Sunday, January 31, 2010

பொதுதேர்தலில் சிவாஜிலிங்கம் , சிறிக்காந்தா ரிஎன்ஏ க்கு வெளியே.

எதிர்வரும் ஏப்பரல் மாதமளவில் பொது தேர்தல் இடம்பெறவுள்ளது. இத்தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பாக போட்டியிடுவதற்கு சிறிகாந்தா மற்றும் சிவாஜிலிங்கம் ஆகியோருக்கு சந்தர்ப்பம் அளிக்கப்பட மாட்டாது என ரிஎன்ஏ வாட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முடிவுக்கு எதிராக மேற்படி இருவரும் செயல்பட்டமையே இதற்கான காரணமாகும்.

Read more...

சுதந்திர தினத்தன்று ஜனாதிபதி பதவி ஏற்கின்றார். 5ம் திகதி பாரளுமன்றம் கலையும்.

இலங்கையின் 6 வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக மஹிந்த ராஜபக்ச அவர்கள் எதிர்வரும் நான்காம் திகதி கண்டியில் பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றது. தேர்தலில் வெற்றி பெற்றதை தொடர்ந்து நேற்று அஸ்கிரய பீடாதிபதிகைளச் சந்திக்க சென்றிருந்த ஜனாதிபதி இவ்விடத்தை அவர்களுக்கு தெரியப்படுத்தியதாக இச்சந்திப்பில் கலந்திருந்த அமைச்சர் ஹெகலிலய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதின் தற்போதைய பதிவிக்காலம் எதிர்வரும் 2011ம் ஆண்டு நவம்பர் மாதம் வரை இருக்கின்றபோது, அவர் அக்காலம் முடியும் தறுவாயில் பதவி பிரமாணம் செய்துகொள்ள முடியுமா என்பது தொடர்பாக உச்ச நீதிமன்றுடன் பரிசீலிக்கப்படும் என செய்திகள் வெளியாகியிருந்த நிலையில் இவ் அறிவிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதையடுத்து எதிர்வரும் 5ம் திகதி பாராளுமன்றம் கலைக்கப்படும் என தெரியவருகின்றது. அதிலிருந்து இருவாரங்களில் பாராளுமன்ற தேர்லுக்கான வேட்பு மனுக்களை தேர்தல் ஆணையாளர் கோருவார்.

இத்தேர்தலும் மிகவும் சிக்கலான தேர்தலாகவே அமையப்போகின்றது. அந்நிலையில் ஜனாதிபதி தேர்தலை நாடாத்திவிட்டு பதவி பிரமாணம் செய்யாது இருந்தால் , தேர்தல் முடிவுகளில் அது மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும்.

பாராளுமன்றை கலைத்து விட்டு ஜனாதிபதி ரஸ்யா பயணமாகவுள்ளார். இலங்கை 300 மில்லியின் அமெரிக்க டொலர்களை சீனாவிடம் கடனாக கோரியுள்ளது. இக்கடனினை பெற்றுக்கொள்வதற்கான இறுதி ஆவனங்களில் கையொப்பம் இடும்பொருட்ட ஜனாதிபதியின் பயணம் அமைந்துள்ளதாக தெரியவருகின்றது.

Read more...

இலங்கை அதிகாரப் பகிர்வு: கருணாநிதி-மேனன் ஆலோசனை

முதல்வர் கருணாநிதியை, தேசிய பாதுகாப்பு ஆலோசகராக பதவியேற்றுள்ள சிவசங்கர மேனன் இன்று சென்னையில் சந்தித்து இலங்கைத் தமிழர்களுக்கான அதிகாரப் பகிர்வுத் திட்டம் குறித்து முக்கிய ஆலோசனை நடத்தினார். தேசிய பாதுகாப்பு ஆலோசகராக சமீபத்தில் பதவியேற்றார் மேனன். இதையடுத்து இன்று சென்னை வந்த அவர் முதல்வர் கருணாநிதியை தலைமைச் செயலகத்தில் சந்தித்துப் பேசினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பொறுப்பை ஏற்றதும் முதல் முறையாக முதலமைச்சர் கருணாநிதியை இன்று மரியாதை நிமித்தம் சந்தித்து பேசினேன்.

இருவரும் பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தினோம். குறிப்பாக, தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் அடிக்கடி தாக்குதலுக்குள்ளாவது குறித்து முதலமைச்சர் ஆழ்ந்த கவலை தெரிவித்தார். இந்த தாக்குதல் பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக விரிவாக பேசினோம்.

தற்போது இலங்கையில் போருக்கு பின்னர் அங்குள்ள தமிழர்களின் நிலை குறித்து முதலமைச்சர் பெரிதும் கவலை வெளியிட்டார். இந்த விஷயத்தில் இந்திய அரசு தரப்பில் தன்னாலான அனைத்து நடவடிக்கைகளும் நிச்சயம் மேற்கொள்ளப்படும் என்று நான் உறுதியளித்தேன்.

இதுகுறித்து இலங்கை அரசுடன் இந்திய அரசு தொடர்ந்து பேசி வருகிறது. தற்போது முகாம்களில் உள்ள இலங்கை தமிழர்களுக்கு புணர்வாழ்வு அளிப்பது தொடர்பாகவும், தமிழர்களுக்கு உரிய அதிகார பகிர்வு வழங்குவது குறித்தும் இலங்கை அரசுடன் தொடர்ந்து பேசி வருவதாக முதல்வரிடம் நான் கூறினேன் என்றார் மேனன்.

ராஜபக்சே 2வது முறையாக அதிபராகியுள்ள நிலையில், தமிழர்களின் வாக்குகளை அவர் பெறாத நிலையில், தமிழர்களுக்கான அதிகாரப்பகிர்வை முழுமையாக செயல்படுத்தினால்தான் இலங்கையின் எதிர்காலம் சிக்கல் இல்லாமல் இருக்கும் என இந்தியா கருதுவதாக தெரிகிறது.

இதுதொடர்பான நடவடிக்கைகளிலும் அது இறங்கியுள்ளதாக தெரிகிறது. அதன் ஒரு பகுதியாகவே முதல்வர் கருணாநிதியை மேனன் சந்தித்துள்ளதாக கருதப்படுகிறது. விரைவில் அவர் இலங்கை சென்று ராஜபக்சேவை சந்திக்கக் கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Read more...

பிரபாகரன் மரண சான்றிதழ் இன்னும் கிடைக்கவில்லை சி.பி.ஐ. தகவல்

ராஜீவ்காந்தி கொலையில் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டு இருந்தார். அவர் கடைசி வரை கைது செய்யப்படவில்லை. தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். இந்த நிலையில் கடந்த மே மாதம் இலங்கை ராணுவத்துடன் நடந்த சண்டையில் பிரபாகரன் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அவரது உடலையும் காட்டினார்கள். ஆனால் ஒரு தரப்பினர் பிரபாகரன் சாகவில்லை. இன்னும் உயிருடன் இருக்கிறார் என்று கூறி வருகின்றனர்.

பிரபாகரன் இறந்து விட்டதாக இலங்கை அரசு அறிவித்ததால் ராஜீவ்காந்தி கொலை தொடர்பாக விசாரித்து வரும் சி.பி.ஐ. அவருடைய மரண சான்றிதழை இலங்கை அரசிடம் கேட்டது.

இலங்கை அரசு பிரபாகரன் மரண சான்றிதழை இந்திய அரசிடம் ஒப்படைத்து விட்டதாக தகவல்கள் வெளியாயின. ஆனால் இந்திய அரசு தரப்பில் இது உறுதி செய்யப்படாமலேயே இருந்தது.

இது பற்றி தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் சி.பி.ஐ.யிடம் கேள்வி ஒன்று கேட்கப்பட்டது. ராஜீவ் காந்தி கொலை வழக்கு தற்போது என்ன நிலையில் இருக்கிறது என்ற விவரத்தை முழுமையாக தெரிவிக்கும்படி அதில் கூறி இருந்தனர்.

இதற்கு சி.பி.ஐ. சூப்பிரண்டு பி.என்.மிஸ்ரா பதில் அளித்துள்ளார். அதில் கூறி இருப்பதாவது:-

பிரபாகரன் இறந்ததாக தகவல் வந்ததை அடுத்து உரிய வழிகளில் இலங்கைக்கு தகவல் அனுப்பி அவருடைய இறப்பு சான்றிதழை கேட்டோம். இந்திய வெளியுறவு துறை மூலம் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

ஆனால் இதுவரை பிரபாகரன் மரண சான்றிதழை இலங்கை அரசு தர வில்லை. இதற்காக இன்று வரை காத்திருக்கிறோம். மரண சான்றிதழை பெறுவதற்கு அதற்குரிய வழிமுறைகளின்படி தொடர்ந்து முயற்சித்து வருகிறோம்.

ராஜீவ்காந்தி கொலை வழக்கை விசாரித்த தடா கோர்ட்டில் அனுமதி பெற்று தேவையான விசாரணைகளை தொடர்ந்து நடத்தி வருகின்றோம். இதில் மரண தண்டனை பெற்ற பேரறிவாளன், சுதந்த ராஜா, ஸ்ரீஹரன் ஆயுள் தண்டனை பெற்ற நளினி, ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகியோர் வேலூர் ஜெயிலில் உள்ளனர். மற்ற குற்றவாளிகள் ரவிச்சந்திரா, பிரகாசம் ஆகியோர் மதுரை ஜெயிலிலும் உள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Read more...

பத்திரிகையாளரை நாட்டைவிட்டு வெளியேற விடுத்திருந்த உத்தரவு ஜனாதிபதியினால் வாபஸ்.

சுவிற்சர்லாந்தின் எஸ்ஆர்எஸ் எனும் வானொலியின் தென்கிழக்காசிய நாடுகளுக்கான செய்தியாளரை தகவல் திணைக்களத்தின் இயக்குனரின் உத்தரவுக்கமைய இலங்கையிலிருந்து வெளியேறுமாறு இலங்கை குடிவரவு குடியகல்வு திணக்களத்தின் பிரதான கட்டுப்பாட்டாளரால் விடுக்கப்பட்டிருந்த உத்தரவு ஜனாதிபதியின் தலையீட்டில் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றது.

Read more...

தமிழகத்தில் புலிகள் : 100,000 டாலர் மதிப்புள்ள அரை கிலொ ஹெராயின்

தமிழகத்தில் விடுதலைப் புலிகள் ஊடுருவியதற்கான வலுவான ஆதாரங்களைத் தமிழகப் போலிசார் கைப்பற்றியிருக்கின்றனர். அண்மையில் கைதான நான்கு சந்தேக நபர்களிடமிருந்து விடுதலைப் புலிகள் வழக்கமாகப் பயன்படுத்தும் பல்வேறு ஆயுதங்கள் சிக்கியதைத் தொடர்ந்து இந்தியாவில் தளம் அமைக்கும் முயற்சியில் விடுதலைப் புலிகள் ஈடுபட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

தமிழகத்தில் ஊடுருவியதாகக் கருதப்படும் விடுதலைப் புலிகள் இந்தியாவில் வன்முறை, தாக்குதல் போன்ற வற்றில் ஈடுபடலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. புதன்கிழமை அன்று கைது செய்யப்பட்ட நால்வரிடம் இருந்து துப்பாக்கிக் குண்டுகள், துணைக்கோள உதவியுடன் பயன்படுத்தப்படும் தொலைபேசி, போதைப் பொருட்கள் போன்றவை கைப்பற்றப்பட்டன.

இதில் மீனவரான ஜீவா எனும் செல்வகுமார் என்பவரிடமிருந்து எட்டு லட்சம் இந்திய ரூபாய் நோட்டுகள், உலகச்சந்தையில் 100,000 டாலர் மதிப்புள்ள அரை கிலொ ஹெராயின் போன்ற பொருட்களை போலிசார் பறிமுதல் செய்தனர். இவற்றில் துணைக் கோளம் வழி செயல்படும் தொலை பேசி, வெடிகுண்டுகள் போன்றவை விடுதலைப்புலிகள் வழக்கமாகப் பயன்படுத்தும் ஆயுதங்களாகும்.

