Wednesday, November 25, 2015

பிரெஞ்சு அரசாங்கத்தின் அவசரகால நெருக்கடி நிலை மீதான சட்டம- சோதா, ஜனநாயக உரிமைகளை அச்சுறுத்துகிறது! By Anthony Torres

செவ்வாயன்று பிரெஞ்சு சோசலிஸ்ட் கட்சி (PS) செய்தி தொடர்பாளர் Stéphane Le Foll, அவசரகால நெருக்கடி நிலையை "நவீனப்படுத்துவதற்காக", அரசியலமைப்பை மாற்றும் சோசலிஸ்ட் கட்சி சட்டமசோதாவின் முதல்கட்ட விபரங்களை வெளியிட்டார்.

நவம்பர் 13 அன்று பாரீஸில் ISIS (ஈராக் மற்றும் சிரியாவிற்கான இஸ்லாமிய அரசு) பயங்கரவாத தாக்குதல்களுக்குப் பின்னர் நடைமுறைப்படுத்தப்பட்ட மற்றும் அவசரகால நெருக்கடி நிலை கொண்டு வரப்பட்ட, Le Foll அறிவித்த கொடூரமான முறைமைகள் பிரான்சின் அடிப்படை ஜனநாயக உரிமைகளை அச்சுறுத்துகின்றன.

உள்துறை மந்திரி பேர்னார்ட் கசெனேவ் (Bernard Cazeneuve) மற்றும் பிரெஞ்சு பிரதம மந்திரியும், முன்னாள் உள்துறை மந்திரியாக இருந்தவருமான மானுவேல் வால்ஸ் ஆல் நேற்று பிரெஞ்சு மந்திரிசபையில் முன்வைக்கப்பட்ட அந்த சட்டமசோதா, நேரடியாக பொலிஸ் மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு படைகளிடமிருந்து வெளி வருகின்றது.

இந்த முன்மொழியப்பட்ட திருத்தங்கள் பாதுகாப்பு படைகளுக்கு நிறைய அதிகாரங்கள் வழங்குகின்றன. அங்கே "பொது ஒழுங்கிற்கு" சாத்தியமான அச்சுறுத்தல் நிலவுகிறது என்ற அரசின் வெறும் வலியுறுத்தலின் அடித்தளத்திலேயே, பொலிஸால் அமைப்புகளைக் கலைக்க முடியும், மக்களை வீட்டுக் காவலில் வைக்க முடியும் மற்றும் அவர்களது வீடுகளைச் சோதனையிட முடியும். இந்த முன்மொழியப்பட்ட அரசியலமைப்பு முறைமைகள் பிரத்யேகமாக பயங்கரவாதத்தை மட்டும் இலக்கில் வைக்கவில்லை. உண்மையில், “பயங்கரவாதம்" என்ற பதமே Le Foll முன்வைத்த வாசகங்களில் ஒருமுறை கூட காணப்படவில்லை.

இது அதிகாரிகள் விரும்பாத வேலைநிறுத்தங்கள், ஆர்ப்பாட்டங்கள் அல்லது கூட்டங்களை ஒழுங்கமைக்கும் எந்தவொரு முயற்சிகளையும் தடுக்கும் மற்றும் தண்டிக்கும் உரிமையை பாதுகாப்பு படைகளுக்கு வழங்குகிறது.

Le Foll இன் அறிவிப்பின்படி, “வீட்டுக்காவல் நடவடிக்கை முறை நவீனப்படுத்தப்படுகிறது, ஒருவரது நடவடிக்கைகள் பாதுகாப்பு மற்றும் பொதுஒழுங்கிற்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கருதுவதற்கு சீரிய காரணங்கள் இருந்தால் அந்த நபர் வரையிலும் அது விரிவடைகிறது. வீட்டுக் காவலில் வைக்கப்படும் நபர், பொதுஒழுங்கிற்கு எதிரான நடவடிக்கைகளுக்கு தயாரிப்பு செய்பவர்களாக சந்தேகிக்கப்படும் நபர்களுடன் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தொடர்பு கொள்வதிலிருந்தும் தடுக்கப்படலாம்.”

அவர்களது வீட்டுக் காவல் குறித்து சவால் விடுக்க உதவும் நிர்வாக கமிட்டிகளையும் இந்த முன்மொழியப்பட்ட திருத்தம் நீக்குகிறது. இப்போது அவர்களின் நிலைமைக்கு சவால் விடுக்க வீட்டுக் காவலின் கீழ் வைக்கப்படுபவர்களுக்கு இருக்கும் ஒரே வழி, நீதிமன்றங்களில் ஒரு நீண்ட போராட்டம் நடத்துவது தான்.

அதற்கும் கூடுதலாக, "வீட்டுக் காவலின் கீழ் இருப்பவர்களை உள்ளடக்கி உள்ளதும் மற்றும் பொதுஒழுங்கிற்கு எதிராக கடுமையாக பொதுஒழுங்கை மீறும் நடவடிக்கைகளைத் தூண்டும் அல்லது பங்கெடுக்கும், அதற்கு உதவும் அமைப்புகள் அல்லது குழுக்களைக் கலைக்கவும்" அச்சட்டம் அனுமதிக்கிறது.

Le Foll இதையும் சேர்த்துக் கொண்டார்: “சகல தேடல் நடவடிக்கைகள் குறித்தும் அரசு வழக்கறிஞருக்குத் தெரிவிக்கப்படும், அதற்கும் கூடுதலாக ஒரு பொலிஸ் அதிகாரி முன்னிலையில் அது நடத்தப்படும். தேடல் நடவடிக்கைகளின் போது, பொலிஸ் படமெடுக்கலாம் மற்றும் எந்த ஊடகங்களிலும், கணினி அமைப்பு அல்லது சாதனத்திலும் தரவுகளைச் சேகரிக்கலாம்.”

அவசரகால நெருக்கடி நிலையை உள்ளடக்கிய தற்போதைய 1955 சட்டம் ஆயுதங்களைப் பறிமுதல் செய்வதற்கு மட்டுமே அனுமதிக்கிறது. பத்திரிகை செய்திகளின்படி, சோசலிஸ்ட் கட்சியின் திட்டம் கணினிகள், செல்போன்கள் மற்றும் ஏனைய டிஜிட்டல் ஊடகங்களைக் கைப்பற்ற அனுமதிக்கும். அது நவீன தகவல்தொடர்பு வழிவகைகளைக் கொண்டு பரந்த உளவுபார்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அனுமதிக்கும்.

Les Échos இன் செய்திப்படி, “அந்த மூலவாசகங்கள், குறிப்பாக தேடல் நடவடிக்கைகளைப் பிரயோகிக்கக்கூடிய பல சூழல்களை விரிவாக்குவதன் மூலமாக, அவற்றை மேற்கொள்வதை எளிமையாக்குகிறது. அது சாத்தியமானளவிற்கு நாளொன்றுக்கு நான்கு முறை அவர்களை பொலிஸ் முன் ஆஜராகவும் மற்றும் அவர்களது கடவுச்சீட்டை ஒப்படைக்கவும் செய்வதை அவசியமாக்குவது போன்ற கைதிகளின் கட்டுப்பாடு மீதான பல்வேறு நடவடிக்கைகளுக்கு அனுமதி வழங்கக்கூடும்.”

அந்த முன்மொழியப்பட்ட திருத்தம் இன்னும் நிறைய பிற்போக்குத்தனமான முன்னேற்பாடுகளைக் கொண்டுள்ளது. பயங்கரவாதத்திற்கு எதிரான சண்டையில் சேவைகள் "புதிய தொழில்நுட்பங்களின் எல்லா வழிவகைகளையும் பிரயோகிக்க அதிகாரம் கொண்டிருக்கும்." பயங்கரவாதத்தின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்ட இரட்டை குடியுரிமை கொண்ட பிரஜைகளின் பிரெஞ்சு குடியுரிமை இரத்து செய்யப்பட்டு, பிரான்சிலிருந்து வெளியேற்றப்படுவார் என்று பிரெஞ்சு ஜனாதிபதி பிரான்சுவா ஹோலாண்டு அறிவித்தார். பொலிஸ்காரர்கள் சுய-பாதுகாப்புக்கான உரிமையை இன்னும் பரந்தளவில் பயன்படுத்தலாம், அது, அவர்களது ஆயுதங்களை இன்னும் அதிக ஆக்ரோஷத்துடன் பயன்படுத்த அவர்களை அனுமதிக்கிறது.

பிரெஞ்சு அரசியலமைப்பில் அதுபோன்றவொரு திருத்தம், பயங்கரவாதத்தை இலக்கில் வைக்கவில்லை மாறாக "பொதுஒழுங்கை" அச்சுறுத்தும் எந்தவொரு தொந்தரவையும் இலக்கில் வைக்கிறது, அது பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தால் உந்தப்படவில்லை. ISIS ஆல் நடத்தப்பட்ட அட்டூழியங்கள், ஒட்டுமொத்த மக்களின் ஜனநாயக உரிமைகளுக்கு எதிரான தாக்குதல்களுக்கு ஒரு சாக்காக சேவையாற்றுகிறது.

2008 வோல் ஸ்ட்ரீட் பொறிவுக்குப் பின்னர் பரந்த பொருளாதார பொறிவின் காரணமாக சமூக ஒழுங்குமுறை சர்வதேச அளவில் ஆழமாக மதிப்பிழந்துள்ளது, போர் மற்றும் சமூக சமத்துவமின்மை அதிகரித்துள்ளது.

ஆளும் வட்டாரங்கள் மற்றும் செல்வசெழிப்பான குட்டி முதலாளித்துவம் மத்தியில் மேலோங்கியுள்ள மனோபாவம், பிரான்சின் வர்க்க கட்டமைப்பு குறித்து சமூகவியலாளர் எமானுவேல் டோட் இன் சமீபத்திய நூலின் தலைப்பான ஜனநாயகத்தை அடுத்து (After Democracy) என்பதிலேயே காணலாம்.

சோசலிஸ்ட் கட்சி பதவியேற்றதற்குப் பின்னரில் இருந்து சமூக நிலைமை மேற்கொண்டும் சீரழிந்துள்ளது, மற்றும் சோசலிஸ்ட் கட்சியின் சிக்கனத் திட்டங்களும் போர்-ஆதரவு நடவடிக்கைகளும் இன்னும் கூடுதலாக வர்க்க பதட்டங்களைக் கூர்மையாக்கி உள்ளன.

கடந்தாண்டு காசாவிற்கு எதிராக இஸ்ரேல் அரசால் நடத்தப்பட்ட போருக்கு எதிரான ஒரு அமைதியான ஆர்ப்பாட்டத்திற்குத் தடைவிதிப்பதென்ற ஒரு அசாதாரணமான முடிவை சோசலிஸ்ட் கட்சி ஏற்கனவே எடுத்திருந்தது. அதன் மீதான ஆழ்ந்த மக்கள்விரோதத்தால் பலவீனப்பட்டு மற்றும் சாத்தியமானளவில் 2017 இல் எதிர்வரவிருக்கின்ற ஜனாதிபதி தேர்தல்களின் தோல்வியால் அச்சுறுத்தப்பட்டுள்ள சோசலிஸ்ட் கட்சி, விரக்தியால், மூர்க்கத்தனமான நடவடிக்கைகளை எடுக்க தயாராகி உள்ளது.

ஆளும் வர்க்கம் அதன் கொள்கைகளுக்கான ஒரே சமூக அடித்தளமாக, இராணுவம் மற்றும் பொலிஸ் படைகளைத் தான் காணும். முன்கூட்டியே "கூடுதல் செலவுகளை" ஏற்று, “நீதித்துறை மற்றும் பாதுகாப்பு படைகளுக்குக் கிடைக்கும் ஆதாரவளங்களைக் கணிசமானளவிற்கு பலப்படுத்த" அவர் விரும்புவதாக பிரெஞ்சு ஜனாதிபதி திங்களன்று தெரிவித்தார். 5,000 பொலிஸ் மற்றும் ஆயுதக் காவல்படை (gendarmes), 1,000 சுங்கத்தீர்வை முகவர்கள், நீதித்துறை மற்றும் குற்ற விசாரணை முறையில் 2,500 நியமனங்கள் ஆகியவை உட்பட 10,000 பாதுகாப்புப்படை நியமனங்களைச் செய்யவும் ஜனாதிபதி ஹோலாண்ட் முன்மொழிந்துள்ளார்.

ஹோலாண்ட் தெரிவித்தார், “பாதுகாப்பு உடன்படிக்கை ஸ்திரப்பாட்டு உடன்படிக்கையை ஒன்றுமில்லாது ஆக்குகிறது,” அது வரவு செலவு திட்டக்கணக்குப் பற்றாக்குறையை மட்டுப்படுத்துகிறது. உண்மையில், இது, பல்வேறு அமைச்சகங்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ள வரவு செலவு ஒதுக்கீட்டை தொழிலாளர்களின் சமூக உரிமைகளுக்கு எதிராக அதிகளவில் வக்கிரமான தாக்குதல்களைக் கொண்டு ஈடுகட்டப்படும்.

அங்கே 2019 க்கு முன்னதாக பிரெஞ்சு இராணுவத்தில் எந்த குறைப்பும் இருக்காது, ஆனால் தேசிய பாதுகாப்புப் படையில் இணைய காத்திருப்போர் பட்டியலில் உள்ள சுமார் 59,000 பேர் உள்ளே எடுக்கப்படுவார்கள். தேசிய பாதுகாப்புப்படையின் செயல்பாடுகளுக்கு ஏறத்தாழ 2 பில்லியன் செலவு பிடிக்குமென பத்திரிகைகள் தெரிவிக்கின்றன.

சோசலிஸ்ட் கட்சியின் அதிகரித்த ஜனநாயக-விரோத கொள்கைகளுக்கு பரவலாக ஊடகங்கள் ஒத்துழைக்கின்றன, அவை பரந்தளவில் பிற்போக்குத்தனமான குட்டி-முதலாளித்துவ அபிப்ராய தொனியை எதிரொலிக்கின்றன.

அவ்விதத்தில், Nouvel Obs க்கு எழுதும் ஒரு சட்ட பேராசிரியரும் மற்றும் சோசலிஸ்ட் கட்சிக்கு நெருக்கமான ஒரு கட்சியான பசுமைக் கட்சியின் ஐரோப்பிய சுற்றுச்சூழல் அமைப்பின் ஓர் அங்கத்தவருமான François Bastien, முன்மொழியப்பட்ட அரசியலமைப்பு திருத்தத்தை ஆதரிக்கிறார், இதை அவர் ஒரு பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையாக மட்டுமே இருப்பதாக முன்வைக்கிறார்.

Bastien கருத்துப்படி, அரசியலைப்பின் மாற்றமைவானது, "அரசு 'நீண்டகாலத்திற்கு' பயங்கரவாத அச்சுறுத்தலை எதிர்த்து போராட அனுமதிக்கும் வகையில் "ஒரு 'நெருக்கடிக்கான படைத்துறைசாரா ஆட்சிமுறையை' உருவாக்க நோக்கம் கொண்டிருக்கிறது. ஏனென்றால் குறிப்பாக இது தேசிய உரிமையின் அடித்தளங்களை மீறுவதுடன், அல்லது பொதுவாக ஜிஹாதிஸ்டுகள் என்று சந்தேகத்திற்குரியவர்களை வீட்டுக்காவலில் வைப்பதுடனும் சம்பந்தப்பட்டுள்ளது மற்றும் இவ்வாறாக பயங்கரவாதத்திற்கு எதிராக போராடுவதற்காக, அடிப்படை உரிமைகளைக் கைவிட்ட ஒரு ஆட்சிமுறையை வரையறுக்கிறது, அரசியலமைப்பு திருத்தம் நிச்சயம் அவசியமாகும்,” என்கிறார்.

காங்கிரஸின் முன்னால் ஹோலாண்டினது நடவடிக்கைகளால் பத்திரிகைகள் ஒருமித்து சிலிர்த்துப் போயின. “காங்கிரஸில் ஹோலாண்ட்: சார்க்கோசிக்கு ஜனாதிபதி கண்ணியம் குறித்த ஒரு படிப்பினை" என்று தலைப்பிட்ட ஒரு கட்டுரையில், ஹோலாண்டைச் சுற்றி தேசிய ஒற்றுமையில் ஆச்சரியமூட்டும் சவால்கள் உருவாகி வருகின்றன என்று அது வாதிடுகிறது.

நிதியியல் இதழ் எழுதியது: “அவர் தேர்ந்தெடுக்கப்பட்டதற்குப் பின்னர் முதல்முறையாக, காங்கிரஸை முகங்கொடுக்கையில், பிரான்சுவா ஹோலாண்ட் இந்தளவிற்கு ஒருபோதும் குடியரசின், பிரான்சின் ஒரு குறிப்பிட்ட கருத்தின் அதிகாரபூர்வத்தன்மைக்கு உருவடிவம் கொடுத்ததில்லை. அரசின் தலைவராக, காங்கிரஸ் பீடத்தில் நின்று கொண்டிருக்கையில், எல்லா நாட்டு பிரதிநிதிகளின் பாராட்டுக்களோடு, அனைவரும் பிரான்சின் தேசிய கீதம் பாடிக்கொண்டிருக்கும் ஒரு சித்திரமாக விளங்கும். … ஐயத்திற்கிடமின்றி, பல பிரெஞ்சு மக்களின் கண்களில், வரலாற்றில் துன்பியலான கூறுபாடுகளால் நிர்பந்திக்கப்பட்டு, அவர் நிறைவான ஜனாதிபதியாகி உள்ளார். முழுமையான ஜனாதிபதியாகி உள்ளார். பரிபூரண ஜனாதிபதியாகி உள்ளார்.”

தேசிய ஒற்றுமைக்கு மற்றும் தலைமை அதிகாரபூர்வத்தன்மை குறித்த இந்த துதிப்பாடல், விச்சி ஆட்சியில் நாஜி-ஒத்துழைப்பாளர்களது பிரச்சாரத்தின் மத்திய கருத்துருவைப் போன்றுள்ளது, இது பிரான்சின் ஜனநாயக உரிமைகள் மீதான ஆழ்ந்த தாக்குதல்களை உள்ளடக்கிய பிற்போக்குத்தனமான ஆளும் வர்க்கத்திற்குள் நிலவும் உணர்ச்சிப் பெருக்கின் உண்மையான பிரதிபலிப்பாக உள்ளது.

Read more...

யார் இந்த சமந்தா பவர் மற்றும் அவர் ஏன் ஸ்ரீலங்காவுக்கு விஜயம் செய்திருக்கிறார்? - சுலோச்சனா ராமையா மோகன்

“ஸ்ரீலங்காவின் விடயத்தில் ஒரு இறையாண்மையுள்ள அரசு அதன் எல்லைக்குsamanthaள் மிகவும் கொடூரமான எல்.ரீ.ரீ,ஈ யினைப் போன்ற ஒரு கிளர்ச்சியாளர்களை கீழடக்குவதற்கு உள்ள உரிமையை பற்றி யாருக்கும் கருத்து வேறுபாடு இருக்கும் என்று நான் நினைக்கவில்லை, ஆனால் அங்கு எழும் கேள்வி என்னவென்றால் அதை நீங்கள் எப்படிச் செய்யப் போகிறீர்கள் மற்றும் யுத்தம் நடத்துவதில் உள்ள சட்ட விதிகளை நீங்கள் அவதானிக்கிறீர்களா என்பதுதான். திரும்பவும் எனது அரசாங்கத்தின் லூயிஸ் ஆர்பர் சர்வதேச நெருக்கடி குழுவின் சார்பாக இங்கு உள்ளார் ஸ்ரீலங்கா பற்றிய அங்குள்ள கள நிலமைகள், நடந்தவை தொடர்பாக பல முக்கிய பணிகளை அவர் நிறைவேற்றியுள்ளார். மீண்டும் எங்களிடம் உள்ள கொள்கைகள் காரணமாக நாங்கள் அவர்கள் பக்கம் நிற்கவேண்டி உள்ளது.

அவர்கள் அங்கிருந்து அகற்றப்பட்ட சம்பவத்தின்போதும் அதன் பின்னரும் அங்கு விபரீதமான பல விளைவுகள் ஏற்பட்டிருக்க முடியும், ஆனால் திரும்பவும் எங்கள் போராட்டங்களை பகுத்தறிவுடன் நியாயப்படுத்தி மற்றும் அவை அடிக்கடி நடப்பதைக் காட்டிலும் அதிக பிணைப்பு உள்ளதாக இருக்கும் என்பதை உறுதி செய்ய நினைக்கிறேன்”. சமந்தா பவர், இனப்படுகொலை மற்றும் பெரும் அட்டூழியங்களை தடுப்பது பற்றிய ஒரு கருத்தரங்கில் தெரிவித்தது, அதேவேளை இவர் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் மனித உரிமைகள் மற்றும் பன்முக விவகாரங்கள் தொடர்பான சிறப்பு உதவியாளராகவும் பணியாற்றிவருகிறார்.

