Monday, January 30, 2012

பொலிஸ், காணி அதிகாரங்களை எதிர்க்க நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றோம்.


அதிகாரப்பரவலாக்கல் பட்டியலிலிருந்து பொலிஸ், காணி அதிகாரங்களை நீக்கக்கோரி நாடாளுமன்றத் தெரிவுக் குழுவிடம் எமது உறுதியான யோசனையை முன்வைப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம் என்று ஜாதிக ஹெலஉறுமய நேற்றுத் தெரிவித்துள்ளது.

அத்துடன், பொலிஸ், காணி அதிகாரங்களைப் பகிர்வதற்கு ஜனாதிபதி ஒருபோதும் இணங்க மாட்டார் என நாம் உறுதியாக நம்புகின்றோம் என்றும் அக்கட்சி தெரிவித்துள்ளது. காணி, பொலிஸ் அதிகாரங்கள் தொடர்பில் கருத்துவெளியிடும் போதே ஜாதிக ஹெலஉறுமயவின் ஊடகப்பேச்சாளரும் மேல்மாகாண சபை அமைச்சருமான உதய கம் மன்வில தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் மேலும் கூறியவை வருமாறு, தமிழ் மக்களின் பிரச்சினையை சர்வதேசத்திடம் தூக்கிப்பிடித்து வருவதால் பயன் கிட்டப்போவதில்லை. எமது நாட்டு மக்களின் பிரச்சினைகளை நாமே பேசித் தீர்க்க வேண்டும். இதற்கு முன்வரத் தயங்குபவர்கள் தமிழர்கள் நலனில் அக்கறை கொள்வது போல் நடிக்கின்றனர். தமிழ் மக்களை ஏனைய சமூகத்தினருடன் இணையவிடாது தடுப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முயற்சிக்கின்றது.

நாட்டுக்கும், தமிழ் மக்களுக்கும் துரோகமிழைக்கும் வகையிலேயே அவர்களின் நடவடிக்கைகள் அமைந்துள்ளன. தமிழ் மக்களுக்கு விடிவைத் தேடிக்கொடுப்பதற்கு அவர்கள் விரும்பினால் தெரிவுக்குழுவில் அங்கம் வகிக்கலாம் அல்லவா?

காணி, பொலிஸ் அதிகாரங்களை வழங்குவதற்கு ஜனாதிபதி ஒருபோதும் இணங்கமாட்டார் என நாம் உறுதியாக நம்புகின்றோம் என்றார்.

இதேநேரம் இரு நாட்டு கொள்கையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பின்பற்றி வருவதாக தேசிய மொழிகள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார குற்றம் சுமத்தியுள்ளார்.
நாட்டின் சகல இன மக்களையும் ஐக்கியப்படுத்தும் முனைப்புக்களில் அரசாங்கம் தீவிரம் காட்டி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பத்தாண்டு கால மும்மொழிக் கொள்கையின் ஊடாக பாரிய மாற்றங்களை ஏற்படுத்த முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அரசாங்கம் ஐக்கிய இலங்கை என்ற கோட்பாட்டில் இயங்கி வரும் அதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இரு நாட்டு கொள்கைகளை பின்பற்றி வருகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, சிங்கள கடும் போக்குடைய கட்சிகள் சிறுபான்மை மக்கள் தங்களது ஆதிக்கத்தின் கீழ் வாழ வேண்டுமென எதிர்பார்க்கின்றனர் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வழங்குவதனை சிறுபான்மை மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே கடும்போக்குடைய சிங்கள கட்சிகள் இருக்கின்றன என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலைப்பாடு அரசாங்கத்தின் நல்லிணக்க நடவடிக்கைகளை பாதிக்கக்கூடும் என அவர் அச்சம் வெளியிட்டுள்ளார்.

அத்துடன் மாகாணங்களுக்கு பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்கள் வழங்கப்படுமாயின் ஒற்றுமையாகவும், நிம்மதியாகவும் வாழும் மக்கள் மத்தியில் பிரிவினைக்கு வழிவகுக்கும் என்று உள்ளூராட்சி, மாகாண சபைகள் அமைச்சர் ஏ. எல். எம். அதாவுல்லா தெரிவித்துள்ளார்.

மிகவும் சிறிய இந்த அழகிய தேசத்திற்கு மாகாண சபைகளுக்கு காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் அவசியமற்றவை என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். அம்பாறை மாவட்டத்திலுள்ள நாமல் ஓயா பிரதேசத்தில் பல்வேறு அபிவிருத்தி வேலைத் திட்டங்களை அங்குரார்ப்பணம் செய்து வைக்கும் வைபவத்தில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

நெல்சிப் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த அபிவிருத்தி வேலைத் திட்டங்களை தொடக்கி வைத்து உரையாற்றிய அமைச்சர் அதாவுல்லா நாட்டில் பயங்கரவாதம் நிலவிய காலத்தில் மக்கள் சொல்லொண்ணா துன்ப, துயரங்களை அனுபவித்தார்கள்.

ஒவ்வொரு வினாடியுமே அச்சம், பீதியுடனேயே கழிந்து கொண்டிருந்தது. இந்த நிலமை ஓரிரு நாட்களோ, வாரங்களோ நிலவவில்லை. மாறாக மூன்று தசாப்த காலம் இந்த துரதிஷ்டகரமான நிலமை நீடித்தது.

இந்த நிலமையிலிருந்து நாட்டை விடுவித்து இங்கு வாழுகின்ற எல்லா மக்களும் ஒற்றுமையாகவும், சந்தோஷமாகவும் நிம்மதியாகவும் வாழக்கூடிய சூழ்நிலையை எமது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் ஏற்படுத்தித் தந்திருக்கின்றார்.

இப்போது நாம் அச்சம், பீதியின்றி சந்தோஷமாக வாழுகின்றோம். இவ்வாறான சூழ்நிலையில் ஓரிருவர் தங்களது அரசியல் நலன்களுக்காக மாகாண சபைகளுக்கு காணி, பொலிஸ் அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்று கேட்கின்றனர். இது இந்தச் சின்னஞ்சிறிய தேசத்திற்கு தேவையற்றதாகும்.

இவ்வாறான அதிகாரங்கள் மாகாண சபைகளுக்கு வழங்கப்படுமாயின் தற்போது ஒற்றுமையாகவும், அமைதியாகவும் வாழும் மக்கள் மத்தியில் வீண் ஐயங்களையும், பிரிவுகளையும் ஏற்படுத்தும். ஒருவர் மீது அடுத்தவர் அதிகாரம் செலுத்தும் நிலமை உருவாகும்.

இந்த நிலமை நாட்டில் மீண்டும் குழப்பத்தை ஏற்படுத்தி குளிர்காய முயற்சி செய்யும் வெளிநாட்டுச் சக்திகளுக்குத் தான் நன்மையாக இருக்குமேயொழிய எமது மக்களுக்கு எந்தப் பயனுமே கிடைக்கப் போவதில்லை.

ஆகவே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் கரங்களைப் பலப்படுத்தி நாம் தொடர்ந்தும் ஒற்றுமையாகவும், அமைதியாகவும் வாழ்வோம் எனக் கூறியுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com