Sunday, August 31, 2014

பொலிஸ் தினத்தினை முன்னிட்டு பொகவந்தலாவவில் நடமாடும் சேவை! (படங்கள் இணைப்பு)

148வது பொலிஸ் தினத்தினை முன்னிட்டு பொகவந்தலாவ பொலிஸ் நிலையத்தின் ஏற்பாட்டில் பொகவந்தலாவ பிரதேச மக்களுக்கான இலவச நடமாடும் சேவை நேற்று (30)சனிக்கிழமை காலை 09 மணியளவில் பொகவந்தலாவ பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி சரத்சமர விக்ரம தலைமையில் பொகவந்தலாவ சென்மேரிஸ் மத்திய கல்லூரியில் இடம் பெற்றது.

இந்த நடமாடும் சேவையில் இரத்தானம் வழங்குதல், அடையாள அட்டை, பிறப்புச்சான்றுதல், பொலிஸ் அறிக்கை, முறைப்பாடு ஏற்றுகொள்ளல் என்பன இடம் பெற்றது.

பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான பாடசாலை மாணவர்களுக்கான விழிப்புணர்வுச் செயலமர்வு கல்லூரியின் பிரதான மண்டபத்தில் களுத்துரை பொலிஸ் வித்தியாலயத்தின் விரிவுரையாளரும் பிரதான பொலிஸ் பரீசோதகருமான புத்திக்க பாலசுந்தர தலைமையில் இடம் பெற்றது.

(க.கிஷாந்தன்)

Read more...

கொட்டகலயில் சுற்றாடல் ஈரநிலப் பூங்கா!

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களின் வழிகாட்டலின் பேரில் அரச பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தியமைச்சின் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ அவர்களின் செயற்பாட்டுடன் நகரஅபிவிருத்தி அதிகார சபையின் திட்டமிடல் மற்றும் மேற்பார்வையின் கீழ் இந்த கொட்டகலை சுற்றாடல் ஈர நிலபடபூங்கா அமைப்பதற்கான வேலைத்திட்டம் கால்நடை வள மற்றும் கிராமிய சமூக அபிவிருத்தியமைச்சர் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் அவர்களினால் நேற்று (30)ஆரம்பித்துவைக்கப்பட்டது.

அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் வேண்டுக்கோளுக்கிணங்க 25 ஏக்கர் கொண்ட இந்த கொட்டகலை ஈரநில நிலப்பரப்பில் நகரஅபிவிருத்தியமைச்சின் 340 இலட்சம் நிதிஒதுக்கீட்டில் இத்திட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது.

இதில் நீர்தேக்ககுளம்,உணவகம், இயற்கையைரசித்தல்,உணவுகடைகள்,வாகனநிறுத்துமிடவசதிகள்,சுகாதாரவசதிகள் எனபலதிட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளது.

இது வெளிநாட்டுமற்றும் உள்நாட்டுசுற்றுலாபயணிகளுக்காகவும் மக்களுக்காகவும் இத்திட்டத்தைதான் மேற்கொள்ளதீர்மானித்ததாகஅமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் இந்நிகழ்வின் போதுதெரிவித்தார்.

இந்கிழ்வுக்குநகரஅபிவிருத்திஅதிகாரசபையின்தலைவர் நாமல் பெரேரா,பொருளாதாரஅபிவிருத்திபிரதிஅமைச்சர் முத்துசிவலிங்கம், இலங்கைதொழிலாளர் காங்கிரஸின் பலமுக்கியஸ்தர்களும் கலந்துகொண்டனர்.

(க.கிஷாந்தன்)

Read more...

எனக்கு பிரதித் தலைவர் பதவி வேண்டும்! இல்லையேல் போய்விடுவேன்! - ரவி கருணாநாயக்க

சஜித் பிரேமதாசவுக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் பதவி வழங்கப்படுமாயின், தனக்கும் பிரதித் தலைவர் வழங்கப்பட வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க வேண்டுகோள் விடுத்துள்ளதாகத் தெரியவருகின்றது.

அவ்வாறு செய்யாதுவிட்டால் ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து தான் விலகிப் போவதற்குத் தீர்மானித்துள்ளேன் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இது இவ்வாறிருந்தாலும் ரவியின் வேண்டுகோளை ரணில் விக்கிரமசிங்க கருத்திற் கொண்டு அதற்கு பதில் அளிக்கவில்லை எனவும்.

