Sunday, August 30, 2015

ISIS இன் அட்டூழியங்களும், அமெரிக்காவின் சமூகப்படுகொலை போர்களும். Bill Van Auken

செவ்வாயன்று சமூக வலைத் தளங்களில் பதியப்பட்ட படங்கள், சிரியாவின் பால்ம்ரா நகரிலுள்ள 2,000 ஆண்டு பழமையான பால் ஷாமின் கோயில் ISIS ஆல் (ஈராக் மற்றும் சிரியாவிற்கான இஸ்லாமிய அரசால்) சிதைக்கப்பட்டதை உறுதிப்படுத்துகின்றன. ISIS போராளிகள் அந்த பழமையான கட்டிடமெங்கிலும் வெடிமருந்துகளை வைத்து, பின்னர் அவற்றை வெடிக்க செய்வதை அப்படங்கள் எடுத்துக்காட்டுகின்றன, அக்கோயில் வெறும் இடிபாடுகளாக ஆக்கப்படுகிறது.

பண்டைய உலகின் மிக முக்கிய கலாச்சார மையங்களில் ஒன்றும், கிரேக்க-ரோமானிய எஞ்சிய இருப்புகளில் பாதுகாக்கப்பட்டு வந்த சிறந்த ஒன்றுமான அவ்விடத்தை மனம்போனபோக்கில் இடிப்பதற்கு, ஒரு வாரத்திற்கு முன்னதாக பேராசிரியர் கஹலெத் அசாத் காட்டுமிராண்டித்தனமாக படுகொலை செய்யப்பட்டார். பால்ம்ராவில் எஞ்சியிருந்தவற்றை அகழ்வதிலும், மீளமைப்பதிலும் பங்கு வகித்து வந்த 82 வயதான சிரியாவின் அந்த தொல்பொருள் ஆராய்ச்சியாளர், அங்கே சுமார் அரை நூற்றாண்டுகளாக தொல்பொருள்துறை தலைவராக இருந்து வந்தவராவார். அவ்விடத்தைச் சூறையாடுவதில் ISISக்கு அவர் உதவ மறுத்தமைக்காக அவரைக் கழுத்தறுத்து கொன்றனர்.

ஐக்கிய நாடுகள் சபையின் கலாச்சார மற்றும் கல்வித்துறை அமைப்பான யுனெஸ்கோ, அந்த அட்டூழியங்களை "போர் குற்றங்களென" நியாயப்படுத்தக்கூடிய வகையில் கண்டித்ததுடன், “அதற்கு பொறுப்பான குற்றவாளிகள் அவர்களது நடவடிக்கைக்காக கணக்கில் கொண்டு வரப்பட வேண்டும்" என்பதையும் சேர்த்துக் கொண்டது.

அந்த நடவடிக்கைக்கும் மற்றும் சிரிய மக்களுக்கு எதிராக மிக இரத்தந்தோய்ந்த அட்டூழியங்களுக்கும் பொறுப்பான குற்றவாளிகள், கணக்கில் கொண்டு வரப்பட வேண்டும் என்பது கேள்விக்கிடமற்றது. ஆனால் வெள்ளை மாளிகை, பெண்டகன் மற்றும் சிஐஏ இன் முன்னாள் மற்றும் இப்போதைய தலைமை அதிகாரிகள் தான் அதற்கான பிரதான பொறுப்பாளிகள் என்ற உண்மையே அவர்களை நீதியின் முன் கொண்டு வருவதற்கு தடையாகி விடுகிறது.

மதசார்பற்ற அரபு அரசாங்கங்களுக்கு எதிராக அவர்களது தொடர்ச்சியான ஆட்சி-மாற்ற நடவடிக்கைகளுக்காக, ISIS உள்ளடங்கிய இஸ்லாமிய சக்திகளுடன் இயங்கி கொண்டே, மத்திய கிழக்கில் அவர்கள் தான் ஒரு நாடு மாற்றி ஒரு நாட்டை வீணடித்தார்கள்.

ஒரு கலாச்சார பாரம்பரியத்தை ISIS திட்டமிட்டு அழித்தமை, 1975 இல் தொடங்கி 1979 வரையில் கம்போடியாவில் பொல் பொட் ஆட்சி (Pol Pot) மற்றும் கெஹ்மர் றூஜ்ஜின் குற்றங்களில் ஒரு வரலாற்று முன்னுதாரணத்தைக் கொண்டுள்ளது. அந்த ஆட்சி அந்நாட்டின் கலாச்சார பாரம்பரியங்களை அழிக்க துணிந்தபோது, அது மக்களுக்கு எதிராக பாரிய படுகொலைகள் மற்றும் பயங்கரவாத ஆட்சியை நடத்தி கொண்டிருந்தது.

ISIS மற்றும் கெஹ்மர் றூஜ்க்கு இடையிலான பொருத்தங்கள் கலாச்சாரம் மற்றும் மனிதர்கள் மீதான அவற்றின் காட்டுமிராண்டித்தன தாக்குதல்களோடு முடிந்துவிடவில்லை. இரண்டு விடயங்களிலுமே இத்தகைய அட்டூழியங்களுக்கான முன்நிபந்தனைகள், அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் ஒட்டுமொத்த சமூகங்களைச் சீரழித்ததன் மூலமாக உருவாக்கப்பட்டிருந்தன.
கம்போடியாவில், அமெரிக்க குண்டுவீச்சு நடவடிக்கை நான்காண்டுகளில் அந்நாட்டின் மீது சுமார் 532,000 டன் வெடிகுண்டுகளை வீசியது — இது இரண்டாம் உலக போர் முழுவதிலும் ஜப்பான் மீது வீசப்பட்ட டன் கணக்கிலான குண்டுவீச்சை விட மூன்று மடங்கு அதிகமாகும். அதன் விளைவாக ஏற்பட்ட மரண எண்ணிக்கை அதிகபட்சம் 600,000 ஆக மதிப்பிடப்படுகிறது, அதேவேளையில் 7 மில்லியன் மக்கள்தொகையில் 2 மில்லியன் பேர் வீடற்றவர்களாக ஆக்கப்பட்டு, அவர்களது பொருளாதார வாழ்க்கை சிதைக்கப்பட்டது.

சிரியா மற்றும் ஈராக் எங்கிலும் இப்போது ஓடும் இரத்தஆறும் மற்றும் ISIS உம், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பாகமாக நடத்தப்பட்ட அதேபோன்ற சமூகப்படுகொலை நடவடிக்கைகளின் நேரடி விளைபொருள்களாகும். ஈராக்கில், சட்டவிரோத 2003 அமெரிக்க படையெடுப்பும், அதை தொடர்ந்த ஆக்கிரமிப்பும் மற்றும் அரபு உலகிலேயே மிக நவீன சுகாதார மற்றும் சமூக உள்கட்டமைப்புகளில் ஒன்றாக விளங்கிய அந்நாட்டைத் படிப்படியாக அழித்தமையும், 1 மில்லியனுக்கும் அதிகமான ஈராக்கியர்களின் உயிர்களைப் பறித்ததுடன், கூடுதலாக 5 மில்லியன் பேரை அகதிகளாக்கியது. பென்டகனால் பின்பற்றப்பட்ட பிரித்தாளும் மூலோபாயம், ஈராக்கின் ஷியா மற்றும் சுன்னி மக்களிடையே வேண்டுமென்றே பதட்டங்களை தூண்டிவிட்டு, ஒரு வகுப்புவாத உள்நாட்டு போரை மூட்டியது.

இக்கொள்கையின் துணைவிளைவுகள் தான், அதிகரித்தளவில் பேரழிவுகரமான விளைவுகளோடு, அப்போதிருந்து நீண்டகாலமாக, தேசிய எல்லைகளைக் கடந்து பரவியுள்ளது, இவையனைத்தும் எண்ணெய்வளம் மிகுந்த மத்தியகிழக்கு மற்றும் மத்திய ஆசியா மீது மேலாதிக்கம் செலுத்தும் அதன் குறிக்கோளை முன்னெடுக்க வாஷிங்டன், இராணுவவாதத்தில் புகலிடம் தேடியதால் உந்தப்பட்டதாகும்.

சோவியத்-ஆதரவிலான ஆப்கானிஸ்தான் அரசாங்கத்திற்கு எதிராக ஆட்சி மாற்ற போரை சிஐஏ முடுக்கிவிட்டதிலிருந்து தொடங்கி, இதுவரையில், அமெரிக்கா 35 ஆண்டுகளுக்கும் மேலாக போர்களில் ஈடுபட்டு வருகிறது. ஆப்கானிஸ்தானில் அதுவே ஒசாமா பின் லேடன் மற்றும் அல் கொய்தாவின் ஏனைய ஸ்தாபகர்கள் உட்பட இஸ்லாமிய சக்திகளுடன் பிணைந்திருந்தது.

டிசம்பர் 2011 இல் ஈராக்கிலிருந்து கடைசி அமெரிக்க துருப்புகள் திரும்பப்பெறப்படுவதற்கு ஒன்பது மாதங்களுக்கு முன்னர், வாஷிங்டனும் அதன் நேட்டோ கூட்டாளிகளும் லிபியாவில் மௌம்மர் கடாபியின் அரசாங்கத்தைக் கவிழ்க்கவும் மற்றும் எண்ணெய் வளம்மிக்க அந்த வட ஆபிரிக்க நாட்டின் மீது அவர்களது சொந்த கைப்பாவை ஆட்சியை நிறுவுவதற்கும் தூண்டுதலற்ற மற்றொரு ஆக்கிரமிப்பு போரைத் தொடங்கினர். லிபிய அரசை சீரழித்தமை மற்றும் கடாபியின் படுகொலை அந்நாட்டை குழப்பத்தில் மூழ்கடித்ததுடன், இதுநாள் வரையில் அங்கே இரத்தஆறு ஓடுகிறது. லிபிய போரில், கைப்பற்றப்பட்ட டன் கணக்கான லிபிய ஆயுதங்களோடு சேர்ந்து, இஸ்லாமிய போராளிகள் குழுக்கள் அமெரிக்க பினாமிகளாக பயன்படுத்தப்பட்டனர், அதற்கடுத்து அது — சிஐஏ உதவியுடன் — சிரியாவின் உள்நாட்டு போருக்குள் நீண்டது, இது ISIS ஐ பலப்படுத்தியதுடன் ஈராக்கின் மூன்று மடங்கிற்கும் அதிகமான பகுதிகளைக் கைப்பற்றுவதற்கு நிலைமைகளை உருவாக்கியது.

