Thursday, March 24, 2016

புலிகள் ஊடக சுதந்திரத்தை நிலைநிறுத்த மேற்கொண்ட தியாகங்களை விபரிக்கின்றார் டாக்டர் நடேசன்.

ஈழத் தமிழர் அரசியல் ஒரு யானைக்கால் - நடேசன்

அவுஸ்திரேலியாவில் பதின்மூன்று வருடகாலம் நான் முன்னின்று நடத்திய உதயம் இருமொழி (தமிழ் – ஆங்கிலம்) மாதப்பத்திரிகை வியாபார ரீதியில் 25000 டொலர்கள் செலவுடன் வெளியாகியது.

ஒவ்வொரு வருடமும் வியாபாரரீதியில் நட்டத்தையே எதிர்நோக்கியது. விளம்பரதாரர்களின் ஆதரவுடன் வெளியானபோதிலும் நட்டம் தவிர்க்கமுடியாதிருந்தமைக்கு அவ்வேளையில் இங்கு புலிகள் இயக்கத்தின் தீவிரமான எதிர்ப்பிரசாரங்களும் முக்கிய காரணம். உதயத்திற்கு விளம்பரம் தருபவர்களை எச்சரித்தல், அதில் எழுதுபவர்களின் குடும்பத்தினருக்கு அழுத்தங்கள் பிரயோகித்தல், கடைகளில் இருந்து உதயம் இதழ்களை ஆட்களை அனுப்பி துக்கிவீசச்செய்தல் முதலான தமக்குத்தெரிந்த அராஜக கைங்கரியங்களில் ஈடுபட்டனர்.

வருடாந்தம் கிட்டத்தட்ட 5000 டொலர்கள் வரையில்; நட்டம் வந்தது..உதயம் மாத இதழாக வெளியாகியதுடன் இலங்கை தமிழக படைப்பாளிகளும் அதில் எழுதினார்கள். தமிழ்நாட்டிலிருந்து எஸ். ராமகிருஷ்ணன், ஜெயமோகன், சாருநிவேதிதா உட்பட வேறு சிலரும் எழுதினார்கள். ஒரு கம்பனியாக பதிவுசெய்து அதன் நிருவாகப்பொறுப்பை நான் ஏற்றுக்கொண்டிருந்தமையால் எதிர்நோக்கப்பட்ட நட்டத்தையும் ஏற்றுக்கொண்டேன்.

உதயத்தின் தொடர்வருகையை சகித்துக்கொள்ளமுடியாத புலி ஆதரவாளர்கள் பின்னர் தாமே ஒரு பத்திரிகையை ஆரம்பித்தனர். அதன் பெயர் ஈழமுரசு. இதேபெயரில் ஐரோப்பியநாடுகளிலிருந்தும் கனடாவிலிருந்தும் புலிகள் பத்திரிகை வெளியிட்டனர்.

உதயம் எழுத்தாளர் எஸ்.பொன்னுத்துரை மனித உரிமை ஆர்வலர் லயனல்போப்பகே, பொருளியல் விரிவுரையாளர் அமீர்அலி ஆகியோரையும் அழைத்து காலத்துக்கு காலம் உதயம் தொடர்பாகவும் அரசியல் இலக்கியம் தொடர்பாகவும் கருத்தரங்குகள் நடத்தியிருக்கிறது. இந்த நிகழ்ச்சிகள் மெல்பனில் நடந்தமைபோன்று சிட்னயில் கவிஞர் அம்பி தலைமையில் பத்திரிகைளில் சுயதணிக்கை பற்றிய கருத்தரங்கும் நடத்தியிருக்கிறது.

இதில் மனிதஉரிமை ஆர்வலர் கலாநிதி பராக்கிரம செனவிரத்தினவும் உரையாற்றியிருக்கிறார். உதயம் பத்திரிகை வெளியீட்டில் மட்டும் அக்கறைகொண்டிராமல் வாசகர் கருத்துக்களுக்கும் பொது அரங்கில் களம் தந்தது.

இவ்வாறு தொடர்ச்சியாக உதயம் வெளியானபோதிலும் என்னுடன் உதயம் இதழில் இயங்கிய சிலருக்கும் புலிகள் பலவிதங்களில் அழுத்தங்களை பிரயோகித்தார்கள். இதனாலும் உதயம் வெளியீட்டில் நட்டங்கள் எதிர்நோக்கப்பட்டது.

மருத்துவரான எனது மனைவிக்கும் நட்டம் வந்தது. தமிழ் நோயாளர்கள் சிகிச்சைக்காக அவரிடம் செல்லக்கூடாது என்ற பிரசாரத்தையும் கட்டவிழ்த்தனர். நண்பர் எழுத்தாளர் முருகபூபதி உதயம் பத்திரிகையில் தொடர்ந்து எழுதினார். அத்துடன் ஒவ்வொரு மாதமும் உதயம் பத்திரிகையில் தமிழ்ப்பக்கங்களை ஒப்புநோக்கினார். இதனால் அவர் மீதும் அவதூறு பொழிந்தனர். அவர் இலங்கையில் பத்திரிகையாளராக இருந்தவர். இங்கு ஒரு தொழிற்சாலையில் பணியாற்றிக்கொண்டு தமது உழைப்பிலும் வங்கியில் கடன் பெற்றும் தமது குடும்பத்திற்கு ஒரு வீட்டை வாங்கியிருந்தமையால் அந்த வீடு இந்திய மத்திய அரசு வாங்கிக்கொடுத்த வீடு என்று ஒரு அவதூறு பிரசாரத்தையும் முன்னெடுத்தனர் இந்த புலி ஆதரவாளர்கள். இதே போன்று உதயம் பத்திரிகையில் சம்பந்தப்பட்டிருந்த நண்பர் இராஜரட்ணம் சிவநாதன் நடத்திய பயண முகவர் நிறுவனத்திற்கும் தமிழ் வாடிக்கையாளர்களைச்; செல்லவிடாது தடுத்தனர்.

உதயம் பத்திரிகையின் சட்ட ஆலோசகராக இருந்த சட்டத்தரணி செல்வத்துரை ரவீந்திரனுக்கு எதிராகவும் அவதூறு பிரசாரங்களை முன்னெடுத்து அவருடைய தொழிலுக்கும் பதிப்பு ஏற்படுத்தினர்.

உதயம் பத்திரிகையில் ஆங்கிலப்பக்கங்களை கவனித்த மாவை நித்தியானந்தன் முன்னின்று நடத்திய பாரதி பள்ளிக்கு பிள்ளைகளை செல்விடாது தடுக்கும் புண்ணியகருமங்களிலும் ஈடுபட்டனர்.

இவ்வாறு உதயம் பத்திரிகையுடன் நெருக்கமான உறவுகொண்டிருந்தவர்களுக்கு புலிகள் நட்டத்தை ஏற்படுத்தியிருந்தாலும் உதயம் பத்திரிகையால் பயன் அடைந்தவர்களும் இருக்கிறார்கள்.

அவர்கள்:

பத்திரிகையை பதிப்பித்த அச்சகத்தினர். பக்க வடிவமைப்பு செய்தவர்கள். பத்திரிகை பிரதிகளை கடைகளுக்கு விநியோகித்தவர்கள். அத்துடன் உதயத்தில் எழுதிய சிலருக்கு பணமும் கொடுத்திருக்கின்றேன். அவர்கள் பணத்துக்காக எழுதியவர்கள் அல்ல. பொதுவாகவே பத்திரிகைகளில் எழுதும் நிருபர்கள் படைப்பாளிகளுக்கு பத்திரிகை நிறுவனங்கள் வழங்கும் சன்மானத்திற்கு ஒப்பானது.

இப்படியாக ஒரு சிறிய வியாபாரத்தால் அதனை நடத்துபவர்கள் சிலர் நட்டப்படுவதும் மேலும் சிலர் லாபமடைவதும் வழக்கம்தான்.

இந்நிலையில் சுமார் நாலு பில்லியன் டொலர் பெறுமதியான வியாபாரம் நட்டமடைந்தால் எத்தனை பேர் அதனால் நட்டமும் இலாபமும் அடைவர்கள்?

இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்கள் 8 வீதமான உற்பத்தி பொருளாதாரத்தை கொண்டன. கிட்டத்தட்ட 3 பில்லியன் (GDP) உள்ளது அதைவிட விடுதலைப்புலிகளின் நியாயமான வியாபாரங்கள் வெளிநாட்டு மக்களின் பணம் மற்றும் போதை மருந்து கடத்தல் என் குறைந்த பட்சம் 700 மில்லியனில் இருந்து 1 பில்லியன் வரையில் நடந்திருக்கலாம் என சொல்லப்பட்டது. கிட்டத்தட்ட 4 பில்லியன் டொலர்கள். இந்தப்பணம் சில சிறியநாடுகளின் மொத்த வருமனத்துக்கு ஒப்பானது.

இந்த வியாபாரம் வங்குரோத்தானதால் எத்தனை பேர் வருமானம் இழந்திருப்பார்கள்?