(கேஎப்)

Read more...

இலங்கையில் உருவாகின்றது தனியார் மருத்துவ பீடங்கள் பல!

தற்போது மாலம்பே தனியார் மருத்துவப் பாடசாலை அனைத்துத் தகுதிகளையும் பெற்றிருப்பதால் அதற்கு அனுமதியைப் பெற்றுக் கொடுப்பற்கு இலங்கை மருத்துவ சபை முன்வரவேண்டிய நிலையில் இருப்பதாக உயர்கல்வி அமைச்சர் எஸ்.பீ. திசாநாயக்க குறிப்பிடுகின்றார்.

பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் குறிப்பிடப்பட்டிருந்த அனைத்துத் தகுதிகளையும் அவ் மருத்துவப் பல்கலைக்கழகம் பூர்த்தி செய்துள்ளது எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

மாலம்பே தனியார் மருத்துவப் பாடசாலையிலுள்ள மாணவர்கள் கொழும்பு மற்றும் இதர பகுதிகளிலுள்ள தனியார் மருத்துவ நிலையங்களில் செயன்முறைப் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றார்கள் எனவும் அமைச்சர் தெளிவுறுத்தினார்.

இலங்கையில் மேலும் பல தனியார் மருத்துவ பீடங்கள் பல ஆரம்பிப்பதற்கான ஆரம்பக் கட்ட நடவடிக்கைகள் நடைபெற்றுவருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

(கேஎப்)

Read more...

எல்.ரி.ரி.ஈ ஆஸி.யில் ஒருங்கிணைய முயற்சி?

எல். ரி. ரி. ஈ அவுஸ்திரேலியாவில் மீள ஒருங்கிணைய முயற்சிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அண்மையில் ஆறு இலங்கையர்களை அவுஸ்திரேலியா விற்கு, சட்டவிரோதமாக கடத்த முயற்சித்த நான்கு ஆட்கடத்தல்காரர்கள் கைது செய்யப்பட்ட விவகாரம் இந்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிகின்றது.

இலங்கைத் தீவில் வாழ்க்கைத் தரம் தொடர்பில் திருப்தியற்ற இளைஞர்கள் அதிகளவில் வெளியேறி, வெளிநாடுகளுக்கு செல்ல முயற்சிப்பதாகவும் எனவும் அது வெறுமனே தொழில் வாய்ப்பை மட்டும் அடிப்படையாகக் கொண்டு இளைஞர்கள் அவுஸ்திரேலியா நோக்கிப் புறப்பட்டுச் செல்லவில்லை எனவும் இந்திய பொலிஸ் தரப்பில் கூறப்படுகின்றது.

Read more...

மூன்றாவது முறையாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் சந்தர்ப்பம் ஜனாதிபதி மஹிந்தவிற்கு நழுவிவிட்டதாம்!-சிங்களப் பத்திரிகை

மூன்றாவது முறையாக ஜனாதிபதி தேர்தலில் போட்டி யிடும் சந்தர்ப்பம் ஜனாதிபதி மஹிந்தவிற்கு நழுவிப் போய்விட்டடது என சட்டவல்லுனர்கள் தெரிவித்துள் ளனர் என்று சிங்களப் பத்திரிகை யொன்று செய்தி வெளியிட் டுள்ளது

18 ஆவது அரசியலமைப்பு திருத்தம் குறைபாடுகளுடன் நிறைவேற்றப்பட்டமையே இதற்கு காரணம் எனவும் முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என். சில்வா முதன் முறையாக வெளியிட்ட சட்ட ரீதியான தர்க்கம் சக்திமிக்கதெனவும் அதனை மீற முடியாதென்றும் அப்பத்திரிகை சுட்டியுள்ளது

அரசியலமைப்பின் 32/2 ஷரத்தின்படி மக்களால் தெரிவு செய்யப்பட்ட எந்தவொரு நபரும் அதன் பின்னர் அந்தப் பதவிக்கு மக்களால் தெரிவு செய்யத் தகுதியற்ற வராகிறார் என்று சட்ட விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது என்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ 2010 ஜனவரி 27ஆம் திகதி இரண்டாவது முறையாக ஜனாதிபதி பதவிக்கு தெரிவு செய்யப்பட்டவுடன் சட்டவிதிகள் செயற்படுவதாக சரத் என். சில்வா சமீபத்தில் ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்தார்.

