Wednesday, November 30, 2011

யசூசி அகாசி - ரவூப் ஹகீம் சந்திப்பு

ஜப்பானின் விசேட பிரதிநிதி யசூசி அகாசி, நீதியமைச்சரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹகீமை இன்று சந்தித்தார். இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் விடயத்தில் இந்நாட்டில் வாழும் முஸ்லிம்களுக்கு நியாயாம் கிடைக்கும் வகையில் அது அமைய வேண்டுமென அமைச்சர் ரவூப் ஹகீம் தெரிவித்தார்.

இனப்பிரச்சினை தீர்வுக்கு விசேட பாராளுமன்ற தெரிவுக்குழுவை அமைக்க அரசாங்கம் மேற்கொண்ட தீர்மானம் ஒரு சிறந்த தீர்மானமென்றும், அமைச்சர் சுட்டிக்காட்டினார். பிரச்சினைக்கு தீர்வு காணும்போது சர்வதேச சமூகத்தினதும் புலம்பெயர் தமிழர்களினதும் ஆதரவு அவசியமில்லையென்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

Read more...

யாழ் வீரசிங்க மண்டபத்தில் ரவீந்திரநாத் தாகூரின் 150 வது பிறந்த தின நிகழ்வு

ரவீந்திரநாத் தாகூரின் 150 வது பிறந்த தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட விசேட நிகழ்வொன்று யாழ் வீரசிங்க மண்டபத்தில் இடம்பெற்றது. வடமாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்களமும் இந்திய உயர்ஸ்தானிகராலய யாழ் அலுவலகமும் இணைந்து இவ்வைபவத்தினை ஏற்பாடு செய்திருந்தன.

ரவீந்திரநாத் தாகூரின் படைப்பான சாப விமோசனம் எனும் நாட்டிய நாடக நிகழ்வு இதன் போ து அரங்கேற்றப்பட்டது. இந்தியாவிலிருந்து வருகை தந்த கத்தகளி மற்றும் மணிப்பூரி நாட்டிய கலைஞர்களான அசிம்பண்டு, பட்டாச்சார்ஜி மற்றும் திம்பாவதிதேவி ஆகியோரின் நாட்டிய நிகழ்வும் பலரது பாராட்டினை பெற்றது.

வடமாகாண ஆளுநர் ஜ.ஏ சந்திரசிறி, இந்திய உயர்ஸ்தானிகராலய யாழ் இந்திய துணை தூதுவர் வி.மகாலிங்கம், யாழ் மாநகர மேயர் யோகேஸ்வரி பற்குணராசா, வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இ. இளங்கோவன் உள்ளிட்ட கலை ஆர்வளர்கள் பலரும் இதில் கலந்து கொண்டனர்.

Read more...

மருந்து இறக்குமதியாளர்கள் தகவல்களை வழங்குமாறு நுகர்வோர் அதிகார சபை அறிவிப்பு

மேற்கத்தேய மருந்து இறக்குமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள், தமது தகவல்களை நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபைக்கு கட்டாயம் வழங்க வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

சந்தையில் விற்பனையாகும் மருந்துப்பொருட்கள் தொடர்பாக தயாரிக்கப்படும் தரவுகளை களஞ்சியப்படுத்துவதற்காக இந்த தகவல்கள் பெற்றுக்கொள்ளப்படுகின்றன. வர்த்தகப்பெயர், முகவரி, வர்த்தகத்தின் தன்மை, தொடர்புகொள்ளக்கூடிய நபர்கள், தொலைபேசி, மின்னஞ்சல் முகவரிகள் ஆகியன நுகர்வோர் அதிகார சபைக்கு வழங்கப்பட வேண்டும்.

இத்தகவல்களை எதிர்வரும் 9 ஆம் திகதிக்கு முன்னர் பெற்றுத்தருமாறு, நுகர்வோர் அதிகார சபை கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக மருந்துப்பொருள் இறக்குமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மருந்துப்பொருட்களின் விலை தொடர்பாக பொது மக்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை துரிதமாக தீர்த்து வைப்பதற்கு, இதன்மூலம் முடியுமென அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

Read more...

எம்பிலிபிட்டிய கடதாசி ஆலை ஊழியர்களுக்கு நட்டஈடு

எம்பிலிபிட்டிய கடதாசி ஆலை ஊழியர்களுக்கு நட்டஈடு இன்று வழங்கப்பட்டுள்ளது. நட்டஈடு வழங்கும் வைபவம் கொழும்பு இலங்கை மன்ற கல்லூரியில் இன்று முற்பகல் இடம் பெற்றது அரச வளங்கள் மற்றும் முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சு வைபவத்தை ஏற்பாடு செய்திருந்தது.

மஹிந்த சிந்தனை தேசிய கைத்தொழில் புத்துயிரூட்டும் திட்டத்தின் கீழ், மீள்எழுச்சி பெறும் நிறுவனமான எம்பிலிபிட்டிய கடதாசி தொழிற்சாலை கருதப்படுகிறது. 170 ஊழியர்கள் இன்று நட்டஈடு பெற்றுக்கொண்டனர்.

7 லட்சம் ரூபா முதல் 13 லட்சம் ரூபா வரை நட்டஈடு வழங்கப்பட்டது. இதற்கென 3 ஆயிரத்து 500 லட்சம் ரூபாவிற்கும் கூடுதலான தொகை ஒதுக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் தயாசிறித திஸேரா, பிரதியமைச்சர் சரத்குமார குணரட்ன, அமைச்சின் செயலாளர் விலி. கமகே ஆகியோர், நட்டஈடு வழங்கும் வைபவத்தில் கலந்து கொண்டனர்.

அரசாங்கத்திற்கும் தனியார் துறைக்கும் இடையிலான இணக்கப்பாட்டின் அடிப்படையில் அவுஸ்திரேலியாவின் பேர்த் பொறியியல் நிறுவனத்தினால் எம்பிலிபிட்டிய கடதாசி ஆலை நவீன தொழில் நுட்பத்துடன் முன்னெடுத்துச் செல்லப்படவுள்ளது./span>

Read more...

வரவு செலவுத் திட்ட இரண்டாம் வாசிப்பு 91 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

2012ம் ஆண்டு வரவு செலவுத் திட்ட இரண்டாம் வாசிப்பு மேலதிக 91 வாக்குகளால் பாராளுமன்றத்தில் இன்று நிறைவேற்றப்பட்டது. இதற்கு ஆதரவாக 151 வாக்குகளும் எதிராக 60 வாக்குகளும் பிரயோகிக்கப்பட்டுள்ளன.

. ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஜனநாயக தேசிய முன்னணி என்பன இதற்கு எதிராக வாக்களித்தன. இந்த நிலையில், 13 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிப்பில் கலந்து கொள்ளாது சபையில் இருந்து வெளியேரினார்.

இதனிடையே, வரவு செலவு திட்டத்திற்கு ஐக்கிய தேசிய கட்சியின் நாடளுமன்ற உறுப்பினர் மொஹான் லால் கிரேரு ஆதரவு வழங்கியதுடன், ஆளும் தரப்பினர் ஆசனத்தில் அமர்ந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Read more...

ஈரானில் இங்கிலாந்து தூதரகத்தில் புகுந்து தாக்குதல்

ஈரானின் அணு திட்டத்துக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில் ஈரான் மீது பொருளாதார தடை விதிப்பதற்கு இங்கிலாந்து ஆதரவு தெரிவித்துள்ளது. இது ஈரான் மக்களிடையே கடும் ஆத்திரத்தையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இதை தொடர்ந்து நேற்று இங்கிலாந்துடன் ஆன தூதரக உறவை முறித்து கொள்ள ஈரான் முடிவு செய்தது.

அது குறித்து மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா நிறைவேற்றப்பட்ட சிறிது நேரத்தில் தலைநகர் தெக்ரானில் உள்ள இங்கிலாந்து தூதரகம் மீது பொதுமக்கள் தாக்குதலில் ஈடுபட்டனர். தூதரகத்துக்குள் புகுந்த கும்பல் ஜன்னல் மற்றும் கதவுகளை அடித்து நொறுக்கி சூறையாடியது.

மேலும் பெட்ரோல் குண்டுகள் மற்றும் கற்கள் வீசப்பட்டன. அங்கு பறந்து கொண்டிருந்த இங்கிலாந்து கொடி கீழே இறக்கப்பட்டு தீ வைத்து கொளுத்தப்பட்டது. அதே நேரத்தில் தெக்ரானில் உள்ள இங்கிலாந்து தூதரின் வீடும் அடித்து நொறுக்கப்பட்டது. “இங்கிலாந்து அழிய வேண்டும், அந்நாட்டு தூதரகத்தை ஈரானில் இருந்து அகற்று” என்பன போன்ற கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இங்கிலாந்து தூதரகத்தில் இருந்த அந்நாட்டு கொடிகள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. இதனால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது. தாக்குதலின் போது தூதரும், ஊழியர்களும் அலுவலகத்திற்குள் பதுங்கி இருந்தனர். இதற்கிடையே தாக்குதல் நடந்த 2 மணி நேரம் கழித்து போலீசார் அங்கு வந்தனர்.

