சர்வதேச அரசியலின் வியூகங்களிற்குள் நாமாக போய் சிக்குகிறோமா?
ஜெனீவா ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான அமெரிக்க தீர்மான விவகாரம், இந்த விடயத்தோடு நேரடியாகச் சம்பந்தப்படும் இலங்கையைவிட இந்தியாமீதே அதிகளவு அழுத்தங்களைக் கொடுத்துள்ளது. இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் மீதான ஆதிக்கத்தை நிலைநிறுத்தும் புதிய உத்தியாக இது இப்போது கையாளப்படுகிறது.
ஜெனீவா மனித உரிமைகள் பேரவை மாநாடு அல்லது. இலங்கையில் வடக்கு கிழக்கு பகுதிகளில் தேர்தல் காலங்களை மையப்படுத்தி 2009இல் நடைபெற்ற போர்க்காலத்து நிகழ்வுகளில் சில காண்பியங்களை வைத்து சனல் 4 வெளியிடும் வீடியோக்கள் பெரும்பாலும் இந்தியாவை, குறிப்பாக தமிழ்நாட்டை இலக்கு வைத்தே வெளியிடப்படுவதைக் காண முடிகிறது.
கடந்த ஆண்டு ஜெனீவா மாநாட்டின்போதும் இந்த சனல் 4 வீடியோக்கள் தமிழகத்தின் வீதிகளிலேயே அதிகளவு வெளியிடப்பட்டன. இம்முறை, ஒரு படி மேலே போய் புதுடில்லி நாடாளுமன்றத்தில்தான் சனல் 4 முதன்முதலில் காட்சிப்படுத்தப்பட்டது.
இம்முறை சனல் 4 உணர்ச்சிகளை அதிகம் கிளறிவிடக்கூடியதாக பாலச்சந்திரன் என்ற பாலகனின் ஒளிப்படங்களை சூட்சுமமாகப் பயன்படுத்தியிருக்கிறது. இதன்மூலம், உணர்ச்சி அரசியலில் பெயர்போன தமிழகத்தை எதிர்பார்த்ததுபோலவே உசுப்பிவிடுவதில் அது வெற்றிகண்டிருக்கிறது.
தமிழகத்துடன் நின்றுவிடாமல், சனல் 4 காணொளியை புதுடில்லி பாராளுமன்றத்திலும் வெளியிட்டதன் மூலம், இந்திய மத்திய அரசாங்கத்துக்கு கூடியளவு அழுத்தங்களை அது ஏற்படுத்தியுள்ளது. தொடர்ச்சியாக இந்தியப் பாராளுமன்றத்தில் இந்த விவகாரம் பிரதான இடத்தைப் பிடிக்கச் செய்ததில் சனல் 4 எதிர்பார்த்த வெற்றியை அடைந்துவிட்டது என்றுதான் சொல்லவேண்டும்.
சரி, ஈழத் தமிழர் விவகாரம் குறித்து வெளியிடப்பட்டிருக்கும் சனல் 4, அவ்வப்போது தம்வசமிருக்கும் அந்தப் பழைய யுத்தகாலக் கொடூரக் காட்சிகளைத் விதவிதமாகத் தொகுத்து இந்தியாவை இலக்கு வைத்து வெளியிட்டு வருவதன் நோக்கமென்ன?
பொதுவான அர்த்தத்தில் அது இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்களை உலகுக்கு அம்பலப்படுத்துவதாகக் காட்டப்படுகின்றபோதும், இலங்கை அரசாங்கப் பேச்சாளரே கூறியிருப்பதுபோல், இவற்றைச் சேர்த்து வைத்து அவ்வப்போது சீட்டு விளையாட்டில் டிறம்ப் கார்டை இழுத்து விடுவதுபோல் காணொளிகளை வெளியிடவேண்டிய அவசியமென்ன? ஈழத் தமிழர் அவலங்கள் இப்போது சர்வதேச அரசியலின் வேறு ஏதேதோ தேவைகளுக்காகப் பயன்படுத்தப்படத் தொடங்கியிருப்பதை இது தெளிவாகக் காட்டுகிறது.