அப்போது இந்த சட்டவிதிகள் அமுலில் இருந்த போதே அவர் ஜனாதிபதி பதவிக்கு தெரிவு செய்யப்பட்டதால் அவர் மூன்றாவது முறையாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தகுதியற்றவராகிறார்.

எனினும் 2010 செப்டெம்பர் 9 ஆம் திகதி முதல் நடைமுறையிலிருந்த 18ஆவது திருத்த சட்டத்தின் மூலம் மேற்கண்ட 31/2 ஷரத்து நீக்கப்பட்டது. இதன்படி கால வரையறையின்றி மீண்டும் ஜனாதிபதி பதவிக்குத் தெரிவு செய்ய எந்தவொரு நபருக்கும் வாய்ப்புள்ளது. இருந்தும் சட்டம் அமுலுக்கு வருவதற்கு முன்னர் ஜனாதிபதியாக பதவிப்பிரமாணம் செய்து கொண்ட மஹிந்த ராஜபக் ஷவுக்கு அந்த சந்தர்ப்பம் கிடைக்காது. இவ்வாறு அச்சிங்கள பத்திரிகை செய்தியில் தெரிவிக்கப் பட்டுள்ளது

Read more...

நவநீதம்பிள்ளை இன்றுடன் ஓய்வு! இலங்கை விவகாரம் தொடர்பில் வாய்மூல அறிக்கை செப்டெம்பர் மாதம் 8 முதல் 26!

தற்போதைய ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நவ நீதம்பிள்ளை இம் மாதத்துடன் ஓய்வு பெறுவதையடுத்து ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளராக ஜோர்தான் இளவரசர் ஷெயிட் அல் ஹூசைன் புதிய ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரா நாளை முதல் பொறுப்பேற்க வுள்ளார்.

செப்டெம்பர் மாதம் 8 திகதி ஆரம்பமாகவுள்ள ஐ.நா கூட்டத் தொடர் 26 ஆம் திகதிவரை நடைபெறும். இலங்கை விவகாரம் தொடர்பில் விசா ரணை நடத்திவரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை அலுவலகம் விசாரணையின் முன்னேற்றங்கள் குறித்து இந்தக் கூட்டத் தொடரில் வாய்மூல அறிக்கையை சமர்ப்பிக்கவுள்ளதென தெரிவிக்கப்படுகின்றது

இதேவேளை முதல் நாள் அமர்வில் உரையாற்றவுள்ள ஐக்கிய நாடுகளின் புதிய மனித உரிமை ஆணையாளர் தனது உரையில் இலங்கை குறித்து பிரஸ்தாபிப்பார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன

இலங்கையின் சார்பில் அமர்வில் கலந்துகொள்ளும் ரவிநாத ஆரியசிங்க மனித உரிமை அலுவலகத்தின் வாய்மூல அறிக்கைக்கு பதிலளித்து உரையாற்றுவார் என தெரிவிக்கப்படுகின்றது

மனித உரிமை அலுவலகத்தின் விசாரணை குழுவானது இலங்கை விவகாரம் தொடர்பில் ஜெனிவாவில் விசாரணை செயற்பாடுகளை நடத்திவருகின்றது. அத்துடன் விசாரணை செயற்பாட்டை வலுப்படுத்தும் நோக்கில் புதிய ஏற்பாடுகளை விசாரணை கட்டமைப்பில் இணைத்துக் கொள்ளவுள்ளதாகவும் குறிப்பாக விசார ணைகளுக்கு வெளிநாட்டு அரசாங்கங்களின் உதவிகளை பெற்றுக்கொள்ளும் வகையில் சட்ட ஏற்பாடுகளை தமது திட்டத்தில் மனித உரிமைப் பேரவை இணைத்துக்கொள்ளவுள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும் குறித்த விசாரணைக்கு இலங்கை அரசு அனுமதி மறுத்திருந்த நிலையில் இலங்கைக்கு விஜயம் செய்யாமலேயே விசாரணை செயற்பாடுகளை முன்னெ டுக்க முடியும் என்று பதவி விலகிச் செல்லும் ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read more...

