடர்பில் இருப்பதை ஒத்துக் கொண்டாலும் இந்த வழக்கில் எதுவிதமான ஆதாரங்களும் இல்லையென்றும் மேலும் அவர்கள் குறிப்பிட்ட பிரித்தானிய உளவுப்பிரிவைச் சேர்ந்த அதிகாரி தமது நடவடிக்கைகளிற்கு அரச ஒப்புதல் பெற்றிருந்தாலும் அது முறையான வழிகளில் கொடுக்கப்பட்டிருக்கவில்லை என்ற விஞ்ஞான விளக்கத்தையும் கொடுத்து வழக்கு தொடர எந்த விதமான காரணங்களும் இல்லை என்று முடிவு செய்தது. பிறகு என்ன கடத்துபவன் கோர்ட்டில் உத்தரவு வாங்கியா கடத்துவான். "வருமானத்திற்கு மேல் சொத்து சேர்ப்பதில் என்ன தவறு இருக்கிறது" என்ற இந்திய நீதிபதிகளின் பொருளாதாரப் புலமையை மிஞ்சி விட்டார்கள்.

பிரித்தானிய அரச வழக்கு தொடரும் சேவையின் முடிவை எதிர்த்து அவர்கள் இருவரும் குடியியல் உரிமை (civil claims) வழக்கு தொடர்ந்த போது ஆதாரங்கள் இல்லை என்று சொன்ன அதே வழக்கிற்கு அல் - சாடியிற்கு நீதிமன்றத்திற்கு வெளியில் தீர்வு காண்பதற்கு பிரித்தானிய அரச வழக்கு தொடரும் சேவை முடிவு செய்தது. அப்துல் கக்கிம் பெல்கச்சின் வழக்கு தொடர்கிறது. ("Tortured" rendition couple angry over failure to charge MI6, B.B.C, 09.06.2016).

இது தான் அமெரிக்காவினதும், மேற்கு நாடுகளின் அரசியல். அவர்களிற்கு தங்களது கொள்ளைகள் தடையில்லாது நடக்க வேண்டும். தங்களிற்கு பணியாத நாடுகளை பயங்கரவாத நாடுகள் என்பார்கள். ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி ஆட்சியை கவிழ்க்கப் பார்ப்பார்கள்; அல்லது தாங்களே நேரில் போய் ஆக்கிரமிப்பார்கள். தங்களது அடிமைகள் அதிகாரத்தில் இருக்கும் நாட்டில் அவர்களிற்கு எதிராக மக்கள் போராடினால் அப்போராட்டங்களை தமது அடிமைகளுடன் சேர்ந்து முறியடிக்கப் பார்ப்பார்கள். அப்போராட்டங்களை ஒடுக்க முடியாவிட்டால் தமது அடிமைகளை பலி கொடுத்து விட்டு தாம் போராடும் சக்திகளுடன் சேர்ந்து கொண்டு ஜனநாயக காவலர் வேசம் போடுவார்கள். மேற்கு நாடுகளின் அடிமையான எகிப்தின் கொஸ்னி முபாரக்கின் வீழ்ச்சியின் போது இந்த நாடகத்தைத் தான் போட்டார்கள்.

இந்த சர்வதேச பயங்கரவாதிகளை நம்பச் சொல்லி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, நாடு கடந்த தமிழீழம் போன்ற "வக்கீல் வண்டு முருகன்கள்" தமிழ் மக்களிடம் வக்காலத்து வாங்குகிறார்கள். தமிழ் மக்கள் தமது பிரச்சனைகளிற்காக ஒன்று திரண்டு போராடக் கூடாது என்பதற்காகத் தான் ஐக்கிய நாடுகள் சபையிற்கு போய் குச்சி மிட்டாயும், குருவி ரொட்டியும் வாங்கி வருவோம், மக்கள் எங்களிற்கு வாக்கு போட்டால் போதும் என்று கதை விடுகிறார்கள்.

"லிபியாவில் மக்களைப் பாதுகாப்பதற்காக தேவையான எல்லா நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்" என்று தீர்மானம் போட்டு நேட்டோவை படையிறக்கிய ஐக்கிய நாடுகள் சபை எம்மக்கள் மரணித்த போது ஏன் வாய் மூடி இருந்தது? தாய் இறந்தது தெரியாமல் அவளின் மார்பில் பால் குடித்த எம் குழந்தைகளின் அவலம் ஏன் அவர்களிற்கு கேட்கவில்லை? சாத்தான்களின் சட்டத்தரணிகள் ஏன் இதற்கெல்லாம் மறுமொழி சொல்வதில்லை?

Read more...

Thursday, June 16, 2016

விடுதலைப் புலிகளின் கொள்கைகளை அழிக்காமல் ஓயமாட்டாராம் மைத்திரி!!

ஈழக் கனவு பற்றிய விடுதலைப் புலிகளின் கொள்கைகளை சர்வதேசத்திலிருந்து அழிக்காமல் ஓயமாட்டேன் என்று இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன ஆவேசமாக தெரிவித்து உள்ளார்.

இலங்கையின் கொழும்பு நகருக்கு அருகே தெஷிவளையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அதிபர் மைத்திரிபால சிறிசேன, ”ஒரு நாடு, ஒரு இனம் என்ற ரீதியில் சகோதரத்துவத்துடன் வாழக்கூடிய சமூக அமைப்பினை நிலை நாட்டுவதற்காக, சமயத் தலைவர்களினதும் வழிகாட்டல் சிறப்பாக கிடைக்கப் பெற்று வருகிறது

யுத்த ரீதியாக விடுதலைப் புலிகள் தோல்வியுற்ற போதிலும், கொள்கை ரீதியில் அவர்கள் இன்னும் தோல்வி அடையவில்லை. விடுதலைப் புலிகளின் கொள்கைகளை உள்நாட்டிலும், சர்வதேச அளவிலும் பலர் இன்னும் பின்பற்றி வருகின்றனர்.

அதனால், விடுதலைப் புலிகளின் கொள்கைகளை அழித்தொழிக்க இலங்கை அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. விடுதலைப் புலிகளின் கொள்கைகள் உலகின் எந்தப்பகுதியில் இருந்தாலும், அவற்றை அழிக்காமல் விடப்போவதில்லை.

நான் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின், உலகத் தலைவர்களுடன் நல்லுறவைப் பேணி வருகிறேன். அதைப் பயன்படுத்தி விடுதலைப் புலிகளின் கொள்கைகளை ஒழிக்கப்போகிறேன்” என்று ஆவேசமாக தெரிவித்து உள்ளார்.

Read more...

Monday, June 13, 2016

தேசிய மனித உரிமை ஆணைக்குழுவின் வழிகாட்டலை பின்பற்றுமாறு வலியுறுத்தல்.

இலங்கை அரசாங்கம் கைது செய்தல் மற்றும் தடுத்து வைத்தல் போன்றன தொடர்பில், தேசிய மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வழிகாட்டல்களை பின்பற்ற வேண்டும் என, மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது.

அத்துடன், பயங்கரவாத தடைச் சட்டத்தை இரத்து செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், கூறப்பட்டுள்ளது.

பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்படும் என 2015ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை அரசாங்கம் வாக்குறுதி அளித்திருந்த போதிலும், அச் சட்டத்தின் கீழ் நபர்களை கைது செய்து தடுத்து வைப்பது தொடர்ந்து வருவதாகவும், கண்காணிப்பகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

யுத்தம் இடம்பெற்ற காலத்தில் பரந்தளவில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதுகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், குறிப்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என சந்தேகிக்கப்படுபவர்களுக்கு எதிராக இது பயன்படுத்தப்பட்டதாகவும், தற்போது வரை கைதானவர்களின் மொத்த விபரங்கள் தெரியவரவில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பயங்கரவாதத் தடைச்சட்டத்தை இரத்துச் செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், இந்த நடவடிக்கையானது மிகவும் மந்த கதியில் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசிய பிராந்தியத்திற்கான பணிப்பாளர் பிரட் அடம்ஸ் தெரிவித்துள்ளார்.

Read more...

Sunday, June 12, 2016

புதிய தேர்தல் முறை தொடர்பில் NFGG நடாத்திய விசேட செயலமர்வு.

உத்தேசிக்கப்படும் புதிய தேர்தல் முறையில் சிறுபான்மை மக்களின் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை பாதுகாப்பது தொடர்பான விஷேட செயலமர்வொன்று நல்லாட்சிக்கான தேசிய முன்னணி(NFGG)யின் ஏற்பாட்டில் கடந்த 8.6.2016 அன்று கொழும்பில் நடைபெற்றது. கொழும்பு ஹார்ட்டி நிலையத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தேர்தல் முறைகள் குறித்த சர்வதேச நிபுணரான கரே வோலன் அவர்கள் கலந்து கொண்டு விரிவான ஆலோசனைகளை முன்வைத்தார்.

NFGGயின் பொதுச்செயலாளர் நஜா முஹம்மட் அவர்கள் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அதன் தவிசாளர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான், கலாநிதி சுஜாதா கமகே, கலாநிதி சுசந்த லியனகே, 'கபே' அமைப்பின் தலைவர் கீர்த்தி தென்னகோன், சட்டத்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் ஹக்கீம், சட்டத்தரணி YLS.ஹமீட் உட்பட NFGG தலைமைத்துவ சபை உறுப்பினர்களும் ஏனைய பல சிவில் சமூக செயற்பாட்டாளர்களும் கலந்து கொண்டனர்.

உத்தேச புதிய யாப்பில் முக்கிய பகுதிகளில் ஒன்றான புதிய தேர்தல் முறை உருவாக்கத்தின் போது, சிறுபான்மை சமூகத்தினதும் சிறிய கட்சிகளினதும் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை எவ்வாறு உத்தரவாதம் செய்வது என்ற விடயம் முக்கிய பேசு பொருளாக இன்று மாறியிருக்கின்றது. தற்போது நடைமுறையிலுள்ள விகிதாசார முறை மாற்றப்பட்டு, தொகுதிவாரி தேர்தல் முறையும் விகிதாசார முறையும் கலந்த ஒரு புதிய தேர்தல் முறை உருவாக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையிலேயே தேசிய ரீதியிலான கலந்துரையாடல்களும் விவாதங்களும் நடைபெற்று வருகின்றன. மாவட்ட ரீதியிலான விகிதாசார தெரிவு முறையாகக் காணப்படும் தற்போதைய தேர்தல் முறையும் கூட தேசிய ரீதியில் ஒவ்வொரு கட்சிகளும் பெற்றுக்கொள்ளும் மொத்த வாக்கு விகிதாசாரத்திற்கு ஏற்ப பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை பெற்றுக்கொடுக்கவில்லை என்பது பாரிய குறைபாடாக சுட்டிக்காட்டப்படுகிறது. உதாரணமாக கடந்த பாராளுமன்றத் தேர்தலில் தேசிய ரீதியில் 4.6 வீதமான வாக்குகளை பெற்றுக்கொண்ட ஒரு கட்சி பாராளுமன்றத்தில் 7 வீதமான ஆசனங்களைப் பெற்றுள்ள அதே வேளை, தேசிய ரீதியில் 4.9 வீதமான வாக்குகளைப்பெற்ற மற்றுமொரு கட்சி 2.7 வீதமான பாராளுமன்ற ஆசனங்களையே பெற்றுக்கொண்டுள்ளது.

அந்த வகையில் தொகுதிவாரி மற்றும் விகிதாசார தேர்தல் முறைகளை உள்ளடக்கிய கலப்பு தேர்தல் முறையாக உருவாக்கப்படும் புதிய தேர்தல் முறையானது ஒவ்வொரு கட்சிகளும் பெற்றுக்கொள்ளும் மொத்த வாக்கு விகிதாசாரத்தினை பாராளுமன்றத்தில் பிரதிபலிக்கும் வகையில் எவ்வாறு அமைய முடியும் என்ற பல முற்போக்கான முன்மொழிவுகளை வோலன் அவர்கள் இக்கலந்துரையாடலின் போது முன்வைத்தார். குறிப்பாக சிறுபான்மை மற்றும் சிறிய கட்சிகளின் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தினை எவ்வாறு உத்தரவாதப்படுத்த முடியும் என்ற யோசனைகளை அவர் உதாரணங்களுடன் முன்வைத்து விளக்கினார்.

