Thursday, March 7, 2013

பெருகும் ஊழல்களுக்கு மத்தியில் போப் பதவிவிலகுகின்றார். By Bill Van Auken

ஜோசப் ராட்சிங்கர் கடைசித் தடவையாக பதினாறாம் போப் பெனடிக்ட் ஆக காட்சியளித்து வத்திக்கானின் புனித பீட்டர் சதுக்கத்தில் கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு பிரியாவிடை உரையையும் ஆற்றினார். ஜேர்மனியில் பிறந்த 85 வயதான போப், ஹிட்லரின் இளைஞர் இயக்கத்தில் ஓர் இளைய சமய மாணவராக இருந்து, பின்னர் கத்தோலிக்கத் திருச்சபைத் தலைவர் பதவியில் எட்டு ஆண்டுகளுக்கு சிறிது குறைந்த காலத்தை கழித்தபின் கீழிறங்குகிறார்.

இவர் 1294ம் ஆண்டிற்குப் பின்னர், தானே முன்வந்து பதவியைத் துறக்கும் முதல் போப்பாண்டவராவார். அவருடைய முன்னோடிகள், ஒரு சில விதிவிலக்குகளுடன், பதவியிலிருக்கும்போதுதான் மரணமடைந்தனர். பெப்ருவரி 11ம் திகதி தன் முடிவை அறிவித்ததில் இருந்து, போப் தான் கிட்டத்தட்ட முன்னோடியில்லாத இந்த நடவடிக்கையை அதிக வயதாகிவிட்ட காரணத்தாலும், தன் கடமைகளை திறமையுடன் செய்யமுடியாத அளவிற்கு பலமிழந்துவிட்ட உடல்நிலையாலும் எடுத்துள்ளதாக வலியுறுத்தினார்.

பெரும்பாலும் செய்தி ஊடகங்கள் இந்த விளக்கத்தை ஏற்றுள்ளன. முன்னாள் போப் “போப் எமெரிடஸ்” -வயது முதிர்வினால் விடுதலைபெற்ற— என அழைக்கப்படுவார் போன்ற பிரச்சினைகளைப் பற்றி பேசுகின்றன. மேலும் எத்தகைய உடையை அவர் ஓய்வு பெற்ற பின் அணிவார், கார்டினல்களின் கூட்டம் இந்த வார இறுதியில் புதிய போப்பை தேர்ந்தெடுக்கக் கூடுகையில் அவருக்குப் பின் பதவிக்கு வரக்கூடியவர்களில் எவர் முன்னணியில் உள்ளனர் என்பது பற்றி பேசுகின்றன.

ஒரு சில அறிக்கைகளை தவிர, பின்புலத்திற்கு தள்ளிவிடப்பட்டவை வத்திக்கான் நகரில் இருந்து புறப்படும் ஏராளமான ஊழல்கள் ஆகும். இவை பல நூற்றாண்டுகளாக பிற்போக்குத்தனத்திற்கும் மற்றும் அடக்குமுறைக்கும் சேவை செய்த ஒரு அமைப்பு சர்வதேச அளவில் ஆழ்ந்த நெருக்கடியில் உள்ளது என்பதை அடையாளம் காட்டுகின்றன.

புனித பீட்டர் சதுக்கத்தில் இறுதியாக காட்சியளிக்கையில், போப்பாண்டவர் பைபிளில் இருந்து கலிலீ கடலில் தன் சீடர்களுடன் ஒரு படகில் பயணிக்கையில் யேசுபிரான் தூங்க முற்படுவதைக்கூறும் பத்தியை மேற்கோளிட்டார். “இறைவன் தூங்கிக்கொண்டு இருப்பது போல்” இருக்கையில், தன்னுடைய எட்டாண்டுக்கால போப்பாண்டவர் பதவியை அவர் “எளிதான ஆண்டுகள் அல்ல” என்று குறிப்பிட்டார்.