போலிசார் தொடர்ந்து நடத்திய விசாரணையில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின. கடத்தல் தொழில் மூலம் விடுதலைப் புலிகளின் கடல் பிரிவைச் சேர்ந்த சில தளபதிகளுக்கு இவர் நெருக்கமாகச் செயல்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

போலிசிடம் சிக்கிய 39 வயது செல்வகுமார், கடந்த டிசம்பர் 24ம் தேதி விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த ஓர் ஆணையும் ஒரு பெண்ணையும் நடுக் கடலிலிருந்து தம்முடைய படகுக்கு மாற்றி கரைக்குக் கொண்டு வந்ததாகத் தெரிவித்தார். தம்பதியர் இருவரும் ஒரு காரில் ஏறிச் சென்று விட்டனர். ஆனால் அவர்கள் இருக்கும் இடம் செல்வகுமாருக்குத் தெரியவில்லை. செல்வகுமாரை விடுதலைப் புலிகள் தங்களுடைய முக்கிய ஏஜண்டுகளில் ஒருவராக அங்கீகரித்திருக்கலாம் என்பதும் போலிசாரின் சந்தேகம்.

விசாரணையில் என்னைப் போன்று மேலும் சிலர் இருக்கின்றனர் என்று செல்வகுமார் தெரிவித்தார். இவருடைய ஒப்புதல் வாக்குமூலம், இந்தியாவிலும் இந்திய முக்கியத் தலைவர்களுக்கு எதிராகவும் தாக்குதல் நடத்தப்படலாம் என்ற அபாயமும் அதிகரித்துள்ளது.

மேலும் தங்களுடைய இயக்கம் அழிவதற்கு காரணமான இந்தியாவின் முக்கியத்தலைவர்களையும் அவர்கள் குறி வைத்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது. புலிகளுக்கு எதிரானவர்கள் என்று கருதப்படும் இந்திய ஆளும் கட்சித் தலைவர் சோனியா காந்தி, உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம், முன்னாள் பாதுகாப்புத்துறை ஆலொசகர் எம்கே. நாராயணன் ஆகிய தலைவர்களும் அவர்களில் அடங்குவர்.

கடந்த காலங்களில் இந்தியாவைத் துரோகி என்று விடுதலைப் புலிகளின் தரப்பில் முத்திரை குத்தப்பட்டிருந்தது. பிரதமர் மன்மோகன் சிங்குக்கு ஆதரவாகச் செயல் பட்ட தமிழக முதல்வர் கருணாநிதி மீது அவர்கள் தங்களுடைய ஆவேசத்தைக் காட்டியிருந்தனர்.

விடுதலைப் புலிகள் பற்றிய புதிய விவரங்களைத் தொடர்ந்து தமிழகத்தில் அசம்பாவிதம் ஏற்படாத வகையில் ஊடுருவிய புலிகளைக் கண்டறிவதற்காக, அனைத்து அகதிகள் முகாம், தொழிற்சாலை நிறைந்த பகுதிகளில் போலிசார் தேடும் பணிகளை முடுக்கி விட்டுள்ளனர். தமிழகக் கடலொரப் பகுதிகளில் உள்ள சோதனை வலுப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் இலங்கையில் நடைபெற்ற இறுதிப்போரில் முக்கியத் தலைவர்கள் கொல்லப்பட்ட பிறகும் புலிகள் மீண்டும் தாக்குதலை நடத்தலாம் என்று இலங்கை அரசு சந்தேகித்து வருகிறது. கடந்த 1991ம் ஆண்டில் இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி, தற்கொலைத் தாக்குதலில் கொல்லப்பட்ட பிறகு விடுதலைப் புலிகளுக்கு இந்தியாவில் தடை விதிக்கப் பட்டது.

Read more...

தோற்றுப்போன கூட்டமைப்புத் தலைமை

ஜனாதிபதித் தேர்தலில் தோல்வி அடைந்தவர்களின் பட்டியலில் வேட்பாளர்கள் மாத்திரம் அடங்கவில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இப் பட்டியலில் இருக்கின்றது. கூட்டமைப்பின் தோல்வி அதன் பூர்வ ஜன்மமான தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் ஆரம்பித்தது.

பொதுசன ஐக்கிய முன்னணி அரசாங்கத்தின் அதிகாரப் பகிர்வுத் தீர்வுத் திட்டத்துக்குப் பிரபல்யமான ஆதரவு அளித்த தமிழர் விடுதலைக் கூட்டணிக்குத் திடீரெனத் தனிநாட்டுக் கொள்கையில் பற்று ஏற்பட்டது. புலிகளுடன் அணிசேர்ந்து தனிநாட்டுக்காகப் போராட்டம் நடத்தினார்கள். அப்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற பெயர்.

புலிகள் யுத்த களத்தில் தோல்வி. கூட்டமைப்புத் தலைவர்கள் அரசியல் களத்தில் தோல்வி. தனிநாடு சாத்தியமில்லை என்றதும் கூட்டமைப்பின் எதிர்காலம் கேள்விக்குறி ஆகியது. தனிநாட்டுக் கொள்கையைப் பகிரங்கமாகக் கைவிடவும் திராணி இல்லை. ஐக்கிய இலங்கையில் அரசியல் தீர்வு என்பதை ஏற்றுக்கொள்ளவும் துணிச்சல் இல்லை. இனப் பிரச்சினையின் தீர்வுக்கான திட்டமொன்றைத் தயாரிக்கிறோம் என்று கூறுகின்றார்கள். இன்னும் அந்தத் திட்டம் வெளிவந்த பாடாக இல்லை. பல தசாப்தங்களாக உள்ள பிரச்சினைக்குப் பல தசாப்த கால அரசியல் அனுபவம் உள்ளவர்களால் சில மாதங்களுக்குள் தீர்வுத் திட்டமொன்றைத் தயாரிக்க முடியாதா?

சரியாகவோ பிழையாகவோ கூட்டமைப்பின் பூர்வஜன்மங்களுக்குக் கொள்கைத் திட்டங்கள் இருந்தன. தமிழரசுக் கட்சிக்குச் சமஷ்டி. தமிழர் விடுதலைக் கூட்டணிக்குத் தனிநாடு. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதுவும் இல்லை. எட்டு மாதங்களாகத் தயாரிக்கின்றார்கள்!

தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரதான பிரச்சினையான இனப் பிரச்சினைக்குத் தீர்வுத் திட்டம் இல்லாமல் தமிழ் மக்களின் பிரதிநிதிகளென உரிமை கோருவதும் அந்த அடிப்படையில் பேச்சுவார்த்தை நடத்துவதும் போலியானவை. தீர்வுத் திட்டமொன்றை வெளியிட முடியாதிருப்பது கூட்டமைப்பின் மிகப் பெரிய தோல்வி.

அடுத்த தோல்வி ஜனாதிபதித் தேர்தலுடன் சம்பந்தப்பட்டது.

எல்லாத் தமிழ்க் கட்சிகளும் ஐக்கியப்பட வேண்டும் என்ற கோஷத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாகியது. விளக்கமாகக் கூறுவதானால், புலிகளை ஆதரிக்கும் எல்லாக் கட்சிகளும் ஐக்கியத்துடன் ஒரே அணியில் செயற்பட வேண்டும் என்பதே அவர்களின் நோக்கம். ஜனாதிபதித் தேர்தலில் அந்த நோக்கம் நிறைவேறவில்லை.

பகிஷ்கரிக்க வேண்டும் என்று சிலர். வேட்பாளரை நிறுத்த வேண்டுமென இன்னொரு பிரிவினர். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஆதரிக்க வேண்டும் என்று வேறு சிலர். பொன்சேகாவை ஆதரிப்பதற் குப் பெரும்பான்மை முடிவு. ஐக்கியக் கோட்பாட்டுக்குத் தோல்வி.

பொன்சேகாவை ஆதரித்ததன் மூலம் தமிழ் மக்களுக்கு ஏதாவது நன்மையைப் பெற்றுக்கொடுத்தார்களா என்றால் எதுவுமில்லை. அதிலும் தோல்வி.

எல்லாவற்றுக்கும் மேலாகத் தமிழ் மக்களின் எந்தப் பிரச்சினைக்கும் எவ்விதத் தீர்வையும் பெற்றுக்கொடுக்க இவர்களால் முடியவில்லை. இந்த விடயத்தில் படுதோல்வி.

தோற்றுப்போன தலைமை இனி ஒதுங்கலாமே!


Read more...

கட்சிகளின் ஒத்துழைப்புடன் தேர்தல் சீர்திருத்தம்

பொதுத் தேர்தல் நடைபெறுவதற்கு முன் தேர் தல் முறையில் மாற்றம் செய்ய வேண் டியதன் அவசியம் பற்றிய பேச்சு இப்போது எழுந்திருக்கின்றது. பல அரசியல் தலைவர்கள் இதற்குச் சாதகமாகக் கருத்துத் தெரிவித்திருக்கின்றார்கள்.

தற்போது நடைமுறையிலுள்ள விகிதாசார பிரதிநிதித்துவ முறையை நீக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக முன்வைக்கப்பட்டு வருகின்றது. முன்னர் நடை முறையிலிருந்த தொகுதிவாரிப் பிரதிநிதித்துவ முறையின் மிகப் பெரிய குறைபாடு பெரும்பான்மை அபிப்பிராயம் நிராகரிப்புக்கு உள்ளாவதாகும். ஒரு தொகுதியில் இரண்டுக்குக் கூடுதலான வேட்பாளர்கள் போட்டியிடும் பட்சத்தில் முதலாவதாகக் கூடுதலான வாக்குகளைப் பெறுபவர் தெரிவு செய்யப்படுவார். மற்றைய வேட்பாளர்கள் பெற்ற மொத்த வாக்குகள் வெற்றி பெற்றவரின் வாக்குகளிலும் பார்க்கக் கூடுதலாக இருக்குமேயானால் அது பெரும்பான்மை அபிப்பிராயம் நிராகரிக்கப்படுவதாக அமையும். ஒரு மாவட்டத்திலுள்ள எல்லாத் தொகுதிகளிலும் தோல்வியடைந்த வேட்பாளர்களுக்கு வாக்களித்தவர்கள் பிரதி நிதித்துவம் பெற முடியாமை இன்னொரு குறைபாடு.

இக் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்காக அறிமுகப் படு த்தப்பட்ட விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறை முன்னைய திலும் பார்க்க மோசமான குறைபாடுகளைக் கொண்டதாக இருக்கின்றது. மாவட்டம் முழுவதும் ஒரே தொகு தியாக இருப்பதால் வேட்பாளர்கள் பெருந்தொகைப் பணம் செலவிட வேண்டியதாக உள்ளது. விருப்பு வாக்குகளின் அடிப்படையிலேயே பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படுவ தால் விருப்பு வாக்குக்காக ஒரே கட்சி வேட்பாளர்கள் ஒருவருடன் ஒருவர் மோதும் நிலையைக் கடந்த கால ங்களில் கண்டிருக்கின்றோம்.

விகிதாசாரப் பிரதிநிதித்துவத்திலுள்ள குறைபாடுகளையும் தொகுதிவாரிப் பிரதிநிதித்துவத்திலுள்ள குறைபாடுகளையும் நீக்கும் வகையானதும் கூடுதலான ஜனநாயகத் தன்மை கொண்டதுமான தேர்தல் முறையொன்றை அமைச்சர் தினேஷ் குணவர்த்தனவின் தலைமையிலான தெரிவுக்குழு சிபார்சு செய்திருக்கின்றது. இச்சிபார்சின் அடிப்படையில் தேர்தல் முறையில் மாற்றம் செய்வது தேர்தல்களில் ஜனநாயகத் தன்மை பேணப்படுவதற்குப் பெரிதும் உதவும்.

