கத்தார் தூதரக அதிகாரி யு.எஸ். விமானத்தை தகர்க்க முயற்சி?
ரசாயான பொருளை வெடிக்கச் செய்து நடுவானில் அமெரிக்க விமானத்தை தகர்க்க முயன்ற கத்தார் நாட்டு தூதரக அதிகாரி கைது செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 157 பயணிகள் மற்றும் விமான சிப்பந்திகள் 6 பேருடன், வாஷிங்டனிலிருந்து டென்வர் நகருக்கு விமானம் ஒன்று புறப்பட்டது.
அந்த விமானம் டென்வர் நகரை நெருங்குவதற்கு சுமார் 30 நிமிடங்களுக்கு முன்னதாக, பயணி ஒருவர் விமான கழிவறைக்கு சென்றார்.நீண்ட நேரம் ஆகியும் அவர் வெளியே வரவில்லை.இதனால் சந்தேகமடைந்த விமான பாதுகாப்பு அதிகாரி கழிவறை அருகே சென்றார். அப்போது தீப்பிடித்தால் ஏற்படும் ஒருவித புகை நாற்றம் கழிவறைக்குள் இருந்து வந்தது.
இதனால் உஷாரான அந்த அதிகாரி, இதர விமான சிப்பந்திகளுடன் கழிவறைக் கதவை திறந்து கொண்டு உள்ளே சென்று, அந்த பயணியை மடக்கி பிடித்தனர். அவரை சோதனையிட்டபோது, தான் அணிந்திருந்த 'ஷூ'வுக்குள் மறைத்து வைத்திருந்த ரசாயன பொருள் மூலம் தீப்பற்ற வைத்து விமானத்தை தகர்க்க முயன்றதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து அந்த அதிகாரி டென்வரில் உள்ள தரை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். உடனே அந்த விமானத்துக்கு பாதுகாப்பாக இரண்டு போர் விமானங்கள் அனுப்பப்பட்டு,விமானம் தரையிறங்கும் வரை அவை கூடவே வந்தன.
பின்னர் விமானம் டென்வர் விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. இதனையடுத்து அங்கு தயார் நிலையில் நின்ற பாதுகாப்பு படையினர், விமானத்தை சுற்றி வளைத்தனர்.
அனைத்து பயணிகளும் கீழே இறக்கப்பட்ட பின்னர், விமானத்தை வெடிக்கச் செய்ய முயன்ற அந்த பயணியை ரகசிய இடத்துக்கு அழைத்து விசாரணை மேற்கொண்டதாகவும், அப்போது அவரது பெயர் அல்மொ தாதி என்பது, அமெரிக்காவில் கத்தார் நாட்டுக்கான துணை தூதரக அதிகாரியாக பணியாற்றுவதும் என்று தெரிய வந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே சந்தேகத்துடன் பிடிபட்ட அந்த கத்தார் தூதரக அதிகாரியிடம் வெடி பொருட்கள் எதுவும் கைப்பற்றப்படவில்லை என்றும், அவர் விமானத்தை தகர்க்க மேற்கொண்டிருக்கலாம் என தாங்கள் கருதவில்லை என்றும் அமெரிக்க காவல்துறை அதிகாரி ஒருவர் கூறியதாக மற்றொரு தகவல் தெரிவிக்கிறது.
0 comments :
Post a Comment