ஆன்மீகம் தொடர்பற்ற, உண்மையில் ஆழமடையும் ஊழல் பற்றிய தீர்மானகரமான நிகழ்வுகளும், வத்திக்கான் உயர்மட்டத்தினுள் இருக்கும் ஆழ்ந்த உள்போட்டிகளும் ராட்சிங்கர் போப்பாக இருந்த கடைசி ஆண்டுகளில் ஆதிக்கம் செலுத்தின போலுள்ளது. வத்திக்கான் பலவகையில் முகங்கொடுக்கும் நெருக்கடிகளுக்கு பொறுப்பைக் கொண்டுள்ளார் என்பதால் இப்பிரச்சினைகள் அவரை இராஜிநாமா செய்யத் தூண்டினவா அல்லது ஒரு இளைய, வலுவான நபர்தான் அதன் விளைவுகளை எதிர்கொள்ள முடியும் எனக் கருதினாரா என்பது தெளிவாக இல்லை. ஆனால் அவருடைய இராஜிநாமாவிற்கு வழிவகுத்தது அவருடைய உடல் ஆரோக்கியம் அல்ல இப்பிரச்சினைகள்தான் என்பது உடனடியாகத் தெளிவாகின்றது.

இத்தாலியில் மிக அதிகம் படிக்கப்படும் நாளேடான La Repubblica கடந்த வாரம் வந்துள்ள தகவல்கள் வத்திக்கானை பீடித்துள்ள நெருக்கடி குறித்த ஒரு பார்வையை அளித்துள்ளது.

பெப்ருவரி 21ம் திகதி வெளியிடப்பட்ட முதல் அறிக்கை வத்திக்கானுக்குள் இருக்கும் முறையான ஊழல் பற்றிய பெருகும் நிரூபணத்தை எடுத்துக்காட்டியது. இது போப்பாண்டவர் வத்திலீக்ஸ் –Vatileaks- ஊழல் எனப்படுவது குறித்து உத்தரவிட்ட விசாரணையால் வெளிப்பட்டது என்று கூறுகிறது. போப்பின் சொந்த விவகாரங்கள் குறித்த செய்தி கசிந்ததை சூழ்ந்துள்ள இந்த ஊழலில் அவருடைய உணவிற்கான தலைமைப் பொறுப்பானவர் பௌலோ காப்ரியலும் ஈடுபட்டிருந்தார். இவர் இந்த ஆவணங்களை “தீமை, ஊழல்” ஆகியவற்றிற்கு எதிராக போராட திருடியதாகக் கூறினார்.

இது பற்றிய விசாரணைக்கு Opus Dei என்னும் இரகசிய வலதுசாரி கத்தோலிக்க அமைப்பின் உறுப்பினரும் பிரான்சிஸ்கோ பிராங்கோ சர்வாதிகாரத்துடன் நெருக்கமான தொடர்புகளைக் கொண்டிருந்த ஸ்பெயினின் கார்டினல் ஜூலியன் ஹெரான்ஸ் காசடோ தலைமை தாங்கினார். La Repubblica உடைய கருத்துப்படி, கடந்த அக்டோபர் மாதம் ஹெரான்ஸ் காசடோ போப்பிடம் விசாரணை வத்திக்கான் உயர்மட்டத்தினுள் இருக்கும் இரகசியப் பிரிவைக் கண்டறிந்துள்ளது என்றும் அது “பாலியல் சார்பினால் ஒற்றிணைந்துள்ளது” என்றும் தெரிவித்தார்.

டிசம்பர் மாதம் “போப்பாண்டவர் மட்டும்தான் பார்க்க வேண்டும்” என்று கொடுக்கப்பட்ட இரகசிய அறிக்கையை மேற்கோளிட்டு, நாளேடு ராட்சிங்கர் இப்பிரிவின் உறுப்பினர்கள் திருச்சபைக்கு வெளியே இருக்கும் தனிநபர்களுடன் கொண்டிருந்த “உலகில் இயற்கையானதன்மை உடைய” தொடர்பினால் “வெளி ஆளுமைக்கு” உட்பட்டிருந்தனர் என்று கூறியுள்ளது. இந்த அறிக்கை இக்குழுவினர் ரோம் மற்றும் வத்திக்கானிலேயே கூட்டம் நடத்திய இடங்கள் பற்றிய விவரங்களையும் வழங்கியது.