ஈழத் தமிழர் பிரச்சினைக்கு பிரதான அடிப்படைக் காரணியாக அன்றுதொட்டு இருந்து வருகிற இந்து சமுத்திரப் பிராந்தியத்தை மையமாகக் கொண்ட சர்வதேச அரசியல் இராஜதந்திர நகர்வுகளின் ஒரு பகுதியாகவே சனல் 4 காணொளிகளையும், ஜெனீவா மாநாடுகளையும் நாம் பார்க்கவேண்டியுள்ளது. இதை விளங்கிக்கொள்வதற்கு கடந்த கால வரலாற்றை ஒரு தடவை திரும்பிப் பார்ப்பது அவசியமாகிறது.
பூகோள அரசியல்
இந்துசமுத்திரப் பிராந்தியத்தில் சர்வதேச நாடுகளின் பிரதான கப்பல் போக்குவரத்து மார்க்கத்தில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் அமைந்துள்ள இலங்கை மீது எப்போதுமே சர்வதேச நாடுகளுக்கு ஒரு கண் விழுந்தபடியே இருக்கிறது. காலனித்துவ காலகட்டங்களிலிருந்தே தொடர்ந்து வரும் இந்தப் பிரச்சினை, இந்திய சுதந்திரப் போரின் விளைவாக இலங்கையை விட்டும் பிரித்தானிய காலனித்துவ வாதிகள் வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டதன் பின்னர் பல்வேறு மறைமுக வடிவங்களில்தொடர்ந்தது.
காலனித்துவத்தின் இறுதிக் காலத்தில் இலங்கையைவிட்டு வெளியேறும்போதே, இந்துசமுத்திரப் பிராந்தியத்தில் தமது பிடியை வைத்திருப்பதற்காக முக்கிய கடற்படை, விமானத்தளங்களில் தனது கட்டுப்பாட்டை வைத்திருக்க முயன்ற பிரித்தானியாவுக்கு, முன்னாள் பிரதமர் பண்டாரநாயகாவின் காலத்து இந்துசமுத்திரப் பிராந்தியத்தை மையமாகக் கொண்ட இந்திய ஆதரவு வெளியுறவுக் கொள்கை ஆப்படித்துவிட்ட பின்னர், மேற்குலகின் ஆக்கிரமிப்புக்கள் வேறு வடிவங்களில் இலங்கை மீது தொடர்ந்தது.
ஆனால், பண்டாரநாயகா காலத்து மேற்குலகின் இந்தக் கவலையைப் போக்கும் வகையில், பண்டாரநாயகாவின் பின்னர் இலங்கையில் ஆட்சிபீடமேறிய முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தன கடைப்பிடித்த மேற்குலக ஆதரவு வெளியுறவுக்கொள்கை அமைந்துவிட்டது.
கைகொடுத்த பிரித்தாளும் தந்திரம்
எனினும், காலனித்துவ காலத்து பிரித்தானிய அரசாங்கத்தின் பிரித்தாளும் தந்திரச் செயற்பாடுகளின் விளைவாக அவர்கள் எதிர்பார்த்த சிங்கள-தமிழ் இன முரண்பாடு கூர்மையடையத் தொடங்க, இந்த நிலைமைகளில் புதிய அத்தியாயங்கள் எழுதப்படத் தொடங்கின. மேற்குலகு எதிர்பார்த்தது போலவே உள்நாட்டு முரண்பாடு இலங்கைமீதான அவர்களின் பிடியைத் தொடர்ந்து பேண அவர்களுக்குக் கைகொடுத்தது. ஆனால், முரண்பாடு கூர்மையடைந்து ஆயுதப் போராட்டமாக விரிவடைந்தபோது புதிய சிக்கல்கள் தோன்றின.
ஜெயவர்த்தனா காலத்து மேற்கு மைய வெளியுறவுக் கொள்கையினால் அதிகம் கவலையடைந்த இந்தியா, இந்த விடயத்தில் அவருக்கு கொடுத்த அழுத்தங்கள் எதிர்பார்த்த பயன்தராத நிலையில், ஈழத்தமிழர்களின் ஆயுதப் போராட்டத்துக்கு ஆதரவு வழங்கும் செயற்பாடுகளின் மூலம் ஜெயவர்த்தனவுக்கு தலையிடி கொடுக்கும் புதிய இராஜதந்திரத்தைக் கடைப்பிடித்தது. போட்டிக்கு, மேற்குலகும் விடாப்பிடியாக நேரடியாகவும், இஸ்ரேலிய மொசாட் போன்ற அமைப்புக்கள் மூலமும் ஜெயவர்த்தனா அரசாங்கத்துக்கு முண்டு கொடுத்து வந்தது.