சமந்தா பவர் ஐக்கிய நாடுகள் சபையின் அமெரிக்காவுக்கான தூதுவராக உள்ளார் மற்றும் அவரது உயர் அந்தஸ்தான பதவி,மனித உரிமைகள் ஆர்வலர் என்கிற அவரது பணியுடன் கைகோர்த்துச் செல்கிறது. 1993 முதல் 1996 வரை அவர் யுகோஸ்லாவிய யுத்தம் பற்றி அமெரிக்க செய்திகள் மற்றும் உலக அறிக்கை, த பொஸ்ரன் குளோப், த எகானமிஸ்ட் மற்றும் த நியு ரிபப்ளிக் போன்றவற்றுக்காக செய்திகள் சேகரிக்கும் ஒரு யுத்த நிருபராக பணியாற்றியிருந்தார்.

குவிய நபர்

அமெரிக்க ஜனாதிபதி பராக் உபாமாவின் ஆர்வமுள்ள பல விடயங்களின் மையப்புள்ளியான ஒரு ஆளாகவும் அவர் கருதப்பட்டார், நிருவாகத்தின் தனித்துவமான புரிந்துணர்வுக்காக மனித உரிமைகள் செயற்பாடுகள்,மனித உரிமைகள் பற்றிய கொள்கைகளில் புலனாய்வு,ஆராய்ச்சி என்பனவற்றை மேற்கொண்டு அதை நிறுவுதல், இனப்படுகொலை, போர்க்குற்றங்கள், சர்வதேச மனிதாபிமானச் சட்டங்கள் என்பனவற்றை அவர் கண்காணித்து வந்தார்.

அவர் இன்று நமது நகரத்தில் உள்ளார்

ஸ்ரீலங்காவை சூழ்ந்துகொண்டு அதிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ள அது கடும் பிரயத்தனம் மேற்கொள்ளும் விடயமான இனப்படுகொலை, மனித உரிமைகள் மீறல்கள், மற்றும் மானிடத்;துக்கு எதிரான குற்றங்கள் என்பனவற்றுக்கான எதிரான உண்மைத்தன்மையை உறுதிப்படுத்தும் அவரது நடவடிக்கைகள் காரணமாக ஏற்கனவே அவரது ஸ்ரீலங்காவுக்கான விஜயம், பல முகச் சுழிப்புகள் மற்றும் சந்தேகஙகளை ஏற்படுத்தியுள்ளது.

பிவிதுரு ஹெல உருமய கட்சி செயலாளரான பாராளுமன்ற உறுப்பினர் உதய கமன்பில அவரது கடந்தவார விஜயம் பற்றி தெரிவிக்கையில் “அது ஒரு மர்மமான விஜயம் அவரது ருவிற்றர் அல்லது முகப்புத்தகம் அல்லது வேறு சமூக ஊடகங்கள் என்பன ஸ்ரீலங்காவுக்கான அவரது வருகையை பற்றி எதுவும் குறிப்பிடாமல் மௌனம் சாதித்துள்ளன” என்றார்.

அமெரிக்க தூதுவர்

அந்த பாராளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவிக்கையில் அவருக்கு அமெரிக்கா முழுவதும் பயணம் செய்வதற்கு உரிமை உள்ளது, அவர் ஐநாவுக்கான அமெரிக்க தூதுவர் என்கிறவகையில் அது நியாயமானதும் கூட.”அவர் தனது நாட்டின் நிலமைகளை ஐக்கிய நாடுகள் சபையில் தெரிவிக்கலாம் அது அவரது வேலை. ஆனால் அவர் ஏன் ஸ்ரீலங்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்? அது ஏனென்றால் அமெரிக்கர்கள் ஸ்ரீலங்கா என்பது தாங்கள் சமீபத்தில் கைப்பற்றிய ஒரு காலனித்துவ பிரதேசம் என்கிற கண்ணோட்டத்தில் பார்க்கிறார்கள் என்பதினாலா? ஸ்ரீலங்காவை அமெரிக்காவின் 51வது மாநிலமாக அவர்கள் கருதுகிறார்களா?” என்றெல்லாம் கேள்விகளை எழுப்பியுள்ளார்.

அவர் வெளிப்படையாகவே இந்தப் பிரச்சினையை தேர்ந்தெடுத்திருக்கிறார் ஏனென்றால் பவர் மனித உரிமைகள் விடயத்தில் ஒரு நிபுணரும் மற்றும் இந்த விடயம் பற்றி உலகமெங்கும் விரிவுரைகளை நடத்திவருபவர். ஆனால் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளதைப் போல, இதில் தங்கியுள்ள உண்மை என்னவெனறால் இந்த பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் முந்தைய ஆட்சியாளார்கள் ஆகியோர், ஒன்றில் தமிழர் பிரச்சினைக்கு ஒரு தீர்வையோ அல்லது சமூக மறுசீரமைப்பையோ கொண்டுவருவதற்கு விருப்பம் இன்றி மேற்கிற்கு எதிராகச் சென்றுள்ளார்கள் மற்றும் அதன ;காரணமாக அதே நபர்கள்தான் மேற்கை இங்கு நடைபோடுவதற்கு வரவேற்றுள்ளார்கள்.

கடந்த காலத்தை கிளறுவது

அவர் கடந்த, நிகழ் மற்றும் எதிர்காலங்களை கிளறக்கூடிய சாத்தியம் உள்ளது என்பதை புறந்தள்ளிவிட முடியாது. முன்பு ஸ்ரீலங்காவுக்கு விஜயம் மேற்கொண்டிருநத அமெரிக்க ராஜாங்க உதவிச்செயலர் நிஷா தேசாய் பிஸ்வால், புதிய அரசாங்கம் அமெரிக்காவுடன் நெருக்கமாக செயல்பட விரும்புவதைப்போல தெரிகிறது என்று பாராட்டு தெரிவித்திருந்தார், ஆனால் அவர் குற்றம் சுமத்தப்பட்டுள்ள போர்க் குற்றங்கள் பற்றிய உண்மையை கண்டறியும் பணி தொடர்பான விடயம் பற்றி ஒரு தாக்கத்தையோ அல்லது ஈர்ப்பையோ உருவாக்கவில்லை. கல்வியாளர்கள் மற்றும் சமூக அமைப்புகள்கூட அந்த அம்மையாரது வருகையின்போது மனித உரிமைகள் பற்றிய பிரச்சினைகள் அடிப்படையில் மூடி மறைக்கப்பட்டு விடலாம் என நினைத்தார்கள்.

பவர் பற்றி ஆராய்ந்துள்ள ராஜதந்திரியும் அரசியல் விஞ்ஞானியுமான கலாநிதி தயான் ஜயதிலக சமீபத்தில் தெரிவித்திருப்பது, ராஜபக்ஸ நிருவாகத்தின் முன்னணி குழுவினர், உயர்ந்த அறிவு, பிடிவாதம் மற்றும் நாவன்மை ஆகிய மூன்றும் ஒருங்கிணைந்த இந்தப் பெண்மணியை எதிர்த்து நின்றார்கள். அமெரிக்காவுக்கான ஸ்ரீலங்கா தூதுவர் பணிக்கு முற்றிலும் தகுதியற்றவராகவும் மற்றும் ஏமாற்றமளிப்பவராகவும் இருந்த ஜாலிய விக்கிரமசிங்க, கல்வியறிவற்ற முரட்டு தன்மையுள்ள சாஜின் டி வாஸ் குணவர்தன, மற்றும் இதையடுத்து ஆக்ரேஷமும் தன்முனைப்பும் உள்ள கிஷேனுக செனவிரத்ன போன்றோர் அந்த குழுவில் அடங்குவார்கள். ஸ்ரீலங்காவின் ராஜதந்திரம் இந்தக் காலகட்டத்தில்தான் அபத்த நிலைக்கு தள்ளப்பட்டது என்று அவர் கூறியுள்ளார்.

ஸ்ரீலங்காவில் பவர்

2010ம் ஆண்டில் பல வெளிநாட்டு பிரதிநிதிகளும் மேற்கொண்ட உண்மையை கண்டறியும் வழக்கமான பணியை போலில்லாது, மைத்திரி – ரணில் அரசாங்கம் ஜெனிவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபைக்கு உறுதி வழங்கியதின்படியும் மற்றும் அமெரிக்கத தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்கியதின் பின்னர், ஸ்ரீலங்காவில் பவரது பிரசன்னம் வலுவானதும் மற்றும் முட்கள் நிறைந்த கடின பாதையாகவும் இருக்கும் என்று நம்பலாம். சந்தேகமின்றி கூட்டு நடவடிக்கை ஐநா பணிக் குழுவினரை ஸ்ரீலங்காவுக்கு கொண்டு வந்ததுடன் யாரும் கால் வைக்கமுடியாத இடங்களுக்கும் செல்ல வழியேற்படுத்தியது.

யுத்தக் குற்ற விசாரணைக்கு தீர்வு காணும் தொழில்நுட்ப அம்சம் தொடர்பாக தாங்கள் இப்போது வேலை செய்து வருவதாக அரசாங்கம் கூறுகிறது, எனினும் இதுவரை அது தெளிவற்றதாகவே உள்ளது. அரசியலமைப்பில் சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்கு அரசியல் விருப்பம் குறைவாக உள்ள நிலையில், அமெரிக்க தீர்மானம் மற்றும் ஒரு உள்நாட்டு தெரிவுமுறை என்பனவற்றின் ஊடாக பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான செயற்பாடுகளுக்கு அரசாங்கம் எவ்வாறு தயார் செய்கிறது என்பதையிட்டு வெளிநாட்டு ராஜதந்திரிகள் வட்டமும் ஒரு குழப்ப நிலையில் உள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கா தலைமையில் துடிப்பான எதிர்காலமுள்ள புதிய ஸ்ரீலங்காவுக்கான வழியை திறந்து விடுவதில் வெளிநாட்டு தூதரகங்களும் முக்கிய பங்கினை வகித்தன. உண்மையில் அமெரிக்கா மற்றும் லங்கா இணை அனுசரணையுள்ள தீர்மானத்துக்கு ஆதரவாக அவர்கள் வாக்களித்தது இதை பிரதானப் படுத்திக் காண்பிக்கிறது.

வடக்கிற்கு விஜயம்

அமெரிக்க அரசாங்கத்தின் ஐநா பிரதிநிதியான பவருக்கு இப்போது ஐநா நிபுணர்கள் தங்கள் கண்டு பிடிப்புகள் பற்றி அறிவித்திருக்கலாம், மற்றும் அவர் வடக்கிற்கு விஜயம் செய்யும்போது அங்கு அவர் காணாமற்போனவர்களின் குடும்பங்களைச் சந்திக்கும்போது, உதயன் பத்திரிகைக்கு விஜயம் செய்யும்போது மற்றும் காணாமற்போனவர்கள் பிரச்சினைகள் பற்றி உரையாற்றிய பின்னர் ஸ்ரீலங்காவை மீளக்கட்டியெழுப்புவதில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை என்பது அவருக்கு உணர்த்தப்பட்டதின் பின்னர் அவருக்கு ஐநா குழுவினரது கண்டுபிடிப்புகள்மீது மேலும் நம்பிக்கை உண்டாகலாம்.

அவரது வருகையை பற்றி அமெரிக்க ராஜாங்க திணைக்களம் சொல்லியிருப்பது,” ஸ்ரீலங்காவில் இருக்கும்போது தூதுவர் பவர் உள்ளுர் அரசாங்க அதிகாரிகள் ,அமைப்புகள், மற்றும் மோதலினால் பாதிக்கப்பட்ட சமூகங்கள் ஆகியோரைச் சந்திப்பதற்காக வடக்கு நகரமான யாழ்ப்பாணத்துக்கு பயணம் செய்யவுள்ளார். அங்கு அவர் போரின்போது தாக்குதலுக்கு இலக்காகிய உதயன் செய்திப் பத்திரிகையின் தலைமையகத்துக்கு விஜயம் செய்து உள்ளுர் ஊடக உறுப்பினர்களை சந்திப்பார். தூதுவர் பவர், மோதலின்போது கணிசமானளவு சேதங்களுக்கு உள்ளாகிய ஒஸ்மானியாக் கல்லூரியின் புதிய கட்டிடத் தொகுதியின் திறப்பு விழாவில் பங்கேற்பார்;, அதேபோல யாழ்ப்பாண நூல்நிலையத்துக்கும் விஜயம் செய்வார், அங்கு அவர் பண்டைய தமிழ் கையெழுத்துப் பிரதிகளை உள்ளுரில் மீளப் புதுப்பிக்கும் பணிக்கான அமெரிக்காவின் ஆதரவை அறிவிப்பார்” என்று.

பவரின் வடக்கிற்கான விஜயம், அரச செயற்பாட்டாளர்களின் கரங்களினால் துயரங்களுக்கு, அச்சுறுத்தல்களுக்கு மற்றும் காணாமற்போதலுக்கு ஆளான சமூகத்தினை மீளக் கட்டியெழுப்பவதற்கு அந்த அம்மையாருக்குள்ள ஆழமான ஆர்வத்தை வெளிக்காட்டுகிறது.

அரசியல் கைதிகள்

கடந்த வெள்ளியன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு, சில அரசியற் கைதிகள் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தாலும், வவுனியாவில் உள்ள குற்றவியல் புலனாய்வுப் பிரிவுக்கு இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை சமூகமளிக்க வேண்டும் என்று கேட்கப்பட்டிருப்பது வன்னி மக்களிடையே மீண்டும் ஒரு அச்சமான மனநிலையை ஏற்படுத்தியுள்ளது என்று கூறியிருப்பதையடுத்து, அந்த அரசியற் கைதிகளின் சங்கடத்தையும் போக்க அவர் முயலக்கூடும்.

அமெரிக்கா, ஸ்ரீலங்காமீது ஆர்வம் காட்டுவது, சீனாவாலும்கூட கவனிக்கப்படும் கிழக்கு – மேற்கு கடற்பாதையில் தனது மூலோபாய நிலைப்பாடுகளை பலப்படுத்துவதற்கே என்று கூறப்படுவதையும் மீறி எழுந்துள்ள கேள்வி, அமெரிக்கா மற்றும் ஸ்ரீலங்கா இணை அனுசரணையான தீர்மானம், பிரதானமாக உலகளாவிய ரீதியில் வாழும் தமிழர்கள் மற்றும் ஸ்ரீலங்காவை சேர்ந்த சில தீவிர மனித உரிமை ஆர்வலர்கள் ஆகியோர் ஆர்வத்துடன் உற்றுக் கவனித்துவரும் போர்க்குற்றம் தொடர்பான குற்றச்சாட்டுகளில் உள்ள உண்மையை கண்டறியும் விடயத்தில் எந்த ஒரு திருப்பத்தையும் ஏற்படுத்தாமல் வெறுமே விட்டுவிடும் புதிய வடிவத்தை பெற்றுவிடுமா என்பதுதான்.

முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் இனப்படுகொலை மற்றும் யுத்தக் குற்றங்கள் தொடர்பாக கொண்டுள்ள கடுமையான நிலைப்பாடு, மற்றும் ரி.என்.ஏ யிலுள்ள சில குறிப்பிட்ட அங்கத்தவர்களை நோக்கிய திடீர் வெறுப்பு காரணமாக தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் தோன்றியுள்ள மோதல் சம்பந்தமாகவும் பவரின் உண்மையை கண்டறியும் யாழ்ப்பாண விஜயத்தின்போது பிரதானப்படுத்திக் காட்டப்படலாம்.

ஜூன் 2010ல் அவரது உண்மையைக் கண்டறியும் உத்தியோகபூர்வ கொழும்பு விஜயத்தின்போது, அவர் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ மற்றும் இங்கு மனித இழப்புகளே ஏற்படவில்லை என்று உருக்கமாக மறுதலித்ததுடன் மற்றும் அநேகமாக நாட்டில் உள்ள எல்லா மனித உரிமை மீறல்களுக்கும் குற்றம் சொல்லவேண்டியது எல்.ரீ.ரீ,ஈ யைத்தான் எனக்கூறிய அப்போதைய வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் ஆகியோரைச் சந்தித்திருந்தார்.

அமெரிக்க வெளியுறவுக் கொள்கை

வெளிப்படையாகவும் மூடிமறைக்காமல் திட்டவட்டமாகவும் பேசும் பவர், அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கையை குறிப்பாக அநேகமான பெரும் அட்டூழியங்களை அமெரிக்கா கண்டும் காணாமல் இருப்பதாக தனது நூலான ‘நரகத்தில் இருந்து ஒரு பிரச்சினை: அமெரிக்கா மற்றும் இனப்படுகொலை யுகம்’ என்கிற நூலில் அப்பட்டமாக விமர்சித்திருந்தார், அமெரிக்கா வேண்டுமென்றே இனப்படுகொலையை அலட்சியம் செய்வதாக குறிப்பிடப்பட்டிருந்த அந்த நூல், ஜே அந்தனி லூக்காஸ் புத்தகப் பரிசு மற்றும் 2003ம் ஆண்டுக்கான பொதுவான கற்பனை அல்லாத புத்தகங்களுக்கான புலிட்சர் பரிசையும் வென்றிருந்தது. மேலும் அவர் ஹிலாரி கிளின்டனை ஒரு அரக்கி என்றும் அழைத்திருந்தார், பின்னர் அதற்காக அவரிடம் மன்னிப்புக் கோரினார்.

கடந்த ஒக்ரோபரில் மெக்ஸிக்கோவில் நடைபெற்ற “திறந்த அரசாங்க பங்காளிகளுக்கான உலகளாவிய மாநாட்டில் (ஓ.ஜி.பி)” அவர் உரையாற்றுகையில் ராஜபக்ஸ ஆட்சியைப் பற்றி சமீபத்தில் பேசுவதற்கான சிறந்த வாய்ப்பை அவர் ஏற்படுத்திக் கொண்டார். கிட்டத்தட்ட அவரது பாதிப் பேச்சு ஸ்ரீலங்காவை உள்ளடக்கியதாகவே இருந்தது. ராஜபக்ஸவின் நிருவாகத்தை பலமாகத் தாக்கிய அவர் அந்த ஆட்சி பெருமளவு பிரிவினை மற்றும் பயம் என்பனவற்றின் ஊடாகவே நடத்தப்பட்டது மற்றும் அதை விமர்சிப்பவர்களை துன்புறுத்தவும் செய்தது என்று சாடியிருந்தார்.

ராஜபக்ஸ நிருவாகம்

ராஜபக்ஸவின் நிருவாகத்தின்போது தலைமறைவாக இருந்த தொழிலாளர் அமைப்பாளர் ஒருவர் மீண்டும் வேலைக்குத் திரும்பியபோது சொன்னது நான் செய்பவைகளையிட்டு இனி அச்சம் என்னை குறிவைக்காது என்று. தனது செய்திகளுக்காக தொடர்ந்து தொந்தரவுகளுக்கு உட்பட்டுவந்த ஊடகவியலாளர் ஒருவர் அச்சம் அகன்று விட்டது எனத் தெரிவித்தார், என்று பவர் தனது உரையில் மேலும் கூறினார்.

அவர் மேலும் அறிவித்தது, ஸ்ரீலங்கா உட்பட ஒ.ஜி.பி அங்கத்தவர்களுக்கு வரும் வருடங்களில் , யாருடைய முயற்சி, ஊழலுக்கு எதிரான,வெளிப்படையான அல்லது பொறுப்புக்கூறலை வாதாடுவதில் ஓ.ஜி.பி யின் உணர்வினை உள்ளடக்கியிருக்கிறதோ அத்தகைய சீர்திருத்தவாதிக்கு அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா ஒரு பரிசினை வழங்குவார் என்று.

ஒரு ஐரிஷ் புலம்பெயர்ந்தவரான பவர் சமூகத்தில் வித்தியாசத்தை ஏற்படுத்த விரும்பும் தொண்டு நிறுவனங்கள், ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுடன் நெருக்கமாக பணியாற்றி வருகிறார் மற்றும் அவர்கள்தான் அவரது விருப்பமான விடயங்கள். ஸ்ரீலங்காவுக்கு வருவதற்கு முன்பு நேற்று அவர் இந்தியாவுக்கு விஜயம் செய்தது ஒரு முன்னுதாரணமாக உள்ளது, அங்கு அவர் ஆர்வலர்கள் மற்றும் சமூக சீர்திருத்தவாதிகளைச் சந்தித்துள்ளார் மற்றும் அவர் ருவிற்றரில் எழுதுவதுடன்; முகப் புத்தகத்தில் தொடர்ச்சியாக மனித உரிமைகள் தொடர்பாக நடப்பவைகளை தேடியும் வருகிறார்.

