Sunday, October 26, 2014

நிர்வாக சபை உறுப்பினர்களாலும், தனி ஒரு குடும்பத்தாலும் சீர்குலைந்து போயிருக்கும் தாண்டிக்குளம் அருள்மிகு அற்புத ஐயனார் ஆலயம்.

அரச கலாச்சார அதிகாரிகள் தூங்குகிறார்களா?

வவுனியாவில் தாண்டிக்குளம் பகுதியில் பிரசித்து பெற்று விளங்கியது மட்டுமல்லாது வவுனியாவில் காணப்படும் தல வரலாறு உடைய கோயிலாகவும் இக் கோயில் காணப்படுகின்றது. வவுனியாவில் ஐயனார் கோயில் என்று குறைந்த எண்ணிக்கையிலான கோயில்களே இருக்கின்ற நிலையில், ஆகமங்களிலும், கோயில் வரலாற்றிலும் நடைபெறாத சம்பவம் இங்கு நடந்தேறுவதாக அவ்வூர் மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

கோயில்கள் பற்றி ஆராய்ந்து கொண்டிருந்த எம் நிரூபர் குழுவுக்கு கிடைத்த அதிர்ச்சியான, சங்கடமான தகவல்களையடுத்தே இக்கோயில் பற்றி ஆராய எத்தனித்தோம்.

2000 ம் ஆண்டு காலப்பகுதியில் இவ் ஆலயத்துக்கு பொன்னம்பலம் என்பவரால் கும்பாபிடேகம் நடைபெற்றது. தொடர்ந்து 19.08.2001 ல் இவ் ஆலயத்தின் மூல விக்கிரகத்தில் இருந்து கண்ணீர் வழிந்தோடியதாக அடியார்கள் தெரிவிக்கின்றனர். இது தொடர்பாக ஆலயத்தின் நிர்வாக சபை உறுப்பினர் ஒருவருடன் தொடரபு கொண்டு கேட்ட போது அந்த நிகழ்வு தொடர்பாக பத்திரிகைகளில் வந்த செய்திகளை காண்பித்தார்.

தொடர்ந்து பொன்னம்பலம் நிர்வாக சபைத் தலைவராக இருப்பது பொறுக்காத விசமிகள் சிலர் புளொட் உறுப்பினர்கள் சிலருடன் இணைந்து சதி செய்து இரண்டொரு வருடங்களில் உமாபதி என்பவர் தலைவராக பொறுப்பேற்றார். இது தொடர்பான மேலதிக தகவல்களை கோயிலை சூழ உள்ளவர்களிடம் கேட்ட போது அது தொடர்பாக அவர்கள் எதையும் தெரிவிக்கவில்லை.

தலைவர் - உமாபதி (கிராம சேவையாளர்)
செயலாளர் - சிவலிங்கம்
பொருளாளர் - இரங்கநாதன் (பொறுப்பிலிருந்து விலகிவிட்டதாக அறியப்படுகின்றது)

பொதுவாக நிர்வாக சபை பொறுப்பேற்று வருடாவருடம் பொதுக்கூட்டம் கூடி கணக்குகள் ஒப்படைக்கப்பட்டு பொதுச்சபையில் அனுமதி பெற வேண்டும். இது தொடர்பாக பொருளாளரிடம் கேட்ட போது தான் அப் பொறுப்பில் இருந்து விலகிவிட்டதாகவும், தான் ஐயனாரின் ஒரு அடியவர் என்றும் குறிப்பிட்டார்.

இவ் ஆலயம் தொடர்பாக மக்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்கள்.
1. இவ் ஆலயத்துக்கு பொதுக்கூட்டம் என்றோ, நிர்வாக சபைக்கூட்டம் என்றோ எதுவும் இதுவரை நடைபெறவில்லை.
2. ஆலயத்துக்கு என வழங்கப்பட்ட நிதிகள் தொடர்பாக எதுவித கணக்குகளும் யாருக்கும் தெரியாது.
3. நிர்வாக சபை என்ற ஒன்று இருக்க தலைவரின் அண்ணனான பகீரதன் என்பவர் தன்னிச்சையாக, தனியே ஆலய நிர்வாகத்தையும், கணக்குவழக்குகளையும் கையாள்கின்றார்.
4. ஆகம விதிக்கு முரணான கட்டடங்கள் கட்டப்படுகின்றன.
5. வெளிநாட்டில் இருந்து வந்த நிதிகளுக்கான ஆவணங்கள் பேணப்படவில்லை.
6. கோயில் ஐயர் தான்தோன்றித்தனமான நேரத்துக்கு வந்து பூசை செய்வது. இரவு 8.00 மணிக்கும் பூசை நடத்தும் நிலை.

இவ்வாறு கணக்கிட முடியாத அளவு பிரச்சனைகளை இவ் ஆலயம் கொண்டிருக்கின்றது. வவுனியா தெற்கு தமிழ் பிரதேச செயலகத்தில் முன்பு இருந்த பிரதேச செயலாளர் சிவபாதசுந்தரம் மற்றும் கலாச்சார உத்தியோகத்தர் நித்தியானந்தன் என்போருக்கு பல முறை முறைப்பாடுகள் தெரிவித்தும் அதற்கான எந்தவித நடவடிக்கைகளு; எடுக்கப்படவில்லை என்று தாண்டிக்குளம் பகுதி பிரதேசவாதி ஒருவர் தெரிவித்திருந்தார்.

திருவிழா, விசேட பூசைகள், பாலஸ்தானம் என்று எதுவும் இங்கு 10 வருடத்துக்கு மேலாக நடைபெறவி;லை. நூளாந்த பூசையும் ஒழுங்காக நடைபெறுவதில்லை. இதற்கான ஆதாரங்களை எமது நிரூபர் குழு ஒரு மாத காலமாக சேகரித்து வைத்துள்ளது.

மேலும் கோயிலுக்கு சொந்தமான சொத்துக்கள், மற்றும் பொருட்கள் எல்லாம் தற்போது தலைவராக இருக்கும் உமாபதி என்பவருடைய தாயாரது வீட்டில் இருப்பதும், அங்கிருந்து பொருட்கள் கோயிலுக்கும் வீட்டுக்கும் இடையே நடமாடுவதும் எம்மால் நேரடியாக அவதானிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு மக்களுக்கு பொதுவான கோயில் ஒன்று ஒரு குடும்பத்தால் ஆழப்படுவது கேலிக்கூத்தாக காணப்படுகின்றது.

இது தொடர்பாக தலைவரோடு தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது அவர் சரியான பதிலை அளிக்காத சந்தர்ப்பத்திலும், நித்தியானந்தன் என்பவர் சரியான பதிலை அளிக்காத சந்தரப்பத்தாலும் இச் செய்தியை வெளிப்படையாக பிரசுரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதற்கு இப்போது பொறுப்பான அதிகாரிகள் என்ன செய்யப்போகிறார்கள்? இரண்டு வாரங்களுக்குள் மாற்றங்கள் நிகழாவிடின் ஆதாரங்கள் யாவும் பிரசுரிக்கப்படும்.

-சிறீ-
தாண்டிக்குளம் நிரூபர்

Read more...

Tuesday, October 21, 2014

ஐரோப்பிய ஒன்றிய தடை நீக்கத்தால் புலி வர வாய்ப்பு ஏற்படலாமாம்!

தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் நீக்கியமையால் புலிகள் அமைப்பு சர்வதேச ரீதியில் மீளவும் செயற்படுவதற்கான வாய்ப்பு ஏற்படலாம். ஆனால், அதனை உறுதியாக சொல்ல முடியாது என்று அமைச்சரும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச்செயலாளருமான சுசில் பிரேமஜயந்த நேற்று திங்கட்கிழமைநடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, தெரிவித்தார்.

ஐரேப்பிய ஒன்றிய நீதிமன்றம், தமிழீழ விடுதலை புலிகள் மீதான தடையை நீக்கியுள்ளது. இலங்கையின் ஜனாதிபதியாக மஹிந்த ராஜபக்ஷ 2005ஆம் ஆண்டு பதவியேற்றார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்று ஒருவருடம் கடந்து அதாவது 2006 ஆம் ஆண்டு, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் மீது தடைவிதித்திருந்தது. இதனையடுத்து புலம்பெயர் தமிழர் அமைப்புகள் தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் மீதான தடையை நீக்குமாறு ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தன. தற்போது தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் மீதான தடை ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்தினால் நீக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு புலிகள் அமைப்பின் மீதான தடை நீக்கப்பட்டாலும் ஏனைய நாடுகளில் அத்தடை தொடர்ந்தும் உள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தினுள் அடங்கும் 28 நாடுகளில் மாத்திரம் இந்த தடை நீக்கப்பட்டுள்ளது. தடையை நீக்கியமையால் இந்த நாடுகளில் புலிகள் அமைப்பினை மீளக் கட்டியெழுப்பும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படலாம். புலம்பெயர் தமிழர்கள் புலிகளுக்கு ஆதரவாக மக்களிடம் நிதி திரட்டிவந்திருந்தனர். எதிர்காலத்தில் பலவந்தமாக நிதியை திரட்டலாம். இந்நிலையில், புலிகள் மீதான தடை நீக்கப்பட்டதையடுத்து இந்த நாடுகளில் மீண்டும் புலிகளுக்கு ஆதரவாக நிதிதிரட்டப்படும் அபாயம் காணப்படுகின்றது என்றார்.

இது தொடர்பில் அரசாங்கம் எந்தவிதமான நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போகிறது என்ற கேள்விக்கு பதிலளிக்கையில், இந்த விவகாரம் தொடர்பில் அரசாங்கம் சர்வதேச ரீதியில் இராஜதந்திர மட்டத்தில் தமது நடவடிக்கைகளை முன்னெடுக்கும். சில நாடுகளில் உள்ள சட்;டம் மற்றும் நீதி முறைக்கு அமைவாக தமிழீழ விடுதலை புலிகள் மீதான தடையை நீக்கலாம். இந்தியாவின் தமிழ்நாட்டு அரசியல்வாதிகள், புலிகள் மீதான தடையைநீக்குமாறு அந்நாட்டு அரசாங்கத்தை கோரியுள்ளனர். இறுதி தீர்மானம் அந்தந்த நாடுகளுடையது. எனினும், இலங்கையில் இந்த அமைப்பை 2009ஆம் முற்றாக நாம் தோல்வியடைய செய்தோம் என்றும் அவர் தெரிவித்தார்.

Read more...

Friday, October 17, 2014

சரத் பொன்சேகாவின் பெயரை வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்க உத்தரவு!

ஜனநாயக கட்சியின் தலைரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான சரத் பொன்சேகாவின் பெயரை வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்குமாறு சட்டமா அதிபர், தேர்தல்கள் ஆணையாளருக்கு பரிந்துரைத்துள்ளார். சரத் பொன்சேகாவுக்கு வாக்குரிமை இருக்கின்றதா? என்பது தொடர்பில் தெளிவுப்படுத்துமாறு தேர்தல்கள் ஆணையாளர், சட்டமா அதிபரிடம் விடுத்திருந்த கோரிக்கைக்கு பதிலளிக்கும் வகையிலேயே சட்டமா அதிபர் மேற்கண்டவாறு தெளிவுபடுத்தியுள்ளார்.

சட்டமா அதிபர் திணைக்களத்தில் விசேட அதிகாரிகள் குழுவின் பங்குபற்றலுடன் இடம்பெற்ற விசாரணைகளின் பின்னர் அந்த தீர்ப்பு தொடர்பிலான விபரங்கள் தேர்தல்கள் ஆணையாளருக்கு நேற்று வியாழக்கிழமை மாலை அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. அதனடிப்படையில் 2014ஆம் ஆண்டு தேர்தல் இடாப்பிலிருந்து சரத் பொன்சேகாவின் பெயரை நீக்கிவிடுவதற்கு தேர்தல்கள் ஆணையாளர் நடவடிக்கை எடுத்துள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சரத் பொன்சேகா, கடந்த மேல் மாகாண சபைத்தேர்தலின் போது கெஸ்பேவ தேர்தல் தொகுதியில் உள்ள வாக்களிப்பு நிலையத்தில் வாக்களித்தார் என்பதுடன் அவருடைய பெயர் 2013ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பில் உள்ளடக்கப்பட்டிருந்தது. இராணுவ நீதிமன்றத்தினால் தண்டனை வழங்கப்பட்ட ஒருவருக்கு, வாக்குரிமை இருகின்றதா என்று சிலர் தேர்தல்கள் ஆணையாளரிடம் வினவியிருந்தனர்.

அதுதொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனையை கோரியுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்திருந்தார். அதனடிப்படையில் சட்டமா அதிபரினால், தேர்தல்கள் ஆணையாளருக்கு வழங்கப்பட்டுள்ள ஆலோசனையை, கட்சி செயலாளர்களை அழைத்து உத்தியோகபூர்வமாக தேர்தல்கள் ஆணையாளர் இன்று வெள்ளிக்கிழமை அறிவிக்கவுள்ளதாக தேர்தல்கள் செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Read more...

ஜெயலலிதா ஜெயராமுக்கு இடைக்கால நிபந்தனை பிணை வழங்கியது உச்சநீதிமன்றம்!!

சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஜெயராமுக்கு பங்களூர் உச்சநீதிமன்றம் இடைக்கால நிபந்தனை பிணை வழங்கியது. மேலும், சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் விதித்த 4 ஆண்டு தண்டனையையையும் நிறுத்தி வைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதேவேளை, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய மூவருக்கும் பிணை வழங்கி உச்சநீதிமன்ற உத்தரவிட்டுள்ளது. பெங்களூர் தனி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும் 100 கோடி இந்திய ரூபாய் அபராதமும் விதித்து கடந்த மாதம் 27ஆம் திகதி பெங்களூர் உயர் நீதிமன்றத்தினால் தீர்ப்பு வழங்கப்பட்டது.

இந்த வழக்கில் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, அவரது உறவினர்கள் சுதாகரன் மற்றும் இளவரசி ஆகியோருக்கு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா 10 கோடி இந்தியா ரூபாய் அபராதமாக விதிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, பெங்களூர், பரப்பன அக்ரஹாரா சிறைச்சாலையில் சிறை வைக்கப்பட்ட ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரும் தங்களை பிணையில் விடுதலை செய்யக்கோரி கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இதுதவிர தனி நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்யக் கோரியும் தண்டனையை நிறுத்தி வைக்க வலியுறுத்தியும் தங்கள் சொத்துகளை விடுவிக்க வேண்டும் என்று கோரியும் தனித்தனியாக 4 மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

அவர்களுடைய பிணை மனுக்களை நீதிபதி சந்திரசேகரா கடந்த 7ஆம் திகதி நிராகரித்தார். குற்றவாளிகளுக்கு பிணை வழங்கலாம் என்று அரசு தரப்பில் விரும்பினாலும் ஊழலின் தீவிரத்தை கவனத்தில் கொண்டு தனி நீதிமன்றம் வழங்கிய தண்டனையை நிறுத்தி வைக்க கோரும் மனுவையும், பிணை மனுவையும் தள்ளுபடி செய்வதாக நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டு இருந்தார்.

கர்நாடக உயர்நீதிமன்றம் பிணை வழங்க மறுத்துவிட்டதால் ஜெயலலிதா சார்பில் கடந்த 9ஆம் திகதி உச்சநீதிமன்றத்தில் பிணை கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. அதற்கு மறுநாள் சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசி ஆகியோரின் சார்பில் ஜாமீன் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

ஜெயலலிதாவின் சார்பில் மூத்த வழக்கறிஞர் பாலி நாரிமன் கடந்த திங்கட்கிழமை தலைமை நீதிபதி எச்.எல்.தத்து மற்றும் நீதிபதிகள் மதன் பி.லோகுர், ஏ.கே.சிக்ரி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு ஆஜராகி ஜெயலலிதாவின் மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

இதேபோல் சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசி சார்பில் மூத்த வழக்கறிஞர் சுஷில் குமார் ஆஜராகி, அவர்களுடைய பிணை மனுக்கள் மீதான விசாரணைக்கான வேண்டுகோளை முன்வைத்தார். இந்த வேண்டுகோள்களை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், இன்று விசாரணைக்கு திகதி குறித்து உத்தரவு பிறப்பித்தனர்.

இதன்படி ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோரின் பிணை மனுக்கள் மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எச்.எல்.தத்து தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் முன்பு இன்று விசாரணை செய்யப்பட்டது.

இதனிடையே உச்ச நீதிமன்றத்தில் ஜெயலலிதா சார்பில் மூத்த வழக்கறிஞர் பாலி நாரிமன் ஆஜராவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சமூக ஆர்வலர் ட்ராபிக் ராமசாமி பொதுநலன் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். மேலும் அரசு தரப்பு வழக்கறிஞராக முன்னுக்குப் பின் முரணாக பேசி வரும் பவானி சிங் நீடிக்கக் கூடாது என்று உச்சநீதிமன்ற வழக்கறிஞரான தே.மு.தி.க.வைச் சேர்ந்த ஜி.எஸ்.மணியும் மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளார்.