பூதாகரமான ஆயுதப் போராட்டம்
சோவியத் ரஷ்யா பலமாக இருந்த அந்தப் பனிப்போர்க் காலத்தில் இந்துசமுத்திரப் பிராந்தியத்தை மையப்படுத்தியதாக இந்த சர்வதேச இராஜதந்திர நகர்வுகளின் போட்டாபோட்டிச் செயற்பாடுகள் இலங்கையில் ஆயுத மோதல்களை பூதாகரமாக வளரச் செய்தது. இது, அனைத்துலக ஆயுத வியாபாரத்தின் மூலம் போனஸ் பொருளாதார நன்மைகளையும் பல நாடுகளுக்கும் வழங்கிக்கொண்டிருந்தது.
1987ம் ஆண்டு இந்திய-இலங்கை உடன்படிக்கை, அதன் மூலம் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வுகாண முன்வைக்கப்பட்ட 13வது திருத்தச் சட்டம் போன்றவை, இந்த ஆயுத மோதல்களை முடிவுக்குக் கொண்டுவர முயன்றது. எனினும், காலனித்துவ காலத்து தந்திரோபாயத்தின் வெளிப்பாடான இனமுரண்பாடுகளைத் தீர்த்துவைக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சி, ஆரம்பத்தில் தமிழர் தரப்பும் பின்னர் ஜெயவர்த்தனாவுக்குப் பிறகு தென்னிலங்கையில் ஆட்சிபீடமேறிய பிரேமதாஸா அரசாங்கமும் மேற்கொண்ட தனித்தனி மற்றும் கூட்டு நகர்வுகளால் வீணடிக்கப்பட்டது.
இந்திய-இலங்கை உடன்படிக்கையையும், 13வது திருத்தச்சட்டத்தின் மூலமான தீர்வு முயற்சியையும் முறியடிக்க முயன்ற தமிழர் தரப்பு ஆயுதப் போராட்டம், இந்திய - இலங்கை உடன்படிக்கையின் மூலகர்த்தாவான முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியையும், அதன் பின்னர், இந்திய-இலங்கை உடன்படிக்கையை முறியடிக்க உதவிய கைகொடுத்த பிரேமதாஸாவையும் ஒரே விதமாகப் போட்டுத் தள்ளியது. இதன்பின்னர் பிரச்சினைகள் புதிய கோணங்களில் வளர்ந்து ஆயுத முரண்பாடு பெரும் போராக முழு இலங்கைத் தீவையும் சீரழிக்கத் தொடங்கியது.
சர்வதேச குரங்குகளின் கையில் இலங்கை அப்பம்
இப்படியாக, காலனித்துவ காலத்தில் பிரித்தாளும் தந்திரத்தின் மூலம் போடப்பட்ட இன முரண்பாட்டு வித்து வளர்ந்து விருட்சமாகி, முழு இலங்கைத் தீவின் நிம்மதியையும் சீர்குலைத்து, அது தன்னிறைவாக வளர்ந்துவிட முடியாத நிலையில் எப்போதுமே பல நாடுகளும் விரும்பிய விதமாக அதனைப் பயன்படுத்திக்கொள்ளக்கூடிய பல புதிய புதிய வாசல்களைத் திறந்து விட்டுக்கொண்டே இருந்தன. அண்மையில் ஆய்வாளர் ஒருவர் தனது ஆக்கமொன்றில் குறிப்பிட்டிருந்ததுபோல, இலங்கையர்களுக்குக் கிடைத்த சுதந்திர அப்பத்தை அவர்கள் தமக்குள் சரியாகப் பிரித்துக்கொள்ளத் தெரியாமல் சர்வதேச குரங்குகளிடம் இழந்துகொண்டே இருந்தனர்-இருக்கின்றனர்.