தேசிய ரீதியில் அல்லது மாகாண ரீதியில் விகிதாசார முறையும் தொகுதிவாரி தேர்தல் முறையும் பொருத்தமான முறையான விகிதத்தில் கலந்ததாக புதிய தேர்தல் முறை அமைய வேண்டும் என்ற தனது திட்ட முன்மொழிவுகளை அவர் சமர்ப்பித்தார். அத்தோடு தற்போது நடைமுறையிலுள்ள வெட்டுப்புளளி முறையினை முற்றாக ஒழிக்கவேண்டும் அல்லது கணிசமாக குறைக்க வேண்டும் என்பதும் வோலன் அவர்களின் முக்கியமான ஆலோசனைகளில் ஒன்றாகவும் இருந்தது. இது போன்ற தேர்தல் முறைகள் ஜேர்மன்,சுவிட்சலாந்து போன்ற நாடுகளில் எவ்வளவு தூரம் வெற்றிகரமாக அமைந்துள்ளது என்ற தனது சொந்த அவதானங்களையும் அவர் இதன்போது பகிர்ந்து கொண்டார்.இந்த யோசனைகளை ஜனாதிபதி பிரதமர் உள்ளிட்ட அரசாங்க உயர்மட்டத்தினருக்கு தான் சமர்ப்பித்திருப்பதாகவும் அவை தொடர்பில் அரசு சாதகமாக பரிசீலித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

Read more...

பா.உ அங்கஜன் இராமநாதன் 10.06.2016 அன்று பாராளுமன்றத்தில்.. ஆற்றிய உரை முழுமையாக

கௌரவ சபாநாயகர் அவர்களே :-

வடக்குக் கிழக்கு மக்கள் முகம் கொடுத்து வரும் பிரச்சனைகள் பற்றி பேசுவதற்கு நேரத்தை ஒதுக்கி தந்தமைக்கு எனது நன்றிகள். நான் யாழ்ப்பாணத்தையும் கிளிநொச்சியையும் பிரதிநித்துவப்படுத்துகின்றேன். ஏனைய மாவட்டங்களை போன்று இந்த மாவட்டங்களிலும் மக்கள் பல பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்து வந்தாலும் இவர்களின் பிரச்சனைகள் சற்று தனித்துவமானவை. காரணம் 30 வருட யுத்தித்தினால் இவர்களின் சாதாரணவாழ்கை மற்றும் வாழ்வாதாரங்கள் சேதமடைந்தமையால் ஆகும். போருக்கு பின்னர் எமது சாதாரண வாழ்க்கைக்கு திரும்புவதற்கு மிகக் கஷ்டப்பட்டு 3 தசாப்த போரினால் பல கோடிக்கணக்கான, கசப்பான அனுபவங்களை மறந்து எமது மக்கள் சமாதானத்தையும் சுதந்திரத்தையும் பெற்றுக்கொண்டிருக்கின்றார்கள். நாம் எல்லோரும் ஒன்றிணைந்து சம்மதித்து நடவடிக்கைகள் எடுப்பதன் மூலம் தான் இதனை நாம் அடைய முடியும். நான் வடக்கில் இருந்து வந்து சில விசேட பிரச்சனைகளை அதாவது வடக்கு மக்கள் நாளாந்தம் முகம்கொடுத்து வரும் பிரச்சனைகளை நான் கையாள்வதால் அவர்களுக்கு சில பிரச்சனைகள் உண்டு எனவும் அவை தீர்க்கப்பட வேண்டும் எனவும் உணர்கின்றேன். இம் மக்கள் சாதாரண நிலைக்கு திரும்புவதற்கு உதவுவது மட்டுமல்லாமல் அவர்களின் பிரச்சனைகளை இனம் கண்டு அவற்றைத் தீர்த்துவைக்க வேண்டும் என நம்புகின்றேன்.

உள்ளுரில் இடம்பெயர்ந்த மக்களின் மீள் குடியேற்றமே மிகவும் அழுத்திக்கொண்டிருக்கும் பிரச்சனையாகும் 3 தசாப்த காலமாக பெரும்பாலான வடக்குக் கிழக்கு மக்கள் இடம்பெயர்ந்து நலன்புரி முகாம்களிலும் சிலர் வாடகை வீடுகளிலும் உறவினர்களுடனும் வாழ்ந்து வருகின்றனர். கடந்த 6 வருடங்களுக்கு முன்னர் அல்ல 30 வருடங்களாக இடம்பெயர்ந்த மக்களே இவர்கள். ஏறக்குறைய 1300 குடும்பங்கள் இன்னமும் சரியான வீடுகளிலோ சிறந்த சுகாதார வசதிகள் மற்றும் வழ்வாதரங்களுடனோ வாழ்ந்து வரவில்லை, இவர்களில் பெரும்பாலனவர்கள் கரையோர மக்கள். இவர்களின் வாழ்வாதாரம் மீன்பிடித் தொழில் நீண்ட 30 வருடங்களாக நலன்புரி முகாம்களில் வாழ்ந்து வருவதால் இவர்களின் தரம் மற்றும் தராதரம் என்பன குறைந்து கொண்டே போகின்றது.

கௌரவ சபாநாயகர் அவர்களே…….!

யாழ்மாவட்டத்தில் ஆரம்பத்தில் உயர் பாதுகாப்பு வலயமாக 27259.31 ஏக்கர் காணியில் 2009ல் இருந்து 20408.40 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டு மீதியாக 6850.91 ஏக்கர் காணி மட்டுமே விடுவிக்கவேண்டியுள்ளது. இது யாழ்மாவட்டத்தின் காணி தொகையில் அண்ணளவாக 2.36 வீதமாகும். இந்த 2.36 வீத காணியும் 9680 காணிச் சொந்தக்காறருக்கு திருப்பி கொடுக்கப்பட வேண்டியவை இவை அரச காணிகள் அல்ல.
ஆயினும் அதிமேதகு ஜனாதிபதி அவர்களுக்கும் பாதுகாப்புப் படையினரும் 2015ம் ஆண்டில் இருந்து இந்த முயற்சியை துரிதப்படுத்தி வருவதற்கு நன்றி கூறக்கடமைப்பட்டுள்ளேன். கடந்த டிசெம்பர் மாதம் அதிமேதகு ஜனாதிபதி அவர்கள் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த போது நலன்புரி முகாமில் உள்ள எமது மக்களை காண்பித்த போது அதனை பார்த்த அதிமேதகு ஜனாதிபதி 6 மாதங்களுக்குள் இவர்கள் மீள் குடியேற்றப்படுவர் என நம்பிக்கை தெரிவித்தார். புதிய நம்பிக்கை ஒளி இவர்கள் மனதில் எழுந்து ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். ஏற்கனவே ஜனாதிபதி அவர்கள் ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளர் எனவும் விரைவில் இதனை மக்களுக்கு தெரியப்படுத்துவார் என்பதில் மகிழ்ச்சி அடைக்றேன். மீள்குடியேற்றம் முடிக்கும் போது வடக்கு கிழக்கில் உள்ள பாதுகாப்பு படையினரின் எண்ணிக்கை அங்கு வாழ்ந்து வரும் மக்களுடன் ஒப்பிடும் போது மிக அதிகம். அண்மையில். சலாவ முகாமில் ஏற்பட்ட துக்ககரமான நிகழ்வினைக் கேட்டு நானும் எனது மக்களும் மிகவும் மனவருத்தம் அடைந்ததோடு இதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக எனது ஆழ்ந்த அனுதாபத்தினை தெரிவித்துக்கொள்கிறேன்.

வடக்குக் கிழக்கில் இத்தகையதோர் சந்தர்ப்பம் ஏற்பட்டால் ஏற்படும் விளைவு மிகப் பாரதூரமானதாகவும் தாங்கிக்கொள்ள முடியாத்ததாகவும் இருக்கும். நான் தயவாகக் கேட்டு கொள்வது யாதெனில் வடக்குக் கிழக்கில் மட்டுமல்லாது வேறு எந்த பிரதேசத்திலும் மக்களுக்கு அபாயம் விளைவிக்கக்கூடிய பாதிப்பினை ஏற்படுத்தக் கூடிய அனைத்து போர்க் கருவிகளையும் அகற்றிவிடும்படியாகும்.

கெளரவ சபாநாயகர் அவர்களே :-

போரினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை மீள் நிலைமைக்கு கொண்டுவருவதற்கு அரசியல் கைதிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினரில் விசேட கவனம் செலுத்த வேண்டும். படிப்படியாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தாலும் இது மந்தகதியாகவே காணப்படுகிறது. இதனை துரிதப்படுத்த வேண்டும். நீண்டகாலமாக தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களுக்கு மனிதவிமான ரீதியில் பொதுமன்னிப்பு வழங்கப்பட வேண்டும்.
கரையோர மக்கள் தங்கள் தெரிவிற்கேற்ப தமது வாழ்க்கையை மீளக்கட்டியெழுப்ப வேண்டும். எமது வளங்களை இந்திய மீனவர்கள் சுறண்டுவதாலும் எதிர்கால எமது வளங்களை நாசப்படுத்துவதாலும் அவர்களின் வாழ்வாதாரம் பயங்கரமாக உள்ளது. ஆயினும் எமது அரசாங்கம் முன்னைய காலத்துடன் ஒப்பிடும் போது ஓரளவிற்கு குறைத்து வந்திருந்தாலும் மீனவ மக்களின் வாழ்வாதாரத்தை பாதித்து வரும் இந்த நடவடிக்கைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். மீனவசமாசங்கள் தம் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கும் தமது பிள்ளைகளின் கல்வியை முன்னேற்றுவதற்கும் ஊக்கப்படுத்தபட வேண்டும்.

கெளரவ பிரதம மந்திரி அவர்கள் எதிர்காலத்தில் 10 லட்சம் தொழில் வாய்ப்புக்களை எற்படுத்தித் தருவதாக இளைஞர்களுக்கு வாக்குறுதி அளித்துள்ளார். இதில் கணிசமான சதவிகிதத்தினை புனர்வாழ்வு அளிக்கப்பட்ட மற்றும் விடுவிக்கப்பட்ட இளைஞர்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்.

கெளரவ சபாநாயகர் அவர்களே :-

எதிர்காலத்தை வழமைக்கு திருப்பி தேசிய பாதுகாப்பினை உறுதி செய்வதோடு அவர்களின் பொருளாதாரத் தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய அரச வேலை வாய்ப்புக்கள், தனியார் தொழில் வாய்ப்புக்கள் அல்லது சுயதொழில் ஏற்படுத்திக் கொடுத்தல் போன்ற சந்தர்பங்களை முன்னைநாள் L T T E உறுப்பினர்கள் மற்றும் போரினால் விதவியாக்கப்பட்டவர்களை அரச தொழில் வாய்ப்பு நிகழ்சித்திட்டத்தில் உள்வாங்குவதன் மூலம் இது ஏற்படும்.

சிவில்சமூகம் மற்றும் தனியார்துறையினரும் வடக்குக் கிழக்கு மக்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்துவதற்கு அவர்களையும் ஊக்கப்படுத்த வேண்டும்புனர்வாழ்வு அளிக்கப்பட்டவர்கள், விதவைகள், மற்றும் அநாதைகளின் பிரச்சனைகளும் மிகப்பரதூரமானவை. இந்த மாவட்டங்களில் வேலைத்திட்டங்கள் ஏற்படுத்தப்படும்போது இவர்களின் வாழ்வாதாரம் முன்னுரிமைப்படுத்தப்பட வேண்டும்.

இந்த மாவட்டங்களில் காணப்படும் மொத்த வெற்றிடங்களை கணக்கில் எடுத்து ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பிட்டு ஏதாவது வித்தியாசம் காணப்பட்டால் அவற்றை ஏனைய மாவட்டங்களுடன் சரிசெய்யப்பட வேண்டும். ஆனால் வடக்குக் கிழக்கில் வேலைவாய்ப்பின்மை வீதம் உயர்ந்து கொண்டிருக்கின்றது தகுதியானவர்களுக்கு வேலைவாய்ப்பினை வழங்குவதன் மூலம் இந்த பிரச்சனையை முடிவுறுத்தலாம்.

அண்மைக்காலங்களில் சரியான வழிகாட்டல் இல்லது பெருந்தொகையான இளைஞர்கள் சட்டத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதை கண்கின்றோம். இந்த வெற்றிடங்கள் இந்த இளைஞர்கள் மூலம் நிரப்பிவிடுவோமாயின் விசேடமாக யாழ்ப்பாணத்தில் ஏற்படும் பிரச்சனைகள் நிச்சயம் விலகிவிடும். வடக்கு மக்களுக்குப் போதைபொருள் பாவனை பெரும் தொல்லையாக கணப்படுகின்றது. இளைஞர்களுக்கு பொருத்தமான வேலைவாய்ப்புக்களும், பொருத்தமான வாழ்க்கை எண்ணங்களும் இருக்குமாயின் இது இலகுவில் தீர்ந்துவிடும்.

கௌரவ சபாநாயகர் அவர்களே…. !

