Thursday, February 16, 2012

நினைவஞ்சலி விளம்பரம் ஒரு மோசடி - அதிர்ச்சி ரிப்போர்ட் (எழில்நிலா)

பரிதாபம் பனிக்குள் உழைத்து பேஸ்புக் உண்டியலில் போடும் நம் இளைஞர்கள்.

தென்னிந்தியத் திரைப்பட நடிகையான பாவனாவின் புகைப் படத்துடன் இன்னொரு பெண் இறந்துவிட்டதாகத் தெரிவித்து யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் உதயன் பத்திரிகையில் 31ஆம் நாள் நினைவஞ்சலி விளம்பரமாகப் பிரசுரிக்கப்பட்டிருந்தது நீங்கள் அறிந்திருப்பீர்கள். இதன் பின்னணியிலுள்ள மர்மம் பற்றி விசாரித்தபோது பல திடுக்கிடும் தகவல்கள் எமக்குக் கிடைத்தன. அதாவது புதிய வகையான ஏமாற்று மோசடியே தற்பொழுது அம்பலத்திற்கு வந்துள்ளது. நடந்தது இதுதான்,

லண்டனில் புலம்பெயர்ந்து வசித்துவரும் ஒரு இளைஞன் தான் தனஞ்சயன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தனது காதலியுடன் சுமார் ஒரு வருடத்துக்கும் மேலாக காதலிக்கின்றார். அதாவது கதைக்கின்றார். அவருக்கு விசா இல்லை. இருந்தாலும் திருட்டுத்தனமாக வேலைசெய்து இலங்கையிலுள்ள காதலி டயாளினிக்கு (பொய்யான பெயர்) பணத்தை அனுப்பி வருகிறார். தினமும் அவருக்கு வரும் தொலைபேசி அழைப்பு, அதில் வரும் செய்தி அனைத்துமே பணம் வேண்டும் என்பதுதான். ஊரில் காதலை வளர்த்துக்கொண்டு லண்டன் வந்தவர் அல்ல இந்த இளைஞன். சந்தர்ப்பவசத்தால் பேஸ்புக் மூலம் காதல் மலர்ந்திருக்கிறது.

காதலியும் தனது படத்தை ஈமெயில் மூலம் அனுப்ப, அப்படத்தைப் பார்த்த இந்த இளைஞன் பூரித்துப் போனார். நடிகை பாவனாவின் சாயல் அப்படியே இருந்திருக்கிறது! இவ்வளவு அழகான பெண்ணுக்கு பணம் அனுப்பாமல் வேறு யாருக்கு அனுப்புவார்கள் இளைஞர்கள்? இப்படியே நாட்கள் ஓடியிருக்கின்றன. ‘லண்டனில் இருந்து எனக்கு வெறுத்து விட்டது, நான் கொழும்புக்கு வந்து உன்னைக் கலியாணம் கட்டப்போகிறேன்’ என்று அந்த இளைஞன் ஒரு வார்த்தையை விட்டிருக்கிறார். மறுநாள் தொலைபேசியில் கதைக்கும்போது அந்தப் பெண், ‘உங்களிடம் நான் ஒரு விடயத்தை மறைத்துவிட்டேன். அது என்ன தெரியுமா? எனக்கு வேறு ஒருவருடன் திருமணம் முடிந்து விட்டது. அது மட்டுமல்லாமல் எனக்கு புற்றுநோய். அதுவும் சும்மா புற்று நோய் இல்லை. இரத்தப் புற்றுநோய்’ என்று அழுது வடித்திருக்கிறார்.


பணம் அனுப்பிய லண்டன் வாழ் இளைஞன்

இந்த இளைஞரும் அவள் சொல்வதை எல்லாம் நம்பி, அவள் சாகப்போகிறாள் என்று தாடி வளர்த்து அலையத் தொடங்கியுள்ளார். இந்தவேளை ஒருநாள் அகால நேரத்தில் அந்தப் பெண்ணிடமிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு..!! 'அதாவது இந்தியா சென்று அப்பலோவில் சிகிச்சை எடுத்தால் சிலவேளை குணமாகலாம். இல்லையென்றால் கொஞ்ச நாளில் இறந்துவிடுவார்' என்று அழைப்பை மேற்கொண்டவர்கள் சொல்லியிருக்கிறார்கள்.