போராட்டக்காரர்களை விரட்டி அடித்து நிலமையை சரி செய்தனர். இச்சம்பவத்துக்கு இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் கடும் கண்டனம் விடுத்துள்ளார். இது கண்மூடித்தனமான மூர்க்கத்தனமான செயலாகும். இங்கிலாந்து தூதரகத்தையும், அதன் அதிகாரிகளையும் பாதுகாக்க ஈரான் அரசு தவறி விட்டது.

இதற்கு அந்த நாட்டு அரசு பதில் கூற வேண்டும். இதற்கான பலனை எதிர்காலத்தில் ஈரான் அனுபவிக்க வேண்டி வரும் என எச்சரித்துள்ளார். ஜெர்மன், பிரான்ஸ், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும் ஈரானுக்கு கண்டனம் தெரிவித்துள்ளன.

Read more...

சபைவிதிகளை மீறி செயற்படும் பா.உ க்கள் தண்டிக்கப்பட வேண்டும். ஜனாதிபதி

பாராளுமன்ற உறுப்பினர்கள் சபையின் ஒழுக்கங்களை மீறி செயற்பட்டு சபை நடவடிக்கைகளுக்குத் தடை ஏற்படுத்தினால் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அவ்வாறு செயற்படா விட்டால் பாராளுமன்ற நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்ல முடியாது என்றும், அவர் தெரிவித்துள்ளார்.

அண்மையில் பாராளுமன்றத்தில் இடம்பெற்ற குழப்பங்கள் தொடர்பாகக் கருத்துத் தெரிவிக்கும் போதே, ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார். ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்திலேயே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

Read more...

வாஷிங் மெஷினியில் போட்டு 3 வயது மகனை கொன்ற தந்தை

பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் அருகேயுள்ள பியாஸ் என்ற நகரை சேர்ந்தவர் கிறிஸ்டோபி சேம்பியனாஸ் (35). இவரது மனைவி சார்லின் (25), இவர்களுக்கு பாஸ்டியன் என்ற 3 வயது மகன் இருந்தான். இவன் அங்குள்ள ஒரு நர்சரி பள்ளியில் படித்து வந்தான். படு சுட்டியான இவன் தன்னுடன் படிக்கும் சக மாணவனின் ஓவியத்தை வீணடித்ததாக கூறப்படுகிறது.

எனவே, பள்ளி நிர்வாகம் கிறிஸ்டோபியை அழைத்து கண்டித்தது. இதனால் ஆத்திரம் அடைந்த அவர் தனது மகன் பாஸ்டியனின் கை, கால்களை கட்டி வாஷிங் மெஷினுக்குள் போட்டார். பின்னர் சுவிட்சை ஆன் செய்து துணி சலவை செய்வது போன்று அவனை துவைத்து எடுத்தார்.

இதனால் அவன் தலை மற்றும் கை, கால்களில் அடிபட்டது. இதை சிறிது நேரம் வேடிக்கை பார்த்து கொண்டிருந்த அவரது மனைவி சார்லின் இதுகுறித்து அக்கம் பக்கத்தினரிடம் தெரிவித்தார். அவர்கள் வந்து கிறிஸ் டோபியை தடுத்து நிறுத்தி சிறுவன் பாஸ்டியனை வாஷிங் மெஷினியில் இருந்து மீட்டனர். படுகாயங்களுடன் இருந்த அவனை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவன் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து கொடூர மனம் கொண்ட கிறிஸ்டோபியை கைது செய்தனர். இச்சம்பவத்தை தடுக்காமல் வேடிக்கை பார்த்த அவரது மனைவி சார்லினும் கைதானார். கிறிஸ்டோபிக்கு பாஸ்டியனை பிடிக்காது. பிறந்ததில் இருந்தே அவன் மீது வெறுப்பை காட்டி வந்த அவர் கொடூரமான முறையில் கொன்று விட்டார் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

Read more...

கடுகதி வீதியில் பஸ் சேவை இரு வாரங்களுக்கு ஒத்திவைப்பு. இதுவரை 36 விபத்துக்கள்!

தெற்கு கடுகதி வீதியில் பயணிகள் போக்குவரத்துக்காக இ.போ.ச பஸ் வண்டிகள் சேவையில் ஈடுபடுத்தப்படுவது மேலும் இரு வாரங்களினால் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக, இ.போ.ச தெரிவிக்கின்றது. இ.போ.ச தலைவர் எம்.சி. பந்துசேன தகவல் தருகையில், இதற்காக சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ள சொகுசு பஸ் சேவைக்கென தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஊழியர்களுக்கு விஷேட பயிற்சிகள் வழங்கப்படுவதனால், இச்சேவை தாமதமடைந்துள்ளது.

இந்தப் பயிற்சி இ.போ.ச தலைமையக பயிற்சிக் கல்லூரியில் தற்போது வழங்கப்படுகின்றது. அதன் பின்னர் கடுகதி வீதியிலுள்ள விஷேட வீதி மற்றும் போக்குவரத்து சட்டங்கள் தொடர்பாக பொலிசாரினால் வழங்கப்படும் மற்றொரு பயிற்சியின் பின்னர் பயணிகள் போக்குவரத்து சேவை ஆரம்பிக்கப்படும்.

கொட்டாவையிலிருந்து காலி வரை இந்த பஸ் வண்டிகளில் கட்டணம் 380 ரூபாவாகும்.

கடுகதி வீதியில் இதுவரை பாரிய இரண்டு விபத்துக்கள் நிகழ்ந்துள்ளன. இதன் முதலாவது விபத்து வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமையினால் ஏற்பட்டுள்ளது. இரண்டாவது விபத்து மதுபோதையுடன் வாகனத்தை செலுத்தியமையினால் ஏற்பட்டுள்ளது. இதுதவிர 36 சிறிய அளவிலான விபத்துக்கள் ஏற்பட்டுள்ளதாகவும், பொலிசார் தெரிவிக்கின்றனர்.

Read more...

தெற்கிலிருந்து மலையகத்திற்கு நகருதாம் ஜேவிபி யின் குமார் அணி. புலனாய்வுப் பிரிவு

ஜே.வீ.பீ இன் குமார் அணி தனது அதிகாரத்தை தெற் பகுதியிலிருந்து மலையகத்திற்கு மாற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக, புலனாய்வுப் பிரிவினர் தகவல்களை வெளியிட்டுள்ளனர். பதுளை, பண்டாரவளை, நுவரெலியா ஆகிய பகுதிகளில் தமது அதிகாரத்தை முன்னெடுப்பதற்கு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும், அப்பகுதிகளில் அரசியல் தொடர்பான வகுப்புக்களை நடத்தி வருவதாகவும், புலனாய்வுத் துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலைமையில் அவ்வணியின் புலப்படா தலைவரான பிரேம் குமார் குணரத்னம் மலையகத்தில் மறைந்திருப்பதாகவும், அத்தகவல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தெற்கை கேந்திரமாகக் கொண்டு அதிகாரத்தை பரவலாக்க அவ்வணி முயற்சித்த போதிலும், அரசாங்கத்தினதும் எதிர்க்கட்சியினதும் அரசியல் அதிகாரம் பலமாக இருப்பதாலும், எதிர்காலத்தில் ஏற்படலாம் என அவர்கள் எதிர்பார்க்கும் அரச விரோத செயற்பாடுகளின் போது மலையக இளைஞர் யுவதிகளையும் இணைத்துக் கொள்வதற்கு, நாட்டின் மத்தியில் நிலைகொள்வது முக்கியத்துவம் வாய்ந்தது எனக் கருதி, குமார் அணி இவ்வாறு மலையகத்தை தேர்ந்தெடுத்துள்ளது.

இதேநேரம் அவ்வணி பல்கலைக்கழக மாணவர்கள் வட மாகாண இளைஞர் யுவதிகளையும் தமது அணியில் இணைத்துக் கொள்வதை இலக்காகக் கொண்டு விஷேட வேலைத் திட்டங்களை முன்னெடுத்துள்ளது. புலிகளின் ஆயுத செயற்பாடுகளுடன் தொடர்புபட்டு யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் அரசாங்கத்தினால் புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகமயப்படுத்தப்பட்ட தமிழ் இளைஞர் யுவதிகளை சந்திப்பதற்கும் இவ்வணி முயற்சித்து வருகின்றது.

Read more...

மைக்கேல் ஜாக்சன் மரணம்: டாக்டருக்கு 4 ஆண்டு ஜெயில் தண்டனை !