வடக்கு மக்களின் முக்கிய வருமானமூலமாக விவசாயம் நீண்ட காலமாக காணப்படுகின்றது. சேதனஉரங்களை பாவிப்பதோடு பூச்சிக்கொல்லி மருந்துகளையும் இரசாயனப் பொருட்களையும் பாவிக்கவேண்டாமென விவசயிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பல மக்கள் விவசாயத்தை நாடிச்செல்கின்றனர். ஒரு சிறிய அளவு அரசாங்க ஊக்குவிப்புக்கள் கூட படித்த இளைஞர்களை விவசாய நாட்டத்திற்குள் செலுத்தி விடும்
ஆயினும் புகையிலை செய்கை எதிர்காலத்தில் தடை செய்யப்பட இருப்பதால் அவர்களுக்கு மாற்று பயிர்ச் செய்கையை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். அதே போல் எமது உருளைகிழங்கு அறுவடை செய்யும் காலங்களில் அவற்றை வெளிநாடுகளில் இருந்து இருக்குமதி செய்யும் போது எமது சந்தை வாய்ப்பு அருகி விடுகின்றது. சம்பந்தப்பட்ட உத்தியோகத்தர்களுக்கு இது ஏற்கனவே தெரியப்படுத்தி இருந்தும் கூட இந்த உற்பத்திகளுக்கான வரி அதிகரிப்பு கடந்த காலங்களில் இருந்துகொண்டே இருக்கின்றது. இந்த உற்பத்திகளை பாதுகாத்து வைப்தற்கான கட்டமைப்புகள் உருவாக்கப்பட வேண்டும் தாண்டிகுளம் பொருளாதர மத்திய நிலையம் சகல மாகாண விவசாயிகளுக்கும் தமது உற்பத்தியினை சந்தைபடுத்துவதற்கும் வாய்ப்பளிப்பதோடு பயிர்ச்செய்கைபண்ணப்படாத நிலங்களும் பாவிக்க்கப்படும் நிலைஏற்படும். இது அதி மேதகு ஜனாதிபதியின் திட்டமும் ஆகும். இதே விவசாயப் புரட்ச்சியை முன்னரும் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க அம்மையார் காலத்திலும் மேற்கொள்ளப்பட்டது. இதே புரட்சியை அதிமேதகு ஜனாதிபதி அவர்களும் மேற்கொண்டுள்ளார்.
யாழ்ப்பாணக்குடாநாட்டில் பெரிய நீர் விநியோக அபிவிருத்திகள் எதுவும் காணப்படவில்லை. மணல்ப்பாங்கான தரைகளில் அமைக்கப்பட்ட மலசலக் கான்கள், கிணறுகள் மற்றும் குடிநீர் நிலைகள் காணப்படுகின்றன. நிலத்தடி நீர் இதனால் மாசடைந்து நச்சு தன்மை அடைகின்றது.

கெளரவ சபாநாயகர் அவர்களே.....!

இந்த மக்களின் பிரச்சனைகள் பற்றி நான் அறிந்தவற்றை தங்கள் கவனத்திற்கு கொண்டு வரும் போது மீள் குடியேற்றத்தை துரிதப்படுத்தியமைக்காக இச் சந்தர்ப்பத்தில் அதி மேதகு ஜனாதிபதி அவர்களுக்கும் கெளரவ பிரதம மந்திரி அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

மிள் குடியேற்றம் பற்றிய உத்தியோக அறிக்கைகளும் இவற்றை தெளிவுபடுத்தும். வடக்கு மக்கள் நாளாந்தம் முகம்கொடுத்துவரும் பிரச்சனை பற்றி நாம் யாவரும் அறிவோம். இந்தச் சந்தர்ப்பத்தில் எம்முடன் கைகோர்த்து செயற்படுமாறு கெளரவ எதிர்கட்சி தலைவர் அவர்களையும் பிரச்சனைகளை தீர்பதற்கான பயணத்தில் ஒன்றிணையுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

சிறிது முன்னோக்கி செல்வோமாயின் அவசரதேவைகளுக்கு மேலாக சில குறுகிய காலத்தில் தீர்க்கப்படவேண்டியவற்றை காண்கிறோம். கல்வி, வருமானம் மற்றும் தொழில் வாய்ப்புடன் பிணைந்துள்ள சமூகப் பொருளாதாரப் பிரச்சனைகள் தீர்க்கப்பட வேண்டும்.

சமூகப் புரள்வினை வேலையின்மை ஏற்படுத்துகிறது. இதுவே இளஞர்களை பாதிக்கின்றது. இத்தகைய பாதிப்பினை தெற்கிலும் வடக்கிலும் எவ்வாறு சமனிலைத் தன்மையினை குறைத்தது என்பதை வரலாறு கூறும். எனவே இதனை நீடித்து நிலைக்கும் வகைகளில் தீர்த்துவைப்பது எமது கடமை.

கெளரவ சபாநாயகர் அவர்களே.....!

நீண்டகாலமாக நாம் அபிவிருத்தி அடைந்த உலக நாடுகள் போல் மிளிர்வதற்கு விரும்பினோம். இது வெறும் கதையாகவே மாறியுள்ளது. கடந்த 20-50 வருடங்களாக நாங்கள் மேற்கொண்டு வந்த நடவடிக்கைகளூடாக இவற்றை நாம் பெற்றுக்கொள்ள முடியாது. எமது புதிய தந்திரோபாயங்கள் புதிய கைத்தொழில்கள் என்பன தேவை.

4வது கைத்தொழில் புரட்சி யுகத்தில் நாம் இருக்கிறோம் என நம்புகிறேன். பொருளாதார அதிகாரம் சிறிது சிறிதாக மேற்கில் இருந்து கிழக்கு நோக்கி செல்கிறது என நினைக்கிறேன். விஞ்ஞானப் புரட்சிகள் அதிகாரப்பகிர்வுத் தொடர்பு என்பன பல புதிய கைத்தொழில்களையும் வர்த்தக ஈடுபாடுகளையும் ஏற்படுத்துகின்றன. முன்னைய கால கைதொழில் புரட்சி போல் அல்லாது 4வது புரட்சி மிக முன்னேற்றகரமானது. பல்வேறு கண்டங்ளில் இருந்து பல மில்லியன் மக்கள் கையடக்கத்தொலைபேசி போன்ற பல ஊடகங்களூடாக அறிவுகளைக் கற்றுக்கொண்டு அவர்களின் சந்தை வாய்புக்களை பெற்றுக்கொள்வது போன்ற நிலைமை வியக்கத்தக்க விதத்தில் உள்ளது. இத்தகைய நடவடிக்கைகள் மூலம் இலங்கையில் சிறந்த புதிய சந்தர்பங்களை எற்படுத்திக் கொள்ளலாம். எதிர்காலத்தை எண்ணி எமது நாட்டையும் எமது மக்களையும் எமது உட்கட்டமைப்புகளையும், கல்விக்கொள்கை என்பவற்றினையும் முதலீடுகள் மற்றும் தொழிற்சாலைகளை வடக்கிலோ அல்லது வேறு பகுதிகளிலோ ஏற்படுத்த முடியும் என்று தீர்மானிக்க முடியாது.
சில அரசியல்வாதிகள் இது இளஞர்களில் பிரச்சனை என்று கூடச் சொல்லலாம். ஏன் கற்றவர்கள் வெளியில் செல்கிறார்கள்?. தங்கள் கல்வியை முடிப்பதற்கு முன்னறே நாம் ஏன் எமது பிள்ளைகளை வெளியில் அனுப்ப முயற்சிக்கிறோம்.

கெளரவ சபாநாயகர் அவர்களே.....!

கல்வி கற்றவர்கள் ஏற்கனவே வெளியில் சென்றிருக்கிறார்கள் இன்னமும் சென்றுகொண்டிருக்கிறார்கள் இது எமது பொருளாதாரத்தில் பாரிய இழப்பாகும். இரண்டாம் நிலை, மூன்றாம் நிலைக் கல்வி வழங்குவதற்கு அரசாங்கம் அதிக நிதியை செலவிடுகிறது. சந்தர்ப்பங்கள் இல்லாததாலும் அதாவது ஆரம்பத்தில் யுத்தம் காரணமாகவும் இவர்கள் செல்வதால் இவர்களின் பயனை அந்த நாடுகள் அறுவடை செய்கின்றன. நாம் புதிய வாழ்க்கை நிலைமையை அதிகரிக்க வேண்டும் புதிய சந்தர்பங்களையும், வசதிகள் மற்றும் வர்த்தகத்தை உருவாக்க வேண்டும்.

ஏன் கல்விகற்றவர்கள் செல்கிறார்கள் என்பதை ஆராய்ந்து அவர்களை தடுப்பதற்கு ஆவணை செய்யவேண்டும். ஒரு மனிதன் கற்றதும் அவனுக்கு முதற்படியாக தேவைப்படுவது ஒரு சிறந்த தொழில் அல்லது வசதியாக வாழ்வதற்கான வாழ்வாதரம்.

இந் நாட்டில் சந்தர்ப்பங்கள் காணப்படாத போதும் தங்கள் வளர்ச்சியைக் கட்டுப்படுத்துவதற்கு படித்தவர்கள் விரும்பமாட்டார்கள். பொருளாதர வளர்ச்சி மூலம் சந்தர்ப்பங்கள் ஏற்படுத்தப்படலாம். இதன் மூலம் நாம் வளர முடியும். புதிய கைத்தொழில்கள் புதிய அறிவுரைகளைப் பெற்று வளர முடியும். தற்கால கேள்வியில் காணப்படும் அறிவுடன் மக்களை உபையோகிக்க வேண்டும்பு திய தொழில் நுட்பத்துடனும் புதிய அறிவுடனும் எதிர்கால கைத்தொழில் அமைய வேண்டும் என இணங்கினால் முதல் பணியாக இன்றைய புதிய சந்ததியினரை புதிய அறிவு மற்றும் திறன்களில் ஈடுபடுத்த வேண்டும் உட்கட்டமைப்பு மீள் குடியேற்றம் , தற்போதைய பிரச்சனைகளையும் தீர்வுகளையும் உரையாடிநேம் அனால் நீண்ட கால திட்டங்கள் மற்றும் நடைமுறைகள் பற்றியும் ஆராய வேண்டும்.

கடந்த காலங்களில் எமது வடக்கு கல்வியில் முன்னணியில் காணப்பட்டதை அறிவோம் இது தற்போது வெறும் வரலாறாகவே காணப்படுகின்றது இதனை நாம் மீண்டும் ஏற்படுத்த வேண்டும் வடக்கு இளைஞர்களின் கல்வி மற்றும் வளர்ச்சிக்கு எமது கல்வி எத்தகைய பாரிய பங்களிப்பினை வழங்கியது என்பதை இட்டு பெருமையாக உள்ளது போர் காரணமாக எமது கல்வி பின்தங்கி உள்ளதோடு எமது கல்வி கலாச்சாரமும் பொலிவிளந்துள்ளது இளைஞர்கள் தாங்கள் மாணவர்கள் என்ற எண்ணம் ஏற்படவும் கல்வியில் முன்னேற்றம் ஏற்படவும் எமது கவனத்தை செலுத்த வேண்டும விடுவிக்கப்பட்ட பிரதேசங்களில் சில கல்வி நிலையங்கள் திறக்கப்படாதுள்ளன உதாரணம் பலாலி பயிற்சி கலாசாலை போருக்கு பின்னரான காலத்தில் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி இளைஞனர்கள் தொழிற் கல்வி பெறுவதிலே ஆர்வம் காட்டுகின்றனர் பாடசாலை யால் நின்றவர்களும் பல்கலைக்கழகம் கிடைக்கபெறாதவர்களும் இத்தகைய கல்வியையே நாடுகின்றனர் .

ஆயினும் அடுத்த மாதம் அதிமேதகு ஜனாதிபதி அவர்களால் திறந்து வைக்கப்படவுள்ள ஜேர்மன் தொழில் நுட்ப கல்லுரிக்காக நாம் அவர்களுக்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளேம் ஆயினும் எல்லா விண்ணப்ப தாரிகளையும் சேர்த்துக்கொள்ள கூடிய அளவில் இங்கு நிலையங்கள் காணப்பட வில்லை தென்மராட்சி பிரதேசத்தில் இத்தகைய தொரு தொழில் நுட்ப நிலையம் அமைப்பதற்கான பேச்சுவார்த்தையை கௌரவ திறன் விருத்தி அமைச்சர் ஏற்கனவே ஆரம்பித்துள்ளமைக்கு அவருக்கு நன்றி கூற கடமைபட்டுள்ளோம்.

கௌரவ சபானயக்கர் அவர்களே....

சிறந்த முறையிலான உட்கட்டமைப்பை கொண்ட அறிவு அடிப்படையிலான தொழில்சாலைகள் மிக முக்கியம் இரண்டாம் நிலைக்கல்வி கற்காதவர்கள் கூட இதன் மூலம் பயன் பெறக்கூடிய வாய்ப்பு ஏற்படும் கல்வி முறையில் இருந்து விலகியும் பல்கலை கழகங்களுக்கு தெரிவாகாமல் இருப்பவர்களும் இதன் மூலம் பயன் பெறலாம் நாட்டின் உட் கட்டமைப்பு மற்றும் சமுக பொருளாதார நிலைமைகள் மேம்படுத்தப்பட்டால் வாழ்க்கை நிலைமையும் உயர்வடையும் சிறந்த தொழில் சான்றுகளுக்கு சிறந்த கல்வி தேவைப்படுமிடத்து சிறந்த தொழில்சாலைகளை உருவாக்க முடியும் இதனால் வெளிநாடு செல்வதை தடுக்கலாம் இவை யாவும் ஒன்றை ஓன்று பின்னி பிணைந்தவை அனால் எதிர்காலத்திற்க்காக நிறைவேற்றப்பட வேண்டும் இன்றைக்கே முதலீடு செய்யப்பட வேண்டும் நாளந்த பிரச்சனைகள் தீர்க்கப்படுவது நீடித்து நிலைக்கும் பெறுபேற்றினை எமக்கு வழங்கும்


Read more...