இதேபோல் பா.ஜ.க.வின் சுப்பிரமணியன் சுவாமியும் தம் பங்குக்கு ஒரு மனுவைத் தாக்கல் செய்துள்ளார். தானும் இந்த வழக்கின் ஒரு அங்கம். அதனால் என்னுடைய கருத்தையும் கேட்க வேண்டும் என்று சுவாமி தனது மனுவில் கூறியுள்ளார். இந்நிலையில், ஜெயாவின் பிணை மனு தொடர்பான வாதப்பிரதிவாதங்களை கருத்திற்கொண்ட நீதிபதி குழு, அவருக்கு இடைக்கால நிபந்தனை பிணை வழங்கி உத்தரவிட்டது.

அத்துடன், ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனுவை 3 மாதத்தில் விசாரித்து முடிக்க வேண்டும் என்றும் கர்நாடக உயர்நீதிமன்றத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிணையில் விடுதலையாகும் ஜெயலலிதா, வீட்டை விட்டு வெளியே செல்லக் கூடாது என்றும் மேல்முறையீட்டு ஆவணங்களை டிசெம்பர் 18க்குள் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்ட 3 வாரத்திற்குள் வழக்கை முடிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது.

சிறப்பு நிதிமன்ற நீதிபதி குன்ஹாவுக்கு அச்சுறுத்தல் ஏதும் விடுக்க கூடாது என்றும் நீதிபதிகளை அவதூறு செய்யும் வகையில் பிரசுரங்கள் எதுவும் வெளியிடக்கூடாது என்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். சுப்பிரமணிய சாமி வீட்டுக்கு உரிய பாதுகாப்பு தரவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜெயலலிதா குற்றவாளி என்ற தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் தடைவிதிக்கவில்லை என்றும் நான்கு ஆண்டு தண்டனையை மட்டும் நிறுத்தி வைத்து இடைக்கால ஜாமீன் வழங்கப்படுவதாக உச்ச நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டுள்ளது.

Read more...

Thursday, October 16, 2014

றிப்தி அலியின் “அமெரிக்காவில் 30 நாட்கள்” நூல் வெளியீடு!

இளம் ஊடகவியாளர் றிப்தி அலி எழுதிய அமெரிக்காவில் முப்பது நாட்கள் (அனுபவப் பகிர்வு) நூல் வெளியீடும் விடியல் இணையத்தளத்தின் பரிசளிப்பு விழாவும் எதிர்வரும் சனிக்கிழமை (18) பி.ப 3.30 மணிக்கு இல. 149, மாளிகாகந்த வீதி, கொழும்பு 10 இல் அமைந்துள்ள ஜம்இய்யதுஷ் ஸபாப் கேட்போர்கூடத்தில் இடம்பெறவுள்ளது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம்.அமீன் தலைமயில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வில் இலங்கை அபவிருத்தி ஊடக மன்றத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி எம்.சீ.ரஸ்மின் 'முஸ்லிம் சமூகமும் சமூக ஊடகங்களும்'' எனும் தலைப்பில் சிறப்புரையாற்றவுள்ளார்.

புனித ரமழானை முன்னிட்டு விடியல் இணையத்தளத்தினால் நடத்தப்பட்ட கேள்வி – பதில் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு இதன்போது பரிசுகள் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read more...

Wednesday, October 8, 2014

“சிங்கள கூட்டமைப்பு” எனும் பெயரில் அரசியல் கட்சியை உருவாக்குகின்றது பொதுபலசேனா!

பொதுபல சேனா அமைப்பின் தலைமைத்துவத்துடன் “சிங்கள கூட்டமைப்பு” எனும் பெயரில் புதியதொரு அரசியல் கட்சியை ஆரம்பிக்கவுள்ளதாக அவ்வமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தெரிவித்துள்ளார்.

தமிழ் கூட்டமைப்பு, முஸ்லிம் கூட்டமைப்பு எனும் பெயர்களில் பல்வேறு அரசியல் கட்சிகள் இலங்கையில் உள்ளன. அக்கூட்டமைப்புக்களிலிருந்து ஒருபோதும் தலைவர்கள் வருவதற்கு இடமளியோம் என கொழும்பில் இடம்பெற்ற கூட்டமொன்றில் ஞானசார குறிப்பிட்டுள்ளார்.

தலைவர்கள் உருப்படுவதற்கும் உருவாவதற்கும் இந்தக் காலப்பகுதியை வழங்குவதாகவும், அவர்கள் உருப்படாதவிடத்து, உருவாகாதவிடத்து தான் செயற்படவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ள தேரர், நாட்டின் தலைவர்களை உருவாக்குது பொதுபல சேனாவே எனவும் குறிப்பிட்டுள்ளார்.

(கேஎப்)

Read more...

Tuesday, October 7, 2014

தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை பிணையில் செல்ல கர்நாடக உயர்நீதிமன்றம் மறுப்பு!

சொத்துக் குவிப்பு வழக்கில், சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஜெயராம் உள்ளிட்ட நால்வரையும் நிபந்தனை பிணையில் செல்ல கர்நாடக உயர்நீதிமன்றம் சற்றுமுன்னர் உத்தரவிட்டதாக இந்திய செய்தித்தளங்களில் செய்தி வெளியாகியிருந்த போதிலும் அந்த செய்தியை மறுத்துள்ள அத்தளங்கள் பிணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளன.

தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் தாக்கல் செய்துள்ள பிணை மனு மீதான விசாரணை இன்று (07) நடைபெற்றது.

ஜாமீன் மனு விசாரணையை முன்னிட்டு பெங்களுரின் சில முக்கியப் பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. முன்னதாக, ஜெயலலிதாவின் பிணை மனுவை முதல் மனுவாக விசாரிக்கக் கோரப்பட்டது. ஆனால், ஜெயலலிதாவின் மனுவை முதலில் விசாரிக்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.

ஜெயலலிதா தரப்பில் மன்றில் ஆஜரான வழக்குரைஞர் ராம் ஜெத்மலானி ஆஜரானார். யெலலிதாவின் மனுவை அவசர மனுவாக கருதி முதல் மனுவாக விசாரிக்க வேண்டும் என நீதிபதியிடம், ராம் ஜெத்மலானி கோரிக்கை விடுத்தார்.

ஆனால், மனுவை வரிசைப்படியே விசாரிக்க முடியும் என நீதிபதி சந்திரசேகர் மறுப்பு தெரிவித்தார். இந்நிலையில், ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரின் பிணை மனு வரிசை எண்படி 73ஆவது வழக்காக விசாரணைக்கு வந்தது.

உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை மேற்கோள் காட்டி ஜெயலலிதாவுக்கு பிணை வழங்கக் கோரி அவர் சார்பில் மன்றில் ஆஜரான வழங்குரைஞர் ராம் ஜெத்மலானி வாதிட்டார். சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனைக்கு எதிராக ஜெயலலிதா தரப்பில் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனு நிலுவையில் உள்ள நிலையில், அவருக்கு பிணை வழங்கலாம் என உச்ச நீதிமன்றத்தில் வழங்கப்பட்டுள்ள சில தீர்ப்புகளை ஜெத்மலானி மேற்கோள்காட்டி வாதிட்டார்.

இதேவேளை, ஜெயலலிதாவுக்கு பிணை வழங்க எதிர்ப்பு தெரிவித்து எதிர் மனு தாக்கல் செய்த அரசு தரப்பு வழக்குரைஞர் பவானி சிங், ஜெயலலிதாவுக்கு பிணை வழங்கினால் அவர் வெளிநாட்டுக்கு தப்பிச் செல்லக்கூடும் என்பதால், பிணை வழங்கக்கூடாது என வாதிட்டார்.

'ஜெயலலிதா தமிழக அரசியலில் மிகவும் செல்வாக்கு மிக்கவராக இருக்கிறார். அவரை பிணையில் விடுவித்தால் இவ்வழக்கின் போக்கை மாற்றவும் தண்டனையில் இருந்து தப்பிக்கவும் முயற்சி செய்வார். மேலும், அவர் தலைமறைவாகி விடவோ, வேறு நாடுகளுக்கு தப்பிச் செல்லவோ வாய்ப்பு இருக்கிறது. எனவே ஜெயலலிதாவுக்கு பிணை வழங்கக் கூடாது' என அவர் மன்றில் தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த ராம் ஜெத்மலானி, 'ஜெயலலிதா எப்போதும் சட்டத்தை மதித்து நடப்பவர், எனவே அவர் நாட்டை விட்டு வெளியேற முயற்சிக்க மாட்டார்' என்றார்.

ஜெயலலிதா தரப்பில் ஆஜரான ராம் ஜெத்மலானியின் வாதம் சுமார் ஒரு மணி நேரம் நீடித்தது. வழக்கறிஞர் பவானி சிங்கும், ஜெயலலிதாவுக்கு பிணை வழங்கக்கூடாது என தனது வாதத்தை முன்வைத்தார். இரு தரப்பு வாதங்களும் எழுத்துப்பூர்வமாகவும் அளிக்கப்பட்டன.

தொடர்ந்து சசிகலா, இளவரசி தரப்பு வழக்கறிஞர்கள் வாதிட்டு வந்தனர். உணவு இடைவேளைக்காக நீதிமன்றம் ஒத்திவைக்கப்பட்டது. பிற்பகல் 2.30 மணிக்கு பிணை மனு மீதான வாதம் மீண்டும் தொடரும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி மீண்டும் 2.30 மணிக்கு வாதம் தொடங்கியது. 3.35 மணியளவில் ஜெயலலிதா பிணையில் செல்ல முடியாது என கர்நாடக நீதிமன்றம் உத்தரவிட்டது.

Read more...

Monday, October 6, 2014

இலங்கையின் சிறந்த அதிபர்களில் ஒருவர் என்ற விருது மதுராப்புர அஸ்ஸபா அதிபருக்கு!

இலங்கையின் சிறந்த அதிபர்களுள் ஒருவர் என்ற விருதினை வெலிகம - மதுராப்புர அஸ்ஸபா கனிஷ்ட வித்தியாலய அதிபர் எம்.எஸ்.எம். ஹி்ப்ளர் (பீ.ஏ) பெற்றுக் கொண்டுள்ளார்.

இன்று கண்டியில் இடம்பெற்ற இலங்கையிலுள்ள சிறந்த அதிபர்களுக்கான விருதுவழங்கும் வைபவத்தின்போது பிரதமர் தி.மு ஜயரத்ன அவர்களினால் அஸ்ஸபா அதிபர் தனக்குரிய விருதினைப் பெற்றுக் கொண்டார்.

அதிபர் எம்.எஸ்.எம். ஹி்ப்ளர் பல வருடங்கள் வெலிகம - கப்புவத்தை அந்நூர் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் அதிபராகக் கடமையாற்றிவிட்டு அண்மையில் (இம்மாதம்) அஸ்ஸபாவின் அதிபராக பணியேற்றுள்ளார். ஏற்கனவே இவர் பல அரச, மாகாண மட்ட விருதுகளையும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

(கேஎப்)

Read more...

Sunday, October 5, 2014

சந்திரிக்கா- ரணில் பிரித்தானியாவில் பேச்சு வார்த்தை. பிரதமருக்கு பச்சை – ஜனாதிபதிக்கு சிவப்பு சமிக்கைகள்.

எதிர்வரும் ஜனவரியில் ஜனாதிபதி தேர்தல் தொடர்பான அறிவிப்புக்கள் வரவுள்ளது. இவ்வறிவித்தலுக்கு முன்னராக பிரித்தானிய சென்றுள்ள எதிர்கட்சித்தலைவர் ரணில் விக்ரமசிங்க பல்வேறு சந்திப்புக்களை மேற்கொண்டுள்ளார் என தெரியவருகின்றது.

அந்த வரிசையில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரணதுங்கவையும் இரு தடவைகள் சந்தித்து நீண்ட பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளார். அப்போது எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில்தனக்கு ஆதரவு தருமாறு வேண்டியுள்ளார் ரணில் விக்கிரமசிங்கா.

ரணிலுக்கு ஜனாதிபதித் தேர்தலில் ஆதரவு தர மறுத்துள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவை தோற்கடிக்கக்கூடிய பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்தி வெற்றி பெற்ற பின்னர் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை முற்றாக ஒழிக்கும் பொறிமுறை தொடர்பில் விளக்கியுள்ளதுடன் அவ்வாறு ஒழிக்கப்பட்டு பாராளுமன்றுக்கு அதிக அதிகாரங்கள் கிடைக்கப்பெற்ற பின்னர் உருவாகவுள்ள நிறைவேற்று அதிகாரம் கொண்ட பிரதமராவதற்கு ஆதரவு வழங்குவதாக தெரிவித்துள்ளார்.

மேலும் எதிர்வரும் தேர்தலில் எதிர்கட்சிகளுக்குள்ள சவால்கள் தொடர்பிலும் எதிர்கட்சிகளின் ஐக்கியத்தின் அவசியம் தொடர்பிலும் பேசப்பட்டுள்ளது.

Read more...

உவா மக்களின் வாக்கு முடிவுகள் மஹிந்தவின் கழுத்தில் கத்தியாக. மின்சாரக் கட்டணத்தை குறைக்கு உத்தரவு.

எதிர்வரும் ஜனவரியில் ஜனாதிபதி தேர்தலை நடாத்தி மூன்றாவது முறையாகவும் ஆசனத்தில் அமர தீர்மானித்துள்ள மஹிந்தருக்கு கடந்த ஊவா மாகாண சபை முடிவுகள் பேதி மருந்தாக அமைந்துள்ளது. இம்முடிவுகள் முன்றாவது முறையும் ஆசனத்தில் அமரவேண்டுமானால் மாற்றங்கள் வேண்டும். நாட்டில் ஊழல் அற்ற நல்லாட்சி வேண்டும் என்று செய்தியை சொல்லியுள்ளது.

இதன் விளைவாக, ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் 25 சதவீத மின் கட்டணத்தை குறைத்து மக்களுக்கு நிவாரணத்துடனான மின் கட்டண பட்டியல் எதிர்வரும் தினங்களில் வாடிக்கையாளர்களு;ககு கிடைக்குமென இலங்கை மின்சார சபை தெரிவிக்கின்றது.

ஊவா தேர்தல்களுக்கு முன்னர்; 25 சதவீதத்தினால் மின் கட்டணத்தை குறைக்க ஜனாதிபதி உத்தரவிட்டார் கடந்த 16 ஆம் திகதி ஜனாதிபதியின் உத்தரவிற்கமைய மின் கட்டணத்தை குறைக்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. அன்றைய தினம் தொடக்கம் அமுலுக்கும் வரும் வகையில் சகல வாடிக்கையாளர்களுக்கும் மின் கட்டணம் குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது .

Read more...

ஐக்கிய நாடுகள் சபையில் வஞ்சகமும், ஏமாற்றுத்தனமும். Barry Grey

இன்னுமொரு சட்டவிரோத யுத்தத்தைத் தொடங்கி வைத்துவிட்டு, ஜனாதிபதி பராக் ஒபாமா, உலகெங்கிலுமான அமெரிக்க நடவடிக்கைகளை நியாயப்படுத்த மற்றும் உலக மேலாதிக்கத்திற்கான அமெரிக்க உந்துதலின் பின்னால் எல்லா நாடுகளும் அணிவகுக்க வேண்டுமென கோரிக்கைவிட, ஐக்கிய நாடுகள் சபையின் முன்னால் வந்தார்.

அந்த உரை வெற்றுத்தனமான ஓய்ந்துபோன முழக்கங்களுடன் குறைகூறல்கள், அச்சுறுத்தல்கள் மற்றும் இறுதி எச்சரிக்கைகளோடு இணைந்த பகட்டுப்பேச்சின் ஒரு தொகுப்பாக இருந்தது. அது இழுத்தடித்த, சம்பிரதாயமான முறையில், ஒரு அறிவிப்பை தொடர்ந்து மற்றொரு அறிவிப்பாக, நீண்ட மௌன இடைவெளிகள் அளிக்கப்பட்டு மற்றும் ஒரு பொருத்தமான வாதத்தை முன்வைக்க எந்தவொரு முயற்சியும் இல்லாமல், ஒரு உதட்டசைவாக வழங்கப்பட்டது.

ஆனால் அனைத்திற்கும் மேலாக அந்த உரை எவ்வகையில் வித்தியாசமாக இருந்ததென்றால், அதன் வலியுறுத்தல்களுக்கும் அரசியல் யதார்த்தத்திற்கும் இடையே முற்றிலும் தொடர்பற்றதாக இருந்தது. ஒபாமாவின் பொய்கள் மிகவும் மோசமானதாகவும் ஆணவத்துடன் இருந்து, அவை ஒரு மூளைக்குழப்பத்திற்குரிய குணாம்சத்தை எடுத்திருந்தன. அதிகாரத்தில் இருப்பவர்களால் ஒரேயொரு உண்மையைக் கூட ஒப்புக் கொள்ள முடியாத புள்ளியை உலக அரசியல் நிலைமை எட்டியிருக்கின்ற போது, அதுவே ஒட்டுமொத்த அரசியல் மற்றும் பொருளாதார ஒழுங்கமைப்பு நெருக்கடியின் ஓர் அசாதாரண மட்டத்தின் வெளிப்பாக இருக்கிறது.

