Thursday, January 9, 2014

இந்திய பிரதம மந்திரி இராஜினாமா அறிவிக்கிறார்! By Keith Jones

வரவிருக்கின்ற ஏப்ரல்-மே 2014 தேசிய தேர்தலுக்குப் பின்னர் தாம் பதவியில் இருந்து விலக இருப்பதாக இந்திய பிரதம மந்திரி கடந்த வெள்ளியன்று ஒரு பத்திரிகையாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

மே 2004இல் அதிகாரத்திற்கு வந்ததில் இருந்து காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி (UPA) அரசாங்கத்தின் தலைமை பொறுப்பில் இருந்து வரும் சிங்,காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தியின் விருப்பத்தின் பேரில் அவர் இந்திய அரசின் தலைவராக சேவை செய்து வருவதாகவே எப்போதும் அறிவித்து வந்துள்ளார்.

காங்கிரஸ் கட்சி இப்போது—சோனியாவின் 43 வயது மகனும், நேரு-காந்தி அரசியல் வம்சத்தின் வாரிசுமான—ராகுல் காந்தியை அதன் பிரதம மந்திரி வேட்பாளராக பெயரிடும் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.

அவரால் தலைமை தாங்கப்படும் ஓர் அரசாங்கத்தில் சேவை செய்வதில் தாம் பெருமைப்படுவதாக தெரிவித்து, சிங் அவரது பத்திரிகையாளர் கூட்டத்தில் ராகுல் காந்திக்கான அவரது ஆதரவை வெளியிட்டார். “வேட்பாளராக நிறுத்தப்படுவதற்கு ராகுல் காந்திக்கு முழு தகுதியும் உள்ளது," என்று சிங் வலியுறுத்தினார்.“மேலும் எமது கட்சி சரியான நேரத்தில் அந்த முடிவை எடுக்கும் என்று நான் நம்புகிறேன்," என்றார்.

81 வயதான சிங் மூன்றாவது முறையாக இந்திய பிரதம மந்திரியாக சேவை செய்ய மாட்டார் என்ற வதந்திகள் நீண்டகாலமாக இருந்து வந்துள்ளன. இருந்தபோதினும், அவரது இராஜினாமா அறிவிப்பு செய்யப்பட்டிருக்கும் நேரமானது, இந்தியாவின் பொருளாதாரம் உலக பொருளாதார நெருக்கடியால் நிலைகுலைய செய்யப்பட்டிருக்கும் நிலைமைகளின் கீழ், கட்சி மீண்டும் தேர்தெடுக்கப்படுவதற்கான வாய்ப்புகள் குறித்து காங்கிரஸ் தலைமைக்குள், அதிர்ச்சிகரமாக இல்லையென்றாலும், அதிகரித்து வரும் அச்ச உணர்வின் ஓர் அறிகுறியாக உள்ளது. 2011இல் இருந்து பொருளாதார வளர்ச்சி பாதியாக குறைந்துள்ளது; விலைவாசி ஆண்டுக்கு 10 சதவீதத்திற்கு மேல் உயர்ந்து வருகிறது; அடுத்த அரசாங்கம் தீர்க்கமாக சமூக செலவினங்களை வெட்ட மற்றும் "முதலீட்டிற்கு-நேசமான" கொள்கைகளை அமுலாக்க முனையவில்லை என்றால், அவை இந்தியாவின் கடன்பெறும்-மதிப்பீட்டை வெற்று-பத்திர அந்தஸ்திற்கு (junk-bond status) குறைத்துவிட இருப்பதாக உலகின் கடன்-வழங்குவதற்கான மதிப்பீட்டு முகமைகள் எச்சரித்துள்ளன.