"ஏன் இப்படி பூச்சியமானது?"

தமிழினி தனது கூர்வாளில் "ஏன் இப்படி பூச்சியமானது?" என கேள்வி எழுப்பி, அவர் தனது அரசியல் நம்பிக்கைக்குள் அதற்கு விடை காணவும் பதிலிறுக்கவும் முனைகின்றார். புலிப்பாசிசம் தான் விடுதலைப் போராட்டம் என்று நம்பி, அதற்காகவே வாழ்ந்த தமிழினி, புலிகளை என்றும் யாராலும் தோற்கடிக்கவே முடியாது என்ற நம்பிக்கையில் தன் எண்ணங்களையும், செயற்பாடுகளையும் கொண்டு கட்டியெழுப்பப்பட்ட உணர்ச்சிகள் எல்லாம் சிதைந்த போது, ஏன் இப்படி நடந்தது என்ற சுய அனுபவவாதத்தை காரணமாகக் காட்டி எழுதியதே "கூர்வாள்".

தமிழினி தன்னுரையில் இந்த நூலின் நோக்கம் குறித்து "எதற்காக இதனை எழுத வேண்டும் என என்னிடம் பல தடவை கேட்டுக் கொண்டேன். ஒரு பதில் தான்; என்னை உந்தியது. நான் உயிராக நேசிக்கும் மக்களிடம் சில உண்மைகளைச் சொல்ல வேண்டும். ஓர் இனத்தின் அரசியல் அபிலாசைகளை மீட்டெடுப்பதற்காகக் கருக் கொண்ட போராட்டம், இலட்சோப லட்சம் உயிர்களின் மீது கட்டியெழுப்பப்பட்டது. இறுதியில் அதன் போக்கிடம் ஏன் இப்படிப் பூச்சியமானது? உலகம் அதிர்ந்து போன கேள்வி இது" இந்தக் கேள்விக்கு அவரின் சுய அனுபவம் சார்ந்த விமர்சனமாக வெளிவந்த "கூர்வாள்" விடை தந்து இருக்கின்றதா எனின், இல்லை.

புலிகளில் இருந்த பின் இன்று தங்களை "முற்போக்காளராக - அறிவுஜீவியாக" வெளிப்படுத்திக் கொள்ளும் பலரும், தமிழினி போல் ஒரேவிதமான காரணங்களையே முன்வைக்கின்றனர். தமிழினி விதிவிலக்காக கடந்த நிகழ்வுக்கான பொறுப்பை ஏற்றுக் கொள்ளும் வெளிப்படை தன்மையுடன் - எல்லோரையும் போல் தமிழ் இனவாதக் குட்டைக்குள் நின்று "ஏன் பூச்சியமானது" என்று காட்ட முனைகின்றார்.

இப்படி காரணத்தைக் கண்டறிய முடியாத வண்ணம், தொடர்ந்து புலிகள் கொண்டிருந்த அதே சமூகப் பொருளாதார உலகக் கண்ணோட்டத்தைக் கொண்டே தமிழினி விடை தேடுகின்றார். தமிழினி தன் அகநிலையிலான அனுபவவாதம் சார்ந்த எதார்த்தத்தில் தீட்டிய "கூர்வாள்", புறநிலையான சமூகப் பொருளாதார எதார்த்தத்தைக் கொண்டதல்ல. நிலவும் சமூக பொருளாதார அமைப்பு சார்ந்த எதார்த்தம் முழு உண்மையாகவோ, குறித்த சூழலை ஆராய போதுமான அடிப்படையைக் கொண்டிருப்பதில்லை என்பதே உண்மை.

போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் நிலை குறித்து, யுத்தம் - யுத்தத்துக்கு பிந்தைய அனுபவவாதம் சார்ந்து தமிழினி சொல்லும் உண்மைகள், தனிச் சிறப்பாக "கூர்வாள்" மூலம் வெளி வந்திருக்கின்றது. பெண்களை இழிவாக சமூகம் ஏன் கையாளுகின்றது என்ற கேள்விக்கு, தமிழினி தன் அனுபவவாதத்தால் அவர்கள் மேலான அனுதாபத்தையே ஏற்படுத்த முடிந்துள்ளது.

"ஏன் இப்படிப் பூச்சியமானது?" என்று அனைத்துக் கேள்விகளுக்கும், "கூர்வாள்" மூலம் தமிழினி தீட்டிக் காட்டியவை

1. கேள்விக்கு உள்ளாக்க முடியாத "தலைவரின் - அண்ணரின்" அதிகாரமும் தனித்த முடிவுகளும்,

2. அதிகாரத்தைக் கொண்டு "தம்பி" (பிரபாகரனின் மகன்) இட்ட கட்டளைகள்

3. இயக்கத்தின் கண் மூடித்தனமானதும், பிழைக்கத் தெரிந்தவர்களாலும் "அண்ணை" மற்றும் "தலைவர்" வழிபாடு,

4. கட்டாய ஆட்சேர்ப்பும், அதற்காகக் கையாண்ட கெடுபிடிகளும்

5. கண் மூடித்தனமான வரி அறவீடுகளும், அதற்காகக் கையாண்ட வன்முறைகளும்

6. ஆயுத வழிபாடும், அது சார்ந்து எடுத்த முடிவுகளும்

7. இயக்கத்தின் ஆள் பிடிக்கும் அரசியலும், அதற்கு ஏற்ப மக்கள் மற்றும் பெண்கள் இயக்கம்,

8. அரசியல் ராஜதந்திரமற்ற - இராணுவவாத முடிவுகள்,

9. உள்ளியக்க (மாத்தையா, கருணா..) முரண்பாடுகளைக் கையாண்ட முறையும் - படுகொலைகளும்

10. மக்களை யுத்தமுனையில் கட்டாயப்படுத்தி வைத்திருந்ததும், சுட்டுக் கொன்றதும்

11. இயக்கத்தில் உள்ளவர்கள் பற்றிய உளவு பிரிவின் (பொட்டரின்) ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளும் தண்டனைகளும் - யுத்தம் பற்றி ஓரு தலைப்பட்சமான திணிப்புகளும்

இப்படி தமிழினி தன் சொந்த அனுபவம் சார்ந்து கண்டறியும் பல உண்மைகளா புலிகளின் தோல்விக்கு காரணமெனின் இல்லை. மாறாக இவை எல்லாவற்றுக்கும் காரணமாக இருந்தது புலிகளின் அரசியல் என்பதும் அந்த அரசியல் தான் தோல்விக்கான காரணமுமாகும்.

தமிழினி தன் அனுபவவாதம் சார்ந்து வெளிப்படுத்தும் உண்மைகள் அனைத்தும், புலிகளின் வெற்றிகளும், அதிகாரமும் உச்சத்தில் இருந்த காலத்திலேயே புலிகள் கொண்டிருந்தனர். தமிழினியை இயக்கத்தில் உள்வாங்கியதும், இயங்க வைத்ததும் இதே கூறுகள் தான். புலிகள் பற்றிய போலிப் பிரமைகள் எதார்த்தமாக இருந்த காலத்தில், "உண்மைகளற்று" காணப்பட்ட உண்மைகள், தோல்வியே எதார்த்தமாக மாறிய சூழலில் "உண்மையாக" மாறி விடுவதையே, "தமிழினி" புதிய எதார்த்தத்துக்கு ஏற்ப பிரதிபலித்து இருக்கின்றார். இது தான் "கூர்வாள்".

குறிப்பாக போராட்ட வெற்றிக் காலத்தில் குடும்பத்தை கைவிட்டு போராடச் செல்வதை பெரிதாக அலட்டிக் கொள்ளாத எதார்த்தம், தோற்ற போது என்னத்தைக் குடும்பத்துக்கு கொடுத்தோம் என்ற எதிர்நிலையான மனநிலையை தமிழினி பிரதிபலிக்கின்றார். மாறிவிட்ட சூழலில், இருவிதமான எதார்த்தத்திற்குமான அகநிலை முரண்பாடே "கூர்வாளாக" பிரதிபலிக்கின்றது.

மக்களின் சமூக பொருளாதார வாழ்வில் இருந்து போராட்டமே விலகிப் பிரிந்து இருந்தது என்ற உண்மையை, கூர்வாளில் காணமுடியவில்லை. ஆனால் வாழ்க்கையின் எதார்த்தத்தில் பிரதிபலிக்கும் வண்ணம் உறைக்கின்றது. "கூர்வாள்" அரசியல் ரீதியான தவறை இனங்கண்டு காட்டுவதற்கு பதில் தனிமனித உணர்ச்சிக்கு ஊடாக காட்டுகின்ற முந்தைய அதே தவறை தொடருகின்றார்.

தமிழினி இயக்கத்தின் அரசியல் வழியில் முரண்படாது, பொது மற்றும் தனிப்பட்ட சொந்த அதிருப்தியைக் கொண்டு இவைதான் காரணம் என்று முன்வைக்கின்றார். சம்பவங்கள், புலிகளின் நடத்தைகள் தொடர்பாக தமிழினி "கூர்வாள்" மூலம் முன்வைத்தவை அனைத்தும், புலிகள் தொடர்பாக புலிகளின் காலத்தில் வெளிவந்த விமர்சனத்தில் காண முடியும். இவை எவையும் புதிய விடையங்கள் அல்ல.

இதேபோன்று யுத்தங்கள் குறித்து அவரின் வருணனைகளில் அவரின் தனிப்பட்ட அனுபவங்களைத் தவிர, புலிகள் யுத்தகாலத்தில் வெளியிட்ட நூல்களின் காணமுடியும். புலிகளின் நடத்தை குறித்தான விமர்சனங்களில் தனிப்பட்ட அனுபவங்களைத் தவிர புலிக்கு எதிரான கடந்தகால விமர்சனத்தில் பொதுவாக வெளிவந்தவையே.

இவை யாருக்குப் புதியவை என்றால் புலிப் பாலைக் குடித்துக் கொண்டு கண்ணை மூடி வாழ்ந்து கொண்டு இருந்த இருக்கின்ற புலிக் குட்டிகளுக்கே. இதைப் போன்று தான் சாத்திரியின் உண்மைகள், "ஆயுத எழுத்து" மூலம் வெளிவந்தது. சாத்திரி புலியாக நின்று அதை நியாயப்படுத்திச் சொல்ல, தமிழினி புலியாக நின்று தன் அனுபவத்தை நியாயப்படுத்தி சொல்ல முடியவில்லை.

புலிக்கு புலியைப் பற்றி, புலித் தாய் கூறும் விடையங்கள் ஆச்சரியமாகவும், அதிர்வாகவும், எதிர்ப்பாகவும் இருப்பது வியப்பானதல்ல. மக்கள் சார்ந்த அரசியலைக் கொண்டிராத புலியெதிர்ப்பு அரசியலுக்கு, உகந்த விபரங்களாக இருப்பதிலும் ஆச்சரியமல்ல. இங்கு புலி - புலி எதிர்ப்பு என்ற இரு முனையில் எதிர்ப்பும், ஆதரவும், கூர்வாளுக்கு ஏற்படுகின்றது. "ஏன் இப்படிப் பூச்சியமானது?" என்ற தமிழினியின் அடிப்படையான கேள்விக்கும், விவாதத்துக்கும் பதில் கிடைக்கவில்லை என்பதே, சமூகப் பொருளாதார முரண்பாடுகளற்ற சமூகத்தை முன்னோக்காகக் கொண்ட அரசியலின் விமர்சனமாகும். "ஏன் இப்படிப் பூச்சியமானது?" என்பது அரசியல் ரீதியானது என்ற உண்மையை, தமிழினி கண்டு கொள்ளவில்லை. அந்த அரசியல் என்னவென்பதை இந்த நூல் கண்டறியவில்லை.

1970 களில் புலிகளின் உடைவு, 1980களில் மாற்று இயக்கப் படுகொலைகள் என அனைத்து புலிகளின் மக்கள் விரோத வரலாற்றின் தொடர்ச்சியில், இதற்கான கேள்விகளும் பதில்களும் கூடவே இருந்து வந்துள்ளது என்பதே வரலாற்று இயங்கியல் உண்மையாகும்.