சிரிய மோதல்

சிரிய மோதலின்போது நடத்தப்பட்ட அட்டூழியங்களை முறியடிக்க அல்லது குற்றவிசாரணை நடத்த தவறிய ஐக்கிய நாடுகள் கட்டமைப்பையும் அவர் விமர்சித்துள்ளார். ஜனாதிபதி ஒபாமாவை லிபியாவில் ராணுவ ரீதியாக தலையீடு செய்வதற்கு இணங்க வைப்பதில் முக்கிய நபராக இருந்தவர் பவர், அந்த அதே பவர்தான் வெகுஜனங்கள் மீதான அட்டூழியங்களுக்கு பதிலடி கொடுப்பதற்காக,அமெரிக்காவுக்கு எல்லா உபகரணங்களையும் மற்றும் அதற்கான பெட்டிகளையும் (இராஜதந்திர, பொருளாதார, அரசியல் மற்றும் இராணுவ) பரிசோதிக்கும் தார்மீக கடப்பாடு உள்ளது என வாதிட்டார், மேலும் இனப்படுகொலையை தடுப்பதற்கு இராணுவத் தலையீடு சில சூழ்நிலைகளில் பொருத்தமாக இருக்கும் என்றும் வாதாடினார்.

சிவில் உரிமைகளின் வலுவான ஆதரவாளரான அமெரிக்க பேராசிரியர் அலன் டேர்சோவிற்ஸ், ஐநா தூதுவராக பவரை நியமித்தபோது சொன்னது, “ பவரின் தெரிவு மிகவும் பொருத்தமானது. மனித உரிமைகள் மீதான ஐநாவின் இரட்டை வேடத்தை அம்பலப்படுத்துவதற்கு அவரிடம் உண்மையான நம்பகத்தன்மை உள்ளது” என்று. அதுதான் பவரின்(சமந்தா) பவர் மற்றும் ஸ்ரீலங்கா விரும்பினாலோ அல்லது விரும்பாவிட்டாலோ அடுத்த சில வருடங்களுக்கு அது அந்த பெண்மணியை சமாளித்தே ஆகவேண்டும்.

தேனீ மொழிபெயர்ப்பு: எஸ்.குமார்

Read more...

Saturday, November 21, 2015

பயங்கரவாதிகளை அரசியல் கைதிகள் என்ற போர்வையில் விடுதலை செய்ய முடியாது. சம்பிக்க

குற்­ற­வா­ளிகள் என நிரூபிக்­கப்­பட்ட விடு­த­லைப்­புலி கைதி­களை யார் விடு­வித்­தாலும் அது பாரிய குற்­ற­மாகும். எக்­கா­ர­ணத்தை கொண்டும் தமிழ்க் கைதி­களை அர­சாங்கம் விடு­விக்கக் கூடாது என அமைச்சர் சம்­பிக்க ரண­வக்க தெரி­வித்தார். புலி­க­ளுக்­காக ஆத­ரவுக் குரல் எழுப்பும் தமிழ் தலை­மைகள் ஏன் கே.பி, ருத்­ர­கு­மாரன், பிள்­ளையான், கருணா விட­யத்தில் அமைதி காக்­கின்­றனர் எனவும் அவர் கேள்வி எழுப்­பினார்.

தமிழ் அர­சியல் கைதி­களின் விடு­தலை தொடர்பில் தமிழர் அர­சியல் தரப்­பினர் அதிக அக்­கறை காட்­டி­வரும் நிலையில் அது தொடர்பில் வின­வியபோதே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் கூறு­கையில்,

கடந்த யுத்த கால­கட்­டத்தில் விடு­தலைப் புலி­க­ளுடன் நேர­டி­யான தொடர்­பு­களை வைத்­தி­ருந்த அதேபோல் புலி­களின் ஆயுத போராட்­டத்­திற்கு ஆத­ர­வாக செயற்­பட்ட பலரை முன்­னைய அர­சாங்கம் கைது செய்­தது. அதேபோல் விடு­தலைப் புலி­களின் பயங்­க­ர­வாத குழுவில் போரா­டிய பல்­லா­யி­ரக்­க­ணக்­கி­லான உறுப்­பி­னர்கள் கடந்த காலத்தில் புனர்­வாழ்வு நட­வ­டிக்­கை­களின் மூலம் விடு­த­லையும் செய்­யப்­பட்­டுள்­ள னர். அதேசந்­தர்ப்­பத்தில் புலி­களின் நேரடி தொடர்பில் இருந்த சிலரே இன்றும் தடுப்­புக்­கா­வலில் உள்­ளனர். இவர்கள் தொடர்பில் உயர்நீதி­மன்ற தீர்ப்­பு வழங்­கியுள்ளது. அவ்­வா­றான நிலையில் ஏதேனும் கார­ணங்­களை காட்டி அவர்­களை விடு­விக்க முயற்­சிப்­பது கண்­டிக்­கத்­தக்க விட­ய­மாகும்.

புலிகள் என்ற சந்­தே­கத்தின் பேரில் தடுப்­புக்­கா­வலில் உள்ள தமிழ்க் கைதி­களை நான் சுட்­டிக்­காட்­ட­வில்லை. குற்றம் இல்­லாத அனை­வரும் விடு­விக்­கப்­பட வேண்டும். அதில் எந்­த­வி­த­மான மாற்றுக் கருத்­துக்­க­ளுக்கும் இட­மில்லை. யுத்­தத்தின் போது சந்­தே­கத்தின் பேரில் கைதுசெய்­யப்­பட்ட தமிழ்க் கைதி­களை விடு­விக்க அர­சாங்கம் எடுக்கும் நட­வ­டிக்­கை­களை நானும் வர­வேற்­கின்றேன். ஆனால் அப்­பாவி தமிழ்க் கைதிகள் என்ற பெயரில் குற்றம் சுமத்­தப்­பட்­டுள்ள அனைத்து தமிழ்க் கைதி­க­ளையும் விடு­விக்க முயற்­சிப்­பதை நாம் ஏற்­றுக்­கொள்ள மாட்டோம். இந்த விட­யத்தில் புலிகள் எனக் குற்றம் சுமத்­தப்­பட்­டுள்ள, நீதி­மன்­றத்தின் மூலம் நிரூ­பிக்­கப்­பட்­டுள்ள தமிழ்க் கைதி­களை விடு­விக்கும் நட­வ­டிக்­கையை யார் மேற்­கொண்­டாலும் அது தவ­றான விட­ய­மாகும்.

புலி­களை விடு­விக்கும் நட­வ­டிக்­கை­களை எந்த அர­சாங்கம் மேற்­கொண்­டாலும் அது பார­தூ­ர­மான குற்­ற­மாகும். இந்த ஆட்­சியில் நல்­லாட்சி உறு­திப்­ப­டுத்­தப்­பட்ட போதிலும் சட்ட திட்­டங்­களை மதிக்­கவும், நீதி­மன்ற தீர்ப்­பு­களை பின்­பற்­றவும் வேண்­டிய கட்­டாய தேவையுள்­ளது.

அதேபோல் புலி­களை விடு­விக்­கக்கோரி இன்று பலர் ஆத­ரவுக் குரல் எழுப்­பு­கின்­றனர். அவர்­களை நிர­ப­ரா­திகள் என்று விமர்­சிக்­கின்­றனர். இவர்­களின் செயற்பா­டு­க­ளினால் இன்று பலர் விடு­விக்­கப்­பட்டும் உள்­ளனர். அவ்­வாறு கைதுசெய்­யப்­பட்டு சிறை­களில் உள்ள கைதிகளின் விடு தலைக்காக செயற்படுவோர் புலிகளின் முக்கிய உறுப்பினர்களான கே.பி, பிள்ளையான், கருணா போன்றோரைத் தண்டிக்க ஏன் வலியுறுத்த தவறுகின்றனர்? ஆகவே திட்டமிட்டு இவர்கள் செய்யும் செயற்பாடுகளுக்கு அரசாங்கம் துணை போகக் கூடாது என்றார்.

Read more...

வதைக்கூடங்கள் அல்ல. இரண்டாம் உலகப்போரின்போது பிரத்தானியரால் கட்டப்பட்ட பதுங்கு குழிகள். கன்னாரகொட

திருகோணமலை கடற்படைத் தளத்தில் இரகசிய வதை முகாம் இருந்ததாக, ஐ.நா நிபுணர் குழு தெரிவித்த குற்றச்சாட்டை மறுத்துள்ள சிறிலங்கா கடற்படையின் முன்னாள் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொட, அது இரண்டாம் உலகப்போர் காலத்தில் பிரித்தானியர்களால் கட்டப்பட்ட பதுங்குகுழி என்றும் தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவுக்குப் ஆய்வுப் பயணத்தை மேற்கொண்டிருந்த, காணாமற்போகச் செய்யப்பட்டோர் தொடர்பான ஐ.நா பணிக்குழு, கொழும்பில் நடத்திய செய்தியாளர் மாநாட்டில், திருகோணமலைக் கடற்படைத் தளத்தில் நிலத்தடி இரகசிய தடுப்பு முகாமை கண்டுபிடித்ததாக தெரிவித்திருந்தது.

2010 ஆம் ஆண்டு இந்த இரகசியத் தடுப்பு முகாமில் ஆட்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்ததற்கான சான்றுகள் கிடைத்திருப்பதாகவும் அந்தக் குழுவினர் கூறியிருந்தனர்.

இந்த நிலையில், 2010ஆம் ஆண்டு காலப் பகுதியில் சிறிலங்கா கடற்படைத் தளபதியாக இருந்த, அட்மிரல் வசந்த கரன்னகொட, தனது பதவிக்காலத்தில் திருகோணமலைக் கடற்படைத் தளத்தில் இரகசியத் தடுப்பு முகாம் எதுவும் இருக்கவில்லை என்று கூறியுள்ளார்.

திருகோணமலைக் கடற்படைத் தளத்தில் அமைந்துள்ள சிறைச்சாலை என்று கூறப்பட்டது, இரண்டாம் உலகப் போர் காலத்தில் விமானத் தாக்குதலில் இருந்து பாதுகாப்புத் தேடுவதற்காக பிரித்தானியர்களால், கட்டப்பட்ட இடமேயாகும்.

அந்த இடம், விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து பிரிந்து வந்து சிறிலங்கா படையினருடன் இணைந்து கொண்டவர்களின் வசிப்பிடமாக பயன்படுத்தப்பட்டது.

முன்னர் பயன்பாட்டில் இருக்காத கட்டடங்களை அவர்களுக்கு கொடுக்க சிறிலங்கா கடற்படையினருக்கு வழியிருக்கவில்லை.

பிரித்தானியர் காலத்து விமானத் தாக்குதல் பதுங்குமிடங்களை அதற்காக நாம் பயன்படுத்திக் கொண்டோம்.

நாம் திருகோணமலையிலோ வேறு தளங்களிலோ வதை முகாம்களை வைத்திருக்கவில்லை. அதற்கு எமக்குத் தேவை இருக்கவில்லை.

பல்வேறு தமிழ்க் குழுக்கள் பல ஆண்டுகளாகவே சிறிலங்கா இராணுவத்துடன் நெருக்கமாகப் பணியாற்றியுள்ளன.

இந்திய அமைதிப்படையுடன் இணைந்தும் அவர்கள் விடுதலைப் புலிகளுக்கு எதிராகப் போரிட்டுள்ளனர்.

2004 இல் புலிகள் இயக்கத்தில் பிளவு ஏற்பட்டதையடுத்து, மட்டக்களப்பு- அம்பாறையை சேர்ந்த நூற்றுக்கணக்கான நன்கு பயிற்றப்பட்ட போராளிகள், சிறிலங்கா இராணுவத்தினருடன் பணியாற்றினர்.

சம்பூர் மீது விமானத் தாக்குதல் நடத்த அப்போதைய அரசாங்கம் உத்தரவிட்டிருந்த போது, சிறிலங்கா கடற்படையின் சிறப்பு படகு அணியுடன் இணைந்து, முன்னாள் புலிகள் கூட்டாக நடவடிக்கையில் ஈடுபட்டனர்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Read more...

30 ஆண்டுகளுக்கு பிறகு இஸ்ரேலுக்கு உளவு பார்த்த அமெரிக்க அதிகாரி விடுதலை.

அமெரிக்காவில் கடற்படை உளவுத்துறை அதிகாரியாக பணிபுரிந்தவர் ஜோனாதன் பொல்லார்ட். இவர் இஸ்ரேலுக்கு உளவு வேலை பார்த்தார். வடக்கு கரோலினாவில் புட்னர் மத்திய சிறையில் இருந்து ஆவணங்களை கைப்பற்றி இஸ்ரேல் உளவாளியிடம் கொடுத்த போது சிக்கி கொண்டார். எனவே, அவரை கைது செய்த போலீசார் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

வழக்கை விசாரித்த கோர்ட்டு அவருக்கு ஆயுள் தண்டனை விதித்தது. அதை தொடர்ந்து சிறையில் 30 ஆண்டுகளாக அவர் தண்டனையை அனுபவித்து வந்தார்.

இதற்கிடையே தான் அமெரிக்க குடியுரிமையை துறக்க விரும்புவதாக தெரிவித்தார். இஸ்ரேலுக்கு செல்ல விரும்புவதாகவும் அமெரிக்காவுக்கு திரும்பி வரமாட்டேன் என்றும் உறுதி அளித்தார்.

சமீபத்தில் அமெரிக்க அதிபர் ஒபாமாவை சந்தித்த இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேத்னயாகு உளவாளி பொல்லார்டை விடுதலை செய்து தங்கள் நாட்டுக்கு அனுப்பும்படி வேண்டுகோள் விடுத்தார். ஆனால் அதற்கு அமெரிக்க எந்த பதிலும் தெரிவிக்கவில்லை.

இந்த நிலையில் ஜோனாதன் பொல்லார்ட் 30 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று விடுதலை செய்யப்பட்டார். இதற்கு இஸ்ரேல் பிரதமர் நேத்னயாகு வரவேற்பு தெரிவித்துள்ளார். இதற்கிடையே அவரை அமெரிக்காவில் இருந்து இஸ்ரேலுக்கு அனுப்புவது குறித்து ஒபாமா அரசு கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.

Read more...

மலேசிய மாநாட்டை சீர்குலைக்க 10 பயங்கரவாதிகள் தயார்!

பாரிஸ், மாலி தீ ஆகியவற்றைத் தொடர்ந்து மலேசியாவிலும் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளனர். மலேசியாவில் நடைபெறும் ஆசியானா மாநாட்டை சீர்குலைப்பதற்காக தற்கொலைப்படையாக மாறிய 10 பயங்கரவாதிகள் மலேசியாவிற்குள் நுழைந்திருப்பதாக மலேசிய போலீஸ் எச்சரித்துள்ளது.

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இன்றும், நாளையும் ( நவம்பர் 21,22) 13வது ஆசியான் மாநாடு மற்றும் 10 வது கிழக்காசிய மாநாடு நடைபெற உள்ளது. இதற்காக இந்திய பிரதமர் மோடி, சீன பிரதமர் லி கிகுயாங் உள்ளிட்ட ஆசிய நாடுகளின் தலைவர்கள் கோலாலம்பூர் சென்றுள்ளனர். இந்நிலையில், பயங்கரவாதிகளின் தாக்குதல் பட்டியலில் மலேசியாவும் உள்ளதாகவும், மாநாட்டை சீர்குலைக்க பயங்கரவாதிகள் திட்டமிட்டிருப்பதாகவும் மலேசிய போலீஸ் தகவல் வெளியிட்டுள்ளது.

இதனால் மலேசியா முழுவதும் பாதுகாப்பு பன்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

பாரிஸ், எகிப்து, லிபனான், மாலே தீவை தொடர்ந்து மலேசியாவில் பெரிய அளவில் தாக்குதலை நடத்துவதற்காக தற்கொலைப்படையாக மாறிய 10 பயங்கரவாதிகள் மலேசியாவிற்குள் நுழைந்து, பதுங்கி இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதனால் மலேசியாவில் பயங்கரவாத தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கோலாலம்பூர் நகரிற்குள் தான் பயங்கரவாதிகள் இருப்பதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இதனால் மாநாடு நடைபெறும் இடத்தில் 2000 ராணுவ வீரர்களும், பிற இடங்களில் 2500 பேரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தென் கிழக்கு ஆசிய நாடுகளில், தங்கள் அமைப்பை ஏற்படுத்த நினைக்கும், ஐ.எஸ்., பயங்கரவாதிகள், மலேசியாவில், வெடிகுண்டுகள் தயாரிக்கும் வல்லுனர்களை தேடி வருகின்றனர்,'' என, மலேசிய உள்துறை இணையமைச்சர் நுார் ஜஸ்லான் முகமது தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது: தென் கிழக்கு ஆசியாவில், மலேசியா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளை உள்ளடக்கிய, ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பை ஏற்படுத்த திட்டமிட்டுள்ள, அந்த இயக்கத்தின் மூத்த தலைவர்கள், மலேயா பல்கலை கழக முன்னாள் பேராசிரியர் முகமது அஹமது என்பவரை தலைவராக்க முயன்றனர். இதை அறிந்த மலேசிய போலீசார், அந்த முயற்சியை தடுத்து, சிலரை கைது செய்துள்ளனர். வெடிகுண்டுகளை தயாரிக்கும் திறன் படைத்த பேராசிரியர்களுக்கும், ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பினர் வலை விரித்திருந்தனர்; அதையும், தகர்த்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிலையில், மலேசியாவின் பயங்கரவாத தடுப்புப்படை தலைவர் கூறும் போது, 'தென் கிழக்கு ஆசிய நாடுகளில் ஆங்காங்கே, கொஞ்சம், கொஞ்சமாக உள்ள, ஐ.எஸ்., பயங்கரவாதிகள், பிலிப்பைன்சை, தங்கள் தென் கிழக்கு ஆசிய நாடுகளின் தலைமையகமாக மாற்ற திட்டமிட்டுள்ளதை முறியடித்துள்ளோம்' என்றார்.

Read more...

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகன அனுமதிப்பத்திரம் ரத்து.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இதுவரை காலமும் வழங்கப்பட்டு வந்த தீர்வையற்ற வாகன அனுமதிப்பத்திரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அரச அதிகாரிகளுக்கும் வழங்கப்பட்டு வந்த தீர்வையற்ற வாகன அனுமதி 2016ம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதன்மூலம் அரசாங்கத்துக்கு பாரிய நிதி ஒதுக்கீட்டை மேற்கொள்ள முடிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு 90 லட்சம் ரூபாவரையிலும் அரச அதிகாரிகளுக்கு 60 லட்சம் ரூபா வரையிலும் இந்த தீர்வையற்ற வாகன அனுமதிகள் இதுவரை காலமும் வழங்கப்பட்டு வந்தன.
இதற்கு மேலதிக மஹிந்தவின் ஆட்சியின் சாதாரண இராணுவ அதிகாரிகளுக்கும் இந்த வாகன அனுமதிகள் வழங்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

இதேநேரம் நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பொலிஸ் நிலையங்களில் எண்ணிக்கை 428இல் இருந்து 600 ஆக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதற்காக 1000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

புதிய பொலிஸ் பயிற்சி நிலையங்களை அமைக்கவும் திட்டமிடப்பட்டுஇ அதற்காகவும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பொலிஸாரின் சம்பள பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக்கொடுப்பதற்காக 3000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும் வெளிநாட்டுக் கணக்குகளில் இலங்கையர்கள் வைப்பு செய்துள்ள பணத்தை மீண்டும் இலங்கைக்கு எடுத்துவரும் போது அதற்கான காரணம் கோராதிருக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

வெளிநாட்டுக் கணக்குகளில் இருந்து பணத்தை இலங்கைக்குக் கொண்டுவரும் போது அதற்கான காரணம் இதுவரை கோரப்பட்டுவந்தது. எனினும், இந்த முறை இரத்துச் செய்யப்படுவதன் மூலம் வெளிநாட்டில் உள்ள பணத்தை இலங்கைக்குக் கொண்டுவர ஊக்கப்படுத்த முடியும் அரசாங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

Read more...

அரச அதிகாரியா? அரசியல்வாதியா? ஆரோக்கியநாதர்

அநேகமான அரச அதிகாரிகளும் உத்தியோகத்தர்களும் பல சந்தர்ப்பங்களிலும் அரசியல்வாதிகளாகவே (அரசியல்வாதிகளைப் போல அல்ல, அரசியல்வாதிகளாகவே) செயற்படுகிறார்கள். அப்படியொரு ஆசையும் அதிகார மோகமும் அவர்களுக்குண்டு. இதில் தமிழ் அதிகாரிகள் இன்னும் ஒரு படி மேல்.