மைக்கேல் ஜாக்சன் மரணத்துக்கு காரணமான டாக்டருக்கு 4 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது. உலகப் புகழ் பெற்ற பாப்பாடகர் மைக்கேல் ஜாக் சன் (50) கடந்த 2009-ம் ஆண்டு மர்மமான முறையில் மரணம் அடைந்தார். சாவுக்கு அவரது குடும்ப டாக்டர் கான்ராடு முர்ரே அளவுக்கு அதிகமான சக்தி வாய்ந்த மாத்திரை வழங்கியது தான் காரணம் என குற்றம் சாட்டப்பட்டது.

இதை தொடர்ந்து அவர் மீது லாஸ்ஏஞ்சல்ஸ் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணை 6 வாரங்கள் நடந்தது. இந்த நிலையில் நேற்று நீதிபதி மைக்கேல் பாஸ்டர் தீர்ப்பு கூறினார். அப்போது டாக்டர் முர்ரே அரக்க தனமாகவும், சைத்தான் போன்றும் செயல் பட்டுள்ளார். இவர் ஒருமனி தரின் மரணத்துக்கு காரணமாக இருந்துள்ளார். எனவே அவருக்கு 4 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்படுவதாக அறிவித்தார்.

இதை தொடர்ந்து கடந்த 7-ந் தேதி டாக்டர் கான்ராடு முர்ரே குற்றவாளி. அவர் கொடுத்த அதிகசக்தி வாய்ந்த மாத்திரை தான் மைக்கேல் ஜாக்சனின் உயிரை பறித்தது. எனவே அவர் ஒரு கொலை குற்றவாளி என கோர்ட்டு அறிவித்தது. இதற்கிடையே, மரணம் அடைந்த மைக்கேல் ஜாக் சன் குழந்தைகளுக்கும், அவர் நடத்திய எஸ்டேட் நிறுவனத் துக்கும் டாக்டர், முர்ரே ரூ.500 கோடி நஷ்டஈடு வழங்க வேண்டும் என்றும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதன் மீதான விசார ணைக்கு வருகிற ஜனவரி 23-ந் தேதி தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டது. மேலும் டாக்டர் முர்ரே டாக்டர் தொழில் செய்ய நிரந்தமாக தடை விதிப்பது குறித்தும் அப்போது தெரிய வரும்.

Read more...

வட கடற்பரப்பில் இலங்கை இந்திய போதைப்- பொருள் வியாபாரிகள் கடற்படையினரால் கைது.

இந்திய மற்றும் இலங்கை போதைப்பொருள் வியாபாரிகள் சிலர் வடபகுதி நெடுந்தீவுப் கடற்பிரதேசத்தில் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களிடம் இருந்து சுமார் 1.5 கிலோகிராம் ஹெரோயின் போதைப் பொருளையும் கைப்பற்றியதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

கைதானவர்களில் ஐந்து பேர் இந்திய மீனவர்கள், மூவர் இலங்கை மீனவர்கள் என்றும் தெரியவந்துள்ளது.

சந்தேகநபர்களான இந்திய நாட்டவர்கள் ஐவரும் ட்ரோலர் படகுமூலம் நேற்று அதிகாலை இந்தியாவிலிருந்து ஹெரோய்ன் போதைப்பொருளை இலங்கை கடல் எல்லைக்குள் கொண்டு வந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.அதன் பின்னர் இலங்கை சந்தேகநபர்களிடம் போதைப்பொருளை ஒப்படைக்க முயற்சித்தபோது கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டிருக்கலாம் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.

சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக காங்கேசன்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.இதேவேளை, யாழ்ப்பாணம் நெடுந்தீவு கடற்பரப்பில் மீன்பிடிப் படகில் அத்துமீறி நுழைந்து ஹெரோயின் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த 5 இந்தியர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் கப்டன் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்டவர்கள் மீனவர்களா என்பது தனக்குத் தெரியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கைது செய்யப்பட்டவர்கள் மேலதிக விசாரணைகளுக்கென காங்கேசன்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் ஏனைய நடவடிக்கைகளை பொலிஸாரே மேற்கொள்வர் எனவும் அவர் கூறியுள்ளார்.

ராமேஸ்வரம் மீனவர்கள் தற்போது வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருவதாக தான் அறிந்ததாக கடற்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

எனினும் சட்ட நடவடிக்கையின் பிரகாரமே அனைத்துச் இடம்பெறும் என அவர் உறுதியாகக் கூறினார்.

இதேவேளை, நேற்று மாலை ராமேசுவரத்தில் அனைத்து மீனவர் சங்கங்களின் கூட்டம் நடந்தது. இக் கூட்டத்தில் இலங்கை கடற்படையினர் பிடித்து சென்ற படகையும், 5 மீனவர்களையும் உடனடி யாக விடுவித்து ராமேசுவரத்தக்கு அனுப்பி வைக்க வேண்டும். இல்லை என்றால் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்ய முடிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 5 மீனவர்களும் விடுதலை செய்யப்படவில்லை. இதை தொடர்ந்து ராமேசுவரத்தில் இன்று முதல் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை தொடங்கினர்.

இன்று 5 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. 700 விசைப் படகுகள் கரையோரம் நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Read more...

மட்டக்களப்பு இராமகிருஸ்ண மிசன் ஏற்பாட்டில் கண் சிகிச்சை கிளினிக்

மட்டக்களப்பு இராமகிருஸ்ண மிசன் ஏற்பாட்டில் கண் சிகிச்சை கிளினிக் ஒன்று கல்லடியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதற்கு அவுஸ்திரேலியாவிலுள்ள றோயல் வைத்தியசாலையில் கண் சத்திரசிகிச்சை நிபுணராக பணியாற்றும் டாக்டர் ரி.மகேந்திரரராஜா கண் சோதனைசெய்யும் மின்னொளிவிளக்கை அன்பளிப்புச் செய்திருந்தார்.

சுவாமி ஞானமயானந்தா ஜீ தலைமையில் நடைபெற்ற திறப்புவிழாவில் வைத்திய நிபுணர் டாக்டர் ஜி.விவேகானந்தராஜா திறந்துவைப்பதையும் தலைமைச் சுவாமி இராஜேஸ்வரானந்தா ஜீ அருகிலிருப்பதையும் கண் பரிசோதனை செய்வதையும் படங்களில் காணலாம்.

படங்கள்- காரைதீவு நிருபர் வி.ரி.சகாதேவராஜா

Read more...

ஐ.தே.க பாராளுமன்ற உறுப்பினர் மொஹான் லால் கிரேரு அரசுக்கு ஆதரவு

அரசாங்கம் சமர்பித்துள்ள 2012ம் ஆண்டுக்கான வரவு செலவும் திட்டத்திற்கு தான் ஆதரவு தெரிவிக்கவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மொஹான் லால் கிரேரு இன்று பாராளுமன்றில் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றில் உரையாற்றிய அவர் இலங்கையின் கல்வி, மற்றும் மாணவர்கள் வளர்ச்சி கருதியே தான் இந்த முடிவை எடுத்ததாக குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, மொஹான் லால் கிரேரு அரசு பக்கம் கட்சி தாவுவார் என்று தெரிவிக்கப்படுகிறது.

Read more...

காலஞ்சென்ற முன்னாள் அமைச்சருக்கு பெருந்தெருளான மக்கள், பிரமுகர்கள் அஞ்சலி.

முன்னாள் அமைச்சர் எம்.ஏ. அப்துல் மஜீட் நேற்று செவ்வாய்க்கிழமை தனது 85ஆவது வயதில் சம்மாந்துறை அன்வர் இஸ்மாயீல் ஞாபகாத்த ஆதார வைத்தியசாலையில் இரவு 9.25 மணிக்கு இறையடி சேர்ந்தார்.இவர் கடந்த 24ஆம் திகதி சுகயீனமுற்று சம்மாந்துறை அன்வர் இஸ்மாயீல் ஞாபகாத்த ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அவசர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் மரணமடைந்துள்ளார்.

கிழக்கிலங்கையில் மதிப்புக்குரிய கல்விமானாக திகழ்ந்த முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாரினால் ஏடு துவக்கப்பட்ட மாணவராக தனது ஆரம்பக் கல்வியை 1933ஆம் ஆண்டு சம்மாந்துறை அரசினர் ஆண்கள் பாடசாலையில் கற்றார். பின்னர் 1934ஆம் ஆண்டு இடைநிலைக் கல்வியை தொடர்வதற்காக மட்டக்களப்பு சிவானந்தா கல்லூரியிலும், உயர்தரக் கல்வியினை பெற்றுக் கொள்ள 1943 யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கு சென்ற இவர், 1946ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைக்கு தோற்றி சிறந்த பெறுபேறுகளை பெற்று 1947ஆம் ஆண்டு கொழும்பு பல்கலைகழகத்துக்கு கலைத்துறைக்கு தெரிவு செய்யப்பட்டு 1950ஆம் ஆண்டு பொருளாதாரப் பட்டதாரியாக பட்டம் பெற்றார்.