முடிவில்லா "பயங்கரவாதத்திற்கு எதிரான போர்" என்ற பெயரில், ஈராக்கின் சுன்னி மக்கள் அதிகம் வாழும் பிரதேசங்களில் வாஷிங்டன் ISIS க்கு எதிராக ஷியா அடித்தளத்தைக் கொண்ட பாக்தாத் அரசாங்கத்துடன் கூட்டு சேர்ந்து மற்றொரு இராணுவ நடவடிக்கையை நடத்தி வருகிறது, அதேவேளையில் துருக்கி, சவூதி அரேபியா மற்றும் இதர சுன்னி வளைகுடா முடியாட்சிகளின் கூட்டணியுடன் சிரியாவில் இராணுவ நடவடிக்கைகளை அதிகரித்து வருகின்ற போதினும், ஜனாதிபதி பஷர் அல்-அசாத் அரசாங்கத்தைக் கவிழ்க்கும் போரில் "மிதவாத" சுன்னி இஸ்லாமியர்களையும் அதன் பினாமிகளாக பயன்படுத்தலாமென அவர்களைக் காண முயன்று வருகிறது.

நியூ யோர்க் டைம்ஸ் செவ்வாயன்று பிரசுரித்த ஒரு நீண்ட கட்டுரையில், அல் கொய்தாவுடன் பல்வேறு தொடர்புகளைக் கொண்ட ஒரு சுன்னி இஸ்லாமிய போராளிகள் குழுவான அஹ்ரர் அல்-ஷமாம் க்கு அமெரிக்கா மிக நேரடியாக உதவி வழங்கலாமா என்பதன் மீது ஒபாமா நிர்வாகத்திற்குள் ஓர் உள்விவாதம் நடந்துவருவதை எடுத்துக்காட்டியது. இக்குழு ஏற்கனவே முக்கிய அமெரிக்க கூட்டாளிகளான துருக்கி மற்றும் கட்டாரிடமிருந்து பெருகிய ஆதரவைப் பெற்றுக் கொண்டிருக்கிறது.

தசாப்தகால அமெரிக்க போர்களின் பயங்கர விளைவுகள் இப்போது ஐரோப்பாவிற்குள் பரவி வருகின்றன. அதிகரித்தளவில் நூறு ஆயிரக் கணக்கான அகதிகள் மோசமான நிலையில், வாஷிங்டன் கொலைக்களமாக மாற்றிவிட்ட அவர்களது தாய்நாட்டை விட்டு — பலர் அவர்களின் உயிரையே பணயம் வைத்து — வெளியேறி வருகிறார்கள்.

அவர்கள் தொடங்கிய இந்த பல்வேறு ஆக்கிரமிப்பு போர்களால் விளைந்த இந்த சகல குற்றங்களுக்கும், அட்டூழியங்கள் மற்றும் மனிதயின அவலங்களுக்கும் மொத்தமாக, அரசியல்ரீதியிலும் தார்மீகரீதியிலும், அமெரிக்க அரசாங்கமும் புஷ் மற்றும் ஒபாமாவில் தொடங்கி அதன் உயர்மட்ட நிர்வாகிகளுமே பொறுப்பாகிறார்கள்.

அவர்களில் யாருமே கணக்கில் கொண்டு வரப்படவில்லை. பெருநிறுவன பில்லியனர்களின் ஒரு செல்வந்த அடுக்கைப் பாதுகாப்பவர்களும் மற்றும் அவர்களது பிரதிநிதிகளும் தற்போதைய அரசியல் அமைப்பின் கீழ், அமெரிக்க மக்களுக்கு — இவர்களது போர் எதிர்ப்பை வழமையாக மட்டுப்படுத்திவிடும் அவர்கள் — பதில் கூறக் கூடியவர்களாக இல்லை.

இந்த போர் குற்றவாளிகளை நீதியின் முன் கொண்டு வந்து, அடுத்தடுத்த போர்களையும் மற்றும் அதிகரித்துவரும் ஒரு புதிய உலக போர் அச்சுறுத்தலையும் முடிவுக்குக் கொண்டு வரும் பணியைத் தொழிலாள வர்க்கம் தாங்கியுள்ளது. அது முதலாளித்துவத்தைத் தூக்கியெறிவதற்கான ஒரு புரட்சிகர சோசலிச வேலைத்திட்டத்துடன் ஆயுதபாணியாக்கப்பட்ட, ஒரு பாரிய சர்வதேச போர்-எதிர்ப்பு இயக்கத்தில் அதன் சுயாதீனமான பலத்தை ஒன்றுதிரட்ட வேண்டும்.

Read more...

Saturday, August 29, 2015

"துடைத்தெறியப்ப்பட வேண்டிய தலைமைத்துவம் எது என்பதும் வளர்த்தெடுக்கப்பட வேண்டிய தலைமைத்துவம் எது என்பதும் இப்போது நன்கு தெளிவாகியுள்ளது":

பொறியியலாளர் அப்துர் ரஹ்மான்

"தேர்தல் தினத்திற்குப் பின்னர் நடந்து முடிந்திருக்கும் சம்பவங்கள் எமது பிரதேசத்தில் இரண்டு வெவ்வேறு தரத்திலான அரசியல் தலைமைத்துவங்கள் இருப்பதனை நிரூபித்துள்ளன. அதில் ஒன்று நாகரிகமும் ஒழுக்கமும் நிறைந்த தலைமைத்துவம், மற்றையது காடைதனத்திற்கும் வன்முறைகளுக்கும் வழிகாட்டும் தலைமைத்துவமாகும். இதனைத் தற்போது மக்கள் தெளிவாகப் புரிந்துகொண்டுள்ளனர்" என பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் தெரிவித்தார்.

நடைபெற்று முடிந்த நாடாளுமன்றப் பொதுத்தேர்தலின் பின்னர் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியினால் ஏற்பாடு செய்யப்பட்ட மக்கள் சந்திப்பு நிகழ்வு காத்தான்குடி NFGG பிராந்திய வளாகத்தில் இடம்பெற்றது. இதன் போது உரையாற்றும் போதே NFGGயின் தவிசாளர் பொறியியலாளர் MM.அப்துர் ரஹ்மான் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தனதுரையில் மேலும் தெரிவித்ததாவது...

"நடந்து முடிந்த பாராளுமன்றப் பொதுத்தேர்தலானது, இலங்கை வரலாற்றில் மிகவும் சுமூகமாகவும் வன்முறைகள் குறைந்த ஒரு தேர்தலாகவும் பதிவு செய்யப்பட்டு, சர்வதேசத்தின் பாராட்டினையும் பெற்றிருந்தது. ஆனால் கடந்த 21.08.15 வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்ட தேசியப்பட்டியல் நியமனங்களில் முன்னாள் பிரதியமைச்சர் ஹிஸ்புள்ளாஹ்வின் பெயரும் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவரின் ஆதரவாளர்களினால் எமது பிரதேசத்தில் கட்டவிழ்த்து விடப்பட்ட காடைத்தனமான அரசியல் பழிவாங்கலானது, முழு முஸ்லிம் சமூகத்தினையும் வெட்கித்தலைகுனியச் செய்துள்ளது.

அது மட்டுமல்லாது இந்த வன்முறைச் சம்பவங்களின் பின்னர் மக்கள் இந்த ஊரில் தம்மை வழிநடாத்துகின்ற இரண்டு வகையான தலைமைத்துவங்கள் எவை என்பதினையும், அவைகளின் தகுதி தராதரம் எவ்வாறானது என்பதினையும் தெளிவாக விளங்கிக் கொண்டுள்ளனர். அதில் ஒன்றுதான் முன்னாள் பிரதியமைச்சர் ஹிஸ்புள்ளாஹ்வின் தலைமைத்துவத்தின் கீழ் வளர்க்கப்படு வரும் அநாகரீகமான, காடைத்தனமான, வன்முறை மிக்க, அரசியல் பழிவாங்கல்கள் நிறைந்த தலைமைத்துவமாகும். மற்றையது நல்லாட்சி ஒழுக்கங்களைப் பேணி, நாகரீகமாகவும், அமைதியான வழிகளிலும, மார்க்க வறையறைகளை மதித்தும் மக்களை வழிநடாத்துகின்ற நமது நல்லாட்சி தலைமைத்துவமாகும்.

ஆகஸ்ட் 18ம் திகதி தேர்தல் முடிவுகள் வெளியான போது, எமது கூட்டணி அமோக வெற்றியைப் பெற்றது. அத்தோடு சகோ, ஹிஸ்புல்லாஹ்வும் தோல்வியினைத் தழுவினார். அமோகமான வெற்றியினை நாம் பெற்றுக்கொண்ட அந்த சந்தர்ப்பத்தில் நாம் மிக அமைதியான முறையில் நாகரிகமாகவும் மார்க்க வரையறைகளை மீறாத வகையிலும் எமது வெற்றி உணர்வை வெளிப்படுத்தினோம். எமக்கு எதிராக நின்றவர்கள் மீது ஒரு பிழையான வார்த்தையினைக் கூட பிரயோகிக்காத வகையில் கவனம் செலுத்தி அந்த வெற்றித் தினத்தை நாம் கழித்தோம். இத்தனை ஒழுக்கமும் நாகரிகமும் பண்பாடும் நிறைந்த ஒரு தலைமைத்துவத்தையே நாம் கட்டி வளர்த்து வருகின்றோம்.