ஏப்ரல் மாத பிற்பகுதி வரை தற்போதைய பாராளுமன்றத்து க்கு ஆயுட்காலம் உண்டு. எல்லா அரசியல் கட்சிகளும் ஒத்துழைப்பு வழங்குவதற்கு முன்வரும் பட்சத்தில் அடு த்த பொதுத் தேர்தலுக்கு முன் தேர்தல் சீர்திருத்தத்தை நடைமுறைக்குக் கொண்டு வருவதில் சிரமம் இருக்காது.

தேர்தல் சீர்திருத்தத்துக்கு ஆதரவளிக்க முடியாது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் கூறியதா கப் பத்திரிகைகளில் செய்தி வெளியாகியிருந்தது. ஐக்கிய தேசியக் கட்சி அகவயக் காரணிகளால் வழி நடத்தப்படா மல் மக்களின் பொதுவான நன்மையையும் ஜனநாயகப் பெறுமானங்களையும் கவனத்தில் எடுத்து அதன் நிலைப் பாட்டை மாற்ற வேண்டும். விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையை நடைமுறைக்குக் கொண்டுவந்த பாவத்துக்குப் பிராயச்சித்தமாகத் தேர்தல் சீர்திருத்தத்துக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்

நன்றி தினகரன்

Read more...

வடகிழக்கு தேர்தல் முடிவுகள் பெரும்பான்மை அரசுக்கு வெற்றியா? தோல்வியா?

தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக் கொள்வர் பயன்தெரி வார். –திருக்குரல்-(சிறிய அளவே நல்லது செய்யப்பட்டாலும் அதனை பெரியதாக கருதுவார்கள் அதன் பயனை அறிந்தவர்கள்)

நடந்து முடிந்த இலங்கையின் 06 வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியைத் தெரிவு செய்யும் தேர்தலில் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் வட கிழக்கு உட்பட மலையகத்திலும் மக்கள் வாக்களித்த வீதம் மிகவும் குறைவாக உள்ளதுடன் அளிக்கப்பட்ட வாக்குகளில் பெரும்பாலானவை எதிர் கட்சிகளின் பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகாவிக்கு அளிக்கப்பட்டுள்ளன. இரண்டாம் இடத்திலேயே இலங்கையின் மக்களின் மனங்களில் என்றும் வாழும் ஜனாதிபதி அவர்கள் உள்ளார்.

இதனை தமிழ் எதிர் கட்சிகள் தாங்களின் சொற்படியே வடகிழக்கில் மக்கள் ஜனாதிபதியை நிராகரித்துள்ளனர் மக்கள் எங்கள் பக்கம் உள்ளனர் என்ற ஒரு மாயையை ஏற்படுத்தி மக்களை திசைதிருப்பி எதிர்வரும் பொதுத்தேர்தலில் தங்களின் இருப்பை உறுதி செய்து கொள்ள முற்படுகின்றனர். எது எப்படியாயினும் உண்மையில் மக்கள் தற்போதைய தமிழ் கட்சிகளுடன் உள்ளார்களா அல்லது அவர்களை வெறுக்கிறார்களா என்பதே நமது கேள்வி.

நடந்து முடிந்த தேர்தலில் மக்கள் தமிழ் எதிர்கட்சிகளுடன் அல்லது ஆட்சியில் பங்கு பற்றும் கட்சிகளுடன் இருந்திருந்தால் முடிவு எப்படி இருந்திருக்க வேண்டும். எந்தவொரு வேட்பாளர்களுக்கேனும் தமிழ் பேசும் மக்கள் முழுமையாக வாக்களித்திருக்க வேண்டும்.

ஏனெனில் இந்தத் தேர்தலில் மக்கள் வாக்களிக்காமல் தடுக்கக்கூடிய எந்த அதிகாரப் பிரயோகங்களும் வட கிழக்கில் உண்மையில் இருக்கவில்லை. அப்படியானால் வடக்கில் ஒருவேளை இருந்ததா என்றால் நிச்சயமாக வாக்களிக்கும் தினத்தன்று இருக்கவில்லை. ஆனால் தமிழ் மக்கள் அதிகமானவர்கள் தற்போதைய தமிழ் கட்சிகள் எதனையும் நம்பத் தயாராக இல்லை என்பதாலேயே அவர்கள் வாக்களிப்பதில் ஆர்வம் காட்டவில்லை.

இதற்கு உள்ளும் புறமும் பல காரணிகள் உள்ளன. அவைகளை நாம் நோக்குவோமாயின்

* மக்கள் தமது இழப்புகளில் இருந்து இன்னும் விடுபடாமையும் வாழ்வதற்கான சரியான ஆதரங்கள் இல்லாமலும் இருக்கும் சூழல்.

* இலங்கையின் அரசியல் ரீதியான ஏமாற்றங்களும் தமிழ் இயங்கங்களின் போராட்ட ரீதியாக கிடைத்த துன்பங்களும் தங்களுக்கான உணவுத் தேவையே பாரிய போராட்டமான சூழலில் தேர்தல் மக்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது.

* மக்கள் யுத்த சூழலிருந்து வெளிவர போதிய அவகாசம் வழங்கப்படாமை.

* வடகிழக்கில் தொடரும் உணவு, மற்றும் சுகாதராப் பிரச்சினைகள்.

* தற்போதைய தமிழ் கட்சிகளில் போராட்டப் பின்புலத்தைக் கொண்டவர்கள் பிரதிநிதித்துவப்படுத்துவதால் மீண்டும் ஏதாவது நடந்துவிடும் என்ற பயமும் அவர்களை மக்கள் நம்ப யோசிக்கும் சூழலும்.

* பழம்பெரும் அரசியல் வாதிகளின் அரசியலில் நம்பிக்கை இழந்த மக்களின் பார்வை.

இவ்வாறு பல காரணங்கள் இருந்தாலும் சாதாரண தமிழர்களை திருப்திப்படுத்தும் அளவு கூட தமிழ் அரசியல் கட்சிகளின் அரசியல் இருக்கவில்லை. இதற்கு உதாரணமாக தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர் கட்சிகளின் பொது வேட்பாளர் சரத் பொன்சோகாவிற்கு வழங்கிய நிபந்தனையற்ற ஆதரவைக் (Unconditional Support) எடுத்துக் கொள்ளலாம்.

சரத்பொன்சேகா ஒருபெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர் புலிகளை அழிக்கும் போரில் தலைமைதாங்கியது மட்டுமல்லாது அந்த யுத்தத்தில் அப்பாவித் தமிழ் மக்கள் கொல்லப்படுவதற்கும் அவரே தலைமை கட்டளை அதிகாரியாக இருந்தார். இவருக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்க தமிழர்களுக்கு அவர் செய்தது என்ன? இவரை முழுமையாக தமிழ் மக்கள் ஆதரித்தால் அவர் மீண்டும் கடந்தகால பெரும்பான்மை அரசியல் வாதிகளைப்போல் நடந்தால் அவரைக் கட்டுப்படுத்த திரு.சம்மந்தனால் முடியுமா? வட்டுக் கோட்டை பிரகடனத்தின்போது கூட இருந்த பழம்பெரும் அரசியல்வாதி இப்படியொரு நிலையை எடுத்தது தமிழ் மக்களை முகம் சுழிக்க வைத்துள்ளது.

அடுத்து தேர்தலுக்கு சில வாரங்களுக்கு முதல் சுவிஸர்லாந்தில் தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து பெரும்பான்மையினருக்கு அரசியல் தீர்வில் அழுத்தம் கொடுக்கபோவதாக மூடிய அரைகளுக்குள் நாள் கணக்காய் பேசி விட்டு இலங்கையில் ஆளுக்கொரு கொடி கோஷம் என தங்களின் சுயரூபத்தைக் காட்டியது மக்கள் இவர்களின் நம்பகத்தன்மை தொடர்பான மீண்டும் ஒரு முறை சிந்தித்தக் தூண்டியது.

அடுத்த பிரதானமான விடயம் தமிழர்கள் தேசிய அரசியலில் தம்மால் எதையும் செய்ய முடியாது என்ற நம்பிக்கையற்ற மனநிலையில் இருப்பதாகும். இதற்கு வடகிழக்கில் செல்வாக்குச் செலுத்திய புலிகள் இயக்கம் அரசியிலிருந்து மக்களை தூரப்படுத்தி தங்களின் சுயநலத்திற்காக மக்களை பாவித்தது என்பதை கருத்தில்கொள்ள வேண்டும்.

இவ்வாறான சுழலில் மொத்த வட கிழக்கு தமிழர்களில் பெரும்பாண்மையானோர் வாக்களிக்காததை தங்களுக்கு சாதகமாக எதிர்கட்சியை பிரதிநிதித்துவப் படுத்தும் தமிழ் அரசியல் கட்சிகள் காட்டுவது அவர்களின் அரசியல் வங்குரோத்துத்தனத்தையே காட்டுகிறது என்பதுடன் அது தமிழ்களை பெரும்பான்மை மக்களிடமிருந்தும் தேசிய அரசியலிருந்தும் தூரப்படுத்தும் செயலாகும்.

அந்த மக்கள் நிராகரித்து முதலில் இவர்களைதான் என்பதை அவர்கள் ஏற்க்க மறுக்கின்றனர். புரிந்தும் புரியாததுபோல் நடிக்கின்றனர். காரணம் இவர்களின் சொந்தப்பிரதேசத்தில் அளிக்கப்படாத வாக்குகளின் வீதம் அறுவது (60%) ஆகையால் இவர்களின் கொள்கைகளையும் இவர்களையும் மக்கள் கண்டுகொள்ளவில்லை என்பது அதன் அர்த்தம்.

காரணம் அவர்களின் சொந்தப் பிரதேசத்தில் அவர்களை மக்கள் நிராகரித்து வாக்களிப்புக்குச் செல்லாமல் இவர்கள் திருந்தி செயற்பட ஒரு எச்சரிக்கை விடுத்துள்ளனர். அடுத்த தேர்தல்களில் தகுதியான புதியவர்கள் முன்வந்தால் இவர்கள் தூக்கியறியப்படுவர் என்பது திண்ணம்.

அத்துடன் மகிந்த மற்றும் இந்திய கூட்டு இராஜதந்திரம். புலிகளை யுத்தத்தில் தோற்கடித்தது போன்று தற்போதைய தமிழ் அரசியல் கட்சிகளை அரசியலில் தோற்கடிக்க முயற்சிப்பது இன்னோரு திட்டமாகத் தெரிகிறது. காரணம் இந்த இயக்கங்களைப் பிரதிநிதித்துவப் படுத்திய (கருணா தவிர) அரசியல் வாதிகள் அரசியில் தொடர்வது தொடர்ந்து இந்தியாவிற்கு அச்சுருத்தலாகவே இருக்கும் இதனை நிரூபிக்கும் வகையிலேயே இந்திய அரசு தமிழர் விடுதலை கூட்டணியுன் நடந்து கொள்வதைக் காணமுடிகிறது.

இதற்குப் பிரதான காரணமாக அமைவது இவர்கள் வடகிழக்கு அரசியலில் தொடர்நதால் தொடர்ந்தும் தமிழ் நாட்டில் மத்திய மானில அரசுகளை வேண்டாத அசௌகரியங்களை ஏற்படுத்துவர் இத்தகைய செயற்பாடுகள் எதிர்காலத்தில் தமிழ் நாட்டின் அரசியலில் சில சிக்கல்களைத் தோற்றுவிக்கலாம். எனவே இவர்களை இதைச் சந்தர்பமாகப் பயன்படுத்தி மக்களிடமிருந்து பிரிக்கும் தந்திரமாகவே யுத்தம் முடிந்த கையோடு ஜனாதிபதி தேர்தலை நடத்தவைத்து வடகிழக்கு தமிழர்களின் அரசியலில் ஒரு மாற்று சிந்தனையை உருவாக்கி அவர்களின் பாதையை மாற்றும் முதல் பணியில் வெற்றி கண்டுள்ளனர்.