Saturday, August 30, 2014

உலகை அச்சுறுத்தி வரும் உயிர்க்கொல்லி நோயான எபோலாவை குணப்படுத்த மருந்து கண்டுபிடிப்பு?

உலகை அச்சுறுத்தி வரும் உயிர்க்கொல்லி நோயான எபோலா ஆப்பிரிக்காவில் உள்ள நைஜீரியா, லைபீரியா, சியர்ராலோன், கினியா ஆகிய நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. எபோலா நோயை குணப்படுத்த கண்டறியப்பட்ட மருந்தை குரங்குக்கு செலுத்தி பரிசோதித்ததில் அது முழு மையாக குணமடைந்ததாகவும், மருத்துவ பரிசோதனை வெற்றியடைந்துள்ளதாகவும், மருத்துவ விஞ்ஞானிகள் அறிவித் துள்ளனர்.

இந்த நோய்க்கு இதுவரை 1400 பேர் பலியாகி உள்ளனர். இரண்டாயிரத்திற்கும் மேற் பட்டோர் நோய் தாக்கி சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த உயிர்க்கொல்லி நோயை குணப்படுத்த மருந்து கண்டுபிடிக்கப்படாமல் இருந்து வந்தது. எனவே அமெரிக்கா தயாரித்த "ஷ்மாப்" என்ற மருந்தை அதிகார பூர்வ மின்றி நோய் தாக்கியவர்களுக்கு வழங்கி சிகிச்சை அளிக்க உலக சுகாதார நிறுவனம் அனுமதி வழங்கி உள்ளது.

அதே நேரத்தில் இந்த மருந்து மூலம் சிகிச்சை அளிக்கப்பட்ட லைபீரியன் டாக்டர் மற்றும் அந்நாட்டை சேர்ந்த 3 பேர், ஸ்பெயின் பாதிரியார் ஆகிய 5 பேர் உயிரிழந் தனர். எனவே இந்த மருந்தை நோய் பாதித்த மனிதர்களுக்கு வழங்குவதில் குழப்பமும், சிக்கலும் ஏற்பட்டது.

எனவே "ஷ்மாப்" என்ற மருந்தை "சேஸ் மகாகுயஸ்" இனத்தை சேர்ந்த "எபோலா" நோய் தாக்கிய 18 குரங்கு களுக்கு செலுத்தி பரிசோதிக்கப்பட்டது. கனடா நாட்டின் பொது சுகாதார ஏஜென்சி இதற்கான ஆய்வை மேற்கொண்டது. அதில் குரங்குக ளுக்கு "எபோலா" நோய் முற்றிலும் குணமடைந்தது. குரங்குகள் அனைத்தும் உயிர் பிழைத்தன.

அதைத்தொடர்ந்து இந்த மருத்துவ பரிசோதனை வெற்றி அடைந்ததாக விஞ்ஞானிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதே நேரத்தில் நோய் குணமாவதில் மனிதர்கள் மற்றும் விலங்குகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள வித்தியாசம் குறித்து குழப்பம் உள்ளபோதிலும், குரங்கு குணமானதால், மனிதர்களுக்கும் அந்த மருந்து வேலை செய்யும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாகவும் ஆய்வை மேற்கொண்ட விஞ்ஞானிகளில் ஒருவரான கேரி கோபிஞ்சர் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து இந்த மருந்தின் தரத்தை மேம்படுத்தி மனிதர்களிடம் விரைவில் பரிசோதனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கனடாவிலிருந்து வெளி யாகும் "நேச்சர்" என்ற மருத்துவ பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எபோலா நோய் தாக்கிய குரங்குகளுக்கு மேற்கூறிய மருந்தை செலுத்திய 5 நாட்களுக்குள்ளேயே நல்ல முன்னேற்றம் தெரிந்ததாகவும், மருந்து செலுத்தாத எபோலா நோய் பாதித்த 3 குரங்குகள் எட்டு நாட்களில் உயிரிழந்துவிட்டதாகவும் ஆய்வில் தெரியவந்ததாக அந்த பத்திரிகையில் மேலும் கூறப்பட்டுள்ளது.

Read more...

தெற்கு அதிவேக வீதியில் விபத்து! காயமடைந்தோர் கராப்பிட்டிய வைத்தியசாலையில்!