“ஒரு நாட்டின் எல்லைகள் மற்றொன்றால் மாற்றி வரையப்படக்கூடிய ஒரு உலகில்... வலிமைக்கே உரிமை இருக்கிறது என்ற ஒரு உலக கண்ணோட்டத்தை" ஒபாமா கண்டித்ததில், எல்லா பொய்களும், பாசாங்குத்தனமும் ஒன்றிணைத்து கூறப்பட்டன. அவர் அறிவித்தார், “அமெரிக்கா வித்தியாசமான ஒன்றுக்காக நிற்கிறது. உரிமையே வலிமையை தருவதாக நாங்கள் நம்புகிறோம்—அதாவது பெரிய நாடுகள் சிறிய நாடுகளை அச்சுறுத்தக் கூடாது; அதாவது மக்கள் அவர்களின் எதிர்காலத்தை அவர்களே தேர்ந்தெடுக்கக் கூடியதாக இருக்க வேண்டும்." [அழுத்தம் சேர்க்கப்பட்டுள்ளது]

இந்த கருத்து, உலகின் மிகவும் வன்முறைமிகுந்த மற்றும் அச்சுறுத்தும் நாட்டின் பிரதிநிதியிடமிருந்து வந்ததாகும், அந்நாடு தான், எங்கெல்லாம் அதன் பொருளாதார, அரசியல் அல்லது புவிமூலோபாய நலன்கள் ஆபத்தில் இருக்கிறதோ அங்கே இராணுவரீதியில் தலையிட அதற்கு கட்டுப்பாடில்லாத உரிமை இருப்பதாக வலியுறுத்தி, நேரடியாக ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்தை மீறி, முன்கூட்டி போர்தொடுப்பதை அதன் வெளிநாட்டு கொள்கையின் அஸ்திவாரமாக கொண்டுள்ளது.

19ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஓர் ஏகாதிபத்திய சக்தியாக அது எழுந்ததில் இருந்து, அமெரிக்கா அதன்விருப்பம் போல சிறிய மற்றும் பெரிய நாடுகளின் மீது அதன் விருப்பத்தைத் திணிக்க மற்றும் அச்சுறுத்த தனக்குத்தானே உரிமை எடுத்துக் கொண்டுள்ளது. கடந்த கால் நூற்றாண்டு, குறிப்பாக, உலகின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள நாடுகளுக்கு எதிராக அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் நடத்தப்பட்ட ஒரு முடிவில்லாத மற்றும் தீவிரமான தொடர் யுத்தங்களை, படையெடுப்புகளை, இரகசிய நடவடிக்கைகளை மற்றும் குண்டுவீச்சுக்களைக் கண்டுள்ளது. இந்த காலகட்டத்தில் இருந்த அதன் இராணுவ நடவடிக்கைகளில், நூறாயிரக்கணக்கான மக்களின் மரணங்களுக்கும் அமெரிக்க ஏகாதிபத்தியமே பொறுப்பாகிறது.

ஒருவர், ஏனையவைகளோடு சேர்த்து, 1989 பனாமா படையெடுப்பு, 1991இல் ஈராக்கிற்கு எதிரான முதல் வளைகுடா போர், 1992-93இல் சோமாலியாவில் தலையீடு, 1994இல் ஹைட்டி மீது படையெடுப்பு, 1998இல் சூடான் மற்றும் ஆப்கானிஸ்தான் குண்டுவீச்சு, 1999இல் சேர்பியாவுக்கு எதிரான போர், 2001இல் ஆப்கானிஸ்தான் மற்றும் 2003இல் ஈராக் படையெடுப்பு மற்றும் ஆக்கிரமிப்பு ஆகியவற்றையும் குறிப்பிடலாம். ஒபாமாவின் கீழ், அமெரிக்கா லிபியாவிற்கு எதிரான ஒரு போருக்குத் தலைமை வகித்துள்ளது, சிரியாவில் பஷர் அல்-அசாத் அரசாங்கத்தைத் தூக்கியெறியும் நோக்கில் ஓர் உள்நாட்டு யுத்தத்தைத் தூண்டிவிட்டது, மற்றும் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், யேமன் மற்றும் சோமாலியாவில் ஆளற்ற விமான டிரோன் தாக்குதல்களை நடத்தியது.

உலகைக் கட்டுப்படுத்தும் அதன் உந்துதலில், அமெரிக்க ஏகாதிபத்தியம் மனிதகுலத்தை ஒரு புதிய பேரழிவுகரமான உலக யுத்தத்தை நோக்கி இட்டுச் சென்று கொண்டிருக்கிறது. ஒபாமாவின் முடிவுரை இந்த வலியுறுத்தலுடன் தொடங்கியது: “இந்த அமைப்பு ஸ்தாபிக்கப்பட்ட போது இருந்த உலக போர் நிழல் நீங்கிவிட்டது, பிரதான சக்திகளுக்கு இடையிலான யுத்தத்திற்கான சாத்தியக்கூறு குறைக்கப்பட்டுள்ளது." வாஷிங்டனும் நேட்டோவும் கிழக்கு ஐரோப்பாவை ஒரு ஆயுதமேந்திய முகாமிற்குள் திருப்ப தொடங்கியுள்ள நிலையில் மற்றும், மேற்கு மற்றும் அணுஆயுதமேந்திய ரஷ்யாவுக்கு இடையிலான ஓர் இராணுவ மோதலின் விளிம்புக்கு உலகைக் கொண்டு வர உக்ரேனின் உள்நாட்டு யுத்தத்தை—இந்த நெருக்கடி அவர்களின் சொந்த உருவாக்கமாகும்—பயன்படுத்த தொடங்கியுள்ள நிலையில் இது கூறப்படுகிறது.

அடுத்த வெறும் ஒருசில நிமிடங்களுக்குப் பின்னர், ஒபாமா மாஸ்கோவிற்கு எதிராக தெளிவாக இராணுவ நடவடிக்கை அச்சுறுத்தலை அறிவித்தார். “ஒருங்கிணைந்த தற்காப்புக்கு எங்களின் பொறுப்புறுதியை நாங்கள் உறுதியாக கடைப்பிடிப்பதுடன் மற்றும் இதற்காக எங்களின் நேட்டோ கூட்டாளிகளையும் நாங்கள் வலியுறுத்துவோம்," என்றார்.

ஆசியாவில், வாஷிங்டன் ஓர் ஆக்ரோஷமான இராஜாங்க, பொருளாதார மற்றும் இராணுவ தாக்குதலை சீனாவிற்கு எதிராக பின்பற்றி வருகிறது. மேலும் சிரியாவில் புதிய யுத்தம் ஒட்டுமொத்த மத்தியகிழக்கையும் சுற்றி வளைக்க அச்சுறுத்துவதுடன், அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகள் மற்றும் சிரிய ஆட்சியின் ஆதரவாளர்களுக்கு (ஈரான் மற்றும் ரஷ்யா) இடையே ஒரு மோதலைத் தூண்டிவிட அச்சுறுத்துகிறது. ஒபாமாவின் வாதத்திற்கு நேரடியாக முரண்பட்ட விதத்தில், பிரதான சக்திகளுக்கு இடையிலான யுத்தத்திற்கான சாத்தியக்கூறு முன்னொருபோதும் இல்லாதளவிற்கு இப்போது அதிகமாக இருக்கிறது.

அவரது உரையின் பிரதான பகுதிக்கு வந்தால், வெளிவேடத்திற்கு இஸ்லாமிய பயங்கரவாதத்திற்கு எதிராக என்று, ஒரு முடிவில்லா "தலைமுறை" யுத்தத்தைத் தொடங்கியுள்ள ஒபாமா, “ஒரு பிரச்சினை மாற்றி ஒரு பிரச்சினையில், வெவ்வேறு நூற்றாண்டுக்காக எழுதப்பட்ட விதிகள் பற்றிய ஒரு புத்தகத்தை நாம் சார்ந்திருக்க முடியாது," என்றார். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், யுத்தத்தை வெளியுறவு கொள்கையின் ஒரு கருவியாக பயன்படுத்துவதை மற்றும் நாடுகள் மற்ற நாடுகளின் உள்நாட்டு போர்களில் தலையிடுவதைத் தடுக்கும், ஐ.நா சாசனம் இனியும் பொருந்தாது என்பதையே அது குறிப்பிடுகிறது.

அடுத்து அவர் ஈராக் மற்றும் சிரியாவில் நிலவும் பேரழிவுகளை விபரிக்க சென்றார். முஸ்லீம் உலகின் "தீவிரவாத வன்முறை புற்றுநோய்" என்று எதை அவர் குறிப்பிட்டாரோ அதையே இந்த பேரழிவுக்கு காரணமாக சாட்டிவிட்டார். ஆனால் அப்பிராந்தியத்தின் பேரழிவுக்கான பொறுப்பு பெரிதும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மீதே தங்கியிருக்கிறது என்பது அதை அவதானிக்கும் ஒவ்வொருவருக்குமே நன்றாக தெரியும்.

ஒரேமூச்சில் ஒபாமா அறிவித்தார், “மத்திய கிழக்கு முழுவதிலும் சுன்னி மற்றும் ஷியாவிற்கு இடையிலான பினாமி யுத்தங்கள் மற்றும் கொடூர நடவடிக்கைகளாலேயே அந்த பேரழிவு உருவாக்கப்பட்டது என்பதில் உடன்படுவதற்கு இதுவே நேரமாகும்." அதேவேளையில் அடுத்ததாக அவர் பிரஸ்தாபித்தார், “ISIL பயங்கரவாதிகளுக்கும் [ஷியா சார்ந்த] மற்றும் அசாத் ஆட்சியின் காட்டுமிராண்டித்தனத்திற்கும் எதிர்பலமாக சிரிய எதிர்த்தரப்பிற்கு [அதிகளவில் சுன்னி முஸ்லீம்களை கொண்டது] அமெரிக்கா, நம்முடைய கூட்டாளிகளுடன் சேர்ந்து, அவர்களுக்கு ஆயுதமேந்த உதவி வருகிறது மற்றும் பயிற்சி அளித்து வருகிறது."

ஒபாமாவின் 45 நிமிட உரைக்குள் நிறைந்திருந்த அத்தனை பிரமாண்ட பொய்களையும் தொகுத்தளிப்பது இங்கே சாத்தியமல்ல. ஆனால் உக்ரேனிய நெருக்கடி குறித்து அவர் கூறியதே அவரது கருத்துகளுக்கும் யதார்த்தத்திற்கும் இடையில் இருக்கும் முரண்பாட்டை நிரூபணம் செய்கிறது.

அவர் கூறினார், “இதுதான் அங்கு நடந்தது. உக்ரேனிய மக்கள் பரந்த போராட்டங்களில் ஒன்றுதிரண்டு சீர்திருத்தங்களுக்கு அழைப்புவிடுத்ததும், அவர்களின் ஊழல்மிகுந்த ஜனாதிபதி நாட்டை விட்டு ஓடிவிட்டார். கியேவ் அரசாங்க விருப்பத்திற்கு எதிராக, கிரிமியா இணைத்துக் கொள்ளப்பட்டது. ரஷ்யா கிழக்கு உக்ரேனுக்குள் ஆயுதங்களை அனுப்பியது, அது வன்முறைமிக்க பிரிவினைவாதிகளையும் மற்றும் ஆயிரக்கணக்கானவர்களைக் கொன்றுள்ள ஒரு மோதலையும் தூண்டி வருகிறது."

நிச்சயமாக, அந்த "பரந்த போராட்டங்களுக்கு" அமெரிக்கா மற்றும் ஜேர்மனியால் நிதியுதவி வழங்கப்பட்டு, ஒத்து ஊதப்பட்டன என்பதுடன், நாஜி ஆக்கிரமிப்பு மற்றும் உக்ரேனிய யூதர்களின் பாரிய படுகொலைக்கு ஒத்துழைத்த உக்ரேனியர்களை பெருமைப்படுத்தும் ஆயுதமேந்திய பாசிசவாதிகளால் அந்த போராட்டங்கள் தலைமை தாங்கப்பட்டன.

ரஷ்யாவை ஆதரித்த அந்த தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி ஓர் ஆட்சிக்கவிழ்ப்பு சதியில் தூக்கியெறியப்பட்டார் என்பதுடன், அவருக்கு மாற்றாக அங்கே நவ-நாஜிக்கள் மற்றும் அதிதீவிர-தேசியவாதிகளைக் கொண்ட, சட்டவிரோத அரசாங்கம் நிறுவப்பட்டது. அது அந்நாட்டின் கிழக்கு பகுதியில் குடியிருந்த பெரும்பான்மையினரை புறக்கணித்தது.

அதைத்தொடர்ந்து கிழக்கு உக்ரேனில் கொல்லப்பட்ட பெரும் எண்ணிக்கையிலான ஆயிரக் கணக்கானவர்கள், அமெரிக்க ஆதரவிலான உக்ரேனிய இராணுவம் மற்றும் பாசிச-மேலாதிக்கம் கொண்ட போராளிகள் குழுக்களின் கரங்களால் கொல்லப்பட்டார்கள். அவை ரஷ்யாவை ஆதரிக்கும் பிரிவினைவாதிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் நகரங்களை முற்றுகை இட்டன.

கடந்த மாதம் தான், மத்திய கிழக்கில் இருக்கும் வாஷிங்டனின் கூட்டாளி, இஸ்ரேல், காஸாவில் நிராயுதபாணியான பாலஸ்தீனியர்கள் மீது கண்மூடித்தனமாக குண்டுவீசி, 2,200க்கும் அதிகமான மக்களை கொன்று குவித்தது, அதில் பரந்த பெரும்பாலானவர்கள் அப்பாவி பொதுமக்களாவர்.

இன்னும் அதிகமாக திகிலூட்டுவதைக் கூறுவதே கடினமாக இருக்கிறது, அதாவது ஒபாமாவின் வலியுறுத்தல்களுக்கும் மற்றும் யதார்த்தத்திற்கும் இடையே பெரும் இடைவெளி இருப்பது அவருக்கே முற்றிலும் தெரியும், அப்படியில்லையென்றால் அவர் யதார்த்தத்திலிருந்து மிகவும் துண்டிக்கப்பட்டிருக்கிறார் என்றாகும். இந்த நிலையில் அவர் தனது அதிகாரபூர்வ அறிவிப்புகளை மட்டுமே நம்புகிறார். அமெரிக்க ஆளும் வர்க்கம் மனிதகுலத்தை மற்றொரு உலக யுத்தத்தை நோக்கி இழுத்துச் செல்கின்ற அதேவேளையில், அதன் கட்டுப்பாட்டையும் இழந்திருப்பதற்கு இந்த உரையை ஒரு மைல்கல்லாக எதிர்கால வரலாற்றாளர்கள் மிக சரியாக திரும்பி பார்ப்பார்கள்.

ஒபாமாவின் முழுப்பேச்சு இணைக்கப்பட்டுள்ளது.


Read more...

பள்ளிவாசல் கட்டிடத்தை அகற்றுமாறு மாத்தறை மாநகர சபை உத்தரவு!

மாத்தறை, இஸ்ஸதீன் நகர் பள்ளிவாசல் கட்டிடத்தை அகற்றுமாறு மாத்தறை மாநகர சபையினால் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த உத்தரவு தொடர்பாக 02.10.2014ஆம் திகதியிடப்பட்ட கடிதமொன்று வக்பு சபையில் பள்ளிவாசல் பதிவுசெய்யப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பப்பட்டுள்ளது.

எனினும் இந்தக் கடிதத்தில் பள்ளிவாசலின் பெயர் குறிப்பிடப்படவில்லை. ஆனால் பள்ளிவாசல் பதிவுசெய்யப்பட்டுள்ள முகவரிக்கு பள்ளிவாசலின் தலைவரின் பெயர் குறிப்பிடப்பட்டு இந்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. குறித்த பள்ளிவாசல் அமைந்துள்ள முகவரியிலுள்ள கட்டிடத்தை 14 நாட்களுக்குள் அகற்றுமாறும் இந்தக் கடிதத்தில் தெரிவித்தக்கப்பட்டுள்ளது.

மாத்தறை, இஸ்ஸதீன் நகர் பள்ளிவாசலை மூடுவதற்கு கடும் போக்காளர்கள் கடந்த வருடம் முதல் முயற்சித்து வருகின்றனர். இந்த நிலையே மாத்தறை மாநகர சபையினால் இந்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read more...

எமது மக்களுக்கு உண்மையாக இருப்போம்! ஆனந்த சங்கரியார் மோடிக்கு கடிதம். சித்தார்த்தனுக்காக வக்காலத்து.

மடல் வரைவதில் காலத்தை கடத்தியவர் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்த சங்கரி. இவர் பிரபாகரன், மஹிந்த, சந்திரிக்கா என பல்வேறு பட்டோருக்கு கடிதங்களை வரைந்துள்ளார். இந்நிலையில் தற்போது இந்தியப்பிரதமர் நரேந்திர மோடிக்கு கடதமொன்றினை வரைந்துள்ளார். இக்கடிதத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் புலிகளால் தமது தேவைகளை நிவர்த்தி செய்வதற்காக உருவாக்க பட்ட அமைப்பு என்றும் இவர்கள் தமிழ் மக்களின் அபிலாஷைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்பு அல்ல என்றும் குறிப்பிட்டுள்ள அவர் த.தே.கூ தேர்தலில் வாக்குகளை கொள்ளையடிப்பதற்காக கூட்டணியாக உள்ளதே அன்றி அங்கு கூட்டணியே கிடையாது என்றும் அதற்கு உதாரணமாக புளொட் அமைப்பின் தலைவர் சித்தார்த்தனை மோடியை சந்திக்க செல்லும்போது தவிர்த்து சென்றமையை சுட்டிக்காட்டியுள்ளார்.