அவர்கள் தாங்கள் விரும்புகிற அரசியலை மற்றவர் மேலும் ஏற்றி விட விரும்புகிறார்கள். இதற்காகத் தங்களுடைய உத்தியோக எல்லையை – அதிகார எல்லையை – நிர்வாக விதிமுறைகளைக் கூடக் கடந்து போய்விடுகிறார்கள். என்ன செய்வது, அரசியல் படுத்தும் பாடு அப்படி.

இப்படி எல்லை கடந்த நிலையில் உத்தியோகம் பார்த்தால் அதனால் பாதிக்கப்படுவது மக்கள்தான். அரசியலைப் பேசுவதற்கும் அரசியலில் ஈடுபடுவதற்கும் இவர்களுக்குத் தாராளமாக உரிமையுண்டு. ஆனால், அது வேறு களத்தில். வேறொரு முறையில் இருக்க வேண்டும். அந்த அடிப்படையே வேறு.

அப்படி ஒரு தீராத ஆசை இருக்குமென்றால், தங்களுடைய உத்தியோகத்தை விட்டு விலகிக் கொண்டு தாராளமாக அரசியல் செய்யலாம். உத்தியோகத்திலும் உத்தியோகத்தில் இருந்து கொண்டும் அரசியல் செய்யக்கூடாது. அப்படிச் செய்தால் அது அதிகார துஸ்பிரயோகம் மட்டுமல்ல, குலநாசம் என்பதைப்போல ஊர்நாசமாகத்தான் போய்முடியும்.

கடந்த 18.11.2015 அன்று கிளிநொச்சி மாவட்டச் செயலகத்துக்கு முன்பாக கண்டாவளைப் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள சிவபுரம், உழவனூர், நாதன் திட்டம் பகுதி மக்கள் ஒரு ஊர்வலத்தை நடத்தினார்கள். தங்களுக்கான வீட்டுத்திட்டங்கள் இன்னும் கிடைக்கவில்லை என்பதைக் கவனப்படுத்துவதே இதன் நோக்கம். இதுவரையிலும் இந்த மக்களுக்கு வீட்டுத்திட்டங்கள் கிடைக்காமலிருப்பதற்குக் காரணம், காணிப் பிணக்கே.

இந்தக் காணிப்பிரச்சினையைத் தீர்த்தால்தான் வீட்டுத்திட்டங்களை இவர்களுக்கு வழங்க முடியும். இதைப்பற்றி அந்த மக்களுக்கும் தெரியும். அரச உத்தியோகத்தர்கள், அதிகாரிகள், பத்திரிகையாளர்கள் எனச் சகலருக்கும் தெரியும். இவர்கள் குடியிருக்கும் காணிகள் மத்தியவகுப்புத் திட்டத்தின் கீழ் பல ஆண்டுகளுக்கு முன்பாக வேறு ஆட்களுக்கு அபிவிருத்திக்காக என்று அரசாங்கத்தினால் வழங்கப்பட்டவை.

இந்தக் காணிகளைப் பெற்றவர்கள் அவற்றைத்திருத்தி, பண்படுத்தி, அவற்றை உரிய முறையில் அபிவிருத்தி செய்யவில்லை. இதனால் இந்தக் காணிகளில் பின்னாளில் காணியற்ற வேறு பல குடும்பங்கள் குடியேறி நீண்டகாலமாகக் குடியிருக்கின்றன. மனிதாபிமான அடிப்படையிலும் நியாயத்தின் படியும் இவர்களுக்கே இந்தக் காணிகளை வழங்க வேண்டும்.

ஆனால் சட்டத்தின் மூளை வேறு. அது வேறு விதமாகவே யோசிக்கும். இந்தக் காணிகளுக்கான உரிமம் யாரிடமிருக்கிறதோ அவர்களே இந்தக் காணிகளைப் பொறுத்துப் பலமான உரித்துடையோர். ஆகவே அதை எப்படியாவது மாற்றி எடுக்க வேண்டும்.

அதாவது முன்னர் இந்தக் காணிகளை மத்திய வகுப்புத்திட்டத்தின் கீழ்ப் பெற்றிருந்தவர்களிடமிருந்து மீளப் பெற்று அல்லது அவர்களுடைய உரிமத்தை ரத்துச் செய்தே இப்பொழுது குடியிருப்போருக்குக் காணிகளை வழங்க முடியும். இதற்கு என்ன செய்ய வேண்டும்? அதையெல்லாம் எப்படிச் செய்வது? அப்படிச் செய்வது இலகுவான காரியமல்ல. அது ஒரு அரசியற் செயற்பாடும் தீர்மானமுமாகும் என்ற செய்திகளெல்லாம் ஊடகங்களில் ஏற்கனவே தாராளமாக வெளியாகியிருக்கின்றன.

அது மட்டுமல்ல, இந்தக் காணிகளைக் குடியிருப்புகளில் இருப்போருக்கு வழங்குவதற்கு என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் உரிய நடவடிக்கைகளை எடுத்திருந்ததும் இதற்கான நிர்வாக நடவடிக்கைகளில் கண்டாவளைப் பிரதேச செயலகமும் பிரதேச செயலரும் முழுமையாக ஈடுபட்டமையும் ஊரறிந்த சங்கதிகள்.

ஆகவே, இந்தக் காணிப் பிரச்சினையைத் தீர்த்து, இந்தக் காணிகளில் நீண்டகாலமாகவே குடியிருக்கும் குடியிருப்பாளர்களுக்கு இவற்றை வழங்குவது அவசியம். தொடர்ந்து இந்த மக்கள் வீட்டுத்திட்டங்களையும் பெற வேண்டும் என்ற அடிப்படையில்தான் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இவையும் ஏற்கனவே பலருக்கும் தெரிந்தவை.

ஆனால், இதையெல்லாம் மறந்து போனதைப்போல, ஊர்வலமாக மாவட்டச் செயலகத்துக்கு வந்த மக்களிடம் அவர்களுடைய பிரேரணையைப் பெற்றுக்கொண்ட மேலதிக மாவட்டச் செயலர் திரு. எஸ். சத்தியசீலன் புதிய கதைகளைப்பேசியிருக்கிறார். இதுதான் பலருக்கும் அதிர்ச்சியும் ஆச்சரியமுமாகும்.

இந்தக் காணிகளை உங்களுக்கு (அதாவது காணிகளில் இப்பொழுது குடியிருப்போருக்கு) வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. விரைவில் உங்களுக்கான காணி அனுமதிப்பத்திரங்கள் வடமாகாணக் காணி ஆணையாளரின் மூலமாக வழங்கப்பட்டு விடும். அதைத் தொடர்ந்து வீட்டுத்திட்டத்தை வழங்குவதற்குரிய முயற்சிகளை வடமாகாணக் கல்வி அமைச்சர் திரு. த. குருகுலராஜாவும் பாராளுமன்ற உறுப்பினர் சி. சிறிதரனும் செய்திருக்கின்றனர் என்று தெரிவித்திருக்கிறார் சத்தியசீலன்.

சத்தியசீலனின் இந்த அறிவிப்பைச் செவிமடுத்துக் கொண்டிருந்த பலருக்கும் பல கேள்விகளை எழுப்பியது. அங்கே நின்ற ஊடகவியலாளர்கள் பகிரங்கமாகவே ஒரு உண்மை திட்டமிட்டு மறைக்கப்படுகிறது என்று சொல்லிக்கொண்டனர்.

எப்போதும் நிதானமாகவும் ஒழுங்கான முறையிலும் தன்னுடைய கடமைகளைச் செய்து பலருடைய பாராட்டுகளையும் பெற்ற சத்தியசீலன், மாவட்டத்தின் நன்மதிப்பைப்பெற்ற இளநிலை உயர் அதிகாரியாக அடையாளம் காணப்பட்டவர். இப்பொழுது யாருடைய வற்புறுத்தலுக்காக இப்படி சார்புடைய கருத்துகளைத் தெரிவிக்கிறார் என்று கவலை தெரிவிக்கின்றனர் பலரும்.

இந்த மாதிரி அரசியல் சார்புத்தன்மைகள் நிர்வாகத்தினுள் நுளையுமாக இருந்தால் அந்த நிர்வாகம் சீர்கெட்டுப்போகும். அதனால் மக்களுக்கே பெரும் பாதிப்புகள் ஏற்படும். அண்மையில் கிளிநொச்சி, வட்டுக்கோட்டை, உடுவில் போன்ற இடங்களில் உள்ள பல பாடசாலைகள் இந்த மாதிரியான அரசியல் விளையாட்டுகளால் பாதிக்கப்பட்டுள்ளன. அதைப்போல வடக்கின் ஏனைய நிர்வாக இயந்திரங்களிலும் இந்த அரசியற் தொற்றுப் பீடிக்கப்போகிறதோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. அப்படியான ஒரு அரசியற் தொற்று வருமாக இருந்தால் அது இந்த இனத்தின் வளர்ச்சிக்கும் எதிர்காலத்துக்குமே பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.

ஆகவே வருமுன் காப்போம் என்ற அடிப்படையில் சிலவற்றை முளையிலேயே கிள்ளி எறிந்து, களைகளை அகற்றி நல்ல பயிர் வளர்ப்போம்.

உண்மைகளைத் தயக்கமின்றி, அச்சமின்றி உண்மையாகவே சொல்லும் மரபொன்றை உருவாக்குவோம். அதுதான் நாட்டுக்கும் நமக்கும் ஜனநாயகத்துக்கும் எதிர்காலத்துக்கும் செய்கின்ற மாபெரும் கடமையாகும்.

Read more...

அவசரகால நிலையும் பிரெஞ்சு ஜனநாயகத்தின் உருக்குலைவும். Alex Lantier

பாரிஸில் வெள்ளிக்கிழமையன்று நடந்த பயங்கரவாத தாக்குதல்களுக்கான பதிலிறுப்பாய் ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்டின் அரசாங்கம் எடுத்து வரும் நடவடிக்கைகள் ஜனநாயக உரிமைகள் மீதான ஒரு முன்கண்டிராத தாக்குதலை உள்ளடக்கியதாக இருக்கிறது.

சோசலிஸ்ட் கட்சி (PS) அரசாங்கம் அவசரகால நெருக்கடிநிலையை அறிவித்துள்ளதோடு நாடு முழுவதிலும் வழமையான போலிஸ், ஆயுதப்படையினர், துணைஇராணுவ கலகத்தடுப்பு போலிசார் மற்றும் இராணுவப் படைகளோடு, மேலும் 100,000க்கும் அதிகமான பாதுகாப்புப் பணியாட்களை அணிதிரட்டியுள்ளது. எந்த ஒரு பெரிய நகரிலும் சீருடையில்லாமலோ அல்லது கறுப்பு உடையிலோ தானியங்கி துப்பாக்கிகளை சுமந்தபடி நடந்து செல்கின்ற மனிதர்கள் கண்ணில் தட்டுப்படாமல் இருப்பது சாத்தியமில்லை. இந்த துணைஇராணுவப் படைகள், அரசியல் மற்றும் ஊடக ஸ்தாபகங்களிடம் இருந்தான எந்த எதிர்ப்பும் இல்லாமல், எந்த வீட்டையும் சோதனையிடுவதற்கும் அச்சுறுத்தலாக அறிவிக்கப்பட்ட எவரொருவரையும் கைதுசெய்வதற்கு அல்லது கொல்வதற்கும் அதிகாரமளிக்கப்பட்டுள்ளன.

காலவரையற்று நீடிக்கத்தக்க அவசரகால நெருக்கடிநிலை ஆட்சி உத்தரவை பிறப்பிக்க ஜனாதிபதியை அனுமதிக்கும் வகையிலும், அத்துடன் இராணுவம் மற்றும் போலிசுக்கு அளிக்கப்பட்டிருக்கும் அதிகாரங்களை மிகப்பெரும் அளவில் விரிவுபடுத்துவதற்கு ஏதுவாகவும் இப்போது ஹாலண்ட் பிரெஞ்சு அரசியல் யாப்பில் திருத்தங்களை முன்மொழிந்து வருகிறார். இணையத்தில் வெளியாகியிருக்கும் இந்த முன்மொழிவுகள் பிரான்சை ஒரு ஜனாதிபதி சர்வாதிகாரமாக மாற்றுவதற்கு தேவையான சட்ட அடிப்படையை வழங்குவதாய் இருக்கிறது.

இப்போதிருக்கும் 1955 சட்டம், அவசரகால நெருக்கடிநிலை காலத்தின்போது ஜனாதிபதிக்கும் பாதுகாப்புப் படைகளுக்கும் மிகவிரிவான அதிகாரங்களை அளிக்கிறது. பிடியாணைகள் இல்லாமல் தேடுதல் வேட்டை நடத்த முடியும் பறிமுதல் செய்ய முடியும், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்க முடியும் பொதுவெளியில் மக்கள் கூடுவதைத் தடைசெய்ய முடியும், “பாதுகாப்புக்கும் பொது ஒழுங்குக்கும் அச்சுறுத்தலாய் நிரூபணமாகும் எந்த ஒரு நடவடிக்கையில்” ஈடுபடுவோரையும் வீட்டுக்காவலில் வைக்க உத்தரவிட முடியும், அத்துடன் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருப்போருடன் தொடர்புடைய, பொது ஒழுங்கின் சீர்குலைவில் “பங்கேற்கின்ற, அல்லது வழிவகுக்கின்ற அல்லது தூண்டி விடுகின்ற” எந்த அமைப்பையும் கலைக்க முடியும்.

சோசலிஸ்ட் கட்சியின் அரசியல் யாப்பு திருத்தத்தால் அறிமுகம் செய்யப்படும் மாற்றங்கள் இந்த சட்டத்தை இன்னும் அதிக ஆபத்தானதாய் ஆக்குகின்றன. ISIS போன்ற எந்த பயங்கரவாதக் குழுவிடம் இருந்துமான ஒரு அச்சுறுத்தலுக்கு பிரான்ஸ் முகம்கொடுத்திருக்கின்ற வரைக்கும் - அதாவது முடிவேயில்லாத ஒரு காலத்திற்கு - அதனைப் புதுப்பிக்க, தான் நோக்கம் கொண்டுள்ளதாக ஜனாதிபதி ஹாலண்ட் அறிவித்திருக்கிறார்.

எப்படிப் பார்த்தாலும், சிரியாவில் ஆட்சியை மாற்றுவதற்கான போரை நடத்துவதற்கான பினாமிப் படைகளாக இஸ்லாமிய போராளிக் குழுக்களுக்கு ஆதரவளிக்கும் நேட்டோ சக்திகளது சொந்தக் கொள்கையில் இருந்தே எழுந்திருந்ததான ISISக்கு எதிராகப் போராடுவதற்காய் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்பது இந்த சட்டத்திருத்தத்தை ஆய்வு செய்தால் தெளிவாகிறது. ISIS முன்வைத்த அச்சுறுத்தலைக் கொண்டு பகுத்தறிவான முறையில் விளக்கப்பட முடியாத சர்வாதிகார நடவடிக்கைகளை அமலாக்குவதற்கான போலிச்சாக்காக பாரிஸில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல்கள் பயன்படுத்தப்படுகின்றன.

ISISக்கு எதிராக போராடுகிறோம் என்ற போர்வையில், பிரெஞ்சு அரசானது “பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்கு”க்கு எதிரான ஒரு அச்சுறுத்தலாக அது கருதும் எவரொருவருக்கும் எதிரான முற்றுமுதலான அதிகாரங்களை தனக்கு கொடுத்துக் கொண்டிருக்கிறது. இந்த தெளிவற்ற, பொத்தாம் பொதுவான வகைப்பாடானது, சென்ற ஆண்டு காஸாவில் இஸ்ரேலிய அரசின் போருக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களை தடைசெய்வதற்கு சோசலிஸ்ட் கட்சி முடிவெடுத்த சமயத்தில் கண்டதைப் போல, அரசியல் யாப்புரீதியாக பாதுகாக்கப்பட்டிருக்கும் வேலைநிறுத்த மற்றும் ஆர்ப்பாட்ட உரிமைக்கு எதிராகவே வெகுகாலமாய் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது.

சோசலிஸ்ட் கட்சி ஆவணங்களால் அறிமுகப்படுத்தப்படும் சட்டரீதியான மாற்றங்கள், எதிர்ப்புணர்வின் எந்த வெளிப்பாட்டையும் கைது செய்யப்படுவதற்கான சாத்திய முகாந்திரங்களாக ஆக்குகிறது. “பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்கிற்கு ஆபத்தாக நிரூபணமாகும் நடவடிக்கைகளை” கொண்ட மனிதர்களை கைதுசெய்ய போலிசை அனுமதிப்பதற்கு பதிலாக, திருத்தப்படுகின்ற சட்டமானது “ஒருவரது நடத்தை பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்கிற்கான ஒரு அச்சுறுத்தலை உள்ளடக்கியதாக இருக்கிறது என்று நம்புவதற்கு காரணத்தை அளிக்கின்றபட்சத்தில்” அவரைக் கைதுசெய்வதற்கு அனுமதிக்கிறது. “தமது நடத்தையாலும், நட்புகளாலும், பேச்சுகளாலும் அல்லது திட்டங்களாலும் போலிஸ் அல்லது உளவுத் துறையினரின் கவனத்தை ஈர்க்கக் கூடியவர்களை” இலக்கில் வைத்துக் கொள்வதற்கு போலிசை இது அனுமதிக்கிறது என்று சோசலிஸ்ட் கட்சி விளக்குகிறது.

இந்த யோசனைகளின் தாக்கங்கள் மிகத் தீவிரமானவையாகும். ஒருவர் கூறிய ஒரு விடயத்தையோ அல்லது அவர் சமூக ஊடகங்களில் பதிவிட்ட ஒன்றையோ அல்லது அவர் தொடர்பு வைத்திருக்கும் ஒருவரையோ காரணமாகக் காட்டி, இந்த மனிதர் வருங்காலத்தில் பொது ஒழுங்கிற்கு சீர்குலைவை ஏற்படுத்துவார் என்று நம்புவதாக போலிஸ் திட்டவட்டமாகக் கூறினாலே, அவரைக் கைதுசெய்வதற்கும் சிறைப்படுத்துவதற்கும் அதற்கு மேல் ஒன்றும் செய்யத் தேவையிருக்காது.

ஒரு ஊதிய வெட்டு அல்லது ஆலைமூடலுக்கு எதிராகவோ, போருக்கு எதிரான ஒரு ஆர்ப்பாட்டத்திற்காகவோ, அல்லது வேறு எந்த சட்டபூர்வமான நடவடிக்கைகளுக்காகவும் வேலைநிறுத்த நடவடிக்கையில் இறங்க விடுக்கப்படும் அழைப்புகளுக்கு அனுதாபமாக கூறப்படும் ஒரு வாசகமும் கூட கைது அல்லது வீட்டுக் காவலுக்கான முகாந்திரமாக ஆகிவிட முடியும்.

பிரெஞ்சு காலனித்துவ ஆட்சிக்கு எதிரான 1954-1962 போரில் சுதந்திரத்திற்கான அல்ஜீரிய மக்களின் போராட்டத்தை நசுக்குவதற்கு மேற்கொள்ளப்பட்ட ஒரு தோல்வியடைந்த முயற்சியின் போது பாரிய சித்திரவதை மற்றும் ஒடுக்குமுறையை நடத்துவதற்கு பிரான்சுக்கு ஒரு சட்டபூர்வ கட்டமைப்பை உருவாக்கித் தருவதற்காக 1955 இல் வடிவமைக்கப்பட்ட சட்டத்தைத் தான் சோசலிஸ்ட் கட்சி இப்போது விரிவாக்குவதற்கு ஆலோசிக்கிறது என்பதை நினைவுகூர்வது அவசியமானதாகும். அந்த மூர்க்கத்தனமான போர் 250,000 முதல் 400,000 வரையான அல்ஜீரியர்களின் உயிரைக் குடித்தது. 1968 மே-ஜூன் காலத்து பொதுவேலைநிறுத்தத்தில் வெடித்தெழுந்த பிரான்சுக்குள்ளான ஆழமான சமூகப் பதட்டங்களுக்கு கட்டியம் கூறுவதாகவும் அவற்றுக்கு எண்ணெய் வார்ப்பதாகவும் இது இருந்தது.