இன்று பிற்பகல் 12.10 மணியளவில் தெற்கு அதிவேக வீதி யின் பின்னதுவ பிரதேசத்திற்கு அருகில் இடம்பெற்ற வீதி விபத்தில் 14 பேர் காயமடைந்துள்ளதுடன் காயமடைந்த 14 பேர் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.

கொட்டாவையிலிருந்து காலி நோக்கி சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் வண்டி, அனுமதி கட்டணத்தை செலுத்துவதற்காக நிறுத்தப்பட்ட போது, பின்னால் வந்த தனியார் பஸ் மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் பின்னதுவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Read more...

ஒரு உயிரை பலியொடுத்த குரங்கும் குளவியும் - ( படங்கள்)

திம்புள்ள பத்தனை போகாவத்தை பகுதியில் காட்டுப் பகுதியில் வழிபாட்டுதளம் ஒன்றில் பூசைகளில் ஈடுப்பட்டு வீடுதிரும்பிக் கொண்டிருந்தவர்கள் மீது குளவி தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

29.08.2014 அன்று மாலைஇடம் பெற்ற இச்சம்பவத்தில் 4 ஆண்களும் 3 பெண்களும் அத்தோடு 4 சிறுவர்களும் குளவி கொட்டுக்கு இழக்காகி கொட்டகலை மாவட்ட வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் இதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.

குறித்த பகுதியில் அமைந்துள்ள மரத்தில் கட்டியிருந்த குளவி கூட்டை குரங்கு ஒன்று கலைத்ததன் காரணமாகவே இவ்வனர்த்தம் இடம்பெற்றதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.

போகாவத்தைபகுதியை சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான 59 வயதான சிவபிரகாசம் என்பவரே சம்கவத்தில் உயிரிழந்துள்ளார் இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை திம்புள்ளபத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

(க.கிஷாந்தன்)

Read more...

Friday, August 29, 2014

T N A தீர்மானத்தின்படி போனஸ் ஆசனம் சுழற்சி முறையில் வழங்கப்படுமா? ஆர்கே

1987 ம் ஆண்டு இந்திய அனுசரணையுடன் செய்யபட்ட உடன்பாடு காரணமாக எமக்கு கிடைக்கப்பட்ட ஓர் அலகு மாகாணசபையாகும். நீண்டகால இடைவெளியின் பின்னர் கடந்த வருடம் 2013 செப்ரம்பர் மாதம் வடமாகாணசபை தேர்தல் நடைபெற்றது.13வது திருத்தத்தில் போதிய அதிகாரம் இல்லை யென்று ஏற்கனவே தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு தெரிந்த விடயம் இவ்வாறு ஒருபுறமிருக்க மாகாணசபை மூலம் தமிழருக்கான தீர்வினை பெறமுடியும் என்றும் எமக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைக்கவேண்டும் அவ்வாறு கிடைக்கும் பட்சத்தில் வட மாகாணத்தில் பாரிய பல மாற்றங்களை எங்களால் கொண்டுவரமுடியும் என தேர்தல் காலங்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பிரசாரங்களை மேற்கொண்டன.

2013 நடைபெற்ற வட மாகாண சபை தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கும் அதிகமான வாக்குகளை பெற்று அமோக வெற்றியீட்ட மக்கள் ஆணை வழங்கியிருந்தனர். ஆதிகூடிய ஆசனங்களை பெற்றதனால் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு இரண்டு போனஸ் ஆசனங்கள் கிடைத்தன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு போனஸ்சாக கிடைத்த இரண்டு ஆசனத்தில் அதில் ஒன்றை முஸ்லிம் பிரஜைக்கு வழங்கியுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் மன்னார் மாவட்டத்தில் போட்டியிட்டு தோல்வியடைந்த அயூப் நஸ்மீன் என்பருக்கே அந்த போனஸ் ஆசனம் வழங்கப்பட்டது.

எஞ்சியுள்ள போனஸ் ஆசனத்தை சுழற்சி முறையில் ஐந்து வேட்பாளர்களுக்கு வழங்க தீர்மானிக்கப்பட்து அதன்படி, ஐந்து வருட மாகாண சபை பதவி காலத்தில் ஐவர் தலா ஒவ்வொரு வருடம் மாகாண சபை உறுப்பினர்களாக பதவி வகிக்கவுள்ளனர்.

