Monday, August 19, 2013

இந்தியாவால் தேடப்பட்டுவரும் பயங்கரவாதி தாவூத் பாகிஸ்தானின் உளவுத் துறையின் பாதுகாப்பில்!

இந்தியாவால் தேடப்பட்டு வரும் நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம், பாகிஸ்தானின் கராச்சியில் அந்நாட்டு உளவுத் துறையான ஐஎஸ்ஐ பாதுகாப்புடன் இருப்பதாக லஷ்கர்-இ- தொய்பா பயங்கரவாதி அப்துல் கரீம் துன்டா தெரிவித் துள்ளார்.

மும்பை, டெல்லி, ஹைதராபாத் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்புச் சம்பவங்கள் தொடர்பாக 20 ஆண்டுகளாகத் தேடப்பட்டு வந்த அப்துல் கரீம் துன்டாவை இந்திய-நேபாள எல்லையில் டெல்லி பொலீஸார் அண்மையில் கைது செய்த போதே அவர் இதனை பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக டெல்லி பொலிஸ் உயர் அதிகாரி நேற்று செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில்,

பாகிஸ்தானின் கராச்சியில் துன்டா இருந்த போது பல மதராஸாக்களை நடத் தியுள்ளார். அதன் மூலம் பெற்ற நன்கொடையைக் கொண்டுதான் பயங்கரவாதச் செயல்களுக்கு இளைஞர்களைச் சேர்த்து அவர்களுக்கு ஆயுதம், வெடிகுண்டுகளை இயக்கும் பயிற்சியை அளித்துள்ளார். இந்தியாவுக்கு எதிராகப் போரிடுவது தொடர்பாக பயங்கரவாதிகளுக்கு வகுப்பு நடத்தியுள்ளார்.

பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ அமைப்புடனும் துன்டா நெருங்கிய தொடர்பு வைத்துள்ளார். நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமை லஷ்கர்-இ-தொய்பா தலைவர் ஹபீஸ் சயீத்துக்கு, துன்டாதான் அறிமுகப்படுத்தியுள்ளார். நேபாள எல்லை வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவும் முன்பு ஆகஸ்ட் 15-ஆம் திகதி ஹபீஸ் சயீத்தை துன்டா சந்தித்துப் பேசியுள்ளார்.

கராச்சியில் பாதுகாப்பான இடத்தில் தாவூத் இப்ராஹிம், ஐஎஸ்ஐ உளவுத் துறையின் பாதுகாப்போடு இருக்கிறார். லஷ்கர் கமாண்டராகவும், மும்பை பயங்கரவாதத் தாக்குதலின் மூளையாகவும் செயல்பட்ட ஸாகி-அர்-ரஹ்மான் லக்வியுடன் துன்டாவுக்குக் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு, பின்னர் அவை சரி செய்யப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.

2008-ஆம் ஆண்டு நவம்பர் 26-ஆம் தேதி மும்பையில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் குறித்த தகவல் தாவூத் இப்ராஹிமுக்குத் தெரியும் என்று துன்டா தெரிவிக்கின்றார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com