இவர் கிழக்கிலங்கையின் முதல் முஸ்லிம் பட்டதாரி என்ற முத்திரையினையும் பதித்துள்ளார்.

பின்னர் தான் கற்ற மட்டக்களப்பு சிவானந்த கல்லூரியில் 1951 தொடக்கம் 1952 இறுதிவரை ஆசிரியனாக பணியாற்றிய இவர், 1953ம் ஆண்டு தொடக்கம் 1954ஆம் ஆண்டு வரை மட்டக்களப்பு மாவட்டத்தின் தென் பிராந்திய சமூக சேவை உத்தியோகத்தராக கடமையாற்றியுள்ளார்.

.அதன் பின்னர் தான் வகித்து வந்த சமூகசேவை உத்தியோகத்தர் பதவியை இராஜினாமா செய்துவிட்டு 1954ஆம் ஆண்டு நடை பெற்ற பட்டின சபை தேர்தலில் தமிழ் மக்களை பெரும்பான்மையாக கொண்ட முதலாம் வட்டாரத்தில் போட்டியின்றி தெரிவு செய்யப்பட்ட அப்துல் மஜீட் அவர்கள் 6 வருடங்களாக பட்டின சபை தலைவராக பணியாற்றினார்.

1960ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் பொத்துவில் தொகுதிக்கு சுயற்சை உறுப்பினராக போட்டியிட்டு 7,736 மேலதிக வாக்குகளால் வெற்றிபெற்றார். பின்னர் அதே 1960ஆம் ஆண்டு ஜூலையில் நடைபெற்ற பொதுத் தேர்தலிலும் பொத்துவில் தொகுதிக்கு சுயற்சைக் குழுவில் போட்டியிட்டு 10,654 மேலதிக வாக்குகளால் வெற்றி பெற்று பாராளுமன்றம் சென்றார்.

அதனை தொடர்ந்து 1965, 1970, 1977, 1989ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற பொதுத் தேர்தல்களில் ஐக்கிய தேசியக் கட்சியூடாக போட்டியிட்டு வெற்றிபெற்று பாராளுமன்ற உறுப்பினராக, பிரதியமைச்சராக, அமைச்சராக இருந்து 38 ஆண்டுகள் இப்பிராந்தியத்திலுள்ள தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களுக்காக அளப்பரிய சேவைகளை செய்துள்ள்ளார்.

மர்ஹும் அப்துல் மஜீட் 1977ஆம் ஆண்டு தொடக்கம் 1978ஆம் ஆண்டு வரை காணி, விவசாயப் பிரதியமைச்சராகவும், 1978 தொடக்கம் 1980 வரை மின்சக்தி எரிபொருள் நெடுஞ்சாலைகள் பிரதியமைச்சராகவும், 1980 தொடக்கம் 1981 வரை எரிபொருள் மின்சக்தி பிரதி அமைச்சராகவும், 1981 தொடக்கம் 1983ஆம் ஆண்டுவரை மட்டக்களப்பு மாவட்ட அமைச்சராகவும், 1983 தொடக்கம்1989ஆம் ஆண்டுவரை தபால், தந்தி, தொலைத் தொடர்புகள் பிரதி அமைச்சராகவும், 1989 தொடக்கம் 1992ஆம் ஆண்டு வரை நெசவுக் கைத்தொழில் அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.

இதேவேளை, முன்னாள் தபால்தந்தி அமைச்சர் எம்.எ.அப்துல் மஜீட்டின் ஜனாசா நேற்று செவ்வாய்க்கிழமை சம்மாந்துறை நகரசபை அப்துல் மஜீட் மண்டபத்தில் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்துது.

ஜனாசாவிற்கு அருகில் அவராது சகோதரர் அமீர்அலி அமர்ந்திருப்பதையும் மக்கள் அஞ்சலி செலுத்துவதையும், முன்னாள் அமைச்சர் எ.ஆர்.எம்.மன்சூர், கிழக்கு மாகான சபை அமைச்சர் உதுமாலெவ்வை உறுப்பினர் மஜீட் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தியபின் அமர்ந்திருப்பதையும் படங்களில் காணலாம்.

படங்கள்- காரைதீவு நிருபர் வி.ரி.சகாதேவராஜாகடைகள். பாடசாலைகள் மூடப்பட்டு மரியாதை

இதேவேளை, திங்களன்று இரவு காலமான சம்மாந்துறைத் தொகுதியின் முடிசூடாமன்னன் முன்னாள் தபால்தந்தி அமைச்சர் எம்.எ.அப்துல் மஜீட்டிற்கு மரியாதை செலுத்துமுகமாக சம்மாந்துறையிலுள்ள கடைகள். பாடசாலைகள் உள்ளிட்ட அனைத்தும் நேற்று பூட்டப்பட்டிருந்தன. பாதுகாப்புப் படையினர் பொலிசார் ஒழுங்குகளைக் கவனித்தனர். அவற்றை படங்களில் காணலாம்.

Read more...

2 உள்ளுராட்சி மன்ற வேட்பாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

நாட்டிலுள்ள 23 உள்ளுராட்சி சபைகளுக்கு கடந்த ஒக்டோபர் மாதம் 8 ஆம் திகதி நடைபெற்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் சொத்து விபரங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டுமென தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய உத்தரவு பிறப்பித்திருந்தார்.

ஆணையாளரிடம் சொத்து விபரங்களை வழங்குவதற்கு ஒதுக்கப்பட்டிருந்த கால அவகாசம் கடந்த 25 ஆம் திகதியுடன் நிறைவடைந்தது. சொத்து விபரங்களை வழங்குவது தொடர்பாக சகல வேட்பாளர்கள், குழுத்தலைவர்கள், அதிகாரம் பெற்ற பிரதிநிதிகள் மற்றும் கட்சி செயலாளர்களுக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டதுடன் இது தொடர்பாக ஊடகங்கள் மூலம் பரந்தளவிலான பிரசாரங்களும் வழங்கப்பட்டதாக தேர்தல்கள் செயலகம் தெரிவிக்கின்றது.

எனினும், குறித்த தினத்திற்கு முன்னர் சொத்து விபரங்களை வழங்க தவறிய 2 வேட்பாளர்களுக்கு எதிராக சடட நடவடிக்கை எடுப்பதற்கு தேர்தல்கள் செயலகம் தீர்மானித்துள்ளது.

கொழும்பு மாநகர சபைக்கு ஐக்கிய தேசிய கட்சியில் தெரிவு செய்யப்பட்ட நதில் துஷாந்த மாலகொட மற்றும் கல்முனை மாநகர சபைக்கு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் தெரிவு செய்யப்பட்ட அமீர் அப்துல் ரஹ்மான் ஆகியோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

Read more...

சரத் பொன்சேகாவை விடுவிக்ககோரி இலங்கையை மிரட்டுகின்றது அமெரிக்கா!

சிறை வாசம் அனுபவித்து வரும் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பென்சேக்காவை விடுதலை செய்யப்படாவிட்டால் எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனிவாவில் நடைபெறும் ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இலங்கைக்கு எதிராக யுத்த குற்றச்சாட்டு சுமத்தப்படுமென ஐக்கிய அமெரிக்க தூதரக பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவிற்கு விடுக்கப்பட்ட அழைப்பின் பேரில் அமெரிக்க தூதுவர் பெட்ரீஷியா முட்டேனிசை சந்திக்க சென்ற போதே அமெரிக்க தூதரக அதிகாரி இதனை தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பில் அமெரிக்க தூதுவர் கலந்து கொள்ளவில்லை. அந்த சந்தர்ப்பத்தில் தூதரகத்தில் இருந்த உயர் அமெரிக்க ராஜதந்திரி இதனை தெரிவித்துள்ளார்.

Read more...

துபாய் வேலைவாய்ப்பு: மூன்றுமாத குறுகியகால விசா அறிமுகம்!

வளைகுடா நாடுகளில் வெளிநாட்டு பணியாளர்களைக் கவரும் பிரதேசங்களுள் ஐக்கிய அரபு அமீரகத்திலுள்ள துபாய் மாகாணம் மிக முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. வேலைவாய்ப்புக்காக இங்கு வருபவர்கள் பல்வேறு சிரமங்களைச் சந்திக்க வேண்டியுள்ளது. சுற்றுலா விசாவில் வந்தவர்கள் வேலை கிடைத்ததும் சட்டவிரோதமாக பணிசெய்வதால் அந்நாட்டு அரசு பல்வேறு சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

சுற்றுலா விசாவில் வந்துள்ளவர்களைப் பணியில் அமர்த்தும் நிறுவனங்களுக்கு 50,000 திர்ஹம்வரை அபராதம் விதிக்கப்படுவதோடு, அவ்வாறு பணியாற்றும் ஊழியர்களைத் திரும்ப நாடுகடத்தவும் செய்கின்றது. எனினும், துபாய் மோகத்தால் இத்தகைய சட்டவிரோத வேலைவாய்ப்புகள் வெவ்வேறு வகைகளில் நடந்து வருவதை அந்நாட்டு அரசினால் கட்டுப்படுத்த முடியவில்லை.