வட மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தவர்களில் அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்ற ஐவருக்கு இந்த போனஸ் ஆசனம் பகிரப்படும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு அறிவித்துருந்தது.

வடமாகாண சபைக்குரிய போனஸ் இடங்களில் ஒன்றை பல்வேறுபட்ட சமூக நலன்களைக் கருத்தில் கொண்டு ஜந்து கட்சிகளைச் சேர்ந்தவர்களுக்கும் ஒருவருக்கு ஒரு வருடம் வீதம் ஜந்து பேருக்கு சுழற்சி முறையில் வழங்குவது என்று கூட்டமைப்பு அதிகாரபூர்வமாக முடிவெடுத்திருந்தது.

அதன்படி, முல்லைத்தீவு மாவட்டத்தில் போட்டியிட்ட மேரி கமலா குணசீலன் என்பவருக்கு முதலாவதாக அந்த இடத்தை வழங்க முடிவு செய்யப்பட்டதின்படி முதல் வருடத்தை மேரி கமலா குணசீலன் என்பவருக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு வழங்கியிருந்தது.

இதன் பிரகாரம் முதலாவது ஆண்டு ஆசனம் தமிழர் விடுதலை கூட்டணிக்கும் இரண்டாவது ஆண்டு ஆசனம் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணிக்கும் (E P R L F) மூன்றாவது ஆண்டு ஆசனம் இலங்கை தமிழரசு கட்சிக்கும் நான்காவது ஆண்டு ஆசனம் தமிழ் ஈழ விடதலை இயக்திற்கும் (T E L O) இறுதியாண்டு ஆசனம் தமிழிழ மக்கள் விடுதலை கழகம் (P L O T E) என சுழற்சி முறை வழங்கப்பட்டிருந்தன. இவ்வாறு சுழற்சி முறை அடிப்படையில் போனஸ் ஆசனத்தை பகிர்வது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் தீர்மானிக்கப்பட்டது.

இவ்வாண்டு சுழற்சி முறை நடைமுறையில் வருவது சாத்தியபடுமா? ஆல்லது மக்கள் ஏமாற்றமடைந்தது போல் சுழற்சி முறையில் வரவேண்டிய ஏனைய நான்கு பேருக்கும் (M P நடராசா, S.சிவகரன், S.மயூரன் மற்றும் N.சிவநேசன்) ஏமாற்றமா? ஏன்ற கேள்விகளும் எழத்தான் செய்கின்றன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மாகாண அரசை பொறுப்பெடுத்து ஒருவருடங்கள் கழிகின்ற காலகட்டத்துக்குள் தேர்தல் காலங்களில் முன்மொழியப்பட்ட கோரிக்கைகள் மற்றும் அவர்களால் செய்யபடவேண்டிய வேலைத்திட்டங்கள் எல்லாம் கேள்விகுறியாகவே காணப்படுகிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாகாண அரசின் ஆக்கபூர்வமான செயர்பாடுகள் மிகவும் அரிதாகவே காணக்கூடியதாகவுள்ளது.

Read more...

டக்ளஸின் கீழுள்ள மகேஸ்வரி நிதியத்திற்குச் சொந்தமானதே குறித்த டிப்பர்!

தடயத்தை அழிப்பதற்காக பொலிஸார் பக்கச்சார்பாக நடந்துகொள்ளவில்லையாம்

யாழ்ப்பாணம், நவக்கிரி, டிப்பர் ரக வாகனம் ஒன்று மோதி கர்ப்பிணி பலியான விடயத்தில் பொலிஸார் எவ்விதத் திலும் பக்கச்சார்பாக நடந்துகொள்ளவில்லை என யாழ். உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் பி.ஏ.நிஹால் பெரேரா தெரிவித்துள்ளார்

குறித்த டிப்பர் வாகனம் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் கீழுள்ள மகேஸ்வரி நிதியத்திற்குச் சொந்தமானது. இந்நிலையில், விபத்து இடம்பெற்று சிறிது நேரத்தில் சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார், உயிரிழந்த பெண்ணின் சடலத்தை வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றனர்.