ஆனால் மக்களால் தோற்கடிக்கப்பட்ட கூட்டணியைச் சேர்ந்த ஹிஸ்புள்ளாஹ்வின் பெயர் தேசியப்பட்டியலில் அறிவிக்கப்பட்ட ஒரு சில மனித்தயாலங்களில் இந்த ஊரில் கட்டவிழ்த்து விடப்பட்ட மார்க்கத்திற்கும் மனிதாபிமானத்திற்கும் முரணான அரசியல் காடைத் தனங்களைக் கண்கூடாகக் கண்டோம். புனித இறை இல்லத்தில் மஃரிப் தொழுகை நடந்துகொண்டிருந்த நேரத்தில் அங்கு சென்று அட்டகாசம் புரிந்தனர். பள்ளிவாயலுக்கு முன்னால் மானக் கேடான காரியங்களைச் செய்தனர். தொழுகைக்குத் தயாராக இருந்த நமது சகோதரர்கள் மீது மூர்க்கத்தனமாக தாக்குதல்களை மேற்கொண்டு உயிராபத்துக்கு உள்ளாக்கினர். இந்த ஊரில் ஹிஸ்புளாஹ்வின் காட்டு மிராண்டித்தனமான அரசியல் ஏன் துடைத்தெறியப்பட வேண்டும் என்பதினை மீண்டுமொரு முறை இது மக்களுக்கு புரிய வைத்துள்ளது.

மாத்தரமின்றி எமது ஆதரவாளர்களை திட்டமிட்ட முறையில் வேண்டுமென்றே வன்முறைகளுக்கு அழைத்து, அவர்களையும் சட்டத்திற்கு முரணான வகையில் செயற்படுத்துவதற்கு ஹிஸ்புள்ளாஹ் ஆதரவாளர்கள் பல பிரயத்தனங்களையும் மேற்கொண்டனர். இருப்பினும் எமது சகோதரர்கள் காட்டிய பொறுமை, நிதானம், சமயோசிதம், பொறுப்புணர்வு என்பன இப்பிரச்சனையினை விரைவில் முடிவிற்குள் கொண்டு வந்துள்ளது. எமது தலைமைத்துவ சபை உறுப்பினர்கள் பலரும் சம்பவ தினம் கொழும்பில் இருந்த போதிலும், எமது ஆதரவாளர்கள் இவ்வாறு பொறுமையுடன் நடந்து கொண்டமையானது, மிகவும் வரவேற்கத்தக்கதாகும். இதுவே நாம் நமது மக்களை நாகரீக அரசியலுக்கு பயிற்றுவித்திருக்கின்ற முறையாகும்.

எனவே நாம் ஒரு போதும் வன்முறையினை வன்முறையினால் முடிவிற்கு கொண்டு வரமாட்டோம். நாட்டின் சட்டத்தையும் ஒழுங்கையும் மதித்து, குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி நீதியை நிலைநாட்டியுள்ளோம்.

தேர்தல் தினத்திற்குப் பின்னர் நடந்து முடிந்திருக்கும் சம்பவங்கள் எமது பிரதேசத்தில் இரண்டு வெவ்வேறு தரத்திலான அரசியல் தலைமைத்துவங்கள் இருப்பதனை நிரூபித்துள்ளன. அதில் ஒன்று நாகரிகமும் ஒழுக்கமும் நிறைந்த தலைமைத்துவம், மற்றையது காடைதனத்திற்கும் வன்முறைகளுக்கும் வழிகாட்டும் தலைமைத்துவமாகும். இதனைத் தற்போது மக்கள் தெளிவாகப் புரிந்துகொண்டிருக்கிறார்கள்.

எனவே நமது எதிர்கால சந்ததியினரின் நலன்களைக் கருத்தில் கொண்டு எமது சமூகத்தில் எவ்வாறான அரசியல் தலைமைத்துவம் துடைத்தெறியப்பட வேண்டும் என்பதும், எவ்வாறான தலைமைத்துவம் மேலும் வலுவூட்டி வளர்த்தெடுக்கப்பட வேண்டும் என்பதும் இப்போது நன்கு தெளிவாகியுள்ளது."

Read more...

Friday, August 28, 2015

நாங்கள் உரிமைக்காக மட்டும் போராடுவோம்.....கடமையை செய்ய காலியில இருந்து காமினி வருவான்....!!!!

இன்று முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் உள்ள பெண்கள் சிறுவர் பிரிவின் மாதாந்த கூட்டத்துக்கு சென்றிருந்தேன். வழமைபோல கூட்டத்தில் சுவாரசியமான விடயங்கள் (பெண்கள் சிறுவர் சம்பந்தப்படாத) பற்றி ஆராய்ச்சி செய்யப்பட்டது....அடுத்த கூட்டத்தையும் இதே போல பயனுள்ளதாக(?) இருக்குமாறு பார்த்துக் கொள்ளப்பட வேண்டும் என்று உறுதி பூண்டு கூட்டத்தை நிறைவு செய்தனர்.

கூட்டம் முடிந்து, வெளி நோயாளர் பிரிவைத் தாண்டி வெளியே வந்து கொண்டிருந்தேன். கணிசமான அளவு கூட்டம் வெளி நோயாளர் பிரிவில் காத்திருந்தது. கூட வந்த அலுவலக நண்பர் வேறொரு நபரை சந்திக்கச் சென்ற படியால் அவருக்காக நானும் OPD இல் காத்திருந்தேன்.

காத்திருந்த வேளை.....வைத்தியரின் அறையில் நடப்பதை கண்ணூடாக காணமுடிந்தது...கண்ட காட்சியில் சற்றே சுவாரசியம் பிறந்தது...ஒரு அறுபது வயது மதிக்கதக்க பெண்மணி, வைத்தியருக்கு என்னத்தையோ நடித்துக் காட்டிக் கொண்டு இருந்தார்.

அவரின் உடல் மொழியால் மருத்துவருக்கு எதையோ அவர் விளங்கப்படுத்த முயல்வது எனக்கு தெரிந்தது....பாவம் அந்த அம்மணி வாய் பேச முடியாதவர் போல..எவ்வளவு கடினமாக தனது நோயை மருத்துவருக்கு புரிய வைக்கின்றார் என்று பெருமூச்சை விடத் தொடங்க...........வந்த பெருமூச்சு பாதியில தங்கி விட்டது. ஏனெண்டா இப்பொழுது மருத்துவரும் நடிக்கத் தொடங்கி இருந்தார்....அட கஷ்டகாலமே டாக்குத்தரும் "மியூட்" போல எண்டு உத்துக் கவனிக்கத் தொடங்கினேன்.

இரண்டு பேரும் கைப்பாஷை தான்....திடீரென்று டொக்டர் எழும்பி தன்ர ட்ரௌசர் பொக்கட்டுக்குள்ள அகழ்வாராய்ச்சி செய்து போனை எடுத்து காதுக்க வச்சு வாயால கதைக்க தொடங்கினார்.

எனக்கு ஆர்வம் தாங்க முடியேல்ல....பிறவி விடுப்புக் குணம் என்னை இருக்க விடேல்ல. வேலை முடிஞ்சு "போவமே" எண்டு வந்த நண்பரை OPD இல் இருக்கச் சொல்லிப்போட்டு எழும்பிப் போய் அறை வாசலில் நின்ற மருத்துவ தாதியிடம் விசாரித்தேன். உள்ளுக்க என்ன நடக்குது ஆருக்கு குறைபாடு எண்டு.

அவ சொன்னா டொக்டரும் கதைப்பாராம்....அம்மணியும் கதைப்பாவாம்....ஆனா டொக்டர் "சீனா"வாம் அம்மணி "தானா"வாம்..

"அப்ப "தானா" வில டொக்டர் இல்லையோ" என்றேன்.

"இருக்கினம்....ஆனா கொஞ்சப்பேர்"

"கொஞ்சமெண்டா எத்தனை?"

"ஆறு"

"இந்த ஆஸ்பத்திரியில் மொத்தம் எத்தினை டொக்டர்ஸ்?" என்றேன் குழப்பத்துடன்.

"முப்பத்துநாலு" எண்டா தெளிவா.

"அப்ப மிச்சம் இருபத்தெட்டும்.....?"

"சீனா"

முப்பத்துநாலு மருத்துவர்களுக்குள்....இருபத்தெட்டு பேர் தென்னிலங்கையிலிருந்து வந்து முல்லைத்தீவில் வந்து தங்கி இருந்து சேவையாற்றுகின்றார்கள்....நம்மவர்கள் வெறும் ஆறுபேர் தான்.

அதிலும் ஐவர் முல்லைத்தீவையும் ஒருவர் கிளிநொச்சியையும் சொந்த இடமாகக் கொண்டவர்கள். அவர்களிலும் மூண்டு பேர் மக்களின்ர வரிப்பணத்தில படிக்காமல் ஆத்தை அப்பன்ர சொந்தக் காசில ரஷ்யாவில படிச்சவையளாம்....

கோபத்தை விட வெட்கம் தான் நிறைய வந்தது எனக்கு...

ஒரு வருடத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து மருத்துவ பீடத்துக்கு தெரிவு செய்யப்படுபவர்கள் ஐந்து அல்லது ஆறு பேர்...அப்ப எப்படி இது சாத்தியம்?

சிலவேளை முல்லைத்தீவை சேர்ந்த டொக்டர்ஸ் படித்து முடித்ததும்...முல்லைத்தீவை விட பின் தங்கிய மாவட்டங்களுக்கு சேவையாற்றப் போயிருப்பினமோ எண்டு...நினைச்சா...முல்லைத்தீவு தானாம் இலங்கையில "அதிகஷ்ட பிரதேசம்" எண்டு கூகிள் சொல்லுது. பிறகு நானென்னத்தை சொல்ல?

ஆரும் எங்கையெண்டாலும் போகட்டும்.......என்ர கேள்வி என்னெண்டா.....

கொக்கிளாயில வயல் காணிய சிங்களவன் பிடிச்சு வயல் செய்தா வரிஞ்சு கட்டிக் கொண்டு போய்...போட்ட கதியாலுகளை புடுங்கி எறியிறம்......நல்ல முயற்சி!

செம்மலையிலையும்...மாத்தளனிலையும் கரைவலையை அவன் கொண்டு வந்து போட்டு மீன் பிடிச்சா...அடிச்சுப் பதறி ஐ.நா வரைக்கும் மனு குடுக்குறம்....மிக நல்ல முயற்சி!!!!

எங்கட வளங்கள் சூறையாட நாங்கள் ஒருபோதும் இடமளிக்க கூடாது..... எவன் வந்தாலும் விடமாட்டம்.