இதற்கப்பால் இலங்கையில் 30 வருடத்திற்குள் குறைந்தது ஒரு இலட்சம் பேர் போரில் கொல்லப்பட்டிருந்தாலும் 5 இலட்சம் மக்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்கள். இவர்களில்; இந்தியாவில் இருப்பவர்கள் தவிர்ந்த மற்றவர்கள் வசதிவாய்ப்புகளோடு இருக்கிறாரகள்.

இதனை எழுத்தாளர் தேவகந்தன் தமது கனவுச்சிறை நாவலில் அழகாக படம் பிடிக்கிறார்.இலங்கைத் தமிழரான முதியவர் ஒருவர் சென்னையில் இருந்து பேசுகிறார்:

“தம்பி சண்டை தொடங்கிவிட்டது. எப்படியும் தங்கச்சியையும் அம்மாவையும் வெளிநாட்டுக்கு அனுப்பிவிடலாம்’’.

இது மட்டுமா?

முப்பது வருடங்கள் வெளிநாடுகளில் புலிகளின் செயல்பாட்டாளர்கள் ஒருவிதத்தில் குட்டி இராஜாக்களதான். அவர்களால் ஒருவரை ஆக்கவும் முடியும். அழிக்கவும் முடியும். ஏன் அடுத்த உலகிற்கே அனுப்பவும் முடியும். தனிமனிதர்களை பயமுறுத்தி காரியம் சாதிக்கமுடியும். கணவன் மனைவி தகராறில் தலையிடமுடியும்.

அவுஸ்திரேலியா, கனடா, ஐரோப்பிய நாடுகளில் உதாரணங்கள் பலவுண்டு.

இவையெல்லாவற்றையும் கடந்த காலங்களில் அனுபவித்தோம் அதையெல்லாம் சுமார் 1000 பக்கத்தில் எழுதவும்முடியும்

விடுதலைப்புலிகளின் அதிகாரம் அன்று வட கிழக்கு மாகாணத்தில் எந்த சர்வாதிகாரிக்கும் மேலானது

இப்படியான நிலையில் 2009 இல் இயக்கத்தின் அழிவில் விடுதலைப்புலி ஆதரவாளர்கள் நிலை குலைந்துவிட்டார்கள். மன அழுத்தங்களினால் குடும்பங்களைப் பிரிந்தவர்கள் சிலர். பலர் குடி போதைக்கு அடிமையானார்கள். மேலும் சிலர் சித்தசுவாதீனத்தால் பாதிக்கப்பட்டனர். அந்த அழிவின் விடை இப்படி இருக்க, சந்தர்ப்பவாத விடுதலைப்புலி ஆதரவாளர்கள்; மாத்திரம் – தம்பி எப்ப போவான் திண்ணை எப்ப காலியாகும் என்று தங்களது பைகளை நிரப்பிவிட்டார்கள்.

ஒரு சிலர் மனச்சாட்சியையும் மக்களையும் போக்கு காட்ட தாம் எடுத்த பணத்தில் சீமான் அழைப்பு மாவீரர் தின நிகழ்ச்சி என திருடன் ‘திருப்பதி உண்டியலில் போடுவதுபோல்” நடக்கிறார்கள்.

இவைக்கெல்லாம் முக்கிய காரணம் விடுதலைப்புலிகளின் பணம் எந்த ஒரு ஸ்தாபனத்திலும் இருக்கவில்லை .வெளிநாடுகளில் தனியார் கணக்குகளில் வெவ்வேறு வங்கிகளிலிலும் வீடுகளாகவும் வியாபார நிறுவனங்களாகவும் உருமாறிவிட்டது. அமெரிக்க இரட்டைக் கோபுரத்தாக்குதலின் எதிரொலியாக வெளிநாடுகளில் பணம் பரிவர்த்தனையை கண்காணித்ததால் புலிகளுக்காக சேகரிக்கப்பட்ட பணம் தனியார் வசமாகியது. அதாவது சிலருக்கு மட்டும் ‘யானை இறந்தாலும் ஆயிரம்பொன் இருந்தாலும் ஆயிரம் பொன்னாகியது”

பெரும்பாலானவர்களுக்கு பணம் – பதவிகள் விடயத்தில் இது பெரிய இழப்பே.

உள்நாட்டில் மக்கள் மத்தியில் புலிகள் அற்றுபோனது அங்கு பலருக்கும் சந்தோசம். இந்த நிலைமையை அங்கு அகதி முகாம்களை நான் பார்க்கச்சென்றபோது பார்க்க முடிந்தது. காரணம் அகதிமுகாம்களில் இருந்தவர்களில் 75 வீதமானவர்கள் ஏழைகள். அவர்களிடம் இருந்தது குறைந்தளவு உடமைகளும் அவர்களது உறவுகளும்தான். இதிலும் இந்த ஏழைகளில் அரைவாசிக்கு மேற்பட்டவர்கள் மலையகத்தில் இருந்து குடிபெயர்ந்தவர்கள். மற்றவர்கள் காலம்காலமாக வன்னி மன்னார் மாவட்டத்து விவசாயிகள்.

விடுதலைப்புலிப்போராளிகளிலும் அதிலிருந்து வெளியேவந்தவர்களில் பெரும்பாலானவர்கள் தாம் நம்பியிருந்த இயக்கத்தின் மீது வெறுப்புடன் இருக்கிறார்கள் என்பதை நான் இலங்கையில் சந்தித்தவர்களை வைத்து உறுதியாகச் சொல்லமுடியும். மேலும் அந்த இயக்கத்திலிருந்து வெளியே வந்த இலக்கியவாதிகளில் அகதிமுகாமில் இருந்தபடியே கள நிலைமையை உடனே எழுதிய கவிஞர் கருணாகரனை அப்பொழுது சிலர் கரித்துக் கொட்டினார்கள். அதன்பின்பு வெளிநாடுகளில் இருந்து எழுதியவர்களில் பலர் விடுதலைப்புலித்தலைமையை விமர்சித்தார்கள்.

போரின் பின்னர் இலங்கை அரசாங்கம் எடுத்த சில நடவடிக்கைகளாலும், மற்றும் செய்யத் தவறியவற்றாலும் மக்களின் துன்பத்தை மீண்டும் ஒரு முதலாக வைத்த தமிழ் அரசியல்வாதிகள் தமது வியாபாரத்தை தொடர்ந்தனர். புலிகளை ஆதரித்த இந்த தமிழ் அரசியல்வாதிகள் போரில் புலி தோற்றாலும் தமிழ்த்தேசியம் தோற்கவில்லை என்று பாவனைகாட்டி வருகின்றனர். வெளிநாடுகளில் இருக்கும் சில விடுதலைப்புலிகளின் எச்ச சொச்சங்கள் நாடுகடந்த தமிழ் ஈழம், சர்வதேச விசாரணை போர்க்குற்ற விசாரணை என அறிக்கை விடுத்து தங்களுக்குள் இன்புறுகிறார்கள்

இந்த நிலையில் பதினெட்டு வருடங்களை போர்க்காலத்தில் தொலைத்துவிட்ட பெண்போராளியான சிவகாமி எனும் தமிழனியின் நினைவுகளின் தொகுப்பான கூர்வாளின் நிழலில் நூல், பகல்கனவு காணுபவர்களின் முகத்தில் ஒரு குடம் தண்ணீரை ஊற்றி எழுப்பியது போல் திடுக்கிட வைத்துள்ளது. உண்மையில் இந்தப்புத்தகத்தில் இருப்பன எதுவும் புதிய செய்திகள் அல்ல.

விடுதலைப்புலிகளை காலங்காலமாக விமர்சித்தவர்கள் முன்னர் எழுதியதைத்தான் அதில் பார்க்க முடிகிறது. கடைசி யுத்தம் பற்றி காலச்சுவடு இதழில் கருணாகரன் அகதி முகாமில் இருந்து எழுதியவை இதைவிட விளக்கமானவை.

ஆனால், தமிழினி எழுதியதுதான் விடுதலைப்புலி எச்ச சொச்சங்களுக்கு தாங்க முடியாமல் போயிருக்கிறது. காரணம் புலிப்பூச்சாண்டி காண்பித்து வியாபாரம் செய்யமுடியாது என்பதால்தான். பிரபாகரனதும் பொட்டம்மானதும் பிழையான வழிகாட்டல்களினால் விருப்பமற்று சண்டையிட்டார்கள் என தமிழினியே எழுதியிருக்கும்போது மாவீரர்கள் என எப்படிச் சொல்லமுடியும்? போற்றிப்புகழ முடியும்?

சாதாரண மக்கள் இராணுவத்தின் குண்டுகளால் இறந்தார்கள். அதேபோன்று யுத்தகளத்தில் இருந்து வெளியேற முற்பட்டவர்களை விடுதலைப்புலிகள் கொன்றார்கள்.