பிரான்சில் ஜனநாயக உரிமைகளை இல்லாதுசெய்வதற்கு எடுக்கப்பட்டு வரும் இப்போதைய நடவடிக்கைகள் வர்க்க ஆட்சியின் இதேபோன்றதொரு நெருக்கடியாலேயே உந்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. முதலாவதாய், சென்ற ஆண்டின் காஸா போர் ஆர்ப்பாட்டங்களைத் தடை செய்வதற்கு எடுக்கப்பட்ட இறுதியில் தோல்விகண்ட முயற்சியானது எடுத்துக்காட்டியதைப் போல, பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தின் இராணுவக் கொள்கைகளுக்கு எதிரான அத்தனை எதிர்ப்புகளையும் ஒடுக்குவதற்கு சோசலிஸ்ட் கட்சி அரசாங்கம் மிகத் தீவிரமாய் இருக்கிறது. பிரெஞ்சு ஆளும் வர்க்கம் உலக அரங்கில் தனது நலன்களை நிலைநாட்டுவதற்கு மேற்கொள்ளும் முயற்சிகளின் ஒரு பாகமான சிரியாவிலான பிரான்சின் குண்டுவீச்சுப் பிரச்சாரத்தை, பாரிஸ் தாக்குதல்களுக்குப் பின்னர், துரிதமாக விரிவுபடுத்துவதற்கு ஹாலண்ட் நடவடிக்கை எடுத்திருக்கிறார்.

இரண்டாவதாய், சமகால முதலாளித்துவ சமூகத்தின் தீவிரமான மற்றும் நாளுக்குநாள் பெருகிச் செல்கின்ற கட்டுப்படுத்தமுடியாத சமூகப் பதட்டங்களை முதலாளித்துவ ஜனநாயகத்தினால் இனியும் கையாளுவதற்கோ நீதி வழங்குவதற்கோ முடியாதிருக்கிறது. பிரான்ஸ் உள்ளிட முன்னேறிய முதலாளித்துவ நாடுகள் அத்தனையிலுமே, அரசைக் கட்டுப்பாட்டில் கொண்டிருக்கும் ஒரு மிகச் சிறு எண்ணிக்கையிலான பெரும்-செல்வந்த உயரடுக்கானது உழைக்கும் பரந்த மக்களிடம் அதிகரித்துச் செல்லும் அதிருப்தியை வெறுப்புடனும் அச்சத்துடனும் பார்க்கிறது.

நிதிப் பிரபுத்துவத்தின் மேலாதிக்கத்திற்கு ஹாலண்டின் அரசாங்கம் மகுடம் சூட்டுகிறது. “சிக்கன நடவடிக்கை என்பது நமது தலைவிதியாக இருக்கவில்லை” என்ற தேர்தல் வாக்குறுதிகளின் மீது தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த ஹாலண்ட், வெகுவிரைவிலேயே, அதிகரித்துச் செல்லும் வேலைவாய்ப்பின்மை மற்றும் “பூச்சிய வளர்ச்சி” பொருளாதாரத்திற்குத் தலைமைகொடுக்கும் சிக்கனநடவடிக்கை-ஆதரவு அரசியல்வாதியாய் நிரூபணமானார்.

பிற்போக்குத்தனமான உள்நாட்டுக் கொள்கைகளுக்கு எழுகின்ற சமூக எதிர்ப்பை இராணுவவாதம் மற்றும் போரை அடிப்படையாகக் கொண்ட ஒரு வெளியுறவுக் கொள்கையின் மூலமாக திசைதிருப்பி விடுகின்ற ஒரு மூலோபாயத்தை நோக்கி சோசலிஸ்ட் கட்சி திரும்பியது. ஹாலண்ட் 2013 இல் மாலியில் ஒரு போரைத் தொடக்கிய சமயத்தில், பிரிட்டிஷ் பிரதமர் மார்கரெட் தாட்சரது “1983 இல் மீண்டும் அவர் தேர்ந்தெடுக்கப்படுவதை உறுதிசெய்த ஒரு இராணுவ சாகசமான” ஃபால்க்லாண்ட் தீவுகள் போரின் தங்களது பதிப்பாகவே சோசலிஸ்ட் கட்சி நம்பியது என்று அதிகாரி ஒருவர் Le Point பத்திரிகையிடம் கூறினார். ஆயினும் பிரான்சின் பழைய காலனித்துவ சாம்ராஜ்யமெங்குமான போர்கள், பிரான்சுக்குள்ளாக சமூகப் பதட்டங்கள் பெருகுவதற்கே பங்களித்திருக்கின்றன.

பிரான்சில் காணும் அரசியல் இயக்கவியல் ஒவ்வொரு முக்கிய முதலாளித்துவ நாட்டிலும் பிரதிபலிக்கின்ற ஒன்றாகவே இருக்கிறது. 2001 இல் “பயங்கரவாதத்தின் மீதான போர்” தொடங்கியது முதலாகவே, அமெரிக்காவின் தலைமையில், உலகெங்குமான அரசாங்கங்கள், அடிப்படை ஜனநாயக உரிமைகளை தேய்வடையச் செய்வதற்கும் அகற்றுவதற்குமே முனைந்து வந்திருக்கின்றன. கைதிகளை சித்திரவதைக்காக “அசாதாரணவகையில் ஒப்படைப்பது”, முகாந்திரமற்ற பாரிய ஒட்டுக்கேட்பு மற்றும் நீதிமன்ற எல்லைக்குள் வராத ஆளில்லாவிமானக் கொலைகள் ஆகியவற்றில் பங்குபற்றி வந்திருக்கின்றன. பெரும் ஆயுதங்கள் தாங்கிய இராணுவப் பிரிவுகளை உள்நாட்டில் பயன்படுத்துவது இப்போது சாதாரணமாகி விட்டிருக்கிறது.

2011 இல் லண்டனில் இளைஞர் கலகங்கள் மீதான போலிஸ் ஒடுக்குமுறை தொடங்கி, சென்ற ஆண்டில் மிசௌரியின் ஃபெர்குசனில் மைக்கேல் பிரவுன் போலிசாரால் கொல்லப்பட்டதற்கு எதிரான ஆர்ப்பாட்டங்களின் மீது பலமான ஆயுதப் பிரயோகம் செய்து ஒடுக்கப்பட்டது வரை, இந்த நடவடிக்கைகள் முன்னெப்போதை விடவும் தெளிவான வகையில் வர்க்கப் போராட்டத்தை ஒடுக்குவதை நோக்கி செலுத்தப்படுகின்றன.

அரசியல் அல்லது பெருநிறுவன ஸ்தாபகங்களுக்குள் ஜனநாயக உரிமைகளின் பாதுகாப்புக்கென ஏறக்குறைய எந்தவொரு தனியிடமும் இருக்கவில்லை. ஜனநாயகக் கோட்பாடுகளுக்கென ஒரு ஆழமான உறுதிப்பாட்டை பாதுகாத்து வருகின்ற தொழிலாள வர்க்கத்தின் தோள்களிலேயே இந்தப் பணி விழுகிறது. ஆயினும், அரசியல் மெத்தனம் காட்டுவதற்கு எந்த இடமும் இல்லை. ஆளும் வர்க்கமானது உள்நாட்டு நெருக்கடிகளுக்கு தன்னிடம் தீர்வில்லாத நிலையில், அதனைக் கையாளுவதற்கு சர்வாதிகார நடவடிக்கைகளைக் கொண்டு வெகுதூரம் சென்று கொண்டிருக்கிறது.

ஜனநாயக உரிமைகளின் பாதுகாப்பும் போலிஸ்-அரசு ஆட்சி வடிவங்களுக்கு எதிரான எதிர்ப்பும் ஏகாதிபத்தியப் போர், சமூக ஏற்றத்தாழ்வு மற்றும் முதலாளித்துவ ஆட்சிமுறையில் இருக்கும் அவற்றின் மூலங்கள் ஆகியவற்றுக்கு எதிரானதொரு போராட்டத்தின் அடிப்படையில் தொழிலாள வர்க்கம் அரசியல்ரீதியாக சுயாதீனமாய் அணிதிரட்டப்படுவதில் வேரூன்றியதாக இருப்பது கட்டாயமாகும்.

Read more...

Friday, November 20, 2015

வவுனியாவில் மாவீரர் தினத்திற்கு அழைப்பு விடுத்துள்ள இலங்கை புலனாய்வுத்துறையினர்.

புலிகளின் தலைவர் பிரபாகரனது பிறந்த நாள் மாவீரர் தினம் எனப் பெயரிடப்பட்டு பிரமாண்டமாக வன்னி மற்றும் புலம்பெயர்ந்த நாடுகளில் கொண்டாடப்பட்டு வந்தமை யாவரும் அறிந்ததே. புலிகள் 2009 மே மாதம் வன்னியில் மண்கவ்வியதன் பின்னர் பிரபாகரனது பிறந்தநளையல்ல இறந்தநாளைக்கூட தமிழ் மக்கள் நினைத்துப்பார்பதில்லை.

ஆனாலும் ஒரு சில விஷமிகள் தங்களது சுயலாபங்களுக்காக தொடர்ந்து சில செயற்கரிய காரியங்களை செய்தே வருகின்றனர். அவர்களை இனம்காண்பதற்காக இலங்கை புலனாய்வுத்துறை தனது கைங்கரியங்களை செய்தே வருகின்றது.

அந்தவகையில் மாவீரர் தினத்திற்கு அழைப்பு விடுப்பதாக சுவரொட்டிகளை புலனாய்வுத்துறையினரே ஒட்டியுள்ளதாக அறியமுடிகின்றது.

Read more...

பாரிஸில் கொல்லப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்திய பயங்கரவாதிகள்.

இஸ்லாமிய பயங்கரவாதிகளால் அண்மையில் பாரிஸில் கோழைத்தனமாக கொலைசெய்யப்பட்ட 129 பேருக்கும் அங்கு பல்வேறு தரப்பினர் அஞ்சலி செலுத்தி வருகின்ற நிலையில் இவர்களுக்கு புலிப்பயங்கரவாதிகளும் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

ஐரோப்பாவில் பயங்கரவாதிகளாக தடை செய்யப்பட்டுள்ள புலிக்கொடியுடன் சென்று இறந்தவர்களை அவமதித்துள்ளமை பலரையும் ஆத்திரத்திலாழ்தியுள்ளது.

கடந்த சில வருடங்களுக்கு முன்னர் புலிப் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புகளை பேணுகின்றார்கள் என்ற குற்றச்சாட்டில் பிராண்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் காரியாலம் பிராண்ஸ் பொலிஸாரால் முற்றுகையிடப்பட்டு அவ்வமைப்பின் தலைவரை கைது செய்து சிறையிலடைத்திருந்தனர். இந்நிலையில் இவ்வமைப்பினர் புலிக்கொடியினை சுமந்து சென்று இறந்தவர்களுக்கு அஞ்சலி என்ற பெயரில் அவமதித்துள்ளனர்.

இலங்கையில் பயங்கரவாத செயற்பாடுகளுக்கு உதவியவர்கள் என்ற அடிப்படையில் ஏனைய பயங்கரவாத அமைப்புக்களுடனும் தொடர்புகளை ஏற்படுத்தி கொள்ளலாம் என தீவிரமாக கண்காணிக்கப்பட்டுவரும் இவர்கள் தங்களை மனிதநேயர்களாக காண்பித்துக்கொள்வதற்காக இவ்வாறு பாசாங்கு செய்துள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.Read more...

2016 க்கான வரவுசெலவுத்திட்டம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது! முக்கிய அம்சங்கள்

தேசிய அர­சாங்­கத்தின் 2016 ஆம் நிதி ஆண்­டுக்­கான முதலாவது வரவு செலவுத் திட்டம் நாடாளுமன்றத்தில் இன்று நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் சமர்ப்பிக்கப்பட்டது.

இந்தத் தருணத்தில் முன்னாள் ஜனாதிபதியும், தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான மகிந்த ராஜபக்ஷ சபையில் பிரசன்னமாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்து உரையாற்றிவரும் நிதியமைச்சரின் முக்கிய கருத்துக்களை இங்கே சுருக்கமாக காணலாம்.

தேசிய அர­சாங்­கத்தின் 2016 ஆம் நிதி ஆண்­டுக்­கான முதலாவது வரவு செலவுத் திட்டத்தை சபையில் முன்வைப்பதில் பெரும் மகிழ்ச்சியடைகின்றேன்.

- 2015 ஆம் ஆண்டு 8 ஆம் திகதி ஏற்பட்ட ஆட்சி மாற்றம் இந்நாட்டின் திருப்பு முனையாக அமைந்தது.

- ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து உலக நாடுகள் பலவற்றிடம் இருந்து நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

- பத்து இலட்சம் வேலை வாய்ப்பு வழங்கப்படும்.

- எதிர்காலத்தில் பலமான பொருளாதாரம் அவசியமாகும்.

- 2004 தொடக்கம் 2014 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் நாட்டு மக்களின் முக்கிய தேவைகள் பூர்த்தி செய்யப்படவில்லை.

- கடந்த கால ஆட்சியில் நாட்டின் கடன் மாத்திரமே உயர்ந்துகொண்டிருந்தது.

- ராஜபக்ஷ யுகம் நாட்டில் மீண்டும் வரக் கூடாது.

- கடந்த ஆட்சியில் வீதி அபிவிருத்திக்காக உலக நாடுகளிடம் கூடுதலாக கடன் பெறப்பட்டுள்ளது.

- 2014 ஆம் ஆண்டில் தேசிய உற்பத்தி நூற்றுக்கு 10 வீதமாக குறைந்துள்ளது.

- எதிர்கால வரவு செலவுத் திட்டத்தை தற்போது முன்வைக்கின்றேன்.

- கடந்த பத்து மாதங்களில் நாட்டில் இருந்த பொருளாதார பிரச்சினையை கண்டுப்பிடித்துள்ளோம்.

- மஹிந்த ஆட்சியில் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டது. இதன் மூலம் நாம் நல்ல பாடத்தை கற்று கொண்டோம்.

- புதிதாக அரசாங்க உத்தியோகத்தில் இணைந்து கொள்பவர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டம்.

- பின்தங்கிய பாடசாலை மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

- டெங்கு, சிறுநீரக நோய் மற்றும் புற்றுநோய் ஆகியவற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

- வீதி புனரமைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.

- சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் எரிபொருள் பாவனைக்கு நடவடிக்கை.

- கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் ரயில் மற்றும் வாகன போக்குவரத்தில் எரிபொருளுக்கு பதிலாக சூரிய சக்தியை பயன்படுத்த திட்டம்.

- எமது வாக்குறுதிகள் கட்டாயம் நிறைவேற்றப்படும்.

- சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகர்களுக்கு கடன் உதவி- 500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.

- வன்னி, அம்பாறை பகுதிகளில் சிறிய வணிக நிலையங்களை அமைக்க திட்டம்.

- தரமான விதையினங்களை உற்பத்தி செய்ய 1000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.

- இறக்குமதி செய்யப்படும் அரிசி வகைகள் நம் நாட்டில் உற்பத்தி செய்ய நடவடிக்கை.

- அதிக இரசாயன உரப்பாவனைகளால் சிறுநீரக நோய் ஏற்படுகின்றது. எனவே இரசாயன உரப்பாவனைகட்டுப்படுத்தப்படும்.

- பழ வகைகள் மற்றும் மரக்கறி விவசாயம் செய்து ஏற்றுமதி செய்யும் தொழிலாளர்கள் வங்கியில் பெறும் கடன் உதவிக்கு வட்டி வீதம் குறைக்கப்படும்.

- பழங்கள் மற்றும் மரக்கறி உற்பத்திக்கு 2000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

- கீரி சம்பா 50 ரூபா, சம்பா 41 ரூபா, நாடு 38 ரூபா ஆகியன நிர்ணய விலை அடிப்படையில் அரசினால் விவசாயிகளிடமிருந்து கொள்வனவு செய்யப்படும்.

- மீனவர்களுக்கு ஒரு மில்லியன் ரூபா காப்புறுதி.

- 400 கிராம் பால் மா பக்கற்றின் விலை 325 ரூபாவிலிருந்து 295 ரூபாவாக குறைப்பு.

- புதிய தொழினுட்பத்தை கொண்ட மீனவ துறைமுகத்தை அமைப்பதற்கு 750 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.

- தேயிலை உற்பத்தி துறை எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு விசேட குழு.

- தேங்காய் உற்பத்திக்கு 250 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.

- தேயிலை ஏற்றுமதியின் போது 'சிலோன் டீ" என கட்டாயம் பெயரிட வேண்டும்.

- பாக்கு உற்பத்தியை ஊக்குவிக்க திட்டம்.

- “ பொக்குரு கம்மான ” திட்டத்தின் மூலம் கிராமிய மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தல் : 21 ஆயிரம் மில்லியன் ரூபா ஒதுக்கீடு.

- வவுனியாவில் பொருளாதார வலயம் அமைக்கப்படும்.

- அலங்காரமீன் கைத்தொழிலில் ஈடுப்படுவர்களுக்கு கடன் உதவி.

- சிறுவர்களின் பாதுகாப்பு மற்றும் போதைபொருள் ஒழிப்புக்காக 2000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.

- தங்கம் மற்றும் மாணிக்க கற்கல் ஏற்றுமதி செய்ய விசேட பத்திரம்.

- காட்டு யானைகளின் அச்சுறுத்தலை தடுக்க 4000 மில்லின் ரூபா ஒதுக்கீடு.

- பிரதேச சபை மற்றும் மாகாண சபைகள் இலத்திரனியல் திட்டம் மூலம் இயங்க திட்டம்.

- அடுத்த வருடம் ஏப்ரல் முதல் இலங்கையில் வருடாந்தம் இரத்தினக் கல் ஏலம்.

- கிராமசேவக பிரிவுகளை அபிவிருத்தி செய்ய 1500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.

- 2016 ஜனவரி முதலாம் திகதி முதல் இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை அறிமுகம்.

- இந்தியாவில் காணப்படும் 'ஆதார்" திட்டம் போல் இலங்கையிலும் அமுல்படுத்தப்படும்.

- 500 வெளிநாட்டு தொழில் வாய்ப்புக்களை உருவாக்கும் முதலீட்டாளர்களுக்கு 50 வீத வரி.

- புதிய முதலீட்டு சட்டம் அறிமுகம்.

- எந்தவொரு வங்கி மூலமும் நாட்டில் முதலீடு செய்ய வெளிநாட்டவர்களுக்கு வாய்ப்பு.

- இலங்கை பணம் வெளிநாடுகளில் உள்ளது. மீண்டும் நாட்டுக்குள் கொண்டு வரப்படும்.

- வெளிநாட்டு முதலீட்டாளர்கள் 15 நாட்களில் அனுமதியைப் பெற்றுக்கொள்ள முடியும்.

- சொகுசு வரி முற்றாக நீக்கப்படும்.

- குறைந்த வருமானம் பெறுபவர்கள் எதிர்வரும் 5 வருடங்களுக்குள் ஒரு இலட்சம் வீடுகள் அமைத்து குடியேற்றப்படுவர்.

- அரச பாவனையற்ற காணிகளில் வீடுகள் கட்ட அனுமதி வழங்கப்படும்.

- ஏற்றுமதியை மேம்படுத்த அமைச்சர்கள் அடங்கிய குழு.

- ஒரு தேர்தல் தொகுதியில் 1000 வீடுகளை அமைக்க 400 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.

- வெளிநாட்டு கட்டிட நிபுணர்கள் உள்நாட்டு கட்டிட நிபுணர்களுடன் இணைந்து செயற்படலாம்.

- தொடர் மாடி வீட்டு திட்டத்துக்கு 100க்கு 40 வீதம் கடன் உதவி.

- டயில்ஸ், கொங்ரீட் இறக்குமதி வரி நீக்கம்.

- வீடுகள் அமைப்பதற்கு 7 ஆயிரம் இளைஞர்களுக்கு பயிற்சி வழங்க திட்டம்.

- கட்டத்துறை பயிற்சி பெறுபவர்களுக்கு 10 ஆயிரம் ரூபா கொடுப்பனவு.

- சார்க் நாடுகள் இலங்கையில் முதலீடுகளை செய்து நாட்டை வணிக மையமாக மாற்ற அழைப்பு.

- கொழும்பு சர்வதேச நிதி கேந்திர நிலையத்தை டீ.ஆர் விஜேயவர்தன மாவத்தையில் அமைக்க திட்டம்.

- திவிநெகும நிதியத்தை தேசிய சேமிப்பு வங்கியில் சேர்த்தல்.

- உள்நாட்டு வங்கி கிளைகள் வெளிநாட்டில் திறக்கும் போது வங்கிகளுக்கு நிவாரணம் வழங்கப்படும்.

- புதிய வாகன பதிவு கட்டணங்கள் :முச்சக்கர வண்டி, மோட்டார் சைக்கிளுக்கு 2000 ரூபா, காருக்கு 15000 ரூபா.

- பாடசாலை மாணவர்களுக்கு 250 ரூபாவில் வங்கி கணக்குகளை ஆரம்பிக்கலாம்.

- ஆடை, பாதணி மற்றும் மின்சார உபகரணங்கள் உட்பட 15 அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைப்பு.

- தனியார் ஊழியர்களின் வேலை நாட்களை ஐந்து வேலைநாட்களாக குறைக்க தீர்மானம்.

- தனியார் ஊழியர்களுக்கு 2500 ரூபா அதிகரிக்க பரிந்துரை.