ஆனா...படிச்சு, டாக்குத்தரா வந்ததும் நாங்கள் நைஸாக கழண்டு கொள்வோம். இதுக்கெண்டு சேவை செய்ய தெற்கில இருந்து அவங்கள் வருவாங்கள்.

கொக்கிளாயிலையும் கொக்குதொடுவாயிலையும் தூக்கிப்பிடிச்ச கொடிய மாஞ்சோலை ஆஸ்பத்திரியிலையும் பிடிக்கிறது தானே?

வளங்கள் எண்டா எங்களுக்கு பௌதீக வளங்கள் மட்டும் தான் கண்ணுக்க தெரியும். மனித வளங்களை மறந்து விடுவோம். அப்படித்தானே?

அந்த இருபத்தெட்டு டாக்குத்தர்மாரும் தாங்கள் கும்பிட, மாஞ்சோலை ஆஸ்பத்திரியில புத்தர் சிலை வச்சா..... அப்ப தூக்கிப் பிடிச்சுக் கொண்டு வாங்கோ பிக்கானையும், மண்வெட்டியையும்!!!!!Read more...

இலங்கை தேர்தர்களுக்கு பின்னர்: தமிழ் தேசியவாதிகள் அமெரிக்க-ஆதரவிலான கட்சிகளை ஆதரிக்கின்றனர் By K. Nesan

ஆகஸ்ட் 17 இலங்கை பாராளுமன்ற தேர்தல்களையடுத்து, தமிழ் தேசியவாத கட்சிகள் கொழும்பில் ஒரு புதிய அமெரிக்க ஆதரவு ஆட்சியை நிறுவுவதற்கான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினது முயற்சிக்கு முக்கிய முண்டுகோல்களாக சேவையளிக்கின்றன.

ஐக்கிய தேசிய கட்சி (யூ.என்.பி., 107 ஆசனங்கள்) மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு (ஸ்ரீ.ல.சு.க., 96 ஆசனங்கள்) அடுத்தபடியாக, பாராளுமன்றத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு (த.தே.கூ.) மூன்றாவது பெரிய அணியாகும். தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன், தமிழர் பெரும்பான்மையாக உள்ள வடக்கு மற்றும் கிழக்கின் 29 ஆசனங்களிலிருந்து ஆககுறைந்தது 20 தமிழ் தேசிய கூட்டமைப்பு பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்குமாறு வாக்காளர்களுக்கு அழைப்பிவிடுத்திருந்தார். அந்நிகழ்வில், அதில் தமிழ் தேசிய கூட்டமைப்பு 16 ஆசனங்கள் மட்டுமே வெல்ல முடிந்தது. பதினான்கு பேர் நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்டனர், ஏனைய இரண்டு ஆசனங்கள் அக்கட்சியினது தேசிய வாக்கு விகிதாசார அடிப்படையில் வழங்கப்பட்டன.

ஜனவரி 8 ஜனாதிபதி தேர்தல்களில் அமெரிக்க-ஆதரவிலான ஆட்சி மாற்ற நடவடிக்கையில் நியமிக்கப்பட்ட சிறிசேன, யூ.என்.பி. உடன் ஒரு "தேசிய அரசாங்கம்" அமைக்க ஸ்ரீ.ல.சு.கட்சியின் ஒரு பிரிவை வென்றெடுக்க முயற்சிக்கின்ற வேளையில், தமிழ் தேசிய கூட்டமைப்பு இவரை தீவிரமாக ஆதரிக்கிறது. ஒரு கூட்டத்தில், சம்பந்தன் கூறினார்: “நாட்டில் ஒரு ஆக்கபூர்வமான மாற்றத்திற்கான மக்கள் தீர்ப்பை, ஜனவரி 8 அமைதிப் புரட்சியை அங்கீகரிக்கும் தேசிய அரசாங்கத்தை நாங்கள் ஆதரிப்போம்.”

சம்பந்தன், கிழக்கு மாகாணத்தில் உள்ள சம்பூரில் ஆகஸ்ட் 23 அன்று சிறிசேனவுடன் ஒரு மேடையினை கூட பகிர்ந்து கொண்டார். சிறிசேனவை "உண்மை, ஒற்றுமை, நீதி"க்காக போராடுமொரு போராளியாக புகழ்ந்ததுடன், “தாமதமின்றி தமிழர் பிரச்சினையில் கவனம் செலுத்துமாறு அவரிடம் கோருவது என்னுடைய கடமையென நினைக்கிறேன்” என்பதையும் சேர்த்துக் கொண்டார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு இந்த புதிய அமெரிக்க ஆதரவு அரசாங்கத்தின் அரசியல் அச்சாணியாக உருவாகக்கூடும். இப்போதே தெரிவதைப் போல, குறிப்பாக ஸ்ரீ.ல.சு. கட்சியுடன் ஒரு கூட்டணி உருவாக்குவதில் சிறிசேன சிரமப்படுகையில் மற்றும் யூ.என்.பி. ஒரு சிறிய பாராளுமன்ற பெரும்பான்மையுடன் ஆள நிர்பந்திக்கப்படுகையில் அதுவொரு முக்கிய பாத்திரம் வகிக்கும்.

அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் தொழிற்படத் துடிக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆர்வம், தமிழ் தேசியவாதத்தின் திவால்நிலைமையை நிரூபிக்கிறது. பல்வேறு சிறிய தமிழ் தேசியவாத கட்சிகளால் ஆதரிக்கப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு, கொழும்பில் ஒரு வன்முறையான பிற்போக்குத்தன அரசாங்கமாக இருக்கப்போகின்ற ஒன்றை ஆதரித்துவருகிறது. அதன் பிரதான பாத்திரம் இலங்கையை முழுமையாக, சீனாவை கட்டுப்படுத்த அல்லது அதனுடன் போர்தொடுக்க நோக்கம் கொண்ட அமெரிக்காவினது "ஆசியாவை நோக்கிய முன்னெடுப்புக்குப்" பின்னால் நிறுத்துவதாக இருக்கும். மேலும் சர்வதேச நாணய நிதியத்தால் கோரப்படும் சிக்கன நடவடிக்கைகளை திணிப்பதற்கும் அது பணியமர்த்தப்படும்.

சிறிசேன அரசாங்கம் தமிழர் பிரச்சினையை தீர்க்குமென தமிழ் தேசிய கூட்டமைப்பு வாதிட்டாலும், உண்மையில் அது 2009 உள்நாட்டு போர் முடிவில் தமிழர்களுக்கு எதிராக இரத்தந்தோய்ந்த தாக்குதலில் முன்னணிப் பாத்திரம் வகித்த அதிகாரிகளையே நிர்வாகத்திற்குள் அமர்த்தியுள்ளது. அத்தாக்குதல், தமிழ்-தேசியவாத தமிழீழ விடுதலைப் புலிகளின் (எல்.டி.டி.ஈ.) பல அங்கத்தவர்கள் உட்பட பல பத்தாயிரக் கணக்கானவர்களின் படுகொலையில் போய் முடிந்தது.

குறிப்பாக தொழிலாள வர்க்கத்திற்குள், வெடிக்கவிருக்கும் தீவிர சமூக பதட்டங்களை குறித்து முதலாளித்துவ வர்க்கம் நன்கறிந்துள்ளது. அத்தகைய நிலைமைகளின் கீழ், தமிழ் தேசியவாதிகளின் பாத்திரம், சிறிசேனவிற்கு எதிரான தொழிலாள வர்க்கத்தின் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் எதிர்ப்பை தடுப்பதாகவே இருக்கும்.

ஜனவரி 8 ஜனாதிபதி தேர்தல்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சாரம், இலங்கையில் ஜனநாயகத்தை உருவாக்கும் ஒரு "புரட்சிகர" சம்பவமாக நப்பாசைகளை ஊக்குவிப்பதில் மையப்பட்டிருந்தது. தேர்தலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாக, சம்பந்தன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவாளர் குழு ஒன்றுடன் கலந்துரையாடுகையில், “ஐ.ம.சு. கூட்டணியிலுள்ள மைத்திரிபால சிறிசேன அணி, யூ.என்.பி. உடன் இணைந்து 18ஆம் திகதி ஆட்சி அமைப்பாளர்கள். அந்த ஆட்சி மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்தை பெற தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு நல்க காத்திருக்கிறது. மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியமைக்கப்படுமாயின் புதிய அரசியல் யாப்பொன்று உருவாக்கப்படும். அந்த அரசியல் யாப்பின் மூலம் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு முன்னெடுக்கப்படும். வரையப்படவுள்ள அரசியல் யாப்பில் தமிழ் மக்களுடைய அரசியல் தீர்வுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். 65 வருடக்கால தமிழ் மக்களின் போராட்டத்துக்கு இதன் மூலம் உடனடி தீர்வு காணப்படுமென்பதில் நாம் உறுதியாக இருக்கின்றோம்” என்றார்.

யூ.என்.பி. தலைமையிலான கூட்டணியின் வெற்றிக்காக, தமிழ் தேசிய கூட்டமைப்பு கொழும்பு போன்ற தமிழ் மக்கள் அதிகம் உள்ள சில பகுதிகளில் அதன் சொந்த வேட்பாளர்களை நிறுத்துவதை தவிர்த்துக் கொண்டது. தேர்தலில் யூ.என்.பி. வெல்லும் என்பதில் சம்பந்தன் நம்பிக்கையோடிருந்தார். அவர்கள் அதை அடைந்தால், அது தமிழர்களுக்கான ஓர் அரசியல் தீர்வுக்கு "அருமையான சந்தர்ப்பமாக" இருக்குமென அவர் தெரிவித்தார்.

இதுவொரு கொடூரமான அரசியல் மோசடியாகும். பல தசாப்தகால இரத்தக்களரியில் அந்நாட்டை சூழ்ந்துள்ள இனப்பிளவுகளை தீர்க்க இலாயக்கற்றிருப்பதை இலங்கை முதலாளித்துவ வர்க்கமே நிரூபித்துள்ளது. உண்மையில், கொழும்பின் ஆளும் உயரடுக்கு தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்த, தமிழ் மக்களுக்கும் சிங்கள மக்களுக்கும் இடையே தேசியவாத உணர்வுகளை தூண்டிவிடுவதில் தான் தங்கியிருக்கின்றது.