La Repubblica உடைய கருத்துப்படி, இறுதி 300 பக்க அறிக்கை கொடுக்கப்பட வேண்டிய நாளான டிசம்பர் 17 இல் இந்த அறிக்கை 2 தொகுதிகளாக, சிவப்பு அட்டையைக் கொண்டு “போப்பாண்டவருக்கான இரகசியம்” என்னும் முத்திரையைக் கொண்டிருந்தது. இதன்பின் போப்பாண்டவர் பதவியை விட்டு விலகும் முடிவை எடுத்தார்.

ஆரம்பத்தில் வத்திக்கான் இரகசிய அறிக்கை பற்றி ஏதும் கூறுவதற்கு இல்லை என அறிவித்தது. அதில் இருந்து பல குறிப்புக்கள் இத்தாலிய செய்தி ஊடகத்தில் தோன்றியபின், வத்திக்கானுடைய செயலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு, “கூட்டத் தொடக்கத்தை நாம் நெருக்குகையில்... பரந்த அளவில் சரிபார்க்கப்படாத, சரிபார்க்க்கப்பட முடியாத அல்லது முற்றிலும் தவறான செய்திகள் பரந்த அளவில் பிரசுரமாகின்றன” என்று அறிக்கை ஒன்றில் கூறியது. இந்த அறிக்கை அடுத்த போப்பாண்டவர் “அரசியல் அல்லது உலக நலன்களுக்கு” வளைந்து கொடுக்கக் கூடியவராக இருக்க வேண்டும் என்ற முறையில் அடுத்த போப்பாண்டவர் தேர்ந்தெடுக்கப்படுவதை செல்வாக்கிற்கு உட்படுத்தும் ஒரு பிரச்சாரத்தின் பகுதி என்பது போன்ற கருத்தை உருவாக்கியது.

வத்திக்கானின் இதயத்தானத்திலேயே மற்றொரு பாலியல் ஊழல் வெளிப்படுவது சந்தேகத்திற்கு இடமின்றி ராட்சிங்கரை பதவிவிலகச் செய்தது. போப்பாண்டவர் என்னும் முறையிலும் முன்பு கோட்பாடு நம்பிக்கைப் பிரிவின் தலைவராக இருந்த நிலைமையிலும் (முன்காலத்தில் இதுதான் பெரும் விடுதலையாளர் எனக்குறிப்பிடப்பட்டது), ராட்சிங்கர் வட அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் பல சிறு குழந்தைகள் பாதிரிமாரிடம் சிக்குண்டு தவறாக நடத்தப்படும் பல தொடர்ச்சியான ஊழல்களின் அதிகரிப்பை திருச்சபை கையாள்வதை மேற்பார்வையிடுள்ளார்.

பதவியைத் துறப்பதற்கு முன், போப்பாண்டவர் பிரித்தானியாவின் மிக மூத்த கத்தோலிக்கப் பாதிரியாரான கார்டினால் கீத் ஓ’பிரையன் உடனடியாக இராஜிநாமா செய்யவேண்டும் என்று கோரக் கட்டாயப்படுத்தப்பட்டார். இது மூன்று பாதிரிமாரும் மற்றும் ஒரு முன்னாள் பாதிரியாரும் ஓ’பிரையன் அவர்களுக்கு மூத்த அதிகாரியாக இருந்தபோது தாங்கள் அனைவரும் “முறையற்ற தொடர்பில்” ஈடுபடுத்தப்பட்டோம், “விருப்பமற்ற நடத்தையில்” ஈடுபடுத்தப்பட்டோம் என்று சாட்சியம் வெளியிடப்பட்டதை அடுத்து நிகழ்ந்தது.

இந்த ஊழல்கள் வத்திக்கான் மீது நேரடி நிதிய பாதிப்பைக் கொண்டிருந்தன. மிக முக்கியமாக நிதியளிக்கும் அமெரிக்க நன்கொடையாளர்கள் நிறுத்திவிட்டதாகக் கூறப்படுகிறது. அதேவேளை, திருச்சபை கிட்டத்தட்ட 4 பில்லியன் டாலர்களை தவறான பாலியல் நடத்தை வழக்குகளில் நஷ்ட ஈடாக கொடுக்கும் கட்டாயத்திற்கும் உட்பட்டது.