சில வாரங்களுக்கு முன்னர் வரை, பொது தேர்தலுக்கு முன்னதாக ஒரு பிரதமர் வேட்பாளர் பெயரை அறிவிக்க வேண்டிய அவசியம் அங்கே இருக்கவில்லை என்று காங்கிரஸ் உயர் மட்டம் வலியுறுத்தி வந்தது. ஆனால் வாக்காளர்களால் புரட்டிப் போடக்கூடிய சூழலை கட்சி எதிர்கொண்டிருப்பதற்கான அறிகுறிகள் தொடர்ந்து நிலவுகின்றன.

கடந்த மாதம் ஐந்து மாநிலங்களில் நடத்தப்பட்ட தேர்தல்களில் காங்கிரஸ் அதன் மாநில சட்டமன்ற இடங்களில் பாதிக்கும் மேற்பட்ட இடங்களை இழந்து படுதோல்வி அடைந்ததோடு, ராஜஸ்தானிலும் மற்றும் தேசிய தலைநகர் பிரதேசமான டெல்லியிலும் ஆட்சியிலிருந்து இறங்கியது. இந்த தோல்வியானது தேசிய தேர்தல்களில் ஏற்படவிருக்கின்ற காங்கிரஸ் நிலைமைக்கான மோசமான நிமித்தங்கள் என்பது மட்டுமல்ல, அது தேர்தல் கூட்டணிகள் மற்றும் தேர்தல்-இட பங்கீடுகளின் மீது எண்ணற்ற பிராந்திய மற்றும் ஜாதி அடிப்படையிலான கட்சிகளுடன் காங்கிரஸ் சுழன்று வந்தமை மற்றும் அவற்றை கையாண்டு வந்தமையின் எதிர்மறைரீதியிலான தாக்கமாகவும் உள்ளது. 1984இல் இருந்து எந்தவொரு தனிப்பெரும் கட்சியும் பாராளுமன்ற பெரும்பான்மையை பெறாத நிலைமையின் கீழ், இடங்களை வெல்லவும் மற்றும் தேர்தலுக்குப் பிந்தைய அதிகார பேரங்களைச் செய்யவும் இரண்டிற்கும் அதுபோன்ற கூட்டணிகள் அவசியமாக உள்ளன.

கருத்துக்கணிப்புகள்—இவை இந்தியாவில் இழிவார்ந்தரீதியில் துல்லியமின்றி இருக்கின்றன என்பது ஒப்புக் கொள்ளப்பட்டிருக்கின்றன—உத்தியோகபூர்வ எதிர்கட்சியான பாரதிய ஜனதா கட்சி அல்லது பிஜேபி'க்கு பின்னால் காங்கிரஸ் கட்சி மிக மோசமாக பின்தங்கி இருப்பதாக காட்டுகின்றன.

இந்து மேலாதிக்க பிஜேபி அதன் பிரதம மந்திரி வேட்பாளரான—கடந்த பன்னிரெண்டு ஆண்டுகளாக குஜராத்தில் முதலமைச்சராக பதவி வகித்துள்ளவரும், தன்னைத்தானே இந்துமத இரும்புமனிதராக காட்டிக் கொள்பவரும் மற்றும் பரம-பேரினவாதியுமான—நரேந்திர மோடியைச் சுற்றி ஒரு தலைவர்-பாணியிலான தேர்தல் பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகிறது.

காங்கிரஸிற்கு ஏமாற்றம் அளிக்கும் விதமாக, பெருவர்த்தக-சார்பு கொள்கைகள் மற்றும் அபிவிருத்தி திட்டங்கள் மீதான மக்கள் எதிர்ப்பை தாறுமாறாக மிதித்து நசுக்குவதில் மோடி குஜராத்தில் எவ்வாறு செய்தாரோ அதேபோல தேசிய அளவிலும் செய்வார் என்ற எதிர்பார்ப்போடு பெரும்பான்மை பெருநிறுவன இந்தியா, மோடிக்கு அதன் ஆதரவை வழங்க திரும்பி உள்ளன.