இச்சந்தர்ப்பத்தில் எனக்கு அவ்வேளையில் நடந்த சம்பவம் ஒன்று நினைவுக்கு வருகிறது. புலிகளிடத்திலிருந்து தப்பிச்சென்ற ஒரு குடும்ப்பப் பெண் லண்டன் பி.பி.சி வானொலிக்கு அளித்த பேட்டியில் புலிகளின் செயலைத் திட்டிப்பேசியதையடுத்து, மெல்பனில் மருத்துவராக பணியாற்றும் ஒருவர் இங்குள்ள உள்ளுர் வானொலியில் அந்தப்பெண்ணை கடுமையாக கண்டித்தார். அவ்வளவுதூரம் அவர் பகல் கனவு கண்டுகொண்டிருந்தார். எல்லாம் அந்த ஈஸ்வரனுக்கே வெளிச்சம்.

அவ்வேளையில் பாதிக்கப்பட்ட மக்கள் இருபக்கத்திலும் இரையாகினர். இதேபோல் புலிப்போராளிகளை இலக்கற்று யுத்ததிற்கு இழுத்துச்சென்ற பிரபாகரனும் பொட்டமானும் இறுதியில் கிழக்கில் மாவிலாறில் அவர்கள் தொடக்கிய இறுதிப்போரில் வடக்கில் வன்னியில் இரையாகினர்.

மாரியம்மனில் பக்தர்கள் மட்டுமல்ல பலிகடாக்களும் பக்திகொண்டது எமது வரலாறு

இந்த நிலையில் எப்படி இவர்களை மாவீரர்கள் என கொண்டாடுவது? கொள்கைக்காக உயிரை விட்டவர்கள்தானே மாவீரர்கள்?

ஒரு பழக்கடைக்காரனுக்கு ஒரு காலில் யானைக்கால் வியாதிவந்து உரல் மாதிரி இருந்தது. பாடசாலை முடிந்ததும் சில குறும்புக்கார சிறுவர்கள் பழக்கடையில் தொங்கிய வாழைக்குலையில் இருந்து பழத்தை பறிக்க முயன்றபோது கடைக்காரன் தனது யானைக்காலை தூக்கி அவர்களை விரட்டும்போது சிறுவர்கள் மிரண்டு ஒடுவார்கள்.

ஒருநாள் ஒரு குறும்புக்கார சிறுவன் துணிந்து பழத்தை பறித்தபோது பழக்கடைக்காரன் யானைக்காலால் அந்த சிறுவனை அடித்தபோது அவனுக்கு மெத்தென்றிருந்து. அந்தச்சிறுவன் மற்றவர்களை நோக்கி கத்தினான் ‘டேய் இவனது கால் வலிக்காது’

வாழைப்பழக்குலை மட்டுமல்ல முழு பழக்கடையும் அந்தச் சிறுவர்களால் காலியானது

தமிழ்த்தேசியம் மட்டுமல்ல தமிழர்களின் சகல விடயங்களும் யானைக்கால் வந்தவனது பெரியகால் மாதிரி பெரிசாகத்தான் இருக்கிறது.

ஆனால், அப்பாவி மக்கள் ?

Read more...

Wednesday, March 23, 2016

இலங்கை மாவோவாதக் கட்சி "முற்போக்கு தமிழ் தேசியவாதத்தை" பரிந்துரைக்கின்றது. By Subash Somachandran and S. Jayanth

இலங்கையில் மாவோவாத குழுவான புதிய ஜனநாயக மார்க்சிச-லெனினிச கட்சி (பு.ஜ.மா.லெ.க.), "பிற்போக்கு தமிழ் தேசியவாதத்துக்கு" எதிராக "முற்போக்கு தமிழ் தேசியவாதத்துக்கு" ஆதரவை வெளிப்படுத்துவதன் மூலம், அழுகிப்போன தமிழ் இனவாத அரசியலுக்கு புத்துயிரூட்ட முயற்சிக்கின்றது. பு.ஜ.மா.லெ.க., மக்களில் பெரும்பான்மையானவர்கள் தமிழர்களாக இருக்கும் வட இலங்கையையும் தமிழ் பேசும் தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் செறிந்து வாழும் மத்திய மலையகப் பிரதேசத்தையும் தளமாகக் கொண்டு செயற்படுகின்றது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒரு பிரிவினரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி (த.தே.ம.மு.) மற்றும் பல சிவில் அமைப்புகளும் சேர்ந்து புதிதாக ஸ்தாபித்த தமிழ் மக்கள் பேரவையைப் பற்றி, தமிழ் பத்திரிகையான உதயன், பு.ஜ.மா.லெ.க. பொதுச் செயலாளர் எஸ்.கே. செந்திவேலிடம் பெற்ற பேட்டி ஒன்றை டிசம்பர் 29 பிரசுரித்திருந்தது.

செந்திவேல் அறிவித்ததாவது: "மக்களுக்கு மாற்றம் வேண்டும். அவர்கள் அடிப்படை கொள்கையில் இருந்து மாற்றுக் கொள்கைக்கு வர வேண்டும். பிற்போக்கு தமிழ் தேசியவாதம் தான் உள்ளது. முற்போக்கு தமிழ் தேசியவாதம் வரவேண்டும்." தமிழ் கூட்டமைப்பு மற்றும் த.தே.ம.முன்னணியும் "பிற்போக்கு தமிழ் தேசியவாத கொள்கைகளை” பின்பற்றுவதாக கூறிக்கொண்ட அவர், பு.ஜ.மா.லெ.க. "முற்போக்கு தமிழ் தேசியவாதத்தை" முன்னெடுப்பதாகத் தெரிவித்தார்.

இந்த வேறுபடுத்தல் பொய்யானதாகும். எந்த வடிவத்திலும், தமிழ் தேசியவாதத்தில் அல்லது உண்மையில் தேசியவாதத்தில் எந்தவித முற்போக்கும் கிடையாது. 1980களில், பாலஸ்தீன விடுதலை இயக்கம் (பி.எல்.ஓ.), இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் போன்ற முதலாளித்துவ தேசியவாத இயக்கங்கள் அனைத்தும், கூர்மையாக வலதுபக்கம் திரும்பி, சகலவித ஏகாதிபத்திய-விரோத நிலைப்பாடுகளையும் கைவிட்டு, பெரும் வல்லரசுகளிடம் சரணாகதி அடைய முயன்றன. இந்த அரசியல் மாற்றமானது இந்த அமைப்புக்கள் அனைத்தும் அடித்தளமாக கொண்டிருந்த தேசிய பொருளாதார ஒழுங்கமைப்பு வேலைத்திட்டத்துக்கு முழுமையாக குழிபறித்த, உற்பத்தியின் பூகோளமயமாக்கலின் தாக்கத்தை பிரதிபலித்தது.

2009ல் புலிகள் அமைப்பு இராணுவ ரீதியில் தோற்கடிக்கப்பட்டமை இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் ஒரு தமிழ் முதலாளித்துவ அரசை அமைக்கும் அதன் திவாலான தேசியவாத முன்னோக்கின் விளைவே ஆகும். அதன் இரக்கமற்ற ஜனநாயக-விரோத வழிமுறைகளால் தமிழ் தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் இளைஞர்கள் அந்நியப்பட்ட போதிலும் கூட, கொழும்பு அரசாங்கத்தின் குற்றங்களுக்கு முழு சிங்கள மக்களையும் கண்டனம் செய்தமை, புலிகள் இயக்கம் இலங்கையில் அல்லது மிகவும் பரந்தளவில் தெற்காசியா மற்றும் உலகம் பூராவும் உள்ள தொழிலாள வர்க்கத்துக்கு அழைப்புவிடுக்க இலாயக்கற்றது என்பதை உறுதி செய்தது. இலங்கை இராணுவம் புலிகளின் கடைசி கோட்டைகளையும் சுற்றிவளைத்த போது கூட, அவர்கள் கொழும்பை ஆதரித்த அதே பெரும் வல்லரசுகளுக்கே பயனற்ற வேண்டுகோள்களை விடுத்தனர்.

கூட்டமைப்பில் இருந்தும் அதன் "பிற்போக்கு தமிழ் தேசியவாதத்தில்" இருந்தும் தன்னை தூர விலக்கிக்கொள்ள பு.ஜ.மா.லெ.க. மேற்கொள்ளும் முயற்சியானது புலிகளை ஆதரித்த இந்த அனைத்து அமைப்புக்களுக்குள்ளும் நிலவும் நெருக்கடிக்கு மற்றொரு அடையாளமாகும். ஏதாவதொரு வடிவத்தில் அவர்கள் தமிழ் பிரிவினைவாதத்தை தொடர்ந்தும் முன்னிலைப்படுத்துவது, தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்தி சோசலிசத்திற்கான போராட்டத்தின் பாகமாக ஜனநாயக உரிமைகளுக்கான ஐக்கியப்பட்ட போராட்டத்தை முன்னெடுப்பதை தடுப்பதற்கே சேவை செய்கிறது.

இப்போது வட மாகாண சபையை ஆட்சி செய்யும் தமிழ் கூட்டமைப்பு, தமிழ் தொழிலாளர்கள், கிராமப்புற வறியவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் பெருமளவு அதிருப்திக்கு உள்ளாகியுள்ளது. ஜனத்தொகையில் பெரும்பான்மையானவர்கள் தொழில் மற்றும் அடிப்படை வசதிகள் இன்றி தவிக்கும் அதே சமயம், கொழும்பு அரசாங்கத்துடன் கொடுக்கல் வாங்கலில் ஈடுபட்டுள்ள தமிழ் கூட்டமைப்பு, விலைபோகும் தமிழ் முதலாளித்துவத்தின் நன்மைக்காக வடக்கு மற்றும் கிழக்கில் கூடுதலான அதிகாரப் "பரவலாக்கலுக்காக" அமெரிக்க, இந்தியா மற்றும் ஏனைய சக்திகளுடன் சதியில் ஈடுபட்டுள்ளது.