இக்கடிதத்தின் முழுவடிவம் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

இந்தியப் பிரதமர்,
கௌரவ நரேந்திர மோடி அவர்கள்
புது டெல்லி

கண்ணியமிக்க ஐயா,

எமது மக்களுக்கு உண்மையாக இருப்போம்

தற்போது நான் வகிக்கின்ற தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் பதவி திரு..அ.அமிர்தலிங்கம் அவர்கள் 1989ம் ஆண்டு அவர் படுகொலை செய்யப்படுவதற்கு முன்பதாக வகித்து வந்ததாகும். அகிம்சையையும், சகிப்புத்தன்மையையும் மிக வலுவாக முன்னெடுத்தமைக்காக யுனெஸ்கோ ஸ்தாபனத்தால் 2006ம் ஆண்டுக்கான 'மதன்ஜித்சிங்' விருது எனக்கு கிடைக்கப்பெற்றது. 17 ஆண்டுகளுக்கு மேல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியையும் வகித்து வந்துள்ளேன். பிரபல வழக்குரைஞரான கியூ.சி பட்டத்தைப் பெற்ற அமரர் கௌரவ சா.ஜே.வே. செல்வநாயகம் அவர்களால் 1972ம் ஆண்டு உருவாக்கப்பட்டதே த.வி.கூ ஆகும். மகாத்மா காந்தியடிகளின் கொள்கைகளை தீவிரமாக பின்பற்றியமையால் மிக்க மதிப்புடனும், நேசிக்கப்பட்டு ஈழத்துகாந்தி என வாஞ்சையுடன் மக்களால் அழைக்கப்பட்டார். அன்னாரால் தமிழ் மக்களுக்காக விட்டுச்செல்லப்பட்ட பெரும் சொத்தே தமிழர் விடுதலைக் கூட்டணியாகும். எமது இனப்பிரச்சனை சம்பந்தமாக தங்களுக்கு சில விடயங்களை தெளிவுப்படுத்துவதற்காக த.வி.கூ யின் வரலாற்றை மிகச் சுருக்கமாக குறிப்பிட விரும்புகின்றேன். மதிப்புக்குரிய அமரர் கௌரவ ஸ்ரீமதி இந்திராகாந்தி அம்மையார் காலத்திலிருந்து இலங்கையின் இனப்பிரச்சனையை தமிழர் விடுதலைக் கூட்டணியே கையாண்டு வந்தது. ஆனால் தற்போது கட்டாயமான சூழ்நிலையில் விடுதலைப் புலிகள் சார்பான குழுவினரிடம் கை மாறியுள்ளது.

தமிழ் பேசும் பல்வேறு சிறுபான்மை இனத்தவர்களை ஒரே குடையின் கீழ் கொண்டு வருவதே தமிழர் விடுதலைக் கூட்டணியின் பல நோக்கங்களில் பிரதானமாகவும், அன்றைய அத்தியாவசிய தேவையாகவும் இருந்தது. சோல்பரி அரசியல் சாசனத்துடன் 1948ம் ஆண்டு சுதந்திரமடைந்த இலங்கையில் ஏற்கனவே இருந்த அற்ப சொற்ப அரசியல் உரிமைகளும் நியாயமற்ற முறையில் மறுக்கப்பட்டு புதிய அரசியல் சாசனம் மூலம் குடியரசாக மாற்றமடைந்தது. அன்றைய தமிழ் மக்களின் ஒற்றுமையின் அத்தியாவசியத்தை உணர்ந்த சா.ஜே.வே. செல்வநாயகம் அவர்கள் 23 வருடமாக நிலைத்திருந்த அரசியல் குரோதத்தை ஒருபுறம் தள்ளிவைத்துவிட்டு 1945ம் ஆண்டு தன்னுடன் இணைந்து அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியை உருவாக்கி அக்கட்சியின் தலைவரான ஜி.ஜி. பொன்னம்பலம் அவர்களை சந்தித்து அன்று தமிழ் மக்கள் முகம் கொடுத்த சவாலை எதிர்கொள்வதற்காக தன்னுடன் இணையுமாறு, அவரின் வீடு சென்று அழைப்பு விடுத்தார். மிகவும் பாராட்டத்தக்க வகையில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் தலைவர் எந்தவித தயக்கமுமின்றி தமிழரசு கட்சி தலைவருக்கு முழு ஆதரவு கொடுப்பதற்கு இசைந்தார். தமிழ் மக்கள் இவர்கள் இருவரினது மீள் இணைவை இருபெரும் புகழ்மிக்க தமிழ் அரசியல் ராட்சகர்களின் இணைப்பாக கருதினர். தமிழ் சமூகம் இவ்விரு தலைவர்களின் இணைவை, ஒரு பொது நோக்கத்திற்காக தமது அபிப்பிராய பேதங்களை மறந்து இணைந்த பெருந்தன்மையை மிக்க மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.

அத்தகையவொரு பலமான அத்திபாரத்தில் தமிழ் மக்களுக்காக பணியாற்ற ஒரு நிரந்தர அமைப்பாக தமிழர் விடுதலைக் கூட்டணி உருவாக்கப்பட்டதே அன்றி எவரும் இந்த அமைப்பிடம் முறையற்று தலையிடுவதற்கல்ல. தமிழ் தேசிய கூட்டமைப்பு (TNA) என தம்மை அழைத்துக் கொண்டு தற்போது இலங்கை தமிழரசு கட்சி, ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப், தமிழர் விடுதலைக் கூட்டணி, புளொட் ஆகிய ஐந்து கட்சிகளையும் உள்ளடக்கியதாக கூறிக்கொண்ட ஒரு தூதுக்குழு தங்களை சந்தித்தது. இந்தக் தூதுக்குழுவில் தமிழரசுக் கட்சியை சேர்ந்த நால்வரும், ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் பிரதிநிதிகள் தலா ஒவ்வொருவரும் மட்டுமே தங்களுடனான சந்திப்பில் கலந்து கொண்டனர். அண்மையில் நடந்த வடக்கு மாகாணசபை தேர்தலில் 40,000 இற்கு மேல் வாக்குகளை பெற்று மூன்றாம் இடத்தைப் பெற்ற புளொட் கட்சியின் தலைவர் இதில் இடம் பெறவில்லை. வழக்கம் போலவே 55 ஆண்டுகளுக்கு மேல் அரசியலில் ஈடுபாடு கொண்டுள்ள தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவரையோ வேறு எவருடனுமோ கலந்து ஆலோசிக்கவும், அழைக்கவும் இல்லை. மேலிடத்திலிருந்து பணிப்பு எதுவும் வரவில்லை போலும்.

மதிப்புக்குரிய பிரதம மந்திரி அவர்களே! நான் சமஷ்டி ஆட்சி முறைக்கு மாற்றாக இந்திய முறையிலான அரசியல் சாசனத்தையொத்த ஒரு தீர்வை முன்வைத்து பிரச்சாரம் செய்து வருகிறேன். இதற்கு எந்தவொரு தரப்பினரிடமிருந்தும் எதிர்ப்பு வரவில்லை. மதிப்புக்குறையாத சில ஆங்கில பத்திரிகைகளில் வெளியான சில பகுதிகளை இச்சந்தர்ப்பத்தில் குறிப்பிடுவது பொருத்தமாக இருக்குமென நினைக்கிறேன்

• சண்டே ஐலண்ட் - தனது 12-03-2006 திகதிய பத்திரிகையில் 'ஆனந்தசங்கரியின் தீர்வு' என்ற தலைப்பில் தீட்டியுள்ள ஆசிரியர் தலையங்கத்தில,; 'இந்திய முறையிலான தீர்வை முன்வைத்துள்ளார். பெரும்பான்மையான இலங்கையர்கள் அதனை கண்டிப்பாக ஏற்றுக்கொள்வார்கள். ஆனால் விடுதலைப்புலிகள் பிரிவினை கோரிக்கையை கைவிடுவார்கள் என்பது கேள்விக்குறி'.

• த மோர்னிங் லீடர்- தனது 15-03-2006 'ஆனந்தசங்கரியின் பிரேரணை' என்ற தலைப்பில் எழுதப்பட்ட ஆசிரியர் தலையங்கத்தில், 'ஆனந்தசங்கரியின் பிரேரணை உண்மையில் நடைமுறைச்சார்ந்த பொருத்தமான நடுநிலைமையானதாகும். எதிர்க்கட்சிகள் ஏற்றுக்கொள்வதற்கு தயாரா?'

• டெய்லி மிரர்- தனது 16-03-2006 'தமிழர் விடுதலைக் கூட்டணி தலைவரின் வேண்டுகோளுக்கு செவிமடுங்கள்' என்ற தலைப்பில் எழுதப்பட்ட ஆசிரிய தலையங்கத்தில், 'தென்னிலங்கை மக்களால் பெரிதும் மதிக்கப்படுகின்ற தலைவர் திரு. ஆனந்தசங்கரி நீண்டகாலமாக புலிகளின் வன்முறையையும், சர்வாதிகார போக்கையும் தொடர்ந்து எதிர்த்து வந்த யதார்த்தவாததியாக மதிக்கப்படுகின்றவர். ஆகவே அவருடைய பொருத்தமான ஆலோசனைகளுக்கு செவிமடுக்கப்பட வேண்டும்'. இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அன்புடையீர், இக்குழுவினருக்கும் தங்களுக்குமிடையில் பேசப்பட்ட விடயங்கள் பற்றி எம்மில் யாருக்கும் எதுவும் தெரியாது. பத்திரிகைகளும் பிரமாதமாக எதையும் சொல்லவில்லை. தாங்கள் கூறிய ஆலோசனைகள் சில மட்டுமே தெரியவந்தது. ஆனால் அந்தக் குழுவில் பிரசன்னமாக இருந்த பாராளுமன்ற உறுப்பினரொருவர் பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறிய கருத்துக்களில் சில முக்கியமானவை உண்மைக்குப் புறம்பானவையாதலால் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது. குறிப்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையில் உள்ள உறவு பற்றியும் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கு ஆணை கிடைத்துள்ளது என்பது பற்றியநிலைப்பாடும். உண்மையான நிலையை பிரதிபலிக்கவில்லை. தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கிடையில் பூசலும், ஏனைய கடசிகளுடன் நல்லுறவு இருப்பதாகவும் தெரியவில்லை.

தமிழ் தேசிய கூட்டமைப்பு விடுதலைப்புலிகள் ஆகியவற்றின் உறவுபற்றி கூறுவதானால் தமிழரசு கட்சியின் தலைவர் திரு. மாவை சேனதிராஜாவை விடுதலைப் புலிகள் தமது நிலைமையை பலப்படுத்த பயன்படுத்தினர் என்பதே உண்மை. இவர் இரு தடவைகள் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு தேசிய பட்டியல் மூலம் கிடைத்த ஒரேயொரு பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இரு தடவையும் முழுமையாக அனுபவித்தவராவார். அதனைத் தொடர்ந்து 2002ம் ஆண்டு மூன்றாவது தடவையாகவும் தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பாக தெரிவாகி பாராளுமன்றம் சென்றவராவார். இருப்பினும் தமிழரசு கட்சியின் ஸ்தாபகர் மறைந்து 26 வருடங்கள் செயல் இழக்கப்பட்டிருந்த தமிழரசு கட்சி முறையற்ற விதத்தில் மீண்டும் இவரால் புதுப்பிக்கப்பட்டது. ஊடக செய்தி ஒன்று பின்வருமாறு கூறியது:- 'தமிழரசு கட்சியை புனரமைப்பு செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த தமிழர் விடுதலைக் கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர் திரு. மாவை சேனாதிராஜா 14-10-2003 இல் கிளிநொச்சி சென்று விடுதலைப் புலிகளின் அரசியல்துறை உபதலைவர் தங்கனை சந்தித்துள்ளார். தமிழரசு கட்சியின் புனரமைப்பு அவரின் கட்டளைக்கமையவே நடைபெறுகின்றது' இந்தப் பணியில் திரு மாவைசேனாதிராஜா விடுதலைப் புலிகளின் கட்டளைக்கமையவே செயற்பட்டுள்ளார் என்பது தெரிகின்றது. அதேபோல் என்னை தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் பதவியிலிருந்து நீக்க எடுத்த முயற்சிகள் விடுதலைப் புலிகளின் கட்டளைக்கமையவே என்பது இங்கு தெளிவாகின்றது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் கதையும் இது போன்றதே. தமிழ் தேசிய கூட்டமைப்பு த.வி.கூ உட்பட நான்கு கட்சிகளை கொண்டு உருவாக்கப்பட்டது அதிலிருந்து எவருடைய அனுமதியின்றி தமிழர் விடுதலைக் கூட்டணியின் பெயர் நீக்கப்பட்டு அவ்விடத்தில் தமிழரசு கட்சியின் பெயர் சேர்க்கப்பட்டது. இது சம்பந்தப்பட்ட சக கட்சிகளும் தமிழ் தேசிய கூட்டமைப்பும், தமிழரசு கட்சியும் விடுதலைப் புலிகளின் தூண்டுதலால் நேர்மையற்ற விதத்தில் உருவாக்கப்பட்டது என்பதை ஒத்துக்கொள்ள வேண்டும். 2004ம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலின்போது திருவாளர்கள் மாவை சேனாதிராஜா, ஜி.ஜி.பொன்னம்பலம், பிரசன்னா இந்திரக்குமார், சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகிய நால்வரும் முறையே தமிழரசு கட்சி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப் ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகளான இவர்கள் கையொப்பமிட்டு பிரசுரிக்கப்பட்ட த.தே.கூ இன் தேர்தல் விஞ்ஞாபனத்தின் ஒரு பகுதியின் தமிழாக்கத்தை இங்கு தருகிறேன்.

'விடுதலைப் புலிகளை தமிழ் மக்களின் தேசிய தலைமையாக ஏற்றுக்கொள்வதோடு விடுதலைப் புலிகளே தமிழ் மக்களின் உண்மையான ஏகபிரதிநிதிகள் என்பதை ஏற்றுக்கொண்டு உண்மையாகவும், உறுதியாகவும் தமிழ் தேசம் சார்பில் விடுதலைப் புலிகளால் எடுக்கப்படுகின்ற சகல நடவடிக்கைகளுக்கும் முழு ஒத்துழைப்பு வழங்குவோம்' என உறுதியளிக்கிறோம். தமிழரசு கட்சியின் முக்கியமான பொறுப்புள்ள அங்கத்தவர்கள் கூட இதன் தாக்கத்தை அப்போது உணரவில்லை. தமிழரசு கட்சி பொறுப்புள்ள வகையில் நடக்காமல் தமிழரசு கட்சிக்கும் த.தே.கூ இற்கும் பெரும் அவமானத்தை கொண்டு வந்துள்ளனர். த.தே.கூ, தமிழரசுகட்சி ஆகியவற்றின் புனரமைப்பு முறையற்ற விதத்தில் மேற்கொள்ளப்பட்டதென சர்வதேச சமூகம் அறியும்போது அவர்களுடைய நிலைப்பாடு மாறுபட்ட முறையில் இருக்கும். இனப்பிரச்சினை சம்பந்தமாக நடவடிக்கை மேற்கொள்வதற்கான ஏகபோக உரிமையை தமிழரசு கட்சியும், த.தே.கூ உம் இழந்துவிட்டன. தமிழ் தேசிய கூட்டமைப்பு விட்ட பிழைகள் இன்னும்பல. த.தே.கூ இனர் தமது பிழையான செயற்பாட்டால் சரித்திரத்தையே மாற்றி அமைத்துள்ளனர்.

• விடுதலைப்புலிகளின் கட்டளைக்கமைய 2005இல் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களை கலந்துகொள்ள விடாது தடுத்தமை.

• குறிப்பிட்ட ஒரு சிங்கள தலைவருக்கு தமிழ் மக்களை வாக்களிக்கும்படி கேட்டு வேறொருவரை வெல்ல வைத்ததோடு அனைத்து சிங்கள மக்களையும் தமிழ் மக்களுக்கு மாறாக ஒன்று சேர வைத்தமை.

• யுத்தத்தின் உச்சக்கட்டத்தில் அப்போதைய இந்திய வெளியுறவு அமைச்சின் செயலாளர் திரு. சிவசங்கர் மேனன் அவர்களின் அழைப்பை ஏற்க மறுத்தமை பல ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களின் இழப்புக்கு காரணமாக இருந்தது. யுத்தத்தின் உச்சக்கட்டத்தில் பல ஆயிரக்கணக்கான பொது மக்களை இழந்து கொண்டிருந்த நேரத்தில் இச்சந்திப்பு இடம் பெற்றிருக்குமானால் பெரும் உயிரிழப்புக்களை தவிர்த்திருக்க முடியுமென அறிந்திருந்தும் எதுவும் தெரியாதது போல் நடிக்கின்றமை இவர்கள் மக்களுக்கு தொடர்ந்து செய்யும் துரோகமாகும். ஆயிரக்கணக்கான அப்பாவி பொதுமக்களின் உயிரிழப்புக்கும் த.தே.கூ உம் பொறுப்பேற்க வேண்டும்.