- தொழிலாளர்களின் சம்பளம் தொழில் வழங்குனர்களினால் ஆரம்பிக்கப்பட்ட வங்கி கணக்குகள் மூலம் அனுப்பட வேண்டும்.

- ஆசிரியர்களுக்கு விடுதி செலவுக்கு 2 ஆயிரம் ரூபா.

- மின்சாரம் இல்லாத பின்தங்கிய பாடசாலைகளுக்கு சூரிய சக்கதியிலான மின்சாரம்- 2000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.

- விஞ்ஞான, கணித பீடங்கள் இல்லாத பாடசாலைகளில் விஞ்ஞான கணித பீடங்களை அமைக்க 450 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.

- அனைத்து பாடசாலைகளுக்கும் சிறந்த மலசலக்கூட வசதி

- ஒரு வகுப்பில் அதி கூடுதலாக 35 மாணவர்கள் மாத்திரமே இருக்கலாம்.

- உயர்தரப் பரீட்சைக்கு பின்னர் மாணவர்களுக்கு தொழில் பயிற்சி.

- தொழினுட்ப பாடத்தை பல்கலைக்கழகங்களில் கற்க 5 ஆயிரம் மாணவர்களுக்கு அனுமதி.

- கல்விக்கு 90 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.

- ஆயுர்வேத கல்வி உட்பட மேலும் புதிய கற்கை நெறிகளை ஆரம்பிக்க திட்டம்.

- மாணவர்களின் சீருடைக்கு வர்த்தக பெறுமதியுடைய வவுச்சர்கள்.

- புதிதாக இணையும் ஆசிரியர்களுக்கு முதல் 5 வருடங்களுக்குள் 2 வருட கட்டாயப் பயிற்சி.

- 2018 இல் அனைத்து பல்கலைக்கழக மாணவர்களுக்கும் விடுதிகள் வழங்கப்படும்.

- சிறப்பு கல்வித் திட்டங்களை ஆரம்பிக்க 3 ஆயிரம் மில்லியன் ரூபா ஒதுக்கீடு.

- மஹாபொல பல்கலைக்கழகம் மாலபே பகுதியில் அமைக்கப்படும்.

- பல்கலைக்கழக மாணவர்களுக்கு இலகு கொடுப்பனவு முறையில் மடிக் கணனி மற்றும் இலவச வைய் -பை முறை.

- சிறுநீரக நோயாளிகளுக்கு மின்னேரியாவில் வைத்தியசாலை அமைக்கப்படும்.

- குருநாகல், அநுராதபுரம் வைத்தியசாலைகளை புனரமைக்க 3 ஆயிரம் மில்லியன் ரூபா.

- பொலிஸ் பயிற்சி நிலையத்துக்கு 100 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.

- நல்லூர் மற்றும் கண்டியில் புற்றுநோய் வைத்தியசாலைகள் அமைக்கப்படும்.

- கேஸ் விலை 150 ரூபாவாலும் மண்ணெண்ணெய் 10 ரூபாவாலும் குறைப்பு.

- நாட்டில் இலவச வைய்- பை வலயங்களை அமைக்க 3000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.

- பொலிஸாரின் சம்பள பிரச்சினைக்கு 2 வருடத்தில் தீர்வு.

- பொலிஸ் நிலையங்களின் எண்ணிக்கை 600 ஆக அதிகரிப்பு.

- திகன, பதுளையில் விமான நிலையங்களை அமைக்க திட்டம்.

- மத்தல விமான நிலையத்தில் விமான தொழில்சார் பயிற்சி நிலையம் ஆரம்பிக்க திட்டம்.

- நெடுஞ்சாலைகளை பராமரிப்பதற்கு விசேட குழு நியமனம்.

- ஸ்ரீ லங்கா எயார் லைன் சேவையில் அரசாங்க இடையூறுகள் இருக்காது.

- தனியார் பஸ்கள் , முச்சக்கர வண்டிகள் மற்றும் பாடசாலை சேவையில் ஈடுபடும் வாகனங்களுக்கு புதிய சட்ட ஒழுங்கு.

- ரயில் பாதைகளை புனரமைக்க 1500 மில்லியன் ரூபா.

- வெளிநாட்டில் தொழில் புரிபவர்களுக்கு நிர்ணய சம்பளம்.

- 11 அத்தியாவசிய பொருட்களின் விலை 100க்கு 20 வீதமாக குறைக்கப்படும்.

- பெரிய வெங்காயம் அதி கூடிய சில்லறை விலை 85- 95 ரூபா.

- 425 கிராம் ரின் மீன் 125 ரூபாவால் குறைப்பு.

- சிறுவர்களுக்கான பால் மா 100 ரூபாவால் குறைப்பு .

- நெத்தலி 418 ரூபாவாக குறைப்பு.

- பருப்பு 169 ரூபாவாக குறைப்பு.

- கட்டா கருவாடு 120 ரூபாவால் குறைப்பு.

- கடலை கிலோ 169 ரூபாவாக குறைப்பு.

- கெசினோ, புகையிலை ஆகியவற்றுக்கு 25 வீதமாக வரி அதிகரிப்பு.

- வரி விலக்குகளை மறுபரிசீலனை செய்ய திட்டம்.

Read more...

பாரிஸ் தாக்குதல் நடத்த உதவியவன் தலைக்கு 50 லட்சம் டாலர் சன்மானம்: அமெரிக்கா அறிவிப்பு

பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸ் நகரில் தொடர் தாக்குதலின் மூலம் 129 பேரை கொன்றுகுவித்த ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு உதவிசெய்த தீவிரவாதி அபு முகமது அல்-ஷிமாலி என்பவனின் தலைக்கு 5 மில்லியன் டாலர்கள் சன்மானம் வழங்கப்படும் என அமெரிக்கா அறிவித்துள்ளது.

பாரிஸில் தாக்குதல் நடத்தியவர்களில் 6 பேர் சிரியா சென்று பயிற்சி பெறுவதற்கு அனைத்து ஏற்பாடுகளையும் செய்தவன் தாரத் முகமது அல்-ஜார்பா என்று அமெரிக்கா தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இவனுக்கு தாரத் முகமது அல்-ஜார்பா என்று மற்றொரு பெயரும் உள்ளதாக தெரியவந்துள்ளது. பாரிஸில் தாக்குதல் நடத்திய 7 தீவிரவாதிகளில் 6 பேர் ஈராக்கில் இருந்துவந்தவர்கள் என்றும் மற்றவர்கள் மத்திய தரைக்கடலின் கிழக்கு பகுதியில் உள்ள தீவுகளை சேர்ந்தவர்கள் என்றும் விசாரணையில் தெரியவந்து உள்ளது. இவர்கள் சிரியாவில் உள்ள பயிற்சி முகாமில் பயிற்சி பெற்று உள்ளனர் என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது.

தீவிரவாதிகளில் மூன்றுபேர், அகதிகளோடு ஐரோப்பிய நாடுகளுக்குள் நுழைந்துவிட்டனர் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. சிரியாவிற்குள், துருக்கி எல்லை வழியாக ஜிகாதிகள் நுழைவதற்கும், சிரியாவில் பயிற்சி பெற்றுவிட்டு அவர்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு செல்வதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகின்றான் என்றும் விசாரணை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிரியா மற்றும் ஈராக்கிற்கு வெளியே ஐ.எஸ். தீவிரவாத செயல்பாட்டிற்கு இவன் பெரிதும் உறுதுணையாக இருப்பவன் என்று அமெரிக்கா கருதுகின்றது.

துருக்கி எல்லையை ஒட்டிய சிரியாவிற்கு ஜிகாதிகளை இவன் அழைத்து சென்றுள்ளான். இந்நிலையில், தீவிரவாதி அபு முகமது அல்-ஷிமாலியின் இருப்பிடம் பற்றி தெரிவித்தாலோ, அவனை உயிருடனோ, பிணமாகவோ ஒப்படைத்தாலோ ஐம்பது லட்சம் டாலர்கள் (இலங்கை மதிப்புக்கு சுமார் 712 கோடி ரூபாய்) சன்மானமாக வழங்கப்படும் என அமெரிக்க அரசு அறிவித்துள்ளது.

Read more...

ஐ.தே.க ஆட்சிக்காலத்தில் கறுப்பு வான்களிலா ஆட்களை கடத்தினார்கள்? கோட்டா கேள்வி

கடந்த காலங்களில் இடம்பெற்றதாக கூறப்படுகின்ற வெள்ளை வேன் ஆட்கடத்தில்கள் தொடர்பில் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச விடம் சிங்கள நாளிதழ் ஒன்று கேள்வி எழுப்பிபோது மேற்படி கேள்வியை தொடுத்துள்ளார்.

கேள்விக்கு பதிலளிக்கையில், குற்றவாளிகளே இவ்வான வான்களில் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர் எனக்குறிப்பிட்டுள்ள அவர் 88ம் 89ம் ஆண்டுகளில் கறுப்பு வான்களை பயன்படுத்தியா கடத்தினர் எனக் கேட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

விடுதலைப் புலிகள், குற்றவாளிகள் மற்றும் பாதாள உலக உறுப்பினர்களை பிடிக்க புலனாய்வுப் பிரிவினர் பயன்படுத்தப்பட்ட வானையே வெள்ளை வான் என்கின்றனர்.

இதற்கு முன்னர் புலனாய்வுப் பிரிவினர் இவ்வாறு செயற்படவில்லையா?. ஜே.வி.பியின் காலத்தில் கறுப்பு வான்களிலா இளைஞர், யுவதிகள் கடத்தப்பட்டனர்?. இதனை அனைவரும் மறந்து விட்டனர்.

எவர் மீதாவது சேறுபூச வேண்டுமாயின் எதனையாவது அடிப்படையாக கொண்டு கதைகளை புனைவார்கள். இது மிகவும் தவறானது. எமது சமூகம் அனைத்தும் சிறந்த நியாயமான சமூகமல்ல. சகல காலங்களிலும் தவறுகள் நடந்துள்ளன என்பதை சுட்டிக்காட்டியுள்ளார்.

முன்னாள் பாதுகாப்புச் செயலரின் இப்பதிலானது அவரது பொறுப்புக்கூறலை எடுத்தியப்புகின்றது. தவறுகளை புரிந்தோர் தாங்கள் எவ்வித தவறும் புரியாத பரிசுத்தவான்கள் என முழுப்பூசனிக்காயை சோற்றுக்குள் புதைக்கும் செயலை செய்கின்றபோது நடந்தவற்றை நடந்ததாகவும் அவற்றுக்கான தனது தரப்பு நியாயங்களை நிமிர்ந்து நின்று சொல்வதற்கு தயக்கம்காட்டாமையும் இங்கு புலனாகின்றது.

Read more...

Thursday, November 19, 2015

பாரிஸ் தாக்குதலின் பிரதான பயங்கரவாதி கொல்லப்பட்டான்.

கடந்த 13.11 அன்று பாரிஸில் இடம்பெற்ற 6 தாக்குதலில் சுமார் 129 பேர் கொல்லப்பட்டு 352 காயமடைந்திருந்தனர். இத்தாக்குதலை திட்டமிட்டு தலைமை தாங்கியவன் எனச் சந்தேகிக்கப்பட்ட பெல்ஜிய பிரஜாவுரிமையுடைய அப்தல்ஹமிட் அபவுட் என்பவன் கொல்லப்பட்டுள்ளதாக பாரிஸ் வழக்குதொடுனர்கள் அறிக்கை ஒன்றினூடாக தெரியப்படுத்தியுள்ளனர்.

பாரிஸில் மேற்படி தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட பிரதேசத்திற்கு மிகவும் அருகாமையாகவுள்ள, சன செருக்கடியானதும் மத்தியதர மற்றும் குடியேறிகள் வாழுகின்றதுமான பிரதேசமொன்றில் பயங்கரவாதிகள் ஒழிந்திருந்து அடுத்த தாக்குதலுக்கான திட்டத்தை வகுக்கின்றனர் என்பதை பிராண்ஸ் புலனாய்வுத்துறையினர் மோப்பம் பிடித்துள்ளனர்.

ஜீன் மைக்கல் என்ற அதிகாரியின் தலைமையில் விசேட பயிற்றப்பட்ட சுமார் நூறிற்கு மேற்பட்ட பொலிஸார் குறித்த குடியிருப்பை நேற்று 17.11.15 அதிகாலை சுமார் 4.16 மணியளவில் நெருங்கியபோது, எதிர்பார்த்ததை விட அனுபவம் கசப்பானதாகவே அமைந்திருக்கின்றது. குடியிருப்பொன்றின் மூன்றாம் மாடியிலுள்ள வீட்டின் கதவை வெடிவைத்து தகர்த்துக்கொண்டு உள்ளே நுழைய பொலிஸார் முயற்சித்துள்ளனர். ஆனால் வெடிகுண்டுக்கு கதவு திறக்க மறுத்ததை அடுத்து உள்ளேயிருந்த பயங்கரவாதிகள் பாரிய உபகரணங்களை கொண்டு மேலும் கதவை அடைத்துக்கொண்டுள்ளனர்.
நீண்ட போராட்டத்திற்கு பின்னர் பொலிஸாரால் உள்ளே நுழைய முடிந்தபோது அங்கிருந்த பெண் பயங்கரவாதி ஒருத்தி பொலிஸார் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டவாறு தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்ததில் சில பொஸிலார் காயமுற்றதுடன் 7 வயதுடைய டீசல் என்ற மோப்ப நாய் ஒன்றும் உயிரிழந்துள்ளது.

குடிமனையிலிருந்த பயங்கரவாதிகளுக்கும் பொலிஸாருக்குமிடையில் இடம்பெற்ற 7 மணிநேர துப்பாக்கி சண்டையின் பின்னர் ஒரு பெண் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டதுடன் வெடித்து சிதறிய பெண் பயங்கரவாதியுடன் இறந்தவர்களின் எண்ணிக்கை 2 என பொலிஸார் ஊர்ஜிதம் செய்திருந்தனர்.

கொல்லப்பட்ட இரண்டாமவர் தக்குதலின் பிரதானி என அறிவிக்கப்பட்டுள்ளது. இவன் பொலிஸாரின் தாக்கதலில் கொல்லப்பட்டானா அன்றில் தன்னைத் தானே சுட்டுகொன்றானா என்பது இதுவரை தெளிவில்லை என ஐரோப்பிய நாடொன்றின் பெயர் குறிப்பிட விரும்பாத புலனாய்வு அதிகாரி ஒருவர் வாஷிங்டன் போஸ்ட் க்கு தெரிவித்துள்ளார்.

குறித்த வீடு இனம்காணப்படுவதற்கு கடந்த 13.11 திகதி தாக்குதலுக்கு உள்ளான தியேட்டருக்கு அருகாமையில் குப்பை தொட்டியொன்றிலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட தொலைபேயிலிருந்து மீட்கப்பட்ட தகவல்களே பிரதானமாக அமைந்ததாக தெரியவருகின்றது. குறித்த தொலைபேசியிருந்து தாக்குதல் ஆரம்பித்த மறுகணத்தில் ஒரு குறுச்செய்தி அனுப்பப்பட்டிருக்கின்றது. அச்செய்தியில் " முன்னேறுங்கள். நாங்கள் ஆரம்பிக்கின்றோம்" “Let’s go, we’re starting.” என்று சொல்லப்பட்டுள்ளது. அத்துடன் குறித்த தியேட்டரை அடைவதற்கான வரைபடமும் காணப்பட்டுள்ளது.

27 வயதான அப்தல்ஹமிட் அபவுட் பெல்ஜியத்தில் தனது பாடசாலைக் கல்வியை முடித்துள்ளான். இவன் கடந்த 2013 ஆண்டு ஐஎஸ்ஐஎஸ் இற்காக ஜிஹாட் அமைப்பில் இணைந்து கொண்டுள்ளதுடன் தனது 13 வயது சகோதரனையும் இணைத்துக்கொண்டதாகவும் அச்சிறுவனை கொண்டு ஐஎஸ்ஐஎஸ் ற்கான பிரச்சாரங்களுக்கு உதவியதாகவும் விமர்சனத்திற்குள்ளாகியள்ளான்.

ஐரோப்பாவில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் பலவற்றை திட்டமிட்டவன் இவனே என பொலிஸாரால் இவன் தேடப்பட்டு வந்தவன் என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

மொராக்கோ வம்சாவளியைச் சேர்ந்த அபவுட், பெல்ஜியம் நாட்டு குடிமகனாவான். இங்கிருந்தபடியே சிரியாவுக்கு சென்று அங்குள்ள ஐ.எஸ். தீவிரவாதப் பாசறையில் பயிற்சி பெற்ற இவன், பாரிஸ் தாக்குதலின்போது மனித வெடிகுண்டாக வெடித்துச் சிதறிய பிராஹிம் அப்டெசலாம் என்பவனுடனும், இந்த தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள மற்றும் தேடப்பட்டு வரும் பலருடனும் நெருங்கிய தொடர்பு வைத்திருந்ததாக பிரான்ஸ் போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது.

அப்டெல்ஹமித் அபவுட்-டும், பாரிஸ் தாக்குதலில் பலியான பிராஹிம் அப்டெசலாம் என்பவனும் பெல்ஜியம் நாட்டில் இஸ்லாமிய தீவிரவாதிகளின் ஆதிக்கம் மிகுந்த மாலென்பீக் பகுதியில் ஒன்றாக வசித்து வந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.

முஹம்மது நபியை இழிவுப்படுத்தும் வகையில் கார்ட்டூன் வெளியிட்ட சார்லி ஹெப்டோ பத்திரிகை அலுவலகத்தின் மீது நடத்தப்பட்ட கொடூர தாக்குதலுக்கு பின்னர் பிரான்ஸ் போலீசாரை கொல்ல திட்டமிட்டபோது இவர்களின் பதுங்குமிடம் கண்டுபிடிக்கப்பட்டு, அந்த சதித்திட்டம் முறியடிக்கப்பட்டது.

இதையடுத்து, கடந்த ஜனவரி மாதம் சிரியாவுக்கு தப்பிச்சென்ற அப்டெல்ஹமித் அபவுட், அங்கிருந்தபடியே பாரிசில் கடந்த வெள்ளிக்கிழமை நடந்த கொடூரத் தாக்குதலுக்கு திட்டம்தீட்டி தந்துள்ளான். பெல்ஜியம் நாட்டில் இவன் மீதான தீவிரவாத வழக்குகளின் அடிப்படையில், தலைமறைவாக இருக்கும் இவனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பாரிசில் நேற்று சுட்டுக்கொல்லப்பட்ட 2 தீவிரவாதிகளின் உடல்களை மருத்துவ பரிசோதனை செய்த போது முக்கிய குற்றவாளியான அபாவுத் பலியாகியுள்ளது தெரியவந்துள்ளதாக பிரான்சு அரசு வழக்கறிஞர்கள் அறிவித்துள்ளனர்.குறித்த பயங்கரவாதி கொலைசெய்த சடலங்களை புதைப்பதற்காக வெகு சந்தோஷமாக எடுத்துச்செல்லும் வீடியோ ஒன்றை இங்கு காணலாம்.ஐ.எஸ் தீவிரவாதிகளை விட கொடூரமானவர்கள் யார் தெரியுமா?

அண்மையில் நடந்த பாரிஸ் தாக்குதலை அடுத்து சர்வதேச நாடுகளுக்கு அச்சுறுத்தலாக விளங்கும் ஐ.எஸ். தீவிரவாதிகளை விட மிக பயங்கரமான அமைப்பாக ஆப்பிரிக்காவின் போகோ ஹராம் தீவிரவாத அமைப்பு உருவெடுத்துள்ளது. போகோ ஹராம் தீவிரவாத அமைப்பு ஆப்பிரிக்க நாடான நைஜீரியா மற்றும் அதன் அண்டை நாடுகளை பல வருடங்களாக துன்புறுத்தி வருகிறது.

இந்த நிலையில், நைஜீரியாவின் போகோ ஹராம் என்ற தீவிரவாத அமைப்பு ஐ.எஸ் தீவிரவாத அமைப்பை விடவும் பயங்கரமானது என்று உலகப் பயங்கரவாத குறியீடு தரவு ஒன்று தெரிவித்துள்ளது.

ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல்களில் சென்ற ஆண்டு மட்டும் உலகின் பல்வேறு இடங்களில் 6,073 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஆனால், அதே நேரம் போகோ ஹராம் நடத்திய தாக்குதல்களினால் 6,664 பேர் பலியாகியுள்ளனர். உலகில் நடக்கும் தீவிரவாத தாக்குதல்களில் பாதியளவிற்கு மேல் போகோ ஹராம், ஐ.எஸ். தீவிரவாதிகளால்தான் நடத்தப்படுகிறது. இந்த தகவலை இன்ஸ்டிடியூட் ஆப் இக்கனாமிக்ஸ் அன்ட் பீஸ் இன்று வெளியிட்டுள்ளது.