பு.ஜ.மா.லெ.க., தமிழ்த் கூட்டமைப்பு மீதான எதிர்ப்பை "முற்போக்கு தமிழ் தேசியவாதம்" என்ற முட்டுச் சந்துக்குள் திருப்பிவிட முயற்சிக்கின்றது. அதன் 2015 காங்கிரஸ் ஆவணத்தில், இந்த மாவோவாதக் கட்சி, "பிற்போக்கு தமிழ் தேசியவாத தலைமைத்துவத்தை" உயர் சாதி மேலாதிக்கத்தையும் ஏகாதிபத்திய விசுவாசத்தையும் கடைபிடிக்கின்ற ஏனைய இனத்தவர்களுடனான ஐக்கியத்தை எதிர்க்கின்ற "மேலாதிக்க சித்தாந்தம் கொண்ட ஒரு உயர் தட்டு" என்றும் குற்றம் சாட்டுகிறது.

இதற்கு எதிராக, "முற்போக்கு தமிழ் தேசியவாதமானது" “அனைத்து உழைக்கும் மக்களதும் ஜனநாயகத்தை காக்கவும், பொருளாதார ரீதியில் சுயமாக தங்கியிருப்பதற்கும் மற்றும் உற்பத்தி தொழில் துறையை அபிவிருத்தி செய்வதையும் வலியுறுத்துவதற்கு முன்னுரிமை” கொடுக்க வேண்டும், "இந்திய, அமெரிக்க மற்றும் ஐரோப்பிய மேலாதிக்க சக்திகளுக்கு தலைகுணிய” மறுப்பதோடு ஏனைய சமூகத்தோடு ஐக்கியப்பட வேண்டும் என்று பு.ஜ.மா.லெ.க. பிரகடனம் செய்கின்றது.

ஸ்ராலினிச / மாவோவாத இரண்டு கட்ட கோட்பாட்டின் வழியில், பு.ஜ.மா.லெ.க. வேலைத்திட்டம் சோசலிசத்துக்கானது அல்ல, மாறாக, "முற்போக்கு" முதலாளித்துவம் என்று அழைக்கப்படுவதற்கு தொழிலாள வர்க்கத்தை அடிபணியச் செய்வதை அர்த்தப்படுத்தும் ஒரு "புதிய ஜனநாயகப் புரட்சி" ஆகும். யதார்த்தத்தில், இந்த மாவோவாதிகள் ஒரு முதலாளித்துவ அரசை உருவாக்க முயற்சிக்கின்றனர். அதில் அவர்கள் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மற்றும் சர்வதேச நிதி மூலதனத்தின் சார்பாக தொழிலாள வர்க்கத்தை சுரண்டுவதை கண்காணிக்கும் வகிபாகத்தை ஆற்றுவர்.

பு.ஜ.மா.லெ.க.யின் முன்னோக்கின் இனவாத பண்பு, இன மற்றும் மத அடிப்படையில் தொழிலாள வர்க்கத்தை மேலும் பிளவுபடுத்தும் அதன் பிரேரணைகளில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளது. அதன் மாநாட்டு ஆவணம், “ஐக்கிய இலங்கைக்குள் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் தமிழர்கள் மற்றும் முஸ்லிம்களின் பாரம்பரிய தாயகத்திற்கு சுயாட்சி” வழங்க அழைப்பு விடுக்கின்றது. “மலையக தமிழர்கள் ஒரு தேசிய இனமாகக் கருதப்பட்டு அவர்களுக்கு சுயாட்சி உறுதிப்படுத்தப்பட வேண்டும்," என அது கூறுகின்றது.

சுயாட்சி அலகுகளுக்கான பிரேரணைக்கும், தொழிலாளர்களின் அல்லது ஒடுக்கப்பட்ட மக்களின் ஜனநாயக உரிமைகளைக் காப்பதற்கும் எந்த தொடர்பும் கிடையாது, மாறாக, அது இனவாத பதட்டங்களைத் தூண்டுவதற்கான முன்மொழிவாகும். இது தொழிலாள வர்க்கத்தை சுரண்டுவதில் தமது பங்கை பெரிதாக்கிக்கொள்ளும் வழிமுறையாக, சுயாட்சியைக் கோருவதற்கு பல்வேறு தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்களை மேலாதிக்கம் செய்யும் முதலாளித்துவ மற்றும் குட்டி முதலாளித்துவ தட்டுக்களுக்கு விடுக்கும் ஒரு அழைப்பாகும்.

இலங்கை முதலாளித்துவத்தின் முற்போக்கு என்று அழைக்கப்படும் பிரிவுடன் கூட்டுச் சேரும் போர்வையின் கீழ், பு.ஜ.மா.லெ.க. கொழும்பு அரசியல் ஸ்தாபனத்தின் ஐக்கிய தேசியக் கட்சி (யூ.என்.பி.), ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (ஸ்ரீ.ல.சு.க.) ஆகிய பிரதான கட்சிகளுடன் சூழ்ச்சியில் ஈடுபடும் ஒரு நீண்ட, இழிந்த வரலாற்றைக் கொண்டுள்ளது.

1964ல் ஸ்ரீலங்கா கம்யூனிஸ்ட் கட்சியின் பிளவில் ஸ்தாபிக்கப்பட்ட (பெய்ஜிங் சார்பு) மாவோவாத சிலோன் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து பிரிந்தே பு.ஜ.மா.லெ.க. 1978ல் உருவாக்கப்பட்டது.

பு.ஜ.மா.லெ.க., ஆரம்பத்தில் இருந்தே ஸ்ரீ.ல.சு.க. நோக்கி ஈர்ப்புகொண்டிருந்தது. 1988ல் அது புலிகளை நிராயுதபாணிகளாக்க வடக்கு மற்றும் கிழக்கிற்கு இந்திய இராணுவத்தின் "அமைதிப்படையை அனுப்புவதற்கு" புது தில்லி மற்றும் கொழும்பு அரசாங்கங்களுக்கு இடையில் முந்தைய ஆண்டில் கைச்சாத்திடப்பட்ட இந்திய-இலங்கை உடன்படிக்கைக்கு எதிராக, ஸ்ரீ.ல.சு.க. முன்னெடுத்த பேரினவாத இந்திய-விரோத பிரச்சாரத்தை ஆதரித்தது. மறுபக்கம் தமது பாசிச பிரச்சாரத்தை எதிர்த்தவர்களை கொன்று தள்ளிய சிங்கள பேரினவாத மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) உடன் ஸ்ரீ.ல.சு.க. கூட்டணி வைத்திருந்தது.

1994ல், வலதுசாரி ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தை தோற்கடிப்பதன் பேரில், பு.ஜ.மா.லெ.க. வெளிப்படையாகவே ஸ்ரீ.ல.சு.க ஜனாதிபதி வேட்பாளர் சந்திரிகா குமாரதுங்கவுக்கு ஆதரவாக போலி இடது நவ சம சமாஜக் கட்சி (ந.ச.ச.க.) உடன் சேர்த்து பிரச்சாரம் செய்தது. சமாதானத்துக்கும் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும் வாக்குறுதியளித்து அதிகாரத்திற்கு வந்த பின்னர், குமாரதுங்க யுத்தத்தை உக்கிரமாக்கியதோடு தனது முன்னோடியின் சந்தை சார்பு கொள்கைகளையும் உழைக்கும் மக்கள் மீதான தாக்குதல்களையும் விரிவாக்கினார்.

அதன் ஏகாதிபத்திய-விரோத தோரணைகள் ஒருபுறம் இருக்க, பு.ஜ.மா.லெ.க. இடைவிடாமல் பெரும் வல்லரசுகளின் சூழ்ச்சிகளுக்கு பின்னால் அணிசேர்ந்தது. 2002ல், ஸ்திரமின்மையை ஏற்படுத்தும் போரை முடிவுக்கு கொண்டுவந்து, கொழும்பு அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகளுக்கு ஒரு இளைய பங்காளியாக புலிகளையும் பட்டியலில் சேர்க்கும் ஒரு வழிமுறையாக, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஜப்பானின் ஆதரவுடன், யு.என்.பி. அரசாங்கத்துக்கும் புலிகளுக்கும் இடையில் மேற்கொள்ளப்பட்ட போலி சமாதான முன்னெடுப்புகளை பு.ஜ.மா.லெ.க. ஆதரித்தது.

