Saturday, May 17, 2014

மறைந்திருந்த விமலார் வெளியே வந்தார் நேற்றிரவு!

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச, கடந்த வாரங்களில் வெளிப்படாமல் இருந்து வந்த நிலையில், கொழும்பில் உள்ள விடுதியொன்றில் நேற்றிரவு (16) இடம்பெற்ற விருந்துபசாரம் ஒன்றில் ஜனாதிபதியை சந்தித்துள்ளார்.

பத்தரமுல்லையில் உள்ள வோட்டர் ஹெச்ஜில் நேற்றிரவு நடைபெற்ற நிறுவனம் ஒன்றின் 70 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடத்தப்பட்ட விருந்துபசாரத்தில் இந்த சந்திப்பு நிகழ்ந்தது. அமைச்சர் வீரவன்ச, ஜனாதிபதியை வரவேற்றதுடன் இருவரும் படங்களுக்கு காட்சி கொடுத்தனர். இருவருக்கும் இடையில் பதற்றம் இருப்பதை அவதானிக்க முடியவில்லை.

தொலைக்காட்சி ஒன்றில் சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற நேர்காணல் ஒன்றில் பங்குபற்றி வீரவன்ச, அரசாங்கத்தை விமர்சித்திருந்துடன் ஜனாதிபதியின் நிர்வாகம் போலித்தனமானது என விமர்சித்திருந்தார். இந்த நிலையில், வர்த்தக நிறுவனம் ஒன்றின் நிகழ்வில் இருவருக்குமிடையில் என்ன பேசப்பட்டது என்பது இரகசியமானது.

ஜனாதிபதியின் பணிக்குழுவின் தலைமை அதிகாரி காமினி செனரத், சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிரியந்த ஜெயரத்ன, மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க ஆகியோரும் ஜனாதிபதியும் வீரவன்சவும் அமர்ந்திருந்த அதே மேசையில் அமர்ந்திருந்தனர். ஜனாதிபதி செயலகத்தில் இருந்து எடுக்கப்படும் அழைப்புகளுக்கு அமைச்சர் விமல் வீரவன்ச, பதிலளிப்பதில்லை என ஜனாதிபதி சில அமைச்சர்களிடம் முறைப்பாடு செய்திருந்தார்.

அத்துடன் அமைச்சர் வீரவன்ச, சில அமைச்சரவை கூட்டங்களையும் தவிர்த்திருந்தார். ஆளும் கட்சியின் மே தினக் கூட்டத்திலும் அவர் பங்கேற்கவில்லை என்பது தெரிந்ததே.

(கேஎப்)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com