அதனாலேயே நேற்று நடந்த ஐ.பி.என் சி.என்.என். நேர்காணலில் ஜனாதிபதி அவர்கள் யாருக்கு வாக்களித்தார்கள் என்பதை விட அவர்கள் வாக்களித்தார்கள் என்பதே பெரிய விடயம் என இதனை எதிர் மறையாகச் சொன்னார். அதாவது இவர்களில் பெரும்பாலானோரை சிந்திக்க வைத்ததன் காரணமாக அவர்கள் தாங்கள் ஆதரித்துவந்த தமிழ் கூட்டமைப்பைபின் வேண்டுதலை நிராகரிக்க வைத்துள்ளோம் என்பதை பெருமையாகச் சொன்னார். அடுத்த கட்ட நடவடிக்கையாக அந்த வாக்களிக்காத 60% மக்களை நேரடியாக தேசிய கட்சிகளில் நம்பிக்கை கொள்ள வைக்கும் செயற்பாடுகளில் அரசு இறங்கும் அதற்காக அபிவிருத்தி மற்றும் பொருளாத உதவி என்பதுடன் வேலை வாய்ப்புக்கள் துரும்புச் சீட்டாக பயன்படுத்தப்படும்.

இவைகள் அனைத்தையும் அரசு இனி நேரடியாகவோ அல்லது மக்கள் வெறுக்காத ஒரு தமிழ் தரப்பை உருவாக்குவனூடாகவோ மட்டுமே வழங்கும். இதுவே எதிர்காலத்தில் சிறுபான்மை மக்கள் அரசை விமர்சிக்காமல் பாதுகாக்க சிறந்த வழியாகும். அரபு நாடுகளில் ஒரு தந்திரம் பொது மக்களை அரசின் பக்கம் பார்க்காமலிருக்க அரசு கையாளும் அது மக்களுக்கு தேவைக்கு அதிகமாக அனைத்தையும் வழங்கும் இதனால் அந்த நாட்டு மக்கள் அந்த முடியாட்ச்சியின் தீமைகள் அதிகாரம் பற்றி சிந்திப்பதில்லை.

இதேபோன்று வட கிழக்கை முற்று முழுதாக இந்திய, சீன உதவியுடன் தெற்கைவிட அபிவிருத்தி செய்து பொருளாதார ரீதியில் மீட்சியை வழங்கிவிட்டால் இலங்கையின் தேசிய அரசியலுக்கு எதிராக மக்கள் கொதிக்க மாட்டார்கள்.

இதனால் அரசியல் தீர்வு என்று வரும்போது இணைந்த இலங்கைக்குள் சில இனங்காணப்பட்ட அடிப்படைப்பிரச்சினைகளுக்கு மட்டும் விசேட அம்சங்களை வழங்கிவிட்டு தற்போதைய யாப்பை அழகாக நடைமுறைப்படுத்துவதன் மூலம் சிங்கள பௌத்த நாடாக இலங்கையை பாதுகாக்கலாம் என்பது தற்போதைய அரசின் அல்லது பெரும்பான்மை அரசியிலில் புதிய பார்வை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

இதையே முந்தநாள் நடந்த ஐ.பி.என் சீ.என்.என் பேட்டியில் ஜனாதிபதி சொன்னார். “தமிழர்களுக்கு நியாயமான தீர்வு வழங்குவேன் ஆனால் அது என்னைப் பிரதிநிதித்துவப் படுத்தும் சிங்கள மக்கள் ஏற்றுக் கொள்வதாகவே இருக்கவேண்டும் என்பதை நீங்கள் புரிந்து கொள்ளவேண்டும்”

ஆகவே இத்தகைய ஒரு அரசியல் தீர்வை மிகக் குறைந்த அதிகாரங்களை உடையதாக 13ம் திருத்தச் சட்டத்தின்கீழ் வழங்கி அதேநேரம் அதனை முழு நாட்டு மக்களும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் செய்யவேண்டும் என்றால் இத்தகைய செயற்பாடுகளில் வெற்றி பெற்றுத் திகழும் இந்திய அரசியல் மூளை(லை)களையே பயன்படுத்த வேண்டும். இந்திய அரசியல் அமைப்பில் மானிலங்களுக்கு பூரண அதிகாரம் உள்ளது என்று நீங்கள் கூறுபவராயின் அது எவ்வாறு நடைமுறையில் உள்ளது என்பதை கூர்ந்து கவனித்தால் இந்த உண்மையை நீங்கள் விளங்கிக் கொள்வீர்கள்.

எனவே இந்திய மூளைகளைப் பயன்படுத்தி இலகுவாக இதனைச் செய்துவிடும் சந்தர்ப்பம் அரசுக்கு கிடைத்துள்ளது. இதற்கு உதாரணமாக திருகோணமலையில் அனல் மின்னிலையம் அமைக்கப்பட்டுவரும் சம்பூர் பிரதேச மக்களை தேர்தலுக்கு சில தினங்களுக்கு முன்னர் பி.பி.சி தமிழோசை பேட்டி கண்டபோது பசில் ராஜபக்ஷ சொன்ன “ மூன்று மாதத்துக்குள் உங்களை மீள்குடியேற்றம் செய்வதாக கூறியதை பற்றி கேட்டபோது” மக்கள் “அவர்கள் ஏன் இந்த நான்கு வருடங்களும் எங்களை மீள்குடியேற்ற வில்லை” என்று கேட்டதுடன் செய்தபின் நம்புகிறோம் என்று பதிலளித்தனர்.

அதேபோல் சம்பந்தனும் ரவூப் ஹக்கிமும் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் மீள் குடியேற்றுவதாக சொன்னதை பற்றி உங்கள் கருத்தென்ன என்று கேட்க “அவர்கள் தேர்தல் வந்தபோதுதான் எங்களைப்பார்க்கவே வந்துள்ளனர்” என்று கூறி அவர்களையும் நம்ப மறுத்துள்ளனர்.

இதன் பிரதிபலிப்பாகவே திருகோணமலையில் 43% வாக்குகள் மட்டுமே ஜனாதிபதித் தேர்தலில் அளிக்கப்பட்டுள்ளதை நாம் நோக்கலாம். ஆகவே வடகிழக்குத் தமிழர்கள் மத்தியில் அரசியல் கட்சிகளை நம்புவதில் ஒரு வெற்றிடம் உள்ளது. அந்த வெற்றிடத்தை நிரப்பிக் கொள்பவர்களுக்கே இலங்கையின் ஆட்சியும் அதிகாரமும் நிரந்தரமாக அமையும் அந்த இடத்தை இந்திய உதவிகளுடன் மிகவிரைவில் தற்போதைய ஆளும் கட்சி நிரப்ப முயற்சிப்பதை நாம் சில அவர்களின் செயற்பாடுகள் ஊடாக ஊகிக்க முடிகிறது.

இத்துடன் இனி மற்றைய தமிழ் கட்சிகள் அதனை நிரப்ப சந்தர்ப்பத்தையும் அரசு இனி அவர்களுக்கு வழங்காது. காரணம் தற்போது தமிழ் மக்களின் பாரிய பிரச்சினையாகப் பார்க்கப்படுவது அவர்களின் வாழ்வாதாரங்களும் வருமானமும் இதனைச் செய்ய பாரிய அபிவிருத்தி மற்றும் மீள் கட்டமைப்புத் திட்டங்கள் அவசியம் அவைகளை மட்டும் ஒரு புதிய சாரார் ஊடாக அரசு செய்து விட்டால் அந்தத் தரப்பு தமிழ் மக்களின் அங்கீகாரத்தை பெற்றுவிடக்கூடிய சாத்தியங்களே உண்மையாக வட கிழக்குப் பிரதேசங்களில் உண்டு. இதனை பிரச்சாரப்படுத்தி மக்களை ஒரு தரப்பு உரிமைக்கோஷத்துடன் குழப்ப முற்பட்டால் விளைவுகள் தமிழ் தரப்புக்கு பாரிய தோல்வியாக அமையும். ஏனெனில் அபிவிருத்திசார்ந்த வாழ்வியல் மற்றும் அன்றாடப்பிரச்சினைகள் அற்ற சூழலை உருவாக்குகின்ற தரப்புடன் கிழக்கு மக்கள் முற்று முழுதாக சென்றுவிடுவர்.

ஆனால் உரிமைக் கோஷம் வடக்கில் எடுபட வாய்ப்புக்கள் உள்ளன. இதனால் வடகிழக்கு தமிழர்கள் என்ற நிலை இலங்கையிலிருந்து நீங்கிவிடும். இதை நீங்கள் ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் இதுவே உண்மை.

இதற்கு ஒரு உதாரணம் மலையகம் என்பது 1980 ஆண்டுகளில் வடகிழக்கு தமிழர்கள் அரசியல்வாதிகளின் ஒரு பிரதான அங்கமாகவே இருந்தது. இங்கே போராட்டம் என்ற கோஷம் வலுப்பெற்றவுடன் அங்கே அன்றாட வாழ்கைப்பிரச்சினை என்ற விடயம் வலுப்பெற்றது இதனால் வடகிழக்கு அரசியில் தலைவர்களிடமிருந்து மலையகம் தனியாகச் சென்றது. இதே நிலை வடகிழக்கிற்கு ஏற்படும் இதனையே பெரும்பான்மை மற்றும் உலக இந்தியத் தரப்புக்கள் விரும்புகின்றன.

இதனால் பல நன்மைகளும் அதைவிடக் கூடிய தீமைகளும் தமிழர்களுக்கு உண்டு ஆனால் தமிழ் பேசும் முஸ்லீம்களுக்கு இது அவ்வளவு அச்சுருத்தலாக அமையாது காரணம் கிழக்கில் முஸ்லீம்களின் கை ஓங்கி நிற்க அது வாய்ப்பாக அமையும் அத்துடன் இலங்கை முழுவது பரந்து முஸ்லீம்கள் வாழ்வதனால் அவர்களுடன் இணைந்து தேசிய அரசியலில் செல்வாக்குச் செலுத்தி தங்களின் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள இது சந்தர்ப்பம் அளிக்கும்.

வடக்கு கிழக்கு இணைந்திருந்தபோதும் அது கிழக்கு முஸ்லீம்களுக்கு சில அசெளகரியங்களையே ஏற்படுத்தியிருந்தது இதற்கு புலிகளின் அராஜக செயற்பாடுகளும் அடக்கு முறைகளும் வழி வகுத்தன. இதனை நாடிபிடித்தே ஜே.வி.பி யூடாக வட கிழக்கை அரசு பிரித்தது. இனி வடகிழக்கு இணைப்புக்கு சாதாரண கிழக்கு முஸ்லீம்கள் அனுமதிக்க மாட்டார்கள் என்பது அரசுக்குத் தெரியும். முஸ்லீம்கள் மீது புலிகள் பலப்பிரகயோகம் செய்தபோது முஸ்லீம்கள் மேற்குறித்த அரசியல் நிலைபாட்டை எடுத்தே தங்களை ஓரளவு பாதுகாத்துக் கொண்டனர்.

இந்த நிலையில் மாற்றம் ஏற்பட வேண்டுமாயின் முஸ்லீம்களை பூரணமாக திருப்திப்படுத்தவேண்டிய நிலையில் தமிழ் அரசியல் தரப்பினர் உள்ளனர். ஆனால் அதனை தற்போதைய கிழக்கு அரசியல் தமிழ் தலைமைகள் செய்யத் தயாராக இல்லை. இன்னும் முஸ்லீம்களிடமிருந்து புலிகளினால் பறிக்கப்பட்ட நிலங்கள் மீளளிக்கப்படவில்லை. துரத்தப்பட்ட முஸ்லீம்கள் திரும்ப (சில இடங்களில்) சொந்த நிலங்களில் குடியேறியபோது அந்தந்தப்பகுதிகளில் இருக்கும் தமிழ் அரசியல் சக்திகளின் மிரட்டல்களுக்கும் மற்றும் அச்சுருத்தல்களுக்கும் இப்போதும் உள்ளாக்கப்படுகின்றனர். இதனால் முஸ்லீம்கள் தாங்கள் பிரிந்து செயற்படுவது பாதுகாப்பானதாக கருதுகின்றனர். இதை சிங்கள ஆட்சியாளர்கள் ஒரு ப்லஸ் பொயின்டாக பாவித்து தமிழர்களை ஒரு எல்லைக்குள் வாழவைக்கப்பார்க்கின்றனர்.