த.தே.கூ இன் நான்கு கட்சிகளின் செயலாளர்கள் விடுதலைப் புலிகளுக்கு வழங்கிய உத்தரவாதம் 2004 ஏப்ரல் தொடக்கம் 2009 மே 18 திகதி வரை விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட கொலைகள், குண்டுவெடிப்புக்கள், மிகக்கொடூரமான குற்றச் செயல்கள் மேற்கொள்வதற்கு காரணமாய் அமைந்ததோடு பல ஆயிரக்கணக்கான அப்பாவி ஆண்கள், பெண்கள், சிறுவர்கள், முதியோர்கள, பாராளுமன்ற உறுப்பினர்களின்; இழப்புக்களுக்கும் காரணமாய் அமைந்துள்ளது. 2004ம் ஆண்டு த.தே.கூ இனரால் வெளியிடப்பட்ட தேர்தல் விஞ்ஞாபனத்தின்படி அனைத்துவிதமான இழப்புக்களுக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு பொறுப்புக்கூறல் வேண்டும். முக்கிய தீர்மானங்கள் மேற்கொள்ளும்போது அனுபவங்கள் இல்லாதவர்களிடம் கையளிப்பதால் ஏற்படுகின்ற வினையே இதுவாகும்.

அரசுடன் பேசுகின்ற ஆணையை தமிழரசுகட்சிக்கும், த.தே.கூ இற்கும் பல்வேறு தேர்தல்கள் மூலம் மக்கள் ஆணை வழங்கியுள்ளார்கள் என்று கூறப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாததது மட்டுமல்ல தவறான பாதைக்கும் இட்டுச்செல்கின்றது. 2004ம் ஆண்டு வடகிழக்கில் இடம்பெற்ற பாராளுமன்றத் தேர்தல் அற்ப சொற்ப அரசின் தலையீட்டுடன் முற்று முழுவதுமாக விடுதலைப் புலிகளாலேயே நடத்தி வைக்கப்பட்டது. அத் தேர்தலில் ஆள்மாறாட்டம், அச்சுறுத்தல் என்பன வாக்களார்களுக்கு புலிகளால் நிறையவே இருந்தன. இத் தேர்தலில் தோற்றவர்கள் வெல்ல வைக்கப்பட்டார்கள். அதேபோன்று 2010ம் ஆண்டு பொதுத் தேர்தலிலும் பல்வேறு தேர்தல் மாவட்டங்களில் 09 வீதத்திலிருந்து 0.85 வீத மக்களே தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வாக்களித்திருந்தனர். யாழ்ப்பாணத்தில் ஏறக்குறைய 7,50,000 வாக்குகளில் ஏறக்குறைய 65,000 மக்களே வாக்களித்தனர். இது வெறும் 09 வீதமாகும். இத்தகைய குறைந்த வாக்கை மக்களின் ஆணை என்று கூறமுடியாது. மேலும் உள்ளுராட்சி தேர்தல்களில் அளிக்கப்பட்ட வாக்குகளையும் மக்களின் ஆணை என்று ஏற்றுக்கொள்ள முடியாது. அவை உள்ளுர் சம்பந்தப்பட்ட விடயங்கள். இந்த விடயத்தில் என்ளால் குறிப்பிடப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் இந்திய பிரதம மந்திரியின் குழுவினருடன் உண்மையை மறைத்து தவறாக வழிநடத்தியுள்ளனரா என்ற ஐயம் எழுகிறது.

தமிழ் மக்களின் இனப்பிரச்சனை தீர்வு சம்பந்தமாக த.தே.கூ அமைப்பே பேசி அரசுடன் வந்தது. இப்போது தமிழ் மக்கள் அவர்கள் மீது நம்பிக்கை இழந்துள்ளமையால் சம்பந்தப்பட்ட சகல அரசியல் கட்சிகளோடும் கலந்து ஆலோசித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டிய காலம் வந்துள்ளது. தமிழர் விடுதலைக் கூட்டணி தந்தை செல்வா அவர்களால் தமிழ் மக்களின் பிரச்சனை பற்றி பேசி தீர்ப்பதற்கு தமிழ் மக்களின் ஓர் நிரந்தர அமைப்பாக செயற்பட உருவாக்கப்பட்டது. அமரர் திரு. தொண்டமான், அமரர் திரு. ஜி.ஜி.பொன்னம்பலம் ஆகியோரின் ஆசீர்வாதத்தோடு தந்தை செல்வா அவர்களால் விட்டுச்செல்லப்பட்ட பெரும் சொத்தே தமிழர் விடுதலைக் கூட்டணியாகும். ஓவ்வொரு தமிழனுக்கு தமிழர் விடுதலைக் கூட்டணி தன்னுடையது என சொந்தம் கொண்டாட உரிமை உண்டு. தன்னால் உருவாக்கப்பட்ட தமிழரசுக் கட்சியை மீள புதுப்பிக்கும் எண்ணம் கடுகளவும் தந்தை அவர்களுக்கு இருக்கவில்லை. அதை உறுதி செய்யும் நோக்குடனேயே திருவாளர்கள் ஜி.ஜி.பொன்னம்பலம், எஸ்.தொண்டமான் ஆகியோருடன் த.வி.கூ யின் தலைவர் பதவியை இவர்களுடன் பகிர்ந்து கொண்டார். தந்தையை மதிக்கின்ற ஒரு தமிழனும் தந்தையின் விருப்பத்துக்கு மாறாக தமிழரசு கட்சியை புதுப்பிக்க எதுவித நியாயமுமில்லை.

கௌரவ பிரதமர் அவர்களே! தங்களால் கூறப்பட்ட ஆலோசனைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து பல்வேறு தமிழ் பேசும் அரசியல் கட்சிகளையும் கலந்து ஆலோசித்து ஒரு பொதுவான நிலைப்பாடு எடுப்பதற்காகவே அன்றி தமிழரசு கட்சி ,தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆகியவற்றுடன் முரண்படுவதற்கல்ல. இவர்களுக்கு இனப்பிரச்சனை தீர்வில் அக்கறை இருப்பின் அவர்கள் விடுதலைப் புலிகளுடன் உள்ள தொடர்பை துண்டிக்க வேண்டுமென எச்சரிக்கை விடுக்கப்பட வேண்டும்.

நான் இந்திய அரசியல் சாசனத்தையொத்த ஒரு தீர்வை வலியுறுத்தி வருவது யாவரும் அறிந்ததே. அந்த நிலைப்பாட்டை இதுவரை எவரும்; பெரிதாக எதிர்க்கவில்லை. இதுபோன்று நாம் எதிர்நோக்கும் பல பிரச்சினைகள் பற்றியும் பேசக்கூடியதாக ஒரு சந்திப்பை மேற்கொள்ள எண்ணியுள்ளேன்.
நன்றி


வீ.ஆனந்தசங்கரி
செயலாளர் நாயகம்- த.வி.கூ

Read more...

சிறையிலுள்ள ராஜ் ராஜரட்ணம் மீது புலிகளுக்கு நிதி உதவியமைக்காக தாக்லான வழக்கு விசாரணைக்கு வருகின்றது.

அமெரிக்காவில் கோடிஸ்வரனாக இருந்தவர் இலங்கையை சேர்ந்த ராஜ் ராஜரட்ணம். பங்கு சந்தையில் சட்டவிரோதமான முறையில் உள்வியாபாரம் செய்தமை நிரூபிக்கப்பட்தை தொடர்ந்து அமெரிக்க வரலாற்றில் இவ்வாறான குற்றத்திற்கு அதிக தண்டனையான 11 வருடங்கள் சிறைத்தண்டனை ராஜரட்ணத்திற்கு வழங்கப்பட்டது யாவரும் அறிந்தது.

இந்நிலையில் இவர்மீது புலிகளின் பினாமி அமைப்பு என்று அறியப்படுகின்ற தமிழர் புனர் வாழ்வுக் கழகத்தினருக்கு நிதி வழங்கியமைக்காக வழக்க தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்டிருந்த தமிழர் புனர் வாழ்வுக் கழகத்தினருக்கு 2000ம் ஆண்டிலிருந்து 2007ம் ஆண்டுக்குட்பட்ட காலத்தில் ராஜ் ராஜரட்ணமும் அவரது தந்தை ஜேஎம் ராஜரட்ணமும் 5 மில்லியன் அமெரிக்க டொலர்களை (சுமார் 640 கோடி இலங்கை ரூபாக்கள்) வழங்கியுள்ளமை தெளிவாகியுள்ளது.

இவ்வழக்கு விசாரணை எதிர்வரும் ஒரு மாதத்திற்குள் வரவுள்ளதாகவும் அமெரிக்காவில் பயங்கரவாத இயக்கமாக தடைசெய்யப்பட்ட அமைப்பு ஒன்றுக்கு ஒத்தாசை புரிதல் தேசத்துரோக குற்றமென ராஜரட்ணம் மற்றும் அவரது தங்தையாருக்கு பாரிய தண்டனை வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இங்கு குறப்பிடத்தக்க விடயம் யாதெனில் ராஜரட்ணத்தின் மகள் என அறியப்படும் யுவதி ஒருவர் வன்னியில் புலிகள் அமைப்பிலிருந்துள்ளார். யுத்தத்தின் இறுதி கட்டத்தில் சரணடைந்த இவர் தடுப்பு முகாமொன்றிலிருந்து படையினருக்கு கோடிக்கணக்கான பணத்தினை கொடுத்து வெளியே வந்து தற்போது ஐரோப்பிய நாடொன்றில் தஞ்சம் அடைந்துள்ளார். இவரின் பெயரில் கோடிக்கணக்கான பணம் ராஜரட்ணத்தால் வைப்பிலிடப்பட்டுள்ளதாகவும் அப்பணத்தினை சுருட்டுவதற்கு புலிகளின் ஒரு தரப்பினர், சிங்கப்பூரில் பயங்கரவாத நிபுணர் என சொல்லப்படுகின்ற பாதுகாப்பு அமைச்சுக்கு நெருக்கமானவர் ஒருவருடன் இணைந்து பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக அறியக்கிடைக்கின்றது. இச்செயற்பாடுகளுக்கு தமிழ் இணையம் ஒன்றினை முன்னர் நாடாத்தி வந்தவனும் தற்போது ஈபிடிபி யின் மண்கொள்ளை முகவருமாக மாறியுள்ள கண்ணன் என்பவன் இருப்பதாக அறியக்கிடைக்கின்றது.

Read more...

களவாக காணி விற்ற பொதுபலசேனாவின் தேரர் கைது. 7.5 மில்லியன் பிறாடு.

பொதுபலசேனாவின் பொதுச் செயலாளர் ஞானசார தேரரின் இனங்களுக்கு எதிரான செயற்பாடுகளுக்கான வலது கரமும் அக்கட்சியின் உப நிதிச் செயலாளருமான வெல்லம்பிட்டய சுமணதாச என்ற தேரர் காணி ஒன்றினை களவாக விற்றதன் காரணமாக கடந்த வெள்ளிக்கிழமை இரவு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பௌத்த சங்கத்தின் பிக்குகள் சார்பில் பொரலஸ்கமுவ பிரதேசத்திலுள்ள விகாரை ஒன்றுக்காக விகாரரையின் பிக்குகளில் பெயரில் எழுதப்பட்டிருந்த காணியினை தனது சொந்த சொத்தாக விற்று எழுபத்திஐந்து லட்சங்களை பெற்றுக்கொண்டுள்ளார் குறித்த பிக்கு.

காணி உரிமை மாற்றத்தில் ஏற்பட்ட சிக்கலில் பிக்குவின் திருட்டினை உணர்ந்த காணியை கொள்வனவு செய்த வர்த்தகர் குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் கொடுத்த புகாரை அடுத்தே மேற்படி கைது இடம்பெற்றுள்ளது.

எது எவ்வாறாயினும் குறித்த பிக்கு நீதிபதி முன் ஆஜர் படுத்தப்பட்டபோது இரண்டு லட்சம் ருபா சரீரப்பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக அறியக்கிடைக்கின்றது.

குறித்த தேரரே கடந்த காலங்களில் சில அமைச்சகங்களுக்குள் அத்துமீறி நுழைந்து வட்டரக்க தேரரை தேடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிக்கு கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டபோது வீடியோ

கைது செய்யப்பட்ட பிக்கு அமைச்கத்தினுள் புகுந்து அட்டகாசம் புரிந்தபோது வீடியோ


Read more...

இந்துக் கட்டிடக் கலை வளர்ச்சிக்கு ஓர் எடுத்துக்காட்டு தேற்றாத்தீவு கொம்புச்சந்திப் பிள்ளையார் ஆலயம்.- த.விமலானந்தராஜா

'ஓர்நாமம் ஓர் உருவம் ஒன்றுமில்லார்க்கு ஆயிரம்
திருநாமம் பாடி தெள்ளேணம் கொட்டாமோ'


நீக்கமற எங்கும் நிறைந்து விளங்கும் ஏகபரம் பொருளான இறைவனுக்கு பற்பல நாமங்களும் பற்பல வடிவங்களும் தருகின்றது இந்து தர்மம். அடியார்களின் பக்தித் திறத்துக்கு கேற்ப பல்வேறு வடிவங்களில் அருள்பாலிக்கின்ற இறைவடிவங்களில் பட்டி தொட்டிகள், வீதிஓரங்கள், ஆற்றங்கரை, குளக்கரை என எங்ஙணுகும் வீற்றிருந்து அருள்பாலிக்கும் வடிவம்தான் விநாயகர் பெருமானின் திருவடிவம்.

அந்தவகையில் சிவபூமியாம் இலங்காபுரியின் கண்ணே அஞ்ஞான இருள்போக்கி மெய்ஞான ஒளி கொடுக்கும் ஆதவனின் வரவுகாணும் கிழக்கிலங்கையின் மீன்பாடும் வாவிமகள் நீண்டிலங்கும் புகழ்பெற்ற மட்டக்களப்பு மாவட்டத்திலே 'தேன் கதலி சூழ்ந்து விளங்க', கல்வியும் கலைகளும் சிறந்து ஓங்கும் சிவபதிதான் 'தேனூர்' எனும் தேற்றாத்தீவுக் கிராமம். இக்கிராமத்தில் குடிப்பரம்பல் தோன்றிய காலந்தொட்டே தமிழர்களின் பாரம்பரிய கலையான கொம்புமுறி விளையாட்டு இக்கிராமத்தின் மத்தியிலே ஆடப்பட்டு வந்ததையும், இவ்விளையாட்டை ஆரம்பிக்கும் முன்னர் விநாயகருக்கு ஆலயம் அமைத்து வழிபாடு இயற்றப்பட்டதாகவும் அறியலாம். இதனால் இவ் விநாயகர் கொம்புச்சந்திப் பிள்ளையார் எனவும் போற்றப்படுகின்றார்.

ஆரம்ப காலத்தில் நீற்றுக் கட்டடித்தில் இருந்த இவ்வாலயம் கடந்த 2007 ம் ஆண்டு தை மாதம் பாலஸ்தானம் செய்யப்பட்டு நீற்றுச்சுவர் ஆலயம் முற்றாக அகற்றப்பட்டு ஆகம முறைக்குட்பட்டதாகவும் இந்து கலை அம்சங்கள் நிறைந்ததாகவும் அமைக்கப்பட்டு நிர்மானவேலைகள் நிறைவுறும் நிலையில் உள்ளது.

புதிய இவ்வாலய கட்டுமானப்பணியினை நோக்கும் போது இந்துக் கட்டிடக் கலைப்பாணிகளான நாகர, வேசர, தராவிட கட்டிடக் கலைப்பாணிகள் ஒருங்கே அமையப்பெற்ற ஆலயமாகத் திகழ்கின்றது என்றால் மிகையாகாது.

இவ்வாலயத்தில் கற்பக்கிரகம், அர்த்த மண்டபம், மகாமண்டபம், நிருத்த மண்டபம், தம்ப மண்டபம் ஆகியவற்றோடு வசந்த மண்டபம், யாகசாலை என ஆகமம்கூறும் அளவுப் பிரமாணங்களுக் கேற்ப மண்டப அமைப்புக்ககள் விளங்குகின்றன. இதன் விமானமனது மூன்று தளங்களைக் கொண்டதாக அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடன் காட்சி தருகின்றது. இவ்வாலயத் தூண்கள் வட்டவடிவ, சதுரவடிவ, எண்கோணவடிவமாகக் காணப்படுவதோடு பல்வேறு புடைப்புச்சிற்பங்களைக் கொண்டதாகவும் விளங்குகின்றது. இதில் விநாயகப் பெருமானின் 32 வடிவங்களும் புடைப்புச் சிற்பமாகச் செதுக்கப்பட்டிருப்பது சிறப்பம்சமாகும்.

