Wednesday, September 23, 2015

தமிழீழத்தில் ஆங்கிலத்தில் தூள் கிளப்பும் முதலமைச்சர்.

தமிழர் தாயகத்தில் தமிழ் மொழி புறக்கணிக்கப்படுகின்றது. அந்த மொழியையும் அதன் கலாச்சாரத்தையும் காப்பாற்றுவோம் என தமிழ் மக்களின் வாக்கு பிச்சையை பெற்றுக்கொண்ட வடக்கின் முதலமைச்சர் முற்றுமுழுதாக தமிழ் பேசும் மக்களைக்கொண்ட சபையிலே ஆங்கிலத்தில் தூள் கிளப்புவதை கீழ் உள்ள வீடியோவில் காண முடியும்.

ஐநா மனித உரிமைகள் ஆணயத்தினால் கொண்டுவரப்பட்டுள்ள தீர்மானத்தை ஏற்றுக்கொள்வதாக சபையில் பேசிய முதலமைச்சர் விசேடமாக அரசு , துணை ஆயுதக்குழுக்கள் மற்றும் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணை செய்யப்படவேண்டும் என்பதை ஏற்றுக்கொள்வதாக தெரிவித்துள்ளார்.



புலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்ற விடயத்தை ஏற்றுக்கொள்வதாக தமிழில் சொன்னால் குந்தியிருக்கும் ஆசனத்திற்கு ஆப்பு இறுகிவிடும் என்ற காரணத்தினால் ஆங்கிலத்தில் வெளுத்து வாங்கியிருக்கலாம்.

ஆனால் முதலமைச்சர் பேசிய ஆங்கிலம் சபையிலுள்ள எத்தனைபேருக்கு விளங்கியிருக்கும் என்பதுதான் கேள்வி.

Read more...

Tuesday, September 1, 2015

தோழர் வைத்திலிங்கம் அவர்கள் தனது நூறாவது பிறந்த தினமன்று பிரித்தானியாவில் நினைவு கூரப்படுகின்றார்.

அமரர் வைத்திலிங்கம் அவர்களின் 100வது பிறந்த தினத்தை 2015ம் ஆண்டு நினைவு கூருகிறோம். இதற்குப் பல காரணங்கள் உள்ளன. இவர் ஒரு சிறந்த கல்விமான், மிகச் சிறந்த கணித ஆசிரியர், பலராலும் பாராட்டப்பட்ட ஒரு அதிபர். இவை யாவற்றையும் விட மிக முக்கியமான காரணம் எதுவெனில் அவரது சுதந்திர வேட்கை, ஏகாதிபத்திய எதிர்ப்பு, பொதுவுடமை அரசியல் என்பனவாகும்.

இவர் 1915ம் ஆண்டு யாழ். மாவட்டத்தில் உள்ள வட்டுக்கோட்டை அராலியில் நிலச் சுவாந்தார் குடும்பத்தில் பிறந்தார். தனது ஆரம்பக் கல்வியை யாழ்ப்பாணக் கல்லூரியில் பயின்று மிகச் சிறந்த மாணாக்கர் எனப் பாராட்டப்பட்டார். அங்கிருந்து கொழும்பு பல்கலைக்கழகக் கல்லூரிக்கு தேர்வானார். அங்கு கணிதப் பாடத்தில் சிறப்புப் பட்டம் பெற்று புலமைப் பரிசிலும் கிடைக்கப்பெற்றார். இதன் காரணமாக பிரித்தானிய கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் இம்மானுவல் கல்லூரியில் தனது உயர் பட்டப்படிப்பைத் தொடர்ந்தார். அங்கு கணிதத் துறையில் மிகச் சிறப்பான உயர் விருதினைப் பெற்றார்.

