Thursday, November 17, 2011

பிரிட்டனில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரிப்பு பொருளாதாரம் தேங்கும்

பிரிட்டனில் வேலையில்லாத் திண்டாட்டம், இதுவரை இல்லாத அளவில் அதிகரித்துள்ளது. கடந்த மூன்று மாதங்களில் மட்டும், ஒரு லட்சத்து 29 ஆயிரம் பேர், வேலையில்லாத் திண்டாட்டப் பட்டியலில் சேர்ந்துள்ளனர். ஒட்டு மொத்தமாக, பிரிட்டனில் வேலையின்மை 8.3 சதவீதமாக உயர்ந்துள்ளது.

பிரிட்டனில் கடந்த செப்டம்பர் மாதத்தோடு முடிந்த மூன்றாவது காலாண்டில், வேலையில்லாத் திண்டாட்டம், 26 லட்சத்து 20 ஆயிரமாக அதிகரித்துள்ளது.

இது, கடந்த 19 ஆண்டுகளைப் பார்க்கும் போது மிக அதிகம். கடந்த மூன்று மாதங்களில் மட்டும் (செப்டம்பரோடு முடிந்த காலாண்டில்), வேலையில்லாதோர் பட்டியலில், ஒரு லட்சத்து 29 ஆயிரம் பேர் சேர்ந்துள்ளனர்.

வேலை தேடுவோருக்கான உதவித்தொகை பெறுவோர் எண்ணிக்கையில், 5,300 பேர் சேர்ந்துள்ளனர். இவர்களோடு சேர்த்து தற்போது, 16 லட்சம் பேர் உதவித்தொகை பெறுகின்றனர். வேலையில்லாதோரில், 16 முதல் 24 வயது வரையில் உள்ளவர்கள் மட்டும், 10 லட்சத்து 20 ஆயிரம் பேர். கடந்த மூன்று மாதங்களில் மட்டும், வேலையில் இருந்து வெளியேறியவர்கள் 67 ஆயிரம் பேர்.

வேலையில்லாதோரில் பெண்களின் எண்ணிக்கை, இதுவரை இல்லாத அளவிற்கு அதிகரித்துள்ளது. கடந்த மூன்று மாதங்களில், 43 ஆயிரம் பேர் வேலையில் இருந்து வெளியேறியுள்ளனர்.

இவர்களோடு சேர்த்து தற்போது, 10 லட்சத்து ஒன்பதாயிரம் பெண்கள் வேலையில்லாமல் உள்ளனர். இது 1988க்குப் பின், மிக அதிகளவு என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில், மூன்று லட்சத்து 50 ஆயிரம் இளைஞர்களை வேலையில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக, அரசு தெரிவித்துள்ளது. ஒட்டு மொத்த வேலையில்லாதோர் எண்ணிக்கை பிரிட்டனில், 8.3 சதவீதமாக அதிகரித்துள்ளது.

இது, அந்நாட்டிற்கு மிகப் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது. பிரிட்டனின் பொருளாதாரம் அடுத்தாண்டு நடுப்பகுதியில், தேங்கிப் போகும் அபாயம் இருப்பதாக, இங்கிலாந்து வங்கி (பிரிட்டன் மத்திய வங்கி) கவர்னர் மெர்வின் கிங் எச்சரித்துள்ளார்.

பிரிட்டன் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் கிரிஸ் கிரேலிங் கூறுகையில்,"யூரோ மண்டலப் பொருளாதாரப் பிரச்னையால் நமது பொருளாதாரம் எவ்வளவு தூரம் பாதிக்கப்பட்டுள்ளது என்பதைத் தான் இந்த விவரங்கள் காட்டுகின்றன. அதனால், உடனடியாக ஐரோப்பிய தலைவர்கள் அப்பிரச்னைக்கு ஒரு தீர்வு காண வேண்டியது அவசியம்' என்றார்.

1 comments :

Anonymous ,  November 17, 2011 at 8:54 PM  

Ironically a country's economy will be restored when democracy is restored.We think that there is much
worse to come,because arrogant politics cannot promote the democracy
It is almost the "Titanic"

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com