ஆனால், இந்துசமுத்திரப் பிராந்தியத்தை மையமாகக் கொண்ட சர்வதேச அரசியல் இராஜதந்திர நகர்வுகளின் எல்லைகளையும் தாண்டி, தமிழர்களின் ஆயுதப் போராட்டம் புதிய பரிமாணங்களின் வளர்ச்சி கண்டு, அது இந்துசமுத்திரப் பிராந்தியத்துக்கே அச்சுறுத்தல் ஏற்படுத்தும் பூமராங் ஆனபோது, சர்வதேச நாடுகள் பலவும் விழித்துக்கொண்டன. உடனே, ஆயுதப் போராட்டத்தின் தீவிரத்தைத் தணிக்கும் வகையிலான சமாதான முயற்சிகளை மேற்குலகின் செல்லப்பிள்ளையான நோர்வே மூலம் அவை முன்னகர்த்தின. ஆனால், அவற்றுக்கும் சவால் விட்டு ஆயுதப் போராட்டம் தொடர்ந்தபோது, ஏறத்தாள அனைத்து சர்வதேச நாடுகளுமே இணைந்து இந்துசமுத்திரப் பிராந்தியத்தை அச்சுறுத்தும் அளவுக்கு வளர்ந்துவிட்ட ஆயுதப் போராட்டத்தை முற்றாகவே நசுக்கின.
சோவியத் மைய நாடுகளுக்கும், அமெரிக்க மைய மேற்குலக நாடுகளுக்குமிடையிலான பனிப்போர்க் காலத்துக் குழந்தையான ஈழத் தமிழர்களின் ஆயுதப் போராட்டம், பனிப்போர் முடிவுக்கு வந்து, இந்திய-மேற்குலக உறவுகள் இந்துசமுத்திரப் பிராந்தியத்தைப் பொறுத்து பொதுக்கோட்டில் சந்திக்கும் நிலைமை ஏற்பட்ட பின்னர், முழு உலகும் இணைந்து அதற்கு முடிவு கட்டியது.
புதிய தந்திரம்
இப்போது போர் முடிந்து, தமிழர்கள் மத்தியில் ஆயுதப் போராட்ட வலு முற்றாக இல்லாமல் செய்யப்பட்டிருக்கும் சூழ்நிலையில், இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் மீதான பிடியை இறுக்கிக்கொள்வதற்கு சர்வதேச நாடுகள் பலவும் முன்னெடுக்கும் புதிய அரசியல் இராஜநத்திர தந்திரோபாயமாகவே, போர்ககுற்ற விசாரணை, சனல் 4 வெளியீடுகள், ஜெனீவா தீர்மானம் எல்லாம் அமைந்துள்ளன.
சுருங்கச் சொல்லின், இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் மீதான பிடியைப் பேணிய காலனித்துவம், சுதந்திரப் போர்களின் விளைவாக அது முடிவுக்கு வந்தபின் பிடியைத் தொடர்வதற்காகக் கையாளப்பட்ட பிரித்தாளும் தந்திரம், அதன்பின்னர், இந்தப் பிரித்தாளும் தந்திரத்தின் விளைவான இனமுரண்பாட்டை அடிப்படையாகக் கொண்ட ஆயுதப் போராட்டத்தைக் கையாள்தல், இறுதியாக அந்த ஆயுதப் போராட்டத்துக்கு முடிவுகட்டிவிட்டு ஒரு புதிய சூழலில் புதிய இராஜதந்திர நகர்வுகளை மேற்கொள்ளல் என்று, இந்துசமுத்திரப் பிராந்தியத்தின் குட்டித்தீவான இலங்கை மீது சர்வதேச நாடுகள் பலவும் தமது பலத்தைப் பல்வேறு வழிகளிலும் பிரயோகித்து இலங்கையின் நிம்மதியைக் குலைத்தக்கொண்டே இருக்கின்றன.