தமிழினியோ புலித் தலைவர்கள், தலைவிகளில் ஒருவர். புலிகளின் மகளிர் அணியின் தலைவி. புலிகளின் அரசியல் பிரிவைச் சேர்ந்த தலைவர்களில் ஒருவர். தமிழ் மக்களுடன், பிற இன மக்களுடன் உறவாடிய, எல்லா உண்மைகளையும் தெரிந்த அறிவுஜீவியாக தன்னை முன்னிறுத்திய ஒருவர். எல்லாவற்றையும் நியாயப்படுத்தி, அனைத்துத் தவறுகளுக்கும் வக்காளத்து வாங்கிய அந்த அரசியலுக்கு பொறுப்பக் கூற வேண்டிய ஒருவர். வெறும் பொம்மையாக தான் இயங்கிய பின்னணியைக் கூறும் "கூர்வாள்" அதற்கான தன்னிலையான அகக் காரணத்தை ஆராயவில்லை.

உண்மைகள் தெரிந்த போதும், முரண்பாடுகள் தோன்றிய போதும், அதை அடக்கிக் கொள்ளக் காரணம் உயிர்ப் பயம் தான். அதுவே எதிர்நிலையான வழிபாடாக, காரணங்களைக் கற்பிக்கின்ற நியாயப்பாட்டை கொண்டு தவறுகளை பலப்படுத்தி விடுவதை தமிழினி தவறாக முன்வைக்கவில்லை. மக்களுக்கான “அர்ப்பணிப்பு தியாகம்” அனைத்தையும் கொண்ட போராட்டம், மக்களை ஒடுக்கியும், கொன்றும் குவித்த போது இவரை மௌனமாக்கியது எது? அதையே செய்யத் தூண்டியது எது? மக்களுக்காக "அர்ப்பணிப்பு தியாகத்தை" செய்ய தயாரற்ற, சமூகப் பொருளாதார அரசியல் ஏற்படுத்திய சுயநலம் சார்ந்த, வர்க்க ரீதியான உணர்வு சார்ந்த பயம் தான். புலிகளுக்குள் எதையும் தங்களால் செய்ய முடியாது என்று கூறுகின்ற பின்னணியில், வர்க்க ரீதியான பயவுணர்வு தான் முதன்மை பெற்று இருந்தது என்பதே உண்மை.

தமிழினியின் தனித்துவத்தை "கூர்வாள்" வெளிப்டுத்துகின்றதா?

தமிழினியின் தனிப்பட்ட தலைமைத்துவ ஆளுமைகள், பால்ரீதியாக பெண்களின் துயரங்கள் மீதான அவரின் தனிப்பட்ட அக்கறைகள், சாதிரீதியான இழிவுக்கு எதிரான தனிப்பட்ட குமுறல்கள் இவை அனைத்தையும் இழந்து, "தலைவருக்கும் - அண்ணைக்கும்" (பிரபாகரனுக்கு) அடிமைகளாக மாறி, செக்கு மாடுகளாக வாழ்ந்த தன் (புலிகளின்) கதையைத் தான் தமிழினி "ஒரு கூர்வாளின் நிழலில்" ஊடாக திரும்பிப் பார்ப்பதையே தன் வரலாறாகக் கூறுகின்றார்.

தன் வரலாறாக முன்வைக்கும் தமிழினி, தன்னைச் சுற்றிய சம்பவங்களும், புலிகளின் பொது நடத்தை சார்ந்த பொது "உண்மை" என்னும் ஒளியில் நின்று முன்வைக்கப்பட்டு இருக்கின்றது. புலிகள் காலத்தில் தனக்கு ஏற்பட்ட தனிப்பட்ட அதிருப்தியைக் கொண்டு, அதை முன்வைக்கின்றாரே ஓழிய, அவரே "கூர்வாளில்" முன்வைக்கும் "புரட்சிகரமான" வழியில் ஆராயவில்லை. "புரட்சிகரமாகச்" சிந்திப்பது பற்றி தமிழினியே பேசுகின்றதால், இந்த நூல் மீதான விமர்சனமாக இருக்கின்றது.

தமிழினி பெண்கள் குறித்து பேசும் போது "புரட்சிகரமான புதிய சிந்தனை மாற்றத்துக்கு உட்பட்டார்கள் என்று கூற முடியாது" என்று கூறுகின்ற அவர், தன் அளவில் "புரட்சிகரமான புதிய சிந்தனை"யைக் கொண்டு இந்த நூல் வெளிவரவில்லை என்பதே கசப்பான உண்மை. "புரட்சிகரமான புதிய சிந்தனை"யாக தமிழினி எதைக் கருதுகின்றார்?

"புரட்சிகரமான புதிய சிந்தனை"யானது என்ன? சமூகப் பொருளாதார முரண்பாடுகளைக் களைவதை அடிப்படையாகக் கொண்டதே புரட்சிகர சிந்தனை. சமூகப் பொருளாதார முரண்பாடுகளைப் பாதுகாக்கின்ற, தக்க வைக்கின்ற எந்தச் சிந்தனையும், நடைமுறையும் புரட்சிகரமாக ஒருநாளும் இருப்பதில்லை.

சமூகப் பொருளாதாரத்தில் உள்ள ஒரு முரண்பாட்டை முன்னிறுத்திய செயற்பாடுகள், புரட்சிகரமானதாகவோ, மக்கள் இயக்கமாகவோ ஒரு நாளும் இருப்பதில்லை.

இயல்பாகவே பிற்போக்கான தனியுடமை மற்றும் தனிமனிதத் தன்மையை கொண்டதாகவே இருக்க முடியும். என்ன வேஷம் போட்டாலும், எந்தச் சொல்லைக் கொண்டு மூடிமறைத்தாலும், அனைத்தும் தனிவுடமை, தனிமனித கோட்பாடுகளைக் கடந்தவையல்ல. இந்த வகையில் அரசியல் இலக்கியத்தில் "புரட்சிகரமான புதிய சிந்தனை" மறுதளிக்கப்பட்டு வருகின்ற பொதுச் சூழலில், தமிழினியிடம் அதைக் காணமுடியாதுள்ளது. அவர் "புரட்சிகரமாகக்" கருதியது மேம்போக்கான புரிதல் மற்றும் தனிப்பட்ட அதிருப்தியைத்தான். அதாவது சொந்த அனுபவவாதத்தைத்தான்.

பெண்கள் மீதான தமிழினியின் அக்கறை சொல்லிமாளாது

தமிழினி பெண்ணாக இருந்ததால் ஆணாதிக்க இயக்கத்தில் பெண்கள் சந்தித்த பிரச்சனையை அணுகும் விதம் மிகவும் நுட்பமானது தனித்தன்மையானது. இந்த வகையில் பெண்கள் பிரச்சனை தொடர்பாக சமூகத்தின் மேல் அவர் கொண்டிருந்த அதிருப்தியை பல முனையில் வெளிப்படுத்துகின்றார்.

இயக்கத்தில் பெண்கள் இருந்த நிலையை "..கட்டுக்கோப்பான குடும்பப் பெண்ணாக வீட்டில் வளர்க்கப்பட்டோமோ.. அதேபோல் கட்டுக்கோப்பான மகளிர் படையணிப் போராளிகளாகவே இயக்கத்திலும் வளர்க்கப்பட்டோம்" மிகவும் துல்லியமான மிகவும் சரியான, ஓப்பீட்டுரீதியான உண்மையாகும்.

யாழ் மையவாத வெள்ளாள சாதிய ஆணாதிக்கத்தின் இறுக்கமான சமூகக் கட்டமைப்பை, புலிகள் தங்கள் அமைப்பு வடிவமாக்கினர். அதே ஏற்றத்தாழ்வு, அதே படிநிலை வடிவத்தில் சமூகத்தை உறைநிலைக்கு கொண்டுவந்து, அதைத் தலைமை தாங்கினர். இந்த வகையில் நிலவிய ஆணாதிக்க வக்கிரத்தையே, தமிழினி மிக அழகாக தன் தனிப்பட்ட சுய அனுபவத்தில் இருந்து ஒப்பிட்டுச் சொல்ல முடிந்திருக்கின்றது.

பெண்கள் தொடர்பாக ஆணாதிக்க சமூக கட்டமைப்பு சார்ந்த புலிகள் இயக்கம் எடுத்த முடிவுகளை, பெண்ணாக நின்று ஏற்க முடியாதவராகவும், அதேநேரம் அதையே முன்னின்று அமுல் செய்பவராக தமிழினி இருந்துள்ளார்.

சாதியம், ஆணாதிக்கம் என அனைத்து சமூக பொருளாதார முரண்பாடுகளையும் உறை நிலையில் வைத்திருக்கும் புலிகளின் அரசியல் செயற்பாடு போரை நடத்துவற்கு ஆட்களை திரட்டுவதை மட்டும் நோக்கமாகக் கொண்டிருந்தது. உறைநிலையைக் கடந்து இன்று விசுவரூபம் எடுத்து வெளிப்படுகின்ற இன்றைய சாதிய ஆணாதிக்க எதார்த்தத்தைப் பேணுவது தான் புலிகளின் அன்றைய அரசியல் கொள்கையாகும்.

ஆண் மேலாதிக்க இயக்கத்தினது அதிகாரம் குறித்து தன் அனுபவத்தை தமிழினி "பல வயது வந்த ஆண் போராளிகள் தம்மைவிட மிகவும் வயது குறைந்த பெண் போராளிகளைத் திருமணம் செய்வதற்கான அனுமதியைக் கேட்கும் போது தர்மசங்கடமான பிரச்சனைகள் எழுவது வழக்கம்" என்கின்றார். வயது குறைந்த இளம் பெண்களைக் கோருவது, அடங்கி நடப்பார்கள் என்பதால்தான். ஆணை விட பெண்ணினது வயது குறைவாக இருக்க வேண்டும் என்பதே திருமணம் தொடர்பான சமூக நடைமுறை. புலிகள் இயக்கத்தில் அதிகாரத்தைக் கொண்டு, கேட்பாரற்ற மிகக் குறைந்த வயது பெண்களைக் கோரிய போது முரண்பாடாக மாறுகின்றது. ஆணாதிக்க அதிகாரம், தலைமைத்துவம் என்ற இடத்தில் இருந்து கொண்டு, பெண்களை குடும்பம் என்னும் ஆணாதிக்க வடிவத்துக்குள் பலியிடுகின்ற இணக்கமான சங்கடங்களையே, தமிழினி இங்கு எடுத்துக் காட்டுகின்றார்.

இந்த ஆணாதிக்கம் குறித்து பாலசிங்கம் முன்வைத்த கருத்தை, தமிழினி தனது கருத்தாக மீள கூர்வாளில் முன்வைக்கும் போது ".. தங்களோடு சண்டைக் களத்தில் நின்று போராடிய பெண் போராளிகளைக் கலியாணம் கட்டுவம் என்று யோசிக்காமல், அழகான, நல்ல உத்தியோகம் பார்க்கின்ற அல்லது வெளிநாட்டில் சொந்தக்காரராக இருக்கிற பொம்பிளைகளைத் தேடித் திரிகினம்" என்கிறார். இந்த உண்மையானது அர்ப்பணிப்பு தியாகம் என அனைத்தும் யாழ் மேலாதிக்க சாதியம் வர்க்கம் கடந்தல்ல என்ற உண்மையையே உணர்த்தி நிற்கின்றது. இங்கு யுத்தக் கருவிகளாகவே மனிதர்கள் பயன்படுத்தப்பட்ட அதேநேரம், பெண்களை உணர்ச்சியற்ற மந்தையாக இருக்குமாறு போராட்டம் வழிநடத்தி இருக்கின்றது.

இதற்கு உதாரணம் தான் தமிழினி எடுத்துக்காட்டுகின்ற, மூன்று பெண்கள் இயக்கமல்லாத வெளியாருடன் பாலியல் தொடர்பைக் கொண்டு இருந்தாகக் கூறி, அனைத்துப் பெண்களையும் கூட்டி அவர்கள் முன் மரணதண்டனை வழங்கிய ஆணாதிக்கம், குறித்த ஆண்களுக்கு மக்கள் முன் வைத்து மரண தண்டனையை வழங்கியது. புலி ஆண்கள் புலி இல்லாத வெளிப் பெண்களுடன் பாலியல் ரீதியாக உறவாடுவதையும், திருமணம் செய்வதையும் தடுக்கவில்லை. பிரபாகரனின் திருமணம் உட்பட எத்தனையோ சம்பவங்கள் புலிகள் வரலாற்றில் உண்டு. புலி ஆணாதிக்கம் ஆணுக்கு ஒரு நீதி, பெண்ணுக்கு ஒரு நீதி வழங்குகின்றது. இதுதான் ஆணாதிக்க புலிக் கோட்பாடாகவும், புலிக் கட்டுப்பாடாகவும், அதன் ஒழுக்கக்கேடுகள் "ஒழுக்கமாகவும்" இருந்து இருக்கின்றது. விபச்சாரம் செய்யும் பெண்ணை தண்டிக்கும் உலகளாவிய ஆணாதிக்கச் சட்டங்கள், விபச்சாரம் செய்யும் ஆணைத் தண்டிப்பதில்லை. இதை இங்கு ஒப்பிட்டு புரிந்து கொள்ள முடியும்.