இந்நிலையில் கடந்த 3 வருடங்களுக்குமுன்பு குடிபுகல் நடைமுறைகளை மாற்றியமைத்து பல கட்டுப்பாடுகளை விதித்தது. அவ்வகையில் சுற்றுலாப் பயணியாக வந்தவர்கள் சம்பளத்திற்கோ அல்லது பயிற்சி பெறும்நோக்கிலோ வேலைசெய்வதைக் கட்டுப்படுத்தியது. எனினும், அங்குள்ள சில நிறுவனங்கள் உடனடியாக நிரந்தர ஊழியர்களை நியமிப்பதைவிட சுற்றுலா விசா காலம் முடிவதற்குள் வேலைவாங்கிக்கொண்டு, அவகாசம் முடியும் தருவாயில் குறைந்த ஊதியத்திற்கு பணியாற்ற ஒப்புக்கொள்ளச் செய்து பிறகு வேலைக்கான விசாவுக்கான நடைமுறையை பின்பற்றுகின்றன.

இதைத் தவிர்க்கும் வகையில் ஐக்கிய அரபு அமீரகத்திலுள்ள துபாய், மூன்று மாதங்கள் செல்லுபடியாகும் குறுகியகால வேலைவாய்ப்பு விசாவை அறிமுகப்படுத்தியுள்ளதாக அந்நாட்டு பணியாளர் நலத்துறை அமைச்சக உயரதிகாரி குமைத் பின் டீமாஸ் தெரிவித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. அதன்படி, குறுகிய காலத்திற்கு விசா தேவைப்படும் நிறுவனங்கள் 3 மாதங்கள் செல்லுபடியாகத்தக்க குறுகிய கால "குறிக்கோள் விசா" (Mission Visa) கோரி விண்ணப்பிக்கலாம்.

இது, ஏற்கனவே அந்நாட்டிலுள்ள தற்காலிகப் பணியாளர்களுக்கும் ,புதிதாக விசா வேண்டுபவர்களுக்கும் பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் குறுகிய கால விசா வழங்கப்பட்ட 60 நாட்களுக்குள் அந்நாட்டிற்குள் வந்து செல்லவேண்டும். அதிகபட்சம் 90 நாட்கள் இந்த விசா அனுமதியுடன் வேலை செய்யலாம். புதுப்பிக்க வேண்டும் எனில் நாட்டைவிட்டு வெளியேறிய 90 நாட்கள் கழித்தே மீண்டும் புதுப்பிக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்தக் குறுகியகால விசா மூலம் வருகை தந்தவர்களுக்கு நிரந்தர வேலைகிடைக்கும் பட்சத்தில் புதிய விசாவுக்கு விண்ணப்பிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Read more...

அமெரிக்கா, ஐ.நா. தமிழ் தேசியக் கூட்டமைப்பை அலட்சியம் செய்தன. By Wije Dias

அண்மையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் மேற்கொண்டிருந்த அ மெ ரிக்க விஜயம் தொடர்பாக சோசலிச சமத்துவக் கட்சியின் தலைவரும் எழுத்தாளருமான விஜய டயஸ் கடந்த 11ம் திகதி சிங்கள நாளேடு ஒன்றுக்கு எழுத்திய ஆக்கத்தின் தமிழாக்கம் கீழே தரப்பட்டுள்ளது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகள் கடந்த மாதக் கடைசியில் இலங்கையில் இருந்து அமெரிக்காவுக்கு மேற்கொண்ட பயணம், தமிழ் மக்களின் உரிமைகளை அங்கீகரிப்பதில் ஒரு தீர்க்கமான முன்னகர்வாக தமிழ் கட்சிகளாலும் ஊடகங்களாலும் பாராட்டப்பட்டன. ஆயினும், அமெரிக்க மற்றும் ஐ.நா.வின் சிரேஷ்ட அலுவலர்களின்அலட்சியங்களுடன் இந்தப் பயணம் அவமானமான முறையில் முடிவுக்கு வந்தமை, சலுகைகளை பெறுவதற்காக இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்க பெரும் வல்லரசுகளுக்கு தமிழ் கூட்டமைப்பு விடுக்கும் வேண்டுகோள்களின் அற்பத்தனத்தை மீண்டும் காட்சிப்படுத்தியுள்ளது.

அக்டோபர் 23 அன்று, ஒரு போட்டி கூட்டணியான தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கருத்துக்களை தமிழ்நெட் இணையம் வெளியிட்டிருந்தது. அது தமிழ் கூட்டமைப்பின் அமெரிக்காவுக்கான பயணத்தை உத்வேகத்துடன் பாராட்டியிருந்தது. இந்தப் பயணம் “முதலில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகும்”, இது “பல தசாப்தங்களாக பெரும்பான்மை ஜனநாயகத்துக்குள் துன்பப்பட்டுக்கொண்டிருக்கும் தமிழ் மக்களின் அரசியல் அந்தஸ்த்தை மேம்படுத்தும் சாத்தியத்தைக் கொண்டுள்ளது” என அந்த முன்னணி தெரிவித்துள்ளது.

தமிழ் கூட்டமைப்பு பிரதிநிதிகளின் குறிக்கோள் சாதாரண தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகளுக்காக அமெரிக்க மற்றும் ஐ.நா. ஆதரவை வெற்றிகொள்வதல்ல. மாறாக, அது இலங்கையில் தமிழ் முதலாளித்துவத் தட்டுக்கள் தமது அரசியல் அங்கீகாரத்தை உயர்த்திக்கொள்வதற்கு உதவி கோரி மண்டியிட்டு விடுக்கும் வேண்டுகோள்களின் தொடர்ச்சியே ஆகும். பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளின் பாராளுமன்ற ஊதுகுழலாக செயற்பட்ட தமிழ் கூட்டமைப்பு, 2009 மே மாதம் புலிகளின் இராணுவத் தோல்வியை அடுத்து கொழும்பு அரசியல் ஸ்தாபனத்துடன் தன்னை ஒருங்கிணைத்துக்கொள்ள விரக்தியுடன் முயற்சிக்கின்றது.

இந்தப் பயணம் எதிர்பார்த்தவாறு வெற்றியளிக்கவில்லை. தமிழ் கூட்டமைப்பு, இராஜாங்கச் செயலாளர் ஹிலாரி கிளின்டனையோ அல்லது தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான இராஜாங்கத் துணைச் செயலாளர் ரொபர் ஓ. பிளைக்கையோ சந்திக்கவில்லை. செப்டெம்பர் மாதம் பிளேக் இலங்கை வந்த போது இராஜாங்கத் திணைக்களத்துக்கு வருமாறு தமிழ் கூட்டமைப்புக்கு ஒரு மேம்போக்கான அழைப்பை விடுத்துச் சென்றார். ஆனால், செப்டெம்பரில் இருந்து அரசியல் விவகாரங்களுக்கான துணை செயலாளராக செயற்பட்ட, ஒப்பீட்டளவில் ஒரு கணிஷ்ட அலுவலரான வென்டி ஷேர்மன் கூட்டமைப்பு பிரதிநிதிகளுடன் பேசும் பொறுப்பை ஏற்றிருந்தார்.

இராஜாங்கத் திணைக்களத்தில் ஏற்பட்ட தோல்வியை அடுத்து, தமிழ் கூட்டமைப்பு பிரதிநிதிகள் ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ-மூனைச் சந்திக்க முயற்சித்த போதிலும், இன்னுமொரு அலட்சியத்தை சந்தித்தனர். தீர்மானிக்கப்பட்ட சந்திப்பு எந்தவொரு விளக்கமும் இன்றி கடைசி நேரத்தில் இரத்துச் செய்யப்பட்டதோடு, பானின் துணைச் செயலாளர்களில் ஒருவரான லைன் பாஸ்கோ தமிழ் கூட்டமைப்பு பிரதிநிதிகளுடன் பேசுவதற்கு அனுப்பப்பட்டார்.