காலனித்துவ காலம் முதற்கொண்டு இன்று வரையில் இலங்கையின் நிலைமைகளைத் தீர்மானிப்பதில் சர்வதேச அரசியல் இராஜந்திர காய்நகர்த்தல்கள் கொண்டிருந்த இந்தச் செல்வாக்கின் பின்னணியில், தற்போதைய ஜெனீவா தீர்மானம் குறித்த விடயங்களைப் பார்ப்போமானால், இன்றைய நிலைமையின் யதார்த்தத்தை நாம் தெளிவாகப் புரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கும்.
இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் மீதான சர்வதேச நாடுகளின் பல்வேறு இராஜதந்திர நடவடிக்கைகளின் விளைவாக பூதாகரமான இலங்கை ஆயுத முரண்பாடுகளை முடிவுக்குக் கொண்டு வருவதில் ஏதொவொரு வகையில் நேரடி, மறைமுக பங்களிப்புக்களை வழங்கிய நாடுகளே இன்று இந்த ஜெனீவா வியூகத்தின் பின்னாலும் அணிவகுத்து நிற்கின்றன. இந்த ஜெனீவா தீர்மானத்துக்கான ஒரு அடிப்படையாக போர்க்குற்றங்களை முன்னிறுத்திக்கொண்டு, அதேவேளை, அதை முதன்மைப்படுத்தாத மாற்று வழிமுறைகளின் மூலம் இந்துசமுத்திரப் பிராந்தியத்தின் மீதான தத்தமது பிடிகளை இறுக்கிக்கொள்ள ஒவ்வொரு நாடுகளும் முனைவதை நாம் இப்போது அவதானிக்க முடிகிறது.
பிசுபிசுக்கும் போர்க்குற்ற விசாரணை
இலங்கையின் போர் முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்ட பின்னர், இந்தப் போர் மேற்கொள்ளப்பட்ட விதம் குறித்த போர்க்குற்ற விசாரணைகளை ஐ.நா. மேற்கொள்ளவேண்டும் என்ற கோரிக்கை முதலில் முன்வைக்கப்பட்டது. பின்னர், இதுகுறித்து விசாரித்து தமக்கு ஒரு பிரத்தியேக அறிக்கை சமர்ப்பிக்கவென ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் ஒரு குழுவை அமைத்து அதன்படி அந்தக் குழுவும் ஒரு அறிக்கையை சமர்ப்பித்தது.
ஆனால், பின்னர் சர்வதேச விசாரணைகளுக்கு அவசியமில்லை என்று கூறி இலங்கை உள்நாட்டில் அமைக்க முனைந்த கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு முயற்சிகளுக்கு அமெரிக்கா தலைமையிலான மேற்குலக நாடுகள் ஆதரவு வழங்கின. குறிப்பாக, இந்த ஆணைக்குழு முயற்சிக்கு தமது முழுமையான ஆதரவை அமெரிக்கா உத்தியோகபூர்வமாக வெளியிட்டும் இருந்தது.
இவ்வாறு, சர்வதேச போர்க்குற்ற விசாரணை மேற்கொள்ளப்படுவதை தவிர்க்கும் வகையில் இலங்கை அரசாங்கம் அமைத்த நல்லிணக்க ஆணைக்குழுவை ஆதரித்த மேற்குலகம், அது வெளியான பின்னர் அதை இலங்கை அரசாங்கம் நடைமுறைப்படுத்தவேண்டும் என்று 2012ம் ஆண்டு ஜெனீவா தீர்மானத்தில் வலியுறுத்தின.
போர்க்குற்ற விசாரணைகள் நேர்மையாக நடத்தப்பட்டால், புலிகள் இயக்கத்தை அழித்தொழிப்பதற்கு நேரடியாகவும், மறைமுகமாகவும், ஆயுத, பயிற்சி, புலனாய்வு உதவிகள் பலவற்றையும் வழங்கிய பல நாடுகளும் இந்த விசாரணையின் மூலம் அம்பலப்படக்கூடிய அபாயம் உள்ளதை சர்வதேச நாடுகள் பலவும் நன்கறியும். எனவேதான், பட்டும் படாமலும் போர்க்குற்ற விசாரணைகள் பற்றிப் பேசிப் பாவ்லா காட்டிக்கொண்டு, தமது நலன்களை இந்துசமுத்திரப் பிராந்தியத்தில் நிலைநிறுத்தும் செயற்பாடுகளை பல நாடுகளும் மேற்கொண்டு வருகின்றன.