இவ்வாலயத்தின் மண்டபங்கள், சுற்றுமண்டபங்கள் என்பவற்றின் உட்புறக்கூரையானது(பிளேட்) 12 இராசிகள் வடிவங்கள், கமலம், ரிசபகுங்சரம், மூசிகம், குதிரை, அன்னம், நாகம் போன்ற பல்வேறுபட்ட புடைப்புச் சிற்பங்களால் பொலிவுறுகின்றது. ஆலயத்தின் மகாமண்டபத்தில் தேவசபையும், நிருத்த மண்டபத்தில் சிவன் பார்வதி ஆகிய தெய்வங்களுக்கான அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய சிறிய ஆலயங்களும் அமைகக்கப்பபடுள்ளதோடு சமய குரவர் நால்வரது வடிவங்களும் அவர்களது வயதுத்தோற்றத்துக்கோற்ப அங்கலெட்சணங்களோடு தத்துருபவமாக அமைக்கப்பட்டுள்ளமையும் சிறப்பம்சமாகும் தம்பமண்டபத்தில் பலிபீடம் அமைந்துள்ளதோடு, கொடிதம்பம் 27 அடி உயரம் கொண்டதாகவும், கொடிமரத்தைச் சுற்றி வெங்கலவார்ப்பு வேலைகள் உள்ளதாகவும் அமைக்கப்பட்டுள்ளது.

இவ்வாலயத்தின உள்வீதியில் பரிவாரக் கோயில்களாக நாகதம்பிரான், மகாவிஸ்ணு, முருகன், பைரவர், நவக்கிரகங்கள், ஆஞ்ஞனேயர் ஆகிய தெய்வங்களுக்கான ஆலயங்கள் கட்டப்பட்டுள்ளதோடு சண்டேஸ்வரருக்கான ஆலயமும் மற்றும் சிவலிங்கத்தைப் பிரதிஸ்டை செய்வதற்காக செவிதரிசன முறையில் வணங்கக் கூடியவாறு குறிஞ்சிக் கோட்டை அமைப்பை பின்பற்றி ஆலயமும் என பல சிறிய ஆலயங்களும் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் அழகிய சிற்பவேலைகளுடன் அமைந்துள்ளமை மனங்கொள்ளத்தக்கது. மேலும் 41 அடி உயரம் கொண்ட 2 மணிக் கோபுரங்களும் அமைக்கப்படுகின்றன.

தன்னகத்தே ஒருங்கே கொண்டு விளங்கும் இவ்வாலயத்தின் மிக முக்கியமான சிறப்பம்சமும் எல்லோராலும் பேசப்படக் கூடியதும், வராற்றில் பொறிக்கப்படக் கூடியதும், 21ம் நூற்றாண்டின் இந்துக் கட்டிடக் கலை வளர்ச்சியில் புதிய பரிமாணமுமாக விளங்குவதுதான் இவ்வாலயத்தில் புதிதாக அமைக்கப்பட்டு கொண்டுடிருக்கும் விநாயர் பெருமானின் 64 அடிஉயர சுதை விக்கிர ராஜ கோபுரக் கட்டுமாகம் பணியாகும்.

இந்து ஆகமமாகிய காமிய ஆகமத்தின் 21 வது பிரகார லக்ஷண விதிப்படலத்தில் இராஜகோபுர அமைப்புமுறை கூறப்பட்டுள்ளது. இதற்கமைய இராஜ கோபுரம் என்பது கருவறையில் சூக்கும் லிங்கமாக விளங்கும் இறைவனை ஆலயத்துக்கு வெளியே தொலைவில் நிற்கும் அடியார்களுக்குக் காட்சி தரும் வகையிலும், ஆலய மூலமூர்த்தியை நினைவுக்குக் கொண்டுவரும் வகையிலும் அமைக்கப்படும் அடையாள சின்னம் ஆகும். இதனால் இது ஸ்தூல லிங்கம் என அழைக்கப்படுகின்றது. அதாவது கருவறையில் சிறிய வடிவில் விளங்கும் இறைவனின் உருவத்தைப் பெரிதாக காட்சி தரக்கூடிய வகையில் அமைப்பதையே ராஜகோபுர சுட்டுகின்றது. ஆலயத்துக்குச் செல்லும் அடியார்கள் தொலைவில் இக் கோபுரத்தைக் கண்டதும் மூலமூர்த்தியாக இதனை நினைத்து வழிபடவேண்டும் என்பது ஆலய தரிசன விதியாகும். இந்து ஆலய அமைப்பானது ஒருமனிதனது உடமைப்பைப் போன்றது எனக் கூறப்படுகின்றது. அந்த வகையில் கருவறையானது தலையாகவும், அர்த்த மண்டபம் களுத்தாகவும் மகா மண்டபம் மண்டபம் மார்பாகவும் நிருத்த மண்டபம் வயிறாகவும், தம்பமண்டபம் கால்களாகவும் கோபுரம் பாதமாகவும் கொடிமரம் முள்ளந்தண்டாகவும் அல்லது தொப்புளாகவும் உருவகிக்கப் படுகின்றது. இங்கே கோபுரமானது பாதமெனக் கூறப்படுவதால் சமய அறிவு குறைந்த சிலர் கோபுரத்தை உயரமாகக் கட்டுவது பாதத்தை உயர்த்துவதுற்கு சமம் என்றும், கோபுர அமையப்படும் இடத்தில் பிரமாண்டமாக தெய்வ உருவை சிற்பமாக அமைப்பது பிழை என்று வாதிடுகின்றனர். இது முற்றிலும் தவறானது கருத்தாகும்.

இந்துக் கட்டிடக்கலை வராலற்றில் இராஜகோபுரங்கள் காலத்துக்குக் காலம் பல பரிமாண வளர்ச்சியைக் கொண்டு விளங்குவதை அவதானிக்கலாம்.டி பல்லவர் கால மன்னர்கள் குடவரைக் கோயில்களையும், கற்றளிக் கோயில்களையும் அமைக்க, சோழர்கள் பெரிய விமானங்களைக் கொண்டதாக ஆலயங்களை அமைத்தனர். பல்லவர், சோழர், காலங்களை விட நாயக்கர் காலத்தில் மிகப்பிரமாண்ட இராஜ கோபுரங்கள் அமைக்கப்பட்டன. இவற்றில் மதுரை மீனாட்சி அம்மன், ஸ்ரீரங்கம் போன்ற ஆலயங்கள் குறிப்பிடதக்கவை. ஆனால் தொடர்ந்து பிற்காத்தில் பிரமாண்டமான ஆலயங்கள் அமைக்கப்பட்டதோடு இக்கோபுரங்களின் மூலமூர்த்தியின் பல்வேறு வடிவங்கள், தேவஅசுர யுத்தம் போன்ற வீரதீரச் சிற்பங்கள் என தெய்வங்கள் ஏராளாமாக அமைக்கப்படுவதோடு கோபுரங்களின் உயரமும் அதிகரித்து (மட்டக்களப்பு போரதீவு காளி அம்மன் 13 தளத்தில் அமைக்கப்படுகின்றது) இந்து கட்டிட, சிற்ப கலையானது பெருவளர்ச்சி கண்டுவருவதை அவதானிக்கலாம்.

அந்தவகையில் இலங்கையின் மட்டக்களப்பு மாவட்டத்தின் தேற்றாத்தீவு கிராமத்தில் அமைக்கப்பட்டுவரும் விநாயப்பெருமானின் 64 அடி உயர சுதைவிக்கிரக ராஜகோபுரகட்டுமானப் பணியானது ஆகமமுறை தழுவியதாகவும் அதேவேளை இந்துக் கட்டக்கலையும் ஒருங்கே அமைந்த பெருவளர்ச்சியாக திகழ்கின்றது. இது வரையில் எங்கும் இல்லாதவாறு அமைக்ப்படும் இவ்வாலய நிர்மானமானது இந்து கட்டிடக்கலை வளர்ச்சிகும் பெரிதும் உதவுவதோடு இந்து தர்மத்துக்கும் இக்கிராம மக்களுக்கும் கிடைத்த் பெருமை என்றால் அது மிகையாகது.படங்கள்- எஸ்.ஸிந்தூ

Read more...

தொடர்ந்து நான் அரசாங்கத்தில் இருக்க வேண்டுமா வேண்டாமா? - அரசிற்கு அச்சுறுத்தல் விடுக்கின்றார் மர்வின் சில்வா

தான் தொடர்ந்தும் அரசாங்கத்தில் இருக்க வேண்டுமாயின் தனது கோரிக்கைகளுக்கு அரசாங்கம் இணங்க வேண்டும் என அமைச்சர் மர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

பேலியகொடவில் இடம்பெற்ற கூட்டமொன்றின்போது அவர் உரையாற்றுகையில், தனக்கு தொடர்ந்து பணிபுரியத் தெரியாதுவிட்டால்அரசாங்கத்தில் இருப்பதன் அர்த்தம் தான் என்ன என வினவியுள்ளார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் –

“பெரிய வாகனம் கிடைத்திருக்கின்றது…பாதுகாவலர்கள் கிடைத்திருக்கின்றார்கள்… என நான் பச்சோந்தியாக இருக்க வேண்டியதில்லை. அவ்வாறான பச்சோந்திகள் எங்கள் ஆளும் கட்சியினுள்ளும் இருக்கின்றார்கள். அவ்வாறான பாத்திரம் பொதுமக்களுக்குத் தேவையில்லை. மக்களுக்குத் தேவையானவற்றை என்னால் செய்ய முடியாது விட்டால், அதற்கு அரசாங்கம் உறுதுணையாக இருக்காது விட்டால் கொடுத்திருக்கின்ற வாகனங்களும்.. பாதுகாவலர்களும் எனக்குத் தேவையில்லை. எனக்குச் சொந்த வாகனம் இருக்கின்றது.. பாதுகாவலர்களாக பொதுமக்கள் இருக்கின்றார்கள். ஒருவருடமும் இரண்டு மாதங்கள் எனக்குப் பணிபுரிய இடந்தரவில்லை. அதுதான் என்னுள் இருக்கின்ற வேதனையும் கோபமும். எதிர்வரும் காலத்தில் அரசாங்கம் என் கருத்துக்களுக்கு மதிப்பளிக்காதவிடத்து நான் தொடர்ந்தும் அமைச்சுப் பதவியில் இருக்கப் போவதில்லை” எனக் குறிப்பிட்டுள்ளார்.

(கலைமகன் பைரூஸ்)

Read more...

Friday, October 3, 2014

ஜெயலலிதா கைது குறித்து கருணாநிதி என்ன சொல்கின்றார்???

சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை அறிவிக்கப்பட்டு, ஜெயலலிதா கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளது குறித்து திமுக தலைவர் கருணாநிதி முதல் முறையாக கருத்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட கேள்வி - பதில் வடிவிலான அறிக்கை:

ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பு பற்றி தாங்கள் எதுவுமே கூறவில்லையே?

இந்தத் தீர்ப்பு பற்றி நான் கூறுவதை விட வார இதழ் ஒன்று வெளியிட்ட 'தீர்ப்பு தரும் பாடம்' என்ற தலைப்பில் எழுதப்பட்ட தலையங்கத்தில் சில பகுதிகளை மட்டும் குறிப்பிடுகிறேன். அது வருமாறு:

இது நிச்சயம் மகத்தான தீர்ப்பு! நீதி நிலை நிறுத்தப்பட்டிருக்கிறது; நீதிமன்றங்கள் மீதான நம்பிக்கை உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. ஜெயலலிதா மீதான வருமானத்துக்கு அதிகமான சொத்துக் குவிப்பு வழக்கில், 'நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை, 100 கோடி ரூபாய் அபராதம், சொத்துக்கள் பறிமுதல்' என்ற பெங்களூர் சிறப்பு நீதி மன்றத்தின் தீர்ப்பு, இந்திய அரசியல் வரலாற்றில் மிக மிக முக்கியமானது.

நீதிமன்றத் தீர்ப்பால் பதவி பறிக்கப்பட்டுள்ள 'முதல் முதலமைச்சர்' ஜெயலலிதா தான்! மாதம் ஒரு ரூபாய் வீதம் ஒருவர், 66 கோடி ரூபாய் எப்படிச் சம்பாதித்தார்? என்பதே ஜெயலலிதா மீதான இந்த வழக்கின் எளிய தர்க்கம். சாட்சிகள் மிகத் தெளிவாக உள்ள இதுபோன்ற வழக்கைக் கூட, ஒருவர் 17 ஆண்டுகளாக இழுத்தடிக்க முடியும் என்ற நிலை மிகவும் வருந்தத்தக்கது. செயற்கையாக உண்டாக்கப்பட்ட இந்தக் கால தாமதம், 'வினை விதைத்தவன் வினை அறுப்பான்' என்ற பழமொழிக்கு ஆகச் சிறந்த உதாரணம்!

சொத்துக் குவிப்பு வழக்கை இழுத்தடித்ததன் மூலம், ஜெயலலிதா தனக்கான அதிகபட்சத் தண்டனையை தானே வலியப் பெற்றிருக்கிறார். தீர்ப்பு வந்த நாளில், மாநிலம் முழுவதும் பெரும் பதற்றம் தொற்றியது; பேருந்துகள் தடுத்து நிறுத்தப்பட்டன் கடைகள் இழுத்து மூடப்பட்டன. ஒரு நெருக்கடி நிலைக்கான பதற்றத்துடன் இருந்தது மாநிலம். இத்தகைய சூழல் ஏற்படும் என்பதைக் கணித்து, 'கட்சித் தொண்டர்கள் அமைதி காக்க வேண்டும். இயல்பு வாழ்க்கைக்கு எந்தத் தொந்தரவும் அளிக்கக் கூடாது' என்ற அமைதிப்படுத்தும் அறிக்கை கூட ஜெயலலிதா தரப்பில் இருந்து வெளிவரவில்லை. காவல் துறையினரோ, ஆளும் கட்சியினரின் வன்முறைகளை வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்'. இதுவே அந்தத் தலையங்கம்.

முக்கியமான வழக்குகளை மாநிலம் விட்டு வேறு மாநில நீதிமன்றங்களுக்கு மாற்றிய சம்பவம் வேறு ஏதாவது உண்டா?
உச்ச நீதிமன்றம் பல வழக்குகளை வேறு மாநில நீதிமன்றங்களுக்கு மாற்றிய சம்பவங்கள் உண்டு. ஏன், நான் ஆட்சிப் பொறுப்பில் முதலமைச்சராக இருந்தபோதே என் மகன் மு.க. அழகிரி மீதான வழக்கு, சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி மீதான வழக்குகளை உச்ச நீதிமன்றம் தமிழ்நாட்டிலிருந்து வேறு மாநிலங்களுக்கு மாற்றியது.

அண்மைக் காலத்திலேகூட அமித்ஷா பற்றிய வழக்குகளை குஜராத் மாநிலத்திலிருந்து மராட்டிய மாநிலத்திற்கு உச்ச நீதிமன்றம்தான் மாற்றியது. ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கை கர்நாடக மாநிலத்திற்கு மாற்றியதுகூட, 2003ஆம் ஆண்டில், தமிழ்நாட்டில் பாரபட்சமற்ற நியாயமான தீர்ப்புக் கிடைக்காது என்ற நிலையில் அன்பழகன் விடுத்த வேண்டுகோளின்படி, உச்ச நீதிமன்றமே நியாயமான தீர்ப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த வழக்கினை கர்நாடக மாநிலத்திற்கு மாற்றியது. இந்த விவரங்களை எல்லாம் 'தி இந்து' நாளேடே வெளியிட்டுள்ளது.

ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில், அவர் ஒரு பெண் என்றும், தனது வயது, உடல் உபாதைகள் ஆகியவைகளைத் தெரிவித்தும் ஜாமீன் கோரியபோது, கர்நாடக உயர் நீதிமன்றம் தாமதம் செய்ததாகச் சொல்லப்படுவதைப் பற்றி?

'தி இந்து' ஆங்கில நாளிதழில் சஞ்சய் ஹெக்டே என்ற உச்ச நீதிமன்ற வழக்கறிஞர், 'அதிகாரம் படைத்தோரின் பொறுமையின்மையால் ஏற்படும் ஆபத்துகள்' என்ற தலைப்பில் எழுதியுள்ள கட்டுரையில், 'இப்போதுள்ள சூழலில் ஜெயலலிதா பெண் என்பதும், அவர் வயது, அவருக்கு இருக்கும் உபாதைகள் ஆகியவை அவருக்குச் சாதகமானவை தான் என்றாலும், மேல் முறையீட்டு நீதிமன்றம் 1,136 பக்கங்கள் கொண்ட விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பின் மீது அவசரப்பட்டு உடனடியாக எந்த முடிவும் மேற்கொள்வதற்கு வாய்ப்பில்லை.

பொது வாழ்க்கையில் உள்ள தலைவர்களும், அவர்களுடைய வழக்கறிஞர்களும் மிகை நடவடிக்கைகளில் ஈடுபடாமல் தங்களைக் காத்துக் கொள்ள வேண்டும். மருத்துவர்களைப் போல வழக்கறிஞர்கள் எடுத்த எடுப்பிலேயே தீமை நேர்ந்து விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். நல்ல வருமானம் கிடைக்கும் என்பதற்காகவோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ எளிதில் நிறைவேறாத கோரிக்கைகளுக்காக அவசரப்பட்டு நீதிமன்றங்களில் மனுக்களைத் தாக்கல் செய்யக் கூடாது. பொது வாழ்க்கையில் உள்ள தலைவர்கள் அவர்களுடைய முக்கியத்துவமே, அவர்களுக்கு எதிராகப் போய் விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

மேலும் பொது வாழ்க்கையில் உள்ள தலைவர்கள் தங்களுடைய தொண்டர்கள் வெறி கொண்டு அலையாமல் இருக்கத்தக்க அறிவுரை வழங்க வேண்டும். சட்டம், ஒழுங்கு நிலை சீர்கெடுமானால் மேல்முறையீட்டு விசாரணை மேலும் ஒத்திவைக்கப் படலாம். ஜெயலலிதாவின் ஆதரவாளர்கள் எழுப்பும் கூச்சல் ஜெயலலிதாவுக்கு எந்த வகையிலும் உதவிடாது. அவருடைய ஆதரவாளர்கள் இப்போது தான் அடக்கத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்.