தமிழ் கூட்டமைப்பு, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் அல்லது ஐ.நா.வும் சரி இதுபற்றி எந்தவொரு உத்தியோகபூர்வ அறிக்கையையும் விடுக்கவில்லை. எவ்வாறெனினும், கடந்த வெள்ளிக் கிழமை இராஜாங்கத் திணைக்களத்தின் பேச்சாளர் விக்டோரியா நுலான்ட் ஒரு பகிரங்கப்படுத்தும் குறிப்புக்களை வெளியிட்டார். அவர் ஒரு வழமையான நிருபர்கள் மாநாட்டின் போது, அமெரிக்கா “இந்த மாதக் கடைசியில் வரவுள்ள கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் உயர்ந்த எதிர்பார்ப்புக்களை கொண்டுள்ளது –அந்த அறிக்கை ஆகவும் உயர்ந்த தரத்திலானதாக இருப்பதோடு மட்டுமன்றி, இலங்கை அரசாங்கம் அதை அமுல்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கும் என்றும் எதிர்பார்க்கின்றது,” என்பதை வலியுறுத்துவதன் பேரில், வென்டி ஷேர்மன் தமிழ் கூட்டமைப்பு பிரதிநிகளை சந்தித்ததாக தெரிவித்தார்.

வாஷிங்டனுக்கு எந்தவொரு, பெயரளவிலான உதவியைக் கூட வழங்கும் எண்ணம் கொஞ்சமும் கிடையாது என்பதை ஷேர்மனின் கருத்துக்கள் தமிழ் கூட்டமைப்பு பிரதிநிதிகளுக்கு உடனடியாக தெளிவுபடுத்தியிருக்கும். கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவானது, புலிகளுக்கு எதிரான அதன் யுத்தத்தின் போது இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட விடயங்களை மூடி மறைப்பதற்காக இலங்கை அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட ஒரு அர்த்தமற்ற முயற்சியாகும். அத்தகைய ஒரு கேலிக்கூத்தை நியாயப்பூர்வமானதாக அமெரிக்கா ஏற்றுக்கொள்கின்றது என்ற உண்மை, இலங்கை யுத்தக் குற்றங்கள் சம்பந்தமாக ஒரு சர்வதேச விசாரணைக்கு அழைப்பு விடுக்கும் அதன் முன்னைய நிலைப்பாட்டில் இருந்து அமெரிக்கா தூர விலகியிருப்பதை சமிக்ஞை செய்கின்றது.

இலங்கை இராணுவத்தின் நடவடிக்கைகள் பற்றி வாஷிங்டனும் அதன் பங்காளிகளும் மட்டுப்படுத்தப்பட்ட விமர்சனங்களை எழுப்பியது, தமிழ் மக்கள் மீதான அக்கறையினால் அல்ல. மாறாக அது இலங்கை ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ மற்றும் அவரது அரசாங்கத்தின் மீதும அழுத்தம் கொடுப்பதற்கான ஒரு பயனுள்ள வழிமுறையாக காணப்பட்டது. யுத்தத்தின் போது இராஜபக்ஷ அரசாங்கத்துக்கு குறிப்பிடத்தக்களவு நிதி மற்றும் இராணுவ ஆதரவை வழங்கிய சீனாவின் செல்வாக்கு வளர்ச்சியடைவதையிட்டு, யுத்தத்தின் கடைசி மாதங்களில் அமெரிக்கா கவலை கொண்டிருந்தது. பெய்ஜிங்கை கூடுதலாக நெருங்குவதையிட்டு இராஜபக்ஷவை எச்சரிப்பதற்காவே யுத்தக் குற்ற விசாரணை என்று கூறப்பட்ட அச்சுறுத்தலை ஒபாமா நிர்வாகம் பயன்படுத்தியது.

தமிழ் கூட்டமைப்பின் இராஜதந்திர பயணத்தின் தோல்வி, கொழும்பு ஊடகத்தில் வளர்ச்சி கண்ட அற்ப அகமகிழ்வுக்கு வழிவகுத்தது. பயணத்திற்கு முன்னதாக, இலங்கை அரசாங்கமும் ஊடகங்களும் தமிழ் கூட்டமைப்புடனான எந்தவொரு உயர்மட்ட சந்திப்புக்கும் எதிராக அமெரிக்காவையும் ஐ.நா.வையும் எச்சரித்தன. அக்டோபர் 30 அன்று சண்டே டைம்ஸ் வெளியிட்ட ஆசிரியர் குறிப்பு, “வாஷிங்டனில் தமிழ் கூட்டமைப்புடனான பேச்சுக்களில் அமெரிக்க அரசாங்கம் தலையீடு செய்வதானது, இலங்கையின் உள் விவகாரங்களில் தலையிடுவதற்கு மிகவும் சம்மானதாகும்,” என கசப்புடன் தெரிவித்தது. பயணத்தின் ஆரம்பத்தில், தமிழ் கூட்டமைப்பு விலை கொடுக்க நேரும் என எச்சரித்த வெளி விவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ், “தமிழ் கூட்டமைப்பு ஏனைய அரசாங்கங்களோடு போய் பேச்சுவார்த்தை நடத்துவது, இந்த நாட்டில் பொது மக்களின் கருத்துக்கு சேதத்தை ஏற்படுத்தப் போகின்றது,” எனத் தெரிவித்தார்.

“தமிழ் கூட்டமைப்பின் மேற்கத்தைய பயணமும் தமிழர்களின் தலைவிதியும்” என்று தலைப்பிட்டிருந்த அக்டோபர் 7ம் திகதி டெயிலி மிரர் பத்திரிகையின் ஆசிரியர் குறிப்பு, தமிழ் கூட்டமைப்பை ஏளனஞ்செய்தது. “இந்தியாவின் ஆதரவுடன் தமிழர்களின் பிரச்சினைக்கு சாத்தியமான தீர்வை எதிர்பார்க்க வேண்டும்” என்று அமெரிக்கா யோசனை தெரிவித்ததோடு, “இலங்கை ஆயுதப் படைகளுக்கு எதிரான யுத்தக் குற்றச்சாட்டுக்களையும் புதைத்துவிடுமாறு” அவர்களுக்கு அறிவுறுத்தி தமிழ் பிரதிநிதிகளை ஏய்த்துவிட்டதாக அது கூறிக்கொண்டது.

அது இந்தியாவின் பக்கம் திரும்பினால், தமிழ் கூட்டமைப்பு இதே போன்ற அலட்சியமான வரவேற்பையே சந்திக்கும். கூட்டமைப்பின் வாஷிங்டனுக்கான பயணம், ஆஸ்திரேலியாவில் பேர்த் நகரில் பொதுநலவாய நாடுகளின் தலைவர்களின் கூட்டம் நடந்த சமகாலத்திலேயே நடந்தது. அந்தக் கூட்டத்தில், மனித உரிமை பிரச்சினையில் இலங்கையின் செயற்பாடுகள் குறித்த விமர்சனங்களை தணிப்பதற்காக இந்தியா முன்னணி பாத்திரம் ஆற்றியது. அடுத்த பொதுநலவாய கூட்டம் 2013ல் கொழும்பில் ஜனாதிபதி இராஜபக்ஷவின் தலைமையில் நடத்தப்படும் என ஏகமனதாக உடன்பட்ட அந்தக் கூட்டம், நிகழ்விடம் மாற்றப்படுவது பற்றிய யோசனைகளுக்கு இடமளிக்கவில்லை. கொழும்பு இந்த முடிவை அரசாங்கத்துக்கான ஒரு இராஜதந்திர துரும்புச் சீட்டாக தூக்கிப் பிடித்தது.

தமிழ் கூட்டமைப்பை அலட்சியம் செய்வதற்கு அமெரிக்கா எடுத்த முடிவு, இலங்கை இராணுவத்தின் மீதான யுத்தக் குற்றச்சாட்டுக்கள் பற்றிய விவகாரத்தை அது புதைத்துவிட்டிருப்பதை சுட்டிக்காட்டுகிறது. 2009 டிசம்பரில், “அமெரிக்கா இலங்கை கைநழுவிச் செல்ல இடமளிக்கக் கூடாது” என முடிவெடுத்த அமெரிக்க செனட்டின் வெளியுறவு குழுவின் அறிக்கை முன்வைக்கப்பட்ட போதே முதலில் இந்த முடிவின் அறிகுறி தென்பட்டது. இலங்கையில் புதிய அரசியல் மற்றும் பொருளாதார யதார்த்தங்கள் மற்றும் அமெரிக்க பூகோள-மூலோபாய நலன்களை சரியாக மதிப்பிடக் கூடிய, இலங்கை மீதான ஒரு பரந்த மற்றும் மிகவும் வலுவான அணுகுமுறையை” அது சிபாரிசு செய்தது. அது “குறுகியகால மனிதாபிமான அக்கறையின் மீது மெதுவாக நகர்வதல்லை” அது ஒரு “பல்வேறு அளவிலான அணுகுமுறையை” கொண்டிருக்க வேண்டும்.

