அவுஸ்ரேலிய சட்டவிரோத பயணத்தால் ஏற்பட்ட விபரீதம்!
"சர்வதேச புலம்பெயர்ந்த நபர்களுக்கான அமைப்பு தங்களால் எதுவும் செய்ய முடியாது எனக்கூறி கைவிரித்தது" - மனைவி
அவுஸ்திரேலியாவிற்கான சட்டவிரோத கடல் வழி பயணம் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் விதவைகள் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது இவ்வாறான சட்டவிரோத பயணம் காரணமாக தமது கணவனை இழந்த பொருமளவிலான பெண்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளார்கள்.
இதேபோல் இந்த பயணத்தின் போது காணாமல் போயுள்ள தமது கணவன்மார் என்றாவதொரு நாள் வருவார்கள் என்ற நம்பிக்கையுடன் பல பெண்கள் காத்திருக்கிறார்கள் இந்த வகையில் மட்டக்களப்பு- கருவேப்பங்கேணியைச் சேர்ந்த 39 வயதான இரண்டு குழந்தைகளின் தாயான விஜயராஜா கவிதா தனது சோக கதையை தெரிவிக்கையில்,
கடந்த வருடம் நவம்பர் மாதம் 21 ஆம் திகதி இலங்கையிலிருந்து விமானம் மூலம் இந்தோனேசியா சென்றிருந்தார். அவர் அவுஸ்திரேலியா செல்வது பற்றி என்னிடம் கூறவில்லை. அவரது சகோதரி மூலமே அது பற்றி அறிந்து கொண்டேன். அவரது பயண முகவர் யார் என்று தெரியாது. பணக்கொடுக்கல் வாங்கல் பற்றியும் எனக்கு ஒன்றும் தெரியாது.
இந்த ஆண்டு ஜனவரி 28 ஆம் திகதி எனது கணவர் படகு விபத்தில் இந்தோனேசியா கடலில் மூழ்கி உயிரிழந்த செய்தியை இணையத்தளம் மூலம் அறிந்தேன். இணையத்தளத்தில் பெயருடன் தகவல் வெளிவந்துள்ளதாக எனக்குத் தெரிந்தவர் கூறினார். நான் சென்று பார்த்த போது இணையத்தளத்தில் எனது கணவனின் பெயர் தம்பாபிள்ளை விஜயராஜா என்பதற்கு பதிலாக தம்பாபிள்ளை விஜயகட்டா என்று இருந்தது.
இது பற்றி எனக்குத் தகவல் தந்தவரிடம் கேட்டபோது, தான் தான் இதுபற்றி தகவல் கொடுத்ததாகவும் பெயர் பிழையாக போட்டிருக்கலாம் என பதிலளித்தார். எத்தனை பேர் பயணம் செய்தார்கள் என தெரியாது. எனக்குத் தெரிந்த செங்கலடி இளைஞர் ஒருவரும் எனது கணவர் உயிரிழந்ததை உறுதிப்படுத்தினார்.
எனது கணவர் உயிருடன் இருந்திருந்தால் நிச்சயம் எம்முடன் தொடர்பு கொண்டிருப்பார். அவருடன் பயணம் மேற்கொண்டவர்கள் தொடர்பு கொண்டு இந்தோனேசியாவில் வள்ளம் கவிழ்ந்த நிலையில் மீட்கப்பட்டு பாதுகாப்பாக இருக்கிறோம் என்று அவர்களது உறவினர்களுடன் தொடர்பு கொண்டு தெரிவித்திருக்கிறார்கள். இந்நிலையில் எனது கணவர் உயிருடன் இருந்திருந்தால் நிச்சயம் தொடர்பு கொண்டிருப்பார். ஏற்கனவே ஒரு தடவை இந்த பயணத்திற்கு முயற்சி செய்திருந்தார். பணம் இல்லாமல் கைவிட்டார். ஆனால் இந்த பயணத்திற்கான முடிவை திடீரென எடுத்துள்ளார்.
எனது கணவர் மரணமடைந்த நிலையில் சடலத்தை நாட்டுக்கு எடுத்து வருவதற்காக சர்வதேச புலம்பெயர்ந்தவர்களுக்கான அமைப்பு வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு ஆகியவற்றுடன் தொடர்புகொள்ளப்பட்டது. சர்வதேச புலம்பெயர்ந்த நபர்களுக்கான அமைப்பு தங்களால் எதுவும் செய்ய முடியாது எனக் கூறி கைவிட்டது. இது சட்டவிரோத பயணம் என காரணம் கூறப்பட்டது.
வெளிவிவகார அமைச்சின் உதவியை நாடியபோது எவ்வாறு தகவல் கிடைத்தது என வினவினார்கள். நாட்டுக்கு சடலத்தைக் கொண்டு வருவதென்றால் 13 இலட்சம் ரூபா செலவாகும். அந்தச் செலவை நாம் தான் பொறுப்பேற்க வேண்டும் எனக் கூறினார்கள்.
இதற்கு எங்களுடைய குடும்ப பொருளாதார நிலைமை இல்லையென்பதை அதிகாரிகளுக்கு கூறிய போது அப்படியானால் சடலத்தை அங்கு தகனம் செய்து விட்டு சாம்பலை பெற்றுத் தருவதற்கு எழுத்து மூலம் விண்ணப்பம் ஒன்று தாருங்கள் என்று கேட்டார்கள். இதற்கான கடிதம் கொடுத்தும் 6 மாதங்கள் கடந்து விட்ட போதிலும் அதற்கான பதிலும் கிடைக்கவில்லை. எனது கணவர் சாதாரண உழைப்பாளி தற்போது நானும் எனது இரண்டு குழந்தைகளும் உறவினர்களின் பராமரிப்பில் இருக்கிறோம் என தெரிவித்தார்.
0 comments :
Post a Comment