இந்த அழுத்தங்களினால், வத்திக்கானின் நிதியச் செயற்பாடுகள் திருச்சபையின் தலைமைத்துவத்தை தக்க வைக்க இன்னும் முக்கியமாயின. கத்தோலிக்க திருச்சபையில் இவ்விடயம் நீண்டகாலமாக அதன் வெளிப்படையற்ற தன்மையுடையதாகவே இருந்தது. ஆனால் போப்பாண்டவர் பதவியைத் துறக்க எடுத்த முடிவில் முக்கிய பங்கைக் கொண்டிருக்கலாம்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக முன்பு Institute for Religions Works (மதப்பணிகளுக்கான அமைப்பு-IOR) என்று அறியப்பட்ட வத்திக்கான் வங்கி தொடர்ச்சியான நிதிய ஊழல்களில் ஆழ்ந்திருந்தது. இது 1980களில் பாங்கோ அம்ப்ரோசியானோவின் -Banco Ambrosiano- பாரிய சரிவின் மத்தியில் IOR இருந்ததான காலத்தைத்தான் நினைவுபடுத்தியது. இந்த ஊழல் வத்திக்கானை மாபியாக்களுடனும், சட்டவிரோத பாசிச P-2 Lodge உடனும் பிணைந்திருந்தது. “கடவுளின் வங்கியாளர்” என்று அழைக்கப்பட்ட அம்ப்ரோசியானோவின் தலைவர் ரோபர்ட்டோ கால்வி, 1982 இல் வங்கி உடைவிற்கு சற்றுமுன்பு லண்டனின் பிளாக்பைர் பாலத்தில் தூக்கிலிட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.

செப்டம்பர் 2010ல் Bank of Italy இன் நிதிய உளவுத்துறைப் பிரிவு வத்திக்கான் வங்கியிடம் அது பணச் சலவைக்காக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது என்று கூறி பின்னர் கிட்டத்தட்ட 30 மில்லியன் டாலர்கள் நிதியை, அது இத்தாலிக்கு வெளியே Credito Artigiano வங்கியிலிருந்து மாற்ற முற்படுகையில் கைப்பற்றியது. விசாரணையாளர்கள் எவருடை பணம் இதில் தொடர்புடையது என்று கோரினர். வத்திக்கானோ ஒத்துழைக்க மறுத்து விட்டது.

கடந்த ஆண்டு ஜேபி மோர்கன் அதன் வத்திக்கான் வங்கிக் கணக்குகள் ஒன்றை மூடியது. அப்பொழுது திருச்சபை அதிகாரத்துவம் அதில் இருந்து வெளியேறிய, அதற்கு வந்த நிறைய பணங்களைப் பற்றித் தகவல் ஏதும் கொடுக்க மறுத்து விட்டது.

கடந்த மாதம் Bank of Italy வத்திக்கானுடன் அதன் கடன் அட்டை செயற்பாடுகளை அனைத்தையும் மூடியது. இதனால் அது வணிகச் செயற்பாடுகளை ரொக்கத்தின் மூலம்தான் செய்ய முடிந்தது. எகானமிஸ்ட் குறிப்பிட்டதுபோல்: “மத்திய வங்கியின் கடுமையான நிலைப்பாடு, ஐரோப்பிய ஒன்றியத்தின் வங்கிமுறை மற்றும் பணச் சலவை சட்டத்திற்கு விரோதமானவற்றை அகற்றுதல் என்பதற்கு உடன்பட்டிருந்தது. இச்சட்டத்தின்படி ஐரோப்பிய வங்கிகள் ஐரோப்பிய ஒன்றியம் இல்லாத நாடுகளுடன் அவைபோதுமான கட்டுப்பாட்டு வடிவமைப்பிற்குள்ளும் போதுமான மேற்பார்வை இருந்தால்தான் தொடர்பு கொள்ளலாம் என இருந்தது.”