உள்நாட்டு யுத்தத்தின் போது, பு.ஜ.மா.லெ.க. 2009 மே மாதம் புலிகளின் இராணுவத் தோல்வி வரை அதை அரசியல் ரீதியில் ஆதரித்தது. கட்சி தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களின் உயிருக்கும் அச்சுறுத்தல் விடுத்த புலிகளின் "ஒடுக்குமுறை வழிமுறைகளை" இது எப்பொழுதாவது விமர்சித்திருந்தாலும், அதுவும் புலிகளின் மீது தமிழர்கள் மத்தியில் குவிந்துவந்த எதிர்ப்பில் இருந்து தப்புவதற்கான ஒரு வடிகாலாகவே உதவியுள்ளது.

புலிகளின் தோல்வியை அடுத்து, பு.ஜ.மா.லெ.க. இம்முறை ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் வலதுசாரி ஸ்ரீ.ல.சு.க. தலைமையிலான அரசாங்கத்தை தோற்கடிப்பதன் பெயரில் யு.என்.பி. பின்னால் அணிதிரண்டது.

2015 ஜனவரி ஜனாதிபதி தேர்தலில், பு.ஜ.மா.லெ.க. அமெரிக்க ஆதரவிலான ஆட்சி மாற்றத்தில் பதவிக்கு வந்த மைத்திரிபால சிறிசேனவை மறைமுகமாக ஆதரித்தது. இராஜபக்ஷவுக்கும் சிறிசேனவுக்கும் இடையில் எந்த வித்தியாசமும் இல்லை என்று அறிவித்த அதே நேரம், இராஜபக்ஷவின் "பாசிச ஆட்சி" மீது தனது கோபத்தைக் குவித்த செந்திவேல், "இன்றைய சூழ்நிலையில் தேர்தலை பகிஷ்கரிப்பதோ புறக்கணிப்பதோ அரசியல் ரீதியில் புத்திசாலித்தனமானதாக இருக்காது” என்று எச்சரித்தார்.

மறைமுகமாக சிறிசேனவை ஆதரிப்பதன் மூலம், இராஜபக்ஷவின் ஜனநாயக விரோத வழிமுறைகளின் காரணமாக அன்றி, அவர் சீனாவுடன் மிகவும் நெருக்கமாக அணிசேர்ந்திருந்ததன் காரணமாக, அவரை வெளியேற்றுவதற்காக மேற்கொள்ளப்பட்ட அமெரிக்க ஆதரவு ஆட்சி மாற்றத்துக்கு, பு.ஜ.மா.லெ.க. ஒப்புதல் அளித்துள்ளது. கடந்த ஆண்டு ஜனாதிபதி மற்றும் பாராளுமன்ற தேர்தல்கள் முடிந்த பின்னர், தேர்தல் பெறுபேறுகள் “வெறும் பிரமுகர்களின் மாற்றமே” என அறிவிப்பதன் மூலம், அவற்றின் முக்கியத்துவத்தை அது மூடி மறைத்தது. சிறிசேன தேர்வு செய்யப்படுவதற்கு அது ஆதரவளித்ததன் மூலம், பிராந்தியம் முழுவதும் சீனாவிற்கு எதிராக அமெரிக்கா ஏற்பாடு செய்யும் போர் தயாரிப்புகளுக்குள் இலங்கையும் ஒருங்கிணைக்கப்படுவதை உறுதிசெய்துள்ளது.

பு.ஜ.மா.லெ.க. வெளியிட்ட ஒரு சமீபத்திய அறிக்கை, "நாடும் மக்களும் எதிர்கொள்ளும் உடனடி பிரச்சினைகளை நிவர்த்தி செய்தற்காக," "இடது, முற்போக்கு மற்றும் ஜனநாயக சக்திகளின் ஒரு பரந்த ஐக்கிய முன்னணிக்கு" அழைப்பு விடுவதன் மூலம், அது இப்போது இன்னொரு சந்தர்ப்பவாத கூட்டை அமைக்க முயன்று வருகின்றது. இது, யு.என்.பி. தலைமையிலான அரசாங்கத்தின் மீது தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற ஏழைகளின் குவிந்துவரும் எதிர்ப்பைத் தடம்புறளச் செய்து, அதை பாராளுமன்ற சூழ்ச்சித்திட்ட முட்டுச் சந்துக்குள் திசைதிருப்பிவிடுவதற்காக நவ சம சமாஜக் கட்சி (ந.ச.ச.க.), ஐக்கிய சோசலிசக் கட்சி மற்றும் முன்னிலை சோசலிசக் கட்சி (மு.சோ.க.) போன்ற பல்வேறு போலி-இடது அமைப்புகளை உள்ளடக்கிய, கிரேக்கத்தில் சிரிசா பாணியிலான ஒரு அமைப்பை உருவாவதற்கான அழைப்பைத் தவிர வேறு ஒன்றும் அல்ல.

தொழிலாள வர்க்கம் எதிர்கொண்டுள்ள போர், சிக்கன நடவடிக்கைகள் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தொடர்ச்சியான தாக்குதல்கள் போன்ற பிரச்சினைகளுக்கு, சர்வதேச சோசலிசத்தின் அடிப்படையில் இலங்கை, தெற்காசியா மற்றும் உலகம் பூராவும் ஒரு ஐக்கியப்பட்ட இயக்கத்தைக் கட்டியெழுப்புவதைத் தவிர வேறு தீர்வு கிடையாது. இலங்கையில் சிங்களம், தமிழ் மற்றும் முஸ்லீகளுமாக தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் எதிர்கொண்டுள்ள தீர்க்கமான விடயம், எல்லா விதமான இனவாத அரசியலில் இருந்து அடிப்படையில் பிரிந்து, வர்க்கத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு முன்னோக்கின் பக்கம் திரும்ப வேண்டியதாகும்.

சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) மற்றும் அதன் முன்னோடியான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகமும் (பு.க.க.) தமிழர்-விரோத பாரபட்சங்களுக்கும் ஆட்சியில் இருந்த கொழும்பு அரசாங்கங்கள் நடத்திய போருக்கும் எதிராக சளைக்காத போராட்டத்தை முன்னெடுத்த வரலாற்றைக் கொண்டுள்ளன. நாம் தேசிய ஒடுக்குமுறை மற்றும் பாரபட்சங்களின் தோற்றுவாயான முதலாளித்துவ முறைமைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பதற்காக தொழிலாளர்களை ஐக்கியப்படுத்துவதற்கு இடைவிடாமல் போராடியுள்ளோம். உலகம் பூராவும் தெற்காசியாவிலும் சோசலிச குடியரசுகளின் ஒன்றியத்தின் பாகமாக ஸ்ரீலங்கா-ஈழம் சோசலிச குடியரசுக்கான போராட்டத்திற்கு எமது வேலைத் திட்டம் அழைப்பு விடுக்கின்றது.

நாம் எமது முன்னோக்கை படிக்குமாறும் எதிர்வரும் போராட்டங்களுக்கு அவசியமான புரட்சிகரத் தலைமையாக சோசலிச சமத்துவக் கட்சியைக் கட்டியெழுப்ப அதில் இணைந்துகொள்ளுமாறும் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு வேண்டுகோள் விடுக்கின்றோம்.

Read more...

Tuesday, March 15, 2016

சிறுமி சேயா வழக்கு - குற்றவாளிக்கு மரண தண்டனை

கொடதெனியாவ பகுதியில் சிறுமி சேயா சவ்தமி பாலியல் வன்புனர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட சமன் ஜெயலத் என்பவருக்கு மரண தண்டனை விதித்து நீர்கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த வருடம் சிறுமி சேயா பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

இதனையடுத்து, மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் முன்னதாக 17 வயது மாணவன் ஒருவர், கொண்டையா என கூறப்பட்ட துனேஷ் பிரியஷாந்த உள்ளிட்ட மூவர் கைதுசெய்யப்பட்டு பின்னர் மரபணு பரிசோதனை அறிக்கையின் படி, குற்றம் நிரூபிக்கப்படாமையால் விடுவிக்கப்பட்டனர்.

மேலும், இந்த வழக்கு தொடர்பில் கைதான சமன் ஜெயலத் (துனேஷ் பிரியஷாந்தவின் சகோதரர்) என்பவர் குற்றத்தை தானே இழைத்ததாக வாக்குமூலம் அளித்ததோடு அவரது மரபணுக்கள் குற்றத்துடன் ஒத்துப்போனது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து அவருக்கு இன்று மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Read more...

Saturday, March 12, 2016

கோதுமை மாவின் விலை திடீரென அதிகரித்ததால் பெருந்தோட்ட மக்கள் பெரிதும் பாதிப்பு- க.கிஷாந்தன்

கோதுமை மாவின் விலை திடீரென அதிகரித்ததால் பெருந்தோட்ட மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

இன்று தேயிலை தோட்டங்களில் தேயிலை செடிகளில் கொழுந்து விளைச்சல் குறைந்துள்ளதால் தோட்ட நிர்வாகத்தால் வாரத்தில் 3 நாட்கள் அல்லது 4 நாட்கள் மாத்திரமே வேலை வழங்குகின்றனர். இதன் காரணமாக இம்மக்கள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இச் சூழ்நிலையில் திடீரென 7.20 சதத்தால் கோதுமை மாவின் விலை அதிகரிப்பு இம்மக்களை மீண்டும் வறுமை கோட்டின் கீழ் கொண்டு வந்துள்ளது.