சிறிசேனவே கூட இராஜபக்சவின் ஒரு நெருக்கமான கூட்டாளியாவார். அவர் 2009 இராணுவ தாக்குதலின் கடைசி இரண்டு வாரங்களின்போது பதில்பாதுகாப்பு அமைச்சராக பதவி வகிக்கையில்தான் படுமோசமான போர் குற்றங்கள் நடத்தப்பட்டன. விக்கிரமசிங்கவை பொறுத்த வரையில், அவர் விடுதலை புலிகளுக்கும் அவரது அரசாங்கத்திற்கும் இடையே கையெழுத்தான 2002 “புரிந்துணர்வு ஒப்பந்தத்தை" முறித்துவிட்டு, 2006 இல் மீண்டும் போர் தொடங்க அனுமதியளித்தார்.

தமிழ் தேசியவாத கட்சிகள், தமிழ் முதலாளித்துவ வர்க்கத்தின் ஒரு சிறிய அடுக்கை பிரதிநிதித்துவம் செய்கின்றன. அவை சிங்கள முதலாளித்துவ வர்க்கத்துடன் ஒரு உடன்படிக்கை செய்து கொள்ளப்பட்டால், அது தமது "சொந்த" மக்களையே சுரண்ட அனுமதிக்குமென நம்புகின்றன.

தமிழ் தேசிய கூட்டமைப்பு பரிந்துரைக்கின்ற "தீர்வுகளிலிருந்து" தமிழ் தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளுக்கு எந்தவொரு நன்மையும் கிடைக்கப் போவதில்லை. தமிழ் தொழிலாளர்களது நலன்கள், தமிழ் தேசியவாதத்துடன் முறித்துக் கொள்வதோடு, சிங்கள தொழிலாளர்கள் மற்றும் ஒடுக்கப்படும் மக்களின் ஐக்கியத்துடன் ஏகாதிபத்தியம் மற்றும் சிக்கன திட்டங்களுக்கு எதிரானவொரு கூட்டு போராட்டத்தின் மூலமாக மட்டுமே முன்னெடுக்க முடியும்.

இலங்கை முழுமையிலும் தொழிலாள வர்க்கத்தின் ஓர் ஐக்கியப்பட்ட இயக்கத்திற்கான சாத்தியக்கூறு, யூ.என்.பி. மற்றும் ஸ்ரீ.ல.சு.கட்சியை பீதியூட்டுவது போலவே, அதேயளவிற்கு தமிழ் தேசியவாத கட்சிகளையும் பீதியூட்டுகிறது. சமீபத்திய ஆண்டுகளில் தமிழ் தேசியவாதிகள் கணிசமான மக்கள் ஆதரவை இழந்திருப்பதற்கு அங்கே தெளிவான அறிகுறிகள் உள்ளன. தேர்தல் பிரச்சாரத்தின்போது, தமிழ் தேசிய கூட்டமைப்பால் கடந்தகாலத்தைப் போல கூட்டங்களுக்கு மக்களை ஈர்க்க முடியவில்லை. ஒருசில நூற்றுக்கணக்கான மக்களே கூட்டங்களில் கலந்து கொண்டனர், சில இடங்களில் நூறுக்கும் குறைவானவர்களே இருந்தனர். கொடூரமான உள்நாட்டு போரின் விளைவாக 40,000க்கும் அதிகமான தமிழர்கள் காணாமல் போன நிலையில், 1977 இல் ஸ்தாபிக்கப்பட்ட "வடக்கில் இலங்கை ஆயுதப்படைகளால் கைது செய்யப்பட்ட பெற்றோர்கள், பாதுகாவலர்கள், பொதுமக்களுக்கான அமைப்பு" தேர்தல்களை புறக்கணிக்குமாறு அழைப்புவிடுத்திருந்தது.

இத்தகைய நிலைமைகளின் கீழ் தான், அதேபோன்ற தமிழ் தேசியவாத வேலைத்திட்டத்தை முன்னெடுக்கும் ஏனைய தமிழ் கட்சிகள் குறிப்பாக, தமிழ் தேசிய மக்கள் முன்னணி (TNPF), ஜனநாயக போராளிகள் கட்சி (CD) தமிழ் தேசிய கூட்டமைப்பின் திவாலான வேலைத்திட்டத்திற்கு மக்களின் எதிர்ப்பை தடுமாறச்செய்யும் ஒரு முயற்சிக்கு முன்வந்தன. யாழ்பாண மாவட்டத்தில், தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு 15,022 வாக்குகளும் மற்றும் ஜனநாயக போராளிகள் கட்சிக்கு 1,979 வாக்குகளும் கிடைத்தன. ஜனநாயக போராளிகள் கட்சி, ஏனைய இடங்களில் தமிழ் தேசிய கூட்டணியின் வாக்குகளை பிரிக்க விரும்பவில்லையெனக் கூறி யாழ்பாண மாவட்டத்தில் மட்டுமே போட்டியிட்டது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் ஜனநாயக போராளிகள் கட்சியும் பிரதானமாக "சர்வதேச சமூகத்துடனான" அதாவது, ஏகாதிபத்தியம் மற்றும் இந்திய முதலாளித்துவ வர்க்கத்துடனான முன்மொழியப்பட்ட அவற்றின் பேரம்பேசும் தந்திரோபாயங்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து வேறுபடுகின்றன. அவை ஏகாதிபத்திய சக்திகளுடனான ஓர் உடன்படிக்கையை கொண்டு ஒரு தனி "பாரம்பரிய தாய்நாட்டை" பெறுவதன் மூலமாக அவர்களது நலன்களைப் பெற முடியுமென அதே நப்பாசைகளை விற்பனை செய்கின்றன. தமிழ் தேசிய மக்கள் முன்னணி, பேரம்பேசல்களில் "தமிழர்களின் நலன்களை முறையாக உயர்த்தவில்லை" என்பதற்காக த.தே.கூட்டணியை குற்றஞ்சாட்டுகிறது.

விடுதலை புலிகளின் 2009ன் மோசமான தோல்விக்கு பின்னர், தமிழ் தேசிய கூட்டமைப்பு இலங்கையின் வட-கிழக்கில் ஒரு சிறிய தமிழ் அரசுக்கான விடுதலை புலிகளின் கோரிக்கையிலிருந்து தன்னை தூர விலக்கிக்கொண்டது. தமிழ் தேசிய மக்கள் முன்னணி மற்றும் ஜனநாயக போராளிகள் கட்சி, பிரிவினைவாத உணர்வுகளை ஊக்குவித்துக் கொண்டு, தங்களைத்தாங்களே விடுதலைப் புலிகளை பின்தொடர்வோராக காட்டிக் கொள்கின்றன. இருப்பினும், அமெரிக்க ஏகாதிபத்தியம் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் கோரிக்கைகளுக்கு இயைந்து செல்லும் அவர்களது முன்னோக்கு, இன்றியமையாதரீதியில் த.தே.கூ. இல் இருந்து வேறுபட்டதல்ல.

அத்தேர்தல்களுக்கு பின்னர், தமிழ் தேசிய மக்கள் முன்னணி, தலைவர் கஜேந்திரன் பொன்னம்பலம் கூறுகையில், “தமிழ் தேசிய கூட்டமைப்பு அதனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டதை போல, சுயநிர்ணயத்துடன் கூடிய சமஷ்டி அடிப்படையிலான ஓர் தீர்வுக்காக உழைக்குமானால்" அவரது கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு ஆதரவளிக்குமென தெரிவித்தார். இவ்விதத்தில் அவர் கொழும்பில் அமெரிக்க-ஆதரவிலான அரசாங்கத்தை ஒன்றுசேர்க்கும் முயற்சிக்கு மறைமுக ஆதரவை முன்மொழிகிறார்.


Read more...

Tuesday, August 11, 2015

முன்னாள் போராளிகளா? பயங்கரவாதிகளா? பீமன்

எதிர்வரும் இருவாரங்களில் இலங்கை சனநாயக குடியரசின் 8 வது பாராளுமன்றம் ஆரம்பமாக இருக்கின்றது. நாட்டின் சட்டம் இயற்றப்படுகின்ற இந்த மகா சபையிலே இலங்கை அரசியல் யாப்பின் 6 வது திருத்தச் சட்டத்தின் 7ம் அத்தியாயத்தின் பிரகாரம் :

"..................................... ஆகிய நான் இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் அரசியலமைப்பை உறுதியாக போற்றிப் பாதுகாப்பேன் என்றும், இலங்கையின் ஆள்புலத்துக்குள்ளாகத் தனி அரசொன்று தாபிக்கப்படுவதற்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ, இலங்கையிலோ அல்லது இலங்கைக்கு வெளியிலோ ஆதரவு அளிக்கவோ, ஆக்கமளிக்கவோ ஊக்குவிப்பு அளிக்கவோ நிதி உதவவோ, ஊக்குவிக்கவோ, பரிந்துரைக்கவோ மாட்டேன் என்றும் பயபக்தியுடன் வெளிப்படுத்தி உறுதிசெய்கின்றேன் / சத்தியஞ்செய்கின்றேன்

என அழுத்தம்திருக்தமாக ஓங்கி உரைத்து (உச்சரிப்பில் வித்தியாசம் இருப்பின் repeat please - மீண்டும் ஒருதரம் சொல்லுங்கோ என்றும் சத்தம் குறைவாக இருந்தால் Louder please - உரக்க கத்துங்கள் என்றும் சபாநாயகரால் கூறப்படும்) தங்குதடைகள் ஏற்பாடுத்தாது தெளிவாக எழுதும் என பல தடவைகள் பரீட்சித்துப்பார்க்கப்பட்ட பேனா ஒன்றினால் கையெழுத்திடுவதற்காக வடகிழக்கிலிருந்தும் பல்வேறு சக்திகள் பல்வேறு கோஷங்களுடன் களமிறங்கியுள்ளன.

இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் அரசியலமைப்பை உறுதியாக போற்றிப் பாதுகாப்போம் என்றும், இலங்கையின் ஆள்புலத்துக்குள்ளாகத் தனி அரசொன்று தாபிக்கப்படுவதற்கு நேரடியாகவே மறைமுகமாகவோ இலங்கையிலோ அல்லது இலங்கைக்கு வெளியிலோ ஆதரவு அளிக்கவோ, ஆக்கமளிக்கவோ, ஊக்குவிப்பு அளிக்கவோ, நிதி உதவவோ, ஊக்குவிக்கவோ, பரிந்துரைக்கவோ மாட்டோம் என்றும் சத்தியம் செய்துகொள்ள இலங்கையின் அரசியல் யாப்பை ஏறிமிதித்து தனிநாடுகோரி, நாட்டை இரத்த வெள்ளத்தில் மூழ்கடித்த முன்னாள் பயங்கரவாதிகளும் முண்டியடிப்பது : "பயங்கரவாதிகள் தாம் செய்த தவறுகளை ஏற்றுக்கொண்டுள்ளார்கள்" என்பதை உணர்த்துகின்றது.

இலங்கை அரசியல்யாப்பு அதன் மக்கள் பிரதிநிதிகளுக்கு வழங்கியுள்ள வரப்பிரசாதங்களை அனுபவிப்பதற்காக மக்களிடம் வாக்குப்பிச்சை கேட்கின்றார்கள் முன்னாள் பயங்கரவாதிகள். ஆனால் இவர்கள் இதேமக்களின் வாக்களிக்கும் சுதந்திரத்தை ஆயுதமுனையில் பறித்த கொடிய ஜனாயக உரிமை மீறலுக்கு இதுவரை மக்களிடம் மன்னிப்பு கோரவும் இல்லை அதற்கான எந்த சமிக்கையும் தென்படவில்லை.

இலங்கை பிரஜைகளான முன்னாள் பயங்கரவாதிகளுக்கும் நாட்டின் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் உரிமையை அரசியல் யாப்பு அளித்திருக்கின்றது. ஆனால் பயங்கரவாதிகள் என கைது செய்யப்பட்ட இவர்கள் "புனர்வாழ்வளிக்கப்பட்ட பயங்கரவாதிகளாக" சமூகத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளார்களே அன்றி "முன்னாள் விடுதலைப் போராளிகளாக" அல்ல.

மேற்படி பயங்கரவாதிகளால் இந்நாட்டின் மக்கள் சொல்லொண்ணாத்துயரங்களை சந்தித்திருக்கின்றார்கள். மக்கள் விபரிக்க முடியாத வடுக்களை சுமந்து நிற்கின்றார்கள். விலைமதிப்பற்ற உயிர்களையும் உடமைகளையும் இழந்துள்ளார்கள். ஏன் வாழ்நாள் அங்கவீனர் ஆனோர் ஆயிரம் ஆயிரம்பேர். மேற்படி பாதிப்புக்களுக்கு பயங்கரவாதிகள் கூறும் ஒரே நியாயம் போராட்டத்தின் பெயரால் எடுக்கப்பட்ட முடிவுகள் என்பதாகும்.

இலங்கையிலே புலிகளால் மேற்கொள்ளப்பட்டது போராட்டமும் அல்ல இணைந்திருந்தவர்கள் போராளிகளும் அல்லர். மாறாக இடம்பெற்றது பயங்கரவாதமும் அந்த அமைப்புடன் இணைந்திருந்தவர்கள் பயங்கரவாதிகளுமே ஆவர். இவ்வாறே இலங்கையின் சட்டமும் வரையறுத்துள்ளது. இதை உலகநாடுகளும் வழிமொழிந்து புலிகளை இன்றுவரை பயங்கரவாதப்பட்டியலில் தீண்டத்தகாதவர்களாகவே வைத்துள்ளது.

இந்நிலையில் யாழ் மாவட்டத்தில் தேர்தலில் குதித்துள்ள முன்னாள் பயங்கரவாதிகள் : தாங்கள் "முன்னாள் போராளிகள்" என்ற முகவரியுடன் மக்கள் மத்தியில் வலம்வர ஆரம்பித்துள்ளனர். இம்முகவரியுடன் இவர்களது நுழைவுக்கான அனுமதி புலிகளின் கடந்தகால பயங்கரவாத செயற்பாடுகளுக்கு அங்கீகாரம் வழங்குவதாக அமைகின்றது. அத்துடன் புலிகளை இன்றும் இத்தேசத்தில் ஏற்க மறுக்கும் மக்களுக்கு அநீதி இழைப்பதாகவுள்ளது. புலிகளால் பாதிக்கப்பட்டோர் தாம் பயங்ரகவாதிகளால் தாக்கப்பட்டோம் என்றே கூறுகின்றார்கள். ஆனால் இன்றைய நிலைமையில் அவர்கள் போராளிகளால் தாக்கப்பட்டோம் என கூறவேண்டிய துர்பாக்கிய நிலைக்கு தள்ளப்படவுள்ளதை நினைத்து ஆத்திரமடைகின்றனர்.

எனவே இச்சொற்பிரயோகம் சமூதாயத்தில் ஒரு தரப்பை மனஉழைக்சலுக்கு உள்ளாக்குகின்றது என்பதை கருத்தில் கொண்டு நாட்டின் சட்டத்தையும், குடிமக்களின் உரிமைகளையும் காக்கவேண்டிய தரப்பினர் விரைவாக செயற்பட்டு குறித்த சொற்பிரயோகத்திற்கு தடையேற்படுத்துதல் அவசியமாகும்.

Read more...

Monday, August 3, 2015

மோசடி அரசியல் . - சுகு-ஸ்ரீதரன்

நெஞ்சு பொறுக்குதில்லையே- பாரதி

சாதாரண வறிய இளைஞர்களை ஐரோப்பாவிற்கும்- வட அமெரிக்காவிற்கும் அனுப்புவதாக அல்லது மத்திய கிழக்கில் சிறந்த வேலை வாய்ப்பை உருவாக்கித்தருவதாக வறிய பெண்களை ஏமாற்றும் முகவர்களைப் போலத்தான,; TNA MPS

“தவித்த முயல் அடித்த” கணக்காக பணம் கறப்பதற்காக இவர்கள் இதனைச் செய்கிறார்கள். ஒருவிதத்தில் இது தமிழ் தேசிய கூட்டமைப்பின் மோசடி அரசியலும் இந்த வகைப்பட்டதே. இது ஒன்றும் மிகையல்ல.

“பிரிவினையை ஆதரிக்க மாட்டோம்”; என்று வழமையாக சத்தியப்பிரமாணம் செய்யும் இவர்கள், 13 வதை குப்பைக் கூடையில் போடவேண்டும் , அதனால் எந்தப் பிரயோசனமும் இல்லை என்று கூறும் இவர்கள் மாகாணசபைத்தேர்தல்களையோ- உள்ளு}ராட்சி மன்றத்தேர்தல்களையோ கைவிடவில்லை.

தமிழ் மக்களை ஏமாற்றுவது- மோசடி செய்வதோடு ,தமிழ் மக்களின் அரசியல் தமது தனிப்பட்ட உரிமை என்று இந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆணவம் பிடித்த கனவான்கள் கருதுகிறார்கள். அதற்கேற்றபடியே தமிழ்மக்களும் செயற்படுகிறார்கள் -நடந்து கொள்கிறார்கள்.

13 வது மற்றும் சில உரிமைகள் கிடைக்கப்பெற்றிருக்கிறது, தமிழ் மக்களின் பிரச்சனைகள் உலகறியச் செய்யப் பட்டிருக்கிறது என்றால் அது பல்வேறு தரப்பு இளைஞர் யுவதிகளின் தியாகத்தால் தமிழ் மக்கள் அனுபவித்த துன்பங்களால், இந்தியாவின் தயவால் நிகழ்ந்தது.

அது ஒன்றும் சம்பந்தன் விக்கினேஸ்வரன் வகையறாக்கள் நிகழ்த்திய மந்திரவித்தைகளால் அல்ல. இரண்டு தலைமுறைகளின் போராட்டத்தின் பலாபலன்களை இந்த கனவான்களும் அவர்களின் பரிவாரங்களும் அறுவடை செய்திருக்கிறார்கள்.

தமிழ் மக்களும் இந்த மோசடிப்பேர்வழிகளிடமே தமது தலைவிதியை ஒப்புவித்திருக்கிறார்கள். யாழ்மையவாத சமூக? சிந்தனைக்கு நன்றியற்ற இயல்பொன்றுண்டு . அது இறந்தவர்கள் தியாகம் செய்தவர்களைப்பற்றி வாய்ப்பந்தல் போடும். ஆனால் தனது தலைவர்களாக திருடர்களையும் போலிக் கனவான்களையே அனேகமாக ஏற்றுக் கொள்ளும்.

புலம்பெயர் கனவான் நிறுவனங்கள் வரிசையாக இறந்தவர்களின் படத்தைப்போட்டு தமது ஊடகங்களில் -கருத்தரங்குகளில் -மனித உரிமைக் கூட்டங்களில் கண்ணீர் விடும் . புகழாரம் சூட்டும் . . ஆனால் “காளாஞ்சியை” உள்ளுர் மற்றும் சர்வதேச திருடர்கள் கனவான்களுக்கே வழங்கும்.

அவர்கள் ஒரு சிறு கல்லைக் கூட தூக்கி போட்டிருக்க மாட்டார்கள். எத்தகைய வேறுபாடுகள் முரண்பாடுகள் இருப்பினும் அனைத்து இயக்கங்களில் இருந்து இறந்தவர்கள் அனைவரும் சாமானியர்களின் பிள்ளைகளே. அவர்களின் குடும்பங்கள் வறுமையில் வாடுகின்றன.

ஆனால் இவர்களின் பேரில் தலைவர்களாகி இருப்பவர்கள் லண்டனிலும-; ஒட்டேவாவிலும் பவுண்- டொலர் விருந்தில் திளைக்கிறார்கள். இந்த விருந்து கொண்டாட்டங்கள் நடத்துபவர்கள் ஐரோப்பாவிலும் வட அமெரிக்காவிலும் வாழும் யாழ்மையவாத கனவான்கள்.