வத்திலீக்ஸ் ஆவணங்களை ஆதாரமாக கொண்ட தன்னுடைய புத்தகமான “The Secret Papers of Pope Benedict XVI” –பதினாறாவது போப் பெனடிக்டின் இரகசிய ஆவணங்கள்- என்பதில் செய்தியாளர் ஜியான்லூகி நூஷி கிட்டத்தட்ட 8.3 பில்லியன் டாலர்கள் சொத்துக்களைக் கொண்ட வத்திக்கான் வங்கி அதில் கிட்டத்தட்ட 280 மில்லியன் டாலர்களை மாபியா சார்பில் பணச்சலவை செய்தது என குறிப்பிட்டார்.

வத்திக்கான் வங்கித் தலைவரான எட்டோர கொற்றி ரெடீஸி கடந்த மே மாதம் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அவர் விலக்கப்பட்டதற்குக் கொடுக்கப்பட்ட காரணங்கள் திறமையற்ற மேலாண்மை, “கூடுதலான வகையில் பொருத்தமற்ற சொந்த நடவடிக்கை” என்று கூறப்பட்டது. வங்கியின் செயற்பாடுகளில் வெளிப்படைத்தன்மையை தடுக்க முயற்சித்தவர்களால் அவர் பாதிக்கப்பட்டதாகவும் சிலரால் தனது உயிருக்கே ஆபத்து இருந்தது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

போப்பாண்டவர் என்னும் முறையில் அவர் கடைசியாகச் செய்த செயல், ராட்சிங்கர் ஒரு சக ஜேர்மனியரான ஏர்ன்ஸ்ட் வொன் ஃபிரைபேர்க் என்ற ஒரு பிரபுத்துவ, பழைமைவாத கத்தோலிக்கரை வத்திக்கான் வங்கியின் தலைவராக நியமித்தது ஆகும். இந்த நியமனம் அவருக்குப் பின் பதவிக்கு வருபவர் தன்னுடைய சொந்த நபரை வங்கித் தலைவராக நியமிப்பதை தடுக்கும் நோக்கம் கொண்டிருந்த முன்னோடியான நடவடிக்கை என தோன்றுகின்றது.

ஆனால் அவர் தலைமை வகித்த ஜேர்மன் கப்பல் கட்டும் நிறுவனம் ஹிட்லரின் கடற்படைக்கு போர்க்கப்பல்களையும் நீர்மூழ்கிகளையும் தயாரித்ததுடன், இப்பொழுது ஜேர்மன் அரசாங்கத்திற்கு போர்க்கப்பல்களையும் தயாரிக்கிறது என்ற தகவல்கள் வெளிப்பட்டபின் ஃபிரைபேர்க்கின் நியமனம் புதிய விவாதங்களைத் தூண்டியது.

ஆயுதத் தயாரிப்பாளரை திருச்சபை வங்கியின் தலைவராக தேர்தெடுப்பது பொருத்தமானதா என்ற வினாக்களுக்குக்கு வத்திக்கானின் செய்தித்தொடர்பாளர் விடையிறுக்கையில், வொன் ஃபிரைபேர்க்கின் முக்கிய வேலை ஆடம்பரப் படகுகளைக் கட்டமைப்பதுதான் என்றும் “அவர் லூர்ட்ஸ் இற்கான பயணங்களை ஒழுங்குசெய்கிறார், Order of Malta என்ற அமைப்பின் உறுப்பினர் எனவும் நோயுற்றவர்ளை பராமரிக்கிறார் என்று கூறி, எனவே அவர் குறிப்பிடத்தக்க மனிதத்தன்மையும், கிறிஸ்துவ உணர்வையும் உடைய மதிப்பான நபர்தான் என்றார்.

1 comments :

Anonymous ,  March 8, 2013 at 11:59 AM  

Spirituality is entirely different
from politics.A spiritual person always follows the God`s will annihilating his own will.When the powerful people or nations try interfere with the matters of head of the catholic society.The head cannot perform his duties accordingly to God`s will.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com