ஆகவே முதலில் தமிழ் பேசும் சமூகங்களுக்குள் பரஸ்பரம் ஒற்றுமையும் சரியான நம்பிக்கையும் கட்டியெழுப்பப்படவேண்டும். இதற்கு பாரிய தடையாக இருப்பது சிங்கள அரசியல் சக்திகளோ அல்லது தமிழ் பேசும் பொது மக்களோ அல்ல. தமிழ் ஆயுதம் தாங்கிய அரசியல் வாதிகள் இவர்களின் எடுபிடிகள்தான். இவர்கள்தான் இரண்டு சமூகங்களின் ஒற்றுமையை சீர்குலைக்கும் வண்ணம் தங்களின் கைவரிசைகளை காட்டி விடுகின்றனர். இதனால் அவ்வப்போது இரண்டு சமூகங்களுக்கிடையிலும் மீண்டும் பதட்ட நிலைகள் தொடர்கின்றன. நம்பிக்கையீனங்கள் தொடர்கதையாக உள்ளன.

எனவே இவைகளை கலைந்து ஒன்றுமையான இலங்கையை உருவாக்க வேண்டுமாயின் முதலில் தமிழர்களை நடுநிலைக்கு கொண்டு வந்து பின்னர் அவர்களை தேசிய அரசியலில் இனைத்து அடுத்து அவர்களை இலங்கை சட்ட திட்டங்களுக்குள் மட்டும் வாழவைக்கவேண்டும். இதற்கு பல சிங்கள் குடியேற்றங்களும், தமிழ் பிரதேசங்களில் சிங்களவர்களின் செல்வாக்கையும் அதிகரிக்க வேணடும் அப்போதுதான் எந்த சமூகமும் தாங்கள் பெரியவர்கள் என்ற வாதத்தை இலங்கையிலிருந்து ஒழிக்க முடியும் என்று இராஜதந்திரிகள் கருதுகின்றனர். எனவே இந்த விடயத்தில் ஆளும் அரசு பெரு வெற்றி பெற்றிருக்கிறது.

ஆகவே தற்போது நடந்துமுடிந்த ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றிருப்பது எதிர் கட்சிகள் அல்ல, நிச்சயமாக ஆளும் தரப்பும் சர்வதேசமும்தான். தற்போதைய தமிழ் கட்சிகள் ஒட்டு மொத்த உண்மையான பலமும் அவர்களுக்கு தற்போது ஆதரவாக அளிக்கப்பட்ட வாக்குகள் அளவுதான். அந்த வாக்கு வங்கியிலும் எதிர்காலத்தில் ஓட்டைகள் விழும். ஐ.தே. கட்சியின் வாக்கு வங்கியில் விழுந்த ஓட்டையைப் போல.

ஆக, தற்போது வடகிழக்கில் வெற்றி பெற்றிருப்பது ஆளும் தரப்புத்தான் தமிழ் ஆளும், எதிர் கட்சிகள் வெற்றி பெற வேண்டுமாயின் அவர்கள் இனி பாரிய சவால்களை எதிர்நோக்க வேண்டிவரும்.

எதிர்வரும் பொதுத்தேர்தலில் இந்த உண்மைகள் அவ்வளவு பாதிப்புக்களை ஏற்படுத்தாது ஆனால் இன்னும் சில ஆண்டுகளின் பின் வரும் தேர்தல்களில் பெரும்பாலான தமிழர்கள் வாக்களிப்பர் அது யாருக்கு என்பதில்தான் பல கேள்விகள் இருக்கும்.

ஆகவே தமிழர்களின் இலங்கையின் வாழ்வியல் உரிமைப்பிரச்சினையினை மாற்றியமைக்க மிகத்தந்திரமாக ஒரு பிள்ளையார் சுழி போடப்பட்டுள்ளது. அதில் பகடைக்காய்களாக தமிழ் நரைத்த மண்டைகள் பாவிக்கப்பட்டுள்ளனர். இலங்கையின் புதிய அரசியல் நீரோட்டத்தில் இவர்கள் ஒதுங்கி நிற்க வேண்டிய இடம் தற்போது சுட்டிக்காட்டப்பட்டுவிட்டது. இனி நம்பிக்கையான மாற்றத்தை இவர்கள் கோரமுடியாது. காரணம் இவர்கள் நம்பிக்கைக்குரியவர்களாக தமிழர்கள் கருதவில்லை. நமது யூகம் சரியாக இருந்தால் புதிய பாதைகளில் வளமான எதிர்காலம் தமிழர்களுக்கு கிடைக்கும் ஆனால் அதற்கு தமிழ்பேசும் தரப்புக்கள் இன்னும் கொஞ்சம் விட்டுக்கொடுப்புடன் ஒற்றுமைப்பட வேண்டும்.

“ஒற்றுமை என்பதே எங்களுக்கு தெரியாத சொல்லாயிற்றே” என்பதே தமிழ் கட்சிகளின் பிரதான கொள்கை என்பது மக்களுக்குத் தெரியும்.


ஆக்கம் கிழக்கான் ஆதம்

30.01.2010
காத்தான்குடி

Read more...

அமெரிக்க நிறுவனங்கள் மீது தடை - சீனா

தாய்வானுக்கு ஆயுதங்கள் விற்பனை செய்யும் அமெரிக்க நிறுவனங்கள் மீது தடை விதிக்க போவதாக சீனா கூறியுள்ளது. தாய்வானுக்கு ஆறு பில்லியன் டாலர்கள் மதிப்பிலான ஆயுதங்களை விற்பனை செய்ய அமெரிக்கா முடிவு செய்துள்ளதை தொடர்ந்து சீனா இதனை தெரிவித்துள்ளது.

பீஜீங்கில் இருக்கும் அமெரிக்க தூதரை வரவழைத்து இந்த முடிவால் முக்கியமான பல விஷயங்களில் பாதிப்பு ஏற்படும் என்று சீனா கூறியுள்ளது. அத்தோடு இராணுவ விஜயங்களை நிறுத்துவதாகவும் சீனா கூறியுள்ளது. இந்த இராணுவ விஜயங்களால் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே பயன் இருப்பதாக அமெரிக்கர்கள் கருதுகிறார்கள்.

இறுதியாக தாய்வானுக்கு ஆயுதங்களை விற்பனை செய்யும் அமெரிக்க நிறுவனங்கள் தடை விதிக்கப் போவதாகவும் சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆனால் இந்த தடைகளால் அந்நிறுவனங்களுக்கு என்ன பாதிப்பு ஏற்படும் என்பது தெளிவாக தெரியவில்லை.

தாய்வான் பிரிந்து சென்ற மாகாணம் என்று கருதும் சீனா, அமெரிக்கா பிடிவாதமாக தவறான முடிவை எடுத்துள்ளது என்றும் கூறியுள்ளது.


Read more...

Saturday, January 30, 2010

வேதாளம் முருங்கையில் எறியது : மேயர் சிவகீதா மட்டுநகரில் இருந்து தலைமறைவு.

நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் மட்டக்களப்பு மாவட்ட முடிவுகள் வெளியாகிய மறுகணமே பிள்ளையானின் காட்டுமிராண்டித்தனம் மட்டுநகரில் கட்டவிழ்க்கப்பட்டுள்ளது. மட்டு மேயர் சிவகீதா இலக்கு வைக்கப்பட்டுள்ளார். மட்டுநகர் மாநகர சபை அலுவலகம், மேயரின் வீடு என்பன பிள்ளையானின் குழுவினரால் பெற்றோல் குண்டுகள் , கிரனேட்டுக்கள் கொண்டு தாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அவருக்கு ஏற்பட்டுள்ள உயிரச்சுறுத்தல் காரணமாக அவர் தனது முழுக்குடும்பத்துடனும் மட்டக்களப்பு நகரிலிருந்து தலைமறைவாகி பிறமாவட்டம் ஒன்றில் ஒழிந்துவாழ வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

மேற்படி தாக்குதல் சம்பவங்களானது பிள்ளையானின் நேரடி வழிநடத்தலிலே இடம்பெற்றுள்ளது. மட்டுநகர் மாநகர சபை அலுவலகமும் அவரது வீடும் மட்டக்களப்பு நகரின் மிகவும் பாதுகாப்பான பிரதேசங்களில், சுற்றிவர பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படையினரின் சோதனைச் சாவடி அமைந்துள்ள பிரதேசத்திலேயே அமைந்துள்ளது. அத்துடன் தாக்குதலுக்குள்ளான மேயர் இல்லத்திற்கு பாதுகாப்பாக பொலிஸ் காவல்தடை போடப்பட்டுள்ளதுடன் 24 மணிநேரமும் அங்கு பொலிஸார் கடமையில் இருப்பர். அங்குவரும் வாகனங்கள் , ஆட்கள் சோதனையிடப்பட்டே உள்ளே அனுமதிப்படுவது வழமை.

தாக்குதல் நடாத்தப்பட்ட விதம் தொடர்பாக தெரியவருவதாவது, தாக்குதலை நடாத்தச் சென்றவர்கள் மேயர் இல்லத்திற்கு முன்னால் உள்ள பாதுகாப்புச் சோதனைச்சாவடிக்குச் சென்று முதலமைச்சர் வந்துள்ளதாக தெரிவித்தபோது, அங்கு வந்திருந்தவர்கள் முதலமைச்சரின் பாதுகாப்பு அதிகாரிகள் என பரிட்சயமானவர்களாகையால் பொலிஸார் பாதுகாப்பு கதவை திறந்து விட்டுள்ளனர். உள்ளே சென்ற வாகனத்திலிருந்து இறங்கிச் சென்ற பிள்ளையானின் சகாக்கள் மேயரின் அலுவலகக் கதவு மற்றும் யன்னல்களை உடைத்து அதனுள் பெற்றோல் குண்டுகளையும் வீசியதுடன் நேரே அவரது இல்லத்திற்கும் சென்று வீட்டினை கிரனேட்டுக்கள் கொண்டு தாக்கி சேதப்படுத்தியுள்ளனர்.

நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் மட்டகளப்பு மாவட்டத்தில் ஜனாதிபதி மஹிந்தவிற்கு குறைந்த பட்ச வாக்குகளே அளிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் கிழக்கு மாகாண முதலமைச்சரான பிள்ளையான் , பிரபாகரனுக்கு அடுத்த தலைவர், கிழக்கு தமிழ் மக்களின் ஏகோபித்த தலைவர் என்றெல்லாம் போற்றப்படுகின்ற கருணா மற்றும் முஸ்லிம்களின் உன்னதமான தலைவர்கள் , அரசியலில் பழம்தின்று கொட்டை போட்டவர்கள் எனக் கூறப்படுகின்ற பலர் மட்டக்களப்பில் இராப்பகலாக மஹிந்த ராஜபக்சவிற்கு வாக்களியுங்கள் என்று தேர்தல் பிரச்சாரம் செய்தும் அங்கு மஹிந்தவிற்கு 55,663 வாக்குகளே கிடைக்கப்பெற்றுள்ளன. இவ்வாக்குகளில் 75 சதவீதமானவை முஸ்லிம் வாக்குகள் என நம்பகரமாக தெரியவருகின்றது. ஆக முதலமைச்சரும் பிரதி அமைச்சரும் இணைந்து தமது மாவட்டத்தில் 10000 வாக்குளையே பெற்றுள்ளனர்.