விபத்து இடம்பெற்றதற்கான தடயத்தை அழிப்பதற்காகவே சடலத்தை பொலிஸார் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இச்செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை. அது முற்றாகத் தவறு. ஒருவர் இறந்தமை தொடர்பில் பொலிஸாரால் அறிய முடியாது. வைத்தியரே கூறமுடியும். ஆகவே. மேற்படி விபத்தில் சிக்கிய பெண் உயிருடன் இருக்கின்றார் என நினைத்து பொலிஸார் அவரை வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றனர். மாறாக தடயத்தை அழிக்கும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபடவில்லை' என தெரிவித்தார்.

மேலும், 'இந்த சம்பவத்தில் டிப்பர் வாகனத்தை எரித்தவர்களை நாங்கள் கைது செய்யவில்லை. அவர்களை அடையாளம் காண்பதற்குக்கூட நாங்கள் முயற்சி க்கவில்லை. இந்நிலையில் எவ்வாறு பொலிஸார் பக்கச்சார்பாக நடந்தனர் என்று கூற முடியும்' என கேள்வி எழுப்பினார்.

அவ்வாறிருக்க, மேற்படி விபத்துச் சம்பவத்தை அடுத்து அப்பகுதியில் அதிகளவான பொலிஸாரும் இராணுவத்தினரும் குவிக்கப்பட்டதற்கான காரணம் என்ன?' என்று உதவி பொலிஸ் அத்தியட்சகரிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த அவர், 'இலங்கையில் எப்பாகத்தில் வாகனங்கள் எரியூட்டப் பட்டாலும் அவ்விடத்திற்கு பெருமளவான பொலிஸாரும் இராணுவத்தினரும் செல்வது வழமை. அந்தவகையில் மேற்படி சம்பவத்திற்கும் அதிகளவான பொலிஸார் சென்றிருந்தனர்' எனக் கூறினார்.

மாத முடிவிற்கான ஊடகவியலாளர்கள் சந்திப்பு யாழ்.பொலிஸ் தலைமையகத்தில் வெள்ளிக்கிழமை (29) இடம்பெற்றது. இதன்போது, நவகிரி பகுதியில் இடம்பெற்ற விபத்து தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளித்த உதவி பொலிஸ் அத்தியட்சகர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Read more...

இன்று விநாயகர் சதுர்த்தி! (படங்கள்)

விநாயகர் சதுர்த்தி இன்றாகும் இதனைமுன்னிட்டு லிந்துலை நாகசேனை நகர் சித்திவிநாயகர் ஆலயத்தின் வருடாந்த சதுர்த்தி நடைபெற்றது. இதன் போது பக்தர்கள் பாற்குட பவனியில் வருவதையும் விநாயகருக்கு விசேட பூஜைகள் நடைபெறுவதையும் இங்குபடங்களில் காண லாம்.

(க.கிஷாந்தன்

Read more...

மிகச் சிறப்பாக நடைபெற்ற கிளாசோ தோட்ட விவசாய சங்க 7ஆவது ஆண்டுப் பூர்த்தி விழா! (படங்கள் இணைப்பு)

நுவரெலியா விவசாய திணைக்களத்தின் ஏற்பாட்டில் நானுஓயா கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட கிளாசோ தோட்டத்தில் உருவாக்கப்பட்ட விவசாய சங்கத்தின் 7வது ஆண்டு பூர்த்திவிழாவும் பொதுகூட்டமும் அண்மையில் கிளாசோ தோட்ட கமனல காரியாலயத்தில்நடைபெற்றது.

இதில் விவசாயத் திணைக்கள அதிகாரி நதிர பெரேரா, ஆலோசகர் இந்திக்க ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன்போது எடுக்கப்பட்ட படங்களை இங்கு காணலாம்.

(க.கிஷாந்தன்)

Read more...

Thursday, August 28, 2014

லக் சதொசக்களினால் வியாபாரிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது! - ஹேமால் குணசேக்கர

நுகர்வோரின் தேவைகளை நிறைவு செய்வதுடன், அவர்களைப் பாதுகாப்பதற்காகவே கூட்டுறவு வியாபார நிலையங்கள் உருவாக்கப்படுகின்றன. வெலிகமவில் இன்று (27) ஆரம்பிக்கப்பட்டுள்ள லக் சதொசவினால் வியாபாரிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. மாறாக நல்லதொரு போட்டியே ஏற்படும்.