புலிக்கு பின் பெண்களின் நிலை குறித்து தமிழினி


பாலியலை முன்னிறுத்தி ஆணாதிக்க இனவாத அரசியல் செய்கின்ற போக்கு, புலிகளின் ஆரம்ப காலம் முதல் தொடருகின்றது. இருந்தபோதும் தமிழினி யுத்தத்திற்கு பிந்தைய தமிழ் இனவாத அரசியலும், தமிழ் ஊடகங்களும் பெண்களை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கி பிழைப்பதை எதிர்த்து எழுதும் போது, இராணுவம் போல் "விடுதலைக்காகப் போராடப் புறப்பட்ட இயக்கங்களில் இருந்தவர்கள் கூட பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்டிருக்கின்றார்கள்" என்ற உண்மையை போட்டு உடைத்து விடுகின்றார். இராணுவம், புலி ஊடகவியல் எதுவும், ஆணாதிக்க சிந்தனை முறைக்கும், அதன் பொது நடத்தைக்கும் விதிவிலக்கல்ல.

தமிழினி தொடர்ந்து இந்தப் போக்கை அம்பலப்படுத்தும் போது "..விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டால் அந்தப் பெண்ணை மானமிழந்து போனவர்களாகக் கருதி ஒதுக்கி வைக்கும் மோசமான மனப்பாங்கு கொண்ட மனிதர்கள் சமூகத்தில்" இருப்பது போல் "... தமிழ்ப் பெண்களின் மானத்தைக் காற்றிலே பறக்கவிட்டு அரசியல் நலன் தேடும் சுயநலமிகளும்..." இருக்கவே செய்கின்றனர். இந்த வகையில் "இடதுசாரியம் மார்க்சியம்" பேசும் இனவாத தமிழ் தேசியம் பேசும் சாக்கடைக் கூட்டம் வரை இதற்குள் அடங்கும். இலங்கையில் ஒரு நிகழ்வு என்றால், அதை அரசு ஆதரவாகக் காட்டுவது முதல் பெண் இலங்கை இராணுவத்தில் இணைந்தாலோ அல்லது கைது செய்யப்பட்டாலோ அவளை "மானம்கெட்டவளாக" காட்டுவது தமிழ் அரசியலாக இருக்கின்றது. கொலைகாரனும், பெண்களை பாலியல் வன்முறைக்குள்ளாக்கிய சிவராமை (தராகியை) ஊடகவியலாளனாக கொண்டாடும் ஊடகங்கள், பெண்களை பாலியல் ரீதியாக சொற்களால் வன்புணர்ந்து கொச்சைப்படுத்தி காட்டுவதே அதன் பிழைப்பாக இருக்கின்றது.

இதைத்தான் தமிழினியும், சகபெண்களும் எதிர்கொள்கின்றனர். அது குறித்து தமிழினி "போராட்டத்திற்குப் பின்னரான வாழ்வைக் கொச்சைப்படுத்தி பார்க்கின்றது. பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட பெண்களின் உடல்களை விளம்பரப்படுத்தி அரசியல் பிழைப்பு நடத்துகின்றது. போராட்டத்தில் பங்குபெற்று உயிர்மீண்ட பெண்கள் அனைவருமே மானமிழந்து போய்தான் வந்திருக்கின்றார்கள் என்ற கருத்துகளைப் பரப்புவது..." ஊடகங்களினதும், தமிழ் அரசியல்வாதிகளினதும், இனத்தைச் சொல்லிப் பிழைக்கும் "இடதுசாரிகளினதும்" நடத்தையாக ஒழுக்கமாக மாறியிருக்கின்றது. இதற்கு எதிராக என்ன செய்யப் போகின்றீர்கள் என்பதையே - தமிழினி சமூகத்திற்கு முன் கேள்வியாக விட்டுச்சென்று இருக்கின்றார்.

புலிகளின் போராடும் மனநிலையைத் தகர்த்தது எது?

புலிகளின் முக்கிய யுத்த தளபதியும் தலைவருமான விதுசா, தமிழினியிடம் "இந்தச் சண்டையில் நாங்கள் வெல்லுவம் எண்டு நீ நினைக்கிறியா?" என்று கேட்டு "எங்களுக்கு மட்டும் ஏனடியப்பா இப்படி ஒரு வாழ்க்கை? உலகம் எங்கேயோ போயிட்டுது, நாங்கள் மட்டும் காட்டுக்குள்ளும், சேத்துக்குள்ளேயும் செத்துக் கொண்டிருகின்றோம்" என்று கூறுகின்ற மனநிலை தான், பெரும்பாலான புலித்தலைவர்களின் நிலையும் கூட என்று தமிழினி தன்னையும் சேர்த்துக் கூறுகின்றார்.

யுத்தத்தை வலிந்து தொடங்கி அதைச் செய்தவர்கள், யுத்தம் செய்யும் மனநிலையில் இருக்கவில்லை. புலிகளின் தலைவரும், அவரை அண்டிப் பிழைத்த தளபதிகளும், யுத்தம் மூலம் செல்வத்தை பெற்ற (புலம்பெயர் புலி மாபியாக்கள் வரை) புலிக் கூட்டமும், யுத்தம் ஊடாக பிழைப்பை நடத்திய ஊடகங்களுமே யுத்தத்தை விரும்பி அதை திணித்தன.

"அண்ணை - தலைவர்" "ஆயுதத்தை" முன்னிறுத்தி யுத்தத்தில் ஊன்றி நிற்க மற்றவர்கள் பணத்தை சம்பாதிக்க யுத்தம் அவர்களுக்கு அவசியமாக இருந்தது. புலிகளில் இருந்து என்னத்தைக் கண்டோம் என்று தமிழினி சொந்த அவலம், மறுபக்கத்தில் யுத்தத்தை நடத்தி புலியை அழித்ததன் மூலம் புலிக் கோடீஸ்வரர்களை உருவாக்கி இருக்கின்றது என்பதே எதார்த்தம்.

யுத்தமற்ற அமைதிக் காலமானது, உண்மையில் பொருட்களை சந்தைப்படுத்திய காலம். யுத்த பிரதேசத்திற்குள் நவீன பொருட்கள் சென்றதுடன், அதை அனுபவிக்கின்ற குறுகிய நுகர்வுப் பண்பாட்டையும் கொண்டு சென்றது. பணப்புழக்கம் அதிகரிக்க வாழ்க்கை முறையே தலைகீழாக மாறியது.

இந்தப் பின்னணியில் யுத்தப் பிரதேசத்தினுள் புலம்பெயர் சமூகத்தின் ஆடம்பரமான நகர்வுகள், புலித் தலைவர்களுக்கு கொடுத்த உயர்ரகமான அன்பளிப்புகள், தன்னார்வ நிறுவனங்களும் மேற்குநாடுகளும் புலிக்கு கொடுத்த அன்பளிப்புகள், இவை அனைத்தும் விரும்பியோ விரும்பாமலோ யுத்த மனநிலையில் இருந்து தளபதிகளை நுகர்வு மனநிலைக்கு மாற்றி விடுகின்றது. இதுதான் விதுசாவின் கூற்று மட்டுமின்றி, தமிழினியின் மனநிலையும் கூட.

சாதாரணமான போராளிகள் இதே சூழலுக்குள்ளும், அதேநேரம் தங்கள் உறவுகளுடன் மீள உறவுகளை ஏற்படுத்திய போது, ஏற்பட்ட புதிய மனக் கிளர்ச்சி யுத்தமற்ற அன்பான மனித உறவுகள் கொண்ட இயல்பான நுகர்வு வாழ்க்கையைக் கோரியது.

இந்த பின்னணியில் யுத்தம் என்பது ஒட்டுமொத்தத்தில் வலிந்து திணிக்கப்பட்ட ஆயுதத்தையும் பணத்தையும் காதல் செய்த முட்டாள்களினதும் சுயநலமிகளினதும் விருப்பமே யுத்தமாகும்.

முடிவாக

தமிழினி பதிலளிக்கும் முன்பே அவரின் மரணம் முந்திவிட்டது. அவர் தன்னையொத்த பெண்கள் நிலை குறித்து முன்வைத்தவை, இன்றைய பெண்கள் எதிர்கொள்ளும் எதார்த்தம். இதற்கு எதிராக என்ன செய்யப் போகின்றோம் என்பதற்கு சமூகம் என்ற வகையில் அனைவரும் நடைமுறையில் பதிலளித்தாக வேண்டும்.


ரயாகரன்.

Read more...

Saturday, June 11, 2016

பிரிட்டன் வெளியேறுவதற்கான வெகுஜன வாக்கெடுப்பை செயலூக்கத்துடன் புறக்கணிக்க. By Chris Marsden

ஜூன் 23 வெகுஜன வாக்கெடுப்புக்கு மூன்று வாரங்களுக்கும் குறைவாக உள்ள நிலையில், இங்கிலாந்து ஐரோப்பிய ஒன்றியத்தில் ஓர் அங்கத்துவ நாடாக இருக்க வேண்டுமா என்பதை அது தீர்மானிக்க உள்ளது. அந்த முடிவு, அக்கண்டம் முழுவதிலுமான தொழிலாளர்கள் மீது நீண்டகால அரசியல் விளைவுகளைக் கொண்டிருக்கும்.

பிரிட்டன் சோசலிச சமத்துவக் கட்சி அந்த வெகுஜன வாக்கெடுப்பை செயலூக்கத்துடன் புறக்கணிக்க (active boycott) அழைப்புவிடுக்கிறது.

“மக்கள்" தீர்மானிப்பதை அனுமதிக்கும் ஒரு வழியாக காட்டப்படும் அந்த வெகுஜன வாக்கெடுப்பு, யதார்த்தத்தில், பெரிதும் ஜனநாயக விரோதமானதாகும். அது உத்தியோகப்பூர்வமாக உள்ளடங்கி உள்ள இரண்டு பிரச்சாரங்களில் ஒன்றை தேர்ந்தெடுக்குமாறு தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு இரண்டே இரண்டு விருப்பத்தெரிவுகளை மட்டுமே முன்வைக்கிறது. வணிக-சார்பான, சிக்கன நடவடிக்கைகள் சார்பான, இராணுவவாத, தொழிலாள-விரோத, புலம்பெயர்ந்தோர் விரோத சக்திகளால் தலைமை கொடுக்கப்படும் இவ்விரண்டு பிரச்சாரங்களும் பழமைவாத கட்சியின் எதிரெதிரான அணிகளால் தலைமை தாங்கப்படுகின்றன: ஒன்று பிரதம மந்திரி டேவிட் கேமரூன் தலைமையிலானது, மற்றொன்று இலண்டனின் முன்னாள் மேயர் போரிஸ் ஜோன்சன் தலைமையிலானது.

சோசலிச சமத்துவக் கட்சி சமரசமின்றி ஐரோப்பிய ஒன்றியத்தை எதிர்க்கிறது. ஆனால் எமது எதிர்ப்பு வலதில் இருந்து கிடையாது, இடதில் இருந்தாகும்.

ஐரோப்பிய ஒன்றியம் என்பது தங்களுக்குள் சண்டையிடும் மற்றும் தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக தந்திரங்கள் செய்யும், போட்டி நாடுகளது ஒரு கூட்டமைப்பினதும் மற்றும் நிதியியல் சந்தைகளினதும் கட்டளைகளுக்கு அக்கண்டத்தை அடிபணிய செய்யும் ஒரு இயங்குமுறையாகும். ஆகவே பிரிட்டன் அதிலேயே தங்கியிருக்கலாம் என்ற பிரச்சாரத்திற்கு உழைக்கும் மக்கள் அவர்களது ஆதரவை வழங்க முடியாது. அது பிரிட்டனின் பெருநிறுவன உயரடுக்கின் நலன்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த பெருநிறுவன உயரடுக்குள், சர்வதேச அளவில் போட்டியிடுவதற்கான அவற்றின் தகைமைக்கும்—அனைத்திற்கும் மேலாக அக்கண்டத்தின் தொழிலாளர்கள் மீது கடுமையான சிக்கன நடவடிக்கைகளை திணிப்பதன் மூலமாக இதை செய்கின்றன—ரஷ்யா மற்றும் சீனாவிற்கு எதிராக இராணுவவாதம் மற்றும் போர் திட்டநிரல் ஒன்றை வெற்றிகரமாக பின்தொடர்வதற்கான நேட்டோவின் தகைமைக்கும் இன்றியமையாததாக ஐரோப்பிய ஒன்றிய அங்கத்துவத்தைக் கருதுகின்றன.