மக்கள் இவ்வாறு வாக்களித்ததற்கான காரணம் மஹிந்த மீதுள்ள வெறுப்போ அன்றில் சரத் பொன்சேகா மீதுள்ள நம்பிக்கையோ அல்ல. புலிகள் இயக்கம் அழிக்கப்பட்டு அவ்வியக்கத்தின் தலைவர் கொல்லப்பட்டபோது மக்கள் ஓர் நிம்மதிப்பெருமூச்சு விட்டிருந்தாலும் ஜனநாயக வழிக்கு திரும்பி விட்டோம் எனக் கூறுகின்ற தமிழ் ஆயுதக்குழுக்கள் மீதுள்ள அதிருப்தியே காரணமாகும். மஹிந்த ராஜபக்ச மேற்படி ஆயுக்குழுக்களை தன்னுடன் வைத்திருக்வரைக்கும் தமிழ் மக்களின் ஆதரவினை பெற்றுக்கொள்ள முடியாது என்பதை நடந்து முடிந்த தேர்தல் முடிவுகள் எடுத்துக்கூறியுள்ளது. அதற்காக மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தமிழ் தேசியவாத பாசிசக் கொள்கையை ஏற்று , தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேண்டுதலுக்கமைய சரத்திற்கு வாக்களிக்கவில்லை. ஓட்டு மொத்தத்தில் தமிழ் ஆயுதாரிகளை விரட்டியடிப்பதற்காகவே சரத் பொன்சேகாவிற்கு வாக்களித்துள்ளனர்.

தேர்தல் முடிவுகளால் தமக்கு மக்கள் மத்தியில் உள்ள செல்வாக்கு மஹிந்தவிற்கு தெரிந்துவிட்டது என ஆத்திரம் அடைந்த பிள்ளையான் தனது காட்டு மிராண்டித்தனத்தை காட்ட ஆரம்பித்துள்ளார். மாகாண சபை ஒன்றின் முதலமைச்சர் ஒருவர் தனது மாகாண சபையின் கீழ் உள்ள நகர சபைக்காரியாலயத்தை குண்டு வைத்துத் தகர்த்த சம்பவம் வரலாற்றில் முதற்தடவையாக இடம்பெற்றிருக்கின்றது. இத்தாக்குதலை நடாத்தச் சென்றவர்களை பிள்ளையானே வழிநாடாத்திச் சென்றதாகவும் அவரது வாகனத் தொடரணியுடன் வந்த வாகனங்களில் இரண்டு மேயர் காரியாலயத்திற்கு சென்றதாகவும் பிள்ளையான் வந்திருந்த கறுப்பு நிற வாகனம் தெருஓரத்தில் நின்றதாகவும் சம்பவத்தை நேரில் கண்டவர்கள் கூறுகின்றனர்.

16 வருடங்கள் இயங்காமல் இருந்த மட்டு மாநகர சபை மட்டக்களப்பு வாழ் மக்களின் வரிப்பணத்தில் 40 லட்சம் செலவிடப்பட்டு புனரமைப்புச் செய்யப்பட்டு இயங்கு நிலைக்கு வந்தபோது இவ் அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.

ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் , கடந்த மாகாணசபை தேர்தல் முடிவுகளை எடுத்துக் கூறுகின்றது. மக்கள் அன்று எவ்வாறானதோர் அச்சுறுத்தலின் கீழ் வாக்களித்துள்ளார்கள் என்பதையும் அன்று வாக்களிப்பில் எவ்வாறான மோசடிகள் நிகழ்ந்துள்ளதென்பதையும் எடுத்துக் கூறுகின்றது. எனவே இனிமேலும் தாம் மக்களின் பிரதி நிதிகள் என பிதட்ட முடியாத முன்னாள் புலிகள் தமது பாசிப்போக்கை தமது ஜனநாயக மறுப்பு பாரம்பரியத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த முனைகின்றனர்.

தம்மை மக்களின் பிரதிநிதிகள் என கூறிக்கொண்டு அரச சௌகரியங்களை அனுபவித்துவரும் முன்னாள் புலிகள், எதிர்வரும் காலத்தில் தாம் அரசினாலும் மக்களாலும் விரட்டியடிக்கப்படுவோம் என்பதை உணர்ந்தவர்களாக வன்முறைகளை கையாள முற்படுகின்றனர். இவ்விடயத்தினை அரச தரப்பினர் சரியாக புரிந்து கொண்டு மக்கள் தீர்ப்பினை ஏற்று மேயர் சிவகீதாவின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தவேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.




Read more...

அரசின் ரகசியங்களை வெளிவிடுவேன் : மிரட்டுகின்றார் பொன்சேகா.

அரசாங்கம் தன்னை சொந்தரவு செய்வதை நிறுத்த வேண்டும் என சவால் விடுத்துள்ள முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் பொன்சேகா தனக்கு ஏதாவது இடம்பெற்றால் அரசின் இரகசியங்களை வெளிவிடுவேன் என சற்று முன்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் எச்சரித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவித்ததில் இருந்து தன்னை தொந்தரவு செய்த அதிகாரிகளின் ஒழுங்கீனத்தை விபரமாக பதிவு செய்து வைத்துள்ளதாக தெரிவித்துள்ள அவர், மேலும் பேசுகையில்,

எனக்கு ஏதாவது நடக்குமாக இருந்தால் என்னை மிரட்டியவர்கள் தொடர்பான விபரங்கள், தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்து தொகுத்து வைத்துள்ளேன். என்னை கொலை செய்யும் நோக்குடன் எனது பாதுகாப்பு 91 இராணுவ அதிகாரிகளிலிருந்து நான்கு பொலிஸ் அதிகாரிகளாக குறைக்கப்பட்டுள்ளது. எனக்கு நெருக்கமான அதிகாரிகள் வேலையிலிருந்து விலத்தப்பட்டும், கைது செய்யப்பட்டும், தொந்துரவு செய்யப்பட்டும் வருகின்றனர். எனக்கு நெருக்கமானவர்களான இராணுவத்திலிருந்து முறைப்படி ஓய்வு பெற்ற 3 ஜெனரல்கள் , 3 பிரிகேடியர்கள் , 2 கேணல்கள் கைது செய்யப்பட்டள்ளனர். அவர்களில் ஒருவர் மீது லசந்த விக்ரமதுங்கவின் கொலையுடன் தொடர்புள்ளதாக எவ்விதத்திலும் சம்பந்திமில்லா பொய்குற்றச்சாட்டு சுமத்தப்படுகின்றது. எனது காரியாலயத்திலிருந்த இருபது பேரை கைது செய்து சிஐடி யினர் நேற்று நீதிமன்றில் நிறுத்தி விளக்கமறியலில் வைத்துள்ளனர். அத்துடன் காரியாலயத்திலிருந்த 23 கணனிகளை எடுத்துச் சென்றுள்ளனர். இன்று நாட்டில் சட்டம் ஒழுங்கும் நடைமுறையில் இல்லை. நீதிமன்றிலோ பொலிஸிலோ முறையிடமுடியாத நிலை உள்ளது. எவரும் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம். ஊடக சுதந்திரமில்லை. அனைவரும் தமது கடமைகளை ஒழுங்கா செய்ய முடியாதவாறு ஒருவிதமான அழுத்தத்தின் கீழே வாழ்ந்து கொண்டிருக்கின்றனர் என்றார்.

நாட்டை விட்டு ஓடும் எண்ணம் உள்ளதா எனக்கேட்டபோது. நான் நாட்டை விட்டு ஓடமாட்டேன். பாதுகாப்புக்காக ஒழிக்கவேண்டிய கட்டாயம் இருந்தால் அது வேறு விதமானது. எதுவாக இருந்தாலும் நானோ எனது மனைவியோ , வெளிநாட்டில் படிக்கும் எனது மகள் மாரோ நாட்டுக்கு வெளியே செல்லாதாவாறு எமது கடவுச் சீட்டுக்கள் முடக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

ஹோட்டலில் இருந்து ஜனாதிபதியை கொல்ல சதிசெய்ததாக வெளியாகியுள்ள செய்தி தொடர்பாக கேட்கப்பட்டபோது, எதிர்கட்சித் தலைவரை அல்லது தன்னை கொல்ல திட்டம் தீட்டப்படுவதாக தகவல்கள் கிடைத்ததை அடுத்து பாதுகாப்புக்காக 20 அறைகளை எடுத்து குறிப்பிட்ட ஹோட்டலில் தங்கியிருந்தோம். ஆனால் இன்று கதைகள் வேறுவிதமாக திசை திருப்பப்பட்டுள்ளது. அவர்கள் கூறும் விடயங்களுக்கான எவ்வித ஆதாரங்களோ அடிப்படை காரணங்களோ அவர்களிடம் இல்லை எனவும் கூறியுள்ளார்.

Read more...

பொன்னான மார்க்கத்துக்காகவும் மாற்று ஊடகத்தின் தேவைக்காகவும்........! சதா. ஜீ.

'கொhடியவர்கள் இழைக்கும் தீங்குகளிலும் பார்க்க, அவற்றை நல்ல மனிதர்கள் என்போர் அதிர்ச்சியூட்டுமளவிற்கு மௌனமாய் சகித்துக்கொண்டிருப்பது பற்றியே நாம் இந்தத் தலைமுறையில் வருந்தமுறவேண்டும்' – மார்டின் லூதர் கிங்.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அமோகவெற்றி பெற்றிருக்கிறார். இதை ஆரூடம் கூறியது மாற்று இணையத்தளங்களும் அதேபோல சில மாற்று சிங்கள ஊடகங்களும்தான். பெரும்பான்மையான தமிழ் ஊடகங்களும் அதேபோல சிங்கள ஊடகங்களும் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் செயற்பட மறுத்திருந்தன.

'அறியாத குதிரையைவிட அறிந்த கழதை மேல்' என்பதை சில மெத்தப் படித்தவர்கள் அறிந்திருந்திருந்தும் 'ஊழல்' அரசாங்கத்தை அகற்றவேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டிருந்தார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக ஜனாதிபதி மகிந்தவுக்கு எதிரான பிரதான போட்டியாளர்கள் மேற்குலகின் செல்லப்பிள்ளைகள் என்பதையும் நன்றாகவே அறிந்திருந்தார்கள். இருந்தாலும் இவர்களின் முயற்சி சுயநலத்துக்கானதாகவே அமைந்திருந்தது.

'இன்றைய மனிதன் சுயநலத்தின் கைகளில் ஒரு பொம்மலாட்டப் பதுமையாக மாறிப் போயிருக்கிறான். எதைக் கோரினாலும் அது தனது சுயநலத்துக்காகவே என மனிதன் வாழ்கிறான்' என்பது கூத்தமைப்பின் பிரதான பாடுபொருளாகவே இன்றுவரை திகழ்கிறது.

வர்க்கம் வர்க்கத்தோடு சேரும் என்பதற்கிணங்க நடந்துமுடிந்த தேர்தலில் சரத்பொன்சேகாவை கூத்தமைப்பு ஆதரித்தது. இது வெறும் 'அவருடன் (சரத்பொன்சேகா) நடத்திய பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட திருப்தியல்ல. சரத்தரப்பு வழங்கிய நன்கொடைகளுக்காகவும் வழங்கப்படவிருந்த கொடைகளுக்காகவும்தான்.

இதே நன்கொடையை மகிந்த தரப்பும் வழங்கும் என்பது ஒன்றும் பெரிய விடயமல்ல. ஆனால் அது வாழ்நாள் நன்கொடையாக இருக்காது. ஆனால் சரத்தரப்பினால் வழங்கப்படவிருந்த நன்கொடை அதாவது பதவியில் சரத் இருக்கும் வரை அனுபவிக்கக்கூடியது. எது எப்படியோ பிலாக்கொட்டை நழுவி நெருப்புக்குள்ள விழுந்த கதையாகிவிட்டது.

ஆனால் 'குரங்கும் பூனையும் பிலாக்கொட்டை சுட்ட' கதையாக கூத்தமைப்பு வரவிருக்கும் பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்களின் கைகளைச் சுட்டுகொண்டு பிலாக்கொட்டையை எடுத்துச் சுவைக்கத்தான் போகிறார்கள். இதையிந்த மாற்று தமிழ் அரசியல் கொம்பர்களால் தடுத்துநிறுத்திவிட முடியாது.