எனவே, போர்க்குற்ற விசாரணை என்கின்ற விடயத்தை இலங்கை அரசாங்கத்தின் மீதான ஒரு அழுத்தப் பிரயோக உத்தியாகக் கையாண்டபடி, நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையை அமுல்ப்படுத்துங்கள் என்ற கோரிக்கை ஜெனீவா தீர்மானம் மூலம் முன்னிறுத்தப்படுகின்றது.
இந்தியாவே இலக்கு?
இன்னும் பார்த்தால், இந்துசமுத்திரப் பிராந்தியத்தை மையப்படுத்திய இந்த இராஜதந்திர நகர்வுகள் மூலம் இங்கே பலப்படுத்த முயற்சிக்கப்படுகின்ற மேற்குலகின் செல்வாக்குக்கு சவாலாக இருக்கக்கூடிய பிராந்திய வல்லரசான இந்தியாவுக்கும் ஒரு நெருக்கடியை கொடுக்கும் உத்தியாக 2013 ஜெனீவா தீர்மான காய்நகர்த்தல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தமிழ்நாட்டு தமிழர்களின் உணர்வலைகளை உசுப்பிவிட்டு, அங்குள்ள அரசியல் தலைவர்களின் வாக்கு வங்கிகளை இலக்கு வைத்த செயற்பாடுகளின் மூலம், இந்திய மத்திய அரசுக்குப் பெரும் தலையிடி இம்முறை கொடுக்கப்பட்டுள்ளது.
இந்தக் காய்நகர்த்தல்கள் மூலம் ஜெனீவா தீர்மான புயல் அதன் நேரடி இலக்கான இலங்கை மீதாக அன்றி இந்தியாவில், குறிப்பாக புதுடில்லியிலேயே மையம் கொண்டிருக்கிறது. உள்நாட்டளவில் பலவீனமாக இருக்கக்கூடிய இந்திய மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில், மத்தியில் இடம்பெறும் தமிழக தலைவர்களைக் கையாண்டு, உள்நாட்டு அரசியலில் ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்வதற்காக ஜெனீவா விடயத்தில் முடிவுகளை எடுக்குமாறு மத்திய அரசை நிர்ப்பந்திக்கும் தந்திரோபாயம் இங்கே பிரதானமாகக் கையாளப்படுகிறது.
இதன்மூலம், இந்திய மத்திய அரசு இரு முனையான பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கிறது. ஜெனீவா தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்தால் உள்நாட்டில் அரசாங்கத்தின் ஸ்திரத்தன்மை பாதிக்கப்படும். இதற்கஞ்சி தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தால், பிராந்தியத்தில் இலங்கையுடனான உறவு பாதிப்படைந்து இந்தியாவின் பிடி தளர்ந்துபோகும்.
இந்துசமுத்திரப் பிராந்தியத்தில் இந்தியாவுக்குச் சவால் விடும் விதமான இலங்கையின் செயற்பாடுகள் பிரதானமாக தென்னிலங்கை சிங்கள மக்கள் மத்தியில் வளர்த்துவிடப்பட்டிருக்கும் இந்திய எதிர்ப்பு மனோபாவத்தின் அடிப்படையிலேயே மேற்கொள்ளப்படுகின்றன. தமிழக மன்னர்களின் இலங்கை மீதான படையெடுப்புக்களை மையப்படுத்தி பின்னர் மகாவம்சம் மூலமாகவும் திட்டமிட்டு வளர்க்கப்பட்டிருக்கும் இந்த இந்திய எதிர்ப்பு வாதமே, இலங்கை சுதந்திரமடைந்த காலத்தில் பிரித்தானிய படைத்தளங்களை இலங்கையில் பேணுவதற்கு அன்றைய டி.எஸ்.சேனநாயகா அரசாங்கம் இணங்கக் காரணம் என்று சொல்லப்படுவதையும் நாம் இங்கு கவனி்க்கவேண்டும்.