பிரித்தானியாவில் கல்வியைத் தொடர்ந்த வேளையில் ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கங்களை அவதானித்தார். குறிப்பாக இந்திய சுதந்திரத்திற்காக போராடும் பல இளைஞர்கள் காலம்சென்ற இந்தியத் தலைவர் கிருஷ்ணமேனன் அவர்களின் வழிகாட்டலில் அணிதிரண்டு செயற்பட்டனர். இந்திய சுதந்திரத்திற்காக, ‘பிரித்தானியா வெளியேறு’ என்ற இயக்கத்தில் மேனன் அவர்களுடன் இணைந்து அவரின் செயலாளராக செயலாற்றினார். இதன் காரணமாக பல புகழ்பெற்ற மாணவர்கள் பலரின் நண்பரானார்.

மேற்கு வங்கத்தின் முதல்வராக தொடர்ந்து 25 ஆண்டுகள் பணிபுரிந்தவரும், இந்திய மார்க்ஸிஸ்ட் கட்சியின் செயலாளராகவும் இருந்த ஜோதிபாசு மற்றும் அக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரார்களாக செயற்பட்ட பூபேஷ் குப்தா, இந்திரஜித் குப்தா, ரேணுச் சக்கரவர்த்தி, பார்வதி கிருஷ்ணன், மோகன் குமாரமங்கலம் போன்றோரின் நெருங்கிய தோழனாகவும் இருந்தார். இவற்றிற்கெல்லாம் முத்தாய்ப்பு வைத்தாற்போல் இந்தியாவின் முதலாவது பிரதமாரான ஜவகர்லால் நேரு அவர்களின் மகளும், பின்னர் பிரதமாரகவும் பணியாற்றிய இந்திராகாந்தியின் கணவரான பெருஸ் காந்தியின் மிக நெருங்கிய நண்பராகவும், இவர்களின் காதல் திருமணம் இனிதே நிறைவுற உதவியிருந்தார்.

பிரித்தானியாவில் கல்விகற்ற வேளை இலங்கையில் இடதுசாரி அரசியலை, தொழிற்சங்க நடவடிக்கைகளை ஆரம்பிக்கும் பொருட்டு தனது சக நண்பர்களான பொன். கந்தையா, பீட்;டர் கெனமன் ஆகியோருடன் விவாதித்தது மட்டுமல்லாமல், இம் மூவரும் பிரித்தானிய கம்ய+. கட்சியில் தம்மை இணைத்துக் கொண்டனர்.

1939ம் ஆண்டளவில் தனது கல்வியை முடித்து தாயகம் திரும்பியதும் ஏனையோர் போல் உயர்ந்த அரச பதவியை அல்லது பல்கலைக்கழக பேராசிரியர் வேலையை நோக்கிச் செல்லாமல் முழுநேர மக்கள் தொண்டனாக, சமூக மாற்றத்தை ஏற்படுத்தும் கடமைவீரனாக தம்மை அர்ப்பணித்தார்.

ஆரம்பத்தில் இலங்கையின் பிரபல இடதுசாரித் தலைவரான டாக்டர். எஸ். ஏ. விக்ரமசிங்கவுடன் இணைந்து சமசமாஜக் கட்சியில் பணியாற்றினார். இக் கட்சியே இலங்கையின் முதலாவது இடதுசாரி இயக்கமாகும். துர்அதிர்ஷ்டவசமாக சர்வதேச அளவில் எழுந்த தத்துவார்த்த போராட்டங்கள் இலங்கை இடதுசாரிகளையும் பாதிக்கத் தவறவில்லை. இதனால் டாக்டர். விக்ரமசிங்க மற்றும் சிலர் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட இவர் அவ் வெளியேற்றத்திற்கு எதிராக கட்சிக்குள் போராட்டங்களை நடத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டார். முடிவில் இவரும் வெளியேற்றப்பட்டார்.

சமசமாஜக் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட இவர்கள் பிரித்தானியாவிலிருந்து தாயகம் திரும்பிய தமது நண்பர்களான பொன், கந்தையா, பீட்டர் கெனமன் மற்றும் பலருடன் இணைந்து ஐக்கிய சோசலிசக் கட்சியை 1940 இல் ஆரம்பித்தனர். தொழிற் சங்கங்களை ஸ்தாபித்து, தொழிலாளர் உரிமைகளுக்காக போராடியபோது பிரித்தானிய குடியேற்ற ஆட்சியாளர் இப் போராட்டங்களுக்கு அஞ்சி அக் கம்யூனிஸ்ட். கட்சியை தடைசெய்தார்கள். இவ்வாறான தடைகளை அவர்கள் எதிர்பார்த்தே இயங்கியதால் தடைக்குப் பின்னர் சோர்ந்து போய்விடவில்லை. இரகசியமாக இயங்கினார்கள்.