1990களின் தொடக்கத்தில் நிதி மந்திரியாக இருந்து, இந்தியாவின் தேசியரீதியில் ஒழுங்கமைக்கப்பட்ட பொருளாதாரத்தை உடைப்பதை மேற்பார்வையிட்ட மற்றும் நவ-தாராளவாத, சந்தை-சார்பு "சீர்திருத்தத்தை" தழுவி இருந்த மன்மோகன் சிங் நீண்டகாலமாக இந்திய பெருவர்த்தகங்களின் நம்பிக்கையை அனுபவித்து வந்தார்.

இருந்தபோதினும் அவரது பங்கு சமீபத்திய ஆண்டுகளில் மிக கூர்மையாக வீழ்ச்சி அடைந்தது. பாரிய மக்கள் எதிர்ப்புக்கு முன்னால் சந்தை சீர்திருத்தங்களை முன்னெடுக்க UPA அரசாங்கம் தவறியதாக உணர்ந்ததால், பெரு வர்த்தகங்கள் அதிகளவில் பொறுமையிழந்து போனதோடு, அவற்றின் கோபமும் அதிகரித்தது.

சிங்கே கூட பெரு வர்த்தக வட்டாரங்களில் அதிகளவில் "தொடை நடுங்கியாக" நிராகரிக்கப்பட்டார்.

வோல்மார்ட்-பாணியிலான பல-பிராண்ட் விற்பனை அங்காடிகளுக்கு சில்லரை விற்பனை துறையை திறந்துவிட்டமை, தனியார்மயமாக்கல் மற்றும் முதலீடு குறைப்பைத் தீவிரப்படுத்தியமை, திரவ இயற்கை எரிவாயுவின் விலை-மானியங்களைக் கடுமையாக குறைத்தமை உட்பட ஒரு பொருளாதார "பெருவெடிப்பு" சீர்திருத்தங்களை, செப்டம்பர் 2012இல், அரசாங்கம் அறிவித்தது. தேசியளவில் ஒளிபரப்பப்பட்ட ஓர் உரையில், வேலைகளை உருவாக்குவதற்காக அன்னிய முதலீடுகளை ஈர்க்கும் பொருட்டு இந்தியர்கள் அவர்களின் இடுப்புபட்டைகளை இறுக்கி கொள்ள வேண்டுமென கூறி, சிங் அந்த முறைமைகளை பாதுகாத்தார்—நாட்டின் மொத்த குழந்தைகளில் பாதி குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டில் இருக்கும் ஒரு நாட்டில் மற்றும் மக்கள் தொகையில் நான்கில் மூன்று பகுதியினர் நாளொன்றுக்கு இரண்டு டாலர்களை விட குறைவான தொகையில் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கின்ற ஒரு நாட்டில் இவ்வாறு கூறப்படுகிறது.

சிங்கின் இரக்கமற்றதன்மை போதியளவிற்கு இல்லை என்றரீதியில், UPA அரசாங்கத்தின் “பெருவெடிப்பு" முறைமைகளால் தோற்றுவிக்கப்பட்ட அன்னிய முதலீடு ஊக்குவிப்பும் மற்றும் உள்நாட்டு வர்த்தகங்களிடையிலான உற்சாகமும் நீண்டகாலத்திற்கு நீடித்திருக்கவில்லை.

இந்திய பொருளாதாரம் கடந்த ஆண்டுகளில் நெருக்கடியால் உலுக்கப்பட்டுள்ள நிலையில், அரசுடனான ஆளும் வர்க்கத்தின் சீற்றமும், கோபமும் கடினமாகி உள்ளது. ரூபாயின் ஒரு கூர்மையான மதிப்பு சரிவு இந்தியா விரைவில் ஒரு நடப்பு கணக்கு நெருக்கடியைச் சந்திக்கும் என்ற அச்சங்களை உச்சநிலைக்கு கொண்டு வந்ததற்கு பின்னர், இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் இந்தியாவை உலகளாவிய முதலாளித்துவத்திற்கு ஒரு மலிவு-கூலி உற்பத்தியாளராக மாற்றும் உந்துதலை எடுப்பதில் அவர் வகித்த பாத்திரத்தை விட, 2012 பொருளாதார நெருக்கடிக்காக மன்மோகன் சிங் பெரிதும் நினைவுகூரப்படுவார் என்று ஒரு பிரபல பார்வையாளர் தெரிவித்தார்.