உடனே படாத பாடுபட்டு, இந்த இளைஞனும் பணத்தை லண்டனில் புரட்டி அனுப்ப, தான் இந்தியா செல்வதாக அப்பெண் கூறியுள்ளார். சில வாரங்களில் இந்தியாவில் இருந்து தொலைபேசியில் அழைத்த ஒரு நபர், 'உங்கள் காதலி தற்போது கோமா நிலையில் உள்ளார்' எனக் கூறியுள்ளார். பின்னர் ஒரு கிழமையில் தொலைபேசியில் அழைத்து 'ஆள் முடிந்து விட்டது' என்று கூறியுள்ளார்.
நினைவஞ்சலியின் புகைப்படமும் உண்மையான பாவனாவின் புகைப்படமும்

காதலி இறந்துவிட்டாள். 31 நாட்களுக்குப் பின்னர் 31ஆம் நாள் நினைவஞ்சலிப் படத்தோடு அவள் புகைப்படம் யாழ். உதயன் பத்திரிகையில் வருகிறது. அதனையும் பார்க்கும்படியும் சொல்லியிருக்கிறார்கள் அப்பெண்ணின் தாய் தந்தையர். இதில் இறந்ததாகச் சொல்லப்படும் பெண்ணுக்கு 2 சகோதரிகள் வேறு இருக்கிறார்கள்.

பெற்றோர் பேப்பரில் கொடுத்த 31ஆம் நாள் நினைவுப் படத்துக்கும், இளைஞனுக்கு குறித்த பெண் தனது படம் என்று அனுப்பி வைத்த படத்துக்கும் எந்தவிதமான உருவ வேற்றுமையும் இல்லை. ஆனால், நடிகை பாவனாவின் புகைப்படத்தையே இவ்வாறு உருமாற்றம் செய்திருக்கிறார்கள் என்பதை குழந்தை கூட கண்டு பிடித்துவிடும். குறிப்பிட்ட பெண்ணால் காதலனுக்கு அனுப்பப்பட்ட புகைப்படம் போட்டோஷொப் மூலம் எடிட் செய்யப்பட்ட புகைப்படம் என்பது எவர் பார்த்தாலும் கண்டுபிடித்துவிட முடியும்.இதே பெண்ணின் பெயரில் நண்பர்கள் பிரசுரித்த ஒரு அறிவித்தல்

ஆனால், இதே பெண்ணின் பெயரில் நண்பர்கள் பிரசுரித்ததாக ஒரு அறிவித்தலும் வேறொரு பகைப்படத்துடன் வெளியிடப்பட்டிருந்தது. உருவ ஒற்றுமை இருந்தாலும் நடந்தது எல்லாமே ஒரு செட்டப் என்பதனை தற்பொழுதும் கூட காதலன் நம்ப மறுக்கிறாராம். (படத்திலிருப்பவர்) அப்பெண் உண்மையாகவே இறந்துவிட்டதாக அவர் கருதுகிறார். பணத்தையும் வாங்கிக்கொண்டு காதலி கான்சரில் இறந்துவிட்டதாக கதை அளக்கிறது ஒரு கும்பல்.

இந்தியாவில் உள்ள அப்பலோ மருத்துவமனையில் கொழும்பில் இருந்து குறிப்பிட்ட பெயரில் எந்தப் பெண்ணும் வந்து தங்களிடம் சிகிச்சை பெறவில்லை என்று மறுக்கிறது அதன் நிர்வாகம். அதுவும் அப்படி யாரும் இறக்கவும் இல்லை என்று அவர்கள் அடித்துக்கூறுகிறார்கள். இது தொடர்பாக உதயன் பத்திரிகையின் விளம்பரப்பிரிவுடன் தொடர்பு கொண்டபோதும் சரியான பதிலை அவர்களிடமிருந்து பெறமுடியவில்லை. எனினும் ஜேக்கப் என்னும் உதயனின் முன்னாள் ஊழியரொருவரே இவ்விளம்பரத்தைக் கொண்டுவந்து கொடுத்ததாகத் தெரியவருகிறது.