வெலிகம புகையிரத நிலையத்திற்கு .அருகாமையில் நேற்று (27) லக் சதொசவின் புதிய கட்டடம் நேற்று (28) புதன் கிழமை திறந்து வைத்து, பிரதி கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வியாபார அமைச்சர் ஹேமால் குணசேக்கர உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

இந்த கூட்டுறவு வியாபார நிலையத்தை நிர்மாணிப்பதற்கு எதிராக பலர் பல இடங்களிலும் முறைப்பாடுகள் செய்துள்ளனர். என்றாலும், அவை தொடர்பில் நாங்கள் கவனத்திற்கொள்ளவில்லை.. காய்க்கும் மரத்திற்குத்தான் கல்லடியும் பொல்லடியும் படும் என்பார்கள். இவ்வாறு பலரும் எங்களுக்கு எதிராக செயற்பட முனைந்தாலும் அவர்களால் எதுவும் செய்யமுடியாது. நாங்கள் கெட்ட வேலை ஒன்று செய்யவில்லை. வெலிகம மக்களுக்கு நன்மையே செய்திருக்கின்றோம்.

வெலிகமையில் நல்ல புரிந்துணர்வு உள்ளவர்களே பெரும்பாலும் இருக்கிறார்கள்.. இங்கு முஸ்லிம்களும், சிங்களவர்களும், தமிழர்களும் ஒருவருக்கொருவர் பரஸ்பர புரிந்துணர்வோடுதான் செயற்படுகின்றார்கள். இன்று வெலிகமையில் திறக்கப்பட்டுள்ள கூட்டுறவு வியாபார நிலையமானது 300 ஆவது கூட்டுறவு வியாபார நிலையமாகும். இந்த கூட்டுறவு நிலையமானது பொதுமக்களின் நன்மை கருதியே திறக்கப்பட்டுள்ளது. மாறாக, வியாபாரிகளின் வயிற்றுக்கு அடிப்பதற்கு அல்ல. இதன் மூலம் நல்லதொரு போட்டியை வெலிகமையில் எதிர்பார்க்கலாம். நாளுக்கு நாள் நல்ல வளர்ச்சிப்படியை நோக்கிச் செல்கின்ற வெலிகமையில் இன்னும் பல பாரிய செயற்றிட்டங்களை செய்வதற்கு நான் தீர்மானித்துள்ளேன்.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, கூட்டுறவு அமைச்சர் ஜோன்ஸ்டன் பிரனாந்து ஆகியோருடன் நான் பொதுமக்களினதும், விவசாயிகளினதும் நன்மை கருதி பல திட்டங்களை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளோம். பொதுமக்களுக்கும், விவசாயிகளுக்கும் அநீதி ஏற்படாத வண்ணம் அரிசியின் விலையை வெகு விரைவில் குறைக்கவுள்ளோம்.

கூட்டுறவுத் துறையில் மிகவும் கூடுதலாகக் கடமையாற்றுபவர்கள் பெண்களே.. எனவே மிக இலகுவில் எங்களால் தேர்தலில் வெற்றி பெற முடியம். பெண்களுக்காக தனியானதொரு வங்கி உருவாக்கப்பட வேண்டும் என்பதும் எங்கள் எண்ணப்பாடாக உள்ளது.

இன்னும் 14 - 15 நாட்களுக்குள் அரசாங்கம் விவசாயிகளையும், நுகர்வோரையும் பாதுகாக்கும் செயற்றிட்டமொன்றை முன்கொணர உள்ளது. ” எனக் குறிப்பிட்டார்.

நிகழ்வில் விசேட அதிதிகளாகக் கலந்துகொண்ட வெலிகம பிரதேச சபையின் தலைவர் புஷ்பகுமார பெட்டகே, வெலிகம நகரபிதா ஹுஸைன் ஹாஜியார் முஹம்மத், வரையறுக்கப்பட்ட வெலிகம கூட்டுறவு வியாபார நிலையத்தின் தலைவர் சுசில் வீரசேக்கர ஆகியோரும், வெலிகம பிரதேச செயலகத்தின் செயலாளர் உட்பட மற்றும் சிலர் கருத்துரைத்தனர்.

(கலைமகன் பைரூஸ்)

Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com