நேற்று கூட நைஜீரியாவில் போகோ ஹராம் தீவிரவாதிகள் நடத்திய தாக்குலில் 50-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். தொடர்ந்து நைஜீரிய மக்கள் எச்சரிக்கையோடு இருக்குமாறு அந்நாட்டு பிரதமர் முஹம்மது புகாரி அறிவுறுத்தியுள்ளார். அண்மையில், தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதலை அந்நாடு துரிதப்படுத்தியிருந்த போதிலும் போகோ ஹராம் தீவிரவாதிகளின் திடீர் தாக்குதலை தடுத்து நிறுத்த முடியவில்லை.


Read more...

Wednesday, November 18, 2015

அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதலுக்கு இந்தியாவிலிருந்து நிதி உதவி: முன்னாள் சிபிஐ அதிகாரியின் அதிர்ச்சி தகவல் !

அமெரிக்காவில் தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட இரட்டை கோபுர தகர்ப்பு தாக்குதலுக்கு தேவையான பணத்தில் ஒரு பகுதி இந்தியாவில் இருந்து கைமாற்றிவிடப்பட்டதாக டெல்லி காவல்துறையின் முன்னாள் கமிஷனரும், முன்னாள் சிபிஐ அதிகாரியுமான நீரஜ்குமார் தனது புத்தகம் ஒன்றில் தெரிவித்துள்ளார். 1976ம் ஆண்டு ஐபிஎஸ் பிரிவை சேர்ந்த நீரஜ்குமார், டெல்லி போலீஸ் துணை கமிஷனராக பணியை தொடங்கியவர். பணித்திறமை காரணமாக, சிபிஐ உயரதிகாரியாக நியமிக்கப்பட்டவர். டெல்லி போலீஸ் கமிஷனராக பணியாற்றி, 2 வருடங்கள் முன்பு ஓய்வு பெற்ற நீரஜ்குமார் தற்போது பிசிசிஐ லஞ்ச ஒழிப்பு குழுவிற்கு தலைமை வகிக்கிறார். இவர் ‘டையல் டி பார் டான்' என்ற தலைப்பில் புத்தகம் எழுதி உள் ளார். அதில் தனது பணிக் காலத்தில் ஏற்பட்ட முக்கிய அனுபவங்களை கூறியிருக்கிறார்.

மும்பை குண்டுவெடிப்பு

சிபிஐ.யில் 9 ஆண்டுகள் பணிபுரிந்த போது, விசாரிக்கப்பட்ட முக்கியமான 11 வழக்குகள் குறித்து, தனது புத்தகத்தில் நீரஜ்குமார் குறிப்பிட்டுள்ளார். அதில் ஒரு சம்பவம் 1993ம் ஆண்டு நடந்த மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கு விசாரணையாகும். இதுதான் மிகுந்த முக்கியத்துவம் கொண்டது என்று நீரஜ்குமாரும் குறிப்பிடுகிறார்.

தொலைபேசியில் மிரட்டல் விடுத்த தாவூத்

இந்த விசாரணை நீரஜ் குமார் கண்காணிப்பில் நடந்தது. அப்போது மும்பை நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் செல்போனில் நேரடியாக நீரஜ்குமாரை மிரட்டிய தகவலை புத்தகத்தில் பதிவு செய்துள்ளார்.

இதுகுறித்து புத்தகத்தில் நீரஜ்குமார் கூறியிருப்பதாவது: டெல்லி கமிஷனராக இருந்தபோது, ஐபிஎல் ஸ்பாட் பிக்சிங் ஊழல் வழக்கை விசாரித்து வந்தேன். 2013ம் ஆண்டு ஜூலை மாதம் பணியில் இருந்து ஓய்வு பெறுவதற்கு ஒரு வாரத்துக்கு முன்னர் என்னுடைய செல்போனில் அழைப்பு வந்தது.

மறுமுனையில் பேசியவர், ‘‘ஓய்வு பெறபோகிறீர்கள். அதன்பிறகு, உங்களுக்கு அளிக்கப்படும் பாதுகாப்பை விலக்கி கொள்வார்கள். பார்த்துக் கொள்ளுங்கள்'' என்று மிரட்டல் விடுத்தார். எனினும், ஐபிஎல் ஊழல் வழக்கில் தாவூத் துக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய நடவடிக்கை எடுத்தேன். போனில் பேசியது, தாவூத் இப்ராஹிம் அல்லது அவரது தம்பி அனீஷ் என்று தெரியவந்தது", இவ்வாறு நீரஜ் குமார் கூறியுள்ளார்.

3 முறை பேசிய தாவூத் கடந்த 1994ம் ஆண்டு நீரஜ் குமாரிடம் 3 முறை தாவூத் பேசியிருக்கிறார். அப்போது 1993ம் ஆண்டு மும்பை குண்டுவெடிப்பில் தனக்கு சம்பந்தமில்லை என்று கூறியிருக்கிறார். அதன்பின்தான், 2013ம் ஆண்டு ஓய்வு பெறுவதற்கு முன்னர் தாவூத் பேசியிருக்கிறார்

பாகிஸ்தான் தேவையில்லை

தனது புத்தகத்தில் தாவூத் 3 முறை பேசிய விவரங்களை நீரஜ் குமார் விரிவாக கூறியுள்ளார். தாவூத் மேலும் கூறும்போது, ‘‘இந்தியர்கள் மீது தாக்குதல் நடத்த, பாகிஸ்தானில் இருந்து ஆயுதங்கள் அனுப்ப வேண்டிய அவசியம் இல்லை. தாக்குதல் நடத்துவதற்கு தேவையான வெடிபொருட்கள், ஆயுதங்கள் எங்கள் ஆட்களிடம் உள்ளது'' என்று துணிச்சலாக கூறியுள்ளார்.

ஆயுதம் கேட்ட சஞ்சய் தத்

மேலும், மும்பையில் மதக் கலவரம் ஏற்பட்ட போது, தனது பாதுகாப்புக்கு ஆயுதம் தேவை என்று பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் கூறியதாகவும் அப்போது தனது இளைய சகோதரன் அனீஸ்தான் ஆயுதங்களை அனுப்பி வைத்தார் என்றும் தாவூத் கூறியதாக புத்தகத்தில் நீரஜ் குமார் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க தாக்குதல்

இந்த புத்தகத்தில் உள்ள மற்றொரு முக்கியமான விஷயம், அமெரிக்காவில் நடந்த இரட்டை கோபுர தாக்குதல் (9/11 ), சம்பவத்திற்கு இந்தியாவில் இருந்து நிதி உதவி செய்யப்பட்டுள்ளது என்பதாகும். அமெரிக்க தாக்குதலுக்கு மூளையாக இருந்த தீவிரவாதி பெயர் முகமது அட்டா. இந்த தீவிரவாதிக்கு, ஒமர் ஷெய்க் என்ற தீவிரவாதி பணம் சப்ளை செய்துள்ளார். உமர் ஷெய்க்கிற்கு, சுமார் ரூ.105.5 லட்சத்தை, கொல்கத்தாவிலுள்ள அமெரிக்க தூதரகம் மீது தாக்குதல் நடத்திய, அப்டாப் அன்சாரி கொடுத்துள்ளார்.

கடத்தல் பணம்

இந்தியாவை சேர்ந்த பார்த பிரதிம் ராய் பர்மன் என்ற தொழிலதிபரை கடத்தி அவரைவிடுதலை செய்வதற்காக பெறப்பட்ட பணத்தில் ஒரு பகுதிதான் (ரூ.105.5 லட்சம்), அன்சாரியால், ஷெய்க்கிற்கு தரப்பட்டுள்ளது. இவ்வாறு தனது புத்தகத்தில் நீரஜ் குமார் கூறியுள்ளார். கொல்கத்தா தாக்குதலுக்காக, மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள, அன்சாரி தற்போது மேற்கு வங்க சிறையிலுள்ளது குறிப்பிடத்தக்கது

Read more...

பாரிஸில் இஸ்லாமிய பயங்கரவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் ஆயுதம் தாங்கிய அரசியல் போர்! சிறிதரன்

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் அண்மையில் கனடாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பேசுகையில் „அரசியல் என்பது ஒர் ஆயுதம் தாங்கிய போர். போர் என்பது ஆயுதம் தாங்கிய அரசியல்.' என பயங்கரவாதத்திற்கு புதியதோர் அர்த்தம் கற்பித்திருந்தார்.

அவ்வாறாயின் கடந்த 13.11.2015 அன்று பாரிஸில் இஸ்லாமிய பயங்கரவாதிகளால் அப்பாவி மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட மிருகத்தனமான தாக்குதல் 'ஆயுதம் தரித்த அரசியல் போரா?' என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

மேலும் இலங்கையில் புலிப்பயங்கரவாதிகள் மேற்கொண்ட பயங்கரவாத செயற்பாடுகளை நியாயப்படுத்திய சிறிதரன் 'நாங்கள் எங்களை தாக்குகின்றபோது, பாதுகாப்புக்காக எதிர்த்தாக்குதல்களை மேற்கொண்டிருந்தோம்' என்றும் கூறியிருந்தார்.

புலிப்பயங்கரவாதம் இலங்கையில் மண்கவ்வியதன் பின்னர் மண்டையன் குழுவின் பிரதிநிதியாக தமிழ் தேசியக் கூட்டமைப்பில் தன்னை இணைத்துக்கொண்ட சிறிதரன் „நாங்கள்' என்பதன் ஊடாக தமிழ் தேசியக் கூட்டமைப்பை பயங்கரவாதிகள் என்று கூறுகின்றாரா? அன்றில் அமெரிக்காவால் கொண்டுவரப்பட்ட பிரேரணையில் சிறிதரன் வன்னிச் சிறார்களை பயங்கரவாதிகளுக்கு ஆட்சேர்ப்பதற்கு உதவினார் என்ற குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்கின்றாரா?Read more...

Tuesday, November 17, 2015

த.தே.கூ வின் கிள்ளி நுள்ளி கீயா மீயா விளையாட்டை அறிக்கையிட்டிருக்கின்றார் ஐயா விக்கிநேசுவரன்.

தமிழ் அரசியல்வாதிகள் காலம் காலமாக எதிர்ப்பரசியலே செய்துவருகின்றனர் என்கின்றபோது யாவரும் விளங்கிக்கொள்வது மத்திய அரசை எதிர்கின்றார்கள் என்பதாகும். ஆனால் இவர்கள் மத்தியை மாத்திரம் எதிர்பதில்லை. தங்களுக்குள்ளேயே தங்களை எதிர்த்து அகம்பாவம் கொண்ட அரக்கர்களாக தமிழ் மக்களின் அரசியல் , சமூக , பொருளாதார எதிர்காலத்தை எவ்வாறு சூனியமாக்கி வருகின்றார்கள் என்பதற்கு வடக்கின் முதலமைச்சர் வெளியிட்டிருக்கும் இவ்வறிக்கை போதுமானதாகும்.

தமிழ் மக்களின் அரசியல்வெளியை குறுந்தேசியவாத , வெறும் உணர்சி வசனங்களைக்கொண்டு ஆக்கிரமித்துள்ள இவ்பேர்வழிகள் எவ்வாறு தங்களுக்குள்ளே கிள்ளி நுள்ளி கீயா மீயா விளையாட்டு விளையாடுவதில் முழு நேரத்தையும் செலவிட்டு மக்களை நிர்கதிக்குள்ளாகுகின்றார்கள் என்பதை தமிழ் மக்களாகிய மக்குகள் இவ்வறிக்கையை ஒன்றுக்கு மூன்றுமுறை வாசிப்பதனூடாக அறிந்து கொள்ளமுடியும்.

அறிக்கையின் முழுவடிவம்

எனது அன்பிற்குரிய மாணவன் சுமந்திரன் அவர்கள் பல குற்றச் சாட்டுகளை அண்மைக் காலமாக முன்வைத்து வந்துள்ளார்.

அவை அனைத்திற்கும் பதில் கூற வேண்டிய காலம் கனிந்துள்ளது. முதலில் அவர் இனப்படுகொலை பற்றிய வடமாகாண சபைத் தீர்மானம் பற்றி விமர்சித்தார்.

உண்மையில் இந்தத் தீர்மானத்தைத் தயாரித்துத் தரவேண்டும் என்று திரு.சுமந்திரன் அவர்களிடம் கோரிய போது அதற்கு அவர் மறுப்புத் தெரிவிக்கவில்லை.

ஆனால் ஜனாதிபதி தேர்தலின் பின்னர் எதுவும் சொல்லாமல் வெளிநாடு சென்று விட்டார் என்று நினைக்கின்றேன். அவரோடு தொடர்பு கொள்ள முடியவில்லை.

எனவேதான் கடைசி நேரத்தில் நானே தயாரிக்க வேண்டிய கடப்பாடு என்னைச் சார்ந்தது. தீர்மானம் வெளிவந்தவுடனே அதனை வரவேற்று அறிக்கை தந்த அவர் பின்னர் அப்பேர்ப்பட்ட தீர்மானம் பிழையானது என்றார்.

காரணம் அதன் ஊடாக எவரையும் சட்டப்படி குற்றவாளிகள் ஆக்க முடியாது என்றும் அதனால் அந்தத் தீர்மானம் நடைமுறைப்படுத்தப்பட மாட்டாது என்றும் தெரிவித்தார்.

பல மக்கட் பிரச்சனைகள் தம்முன் வரும் போது சட்டத் தரணியான அவர் இந்த இந்த விடயங்களில் வழக்குப் பதிய முடியாது, சாட்சியங்கள் போதாது என்றெல்லாம் கூறியிருப்பார்.

அதற்காகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தீங்கு இழைக்கப்படவில்லை என்றோ பாதிப்பு ஏற்படவில்லை என்றோ மனக் கிலேசம் ஏற்படவில்லை என்றோ அர்த்தமில்லை.

எமது தீர்மானம் இந் நாட்டில் இதுவரை நடந்ததைப் பிரதிபலிக்கும் தீர்மானம். அத்தீர்மானம் எவ்வெவற்றை இனப்படுகொலைச் சட்டம் இனப்படுகொலையாக ஏற்றுக் கொண்டுள்ளதோ அவை எம் நாட்டில் நடைபெற்றுள்ளன என்பதைப் பிரதிபலிக்கும் தீர்மானம்.

அது ஒரு சமூக ஆவணம். சட்டப்படி என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பது ஐ.நா செயலாளரினால் தீர்மானிக்கப்பட வேண்டியது.

உண்மையும் நல்லிணக்கமும்

மேலும் இதனை இவ்வருடம் ஜனவரி 8ந் திகதிக்குப் பின்னர் கொண்டு வந்ததும் கௌரவ சுமந்திரன் அவர்களுக்குப் பிடிக்கவில்லை. ஆனால் உண்மையில் ஜனவரி 8ந் திகதிக்குப் பின்னர் தான் இத் தீர்மானத்தைக் கொண்டு வர வேண்டிய அவசியம் எழுந்தது.

எம்மால் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த அரசாங்கந்தான் நல்லிணக்கம் பற்றிக் கூறிவருகின்றது. தென்ஆபிரிக்காவில் உண்மையும் நல்லிணக்கமும் சார்ந்த ஆணைக்குழுவே நியமிக்கப்பட்டது.

உண்மை தெரிந்தால்த்தான் நல்லிணக்கத்தை எய்தலாம். உண்மை தெரியாமல் நல்லிணக்கம் எப்படி உருவாகும்?

உலகத்திற்கு மட்டும் எங்கள் தீர்மானம் உண்மையை விளம்பவில்லை. இலங்கை மக்களுக்கும் அத்தீர்மானம் உண்மையை விளம்பியது. முக்கியமாகச் சிங்கள மக்கள் அதில் கூறப்பட்டவை உண்மை என்று தெரிந்து ஏற்றுக் கொண்டால்த்தான் நல்லிணக்கத்திற்கான அடுத்த அடியை எடுத்து வைக்க முடியும்.

அவை எதுவும் நடக்கவில்லை என்று சிங்கள மக்கட் தலைவர்கள் கூறினால் நல்லிணக்கத்தை எவ்வாறு உருவாக்கப் போகின்றோம்?

எனவே இனப்படுகொலை பற்றிய வட மாகாண சபையின் தீர்மானம் கௌரவ பிரதமர் இரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கும் அவருடன் நெருங்கிய உறவை வைத்திருக்கும் மற்றையவர்களுக்கும் கோபத்தைத் தருவதாக இருந்தாலும் அத்தீர்மானத்தின் உள்ளடக்கங்கள் எங்கள் உறுப்பினர்கள் அனைவரதும் ஏகோபித்த கருத்தையே வெளிக்காட்டி நின்றன. உண்மையைச் சுட்டிக் காட்டி நின்றன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தெரிவே முதலமைச்சர் பதவி

அடுத்த குற்றச்சாட்டு என்னைத் தமது கட்சியே அரசியலுக்கு அழைத்து வந்ததென்றும் வடமாகாண சபையை நிர்வகிக்கின்ற பொறுப்பை கட்சியே கொடுத்தது என்றும் கூறியுள்ளார்.

இது தவறு. தமிழ்த்தேசிய கூட்டமைப்பு பல கட்சிகள் கொண்ட ஒரு கூட்டணி. அது பதிவு படுத்தப்படாத கட்சி. என்னை வலிந்து பலரும் அரசியலுக்குள் அழைத்த போது சகல கட்சிகளும் சேர்ந்து என்னை அழைத்தால் அவர்களின் கோரிக்கையைப் பரிசீலிப்பதாகக் கூறினேன்.

சகல கட்சித் தலைவர்களும் என்னை முதலமைச்சராக முன்னிறுத்துவது என்பதை ஏற்றுக் கொண்டார்கள். அதாவது இலங்கைத் தமிழரசுக் கட்சியும், ஏனைய கட்சித் தலைவர்களும் இணைந்து கூட்டாகவே குறித்த தீர்மானத்தை எடுத்திருந்தார்கள்.

அதன் அடிப்படையில் தேர்தல் நடந்தது. 1,33,000க்கு மேலதிகமான வாக்குகள் கிடைத்தன. அதனால்த்தான் நான் வடமாகாண முதலமைச்சர் பதவி கிடைக்கப்பெற்றேன்.

ஏற்றுக் கொண்டேன். கௌரவ சுமந்திரன் கூறுவது போல் அவரின் கட்சி என்னைக் கூப்பிட்டு நாங்கள் இந்தப் பதவியை உங்களுக்குத் தருகின்றோம்.

எங்கள் கட்சிக்கு விஸ்வாசமாக நீங்கள் நடக்க வேண்டும் என்று நிபந்தனை இட்டு எனக்கு இப் பதவியை வழங்கவில்லை. ஆகவே கௌரவ சுமந்திரனின் 2ம் குற்றச் சாட்டு அஸ்திவாரமற்ற குற்றச் சாட்டு.

பொதுத் தேர்தலும் நிதி சேகரிப்பும்

அடுத்த குற்றச் சாட்டு நாடாளுமன்றப் பொதுத் தேர்தலின் போது கட்சிக்குச் சார்பாகச் செயற்படவில்லை என்பது. நான் ஏதாவது ஒரு கட்சியின் நடைமுறை உறுப்பினராக இருந்தால்த்தானே கட்சி என்னைக் கட்டுப்படுத்தலாம்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு பதிவுபடுத்தப்படாத கட்சி. இலங்கைத் தமிழரசுக் கட்சியோ வேறேதேனுங் கட்சியோ என்னைத் தமது கட்சிக் கூட்டங்களுக்கு அழைக்கவுமில்லை.

நான் போகவுமில்லை. திருகோணமலையில் நடந்த ஒரு கூட்டத்திற்கு அழைக்கப்பட்டேன். போனேன். என்னைப் பொறுத்த வரையில் வடமாகாண மக்களே. பெருவாரியாக எனக்கு வாக்களித்த அவர்களே, எனது கட்சி.

அவர்களின் நன்மையே எனது கட்சிக் குறிக்கோள். ஆகவே கட்சியே எனக்குப் பதவியைக் கொடுத்தது என்பதிலும் பார்க்க மக்களே எனக்கு அந்தப் பொறுப்பை ஒப்படைத்தார்கள் என்பதே உண்மையாகும்.

நான் கேட்டு கட்சி எனக்கு ஒரு பதவியை வழங்குவதையும் கட்சி கேட்டு நான் மக்களிடம் வாக்குப்பெற்று பதவி பெறுவதையும் ஒன்றாகக் கருத முடியாது.

அடுத்து கனடா செல்லாமை பற்றிய குற்றச்சாட்டு. முதலில் பலர் கேட்ட போது எனக்கு முழங்கால் வலி இருந்தது உண்மை.