அதேவேளையில் வெளியேறலாம் என்று எதிர்க்கும் பிரச்சாரம், வெளிநாட்டவர் விரோத போக்குடைய இங்கிலாந்து சுதந்திர கட்சி உட்பட பிரிட்டனின் மிக வலதுசாரி சக்திகளின் மேலாளுமையில் உள்ளது. “புரூசெல்ஸின் அதிகாரத்துவத்திற்கு" எதிரான இவற்றின் அணிதிரள்வு, இலண்டன் நகர பெரு வணிகங்கள் மற்றும் நிதியியல் ஒட்டுண்ணிகளது சர்வாதிகாரத்தின் மீதிருக்கும் சகல கட்டுப்பாடுகளையும் நீக்குவதற்கான முறையீடு என்பதைத் தவிர வேறொன்றும் இல்லை. வெளியேறலாம் எனும் பிரச்சாரம், ஐரோப்பிய ஒன்றிய புலம்பெயர்வோரை வெளியேற்றுவதற்காக இங்கிலாந்து எல்லைகள் மீது "திரும்ப கட்டுப்பாட்டை" பெறுவதற்காக ஏறத்தாழ பிரத்யேக கோரிக்கைகளின் மீது ஒருமுகப்பட்டுள்ளது. அடுத்தடுத்து வந்த தொழிற் கட்சி மற்றும் பழமைவாத அரசாங்கங்களால் பல ஆண்டுகளாக நடைமுறைப்படுத்தப்பட்ட தொழிலாள வர்க்க விரோத நடவடிக்கைகளால் சிதைக்கப்பட்ட அத்தியாவசிய சமூக சேவைகளின் பொறிவுக்கு, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறலாம் என்று கூறும் அணி புலம்பெயர்ந்தோரைக் குற்றஞ்சாட்டுகிறது.

மொத்த புலம்பெயர்வோரின் எண்ணிக்கையை ஆண்டுக்கு 100,000 க்கு குறைவாக குறைப்பதென்ற அவரது உறுதிமொழியை கேமரூன் பூர்த்தி செய்ய தவறியதற்காக அவருக்கு எதிராக இத்தகைய புலம்பெயர்ந்தோர்-விரோத வீராவேச பேச்சுக்கள் திரும்பாத வரையில், கேமரூனுக்கு அவரது முழு உடன்பாட்டை வெளிப்படுத்துவதைக் காட்டிலும் அதிகமாக வேறெதிலும் விருப்பமிருக்காது.

இந்த வெகுஜன வாக்கெடுப்பில் இந்த பிற்போக்குத்தனமான இரண்டு முகாம்களிடமிருந்தும், தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்தை நனவுபூர்வமாக ஸ்தாபிப்பதற்கான சிறந்த நிலைமைகளை உருவாக்குவதற்காக நாம் செயலூக்கத்துடன் புறக்கணிக்குமாறு அழைப்புவிடுத்துள்ளோம்.

தொழிலாள வர்க்கத்திற்காக பேசுவோர் வேறு எவரும் இல்லை.

ஜெர்மி கோர்பின் கீழ் தொழிற் கட்சி, தொழிற்சங்க காங்கிரஸூடன் சேர்ந்து, ஐரோப்பிய ஒன்றியத்திலேயே தங்கியிருக்கலாம் என்பதற்குப் பின்னால் அணிதிரண்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் டோரி அரசாங்கத்தின் நடவடிக்கைகள் மீது கண்காணிப்பைக் கொண்டுள்ளது என்றும், அக்கண்டத்தின் ஏனைய "முற்போக்கான சக்திகளுடன்" கூட்டணி சேர்ந்து ஐரோப்பிய ஒன்றியத்தைச் சீர்திருத்த முடியுமென்றும் அது வாதிடுகிறது.

கிரீஸில் சிரிசாவை மற்றும் பிரான்சில் பிரான்சுவா ஹோலாண்டின் சோசலிஸ்ட் கட்சியை, கோர்பின் அவரது கூட்டாளிகளாக குறிப்பிட்டுள்ளார். ஆனால் சிரிசா ஐரோப்பிய ஒன்றிய அங்கத்துவத்தைப் பேணுவதற்கான ஒரு நிபந்தனையாக அதற்கு முன்பிருந்த கட்சிகளை விட அதிகமாக கடுமையான சமூக செலவு குறைப்பு நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தி வருகிறது. அதேவேளையில் ஹோலாண்ட் தொழிலாளர்-விரோத சட்டமசோதாவை திணித்துள்ளார், இது தூண்டிவிட்டுள்ள வேலைநிறுத்தங்கள் மற்றும் போராட்டங்களின் ஓர் அலையை அவரது அரசாங்கம் மூர்க்கமான ஒடுக்குமுறை உடன் சந்திக்கிறது. கோர்பின் எப்போதேனும் ஆட்சிக்கு வந்தாலும், அவரும் அதையே தான் செய்வார்.

சோசலிச தொழிலாளர் கட்சி (SWP) மற்றும் சோசலிஸ்ட் கட்சி போன்ற போலி-இடது குழுக்கள் இடதிலிருந்து வெளியேறும் (Left Leave) விருப்பத்தெரிவை வழங்க கோருகின்றன. ஆனால் அவர்கள் முன்மொழியும் இந்த மாற்றீடானது, ஐரோப்பிய ஒன்றியம் உடைக்கப்பட வேண்டும் அதிலிருந்து எதிர்காலத்தில் வரும் தொழிற் கட்சி அரசாங்கம் ஒரு சில குறைந்தபட்ச சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த முடியும் என்ற வாதத்தை உள்ளடக்கி உள்ளது. இந்த பிழையான பிரமையைப் பின்தொடர்கையில், அவர்கள், தேசியவாதம் மற்றும் புலம்பெயர்ந்தோர் விரோத வார்த்தையாடல்களின் அடிப்படையில் ஐரோப்பிய ஒன்றிய எதிர்ப்புணர்வைச் சுரண்டுவதற்காகவே ஐரோப்பாவெங்கிலும் அதிதீவிர வலதின் தகைமை முன்னிறுத்தும் அச்சுறுத்தலை ஒவ்வொரு சூழலிலும் கண்டுகொள்ளாமல் விட்டுவிட பார்க்கிறார்கள்.

இந்த வாரம் தான், பிரான்சின் தேசிய முன்னணி தலைவர் மரீன் லு பென் RT க்கு ஒரு பேட்டி அளித்திருந்தார், அதில் அவர், “கூலிகளைக் குறைக்கும் வகையில் ஐரோப்பிய ஒன்றிய தொழிலாளர் சந்தைக்குள்" வருகின்ற "பத்து மில்லியன் கணக்கான புலம்பெயர்ந்தோரை ஐரோப்பிய ஒன்றியம் ஆதரிக்கிறது,” என்றவர் குற்றம்கூறிக்கொண்டார். அவர் தொடர்ந்து கூறுகையில், “ஆகவே உண்மையில் அவர்கள், நீங்கள் அவ்வாறு விரும்பினால், தொழிலாள வர்க்கத்தைக் காட்டிக்கொடுக்கிறார்கள்,” என்றார்.

இதில் எதுவுமே Left Leave சேர்ந்தவர்களுக்கு சம்பந்தமில்லாததாக இருக்கின்றது.

“இனவாதிகளுக்கு வெகுஜன வாக்கெடுப்பை விட்டுக்கொடுக்க" அவர்களது மறுப்பைப் பிரகடனப்படுத்தி உள்ள சோசலிச தொழிலாளர் கட்சி அறிவிக்கையில், “ஐரோப்பிய ஒன்றியத்தின் மீதான விவாதத்தை, இனவாத டோரி கட்சியும் மற்றும் இங்கிலாந்து சுதந்திர கட்சியும் தான், முன்கொண்டு வந்துள்ளன. இதை இடது கொண்டு வரவில்லை. 'பிரிட்டனை வெளியேற்றுவதில்' அவர்கள் தான் மிகவும் பார்வைக்குத் தெரியும் முகமாக இருக்கிறார்கள், நாங்கள் இல்லை. இந்தளவிற்கு உண்மை தான், ஆனால் இதிலிருந்து அவர்கள் தான் ஆதாயமடைவார்கள் என்றாகாது. டோரிக்களின் ஐரோப்பிய ஒன்றிய பிளவுகளில் இருந்து இதுவரையில் மிகப் பெரியளவில் ஆதாயமடைந்திருப்பவர் ஜெர்மி கோர்பின் தான்… ஒருபுறம் கேமரூன், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் முதலாளிமார்களுக்கும், மறுபுறம் Farage மற்றும் இனவாதிகளுக்கும் இடையே தேர்ந்தெடுக்குமாறு மக்களுக்குக் கூறுவது அபாயகரமான ஆக்கபூர்வமற்ற எதிர்நடவடிக்கையாகும்,” என்று அறிவிக்கிறது.

சோசலிச தொழிலாளர் கட்சியை பொறுத்த வரையில், தொழிலாளர்களுக்கு உண்மையைக் கூறுவதென்று வருகையில், அதாவது ஒரு வலது சாரியின் வெற்றி … வலது சாரியைப் பலப்படுத்துகிறது என்ற உண்மையைக் கூறுவது, அதற்கு எப்போதுமே "ஆக்கபூர்வமற்ற எதிர்நடவடிக்கையாக" ஆகிவிடுகிறது. மேலும் கோர்பின், அவர் கட்சிக்குள்ளேயே கூட, வலதுசாரிக்கு எதிராக அவர் போராட போவதில்லை என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்துள்ளார் என்பதுடன், ஐரோப்பிய ஒன்றிய அங்கத்துவத்திற்கு ஆதரவை அறிவித்துள்ளார்.

இந்த வெகுஜன வாக்கெடுப்பு, முதலாளித்துவ தேசியவாதமா அல்லது சோசலிச சர்வதேசியவாதமா என்று முன்னோக்கு மற்றும் நிலைநோக்கு மீதான அடிப்படை கேள்விகளை எழுப்புகிறது.

சோசலிச சமத்துவக் கட்சி, ஐரோப்பிய ஒன்றிய உடைவைப் பொருளாதார தேசியவாதம் மற்றும் புலம்பெயர்வோர்-எதிர்ப்பு வெளிநாட்டவர் விரோதத்தின் அடிப்படையில் அறிவுறுத்தவில்லை. அக்கண்டத்தை தேசியவாத அடிப்படையில் உடைப்பதில் இருந்து அல்லாமல், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அதில் உள்ளடங்கி உள்ள அரசாங்கங்களுக்கு எதிராக ஒரு பொதுவான போராட்டத்தை அபிவிருத்தி செய்வதற்காக, தொழிலாளர்களும் இளைஞர்களும் ஒரு சுயாதீனமான வர்க்க முன்னோக்கின் அடிப்படையில் ஐரோப்பிய ஒன்றியத்தை எதிர்க்க வேண்டும் என்று நாம் கூறுகிறோம்.

ஆழமடைந்து வரும் பொருளாதார நெருக்கடிக்கு இடையே, ஒவ்வொரு இடத்திலும், சுதந்திர வர்த்தகம் வர்த்தக போருக்கும், பாதுகாப்பின்மை மற்றும் வேலைவாய்ப்பின்மை நிதியியல் பாதுகாப்புக்கும், சமூக செலவு குறைப்பு செல்வகொழிப்பிற்கும், மக்களின் சுதந்திர நகர்வு எல்லைகளில் முள்கம்பி வேலிகள் மற்றும் சிறைகூடங்களுக்கு ஒத்த தங்கும் கூடாரங்களுக்கும், ஜனநாயகமானது சர்வாதிகாரம் மற்றும் பாசிச வலதின் வளர்ச்சிக்கும் வழிவிட்டு வருகிறது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் பொறிவு, கடந்துவரவேண்டிய அதே தேசிய விரோதங்களின் ஒரு வெடிப்புக்கு வழி வகுத்து வருகிறது. தொழிலாள வர்க்க தலையீடு இல்லையென்றால், மனிதயினம் மீண்டும் ஒரு முறை உலக போர் பெருஞ்சுழலுக்குள் இழுக்கப்படுவதே இறுதி விளைவாக இருக்கும்.

ஐக்கிய ஐரோப்பிய சோசலிச அரசுகளுக்குள் ஒரு சோசலிச பிரிட்டனுக்கான போராட்டம் என்பது வெறுமனே ஒரு பிரச்சார கோஷம் கிடையாது, மாறாக ஒவ்வொரு நாட்டிலும் அதே வர்க்க எதிரியை மற்றும் சிக்கன நடவடிக்கைகள் மற்றும் போர் என அதே பிரச்சினைகளை முகங்கொடுக்கும் தொழிலாளர்களுக்கான ஒரு அவசரமான அவசியமாகும். இத்தகைய அபாயங்களை முடிவுக்குக் கொண்டு வர, சமூகத்தின் மீதான நிதியியல் பிரபுத்துவத்தின் பிடியை முறித்து, எதிர்விரோத தேசிய அரசுகளாக உலகின் பிளவுகள் மற்றும் இலாபகர அமைப்புமுறை ஆகிய சமூகத்தின் மீதிருக்கும் விலங்குகளிலிருந்து பொருளாதாரம் சுதந்திரப்படுத்தப்பட வேண்டும்.