இவற்றில் எதுவும் தமிழ் கூட்டமைப்பின் திசையமைவை மாற்றவில்லை. தமிழ் கூட்டமைப்பு “அரசியல் தீர்வுக்காக” இராஜபக்ஷ அரசாங்கத்திடம் மன்றாடுகின்ற நிலையில், அது சரிவுகள், அலட்சியங்கள் மற்றும் வாக்குறுதி மீறல்கள் இருந்த போதிலும், “சர்வதேச சமூகத்தின்” ஆதரவை தொடர்ந்தும் எதிர்பார்க்கின்றது. அத்தகைய கொடுக்கல் வாங்கல், அவர்கள் தொழிலாள வர்க்கத்தை கூட்டாக சுரண்டுவதன் பாகமாக, தமது சிங்கள சமதரப்பினருடன் இணைந்த வகையில் தமிழர்களை பொலிஸ் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதில் தீவின் தமிழ் முதலாதளித்துவத் தட்டுக்கு ஒரு மட்டுப்படுத்தப்பட்ட பாத்திரத்தை வழங்கும்

தமிழ் கூட்டமைப்பின் கோழைத்தனமான அடிமை நிலை, தமிழ் முதலாளித்துவத்தின் அரசியல் பிரதிநிதி என்ற அதன் பாத்திரத்தில் இருந்தே நேரடியாக ஊற்றெடுக்கின்றது. புலிகளைப் போலவே, கூட்டமைப்பும், உழைக்கும் மக்களின் ஜனநாயக உரிமைகளுக்காக உறுதியான போராட்டத்தை முன்னெக்கும் இயலுமை கொண்ட ஒரே சமூக சக்தியான தொழிலாள வர்க்கத்துக்கு எந்தவொரு அழைப்பும் விடுக்க இயல்பிலேயே இலாயக்கற்றது. எந்தவொரு வெகுஜன இயக்கத்தாலும் தமது சிறப்புரிமை நிலைமைகளுக்கு அச்சுறுத்தல் வந்துவிடுமோ என திகிலடைந்துள்ள தமிழ் கூட்டமைப்பு, ஒரு சிறய பங்கு அரசியல் அதிகாரத்துக்காக கொழும்பு அரசாங்கத்துக்கும் பெரும் வல்லரசுகளுக்கும் தொடர்ந்தும் பயனற்ற வேண்டுகோள்களை விடுத்துக்கொண்டிருக்கின்றது.

அவசியமான அரசியல் படிப்பினைகளைப் பெற்றுக்கொள்ளுமாறு தமிழ் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு சோசலிச சமத்துவக் கட்சி அழைப்பு விடுக்கின்றது. தீவை நாசமாக்கிய உள்நாட்டு யுத்தத்துக்கு சிங்களப் பேரினவாதத்தையும் தமிழர் விரோத பாரபட்சங்களையும் தூண்டிவிட்ட ஆட்சியில் இருந்த கொழும்பு அரசாங்கங்களே பொறுப்பு. ஆயினும், தொழிலாள வர்க்கத்தை பிளவு படுத்தி வைத்ததாலும் முதலாளித்துவ ஆட்சிக்கு எதிரான சவாலை தடுத்ததாலும், புலிகளதும் தமிழ் கூட்டமைப்பினதும் இனவாத அரசியலும் இந்த அழிவுக்கு நேரடியாக பங்களிப்புச் செய்துள்ளது.

தொழிலாளர்களதும் விவசாயிகளதும் அரசாங்கமொன்றுக்கான போராட்டத்தில் தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்தி அணிதிரட்டவும் அவர்களுக்குப் பின்னால் ஒடுக்கப்பட்ட கிராமப்புற வெகுஜனங்களை அணிதிரட்டுவதற்குமான போராட்டத்தின் பாகமாக மட்டுமே அடிப்படை ஜனநாயக உரிமைகளை பாதுகாக்க முடியும். ஸ்ரீலங்கா-ஈழம் சோசலிச குடியரசுக்காக சோ.ச.க. விடுக்கும் அழைப்பின் அடிப்படை இதுவே. இது தெற்காசியாவில் ஐக்கிய சோசலிச குடியரசுகளுக்கான பரந்த போராட்டத்தின் பிரிக்கமுடியாத பாகமாகும்.

Read more...

இலங்கையை ஈரான் கைவிடுகின்றதா? கடன்தொகை ரத்தாகும் சாத்தியம்!

சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை நவீனமயப்படுத்த ஈரான் வழங்க இருந்த 1.5 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் உதவி கிடைக்காமல் போகும் நிலை உருவாகியுள்ளது. இதனால் மாற்று நடவடிக்கைகளுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக பெற்றோலிய வள அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் தெரிவித்துள்ளார்.

எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தை நவீனமயப்படுத்துவதற்கான ஆய்வறிக்கை ஈரானுக்கு அனுப்பிவைக்கப்பட்ட போதிலும், மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள கொந்தழிப்பு நிலை காரணமாக இது குறித்து சாதகமான பதில் கிடைக்கவில்லையென்றும் அவர் தெரிவித்துள்ளார்.

எரி;பொருள் சுத்திகரிப்பு நிலையத்தை நவீனமயப்படுத்துவதற்கு தேவையான அளவு காணிகள் சுவீகரிக்கப்பட்டுள்ளது. இதற்காக செலவாகும் அடிப்படைச் செலவான 1.5 பில்லியன் டொலர்களை பெற்றுக் கொள்வதற்கு மாற்று நடவடிக்கைகளுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும், அவர் தெரிவித்தார்.

Read more...

இந்திய பெண்ணை ஏமாற்றி திருமணம் புரிந்த இலங்கை பேராசிரிருக்கு சிறைத்தண்டனை!


தன்னை இந்தியன் என்றுகூறி ஏமாற்றித் திருமணம் புரிந்த இலங்கையைச் சேர்ந்தவருக்கு அவருடைய மனைவியே வழக்கு தொடர்ந்து தண்டனை வாங்கிக் கொடுத்துள்ளார். இலங்கையில் உள்ள கிளிநொச்சி பகுதியைச் சேர்ந்தவர் ஜேக்கப் சவரிமுத்து. அவரது மனைவி மேரிஆக்னஸ். இவர்களது மகன் ரோகன் சவரிமுத்து. இவர்கள் அனைவரும் இலங்கையில் இருந்து அகதிகளாக பெல்ஜியம் நாட்டுக்குச் சென்று அங்கிருந்து 1987 -ல் இந்தியாவுக்கு சென்றனர்.

மதுரை, சர்வேயர் காலனியில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். ஆத்துடன் 6 மாதங்களுக்கு ஒருமுறை காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு வந்தனர்.

அவர்களது மகன் ரோகன் சவரிமுத்துவைக் கொடைக்கானலில் உள்ள ஒரு பள்ளியிலும் பின்னர் மதுரையில் உள்ள பள்ளிகளிலும் சேர்த்து படிக்க வைத்தனர். அப்போது போலி ஆவணங்களைத் தயாரித்து இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்று பள்ளிச்சான்றிதழில் எழுதச்செய்தனர்.

ரோகன் சவரிமுத்து மதுரையில் உள்ள ஒரு கல்லூரியில் படித்தபோது அவருடன் படித்த மேரி பிரவீனாவுடன் காதல் ஏற்பட்டது. பின்னர் புதூர் தேவாலயத்தில், தான் ஒரு இந்தியன் என்று கூறி மேரி பிரவீனாவைத் திருமணம் செய்து கொண்டார். அதைத்தொடர்ந்து அமெரிக்கன் கல்லூரியில் தற்காலிக பேராசிரியராக பணியாற்றி வந்தார். (தற்போது வேறு கல்லூரியில் பணியாற்றி வருகிறார்).

இதற்கிடையே கணவரின் நடவடிக்கைகளில் சந்தேகம் அடைந்த மேரி பிரவீனா, அவர் மீதும், அவரது பெற்றோர் மீதும் பொய்யான தகவல்களைக் கூறி தன்னை ஏமாற்றியதாகவும், இலங்கை அகதி என்பதை மறைத்து இந்தியன் என்று போலி ஆவணங்கள் தயார் செய்துள்ளதாகவும், அதன் மூலம் இங்கு சொத்துக்களை வாங்கி மோசடி செய்துள்ளதகாவும் ஊமச்சிகுளம் காவல்துறையில் புகார் செய்தார். அதன் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ரோகன் சவரிமுத்து மற்றும் அவரது பெற்றோரைக் கடந்த 16.5.2008 அன்று கைது செய்தனர்.