மாறாக ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக் கொண்டு கூச்சல் போட்டு ஒப்பாரி வைக்கக்கூடாது. ஊழல் வழக்கில் நான்காண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட ஒருவர் தனது மேல் முறையீட்டு மனுவை உடனடியாக எடுத்து விசாரணை மேற்கொள்ள வேண்டுமென்று நீதிமன்றத்திற்குக் கட்டளையிட முடியாது. பிரதமர் முதல் சாதாரண போலீஸ்காரர் வரை - செருப்பு தைக்கும் தொழிலாளி முதல் சக்கரவர்த்தி வரை சட்டம் என்பது அனைவருக்கும் ஒன்றுதான். நீங்கள் எவ்வளவு பெரியவராக இருந்தாலும், சட்டம் என்பது எப்போதும் உங்களை விட உயர்ந்தது என்பதை உணர வேண்டும்' என்று சுட்டிக்காட்டியிருக்கிறார். இந்தக் கருத்துகள் என்னுடையதல்ல் உச்ச நீதிமன்றத்தில் பணியாற்றும் மூத்த வழக்கறிஞர் சஞ்சய் ஹெக்டே என்பவர் எழுதி, 'தி இந்து' நாளிதழ் வெளியிட்ட கட்டுரையில் உள்ளவை. ஜெயலலிதா மீதான 66 கோடி ரூபாய் சொத்துக் குவிப்பு வழக்கில், சொத்துக்களை எல்லாம் அதிக அளவுக்கு மதிப்பிட்டதாக ஆளுங் கட்சியைச் சேர்ந்தவர்கள் சொல்கிறார்களே?

'பிரன்ட் லைன்' இதழில், டி.எஸ். சுப்பிரமணியன் எழுதிய ஒரு கட்டுரையிலேயே இது பற்றிக் கூறும்போது, 'தீய நோக்கம் என்று யாரும் குறை சொல்லாமல் இருந்திடும் வகையில் புலனாய்வு செய்யும் அதிகாரிகள் ஜெயலலிதா மற்றும் குற்றம்சாட்டப்பட்டோரின் சொத்துக்களை மதிப்பிடும்போது, மிகையாக மதிப்பிட்டு விடக் கூடாது என்று தி.மு.கழக அரசு தெளிவாக அறிவுறுத்தியிருந்தது. இதுதான் வழக்கை வலிமையாக்கியிருக்கிறது' என்று தெரிவித்திருப்பது உண்மையைத் தெளிவாக்கும்.

ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்புக் கூறப்பட்ட பிறகு அ.தி.மு.க.வினர் ஈடுபட்டு வரும் வன்முறை நடவடிக்கைகளால் ஏற்பட்ட இழப்பீட்டுத் தொகையை அந்தக் கட்சியின் தலைமையிட மிருந்து வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கருத்துத் தெரிவித்திருக்கிறாரே?

உண்மையில் சிந்தித்துப் பார்க்க வேண்டிய கருத்துத்தான் அது. பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையிலும், பொதுச் சொத்துக்களுக்குச் சேதம் விளைவிக்கும் வகையிலும், சட்டம் ஒழுங்கைச் சீரழிக்கும் வண்ணமும், வன்முறைச் செயல்களில் ஈடுபட்ட அ.தி.மு.க.வைத் தடை செய்யவும் தயங்கக் கூடாது என்றும் ஆளுநருக்கு ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். 13-5-2013 அன்று தமிழகச் சட்டப்பேரவையில் பேசிய ஜெயலலிதா, 'பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையிலும், பொதுச் சொத்துக் களுக்கு சேதம் விளைவிக்கும் வகையிலும், சட்டம் ஒழுங்கைச் சீரழிக்கும் வண்ணமும், வன்முறைச் செயல்களில் எந்தக் கட்சி ஈடுபட்டாலும், அந்தக் கட்சியைத் தடை செய்ய இந்த அரசு தயங்காது, நிச்சயம் நடவடிக்கை எடுக்கும்.

வன்முறையில் ஈடுபடுபவர்கள் மற்றும் அவர்களைத் தூண்டுவோர் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிப்போர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் மற்றும் தேசியப் பாதுகாப்புச் சட்டம் ஆகியவற்றின் கீழும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என்று தெரிவித்ததை மனதிலே கொண்டுதான் ராமதாஸ் தற்போது அதனை நினைவுபடுத்தியிருக்கிறார். 29-4-2013 அன்று தமிழகச் சட்டப்பேரவையிலே பேசும்போது கூட ஜெயலலிதா, 'சட்டம், ஒழுங்கு பராமரிப்பிற்கு ஊறு விளைவிப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது எந்தவிதக் கருணையும் இன்றிச் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். வன்முறையில் ஈடுபடுவோர் மீதும், பொது அமைதிக்கு ஊறு விளைவிப்போர் மீதும் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவும் இந்த அரசு தயங்காது' என்று பேசியதையும் நினைவூட்டிட விரும்புகிறேன்.

சென்னை மாநகராட்சி மன்றக் கூட்டம் நடக்கும்போது, தி.மு.க உறுப்பினர்கள் தாக்கப்பட்டது குறித்து?
திட்டமிட்டு சென்னை மாநகராட்சியில் இந்தத் தாக்குதல் நடந்ததாக ஏடுகள் தெரிவிக்கின்றன. சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாகத் திறம்படப் பணியாற்றி ஓய்வு பெற்ற நீதியரசர் கே.சந்துருவே இந்தச் சம்பவம் பற்றிக்கூறும்போது, 'அது தலைக்குனிவை ஏற்படுத்தக் கூடியது' என்று தெரிவித்திருக்கிறார்.

...............................

Read more...

பொலிஸ் சார்ஜனின் தாக்குதலுக்கு உள்ளான பெண், 5 கோடி நட்டஈடாக கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு!

இரத்தினபுரியில், பொலிஸ் சார்ஜனின் தாக்குதலுக்கு உள்ளான பெண், தன் மீதான தாக்குதலுக்கு எதிராக 50 மில்லியன் ரூபாவை நட்டஈடாக கோரி உயர் நீதிமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை மான நஷ்ட வழக்கொன்றை தாக்கல் செய்துள்ளார்.

இந்த வழக்கின் பிரதிவாதிகளாக பொலிஸ் மா அதிபர், பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மற்றும் இரத்தினபுரி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. தனக்கு ஏற்பட்ட மானநஷ்டத்துக்காக 5 கோடி ரூபாவை (50 மில்லியன்)நட்டஈடாக கோரவிருப்பதாக அவர், ஏற்கெனவே தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

Read more...

மாகாணசபை தேர்தலில் அரசாங்கத்துக்கான ஆதரவு சரிந்தது தொடர்பில் சமன் குணதாசவின் விரிவான ஆய்வு.

இலங்கை ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கடந்த சனிக்கிழமை நடந்த ஊவா மாகாணசபை தேர்தலில் வெற்றி பெற்றிருந்தாலும், அதன் வாக்கு எண்ணிக்கை வெளிப்படையாக சரிந்தமை, அரசாங்கத்தின் மீது தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற வறியவர்கள் மத்தியில் ஆழமடைந்துவரும் எதிர்ப்பை வெளிப்படுத்துகின்றது.

2009ல் 72 சதவீதமாக இருந்த சுதந்திர முன்னணிக்கான வாக்குகள், இம்முறை 51 சதவீதம் வரை 21 சதவிகிதத்தில் சரிந்தது. இதன் விளைவாக, ஆறு ஆசனங்களை அது இழந்து, 34 ஆசனங்கள் கொண்ட மாகாண சபையில் 19 ஆசனங்களை மட்டுமே பெற்றுள்ளது. மாகாணத்தின் மிகப்பெரிய பதுளை மாவட்டத்தில், வெளிப்படையான பின்னடைவு ஏற்பட்டது. இங்கு சுதந்திர முன்னணி பதுளை, ஹாலிஎல, வெலிமடை ஆகிய மூன்று ஆசனங்களில் தோல்விகண்டதோடு ஊவா-பரணகம, பண்டாரவளை ஆகிய பிரதேசங்கள் ஒவ்வொன்றிலும் சுமார் 200 வாக்குகள் வித்தியாசத்திலேயே வென்றது.

அரசாங்கத்திற்கு எதிராக வாக்களிப்பில் எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சியே (யுஎன்பீ) பயனடைந்துள்ளது. இதன் வாக்குகள் 2009ல் பெற்ற 22 சதவிகிதத்தில் இருந்து 40 வீதம் வரை 18 சதவிகிதத்தால் அதிகரித்துள்ளன. அதனால் அதன் ஆசனங்களின் எண்ணிக்கை 7ல் இருந்து 13 ஆக அதிகரித்துள்ளன. யூஎன்பியை போலி இடதுகளான நவசமசமாஜ கட்சியும் (நசசக) ஐக்கிய சோசலிச கட்சியும் (யுஎஸ்பி) ஆதரித்தன. அவை இந்த வலதுசாரி, வணிக சார்புடைய கட்சியை இராஜபக்ஷ அரசாங்கத்துக்கு எதிரான ஒரு முற்போக்கான மாற்றீடாக முன்னிலைப்படுத்தி பிரச்சாரம் செய்திருந்தன.

மக்கள் விடுதலை முன்னணியின் (ஜேவிபி) வாக்குகள் 5 சதவீதத்தால் இரட்டிப்பாகி, அது ஒரு ஆசனத்தை வென்றதோடு மொத்தமாக இரண்டு ஆசனங்களைப் பெற்றது. தனது சோசலிச பாசாங்குகளை முழுமையாக கைவிட்ட இந்த கட்சி கொழும்பு அரசியல் ஸ்தாபனத்தின் ஒரு பாகமாக இருப்பதோடு முதலீட்டாளர்களை ஈர்க்கும் கொள்கைகளுக்காக வெளிப்படையாக வக்காலத்து வாங்கி வருகிறது. முற்றிலும் சிங்களப் பேரினவாதத்தில் ஊறிப்போயுள்ள ஜேவிபீ, தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் கடும் ஆதரவாளராக இருந்தது. யுஎன்பீக்கு கிடைத்த வாக்குகளைப் போலவே ஜேவிபிக்கு கிடைத்த வாக்குகளும் பெருமளவில் அரசாங்கத்தின் மீதான எதிர்ப்பு வாக்குகளே.

தேர்தல் முடிவுகள், உண்மையான வர்க்க உறவுகள் பற்றிய ஒரு சிதைந்த பிரதிபலிப்பாகும். ஆனால் ஊவாவில் அரசாங்கத்தின் ஆதரவு சரிந்தமையானது சர்வதேச நாணய நிதியத்தின் கட்டளையின் பேரில் அரசாங்கம் மேற்கொள்ளும் சிக்கன நடவடிக்கைகள் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்கள் தொடர்பான பரந்த எதிர்ப்பையே பிரதிபலிக்கின்றது. அடிப்படை பொருட்களின் விலை உயர்வு, கல்வி மற்றும் சுகாதாரம் உட்பட அத்தியாவசிய சமூக சேவைகளிலான வெட்டுக்களும் உழைக்கும் மக்கள் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன.

நாட்டின் மத்திய மலையக பகுதியான ஊவா, நாட்டின் மிக வறுமை நிலையிலான மாகாணமாகும். இதில் மொனராகலை மாவட்டம் முதன் வகிக்கின்றது. மக்களில் சுமார் 20 சதவீதமானவர்கள் தமிழ் பேசும் வறிய தோட்ட தொழிலாளர்கள் ஆவர். சிறு விவசாயிகள் தமது விவசாய பொருட்களின் விலை அதிகரிப்புக்கும் தங்கள் உற்பத்திப் பொருட்களை விற்பதில் உள்ள கஷ்டங்களுக்கும் இடையில் அகப்பட்டுள்ளனர்.

வளர்ந்து வரும் அந்நியப்படுதல் மற்றும் எதிர்ப்பையும் உணர்ந்த ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ, ஒரு தீர்க்கமான வெற்றியைப் பெறும் முயற்சியில் ஊவாவில் விரிவான பிரச்சாரத்தை முன்னெடுத்தார். குறித்த காலத்தை விட இரண்டு வருடங்கள் முன் கூட்டியே, அடுத்த வருட ஆரம்பத்தில் ஜனாதிபதி தேர்தலையும் பொதுத் தேர்தலிலையும் நடத்தும் அறிகுறியை வெளியிட்ட பின்னர், அவர் தனது கையை வலுப்படுத்திக்கொள்ள வேண்டியுள்ளது.

கொழும்பில் "ஆட்சி மாற்றத்திற்காக” எதிர்க் கட்சிகள் "வெளிநாட்டு சக்திகளுடனும்" தமிழ் புலம்பெயர்ந்தோருடன் சேர்ந்து சதி செய்கின்றன என்ற அவரது பழசாய்ப் போன குற்றச்சாட்டை இராஜபக்ஷ திரும்பத் திரும்ப கூறினார். சீனாவில் இருந்து இலங்கையை தூர விலகுவதற்கு நெருக்கவதற்காக, பிரிவினைவாத புலிகளுக்கு எதிரான இனவாத யுத்தத்தின் போது இலங்கை இராணுவம் செய்த போர் குற்றங்களை அமெரிக்க சுரண்டிக்கொள்கின்றது. எனினும், ஒரு சர்வதேச சதியில் பாதிக்கப்பட்டவராக காட்டிக்கொள்ளும் அதேவேளை, இராஜபக்ஷ ஒருபோதும் சதிகாரர்களின் பெயர்களைக் குறிப்பிடவில்லை, மற்றும் அவர் அமெரிக்கா உடனான உறவுகளை சரிசெய்துகொள்ள தீவிரமாக முயற்சிக்கின்றார்.

அரசாங்கம் வாக்காளர்களை திசைதிருப்பும் முயற்சியில், தேர்தல் சட்டங்களை வெளிப்படையாக மீறி, அரச வளங்களை பயன்படுத்தி தனது அரசியல் போட்டியாளர்களுக்கு எதிராக மிரட்டல்கள் மற்றும் வன்முறைகளையும் பயன்படுத்தியது. அதன் அனைத்து இழிந்த தந்திரங்களின் மத்தியிலும், பிரச்சாரம் தெளிவாக தோல்விகண்டது. ஊவாவிலான பின்னடைவு, அண்மையில் நடைபெற்ற தேர்தலில்களில் ஏற்பட்ட பின்னடை போக்கின் தொடர்ச்சியாகும். மார்ச் மாதம் நடந்த மேல் மாகாண மற்றும் தென் மாகாண சபை தேர்தலில்களில், சுதந்திர முன்னணி முறையே 12 மற்றும் 5 ஆசனங்களை இழந்தது.

ஊவா தேர்தல் முடிவு வெளியிடப்பட்டதை தொடர்ந்து, "எங்களுக்கு இந்த வியத்தகு வெற்றியை வழங்கியமைக்கு" நன்றி என வாக்காளர்களுக்கு கேலிக்கூத்தான முறையில் நன்றி தெரிவித்த இராஜபக்ஷ, அதன் “பாரிய அபிவிருத்தி திட்டத்தை துரிதப்படுத்துவதற்கு அரசாங்கத்திற்கு கிடைத்த மக்களை ஆணை” என கூறிக்கொண்டார்.

மிகவும் யதார்த்தமான மதிப்பீட்டை செய்ய முற்பட்ட சுதந்திர முன்னணி செயலாளர் சுசில் பிரேம்ஜயந்த, "பதுளை மாவட்டத்தில் இளம் மற்றும் புதிய முகங்களை நிறுத்தத் தவறியமையே” இழப்புகளுக்கு காரணம் என கூறினார். உண்மையில், அரசாங்கத்தின் "பாரிய அபிவிருத்தி முயற்சிகள்" தமது சமூக உரிமைகள் மீது தாக்குதல்கள் அதிகரிப்பதையே அர்த்தப்படுத்துகின்றது என்று மக்கள் புரிந்து வைத்துள்ளனர்.

2009ல், புலிகளை தோற்கடித்த பின்னர், இராஜபக்ஷ ஒரு புதிய செழிப்பு சகாப்தத்துக்கு வாக்குறுதியளித்து மாகாண சபை தேர்தலில் தீர்க்கமான வெற்றிகளைப் பெற்றார். எனினும், இலங்கை தற்போதைய பூகோள பொருளாதார வீழ்ச்சியினால் பாதிக்கப்பட்ட நிலையில், போரின் முடிவானது உழைக்கும் மக்களின் வாழ்க்கை தரத்தின் மீதான இடையறா தாக்குதல்களையே வழங்கியது.

தேர்தல் முடிவு, சமூக அமைதியின்மை வளர்ச்சியடைவது பற்றிய ஊடகங்களின் கவலையை தூண்டிவிட்டிருந்தது.