ஆனால், இங்கே நடப்பது என்ன? அப்படி என்றால் இறந்ததாகச் சொல்லப்படும் பெண் யார்? அப் புகைப்படத்தில் உள்ளவர் யார்? சரி இது எல்லாம் போகட்டும், இப்பொழுது அந்த இளைஞனுக்கு பதிதாக ஒரு பிரச்சனை தொடங்கியிருக்கிறதாம்.


உதயன் பத்திரிகையில் பிரசுரமான நினைவஞ்சலி விளம்பரம்

அக்காதான் குடுத்து வைக்கவில்லை நான் உங்களோடு கதைக்க ஆசைப்படுகிறேன் என்று, இறந்த காதலியின் தங்கை தற்போது இந்த இளைஞனோடு தொடர்பை ஏற்படுத்தியிருக்கிறாராம். சுருக்கமாகச் சொல்லப்போனால், இறந்த காதலியின் தங்கை இப்போது இந்த இளைஞனை காதலிக்கிறாராம். இனி இவர் படிப்புக்கு, குடும்பச் செலவுக்கு என்று எல்லாம் காசு கறக்கும் நாடகம் ஆரம்பமாகும். இப்படியே ஒரு வட்டம் செயல்பட்டு வருகிறது. பேஸ்புக் ஊடாக இளைஞர்களை வளைத்துப் பிடிப்பது, அதுவும் விசா இல்லாவிட்டால் அவர் கொழும்புக்கு வரமாட்டார். பின்னர் பழகி காதலிப்பது போல் நடிப்பது, இந்தியாவில் ஏதாவது ஒரு மாநிலத்தில் உள்ள பெண் ஒருவரின் படத்தை எடுத்து அது தான் நான் என்று அனுப்புவது.

பின்னர் காசைக் கேட்பது. ஏதாவது ஏடாகூடம் ஆனால், அவள் செத்துவிடுவாள். இல்லையேல் கான்சர் வரும், இல்லையேல் இப்போது எனக்கு எயிட்ஸ் வந்துவிட்டது என்று சொல்லி நழுவிவிடுவார்கள் குளிரிலும் மழையிலும் கஷ்டப்பட்டு உழைக்கும் காசு காத்தோடு போய்விடும். குறிப்பிட்ட இளைஞர் ஒரு வருடத்தில் 10,000 பவுன்ஸுகளுக்கு மேல் அனுப்பியுள்ளாராம்.

குறிப்பாக சொல்லப்போனால் வெளி மாவட்டங்களிலிருந்து கல்வி கற்பதற்காகவும், தொழில்புரிவதற்காகவும் கொழும்புக்கு வந்து 5 அல்லது 5 பேராக ரூம் எடுத்துத் தங்கியிருக்கும் பெண்களே இவ்வாறான வேலைகளைச் செய்து வருவதாக ஆதாரமான தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்களில் ஒரு சிலர் இலங்கையிலுள்ள ஊடகத்துறைகளில் பணிபுரிபவர்களாக தம்மைக் காட்டிக் கொள்வதுதான் வேதனையான விடயமாக இருக்கிறது.

பேஸ்புக் மூலம் வெளிநாட்டில் வசிக்கும் இளைஞர்களை நண்பர்களாக்கி அவர்களின் பலம், பலவீனம், வங்கி இருப்பு, எல்லாவற்றையும் அறிந்துகொண்டு கொஞ்சம் கொஞ்சமாக ஆசை வார்த்தைகளைக் காட்டி பணத்தைக் கறக்க ஆரம்பித்து விடுகின்றனர். பணம் இங்கு வந்ததும் பிறகென்ன உல்லாச வாழ்க்கைதான். MC, பிட்சா சென்ரர், KFC, பியூட்டி பார்லர் என தமது நண்பிகளுடன் அல்லது ஆண் நண்பர்களுடன் பணத்தை செலவழித்து முடிக்கின்றனர். கொழும்பில் இவர்கள் அடிக்கும் லூட்டிக்கு, வெளிநாட்டில் உள்ள தமிழ் இளைஞர்கள் தான் பலிகடாவாகின்றனர். வெளிநாடுகளில் உழைக்கும் இளைஞர்களே மிகவும் அவதானமாக இருங்கள். இச்சம்பவம் உங்களுக்கும் ஒரு பாடமாக இருக்கட்டும்.

நன்றி துருவம்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com