முச்சக்கர வண்டியில் சென்று பணிகளை முன்னெடுக்கவேண்டிய நிலை- ரணில் குற்றச்சாட்டு
முச்சக்கரவண்டியில் சென்று தனது பணிகளை முன்னெடுக்க வேண்டிய நிலை தோன்றியிருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் நேற்று குறிப்பிட்டார். அமைச்சுப் பாதுகாப்புப் பிரிவு விடுத்திருக்கும் அறிவிப்பின் பிரகாரம் தனது பாதுகாப்பு வாகனங்களை செலுத்துவதற்கான சாரதிகளை விலக்கியுள்ளதாக சபையில் பிரதி சபாநாயகரிடம் முறையிட்ட எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, முச்சக்கரவண்டியில் சென்று தனது பணிகளை முன்னெடுக்க வேண்டிய நிலை தோன்றியிருப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் என்ற வகையில் பாராளுமன்றத்தினால் எனது வாகனத்தை செலுத்துவதற்கென சாரதி ஒருவர் வழங்கப்பட்டுள்ளார். வேறு சாரதிகள் எவரும் என்னிடத்தில் இல்லை என்றும் குறிப்பிட்டார்.
சிறப்புரிமை பிரச்சினையொன்றை முன்வைத்தே எதிர்க்கட்சித்தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, எனது பாகாப்புக்கென வழங்கப்பட்டுள்ள வாகனங்களை பொலிஸ் சாரதிகளே செலுத்துகின்றனர். இந்நிலையில் என்றுமில்லாதவாறு அமைச்சு பாதுகாப்புப் பிரிவு இவ்வாறு அறிவித்திருக்கிறது. மாற்றம் ஒன்றை ஏற்படுத்துவதாக இருப்பின் அது குறித்து அறிவித்து பின்னர் தீர்மானிக்கவேண்டும். இவ்வாறில்லாது செயற்பட்டிருப்பதால் எனது பணிகளை மேற்கொள்வதற்கு நான் முச்சக்கரவண்டியைப் பாவிக்க வேண்டிய நிலைமையே தோன்றியிருக்கின்றது.
அப்படியெனின் அரசாங்கமே உத்தியோகபூர்வமாக முச்சக்கரவண்டியொன்றை எனக்குத் தருமானால் அதனை நான் ஏற்றுக்கொள்ளத் தயாராகவே இருக்கின்றேன். இதேவேளை, எனது பாதுகாப்புக்கென வழங்கப்பட்ட வாகனங்கள் அதிகமாக வாகன திருத்த நிலையங்களிலேயே நிற்கின்றன என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.
இதற்குப் பதிலளித்த பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி கூறுகையில், எதிர்க்கட்சித் தலைவரது பாதுகாப்பினை உறுதிப்படுத்த வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும். அதற்கேற்ற வகையில் அரசு செயற்படவேண்டும் என்பதுடன் இதனை சபாநாயகரின் கவனத்திற்கு கொண்டு வருவதாகவும் கூறினார்.
0 comments :
Post a Comment