இந்தியாவின் பெருநிறுவனங்களுக்கு சொந்தமான தினசரிகள் காங்கிரஸின் "ஜனரஞ்சகவாதத்திற்கு" நீலிகண்ணீர் வடித்த முழுநீள தலையங்கங்களையும், கருத்துரைகளையும் கொண்டிருந்தன. இந்த "ஜனரஞ்சகவாதம்" என்பது சமூக செலவினங்களில் UPA அரசாங்கம் நடைமுறைப்படுத்தி உள்ள, அதுவும் பிரதானமாக அதன் முதல் பதவிகாலத்தில் இந்தியா சாதனையளவிலான பொருளாதார வளர்ச்சியை அனுபவித்து வந்தபோது நடைமுறைப்படுத்தி இருந்த, அற்பமான உயர்வுகளுக்கான ஒரு குறியீட்டு-சொல்லாகும்.

சமீபத்தில் தோற்றுபோன மாநில-தேர்தல் பிரச்சாரத்தின் மையத்தில், காங்கிரஸ் "உள்ளார்ந்த வளர்ச்சிக்கான" கட்சியாகும் என்ற வாதங்களை காங்கிரஸ் துணை-தலைவர் ராகுல் காந்தி அவரது கட்சியின் சம்பிரதாய வாதமாக நிலைநிறுத்தி இருந்தார். பரந்த தொழிலாளர்களும் கிராமப்புற ஏழைகளின் பரந்த பிரிவுகளும் இதையொரு சகிக்கமுடியாத நகைச்சுவையாக பார்க்கின்றனர் என்பதில் எந்த ஐயமும் இல்லை. இந்தியா அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மிகச் சிறிய பகுதியை, 1.5 மற்றும் 3.75 சதவீதத்தை, முறையே சுகாதாரம் மற்றும் கல்விக்காக செலவிடுகிறது. அனைத்திற்கும் மேலாக, இந்திய மற்றும் வெளிநாட்டு பெரு வர்த்தகங்களை சமாதானப்படுத்த, சமூக செலவினங்களை வெட்ட மற்றும் அத்தோடு அனைத்து எரிவாயு மற்றும் டீசல் விலை மானியங்களை நீக்கவும் அரசு தீர்மானமாக உள்ளது. இருந்தபோதினும் பெரு வர்த்தகங்களின் பெரும்பான்மையானவற்றை பொறுத்த வரையில், காங்கிரஸின் வெளிவேஷ "ஏழைகள் சார்பு" நிகழ்ச்சிநிரல் குறித்த காந்தியின் ஸ்வரம், அரசாங்கத்திற்கு அவர்கள் விரோதமாக உள்ளனர் என்பதை மட்டுமே அவைகளுக்கு உறுதிபடுத்துகிறது.

பிரதம மந்திரியாக இருந்த ஏறத்தாழ அவரது பத்து ஆண்டுகளில் அவரது வெறும் மூன்றாவது பத்திரிகையாளர் கூட்டத்தில், சிங் UPA'இன் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தி காட்டி பேசினார். இவ்வாறு செய்ததன் மூலம், இந்த வளர்ச்சியின் பலன்கள் பணக்கார மற்றும் பெரும் பணக்காரர்களின் ஒரு சிறிய கூட்டத்தால் மற்றும் மத்திய வர்க்கத்தின் மிகவும் சலுகை படைத்த பிரிவுகளால் ஏகபோகமாக்கப்பட்டு உள்ளது என்பதையும், அனைத்திற்கும் மேலாக, இந்தியா முழுவதுமாக அன்னிய முதலீட்டு வரவையும், மற்றும் அதன் பலவீனங்களையும் சார்ந்துள்ளது என்பதையும் அம்பலப்படுத்தி, உலக பொருளாதார நெருக்கடி இந்தியாவின் முதலாளித்துவ விரிவாக்கத்தின் அடித்தள விரிப்பை வெளிப்படையாக இழுத்து கவிழ்த்து போட்டுள்ளது என்பதை அவர் கவனக்குறைவாக அலட்சியப்படுத்தினார்.