ஆக, தென்னிலங்கை சிங்கள மக்கள் மத்தியில் இந்திய எதிர்ப்புணர்வை பேணுவதன் மூலம் இந்துசமுத்திரப் பிராந்தியத்தில் இந்தியாவோடு அனுசரித்துப்போகும் வெளியுறவுக் கொள்கையை இலங்கை கடைப்பிடிக்க முடியாதபடியான ஒரு நிலைமையை ஏற்படுத்த முடியும். கடந்த முறை ஜெனீவா தீர்மானத்துக்கு ஆதரவாக இந்தியா வாக்களித்தபோது இந்த எதிர்ப்புணர்வு தென்னிலங்கையில் கடுமையாகத் தோன்றியிருந்ததையும், இந்தியா எப்போதுமே இலங்கையின் எதிரி என்றவிதமான கருத்துக்கள் தென்னிலங்கை அரசியல்வாதிகள் பலராலும் வெளியிடப்பட்டு வருவதையும் நாம் இங்கு அவதானிக்கவேண்டும்.
இந்தச் சூழ்நிலையில், இம்முறை இந்திய அரசாங்கம் ஜெனீவா தீர்மானத்தக்கு ஆதரவாக வாக்களித்தால் அது இலங்கையுடனான இந்திய உறவில் அதிகளவு விரிசல்களைத் தோற்றுவிக்கும். இதுதான், இந்துசமுத்திரப் பிராந்தியத்தை மையமாகக் கொண்ட தற்போதைய மேற்குலக அரசியல் இராஜதந்திரத்துக்குத் தேவைப்படுவது.
என்ன செய்யலாம்?
இந்தப் பின்னணியில், ஈழத் தமிழர்கள் ஜெனீவா தீர்மானத்துக்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்கவேண்டும் என்று அழுத்தம் கொடுப்பதானது, ஏற்கனவே உள்நாட்டு அரசாங்கத்துடனும், தென்னிலங்கை சிங்கள மக்களுடனும் நீண்டகாலப் பகைமையை வளர்த்துக்கொள்ள வழிசமைப்பதுடன் நின்றுவிடாமல், இந்திய-இலங்கை உடன்படிக்கையின் பின்னர் விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளால் தோற்றுவிக்கப்பட்ட இந்திய அரசுடனான பகைநிலையிலும் ஈழத் தமிழர்களைக் கொண்டுவந்து விடும்.
உள்நாட்டு அரசையும் பகைத்துக்கொண்டு, பக்கத்து நாட்டையும் புறக்கணித்து எங்கிருந்தோ தமக்கு தீர்வொன்று கிடைக்கும் என்று ஈழத்தமிழர்கள் எதிர்பார்த்தால் அது மீண்டுமொரு துயர வரலாற்றையே தமிழர்களுக்குப் பரிசளிக்கும்.
ஆக, இந்தப் பின்னணியில், ஈழத் தமிழர்களை மையமாக வைத்து, ஆனால், அவர்களை ஒரு பகடைக்காயாகவே பயன்படுத்தி உருவாக்கப்பட்டிருக்கும் தமிழக, இந்திய, உலகளாவிய இன்றைய சூழ்நிலையைச் சரியாகப் புரிந்துகொண்டு, அவற்றைத் தமக்குச் சாதகமாக, தமிழ் மக்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வொன்றைப் பெற்றுக்கொள்ள உதவக்கூடிய ஒரு உத்தியாகப் பயன்படுத்துவதற்கு தமிழர் தரப்புக்கள் முயற்சிக்கவேண்டும்.
எப்படியோ தாம் தொடர்ந்தும் வாழப்போகும் இலங்கைத் தீவின் தேசிய நலன்களையும், அண்டை நாடான இந்தியாவின் பிராந்திய அரசியல் நலன்களையும் அனுசரிததுப்போகும் விதமான காய்நகர்த்தல்களை மேற்கொள்வதன் மூலமே, இத்தகையதொரு தீர்வு சாத்தியமாக முடியும் என்பதை தமிழ் அரசியல் தலைமைகளும், தமிழ் மக்களுக்கும் புரிந்துகொள்ளவேண்டும்.
1 comments :
Central Government need not to be dictated by the selfish minded petty parties.Hope it has the worthful diplomatic policy,it would act accordingly and not listening the dramtic actions of the bogus politicians.Cinema is not politics.
Post a Comment