'பசித்திருப்பவனுக்கு மீனைக் கொடுப்பதிலும் பார்க்க மீனைப் பிடிக்க கற்றுக்கொடுப்பது மிகச் சிறந்தது' என்பது ஜப்பானிய பழமொழி. எனவே உழைப்பதற்கும் உணவை பெற்றுக்கொள்வதற்கும் வழிசொல்லவேண்டும். ஆனால் கூத்தமைப்பு அவனிடம் சென்று உனக்கு தன்மானம் இருக்குதா? நமக்கு தேவை சுதந்திரம், நம்மை நாமே ஆட்சிசெய்யும் அதிகாரம் அது இது என்று சொல்லி ஏற்கனவே பலநாள் பட்டினிகிடந்தவனை சாகடிப்பதே கூத்தமைப்பின் பணி. இதற்கு புலன் பெயர்ந்த விசிலடிச்சான் குஞ்சுகளும் பெரும்பாலான தமிழ் ஊடகங்களும் பக்கபலமாக இருந்திருக்கின்றன. இனியும் அது தொடரும்.

நடந்துமுடிந்த பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் யாரை ஆதரிக்கவேண்டும் என்பதை துணிந்து சொல்லி அதற்கான சப்புக்கட்டுக்களை தமிழ் மக்கள் தலைகளில் கட்டுவதற்கு கூத்தமைப்பினால் மட்டுமே முடிந்திருக்கிறது. அதேபோல இந்த நூற்றாண்டிலும் உலகின் வேறு எந்த சமூகத்திலும் வேகாத 'பருப்பு' தமிழ் சமூகத்தில் மட்டுமே வேகியிருக்கிறது என்பதை நாம் மறுப்பதற்கில்லை. மறப்பதற்கும் இல்லை.

'தேசியவாதம் என்பது முழு மக்களையும் குறுகிய முன்னுதாரணங்களுக்காகப் பயிற்றுவிப்பதாகும். தேசியவாதத்தால் மக்களின் மனம் கவரப்பட்டால், மானிடப் பண்புகளின் சீரழிவையும் அறிவுமட்டத்தில் குருட்டுத் தன்மையையும் நோக்கி அவர்கள் தள்ளப்படுவார்கள். எதுவிதத் தடையுமின்றி இனவாதம் வளர்ச்சியுற்றால் மனித நாகரிகத்தின் நற்பண்புகளின் அடிப்படை எம்மை அறியாமலேயே மாற்றமடையும். சமூக உறுப்பினனான மனிதனின் முன்னுதாரணம் சுயநலமற்ற பொதுநல நோக்கேயாகும். ஆனால் தேசிய வாதத்தின் குறிக்கோள் ஒரு வர்க்கத்தின் குறிக்கோளைப்போன்றே சுயநலம் கொண்டதாகும்' என சென்ற நூற்றாண்டில் வாழ்ந்த மகாகவி ரவீந்திரநாத் தாகூர் கூறினார். இந்த நூற்றாண்டிலும் இந்தப் புரிதல் சில மரமண்டைகளுக்குப் பிடிபடவில்லை என்பதை என்னவென்று சொல்வது?

மறுபுறத்தே மாற்று அரசியல் தலைமைகளின் முந்திச் செல்வதற்கான ஓட்டம். கூட வருபவர்களின் கூட வரக்கூடியவர்களின் இருத்தலை உதைந்துதள்ளிய ஓட்டம். இவர்களுடைய அர்ப்பணிப்பும் செயற்பாடும் வரலாற்றில் குறிப்பிடக்கூடியதாக இருந்தும் அது பதியப்படுவதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை. கட்சியைக் கட்டிக்காப்பதிலும் வளர்த்தெடுப்பதிலும் இவர்கள்காட்டும் மும்மரம் மக்களை பகுத்தறிவாளர்களாகவாவது வளர்த்தெடுப்பதில் தவறிவிட்டன.

அதேபோல மாற்று அரசியல் சக்திகளும் முற்போக்கு சக்திகளுக்கும் மக்களை அரசியல் மயப்படுத்துவதற்கான சந்தர்ப்பம் கனிந்திருக்கிறது. நித்தம் நித்தம் கொலைகள் விழுந்த பூமியில் இன்று நன்விதை விதைக்கப்படவேண்டியிருக்கிறது. ஆனாலும் இதற்கான தயார்ப்படுத்தல்கள் எதுவும் நடைபெறுவதாக அறியமுடியவில்லை. இது மீண்டும் தேசியத்தை கொண்டாடுபவர்கள் 'இது முற்போக்கு தேசியம்' என்று கொட்டமடிப்பதற்கு வழிசமைத்துவிடும். இது மீண்டும் மானிடப் பண்புகளின் சீரழிவையும், அறிவுமட்டத்தில் குருட்டுத் தன்மையையும் நோக்கி மக்களை வழிநடத்திச் செல்லும். இதற்கான ஆயத்த நிலைகளிலேயே இன்றும் 'முற்போக்காணவர்கள்' என்று காட்டிக்கொள்ளும் சிலர் என்ஜிஓக்களின் துணையுடன் காத்திருக்கின்றனர்.

எமது தெரிவு இலட்சத்தின் தெரிவுகளல்ல. இலட்சியத்தின் தெரிவு. (வரித்துக்கொண்ட கொள்கைக்காக நாம் இழந்தது உயிர்களும் உடமைகளும் மட்டும்தானா?) அது ஒவ்வொருவரின் கொள்கை கோட்பாடுகளுடன் பொருந்திப்போகக்கூடியதல்ல. சில வேறுபாடுகள் சில ஏற்றத்தாழ்வுகள் இருக்கத்தான் செய்யும். ஆனால் ஒரே நேர்கோட்டுக்கு வரக்கூடியவர்கள். ஒருவரை ஒருவர் அரவணைத்து மக்களை முன்நோக்கித் தள்ளக்கூடியவர்கள். முன்னொரு காலத்தில் மக்களை அரசியல் மயப்படுத்த வேண்டும் என்று துடித்தவர்கள்தானே? இன்று ஏன் ஆளுக்கொரு திசையில் பயணிக்கின்றனர்? ஒருவேளை அரசியலை தனது ஜீவனோபாயமாக (Professional) கொள்வதினாலோ என்னவோ?

'மனிதனுடைய மதிப்பிட முடியாத இனிய உடமைகளில் சிறந்தது அவனது வாழ்வாகும். அவன் ஒரு தடவைதான் வாழ முடியும். காலம் முழவதையும் குறிக்கோள் இல்லாமல் பாழாகிவிட்டேனே என்ற துயரம் வதைப்பதற்கு இடமளிக்காத வகையில் அவன் சீராக வாழவேண்டும். அற்பனாக வாழ்ந்து இழிவு தேடினேன் என்ற அவமான உணர்ச்சி உள்ளத்தை எரிப்பதற்கு இடம் கொடுக்காத வகையில் அவன் நேராக வாழவேண்டும். உலகத்தின் தலைசிறந்த இலட்சியத்துக்காக – மனித குலத்தின் விடுதலைப் போராட்டம் ஒன்றின் பொன்னான மார்க்கத்துக்காக நான் என் வாழ்வு முழுவதையும் அர்ப்பணித்தேன் என்று இறக்கும் பொழுது உரிமை கோரும் வகையில் அவன் வாழ வேண்டும். திடீர் நோயோ – சோகவிபத்தோ வாழ்வுக்கு வெடிவைக்கக்கூடுமாதலால் மனிதன் தன் வாழ்வின் ஒவ்வொரு கணப்பொழுதையும் நன்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும்' – ஆஸ்த்ரோவ்ஸ்கி.

மானிடப் பண்புகளின் சீரழிவைத் தடுக்கவும், அறிவு மட்டத்தில் குருட்டுத் தன்மையை நீக்கவும் நமக்கு ஊடகம் தேவை. அது கட்சி சார்ந்ததாகவோ தனிநபர் சார்ந்ததாகவோ இல்லாமல் நாமனைவரையும் சார்ந்ததாக ஊடகத்தின் தேவை அவசியமாகிறது. செய்திகளை செய்திகளாகவும் பகுத்தறிவுள்ள ஆக்கங்களையும் மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்கு நம்மிடம் எந்த தொடர்புசாதனமும் இல்லை.

ஏனெனில் அண்மையில் நடந்துமுடிந்த தேர்தல் பிரச்சாரத்தில் பெரும்பாலான தமிழ் ஊடகங்கள் 'சுயநலத்தை தூக்கிப்பிடித்த கூத்தமைப்பை 'தேசியம்' என்ற கோதாவில் தூக்கிப்பிடித்தன. அதுவே வடகிழக்குப் பகுதிகளிலுள்ள குக்கிரமங்கள்வரை சென்றடைந்தன.
'சுடுது மடியைப்பிடி' என்பதுபோல திடீரென பத்திரிகையையோ வானொலியையோ அல்லது தொலைக்காட்சியையோ தொடங்கி அடுத்து நடைபெறும் பொதுத் தேர்தலுக்குள் மக்களை ஓரே அணியின் கீழ் கொண்டுவந்துவிட வேண்டும் என்றால் அது முடியாத காரியம். அது எதிர்வினையையே ஏற்படுத்தும். எனவே தொலைநோக்கும், நீண்ட பயணமும், நேரியபார்வையும் கொண்டு நாம் செயற்படுவோமாயின் அந்த பொன்னான மார்க்கத்தை நாம் அடையமுடியும்.

நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் கூத்தமைப்பு மூன்றில் இரண்டு பெரும்பாண்மையைப் பெற்றுக்கொள்ளத்தான் போகிறது. பாராளுமன்றம் சென்று எமது எதிர்ப்பையும் நமது உரிமையையும் பற்றிப் பேசுவோம், போராடுவோம் என்று கதையளப்பார்கள். இது கதையல்ல நிஜம் என்று பெரும்பாலான தமிழ் ஊடகங்கள் ஊதத்தான் போகின்றன. இவர்கள் வயிறு கிழியக் கத்துவதெல்லாம் வெறும் 'கற்பிதம்' என்ற புரிதலே இல்லாமல் தமிழ் மக்களும் வாக்குகளை அள்ளிக்கொடுக்கத்தான் போகின்றார்கள்.

தற்போதைய நாடாளுமன்ற சபாநாயகர் லொக்குபண்டாராவை அன்று சபாநாயகராக்குவதற்கு கூத்தமைப்பின் 22 உறுப்பினர்களும் உறுதுணையாக இருந்தார்கள். இது தொடர்பாக புரட்சி 'வண்டி'க்காரன் சுரேஸ் பிரேமச்சந்திரனிடம் 'இடதுசாரியான டி. குணசேகராவை விட்டுவிட்டு இனவாதியான லொக்குபண்டாவை ஏன் ஆதரிக்கிறீர்கள்?' என்று கேட்டதற்கு, 'அரசாங்கத்துக்கு கடிவாளம் போடத்தான்' என்றார்.

ஆனால் அரசாங்கம் தங்குதடையின்றி கூத்தமைப்பு குறிப்பிடுகின்ற தமிழர்களுக்கெதிரான சட்டமூலங்கள் உட்பட சகல சட்டமூலங்களையும் நிறைவேற்றியே இதுவரை வந்திருக்கிறது. (இதேநபர் தான் தன்மகளின் மருத்துவ படிப்புக்காக இந்தியாவின் முன்னாள் மத்திய சுகாதார அமைச்சர் அன்புமணியின் அழைப்பு மணியை அடித்தார்) இதேநபர்கள்தான் வடகிழக்கிலுள்ள ஒரு தமிழ் குடிமகன் அமைச்சர் டக்கிளசையோ கருணாவையோ அணுகி அரசாங்க வேலையொன்றை பெற்றுவிடக்கூடாது. 'இது மனங்கெட்ட பிழைப்பு. உனக்குத் தேவை சுந்திரம், சுயகௌரவம் இன்னபிற' என்று எரியவிட்டு குளிர்காய்வார்கள்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா முன்வைத்த இனப்பிரச்சினைக்கான 'தீர்வுப் பொதி'யை இனவாத அரசியல் கட்சிகளான ஐ.தே.கட்சி, ஜே.வி.பி, சிங்கள உறுமய ஆகியவற்றுடன் நேர்கோட்டில் நின்று எதிர்தது என்பது வரலாறு. அவ்வாறு செய்தும் அதே மூஞ்சியுடன் தமிழ் மக்களிடம் வாக்குக் கேட்டு பாராளுமன்றம் தெரிவாகியிருக்கிறார்கள். மனச்சாட்சியுள்ள ஒரு சாதாரண மனிதன்கூட அன்று செய்தது தவறு என்றாவது ஒத்துக்கொள்வான். ஆனால் இவர்கள்? அவ்வாறான ஒரு பொன்னான சந்தர்ப்பத்தையே நாத்தியடித்தவர்களுக்கு இனிவரப்போகும் வாய்ப்புக்களை பிறங்காலால் உதைந்துவிட்டு விளக்கம் சொல்வதெல்லாம் 'சப் மேட்டர்'

'தவிட்டைத் தேடிப்போக சம்பா அரிசியை நாய் கொண்டுபோன கதையாக இருந்த அற்ப சுதந்திரமும் பறிபோய்விடுமோ?' இந்த கூத்தமைப்பு கூட்டங்களால் என்பதே எம்முள்ள மிகப்பெரும் சவால்.