அவர்கள் தேர்தல் மேடையில் சுயநிர்ணய உரிமையை வென்றெடுக்கப்போவதாக , அந்நிய காலனி ஆதிக்க காரரிடமும் ,பேரினவாதிகளிடமும் இழந்த இறையாண்மையை வென்றெடுக்கப்போவதாக எல்லா மேடைகளிலும் முழங்குகிறார்கள்.

பிரபாகரனால் அடித்தளமிட்டு உருவாக்கபட்ட தமிழ் தேசிய கூட்டமைப்புகாரார்கள் இப்போதெல்லாம் பிரபாகரன் பற்றி மூச்சு விடுவதில்லை. ஆனால் மேடையில் பாசாங்காக எங்கள் தலைவன் பிரபாகரன் என்று வலிப்பு நோய் கண்டவர்கள் போல் யாராவது கத்தும் போது மேடைக்கு முன்னால் இருப்பவர்கள் உருக் கொண்டவர்கள் போல் ஆடுகிறார்கள்.

“புலிகள் இருந்த காலத்தில் ரொறன்ரோ காசு கலெக்சன் - வடம் கழுத்து சங்கிலி வசூல் ராஜாக்கள் ஏற்பாடு செய்யும் கூட்டங்களில் ஒரு பெண் தலை விரி கோலமாக இங்கு உள்ளுர் கோவில் வேள்விகளில் ஆடுவது போல மேடைக்கு முன்னால் சுழண்டு சுழண்டு ஆடி வருவா. வந்து மேடைக்கு முன்னால் தாலிக் கொடியை கழற்றி எறிவாவாம். அங்கு கூடியிருக்கும் மகாசனங்கள் -ஏமாளிகள் காசை வாரி இறைப்பார்களாம். அருவரி தொப்பிவியபாரி குரங்குகளின்ர கதைபோல.”

வடம் கழுத்து சங்கிலியுடன் காசு கலெக்சன் செய்யும் திருடர்களால்- வசூல் ராஜாக்களால் அரங்கேற்றப்படும் நாடகம் இது. இது ஐரோப்பா- வட அமெரிக்கா எங்கணும் பரவலாக காணப்பட்டது. இந்த திருட்டுக் கூட்டம், வசூல் ராஜாக்கள் புலிகளின் பணத்துடன் உலகம் முழுவதும் இலங்கை உட்பட சகல ஐசுவரியங்களுடனும் இப்போது வாழுகிறது.

ஆனால் புலிகள் உட்பட எல்லா இயக்கங்களிலும் இருந்த பிள்ளைகளின் குடும்பங்கள் தெருவுக்கு வந்ததும் வராத குறையாக வாழ்ந்து கொண்டிருக்கின்றன. இந்த திருட்டு கூட்ட வசூல் சக்கரவர்த்திகளின் மொடலில் தான் இங்கு தேர்தல் கூட்டங்கள் நடைபெறுகின்றன.

பம்மாத்தாக பாசாங்காக ரிஎன்ஏ மேடைகளில் பிரபாகரனின் பேரைச் சொன்னவுடன் முன்னால் ஐந்தறிவு மந்தை கூட்டம் போல் உட்கார்ந்திருப்பன எழும்பி உருக் கொண்டது போல் ஆடுதுகள். இந்த கபடதாரிகள் இந்த அறியாமையை தமது மூலதனம் ஆக்கியிருக்கிறார்கள். ஆயிரக்கணக்கான இளைஞர்களும் பெண்களும் மரணித்த போராட்டத்தின் பெறுபேறு மக்களை அருவருக்கும் கபடதாரிகளான கனவான்களின் கையில் தமிழர்களின் தலைவிதி மாட்டுப்பட்டிருக்கிறது.

யாழ்மைய-மத்தியதரவர்க்க மனம் எப்போதும் சேர். பொன் ராமநாதன் பாரம்பரிய அரசியல்தலைமையை நாடுவது. அவர்களைத்தான் கல்வியாளர் எனக்கருதுவது. இவர்கள் கூறும் சுயநிர்ணய உரிமையும் -இறையாண்மை மீட்பும் 2016 இல் இனப்பிரச்சனைக்கு தீர்வு கண்டிடுவோம் என்பதும் இவர்களின் பாரம்பரியமான ஏமாற்றின் மோசடியின் மறுவார்ப்பே. அடுத்த பொங்கல் தமிழீழத்தில், அடுத்த மேதினம் தமிழீழத்தி என்பதுபோல.

விதிவிலக்கானவர்கள் சிலர் இருக்கலாம்.

குறிப்பாக 1976 வட்டுக் கோட்டை மாநில மாநாட்டு பிரகடனத்தை தவிர மற்ற எல்லாவற்றையும் சொல்கிறார்கள.; பொய்- பித்தலாட்டம்- போகமுடியாத இடத்திற்கு வழி சொல்கிறார்கள். செப்டெம்பர் ஐ.நா மனித உரிமை அறிக்கையை ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள். மனித உரிமைக்கும் இவர்களுக்கும் என்ன சம்பந்தம் என்பதை ஆழமாக சிந்தித்தால் அதிர்ச்சியான விடைதான் கிடைக்கும்!

இனவாத அடிப்படையிலானதும் ,சகோதரப்படுகொலைக்கானதுமான பாசிச கருத்தியலை இவர்கள் தான் உருவாக்கி கொடுத்தார்கள். இப்போதும் அதன் வழியே தான் செயற்படுகிறார்கள். எனவே ஐ. நா அறிக்கையும் இதன் நதிமூலம் ரிசி மூலத்தையும் உள்ளடக்கவேண்டும்.

பொய்யையும் போகமுடியாத இடத்திற்கு வழி சொல்வதுமான இந்த பாரம்பரியத்தை எல்லாப்பாதையும் ரோமாபுரிக்குகே என்பதுபோல பாராளுமன்றம் புகுவதற்காக பயன்படுத்துகிறார்கள்.

இதுதான் உண்மை

தமிழ் தேசிய கூட்டமைப்பு போன்ற கொள்கையற்ற -கபடமும்- -வஞ்சகமும் -குழிபறிப்பும் -களவாணித்தனமும் -அயோக்கியத்தனமும்- சுயநலமும-; மோசடியும் ஏமாற்றுமான ஒரு கதம்ப கூட்டத்தை உலகெங்கும் அவதானிக்கமுடியாது. இதனை தலைமையென ஏற்றிவைத்திருக்கும் தமிழ் சமூகத்தை என்னென்பது

இவர்கள் பேரினவாதத்திற்கு தீனி போட்டு அதனை ஓயாமல் ஊதிப் பெருப்பித்துக் கொண்டிருக்கிறார்கள். பேரினவாதத்தை இந்த உணர்ச்சியூட்டும் போதை அரசியல் பேணிப்பாதுகாக்கிறது. டந்த 30 ஆண்டுகளில் லட்சக்கணக்கான மக்களின் மரணங்களுக்கும் இளைஞர் ,பெண்களின் மரணங்களுக்கும் இவர்கள் பொறுப்புச் சொல்லவேண்டும்.

தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் மரணித்தவர்களின் தொகையை எண்ணிக்கை கணக்கில் பட்டியிலிட்டுள்ளனர். இவர்களின் ஏமாற்றுமோசடி அரசியல் தான் பேரினவாத அரசியலை பலப்படுத்தியது. தமிழ் பாசிச அரசியலை உருவாக்கியது.

பேரழிவிற்கு பொறுப்புச் சொல்ல வேண்டியவர்கள் பிரதானமாக இவர்களே. இளைய தலைமுறையின் பேரழிவில் தமக்கு சம்பந்தமில்லை, நாம் வன்முறையாளர்கள் இல்லை என கைகழுவி விட்டு இப்போது கனவான்களாக உள்ள+ர் திருடர்களாக அரசியல் செய்ய புறப்பட்டிருக்கிறார்கள்.

காலாகாலத்திற்கு “வாராது வந்துற்ற மாமணிகளாக” இந்த திருடர்களையும் கனவான்களையும் யாழ்மையவாத தமிழ் அரசியல் கண்டு பிடித்துக் கொண்டுதான் இருக்கிறது. ஆனால் வரலாறு இத்தகைய போக்குகளுக்கு கருணை காட்டுவதில்லை.

இந்த யுத்தமும் அழிவும் நிகழ்ந்த போது அலுங்காமல் நலுங்காமல் தமது கல்வியை மேற் கொண்டவர்கள், எதுவித சமூகப் பிரக்ஞையும் அற்றிருந்தவர்கள் ,கூழைக் கும்பிடு போட்டு கோள் மூட்டிச் சீவித்தவர்கள், நாலாந்தரவழிகளில் பணம் சம்பாதித்தவர்கள் எல்லோரும் இப்போது தமிழர்களின் தலைவர்கள் .

சமூகத்தின் மன நிலை பண்பாட்டு நிலைகளுக்கேற்பவே அவர்களின் தலைவர்களும் இருக்கிறார்கள். மூகத்தின் நேர்மையல்ல இவர்களை தலைவர்களாக உருவாக்குவது. யாழ்மையவாத சமூகத்தில் நிலவும் களவாணித்தனம் தான் இவர்களை தலைவர்களாக உருவாக்குகிறது.

இன்று சகல விதமான நுகர்வுகலாச்சாரத்திற்கும் ஆட்பட்டிருப்பவர்கள் வாய்திறக்கமுடியாத எமது பிரதேசங்களுக்கு சுதந்திரமாக செல்லமுடியாத அன்றாடம் படுகொலைகள் பேரழிவு நிகழ்ந்து கொண்டிருந்த காலத்தை “அது ஒரு காலம் அழகிய காலம்” என்கிறார்கள்.

இந்த வேசதாரித்தனத்தை என்னவென்பது. தமது மனச்சாட்சியின் படியா இவர்கள் பேசுகிறார்கள்? இப்போதிருக்கும் ஜனநாயக இடைவெளி- அறத்தை நிலைநாட்டுவதற்கு உதவா விட்டால் பொய்யும் மோசடியும் கோலோச்சுமானால் அதனை மறுதலித்த இந்த போவழிகள் மீது கருணையற்ற இன்னொரு வரலாறு உருவாகும் பாரதியின் பாப்பா பாட்டு “பாதகம் செய்பவரை கண்டால் பயங்கொள்ளலாகாது மோதி மிதித்து விடு முகத்தில் உமிழ்ந்து விடு” என்பது கவிஞனின் சத்திய ஆவேசத்தில் இருந்த தான் வருகிறது.