காங்கிரஸின் மீது சமீபத்தில் வாக்காளர்கள் வேறுவிதமாக திரும்பியது, குறைந்தபட்சம் உணவு விலை உயர்வுகளின் மீது ஏற்பட்ட மக்கள் கோபத்தின் பாகமாக இருந்ததென்று கூறியதோடு, அதேவேளையில் அவரது அரசாங்கம் ஏழைகளுக்கு போதியளவிற்கு உதவி இருப்பதாகவும் சிங் கூறினார்:“நான் முடிந்தளவிற்கு நேர்மையாக இருப்பேன், அதை வார்த்தைகளில் கூற வேண்டுமானால், காங்கிரஸ் கட்சிக்கு எதிராக மக்கள் திரும்பியதில் விலைவாசி உயர்வு ஒரு பிரதான காரணியாக இருந்திருக்க கூடும். ...ஆனால் அவ்வாறு கூறுகின்ற அதேவேளையில், பலவீனமான பிரிவுகளைப் பாதுகாக்க போதுமான முறைமைகளையும் நாங்கள் எடுத்துள்ளோம் என்பதையும் நான் கூற விரும்புவேன். அதை விட்டுவிட முடியாது," என்றார்.

UPA அரசாங்கம் தொலைதொடர்பு அலைக்கற்றைகளை மற்றும் நிலக்கரி வளங்களை இந்திய பெரு வர்த்தகங்களுக்கு வந்தவிலைக்கு விற்றிருந்தது மற்றும் சில விவகாரங்களில் இலவசமாக கூட கொடுத்திருந்தது என்ற குறிப்பைக் கூறாமல் விடுவதிலும் சிங் அதேயளவிற்கு கவனமாக இருந்தார். ஊழல் பரிவர்த்தனைகள் மீது கூறப்படும் கருத்துக்கள் பெரிதும் மிகைப்படுத்தப்பட்டவை என்று கூறிய அவர், அவரது தனிப்பட்ட நாணயத்தை வலியுறுத்தும் ஒரு காட்சியை அரங்கேற்றினார். மேலும் அவரது அரசாங்கம் 2009'இல் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டமை அவரது நேர்மைக்கு வாக்காளர்கள் வழங்கிய தீர்ப்பு என்று அவர் கூறினார். ஆனால் பெரு வர்த்தகங்களுக்கும் UPA அரசாங்கத்திற்கும் இடையிலான பணப்பிணைப்புக்கான ஆதாரங்கள் அனைத்தும் தோற்றப்பாட்டளவில் 2009'க்குப் பின்னர் தான் எழுந்திருந்தன.

பிரதம மந்திரியாக அவரது பதவி காலத்தின் மிக உயர்ந்தபுள்ளியாக அவர் எதை கருதுகிறார் என்று கேட்கப்பட்டபோது, சிங் இந்தோ-அமெரிக்க அணுசக்தி உடன்படிக்கையை குறிப்பிட்டார். அந்த 2008 உடன்படிக்கை "உலகளாவிய இந்தோ-அமெரிக்க மூலோபாய கூட்டுறவைப்" பலப்படுத்தி இருந்தது. அந்த உடன்பாட்டை ஏற்றுக் கொண்டதை பாதுகாக்க, சிங் துல்லியமாக ஸ்ராலினிச தலைமையிலான இடது முன்னணியை உதைத்து தள்ளுவதற்கு காங்கிரஸ் கட்சியை இட்டு சென்றார். ஸ்ராலினிச தலைமையிலான இடது முன்னணி அதன் பாராளுமன்ற பெரும்பான்மையோடு அரசாங்கத்திற்கு வெளியில் இருந்து அப்போது UPAக்கு ஆதரவு வழங்கி வந்தது.