அவர்கள் மீதான வழக்கின் விசாரணை மதுரை 2 வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அரசு தரப்பில் வழக்கறிஞர் பொன்.செல்வன் ஆஜரானார். விசாரணை முடிவில், போலி ஆவணங்கள் தயாரித்தது, அதனை முறைகேடாக பயன்படுத்தியது, மற்றும் பொய்யான தகவல்களைக் கூறி திருமணம் செய்தது போன்ற குற்றங்களுக்காக ரோகன் சவரிமுத்து மற்றும் அவரது பெற்றோருக்குத் தலா 3 ஆண்டு சிறை தண்டனையும், தலா ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்து மாஜிஸ்திரேட்டு சி.உமாமகேஸ்வரி தீர்ப்பளித்தார்.

Read more...

Tuesday, November 29, 2011

ஜக்கிய தேசியக் கட்சி கொழும்பில் நடத்திய மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணி

முன்னாள் இராணுவத் தளபதி சரத்பொன்சேகா உள்ளிட்ட அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்யக் கோரியும், மேலும் சில கோரிக்கைகளை முன்வைத்தும் ஐக்கிய தேசியக் கட்சி கொழும்பில் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியது. கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சரத்பொன்சேக்கா உள்ளிட்ட அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தல், நட்டத்தை எதிர்நோக்கிய நிறுவனங்களை அரசாங்கம் பொறுப்பேற்றமை மற்றும் அடுத்த ஆண்டுக்கான சில காரணங்களை அடிப்படையாக வைத்து இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. கொழும்பு நகரின் சில பிரதேசங்களில் ஒன்று கூடிய ஆர்ப்பாட்டக்காரர்கள் மூன்று இடங்களிலிருந்து ஊர்வலமாக ஹைய்ட் பார்க்கை சென்றடைந்தனர்.

இதன் ஒருகட்டமாக கொழும்பு விகாரமகாதேவி பூங்காவிற்கு அருகில் ஒருபேரணி ஆரம்பமானது. ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் கரு ஜயசூரிய உள்ளிட்ட சிலர் இதில் கலந்துகொண்டிருந்தனர்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட பலர் கலந்துகொண்ட மற்றுமொரு பேரணி மருதானையில் ஆரம்பமானது.

அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி கலாநிதி விக்ரமபாகு கருணாரத்ன உள்ளிட்ட பலர் வொக்சேஷால் வீதியில் இருந்து ஊர்வலமாக ஹைய்ட் பார்க்கை சென்றடைந்தனர்.

ஹைய்ட் பார்க்கிற்கு அருகில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க பேரணியில் இணைந்து கொண்டதுடன், பேரணிகளில் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான ரஞ்ஜித் மெத்தும பண்டார, திஸ்ஸ அத்தநாயக்க, புத்திக பத்திரண,மற்றும் குமரகுருபரன் உட்பட மேலும் பலர் பங்குபற்றினர்.

இதன்போது கருத்து வெளியிட்ட எதிர்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்ஹ அமெரிக்க உள்ளிட்ட அரேபிய நாடுகளில் முன் எடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டங்கள் இலங்கையில் முன் எடுக்கப்பட வேண்டும் என தெரிவித்தார்.

சரத்பொன்சேகா என்றால் அரசாங்கம் ஏன் பயப்படுகிறது? மனித உரிமைகள் என்றால் அரசாங்கம் ஏன் பயப்படுகிறது? என்றும் ரணில் விக்ரமசிங்க அங்கு கேள்வி எழுப்பினார்.

இங்குமேலும் பலரும் உரையாற்றினர்.

இதேவேளை, அரசாங்கத்துக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டுள்ள இந்த ஆர்ப்பாட்டத்தின் போது ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தேங்காய் உடைத்து ஊர்வலமாகச் சென்று தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினார். இந்த எதிர்ப்பு ஆர்பாட்டத்தினால் டவுன் ஹோல் முதல் லிப்டன் சுற்றுவட்டம் வரையான பகுதியில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டது.

Read more...

தீ காரணமாக லக் விஜய அனல்மின் நிலையத்திற்கு பாதிப்பில்லை

லக் விஜய அனல்மின் நிலையத்தில் இன்று காலை ஏற்பட்ட தீ காரணமாக நிலையத்திற்கு எவ்வித பாதிப்புகளும் ஏற்படவில்லையென மின்சக்தி அமைச்சு வலியுறுத்தியுள்ளது. அவசர நிலைமை காரணமாக இடைநிறுத்தப்பட்டுள்ள புத்தளம் அனல் மின் உற்பத்தி நிலையத்தின் நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிக்கப்போவதாகவும், நிலையத்தின் பிரதி பொது முகாமையாளர் சாலிய பண்டித்தரட்ண தெரிவித்துள்ளார்.

நிலையத்தின் அனல் இயந்திரமொன்றில் ஏற்பட்ட சிறு தீச்சம்பவம் காரணமாக நடவடிக்கைகள் ஸ்தம்பிதம் அடைந்துள்ளன. நிலக்கரிகளை கையாளும்போது, ஏற்படுகின்ற அதிக உஷ்ணம் காரணமாகவே, இந்த தீ ஏற்பட்டுள்ளதாக திட்ட அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

இச்சந்தர்ப்பத்தில் ஏற்பட்ட தீ, ஏனைய இயந்திரங்களுக்கும் பரவும் அச்சுறுத்தலை தடுக்கும் வகையிலேயே, மின் உற்பத்தி நிலையத்தின் செயற்பாடுகள், இடைநிறுத்தப்பட்டன. இந்த தீ சம்பவத்தினால் மின் உற்பத்தி நிலையத்திற்கோ, மின் உற்பத்தி இயந்திரங்களுக்கோ, எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லையென, இலங்கை மின்சார சபை வலியுறுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக விசாரணைகள் இடம் பெறுகின்றன./span>

Read more...

2013 இல் பொதுநலவாய மாநாடு இலங்கையில் நடைபெறுவது நிச்சயம் என்கிறார் ஜி.எல் பீரிஸ்

2013 ஆம் ஆண்டு பொதுநலவாய மாநாடு இலங்கையில் நடைபெறுவது நிச்சயம் அதனை நிறுத்துவதற்கு எதிர்கட்சி தலைவரால் முடியாதென அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பொதுநலவாய மாநாட்டை இலங்கையில் நடத்த விரும்புவதாக 15 நாடுகள் ஒரே குரலில் தெரிவித்துள்ளன. யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த இலங்கையின் சார்பில் முன்நிற்க போவதாக கடந்த சார்க் மாநாட்டில் சகல நாடுகளும் வலியுறுத்தியிருந்தன. சர்வதேசத்துடன் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ளும் போது எதிர்கட்சி மாத்திரம் நாட்டிற்கு எதிராக குரல் கொடுப்பது கவலைக்குரிய விடயமென அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இன்றைய தினம் விசேட அறிக்கையொன்றை வெளியிட வேண்டியுள்ளதாக எதிர்கட்சி தலைவர் வேண்டுகோள் விடுத்த போதிலும், இதற்காக நாளைய தினத்தை ஒதுக்க முடியுமென சபாநாயகர் தெரிவித்தார். இதன் அடிப்படையில் இன்றைய தினம் அதற்கு இடமளிக்காமைக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்கட்சி தலைவர் தனது களுத்து பட்டியை அவிழ்த்து விட்டார்.

இதனை நினைவு கூர்ந்து அமைச்சர் ஜி.எல் பீரிஸ் கருத்து தெரிவிக்கையில் எதிர்கட்சி தலைவர் அணிந்து வந்ததது பொதுநலவாய சபை பாராளுமன்றத்தின் களுத்துப்பட்டியாகுமென தெரிவித்தார். அந்த களுத்து பட்டியை அகற்றுவதனால் மாத்திரம் பொதுநலவாய சபை இலங்கையில் நடத்துவதற்கு எடுத்துள்ள தீர்மானத்தை தடுப்பதற்கு எதிர்கட்சி தலைவரால் முடியாதென அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

Read more...

மக்கள் தரிசிப்பிற்காக புனிதர் ஜோன் பொஸ்கோவின் திருப்பண்டம் நீர்கொழும்பில்

புனிதர் ஜோன் பொஸ்கோவின் திருப்பண்டம் தாங்கிய திருவுடல் நீர்கொழும்பு டொன்பொஸ்கோ தொழிற் பயிற்சிக் கல்லூரி தேவாலயத்தில் மக்கள் தரிசனத்திற்காக காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. புனிதர் ஜோன் பொஸ்கோவின் திருப்பண்டத்தை பெரும் எண்ணிக்கையானவர்கள் தரிசித்து வருகின்றனர்.இன்று முற்பகல் பாடசாலை மாணவர்கள் தரிசிப்பதற்கு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டன.

இதேவேளை, புனிதர் ஜோன் பொஸ்கோவின் பெரிய உருவச்சிலை ஒன்று நீர்கொழும்பு பெரியமுல்லை ரயில் கடவை அருகில் வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

செய்தியாளர் - எம்.இஸட்.ஷாஐஹான்

Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com