ஒரு தொழிலாளியின் வீட்டில் ஒரு நாளுக்கு 3 அல்லது 5 கிலோ வரை கோதுமை மாவை தனது உணவிற்காக பயன்படுத்துகின்றார்கள்.

அத்தோடு இலகுவான முறையில் உணவுகளை தயாரித்துக்கொள்வதற்கு கோதுமை மா மிக முக்கியமான பங்கினை வகிப்பதாக தொழிலாளர்கள் தெரிவிக்கும் இதேவேளை கோதுமை மாவை மானிய விலையில் வழங்குவதற்கு அரசாங்கம் முன்வர வேண்டும் என கோரிக்கை விடுப்பதோடு தற்போது கூட்டு ஒப்பந்தம் முடிந்து ஒரு வருடங்கள் ஆகின்ற போதிலும் இன்னும் தமக்கான சம்பள உயர்வினை பெற்றுக்கொடுக்காமல் இவ்வாறான அத்தியவசிய பொருட்களுக்கு விலை அதிகரிப்பது நியாயமற்ற செயல்பாடு என இம்மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி காலகட்டத்தில் அரிசி மானிய விலையில் கொடுத்த போதிலும் குறித்த திட்டம் மக்களை சென்றடையவில்லை. ஓர் இரு மாதங்களுக்கு மாத்திரமே வழங்கப்பட்டது.

இத்திட்டத்தினால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். தற்போது அதிகரித்துள்ள குடும்ப பொருளாதார பிரச்சினையில் மற்றுமொரு பிரச்சினையாக மாவின் விலை அதிகரிப்பு காரணமாக அமைந்துள்ளது.

எனவே தோட்ட தொழிலாளர்களின் பொருளதாரத்தை நலன் கருதி வரட்சிக்கான நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என்பதோடு பொருட்களின் விலைவாசியை அதிகரிக்காமல் இருப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இம்மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Read more...

Thursday, March 3, 2016

பிள்ளையான் கைதின் பின்னணியில் தமிழ் தேசிய கூட்டமைப்பு

பிள்ளையான் கைதின் பின்னணியில் தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளது. வடக்கு கிழக்கை இணைக்கும் யோசணைக்கு எதிர்ப்பு தெரிவித்தமையே கூட்டமைப்பு பிள்ளையானை காட்டிக் கொடுக்க காரணம் என்று தெரிவித்துள்ள கிழக்கு மாகாண சபை உறுப்பினர் டப்ளியூ. டீ. வீரசிங்க ,கருணா அம்மான் மற்றும் கே.பி ஆகியோரை கைது செய்வதாக கூறி மார் தட்டிக்கொண்ட அரசாங்கம் இன்று மௌனித்து இருப்பது வேடிக்கையாக உள்ளதாகவும் குறிப்பிட்டார்.


ராஜகிரியவில் அமைந்துள்ள என்.எம்.பெரேரா நிலையத்தில் இன்ற இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் பேர்தே கிழக்கு மாகாண சபை உறுப்பினர் டப்ளியூ. டீ. வீரசிங்க மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில் ,

தமிழ் தேசிய கூட்டமைப்பு கடந்த தேர்தலில் வடக்கையும் கிழக்கையும் ஒன்றிணைக்க வேண்டும் என வலியுறுத்தி வந்தது . அதற்கு முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான் எனப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் கடுமையாக எதிர்ப்பை தெரிவித்தார். நாட்டில் சமாதானம் ஏற்பட்டுள்ள நிலையில் மீண்டும் வடக்கையும் கிழக்கையும் இணைத்து பிரச்சனைகளை ஏற்படுத்த வேண்டாம் என கூறியிருந்தார். இதனை மனதில் வைத்து கொண்டு செயற்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பிள்ளையானை பழிவாங்க அரசாங்கத்துடன் சேர்ந்து செயற்பட்டது. இதன் பின்னணியிலேயே பிள்ளையான் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் கருணா அம்மான் தேரர்களை கொலை செய்ததாக கூறினாலும் அதற்கு போதிய சாட்சிகள் இல்லை. ஆனால் அவர் யுத்தத்தின் பின்னர் ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்து கடந்த அரசாங்கத்துடன் நாட்டின்அபிவிருத்தி பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கினார். இந்த நிலையில் அரசாங்கத்துடன் கடந்த தேர்தலில் பங்காளிகளாக இணைந்து கொண்ட சகோதரர்கள் கே.பியை மற்றும் கருணாவை கைது செய்வதாக கூறிவந்தனர். ஆனால் இன்று என்ன நடந்துள்ளது. அனைத்திலும் அரசியல் நோக்கங்கள் என அவர் குறிப்பிட்டார்.


Read more...

ஆசியாவில் பாரிய இராணுவக் கட்டமைப்பை நியாயப்படுத்துவதற்கு, பெண்டகன் "சீன அச்சுறுத்தலை" ஊதிப் பெரிதாக்குகிறது. By Peter Symonds

இந்தோ-பசிபிக்கில் பெண்டகன் தீவிரப்படுத்தி வரும் இராணுவ கட்டமைப்பை நியாயப்படுத்த மற்றும் இராணுவ வரவு-செலவு திட்டத்தை விரிவாக்குவதற்கு அழுத்தமளிக்க, உயர்மட்ட அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் தென் சீனக் கடலில் சீனாவின் நடவடிக்கைகள் குறித்து இவ்வாரம் தொடர்ச்சியான பல ஆத்திரமூட்டும் அறிக்கைகளை வெளியிட்டனர். இதிலிருந்து, சீனாவுடனான போருக்கு முன்கூட்டிய தயாரிப்புகள் செய்யப்பட்டு வருகின்றன என்ற ஒரேயொரு முடிவுக்கு மட்டுமே வர முடியும்.

வியாழனன்று பிரதிநிதிகள் சபையின் நிதி ஒதுக்கீட்டுக் குழு முன் பாதுகாப்புத்துறை செயலர் அஷ்டன் கார்டர் பேசுகையில், தென் சீனக் கடலில் சீனாவின் இராணுவ பிரசன்னத்தால் அங்கே பிராந்திய நாடுகளுக்கு இடையே "தவறான கணக்கீடு அல்லது மோதலுக்கான" அபாயத்தை சீனா அதிகரித்திருப்பதாக குற்றஞ்சாட்டினார். “சீனாவின் நடவடிக்கை தன்னைத்தானே தனிமைப்படுத்தும் விளைவை ஏற்படுத்தக்கூடும், மேலும் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு மற்றவர்களையும் அது செயலாற்ற தூண்டுகிறது,” என்று அவர் அறிவித்ததுடன், அமெரிக்காவின் கூட்டாளிகளும் பங்காளிகளும் அதிகரித்தளவில் இணைந்து இயங்கி வருவதாக தெரிவித்தார்.

அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஹிலாரி கிளின்டன் 2010 இன் மத்தியில் அந்த போட்டிமிகுந்த கடற்பிரதேசத்தில் "சுதந்திர கடல் போக்குவரத்தை" உறுதிப்படுத்துவதில் அமெரிக்காவின் "தேசிய நலன்கள்" இருப்பதாக அறிவித்ததில் இருந்து, ஒபாமா நிர்வாகத்தின் "ஆசியாவை நோக்கிய முன்னிலையின்" ஒருங்குவிப்பு மையமாக தென்சீனக் கடல் ஆகியுள்ளது. பெய்ஜிங் மற்றும் அங்கே உரிமைகோரிவரும் அதன் போட்டியாளர்களுக்கு, மிக குறிப்பாக வியட்நாம் மற்றும் பிலிப்பைன்ஸ் க்கு இடையே ஒரு பிளைவை உண்டாக்க, அங்கே நீண்டகாலமாக நிலவி வரும் கடற்போக்குவரத்து பிரச்சினைகளை கைப்பற்றி வாஷிங்டன் வேண்டுமென்றே பதட்டங்களை தூண்டிவிடுகிறது.

அமெரிக்கா "சீனாவை கீழ்படிய வைக்க முனையாது" ஆனால் "அப்பிராந்தியத்தில் யாரும் மேலாதிக்கம் செலுத்துவதை நாம் பார்த்துக் கொண்டிருக்க முடியாது, நிச்சயமாக அமெரிக்காவை யாரும் வெளியே தள்ளுவதைப் பார்த்துக் கொண்டிருக்க முடியாது,” என்று கார்டர் வாதிட்டார். எவ்வாறிருப்பினும் அந்த "முன்னிலையின்" நோக்கம் துல்லியமாக ஆசியாவில் நடந்துவரும் அமெரிக்க ஏகாதிபத்திய மேலாதிக்கத்தை உறுதிப்படுத்தி வைப்பதற்காக ஆகும். அதற்காக சீனாவை வாஷிங்டனின் நலன்களுக்கு அடிபணிய வைப்பது அவசியப்படுகிறது. “நாம் தான் பசிபிக் இன் சக்தி. அங்கே நாம் தங்கியிருக்க வேண்டும்,” என்றவர் ஆணித்தரமாக அறிவித்தார்.