1943இல் தோழர்களான வைத்திலிங்கம், பொன். கந்தையா, பீட்டர் கெனமன், டாக்டர். விக்ரமசிங்கா போன்றவர்களும் வேறு பலரும் இணைந்து இலங்கை கம்ய+. கட்சியை 1943ம் ஆண்டு யூலை மாதம் 3ம் திகதி உத்தியோகபூர்வமாக ஆரம்பித்தார்கள். இதன் கீழ் இலங்கைத் தொழிற்சங்க சம்மேளனம் செயற்பட்டது. இதன் செயலாளராக வைத்திலிங்கம், கட்சியின் பொதுச் செயலாளராக பீட்டர் கெனமன் ஆகியோர் தெரிவாகினர்.

இந்தியாவின் சுதந்திரத்திற்கான போராட்டங்கள் மிகவும் உச்ச நிலையை அடைந்திருந்த வேளை பிரித்தானியர்கள் அங்கிருந்து வெளியேறலாம் என்ற நிலமை அதிகளவில் காணப்பட்டது. இதனால் இலங்கையிலிருந்தும் வெளியேறக்கூடும் என்ற நிலை ஏற்பட்டது. இவ் வேளையில் இலங்கைக்கான அரசியல் யாப்பை உருவாக்கும் பொறுப்பு சோல்பரி ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட்டிருந்தது. இவ் ஆணைக்குழுவிற்கு இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சி சில ஆலோசனைகளை முன்மொழிந்து கட்சியின் சார்பில் பீட்டர் கெனமனும், தொழிற்சங்கங்களின் சார்பில் வைத்திலிங்கமும் தனித்தனியே அனுப்பி வைத்தனர்.

அவ் ஆலோசனைகளின் சாராம்சம் பின்வருமாறு அமைந்திருந்தது.
– இலங்கை என்பது பல்லின சமூகங்கள் வாழும் நாடு.
– பல மதங்களைப் பின்பற்றும் நாடு.
– பல மொழி பேசுபவர்கள் வாழும் நாடு.
– பல கலாச்சாரங்களை பின்பற்றுபவர்கள் வாழும் நாடு.
– இலங்கையில் வாழும் தமிழர்கள் ஒரு தனித் தேசிய இனம்.

மேற்கூறிய அம்சங்கள் அதாவது இன்றைய தமிழ்த் தலைமைகளின் கோரிக்கைகளை அன்றே அரசியல் யாப்பில் இணைக்கப்படும் பிரதான அடிப்படைகளாக கம்யூனிஸ்ட் கட்சி முன்வைத்தது. அத்துடன் தமிழ் மக்களின் பாராம்பரிய பிரதேசங்கள் என அங்கீகரிக்கப்பட வேண்டும் எனவும், இப் பிரதேசங்களைத் தாமே நிர்வகிக்கும் உரிமை அதாவது சுயநிர்ணய உரிமை வழங்கப்படவேண்டும் எனக் கோரினர். ஆனால் ஆணைக்குழு அதனை ஏற்றுக்கொள்ளவில்லை.

இதன் பின்னர் பேரினவாதம் தலைதூக்கியது. இனப் பிரச்சனை உக்கிரமடைந்தது. தமிழர் பிரதேசங்களில் சிங்களக் குடியேற்றங்கள் ஆரம்பிக்கப்பட்டன. இவை மிகவும் தீவிரமாக தொடர்ந்ததால் நாட்டின் எதிர்காலம் கருதி வட இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சி பிரதேச சுயாட்சி முறையை வல்வெட்டித்துறையில் இடம்பெற்ற கட்சி மாநாட்டில் முன்மொழிந்தது. இத் தீர்மானம் 1955இல் மாத்தறையில் இடம்பெற்ற கட்சியின் தேசிய காங்கிரசில் அங்கீகரிக்கப்பட்டது. ஐக்கிய இலங்கைக்குள் பிரதேச சுயாட்சியை அன்றே வலியுறுத்திய ஒப்பற்ற ஒருவர் வைத்திலிங்கம் அவர்களாகும்.