அத்தகையவொரு தாக்குதலைத் தொடுப்பதில் பிரிட்டிஷ் தொழிலாளர்கள் சக்தி வாய்ந்த கூட்டாளிகளைக் கொண்டுள்ளார்கள்.

பெரு வணிகங்கள் மற்றும் பெரும் செல்வந்தர்களுக்காக மட்டுமே பேசும் பெயரளவிற்கான இடது மற்றும் வலது இரண்டினது உத்தியோகபூர்வ அரசியல் கட்சிகளிடமிருந்து பாரியளவில் அன்னியப்பட்டதால் எரியூட்டப்பட்டு, பிரான்சில் பாரிய வேலைநிறுத்தங்கள் மற்றும் போராட்டங்கள், பெல்ஜியத்தில் ஒரு வேலைநிறுத்த அலை, கிரீஸில் சிரிசா அரசாங்கத்திற்கு எதிரான பொது வேலைநிறுத்தங்கள் என ஐரோப்பா எங்கிலும், தொழிலாள வர்க்கத்தின் கண்டந்தழுவிய பரந்த இயக்கம் ஒன்றின் ஆரம்ப கட்டங்களை நாம் பார்த்து வருகிறோம்.

இந்த வெகுஜன வாக்கெடுப்புக்கு முன்பும் சரி இதற்கு பின்பும் சரி, இந்த சர்வதேச அபிவிருத்திக்கு அரசியல் தலைமை வழங்க சோசலிச சமத்துவக் கட்சி இங்கிலாந்து தொழிலாளர்களது நிலைநோக்கை மாற்றும். சர்வதேச அளவிலான நமது தோழர்களுடன் இணைந்து, நாம் ஐரோப்பிய மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் புதிய சோசலிச மற்றும் சர்வதேச தலைமையாக, நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவின் பிரிவுகளைக் கட்டியெழுப்புவதற்கான அடித்தளங்களை அமைப்போம்.

Read more...

கூலிக்கு மாரடிக்கும் இலங்கை ஊடகங்களின் அயோக்கியத்தனம் சிவா சுப்பிரமணியத்தின் மரணத்தில் சிறப்பாக வெளிச்சமானது.

- நயினை ந.ஜெயபாலன் -
நாய் பூனையின் சிலுமிசங்களைக் கூட செய்திகளாக்கி மக்களிடம் கொண்டு சேர்க்கும் இலங்கைத் தமிழ் ஊடகத்துறைக்கு சிவா சுப்பிரமணியம் ஒரு பொருட்டாகத் தெரியவில்லையோ?.

மூத்த, அறிவுசார்ந்த, முற்போக்கான, பகுப்பாய்வும் தர்க்கரீதியான தேடலுமுள்ள, புள்ளிவிபரங்களை விரல் நுனியில் வைத்திருந்த, சரியான சமூகப்பார்வையுள்ள, மும்மொழிப் பாண்டித்தியமும் ஆற்றலும் எனப் பல்திறன்களையும் தன்னுள்கொண்டு தகுதிமிக்க ஊடகவியலாளனாய் உரியபடி சமூகத்துக்குப் பயன் தந்தவர் சிவா சுப்பிரமணியம். இவரது அனுபவமுதிர்ச்சி, சோர்வின்மை, ஊடகத்துணிச்சல் என்பவற்றினூடாக ஊடகத்றைக்கோர் உதாரண புருசனாகத் திகழ்ந்;த ஒருவர்பற்றி இலங்கை ஊடகங்களால் பேசப்படாமல் போனது ஏன்?

சிங்களத்தை சொந்த மொழியாகக் கொண்ட இலக்கியப் படைப்பாளிகள் கூட பொருத்தமுள்ள சொல்லைத், தலைப்பைத் தேர்வுசெய்ய சிவாவை நாடுவார்கள் என்ற அளவுக்கு சிங்களம் மட்டுமல்ல மும்மொழியையும் எழுத்தால், பேச்சால் தன் கட்டுக்குள் வைத்திருந்த அரிய, கூரிய ஆளுமையாளன். இப்படியொரு பெறுமதியாளனின் இழப்பு ஒட்டுமொத்த இலங்கை ஊடகத்துறை, இலக்கியப்புலம், அறிந்தவர், அரசியல் பிரமுகர்கள் என்ற அனைத்துப் பரப்பிலும் கண்டுகொள்ளாமல் எழுதாமல் பாராமுகமாகவிடப்பட்டிருக்கிறார்! ஏன் இவர்பற்றி ஊடகங்களுக்குத் தெரியவில்லையா? இனி இவர் தேவையில்லையா?

ஊகம், திரிப்பு, காக்காபிடிப்பு, அடக்குமுறைகளுக்குத் துணைபோதல், மாற்றுக் கருத்துக்களை அழித்தல், நூலகத்தை எரித்தல் இவைகளுக்குத் துணை போபவர்களைப் பிரமுகர்களாகக்காட்டுவதும் அதன்மூலம் பணம் பண்ணுவதும் இலங்கைப் பத்திரிகா தர்மமாகவே இருந்துவருகிறது. இந்தவகையான பத்திரிகைகளும் தலமைகளும் விலாசமற்று, மதிப்பிழந்து அழிந்த வரலாறுகள் அறிந்தும் இன்னும் அதை உணர மறுக்கிறார்கள் ஊடகவர்த்தகர்கள். கோட்டு வாசலிலும், பொலிஸிலும் கற்பழிப்பு, கொலைச் செய்திகள் சேகரி;த்துப் பக்கங்கள் நிரப்புவதல்ல பத்திரிகைத் தொழில். சமூகத்தை நேர்மையோடும் பற்றோடும் நெறிப்படுத்துவதே ஊடகக்கடமை!

சிவா சுப்பிரமணியம் முற்போக்கான கருத்துக்களை, சமூக நடைமுறைக்குகந்த விடயங்களை, சமத்துவம் சார்ந்தவைகளை நேர்மையோடும், துணிச்சலோடும் முன்வைத்தார்! எனவே இவரை அறிந்திருப்பதும் வரவேற்பதும் இளைய பத்திரிகையாளருக்கும் மாணவசமூகத்துக்கும் பயனும் அவசியமும் ஆகும். அதைச் செய்ய இயலவில்லை! அப்படிச் சிவா போன்ற துணிவு, தகுதி இல்லையென்றால் எழுதுபவர்கள் எழுத்துத் தொழிலைக் கைவிடுங்கள் அதுவும் நல்லதுதான்.

யாழ்ப்பாணத்தில் பல்கலைக் கழகத்தின் வருகைக்கு அயராது உழைத்ததில் சிவாவின் பங்கு அதிகம். வரவிடாமல் தடுக்க உழைத்த பகுதியினர், பல்கலைக்கழகம் வந்தபின் காலத்துக்குக் காலம் மாணவர்களைத் தவறாகத் தூண்டிவிட்டு அரசியல் லாபம் தேடி அதிக பங்கு உழைக்கிறார்கள்.

இதுபோன்ற தீர்க்கதரிசனக் கருத்துகளோடு பல்கலைக்கழக ஆரம்பகாலத்தில் ஒரு பட்டிமன்றத்தில் கருத்து வைத்த சிவா பல்கலைகழக பட்டிமன்றமேடையால் இறங்கியதும் தமிழரசுக்கட்சி எம்.பி.தர்மலிங்கம் பெருந்தன்மையோடு சிவாவைப் பாராட்டினார். 'தம்பி உனது கருத்துக்களோடு நான் உடன்;படுகிறேன். ஆனால் நான் சார்ந்த அணிக்கு இதில் உடன்பாடில்லை. என்றபோதும் உன் கருத்துக்கள் வரலாறாகும்' என்றார்.. அப்டியொரு தூரநோக்கு அறிவுள்ள இடதுசாhரி சிவா.
பட்டங்களால் மட்டும் அறிவாற்றல் உருவாவதில்லை என்ற உண்மையை எனக்குணர்த்திய இரு தோழர்களை இவ்வாண்டின் கடந்த மாதம் நான் இழந்திருக்கிறேன். இவ்விரு இழப்புமே என்னுள் பாரிய பாதிப்பைத் தந்தவை. டாக்டர் கலாசபதிக்கு நிகரான ஆளுமையும் அறிவும் கொண்ட, நடமாடும் பல்கலைக்கழகம் என்று பேசப்பட்டவர் சிவா.சுப்பிரமணியம். எந்தத் துறைசார்ந்தும் எந்த நேரமும் அவரிடம் பதில் தேடலாம்.

இலக்கியமோ, அரசியலோ எழுத்தில் சுருக்கமும், நிதானமும், நேர்த்தியும் இவரது முத்திரைகள். இளவயது இடதுசாரி நட்பும், சிங்களத்தோழர்களின் ஈடுபாடும், மேடைப் பேச்சின் கனிவும், இலகுவான மொழிநடையில் சுருக்கமான மொழிபெயர்ப்பும் சிவாவிடம் போல் யாரிடமும் நான் பார்த்தது கிடையாது. தான் கற்றவற்றைப் புடமிட்டு மற்றவருக்குக் கற்றுக்கொடுப்பதில் அலாதிப்பிரியமுள்ளவர். இத்துணை ஆற்றல்களுக்கான அவரது ஊற்றுமூலம் எதுவென்றால்! மற்றவர் கருத்தையும் ஏற்று உள்வாங்கல், அயராத வாசிப்பு, கேள்வியுடன் கூடிய தேடல் இவைதான். வீட்டிலேயே ஒரு நூலகம் வைத்திருந்தார். தன் நேரங்களில் அதிக பக்கத்;தை அதனுள் புதைத்துவிடுவார்.

மூன்று தடவைகள் இலங்கை நிர்வாகசேவைப் பரீட்சையில் சித்தியடைந்தும் பதவிகிடையாமைக்கு சில பின்னணிக்காரணங்கள் இருந்திருக்கலாம். கிடைத்திருந்தால் இலங்கையின் வரலாறு ஒரு முற்போக்கான நிர்வாக அதிகாரியைச் சந்தித்திருக்கும். இதற்கு அவருக்கிருந்த அறிவு, மொழிப்புலமை, சமூகப்பார்வை இவை துணைபோயிருக்கும்.

இடதுசாரிகள் தம்மை அர்ப்பணிப்பதும், நேர்மை, தன்மானம் என்பவற்றில் உறுதியாக இருப்பதும் அவர்தம் சராசரி வாழ்வில் அவர்களை உயரவிடாத பின்னடைவுகளைச் சந்திக்கவைக்கிறது என்றாலும் அவர்கள் அதைநோக்கித் தளர்வதில்லை. அப்படியே சிவாவும்.

தினகரன் பத்திரிகையில் ஆசிரியராக இருந்துவிட்டுத் தொடர்ந்து இணைந்துபோக விருப்பமற்றுத் தானாகவே விலகினார். விலகியபோதும் எழுத்தைக் கைவிடவில்லை 2016, இவ்வாண்டு மே, கடந்த மாதம் இறுதிமூச்சை இழக்கும் வரை எழுதிக்கொண்டே இருந்தார்.

புதுயுகம், தேசாபிமானி இதழ்களிலும் தினக்குரல், கல்பனா, மல்லிகை, சிங்கள இதழ்கள், இல.முற்.போ. எழுத்தாளர் சங்கவெளியீடுகள் எனப் பலவற்;றை இவரது எழுத்துக்கள் அலங்கரித்தன.

இவர் எழுதிய 'இலங்கை அரசியல் வரலாறு ஒரு நோக்கு' என்ற புத்தகம் பல்கலைக்கழக மாணவர்களுக்கான சான்றாதார(குறிப்பு)க் கைநூலாகச் சிபார்சுபண்ணப்பட்டிருக்கிறது என்பதும் அவர்பற்றிய தகுதிக்கு சான்றுபகர்கிறது.

இவற்றோடு இலங்கைப் பாராளுமன்றக் கூட்டத்தொடர்களின் நிகழ்வுப்பதிவுகள் பாராளுமன்றம் தொடங்கிய காலத்திலிருந்து இறப்பதற்கு அண்மித்த நாட்கள் வரை இவர் தவறாமல் தொகுத்து வைத்திருந்தார் எனவும் அறியமுடிந்தது.

இன்னோரன்ன திறன்களோடு சர்வதேசத்தை, நாட்டை, மொழிகளை, சமூகங்களை, நேர்மையை அக்கறையோடு நேசித்த ஒரு மனிதனை சமூகத்துக்கு எடுத்துக்காட்டுவது என்பது எமக்கான சமூகக்கடமை! தினகரன் தவிர்ந்த இலங்கைப் பத்திகைகள், இணையங்கள் இக்கடமையிலிருந்து தவறிப்போயின. அதேவேளை புலம்பெயர் தேசங்களில் இயங்கும் இணையங்கள், ஊடகங்கள் ஒப்பீட்டளவில் இலங்கையைவிட அதிக அக்கறைகாட்டின!.
அந்த வகையில் புலம்பெயர் ஊடகங்கள் நன்றிக்குரியன!

Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com