கார்ட்டரின் கருத்து, முப்படைகளது தலைமை தளபதிகளின் தலைவர் ஜெனரல் ஜோ டன்போர்ட்டால் மீளவலியுறுத்தப்பட்டது. “பசிபிக்கிற்குள் செல்வதற்கான அல்லது பசிபிக்கிற்குள் சுதந்திரமாக செயல்படுவதற்கான நமது ஆற்றலை மட்டுப்படுத்தும் விதத்தில்" சீனா அதன் தகைமைகளை அபிவிருத்தி செய்து வருவதாக அவர் அக்குழுவின் முன் தெரிவித்தார். அமெரிக்கா "சீனாவிற்கு எதிராக அதன் போட்டித்தன்மை மிகுந்த அனுகூலங்களைக்" காப்பாற்றிக் கொள்ள வேண்டியிருக்கிறது, இதனால் தான் "நாம் [பாதுகாப்பு] துறையின் மிகவும் அதிநவீன இராணுவ தளவாடங்களைப் பசிபிக்கிற்குள் முதலில் நிலைநிறுத்தி வருகிறோம்,” என்றும் அவர் வலியுறுத்தினார்.

இந்த "முன்னிலையின்" பாகமாக, பெண்டகன் 2020 க்குள் அதன் விமானப்படை மற்றும் கடற்படை இருப்புகளில் 60 சதவீதத்தை இந்தோ-பசிபிக்கிற்குள் நிலைநிறுத்த திட்டமிட்டுள்ளது. ஆஸ்திரேலியா, பிலிப்பைன்ஸ் மற்றும் சிங்கப்பூர் உடன் புதிய இராணுவத் தள ஒப்பந்தங்களை ஏற்படுத்திக் கொண்டமை, அத்துடன் ஜப்பான், தென் கொரியா மற்றும் குவாம் இல் உள்ள அமெரிக்க இராணுவ தளங்களை மறுகட்டமைப்பு செய்வது உள்ளடங்கலாக அமெரிக்க இராணுவ கட்டமைப்பு ஏற்கனவே வேகமாக நடந்து வருகின்றன. வட கொரியாவின் அச்சுறுத்தலை எதிர்கொள்வதற்காக என்ற சாக்கில், பெண்டகன் கொரிய தீபகற்பத்தில் "மூலோபாய உடைமைகளின்" அடித்தளத்தை, அதாவது அணுஆயுதமேந்த கூடிய விமானம் மற்றும் தரையிலிருந்து வானில் சென்று தாக்கும் ஏவுகணை அமைப்புமுறைக்குத் தயாரிப்பு செய்து வருகிறது.

அமெரிக்க பசிபிக் கட்டளையகத்தின் (PACOM) தளபதி அட்மிரல் ஹேரி ஹேரீஸ், செவ்வாய் மற்றும் புதனன்று முறையே, செனட் சபை மற்றும் பிரதிநிதிகள் சபையின் ஆயுத சேவை குழுவிற்கு விளக்கமளிக்கையில், மற்றும் வியாழனன்று பெண்டகனில் ஒரு பத்திரிகையாளர் கூட்டத்தில் பேசுகையில், இன்னும் அதிகமாக ஆத்திரமூட்டும் கருத்துக்களைக் கூறினார்.

கடந்த மே மாதம், PACOM தலைவராக பொறுப்பேற்ற ஹேரீஸ், "கடற்போக்குவரத்து சுதந்திர" நடவடிக்கைகளுக்காக என்று கூறி தென் சீனக் கடலில் சீனாவின் கடல்எல்லை உரிமைகோரல்களுக்கு நேரடியாக சவால் விடுக்க ஆக்ரோஷமாக அழுத்தமளிக்கிறார். கடந்த அக்டோபரில் மற்றும் மீண்டும் ஜனவரியில், அமெரிக்க போர்க்கப்பல்கள் வேண்டுமென்றே சீனக் கட்டுப்பாட்டில் உள்ள தீவுத்திட்டுக்களை சுற்றி 12 கடல்-மைல் தொலைவுக்குள் ஊடுருவின.

பெண்டகன் பத்திரிகையாளர் கூட்டத்தில், ஹேரீஸ், தென் சீனக் கடலில் சீன நடவடிக்கைகளால் முன்வைக்கப்பட்ட "அச்சுறுத்தலை" ஒட்டுமொத்தமாக ஊதிப் பெரிதாக்கினார். “அவர்கள் தென் சீனக் கடலை இராணுவமயப்படுத்தி வருகிறார்கள் என்பதே என் கருத்து. அவர்கள் தென் சீனக் கடலில் இராணுவ தளங்களுக்காக ஏறக்குறைய 3,000 ஏக்கரை உரிமைக் கோரியுள்ளனர்,” என்றவர் அறிவித்தார். ஒரு விரல்விட்டு எண்ணக்கூடிய ஸ்ப்ராட்லி கடல்குன்றுகள் மீது சீனா பரவலாக நில உரிமைகோரலில் ஈடுபட்டுள்ளது என்றாலும், அது "இராணுவ தளங்களுக்காக 3,000 ஏக்கர்கள்" என்று கூறுவது அர்த்தமற்றதாகிறது.

ஒரு வாரகால காங்கிரஸ் விளக்க உரையை அடுத்து, பாரசீல்களில் சீனாவின் நிர்வாக மையமாக உள்ள வூடி தீவில் நிறுத்தப்பட்டுள்ள இரண்டு ஏவுகணை கலங்கள் (missile batteries) மற்றும் போர் விமானங்களை, அத்துடன் ஸ்ப்ராட்லி தீவுகளில் அனேகமாக ராடார் நிலையங்கள் அமைக்கப்படுவதற்கான அனைத்து சாத்தியமும் இருப்பதாக குறிப்பிடும், கட்டுரைகள் அமெரிக்க ஊடகங்களில் நிரம்பி வழிந்தன. இத்தகைய வெகுவாக-உயர்த்திக்காட்டப்பட்ட கதைகள் கூட ஹேரீஸின் உயர்வு நவிற்சிக்குக் குறைவாகவே இருந்தன.

ஹேரீஸ் சீனாவை எதிர்க்க, அது உரிமைகோரும் கடல் எல்லைகளில் இன்னும் அதிகமாக "கடற்போக்குவரத்து சுதந்திரம்" மீது சவால்களை விடுக்க அழைப்புவிடுத்தார். "அதே எண்ணம் கொண்ட" ஏனைய நாடுகளும் அவ்வாறே செய்ய அவர் வலியுறுத்தினார். தற்போது, அதேபோன்ற அதன் சொந்த நடவடிக்கைகளை நடத்த ஆஸ்திரேலிய அரசாங்கம் கணிசமான அளவிற்கு வாஷிங்டனின், மற்றும் அத்துடன் உள்நாட்டில் எதிர்கட்சியான தொழிற்கட்சியின் அழுத்தத்தின் கீழ் உள்ளது.

தென் சீனக் கடலில் சீனா ஒரு வான் பாதுகாப்பு அடையாள மண்டலத்தை (ADIZ) அறிவிக்கக்கூடும் என்றும் வாதிட்டார், அதை அவர் "ஸ்திரமின்மைப்படுத்தும் மற்றும் ஆத்திரமூட்டும்" நடவடிக்கையாக முத்திரை குத்தினார். பெய்ஜிங் மீதான மற்றொரு கணக்கிட்ட அவமதிப்பில், “அவர்கள் கிழக்குச் சீனக் கடல் பகுதியில் கொண்டு வந்த வான் பாதுகாப்பு அடையாள மண்டலத்தை புறக்கணித்ததைப் போல இதையும் நாம் புறக்கணிக்க வேண்டும்,” என்பதையும் சேர்த்துக் கொண்டார். 2013 இன் இறுதியில் கிழக்குச் சீனக் கடலில் சீனா ஒரு வான் பாதுகாப்பு அடையாள மண்டலத்தை அறிவித்தபோது, பெண்டகன் அறிவிப்பின்றி இரண்டு B-52 மூலோபாய குண்டுவீசிகளை அனுப்பி, வேண்டுமென்றே ஒரு மோதல் அபாயத்தை உருவாக்கியது.

ஆசிய பசிபிக்கில் அமெரிக்க இராணுவ மேலாதிக்கம் பலவீனப்படாமல் இருப்பதை உறுதிப்படுத்துவதற்காக, ஹேரீஸ், சீனா உடன் போருக்கான தயாரிப்பின் அவசியத்தை வெளிப்படையாக எழுப்பினார். “தென் சீனக் கடலில் அவர்கள் உரிமைகோருகின்ற இடங்களின் சகல இராணுவ தளங்களையும் சீனா தொடர்ந்து ஆயுதமயப்படுத்தினால், அவர்கள் அப்பிராந்தியத்தில் செயல்பாட்டுக் களத்தை மாற்றிவிடுவார்கள். அமெரிக்கா உடனான போர் தறுவாயில், சீனா தென் சீனக் கடலில் நடைமுறையளவில் கட்டுப்பாட்டை பெற்றிருக்கும்,” என்றவர் தெரிவித்தார்.