ஐலண்ட் பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கம், வாக்காளர்கள் சுதந்திர முன்னணியை "இடி போல் அறைந்துள்ளதாக" கூறியது. அது அரசாங்கத்துக்கு ஆலோசனை வழங்கியதாவது: "இப்போது ஊவா மக்கள் அறைந்திருந்தாலும் அதை வெளியேற்றாமல் நிறுத்தியுள்ளனர். சுதந்திர முன்னணி எதிர்காலத்தில் ஒரு தேர்தல் பேரழிவை தடுக்க வேண்டுமெனில், மக்கள் எதிர்கொள்ளும் எரியும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வழியை அது அமைக்க வேண்டும்”.

டெய்லி மிரர் பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கம் கூறியதாவது: "மக்களின் செய்தி தெளிவானது. அவர்கள் ஏழை மற்றும் பணக்காரர் இடையே வளர்ந்து வரும் ஏற்றத்தாழ்வு, வாழ்க்கை செலவு அதிகரிப்பு, பரவலான ஊழல், சட்ட ஆட்சியின் பொறிவு, பொறுப்புடைமை மற்றும் வெளிப்படைத்தன்மை இன்மை மற்றும் ஜனநாயகத்தின் தூண்கள் மீதான கடுமையான தாக்குதல்களை பற்றி மகிழ்ச்சியின்றியும் கலங்கிப் போயுமுள்ளனர்."

ஆசிரியர் தலையங்க எழுத்தாளர்கள், இலங்கை ஆளும் வர்க்கத்தின் சார்பில் பிரச்சினைகளை சுட்டிக்காட்டி பேசுகின்ற அதேவேளை, அவர்கள் வாழ்க்கை தரங்களை சீரழிக்கும் மற்றும் சமூக சமத்துவமின்மையை அகலப்படுத்தும் சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன நடவடிக்கைகளை ஆதரிக்கின்றனர். சந்தை சார்பு மறுசீரமைப்புக்கு கனதியாக வக்காலத்து வாங்கும் யூஎன்பி தலைமையிலான ஒரு அரசாங்கம், வெகுஜன எதிர்ப்பை நசுக்க சுதந்திர முன்னணி பயன்படுத்தும் அதே பொலிஸ்-அரச வழிமுறைகளையே நாடும்.

பிரச்சாரத்தின்போது, சோசலிச சமத்துவக் கட்சி தேர்தல் அறிக்கை ஒன்றை விடுத்ததோடு பதுளை மாவட்டத்தில் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுடன் கலந்துரையாடியது.

ஒரு விவசாயி கூறியதாவது: "நீண்ட காலம் ஊமையாகவும் செவிடாகவும் பாசாங்கு செய்த பின்னர், அரசாங்கம் திடீரென நிவாரணங்களை விநியோகிக்கின்றது. அரசியல் கட்சிகள் தேர்தலில் காலத்தில் மட்டுமே மக்களின் துன்பத்தை பார்க்கின்றன. நாம் விரும்பியோ விரும்பாமலோ வழக்கமாக வாக்களிக்கிறோம். அரசாங்கம் நாட்டின் வளர்ச்சி பற்றி ஊடகங்களில் விளம்பரப்படுத்தி வருகிறது. அபிவிருத்தி இடம்பெற்றால், நாம் அதை உணர வேண்டும். மாறாக, வாழ்க்கை செலவு காரணமாக மூன்று வேளை உணவு கூட எம்மால் சாப்பிட முடியாமல் உள்ளது. நாங்கள் விவசாயிகள் பிச்சைக்காரர்கள் ஆகி வருகின்றோம்."

பண்டாரவளை மருத்துவமனையில் ஒரு தொழில்நுட்ப தொழிலாளி கூறியதாவது: "இந்த அரசாங்கம் போர் வெற்றி மூலமே அதிகாரம் பெற்றது, மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதன் மூலம் அல்ல. நாங்கள் [போராட்டத்துக்கு] தெருவுக்கு வரும்போது, அரசாங்கம் முழு நாட்டையும் எங்களுக்கு எதிராகத் தூண்டி விடுகின்றது... உலகத் தொழிலாளர்கள் ஐக்கியப்பட வேண்டும் என்ற கருத்தை நான் விரும்புகிறேன்."

Read more...

Thursday, October 2, 2014

சந்திரிக்கா பொது வேட்பாளராக களம் இறங்கினால் தமிழர்களின் ஆதரவு கிடைக்குமாம்! ஐயாசாமி

சந்திரிக்கா பொது வேட்பாளராக களம் இறங்குவாரானால் தமிழர்கள் உள்ளிட்ட நாட்டு மக்களின் பெரும்பாலானோரின் ஆதரவு அவருக்கு கிடைக்கும் என்று அகில இலங்கை தேசிய தொழிலாளர் முன்னணியின் தலைவர் ஐயாசாமி இராமலிங்கம் தெரிவித்தார்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்;

ஊவா மாகாண தேர்தல் கட்சிகளிடையே பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. இத்தேர்தல் முடிவினை மையமாக வைத்து கட்சிகள் எதிர்கால தேர்தல் குறித்த காய் நகர்த்தல்களை மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்தன. ஊவா மாகாண தேர்தல் நிறைவு பெற்றுள்ள இந்நிலையில் ஜனாதிபதி தேர்தல் குறித்த சிந்தனைகள் நாட்டு மக்களிடையேயும் கட்சிகளிடையேயும் வலுப்பெற்றுக் காணப்படுகின்றது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ இத்தேர்தலில் போட்டியிட முடியுமா? முடியாதா? என்ற வாதப்பிரதிவாதங்கள் மேலெழுந்து வருகின்ற நிலையில் எதிர்க்கட்சிகள் பொது வேட்பாளர் மற்றும் தமது கட்சியின் சார்பில் வேட்பாளராக யாரை நிறுத்துவது என்பது குறித்து சிந்தித்து வருகின்றன.

இந்நிலையில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பெயரும் பொது வேட்பாளர் தொடர்பில் அடிபடுகின்றது. சந்திரிகாவின் கடந்த கால ஆட்சிக்காலத்தில் தமிழ் மக்கள் பல்வேறு உரிமைகளையும் பெற்று தலைநிமிர்ந்து வாழும் நிலைமை ஏற்பட்டது. தோட்டப்புறங்களின் அபிவிருத்தி கருதி சந்திரிகா அர்ப்பணிப்புடன் செயற்பட்டார். எனவே, மலையக மக்கள் உட்டபட பெரும்பாலான நாட்டு மக்களின் இதயங்களிலும் அவர் இடம்பிடித்திருந்தார்.

இதனிடையே சந்திரிகா பொது வேட்பாளராக எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் நியமிக்கப்பட்டு வெற்றி பெறுமிடத்து மீண்டும் தமிழர்களின் வாழ்வு செழிப்படையும். புரையோடிப்போய் இருக்கின்ற நாட்டின் இனப்பிரச்சினைக்கு நிரந்தரமாக அரசியல் தீர்வொன்று ஏற்படும். நாட்டின் எதிர்காலம் ஒளிமயமாகும்.

எனவே, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சந்திரிக்கா பொது வேட்பாளராக நிறுத்தப்பட வேண்டும் என்றார்.

Read more...

Wednesday, October 1, 2014

ஜெயாவின் ஜாமீன் மீதான சிறப்பு மனு எதிர்வரும் 7-ம் திகதிக்கு ஒத்திவைப்பு! புதிய முதல்வரை பார்க்க மறுத்தார் ஜெயா!

தண்டனை ரத்து, ஜாமீன் கோரி தாக்கல் செய்யப்பட்ட ஜெயலலிதாவின் சிறப்பு மனு மீதான விசாரணையை அக்டோபர் 7-ம் திகதி ஒத்திவைத்து கர்நாடக உயர் நீதிமன்றம் இன்று (புதன்கிழமை) உத்தரவிட்டுள்ளது.

ஏற்கெனவே தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனு அக்டோபர் 6-ம் தேதி விசாரணைக்கு வருகிறது. இந்நிலையில், ஜெயலலிதாவின் புதிய மனுவும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால், ஜெயலலிதா உடனடியாக ஜாமீனில் விடுதலையாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஜெயலலிதா 5-வது நாளாக சிறையில் உள்ளார்.

தசரா விடுமுறை முடிந்து வழக்கமான அமர்வு ஜாமீன் மனுவை விசாரிக்கும் என நீதிபதி ரத்தினகலா தெரிவித்தார். வழக்கின் முக்கியத்துவத்தைக் கருதி விசாரணையை சிறப்பு அமர்வில் இருந்து வழக்கமான அமர்வுக்கு மாற்றுவதாகவும் நீதிபதி தெரிவித்தார். சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய நால் வரும் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறையும், ரூ.100 கோடி அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரும் ஜாமீன் கோரியும் தங்களுக்கு வழங்கப் பட்ட தண்டனை, தீர்ப்பை ரத்து செய்யக்கோரியும் 4 மனுக்களை தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் நீதிபதி ரத்னகலா முன்பு 11-வது நீதிமன்ற ஹாலில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தன. காலை 9 மணிக்கு நீதிபதி ரத்னகலா தனது இருக்கையில் அமர்ந்து அவசர கால மனுக்களை விசாரிக்க ஆரம்பித்தார்.

காலை 10.30 மணிக்கு ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர்கள் பி.குமார், நவநீதகிருஷ்ணன் ஆகியோர் ஆஜராகினர். அவர்களைத் தொடர்ந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அரசு வழக்கறிஞர்கள் பவானி சிங், முருகேஷ் எஸ்.மரடி ஆகியோர் வந்தனர். ஜெயலலிதா தரப்புக்காக மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத்மலானியும் அவரது உதவி வழக்கறிஞர்கள் 3 பேரும் 10.52 மணிக்கு வந்தனர். ஜெயலலிதாவின் ஜாமீன் மனு நீதிபதி ரத்னகலா முன்பு காலை 11.05-க்கு விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் ஜாமீன் மனு மீதான வாதத்தை தொடங்குவதற்கு முன்பாக அரசு வழக்கறிஞர் பவானி சிங் பேசினார்.

பவானி சிங் மறுப்பு

அப்போது,''ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி கர்நாடக அரசு என்னை அரசு வழக்கறிஞராக நியமித்தது. இந்த வழக்கில் கடந்த 27-ம் தேதி தீர்ப்பு வெளியானதால் அன்றுடன் எனது பணி முடிந்துவிட்டது. என்னால் மேல்முறையீட்டு வழக்கில் ஆஜராகி வாதாட முடியாது. இது தொடர்பாக கர்நாடக அரசு அரசாணை வெளியிடவில்லை'' என்றார். இதனைத் தொடர்ந்து நீதிபதி ரத்னகலா, ''அரசு வழக்கறிஞர் இல்லாமல் மனுவை விசாரிக்க முடியாது. எனவே வழக்கை வரும் 6-ம் தேதிக்கு ஒத்திவைக்கிறேன்'' என்றார்.

3 மணி நேரத்தில் புதிய மனு

இந்நிலையில் ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர்கள் நீதிபதி ரத்னகலா ஏற்காத அதே மனுவை மீண்டும் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் அவசர கால சிறப்பு மனுவாக தாக்கல் செய்யும் முயற்சியில் இறங்கினர். இதற்காக அவரது வழக்கறிஞர்கள் பன்னீர் செல்வம், அன்புக்கரசு, அம்ஜத் பாஷா, மூர்த்தி ராவ் ஆகியோர் நீதித்துறை பதிவாளர் ஆர்.கே.தேசாயை சந்தித்துப் பேசினர். உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி வஹேலாவிடம் ஆலோசித்துவிட்டு பதில் அளிப்பதாக அவர் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து ஜெயலலிதா வழக்கறிஞர்கள் புதிய மனுவை தட்டச்சு செய்து பிற்பகல் 1.30 மணிக்குள் அவசர கால மனுவாக தாக்கல் செய்தனர். இந்த மனுவில்,''குற்றவியல் நடைமுறை சட்டம் 389(1) பிரிவின்படி, 7 ஆண்டுகளுக்குள் தண்டனை விதிக்கப்பட்ட வழக்கில் அரசு வழக்கறிஞர் இல்லாமலே வழக்கை விசாரிக்கலாம். இதற்காக நீதிபதி தனது சுய அதிகாரத்தை பயன்படுத்தலாம். எனவே புதிய மனுக்களை அவசர கால சிறப்பு மனுவாக உடனடியாக விசாரிக்க வேண்டும்''என குறிப்பிடப்பட்டு இருந்தது.

இதனைத் தொடர்ந்து நீதித்துறை பதிவாளர் ஆர்.கே.தேசாய் இந்த மனு குறித்து விடுமுறை கால நீதிபதிகள் ரத்னகலா, அப்துல் நாஸர் ஆகியோரிடம் ஆலோசித்தார். டெல்லியில் இருந்த தலைமை நீதிபதி வஹேலாவிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார். பிற்பகல் 3 மணி அளவில் ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரின் ஜாமீன் மனுவையும் அவசர கால சிறப்பு மனுவாக ஏற்பதாக பதிவாளர் தேசாய் தெரிவித்தார்.

இந்நிலையில், புதன்கிழமை ஜெயலலிதா தாக்கல் செய்த அவசர கால சிறப்பு மனு மீதான விசாரணையும் அக்டோபர் 7-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதேவேளை தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்டோரை ஜெயலலிதா சந்திக்க மறுத்துவிட்டார். இதனால் நேற்று முழுவதும் ஹோட்டல் அறையில் காத்திருந்த அனைவரும் இரவில் சென்னைக்கு திரும்பினர்.

'ஆட்சி நிர்வாகத்தில் கவனம்'

தமிழக முதல்வரை, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சந்திக்க மறுப்பு தெரிவித்தது ஓ.பி.எஸ். அரசு நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காகவே எனத் தெரிகிறது. இதனை சிறை ஊழியர் வாயிலாக ஜெயலலிதாவே ஓ.பன்னீர்செல்வத்திற்கு தெரியப்படுத்தியுள்ளார்.

'ஓ.பன்னீர்செல்வம் தற்போது தமிழகத்தின் முதல்வராகிவிட்டார். அவர் சிறைச்சாலைக்கு வருகை தருவது சரியல்ல. மாறாக அவர் ஆட்சி நிர்வாகத்தின் மீது கவனத்தை செலுத்த வேண்டும்' என சிறைத்துறை ஊழியர் வாயிலாக ஜெயலலிதா முதல்வர் ஓ.பி.எஸ்-க்கு அனுப்பிய தகவலில் கூறியுள்ளார்.

கடந்த திங்கள்கிழமை மாலை தமிழகத்தின் புதிய முதல்வராக பதவியேற்ற ஓ.பன்னீர் செல்வம் அன்றிரவு 9 மணிக்கு பெங்களூரை வந்தடைந்தார்.அவருடன் அமைச்சர்கள் எடப்பாடி பழனிச்சாமி, நத்தம் விசுவநாதன், விஜயபாஸ்கர், வைத்தியலிங்கம் ஆகியோரும் வந்தனர்.

பெங்களூரில் உள்ள மதான் நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்த அவர்கள், பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க நேற்று காலை 9 மணிக்கு சிறை அதிகாரிகளிடம் அனுமதி வாங்கியிருந்தனர். கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நேற்று ஜெயலலிதாவின் ஜாமீன் மனு விசாரணைக்கு வந்தது. அதில் ஜாமீன் கிடைத்தால் விடுதலை செய்தியுடன் அவரை சந்திக்கலாம் என ஓ.பன்னீர் செல்வம் காத்திருந்தார்.

மேலும் சிறை வளாகத்தில் அமைச்சரவை கூட்டம் நடத்தலாம் என திட்டமிட்டு வளர்மதி, கோகுல இந்திரா, தங்கமணி, வேலுமணி, ராமராஜ், செந்தில் பாலாஜி, மோகன் ஆகிய அமைச்சர்களும் பரப்பன அக்ரஹாராவுக்கு வரவழைக்கப்பட்டனர். இந்நிலையில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்கப்படவில்லை.

இந்தத் தகவலை கேள்விப்பட்ட ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்ட அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். இருப்பினும் மீண்டும் ஜெயலலிதாவை சந்திக்க அவரிடம் அனுமதி கேட்டனர். ஆனால், ஜெயலலிதா யாரையும் சந்திக்க விரும்பவில்லை என கூறிவிட்டார்.

எனவே ஒரு நாள் முழுவதும் பெங்களூரில் காத்திருந்த தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் உட்பட 10-க்கும் மேற்பட்ட அமைச்சர்களும் நேற்று மாலை 5 மணிக்கு பெங்களூரில் இருந்து சென்னை திரும்பினர். ஜெயலலிதாவின் ஜாமீன் மனு இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது. ஜாமீன் கிடைத்த பிறகு தங்களை ஜெயலலிதா சந்திப்பார் என பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் காத்திருக்கிறார்கள் எனக் கூறப்படுகிறது.

இதற்கிடையே முன்னாள் பிரதமர் தேவகவுடா ஜெயலலிதாவை செவ்வாய்க்கிழமை சந்திக்க அனுமதி கேட்டுள்ளார். அவருக்கு அனுமதி வழங்கப்படவில்லை எனக்கூறப்படுகிறது.

Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com