எமது வைத்தியர்கள் காலக்கிரமத்தில் எனக்கு சிகிற்சை அளித்து அதிலிருந்து விடுவித்ததும் உண்மை. அதன்பின்னர் எனக்குச் சுகமாக இருக்கவே நான் அமெரிக்கா சென்றதும் உண்மைதான்.

அமெரிக்கா சென்ற போது பல விடயங்களைக் கவனிக்க வேண்டியிருந்தது. அதே நேரம் இங்கிலாந்தில் உயிருடன் இருக்கும் எனது ஒரேயொரு சகோதரி நான் இங்கிலாந்து வந்து செல்ல வேண்டும் என்று கேட்டுக் கொண்டதற்கிணங்க இங்கிலாந்து செல்ல வேண்டி வந்ததும் உண்மை.

அதனால் என்னால் கனடா செல்ல முடியாது என்று கூறியதும் உண்மை. அமெரிக்காவில் இருக்கும் போதே சில சரீர உபாதைகளுக்கு நான் உட்பட்டு இருந்தேன்.

எனவே கனடா சென்று வருவது என்பது எனக்குத் தேக அசௌகரியத்தையே தந்திருக்கும்.

அத்துடன் பாராளுமன்றத் தேர்தலுக்குப் பணம் திரட்ட வேண்டுமானால் அப்பணத்தைச் செலவழிக்கப் போகும் பாராளுமன்ற வேட்பாளர்களே அதைப் போய் கனேடிய மக்களிடம் கேட்டுப் பெற வேண்டுமே ஒளிய வடமாகாண சபையைச் சேர்ந்த நான் எப்படிக் கேட்பது?

பணத்தைச் செலவு செய்யப் போகின்றவர்கள், அதற்குக் கணக்குக் காட்டப் போகின்றவர்கள், பணத்தை இலங்கைக்கு எடுத்துவரப் போகின்றவர்கள் ஒரு புறம் இருக்க என்னை அங்கு செல்ல வைப்பதற்கு கௌரவ சுமந்திரன் அவர்கள் ஊக்கம் காட்டியது எதற்காக என்று எனக்குத் தெரியவில்லை.

உண்மையில் அவரின் கூற்றின்படி தேவையற்ற இனப்படுகொலைத் தீர்மானத்தை ஏக மனதாக வடமாகாணசபை நிறைவேற்றிய பின்னர் என்னைக் கனேடிய மக்கள் ஒதுக்கித்தள்ளியிருப்பார்கள் என்ற அவர் கருத்துப்படியான விதத்தில் அவர் என்னைக் கனடா செல்ல அழைத்ததே பிழையென்றுதான் கருத வேண்டும்.

தேர்தல்கால அறிக்கைகள்

அடுத்த குற்றச்சாட்டு கட்சிக்கு எதிராக அறிக்கை விட்டிருந்தேன் என்பது. அவ்வாறு நான் எந்தத் தருணத்திலும் அறிக்கை விடவில்லை. கட்சிகளைச் சேராத நான் நடுநிலையாக இருந்ததில் எந்தத் தவறும் இல்லை.

ஐந்து அல்லது நான்கு கட்சிகள் சேர்ந்திருந்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் அபிமானிகள் தமக்குள் போட்டி போட்டுக் கொண்ட ஒரு தேர்தலில் நான் எவ்வாறு பாரபட்சம் காட்டி இன்னாருக்கு வாக்குப் போடுங்கள் என்று கேட்பது?

அப்படியானால் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு வாக்குப் போடுங்கள் என்று கூறியிருக்கலாமே என்ற கேள்வி எழுகின்றது.

இங்கு சில விடயங்களை நாங்கள் கருத்தில் கொள்ள வேண்டும். இவ் வருடம் ஜனவரி மாதம் 8ந் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடந்தது. அடுத்த நாள் கௌரவ இரணில் விக்கிரமசிங்க அவர்கள் பிரதமராக நியமிக்கப்பட்டார்.

கௌரவ சம்பந்தன், கௌரவ சுமந்திரன் சகிதம் நானும் சேர்ந்து கொழும்பு புலர்ஸ் லேனில் இருக்கும் கௌரவ மலிக் சமரவிக்கிரம அவர்களின் வீட்டில் கௌரவ ரணில் அவர்களைச் சந்தித்து அவருக்கு எமது பாராட்டுக்களைத் தெரிவித்தோம்.

அப்போது ஜேவிபியைச் சேர்ந்தவர்கள் கூட அங்கு வந்து அவருடன் கை குலுக்கினார்கள்.

வடக்கிலிருந்து இராணுவ வெளியேற்றம்

நாங்கள் அங்கிருந்து செல்கையில் கௌரவ ரணில் அவர்கள் என்னைப் பார்த்துக் கூறினார் - “நான் நாளைக்கு மகாநாயக்க தேரருக்கு வடக்கிலிருந்து இராணுவத்தினர் எவரையும் அகற்றப் போவதில்லை என்று கூறப் போகின்றேன்” என்றார்.

பக்கத்தில் கௌரவ சம்பந்தன் அவர்களும் கௌரவ சுமந்திரன் அவர்களும் இருந்தார்கள். நான் அந்த நேரத்தில் எதையும் கூறவிரும்பவில்லை. சிரித்துவிட்டுத் திரும்பி வந்து விட்டேன்.

கௌரவ ரணில் அவர்களின் கூற்றின் தாற்பரியம் எனக்குப் புரிந்தது. அதாவது “இராணுவத்தைப் பொறுத்த வரையில் தமிழ் மக்களுக்கு உதவுவதாக நான் முன்னர் உங்களுக்குக் கூறியிருந்தாலும் அதற்கு மாறாக நான் மகாநாயக்கருக்குத் தெரிவிக்கப் போகின்றேன்” என்பதே அது.

அதாவது தமிழர்களுக்கு ஒரு முகம் காட்டிய நான் மகாநாயக்கருக்கு என் மறு முகத்தைக் காட்டப் போகின்றேன் என்பதே அவரின் கூற்றின் உள்நோக்கம்.

நான் அதன்பின் அதைப் பொருட்படுத்தவில்லை. அவரின் உறவினர் கௌரவ ருவான் விஜேவர்த்தன வடக்கு வந்து அதே கருத்தைத் தெட்டத் தெளிவாக இராணுவத்தினர் மத்தியில் கூறிய போதுதான் அதற்கு மறுமொழி கொடுத்தேன்.

அதாவது இந்தக் கருத்தை ஏற்கனவே எனக்குக் கௌரவ ரணில் அவர்கள் கூறிவிட்டார் என்றேன். யுஎன்பிஐ மாமன் மருமகன் கட்சி என்று முன்னர் அழைப்பார்கள். அதேபோன்று மாமன் கூறியதை வடக்கு வந்து மருமகன் கூறினார் என்றேன்.

ஆனால் உண்மையில் பல வயது வித்தியாசம் இருந்தாலும் கௌரவ ரணில் அவர்களின் ஒன்று விட்ட சகோதரரே தான் என்று கௌரவ ருவான் விஜேவர்தன எனக்குப் பின்னர் கூறியிருந்தார்.

நான் அவர் கூற்றை விமர்சித்துக் கூறியதில் கௌரவ ருவான் அவர்களுக்கு எந்தவித கோபமும் இல்லை.

கௌரவ ரணிலும் நம்மவர்களும்

அதன் பின் கௌரவ ரணிலிடம் இந்தியாவில் இராணுவம் பற்றி இவ்வாறு வடமாகாண முதலமைச்சருக்குக் கூறினீர்களா என்று கேட்டபோது என்னைத் தான் சந்திக்கவுமில்லை பேசவுமில்லை என்று தொலைக்காட்சி ஒன்றுக்கு மறுமொழி அளித்தார்.

அதையுந் தாண்டி “விக்னேஸ்வரன் ஒரு பொய்யர்” என்றும் கூறினார். அது பற்றி என்னுடன் இருந்த கௌரவ சம்பந்தனோ, கௌரவ சுமந்திரனோ உண்மை என்ன என்பதைக் கூற முன்வரவில்லை.

பேசா மடந்தைகளாக இருந்தார்கள். நான் மட்டும் இரண்டு மூன்று கிழமைகள் கழித்து “நான் பொய்யரா இல்லையா என்பது பிரச்சனை இல்லை.

இராணுவத்தினரை ஒரு திட்டத்தின் கீழ் குறைத்து வடமாகாணத்தில் இருந்து படிப்படியாக வெளியேற்றுவேன் என்று கௌரவ ரணில் அவர்கள் கூறட்டும். நான் அடுத்த நிமிடமே அவருக்குக் கைலாகு கொடுக்கின்றேன்.” என்றேன்.

இவ்வளவுக்கும் கட்சிக்கு நான் சார்பாக நடந்து கொள்ளவில்லை என்று கூறும் கௌரவ சுமந்திரன் தமது கட்சி உறுப்பினர் என்று அவர் கருதும் எனக்குச் சார்பாக ஒரு வார்த்தைதானும் கூறினாரா?

பணம் சேர்க்க நான் வேண்டும். பழி ஏற்கவும் நான் தான் வேண்டும் என்ற நிலையில், கௌரவ ரணிலின் நெருக்கமே தமக்குக் கூடிய முக்கியத்துவம் உடையது, உறுப்பினர் உறவு முக்கியமில்லை என்ற நிலையில் நான் நடுநிலை வகித்ததில் என்ன தப்பு?

கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் கௌரவ சுமந்திரனுடையதுதான்

மேலும் அண்மைய பாராளுமன்றத் தேர்தலுக்கு முன் கௌரவ சுமந்திரன் அவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தின் வரைவை எனக்கு அனுப்பிவிட்டு,

அது சம்பந்தமாக நான் எனது அமைச்சர்களுடன் கலந்தாலோசித்து எமது கருத்துக்களைத் தரவேண்டும் என்று நான் கூறியதன் பிற்பாடுகூட எம்மைப் புறக்கணித்து அடுத்த நாளே தனது வரைவைப் பத்திரிகைகளுக்கு “இதுதான் எமது தேர்தல் விஞ்ஞாபனம்” என்று வெளியிட்ட பின் நான் நடுநிலை வகித்ததில் என்ன தப்பு?

அத்துடன் ஐக்கிய இராஜ்யத்திற்குப் போன போது கௌரவ சுமந்திரன் அவர்கள் வடமாகாண சபையினருடன் கலந்தாலோசிக்காமல் அவர்களை மதிக்காமல் தான்தோன்றித்தனமாக மீள்குடியேற்றம் பற்றித் தமது கருத்துக்களை வெளியிட்ட பின் நான் நடுநிலை வகித்ததில் என்ன தப்பு?

தான்தோன்றித்தனமான வேட்பாளர்கள் தெரிவு

மேலும் வடமாகாண சபையை உருவாக்கியபோது ஒவ்வொருவரின் திறமைகளையும் அனுபவத்தையும் தகைமைகளையும் அத்துடன் அரசியல் பின்னணிகளினால் ஏற்பட்ட சில கட்டுப்பாடுகளையும் மனதில் வைத்தே நான் எனது அமைச்சர்களைத் தெரிவு செய்தேன்.

அண்மைய பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னர் வேட்பாளர்களின் தகைமைகள், வாக்காள மக்களின் போரின் பின்னரான அவர்களின் தேவைகள், முன்னுரிமைகள் போன்றவற்றைக் கருத்தில் கொண்டு அலசி ஆராய்ந்து,

வடமாகாண சபையினரின் இருவருட அனுபவத்தின் அடிப்படையில் எவ்வெவர்களை நியமிப்பது என்ற விடயத்தை வெறும் சம்பிரதாயத்திற்காகவேனும் எமது வடமாகாண சபையினருடன் கலந்தாலோசிக்காமல் தான்தோன்றித்தனமாகவே வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

அந்தச் சூழ்நிலையில் நான் நடுநிலை வகித்ததில் என்ன தப்பு?

அரசியல் தீர்வு பரம இரகசியம்

மேலும் வடமாகாண சபையினருடன் கலந்தாலோசியாமல் தான்தோன்றித்தனமாக சிங்கப்பூரில் தமிழ் மக்களின் எதிர்காலம் பற்றியும் அரசியல் தீர்வு பற்றியும் கௌரவ சுமந்திரன் அரசாங்கப் பிரதிநிதிகளுடன் பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டார்.

அது பற்றி இது வரையில் எந்த விதமான கருத்துப் பரிமாற்றமும் நடைபெறவில்லை. தான்தோன்றித்தனமாக அவர் நடக்கையில் நான் நடுநிலை வகித்ததில் என்ன தப்பு?

உள்ள+ராட்சி அமைச்சர் என்ற வகையில் நான் ஊழல் நிறைந்த சில உள்ள+ராட்சி மன்றங்களைச் செயலற்றதாக்க வேண்டியிருந்தது.

செயலாளரைத் தாக்கிய ஒரு பிரதேசசபைத் தலைவர் சம்பந்தமாக நடவடிக்கை எடுக்க வேண்டியிருந்தது. பிழையான வேட்பாளர்களைத் தேர்தல்களில் நிறுத்துவதால்த்தான் இப்பேர்ப்பட்ட நிகழ்வுகள் நடக்க வேண்டி வந்தது.

தகைமை, தரம், அறிவு, நேர்மை போன்றவை வெறும் வாய்ச் சொற்களாக இருக்கப்படாது. தகைமையுடையோரையே நாங்கள் வேட்பாளர்களாக நியமிக்க வேண்டும். ஆகவே அவ்வாறான வேட்பாளர்களைத் தேர்ந்தெடுங்கள் என்று கூறியதில் என்ன தப்பு?

மாண்புமிகு ஜனாதிபதி சிறிசேன அவர்கள்கூட பல கட்சிகள் சேர்ந்த தமது கூட்டணியினரின் தேர்தலில் நடுநிலைமை காத்தார். அதில் என்ன தப்பு?

பத்திரிகையாளர்கள் விடுத்து விடுத்து ஏன் நடுநிலைமை வகிக்கின்றீர்கள் என்று கேட்ட போது இவற்றைக் கூற விரும்பாமல்த் தான் “நான் ஊமை” என்று கூறினேன்.

அடுத்த குற்றச்சாட்டு என்னுடைய தேர்தலின் போதான இரு அறிக்கைகள் தெளிவாக மாற்றுக் கட்சிகளைச் சுட்டிக் காட்டுபவையாக அமைந்தன என்பது.

நல்லவர்களைத் தேர்ந்தெடுங்கள், வல்லவர்களைத் தேர்ந்தெடுங்கள், நேர்மையானவர்களைத் தேர்ந்தெடுங்கள் என்று கூறியது மாற்றுக் கட்சியையே சுட்டிக் காட்டியது என்றால் எமது கூட்டுக் கட்சியில் நல்லவர்களும் வல்லவர்களும் நேர்மையானவர்களும் இல்லை என்றா கௌரவ சுமந்திரன் அவர்கள் கூறுகின்றார்?

பாராளுமன்றத் தேர்தலும் நாமும்

ஒரு வேளை வீட்டில் முடங்கிக் கிடக்காது வேளைக்குச் சென்று வாக்களியுங்கள் என்று நான் கூறியதற்கு அவர் தானாக அளித்த வியாக்கியானத்தை அவர் குறிப்பிடுவதாக இருந்தால் எனக்கு அப்பேர்ப்பட்ட எண்ணம் எதுவும் அவ் அறிக்கையை வெளியிடும் போது இருக்கவில்லை என்பதே உண்மை.

அவ்வாறு இருந்திருந்தால், நான்; எவ்வாறு கூறியிருக்க வேண்டும்? உங்கள் வீடுகளை விட்டுச் சைக்கிளில் பிரயாணஞ் செய்து சென்று வாக்களியுங்கள் என்று கூறியிருக்க வேண்டும்.

கௌரவ சுமந்திரன் அவர்கள் தான் தரும் வியாக்கியானந்தான் உண்மை நான் கூறும் உண்மை உண்மையல்ல என்று அடம் பிடிப்பது அவருக்கு அழகல்ல.

ஜூலை மாதம் 17ந் திகதி இங்கிலாந்து ஹரோவில் பல தரப்புக்கள் இணைந்து என்னை அழைத்திருந்தார்கள். எனது செவ்வி படமாக்கப்பட்டு பல நாடுகளிலும் காட்டப்பட்டது.

மாற்றுக் கட்சிகளுக்கு ஆதரவு அளிப்பீர்களா என்ற கேள்விக்குத் திட்டவட்டமாக நான் கூறிய பதில் “நான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விட்டு எந்தக் கட்சிக்கும் ஆதரவு கொடுக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை” என்பது.

இது வரையில் அவ்வாறே நான் இருந்து வருகின்றேன். கட்சித் தலைமைத்துவம் தாம் எண்ணுவதே சரியென்று நினைக்க, அதை எம்மால் ஏற்றுக் கொள்ள முடியாதென்றால் எமது கருத்து கட்சியைப் புறக்கணித்ததாக அமையாது.

ஒரு வேளை கட்சி சில விடயங்ளை அபிமானிகளிடையே அல்லது அனுசரணையாளர்களிடம் ஒரு முறையான நியாயமான தீர்மானத்திற்கு விட்டால் அவர்களில் பெரும்பான்மையோர் கட்சித் தலைமையின் கருத்து பிழையென்று கூறக் கூடிய சந்தர்ப்பங்கள் கூட எழலாம்.

கொள்கைகளில் இருந்து பிறழாத வலுமிக்க நேர்மையான வேட்பாளர்களைத் தேர்ந்தெடுங்கள் என்று கூறியது ஒரு போதும் கட்சிக்குப் பாதகமான கருத்தாக எடுக்கப்பட முடியாது. அது கட்சியை வலுவேற்றும் ஒரு அப்பியாசமாகவே கருதப்பட வேண்டும்.

உட்கட்சி ஜனநாயகமே கட்சியை வளர்ச்சிப் பாதையில் இட்டுச் செல்லும்

பொதுவாகக் கட்சிகள் பற்றி எனக்குப் பல கருத்துக்கள் உண்டு. கட்சி என்பது அதன் உறுப்பினர்களின் கருத்துக்களைப் பிரதிபலிக்க வேண்டும்.

சில கருத்துக்களைப் பெரும்பான்மையினரின் வாக்கின் மூலம் நிராகரிக்கலாம். ஆனால் ஒரு கட்சியானது அதன் உறுப்பினர்களின் கருத்தறிந்து நடக்க வேண்டும்.

கட்சியின் தலைமைத்துவம் தான்தோன்றித்தனமாக நடக்க முனைவது கட்சிக்குப் பாதிப்பையே ஏற்படுத்தும்.

மேலும் வடமாகாணம் பற்றிய கருத்துக்களைக் கட்சி வெளியிட முன்னர் வடமாகாணசபை உறுப்பினர்களுடன் தலைமைத்துவமானது கலந்துறவாட வேண்டிய ஒரு கடப்பாடும் அதற்கு உண்டு.

வடமாகாண சபையின் அலுவலர் நியமனங்கள் பற்றி நேரடியாக எமது அலுவலர்களுக்கு கட்சி சார்பில் கருத்துக்களை வழங்கி வடமாகாண மக்கட் பிரதிநிதிகளை உதாசீனம் செய்வதும் வரவேற்கத்தக்கதல்ல.

இவை அனைத்தையும் நான் கட்சித் தலைவருக்கு எழுத்து மூலம் சென்ற ஏப்ரல் மாதந் தொடக்கம் தெரிவித்து வந்துள்ளேன்.

ஒரு கடிதத்திற்கு அவர் பதிலும் அளித்துள்ளார். மேலும் அண்மையில் கௌரவ சம்பந்தன் அவர்கள் எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்பட்ட போது அவருக்கு என் மனமுவந்த வாழ்த்தைத் தெரிவித்த கடிதத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களும் வடகிழக்கு மாகாண சபைகளின் உறுப்பினர்களும் சேர்ந்து ஒருமித்து,

எமக்கு வாக்களித்துத் தெரிவு செய்த மக்களின் தேவைகளைப் பெற்றுக் கொடுக்க ஆவன செய்யவேண்டும் என்ற கருத்தைத் தெரிவித்திருந்தேன். இப்பொழுதும் அக் கடிதங்களுக்கு அவரிடம் இருந்து பதிலை எதிர்பார்த்தே இருக்கின்றேன்.

ஆகவே கௌரவ சுமந்திரன் அவர்கள் தமக்குக் கட்சியில் இதுகாறும் இருந்த மதிப்பு குறைகின்றதே என்ற ஆதங்கத்தில் அதற்கு என்னைப் பலிக்கடாவாக்க முனைவது வருத்தத்திற்குரியது.

எனினும் அவர் எனது பழைய மாணவர் என்ற விதத்தில் அவருக்கு இறைவன் ஆசி என்றென்றும் இருப்பதாக என்று பிரார்த்திக்கின்றேன்.
நன்றி. வணக்கம்.

நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்
முதலமைச்சர்
வடமாகாணம்


Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com