ஆச்சரியத்திற்கிடமின்றி, பெய்ஜிங் ஹேரீஸின் கருத்துக்களுக்குக் கடுமையாக எதிர் செயலாற்றியது. சீன வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் ஹாங் லீ கூறுகையில், அட்மிரல் "தென் சீனக் கடலில் சீனாவின் நியாயமான மற்றும் சட்டபூர்வ நடவடிக்கைகளுக்கு அழுக்குபூச மற்றும் முரண்பாடுகளை விதைக்க" விரும்புகிறார் என்று அறிவித்தார். “அவர் அக்கடல் பகுதியில் அமெரிக்க கடற்போக்குவரத்து மேலாதிக்கத்திற்காக இராணுவ பலத்தைப் பிரயோகிக்க ஒரு சாக்குபோக்கைத் தேடி வருகிறார்,” என்பதையும் சேர்த்துக் கொண்டார்.

சீனா மீதான போருக்குப் பெண்டகனின் வான்வழி-கடல்வழி போர் மூலோபாயம், தென் சீனக் கடலில் அமெரிக்க இராணுவ மேலாதிக்கத்தின் மீது அமைக்கப்பட்டுள்ளது, அது ஒரு கடற்படை முற்றுகையுடன் சேர்ந்து, சீனப் பெருநிலத்தின் மீது ஒரு பாரிய வான்வழி தாக்குதல் மற்றும் ஏவுகணை தாக்குதலைக் கொண்டு வரும் என்பது சீன ஆட்சிக்கு நன்கு தெரியும். எவ்வாறிருந்த போதினும், பெய்ஜிங்கின் விடையிறுப்பில் அங்கே எந்த முற்போக்குத் தன்மையும் இல்லை. ஒருபுறம் அது வாஷிங்டனுடன் சமரசம் கோருவதில் ஈடுபடுகிறது, மறுபுறம், அமெரிக்காவின் பாரிய இராணுவ கட்டமைப்புக்கு அதற்கு ஒரு போலிக்காரணத்தை மட்டுமே வழங்கும் வகையில், அது ஆயுத போட்டியில் இறங்குகிறது.

செவ்வாயன்று செனட் சபையின் ஆயுதச் சேவை குழுவின் முன்னால் விளக்கமளிக்கையில், ஹேரீஸ் இந்தோ-பசிபிக்கில் ஒரு மிகப்பெரிய இராணுவ ஆயுதக் கிடங்கிற்கான அவரது கோரிக்கைகளை பகிரங்கமாக முன்வைத்தார். அவர் பாதுகாப்புத்துறை செயலர் கார்ட்டரின் கருத்துக்களை மேற்கோளிட்டார்: “ஆத்திரமூட்டும் நடவடிக்கை எடுப்பதிலிருந்து அவர்களைத் தடுக்க வேண்டும் அல்லது அவ்வாறு நடவடிக்கை எடுத்தால் அதற்காக அவர்கள் மிகவும் வருத்தப்பட வேண்டியிருக்கும் விதத்தில், ஏற்றுக்கொள்ள முடியாதளவில் விலை கொடுக்கச் செய்யும் ஒரு முன்கூட்டிய ஆக்ரோஷ நடவடிக்கைக்கான ஆற்றலை நாம் கொண்டிருக்க வேண்டும், அவ்விதமான ஆற்றலை நாம் கொண்டிருப்பதாக பார்க்கப்பட வேண்டும்,” என்றார்.

“அதிக உயிரிழப்பை ஏற்படுத்தும், குறிப்பாக வேகமான, மிகவும் பயங்கரமான, மிகவும் பலமான ஆயுத அமைப்புமுறைகளைக் கொண்ட போர்க்கப்பல்கள் மற்றும் போர்விமானங்கள்" PACOM க்கு அவசியப்படுவதாக ஹேரீஸ் வலியுறுத்தினார். “ஒவ்வொரு தளத்திலும் நீண்டதூரம் சென்று தாக்கும் ஆயுதங்கள் நமக்கு வேண்டும். இறுதியாக நமக்கு ஒரு வலையமைப்பு கொண்ட படை அவசியப்படுகிறது, இது நடவடிக்கை அல்லது விடையிறுப்புக்கு பெரியளவில் விருப்புரிமைகளை வழங்கும்,” என்றார்.

குறிப்பாக, தாக்கும் திறனுள்ள கண்காணிப்பு நீர்மூழ்கிக் கப்பல்களில் அவருக்கு தேவைப்படுவதில் சுமார் 62 சதவீதத்தை மட்டுமே அமெரிக்க கடற்படை அவருக்கு வழங்குவதாக அட்மிரல் குறைகூறினார். “பற்றாக்குறையில் இருக்கும் அதிமுக்கிய வெடிப்பொருட்கள் முக்கிய முன்னுரிமை மற்றும் கவலைக்குரியதாகும்,” என்றார். “தாக்குதலுக்கான தயார்நிலையினது ஒரு பிரதான கூறுபாடு வெடிப்பொருட்களாகும். வெடிப்பொருள் தொழில்நுட்பங்கள், உற்பத்தி, மற்றும் முன்கூட்டிய நிலைநிறுத்தல் ஆகியவற்றில் USPACOM படைகளுக்கு அபிவிருத்தி தேவைப்படுகிறது, ஆனால் நிதிய அழுத்தங்கள் இதை அபாயத்தில் நிறுத்தி உள்ளன,” என்றார்.

பிரதிநிதிகள் சபையின் ஆயுத சேவை குழுவின் முன்னால் புதனன்று அவரது விடயத்திற்கு அழுத்தமளிக்கையில், ஹேரீஸ், அதிக ஆயுதங்கள் மற்றும் நிதிகளுக்கான அவரது கோரிக்கைகளின் உள்நோக்கத்தை குறித்து பின்னடிக்கவில்லை. “இன்று நாம் எந்த இடத்தில் இருக்கிறோமோ அங்கே சௌகரியமாக இருக்கிறோம், ஆனால் இன்று நாம் போரில் இல்லை, [இது] ஒரு முக்கியமான புள்ளி என்றே நான் கருதுகிறேன்,” என்றார். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், துல்லியமாக சீனா உடனான ஒரு போருக்குத் தயாரிப்பு செய்யப்பட்டு வருகிறது.

Read more...

ரஜீவ் கொலையாளிகளை விடுதலை செய்யக்கூடாது: மக்களவையில் காங்கிரஸ் வலியுறுத்தல்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன், சாந்தன் முருகன் உள்ளிட்ட 7 பேரின் தண்டனையை ரத்து செய்து விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இந்த விஷயத்தில் மத்திய அரசின் கருத்தைக் கேட்டு கடிதம் எழுதியுள்ளது.

இந்த விவகாரம் இன்று பாராளுமன்றத்தில் எதிரொலித்தது. 7 பேரையும் விடுவிக்க எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வந்தது.

மக்களவையில் இந்த தீர்மானத்தின் மீது மக்களவை காங்கிரஸ் குழு தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, 7 பேரையும் மத்திய அரசு விடுதலை செய்யக்கூடாது என்றும், தமிழக அரசு எழுதியுள்ள கடிதத்தை பரிசீலனை செய்யக்கூடாது என்றும் வலியுறுத்தினார். இந்த விஷயத்தில் தமிழக அரசின் முடிவு பற்றி உள்துறை அமைச்சர் விளக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

Read more...

ஒட்டோவா ஒப்பந்தத்தில் இணைந்து கொள்ள இலங்கை முடிவு.

நிலக்கண்ணி வெடி தடை தொடர்பான ஒப்பந்தம் அல்லது ஒட்டோவா ஒப்பந்தத்தில் இணைந்து கொள்ள இலங்கை தீர்மானித்துள்ளதாக, தெரிவித்துள்ளது.

நிலக்கண்ணி வெடி தடை குறித்த ஒப்பந்தத்தினை முழுமையாக ஏற்றுக் கொள்வதாக ஐக்கிய நாடுகள் அமைப்பின் ஜெனிவாவிற்கான இலங்கைப் பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த நடவடிக்கையானது இலங்கையில் நிலக்கண்ணி வெடி அகற்றும் பணிகளுக்கு சர்வதேச சமூகத்தின் ஆதரவினை மேலும் அதிகரிக்கும் எனவும் அவர் நம்பிக்கை வௌியிட்டுள்ளார்.

நிலக்கண்ணி வெடி தடை குறித்த ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்வது குறித்து, நேற்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாகவும் ரவிநாத் ஆரியசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

நேற்று புதன்கிழமை ஜெனிவாவில் இடம்பெற்ற மாநாடு ஒன்றின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

1997-ல், ஆட்களுக்கு எதிரான கண்ணி வெடிகளை உபயோகித்தல், சேமித்து வைத்தல், தயாரித்தல், இடமாற்றம் செய்தல் ஆகியவற்றை தடைசெய்து அவற்றை அழிப்பது சம்பந்தமாக உருவாக்கப்பட்டதே ஓட்டோவா ஒப்பந்தமாகும்.

இந்த ஒப்பந்தம் 1999ம் ஆண்டு மார்ச் முதலாம் திகதி நடைமுறைக்கு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com