இவர்கள் கூறும் சுயநிர்ணய உரிமையையும் ,இறையாண்மையையும் வென்றெடுப்பதற்கான பாதை பாராளுமன்றத்தேர்தல் ! ஆனால் இவர்களில் பலருக்கு சுயநிர்ணய உரிமை- திம்பு கோரிக்கைகள் -13 வது திருத்த சட்டமூலம் பற்றி இந்த சொற்களுக்கப்பால் எதுவும் தெரியாதவர்கள் .இந்த கும்பலை தலைவர்களாகத் தெரிவு செய்யும் தமிழர்களை என்ன வென்பது.

இந்த பேர்வழிகள் காலம் காலமாக பாராளுமன்றத்தில் தானே குடியிருக்கிறார்கள். அங்கு குடி இருப்பதற்காக எத்தகைய பேரழிவுப்பாதையைத்திறந்து விட்டார்கள். இது பற்றிய பிரக்ஞை எப்போதாவது இவர்களுக்கு இருந்ததா? இன்று யுத்தத்தின் அவலவாழ்வில் மிச்ச மீதியாக இருக்கும் பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்கள், இராணுவமயமக்கலில் இடம்பெயர்ந்த குடும்பங்கள் , காணாமல் போனவர்கள் , சிறைகளில் வாடுபவர்கள் , புலம் பெயர்ந்து தமிழக அகதி முகாம்களில் வாழ்பவர்கள்

எல்லாரையும் விற்று தமது அதிகாரக் கதிரை கனவுகளை நிறைவு செய்கிறார்கள். அப்பட்டமான சொந்த நலன்களுக்காக இரத்தமும் சதையுமான மக்களின் பிரச்சனைகளுடன் விளையாடுகிறார்கள். பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களின் பாதுகாப்பு, பொருளாதார மேம்பாடு என்பவற்றுக்காக என்ன செய்திருக்கிறார்கள். ஒரு மில்லியன்; பேரை புலம் பெயர் சமூகமாக கொண்டுள்ள சமூகத்திலிருந்து உள்ள+ர் வளங்களிலிருந்து சர்வதேச உதவிகள் அரச உதவிகளிலிருந்து எதையெல்லாம் செய்திருக்க முடியும்.

அப்படியான ஈடுபாடான மனப்பாங்கு இவர்களுக்கு இருக்கிறதா.

19 வது 20 வது என அரசியலமைப்புச் சீர்திருத்தங்களைப்பற்றி பேசப்படும் காலத்தில் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதற்கு இவர்கள் என்ன முயற்சியை மேற்கொண்டார்கள். தமிழ் மக்கள் சுயமரியாதை -கண்ணியத்துடன் வாழ்வதற்கான வாழ்வதற்கான ஏற்பாடுகளைச் செய்வதற்கான திட்டம் ஏதாவது இவர்களிடம் இருக்கிறதா? நிலமற்றவர்களின் பிரச்சனைக்கு தீர்வுகாணல் ,கிராமங்களின் வீதிகளைச் செப்பனிடல் ,சுகாதார வசதிகளை விருத்தி செய்தல், கல்வி இலவசமாக அனைத்துமட்டங்களிலும் கிடைப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்தல்

தண்ணிர் வளத்தை பாதுகாப்பது ,விருத்தி செய்வது, மாசடைதலில் இருந்து மீட்பது, தடுப்பது சேமிப்பது உள்ளிட்ட விடயங்களில் விரிவான அறிவு கிடையாது. உரிய ஆற்றல் கொண்ட மனிதர்களை இணைத்து வேலை செய்வது பற்றியும் அக்கறை இல்லை.

சமூக அக்கறை மற்றது போராட்டதில் பங்கு பற்றாத கோஸ்டிகள் மாகாண மட்டத்தில் அமைச்சர்களாகியிருக்கும் சூழ்நிலையில் சுயமாக வெளிநாடுகளில் இருந்து முதலீடு செய்ய முன்வருபவர்களை மனங்குன்றிப்போகச் செய்கிறார்கள். சமூக பிரக்ஞையற்ற இந்த கோஸ்டிகள் தமது சுயலாப நோக்கங்களுக்காக தமிழ்தேசிய கூட்டமைப்பின் சிரேஸ்டர்கள் எனச் சொல்லப்படுபவர்களால் அரசியலுக்கு கொண்டு வரப்பட்டவர்கள். இதனால் யாரும் இங்கு முதலிட ஆர்வமாக இல்லை. உள்ள+ராட்சி சபைகளில் இருந்து மாகாண சபை வரை கோரும் தட்சணைகள் திடக்கிட வைப்பனவாம்.

வழமையான அரசியலில் தட்சணை மாமூலான ஒன்றாக இருப்பதால் பெருமளவு இரத்தம் சிந்தப்பட்ட தமிழ் சூழலில் வெட்கம் அற்று இந்தப்பிரகிருதிகள் இதனை எதிர்பார்க்கின்றனவாம். அது உள்ள+ராட்சி மட்டம் வரையில் விரவிக்காணப்படுகின்றன.

புரையோடிப்போன தீண்டாமை ,வறியவர்களின் நிலப்பிரச்சனை ,பெண்கள் மீதான வன்முறைகள் போன்ற முக்கியத்துவம் வாய்ந்த சமூகப்பிரச்சனைகள் பற்றிய பிரக்ஞை ,சமூக நீதி- சமூகப் பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி அக்கறை இருக்கிறதா? போதை வஸ்து பாவனை, வன்முறைகள்- ஆடம்பரங்கள் ,உதாரித்தனம் ,இயற்கை சுற்றாடல் அழிக்கப்;படுவது, மீள்சுழற்சி இல்லா குப்பை கிடங்காக எமது பிரதேசங்கள் மாறி வருவது பற்றி எமது கல்வி முறை இதில் சீர் திருத்தம் தேவைப்படுகிறது. அது பற்றிய பிரக்ஞை இருக்கிறதா,

இன உரிமைகள், இனங்களின் சமத்துவம் ,இன சமூகங்களிடையே நல்லெண்ணத்தை ஏற்படுத்துவதற்கு இவர்கள் என்ன செய்திருக்கிறார்கள். பல்லினங்களின் நாடாக இலங்கையை உறுதிப்படுத்துவதில் இவர்களின் பங்களிப்பென்ன. சமூகம் மீள் எழுவதற்கான -சமூக ஏற்றத்தாழ்வுகளைக் குறைப்பதற்கான- சமூக அநீதிகளைத் துடைத்தளிப்பதற்கான சமூக நல்லெண்ணங்களை உருவாக்குவதற்கான எந்த திட்டமும் இவர்களிடம் கிடையாது. புலம்பெயர் வசதி படைத்தோரின் வேறுநாடுகள் வழங்கும் தனிப்பட்ட தட்சணைகளில் தான் கவனம்.

சாதாரண மக்களின் பிரச்சனைகள் அல்ல. சாதாரண மக்களின் பிரச்சனைகளை விற்று இங்கு பிழைப்பு நடத்தப்படுகிறது. இவர்களை தமிழ் மக்கள் தோற்கடிக்காத வரை- உதைத்து தள்ளாத வரை விமோசனம் இல்லை. விசச் சுழல் போல் ஒரே பொறியிலேயே தமிழ் மக்கள் விழுந்து கொண்டிருக்கிறார்கள். அதுபற்றிய சுரணை எதுவும் யாழ்மையவாத தமிழ் சமூக சிந்தனைக்கு கிடையது.

பரந்த உலக கண்ணோட்டம், நாடு இன சமூகங்கள் ,தமிழ் மக்களின் உரிமைகள் ,சமூகத் தேவைகள் பற்றி பரஸ்பர தொடர்புடன் அறிவார்ந்த முறையில் சிந்தித்து செயற்படுபவர்கள் தேவைப்படுகிறார்கள். சுடர் மிகு அறிவு கொண்டவர்கள் எளிமையான சமூக அக்கறையாளர்கள் தேவைப்படுகிறார்கள். அவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் ஒரு காலமும் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் ஆவதில்லை. ஆகவும் முடியாது. யாழ்மையவாத தமிழர்கள் பெரும்பாலும் திருடர்களையும் போலிக் கனவான்களையுமே நேசிக்கிறார்கள்.

தற்போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஏகபோகத்திற்கெதிரான ஒரு உடைவு தெரிகிறது எவ்வளவு காலம் நீடிக்குமோ தெரியாது அது நல்ல சகுனமே.

சுகு-ஸ்ரீதரன

Read more...

கிண்ணஸ் சாதனை… உலகில் வெகுவேகமாக அபிவிருத்தியை நோக்கிச் செல்லும் குடும்பம் மகிந்தவின் குடும்பமே….?

உலகில் மிகவும் வேகமாக அபிவிருத்தியை நோக்கிச் செல்லும் குடும்பமாக இருப்பது மகிந்த ராஜபக்ஷவின் குடும்பமே என பிரதியமைச்சர் ஹர்ஷ த சில்வா குறிப்பிடுகிறார்.

அது தொடர்பில் கிண்ணஸ் சாதனைப் புத்தகம் குறிப்பிடுவதாக கொழும்பில் இடம்பெற்ற கூட்டமொன்றில் அவர் விஷேடமாகத் தெளிவுறுத்தினார்.

எதுஎவ்வாறாயினும் கிண்ணஸ் சாதனைகள் அடங்கிய இணையத்தளத்தில் முழுமையாகத் இவ்வாறான ஒரு குடும்பத்தை தான் உள்ளிட்ட பத்துப் பேர் பலவாறாகத் தேடியும் கண்டு பிடிக்க முடியவில்லை என அவர் அக்கூட்டத்தில் குறிப்பிட்டார்.

வாசகர்களாகிய உங்களினாலேனும் கண்டுபிடிக்க முடியுமா? எனத் தேடுங்கள்….

இணையத்தள முகவரி
http://www.guinnessworldrecords.com/

(கேஎப்)

Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com