கட்சியின் ழுமு நேர ஊழியனாக செயற்பட்ட இவரை கட்சியின் வட பகுதி வேலைகளுக்காக 50 களில் வடபகுதிக்கு அனுப்பினர். கட்சிப் பணிகளுக்காக வடபகுதி சென்ற அவர் யாழ். இந்தக் கல்லூரியின் ஆசிரியராக பணிகளைத் தொடங்கினார். கணித ஆசிரியராக கடமையாற்றிய அவர் சிறந்த மாணாக்கர்களை உருவாக்கியதோடு மட்டுமல்லாமல் ஆசிரியர்களுக்கென தொழிற்சங்கம் ஒன்றை உருவாக்க உழைத்து அதன் விளைவாக வடமாகாண ஆசிரியர் சங்கம் தோற்றம்பெற்றது. தொழிற்சங்கமாக ஆசிரியர் சங்கம் பதிவுசெய்யப்பட்டதோடு ஆசிரியர்களுக்கென இடமாற்றசபை ஒன்றும் தோற்றுவிக்கப்பட்டது. ஆசிரியர்களின் அனுபவங்கள் மாணவர்களை சென்றடைய வேண்டும் என்பதற்காகவும், கல்வித் தரம் வளர வேண்டும் என்பதற்காகவும் வடமாகாண ஆசிரியர் சங்கம் பல பரீட்சைகளையும் நடத்தியது. இதன் பின்னணியில் இவரது அயராத உழைப்பு காணப்பட்டது.

யாழ். இந்துக் கல்லாரியின் ஆசிரியராக இருந்த காலத்தில் உரும்பராய் இந்துக் கல்லாரியின் அதிபராக அவர் பதவி உயர்த்தப்பட்டார். இவரது தலைமையில் இயங்கிய அக் கல்லாரி புதுப் பொலிவைப் பெற்றது. அதிகளவிலான மலேசிய ஓய்வூதியம் பெறும் பிரதேசமாக உரும்பராய் கருதப்பட்டது. இதன் காரணமாக அவர் மலேசியா சென்று பணம் திரட்டி புதிய கட்டடிடங்களை நிறுவினார். அவரது நிர்வாகத்தினை பலரும் புகழ்ந்தனர்.

பல சிறந்த பண்புகளின் இருப்பிடமாக காணப்பட்ட இவர் சிறந்த கல்விமான், சிறந்த ஆசிரியர், தொழிற்சங்கவாதி, புகழ்பெற்ற அரசியல்வாதி ஆவார். அரசியல் கட்சிகளில் உள்ளோர் கட்சிகள் தாவும் நிலை இன்று சர்வ சாதாரணமாக ஆகிவிட்ட நிலையில் கட்சியின் ஆரம்ப காலம் முதல் 1984ம் ஆண்டு வரை கம்யூனிஸ்ட் கட்சியின் அதி உயர் பீடமான அரசியல் குழுவில் இருந்துள்ளார். உடல் நிலை காரணமாக ஓய்வு பெற்ற பின்னரே அவரது பணிகள் ஓய்வுக்குச் சென்றன.

இத்தகைய உயர்ந்த மனிதர்களை நாம் நினைவுகூர்வது சாலப் பொருத்தமே. பல சிறப்புகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தோழர். வைத்திலிங்கம் அவர்கள் எமது மத்தியில் இல்லாவிடினும் அவரது நினைவுகள் எம்மை விட்டு அகலாதவை. அந்த வகையில் அவரது 100வது பிறந்த தினத்தை நினைவுகூர்வதில் நாம் மிகவும் பெருமை கொள்கிறோம்.

ரி. குகதாஸ்
இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி வட மாநில செயலாளர்





Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com