இந்திய மேற்தட்டு மிகப் பெரியளவில் அணுசக்தி உடன்படிக்கையை ஆதரிக்கிறது. ஆனால் சீனாவிற்கு எதிர்பலமாக இந்தியாவைக் கட்டியெழுப்பும் அமெரிக்காவின் பேரார்வத்தை UPA அதன் இரண்டாவது பதவி காலத்தில் போதுமான அளவிற்கு பயன்படுத்திக் கொள்ளவில்லை என்பதன் மீது அங்கே பெரு வர்த்தகங்கள் மற்றும் இராணுவ-மூலோபாய எந்திரத்தின் பிரிவுகளிடம் இருந்து பரந்தளவில் குற்றச்சாட்டுகள் உள்ளன.

மோடி தலைமையிலான பிஜேபி அரசாங்கம் இந்தியாவிற்கு "பேரழிவுகரமானதாக" இருக்குமென்று சிங் கடந்த வெள்ளிகிழமை பத்திரிகையாளர் கூட்டத்தில் தெரிவித்தார். பின்னர், அவர் ஒரு "பலவீனமான பிரதம மந்திரியாக" இருக்கிறார் என்று பிஜேபி கூறுவதன் மீதான கேள்விக்கு பதிலளிக்கையில்,“அகமதாபாத்தின் வீதிகளில் ஒரு பாரியளவிலான அப்பாவி மக்களை படுகொலை செய்வதற்கு மோடி தலைமை தாங்கி இருந்தார்" என்று சிங் குற்றஞ்சாட்டினார். இது குஜராத்தில் 2002 முஸ்லீம்-விரோத படுகொலைகளைத் தூண்டிவிடுவதில் மற்றும் துணை போனதில் முதல் மந்திரியின் பாத்திரத்தைக் குறிப்பிட்டு காட்டுவதாகும்.

இந்த உண்மையை உளறிக் கொட்டிய பின்னர், இவ்விதத்திலான "பலமான" தலைமை இந்தியாவிற்கு அவசியமில்லை என்று அறிவித்து, சிங் வேகமாக அடுத்தடுத்து நகர்ந்தார். இது காங்கிரஸ் கட்சியின் வழக்கமான நடைமுறையாகும். அது இந்திய துணை கண்டத்தின் 1947 வகுப்புவாத பிரிவினைக்கு முன்னர் இருந்து இந்து வலதைத் தழுவி நிற்பதில், சாந்தப்படுத்தி வைப்பதில் நீண்ட சாதனைகளைக் கொண்டுள்ளது. சிங் தலைமையிலான இந்திய அரசாங்கத்தின் ஒரு தசாப்த காலத்தின் போது, பிஜேபி மற்றும் அரசு எந்திர பிரிவுகளின் சினத்தைத் தூண்டுவிடுவதற்கு அஞ்சி மற்றும் அதன் மூலமாக, இந்திய முதலாளித்துவத்தின் அரசியல் மற்றும் அரசியல் கருவிகளின் ஸ்திரமின்மைக்கு செல்ல நேரிடும் என்று அஞ்சி, குஜராத் படுகொலைக்கு பொறுப்பானவர்களை அம்பலப்படுத்தவோ அல்லது தண்டிக்கவோ அது எவ்வித தீவிர முயற்சியும் எடுக்கவில்லை. உண்மையில், பிஜேபி உடனான கூட்டுறவில் சிங் மீண்டும் மீண்டும் கைகொடுத்து வந்துள்ளார்.

1 comments :

Vani Ram ,  January 13, 2014 at 2:57 AM  

விசுகோத்து , அமெரிக்காவின் அடிமை. அடிமைகளை எஜமான் ஒருபோதும் மதிப்பதில்லை.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com