'ஒன்றே குலம் ஒருவனே தேவனல்ல அனைவரும் தேவ'னென்று ஒரே குடையின் கீழ் மாற்று அரசியல் தலைமைகளும் முற்போக்கு அரசியல் சக்திகளும் ஒன்றிணைந்து, முன்னொரு காலத்தில் வடகிழக்கில் நிலவிய இடதுசாரி அரசியல் சக்திகளின் எழுச்சியை மீண்டும் துளிர்விட ஒன்றிணைந்து உழைக்கும் காலமிது.


Read more...

ஈரானுக்கு எதிராக புதிய தடைகள்

ஈரான் மீது புதிய தடைகளை விதிப்பதற்கு ஆதரவாக அமெரிக்க செனட் சபை உறுப்பினர்கள் வாக்களித்துள்ளனர். ஈரான் அதன் அணுவாயுதத் திட்டத்தை கைவிட வேண்டும் என்று உலக நாடுகள் ஈரானை நெருக்கி வரும் வேளையில் அந்நாட்டுக்கு எதிராக புதிய தடைகளை அமெரிக்கா விதிக்கவுள்ளது.

புதிய தடைகள் விதிப்பதால் உரிய பலன்கள் கிடைக்கும் என்று ஜனநாயகக் கட்சி செனட்டர் கிரிஸ் டூட் கூறினார். ஈரானின் அணுவாயுத நடவடிக்கைகள் அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளின் பாதுகாப்புக்கு கடுமையான மிரட்டலாக உள்ளன என்று அவர் சொன்னார்.
அணுவாயுதங்கள் தயாரிப்பதில் ஈரான் ஈடுபட்டுள்ளதாக மேற்கத்திய நாடுகள் கூறும் குற்றச்சாட்டை ஈரானிய அதிகாரிகள் தொடர்ந்து மறுத்து வருகின்றனர்.

Read more...

பொன்சேகாவிற்கு பாதுகாப்பளிக்க அமெரிக்கா வலியறுத்தல்!

''பொன்சேகாவிற்கு இலங்கை அரசு தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று அமெரிக்க அரசு வலியுறுத்தியுள்ளது. இலங்கை அதிபர் தேர்தலில் ராஜபக்ச வெற்றி பெற்றதைத் தொடர்ந்து எதிர்த்து போட்டியிட்ட சரத் பொன்சேகாமீது பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தி அவரை கைது செய்ய நடவடிக்கை எடுத்துவருகிறது.

ராஜபக்சவை குடும்பத்துடன் கொலை செய்ய சதிதிட்டம் தீட்டினார் என்று குற்றம் சாட்டியள்ள இலங்கை அரசு சரத்பொன்சேகாவின் பாஸ்போட்டை முடக்கியுள்ளது. தன்னை கைதுசெய்து சிறையில் அடைக்கவே ராஜபக்ச அரசு இந்த பொய் குற்றச்சாட்டை சுமத்தி பாஸ்போட்டை முடக்கியுள்ளதாக சரத்பொன்சேகா தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இலங்கையிலிருந்த தப்பி வெளிநாடுகளில் தஞ்சம் அடைய சரத்பொன்சேகா திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் பரவின. இலங்கிலாந்து, அமெரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் தஞ்சம் கேட்க சரத் பொன்சேகா திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டது.

இந்நிலையில இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் இலங்கை அரசுக்கு எழுதியுள்ள கடித்தில் சரத் பொன்சேகாவின் பாதுகாப்பு உறுதிபடுத்தப்பட வேண்டும்.

அவர் அமெரிக்க குடியுரிமை பெற்றவர் என்பதால் அவரின் பாதுகாப்பு குறித்து இலங்கை அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கை குறித்து கவலை அடைந்துள்ளோம். எனவே சரத் பொன்சேகாவை தகுந்த பாதுகாப்புடனும், மரியாதையுடனும் இலங்கை அரசு நடத்த வேண்டும்."என்றுவலியுறுத்தியுள்ளது.

மேலும் அமெரிக்காவின் தூதர் சரத் பொன்சேகாவை தொடர்பு கொண்டு அமெரிக்காவின் குடிபெயர்வது தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்திவதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Read more...

ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்றுள்ள நிலையில் பதட்டம் அதிகரிக்கின்றது.

(By K. Ratnayake) செவ்வாய் கிழமை நடந்த ஜனாதிபதி தேர்தலில் தற்போது பதவியில் இருக்கும் மஹிந்த இராஜபக்ஷ வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நேற்றும் இலங்கையில் பதட்டமான அரசியல் சூழ்நிலை தொடர்ந்தது. பெரும் இடைவெளியில் வெற்றி பெற்ற போதும், தோல்வியை ஏற்றுக்கொள்ளாத எதிர்க் கட்சி வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகா, பெறுபேறுகளை சவால் செய்வதாக அறிவித்தார்.

செய்தியாளர்களுடன் பேசிய பொன்சேகா, தேர்தல் முடிவுகளை திரிபுபடுத்தப்பட்டவை என கண்டனம் செய்ததோடு சட்ட ரீதியில் சவால் செய்யப்போவதாகவும் தெரிவித்தார். "வெற்றி எங்களிடம் இருந்து அரசாங்கத்தால் அபகரிக்கப்பட்டுள்ளது. இங்கு ஜனநாயகம் கிடையாது," என அவர் தெரிவித்தார். இராஜபக்ஷ அரச சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்துள்ளார், தன்னை தாக்குவதற்கு அரச ஊடகங்களைப் பயன்படுத்தியதோடு இடம்பெயர்ந்த தமிழர்கள் வாக்களிப்பதை தடுத்தார் அன்ற அடிப்படையில் வாக்குகளை இரத்துச் செய்யுமாறு கோரி, தேர்தல் ஆணையாளருக்கு ஜெனரல் கடிதமெழுதியுள்ளார்.

அரச இயந்திரங்கள் மீதான தனது கட்டுப்பாட்டை அரசாங்கம் முழுமையாக சுரண்டிக்கொண்டதோடு அரச ஊடகத்தை அதன் பிரச்சார உபகரணமாக பயன்படுத்திக்கொண்டது என்பதில் சந்தேகம் கிடையாது. முன்னைய தேர்தல்களை போலவே, வடக்கு நகரான யாழ்ப்பாணத்தில் நடந்த குண்டு வெடிப்புகள் உட்பட, தேர்தல் தினம் வன்முறைகளால் நிறைந்து போயிருந்தது. பிரச்சாரத்தின் போது, சுமார் 900 வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. கடந்த மே மாதம் பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளின் தோல்வியின் பின்னர் தடுத்து வைக்கப்பட்டிருந்த பத்தாயிரக்கணக்கான தமிழ் பொது மக்களின் வாக்களிக்கும் உரிமை மறுக்கப்பட்டது.

எவ்வாறெனினும், பொன்சேகா பெற்ற 40 வீத வாக்குகளுக்கு எதிராக இராஜபக்ஷ 58 வீத வாக்குகளை அல்லது கிட்டத்தட்ட இரண்டு மில்லியனுக்கு நெருக்கமான வாக்குகளைப் பெற்றுள்ளார். இதுவரை இந்த முடிவுகளை திருத்தக் கூடிய அளவுக்கு வாக்கு மோசடி நடந்ததாக செய்திகள் வரவில்லை. எதிர்க் கட்சிகளான வலதுசாரி ஐக்கிய தேசியக் கட்சி (யூ.என்.பி.) மற்றும் சிங்கள அதிதீவிரவாத மக்கள் விடுதலை முன்னிணியும் (ஜே.வி.பி.) பொன்சேகாவை ஒரு ஜனநாயக மாற்றீடாக முன்னிலைப்படுத்திய போதிலும், அவர் நாட்டின் உயர்மட்ட ஜெனரல் என்ற வகையில், இராணுவத்தால் முன்னெடுக்கப்பட்ட யுத்தக் குற்றங்கள் மற்றும் பகிரங்கமான ஜனநாயக உரிமை மீறல்களுக்கு இராஜபக்ஷவைப் போல் அவரும் பொறுப்பாளியாவார். புலிகளின் தோல்வியின் பின்னர் தான் ஓரங்கட்டப்பட்டதை அடுத்தே, பொன்சேகா இராஜபக்ஷவிடம் இருந்து பிரிந்து சென்றார்.

தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேசங்களில் பொன்சேகா வெற்றி பெற்றுள்ள அதே வேளை, முன்னர் புலிகளின் ஊதுகுழலாக செயற்பட்ட தமிழ் கூட்டமைப்பின் ஆதரவு ஜெனரலுக்கு கிடைந்திருந்தும் கூட, இரு வேட்பாளர்கள் மீதான பகைமையும் அதிருப்தியும் வாக்களித்தோரின் எண்ணிக்கை குறைவாக இருந்ததில் ஒப்புவிக்கப்பட்டுள்ளது. வடக்கில் யாழ்ப்பாண மாவட்டத்தில், தொகுதிவாரியான வாக்களிப்பு வெறும் 26 வீதமாகவே இருந்தது. உள்நாட்டு யுத்தத்தின் கடைசி மாதங்களில் அழிக்கப்பட்ட முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில், ஜனத்தொகையில் பெரும்பகுதியினர் இடம்பெயர்ந்திருந்ததன் ஒரு பகுதியாக, அங்கு வாக்களித்தோரின் எண்ணிக்கை முறையே வெறும் 14 மற்றும் 8 வீதமாகவே இருந்தன.

ஆயினும், சிங்கள மக்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேசங்களில், இராஜபக்ஷ கணிசமான பெரும்பான்மையைப் பெற்றுள்ளார். பிரதானமாக கிராமப்புற பிரதேசங்களில் இந்த அளவு மிகப் பெரியதாக இருந்தது. அடிப்படை வேறுபாடுகள் அற்ற மற்றும் நம்பக்கூடிய ஒரு சில வாக்குறுதிகளை மட்டுமே வழங்கிய இரு வேட்பாளர்களுக்கிடையில், பெரும்பான்மையான வாக்காளர்கள் ஆட்சியில் இருக்கும் ஜனாதிபதியை தேர்வு செய்துகொண்டனர். மொத்தமாக, நாட்டின் 22 மாவட்டங்களில் 16 மாவட்டங்களை இராஜபக்ஷ வென்றுள்ளார். இந்த பெறுபேறுகள், புலிகளின் தோல்வியின் பின்னர் கடந்த ஆண்டு நடந்த ஒரு தொகை மாகாண சபை தேர்தல்களின் முடிவுக்கு சமாந்தரமாக இருந்தன.

இந்த பிரச்சாரத்தின் கொடுரத் தன்மை கொழும்பு அரசியல் ஸ்தாபனத்திற்குள் நிலவும் ஆழமான வேறுபாடுகளை பிரதிபலிக்கின்றது. புலிகளின் தோல்வியானது தசாப்த காலங்களாக உத்தியோகபூர்வ தமிழர்-விரோத பாரபட்சங்களால் எரியூட்டப்பட்ட, கடைசியாக 26 ஆண்டுகால உள்நாட்டு யுத்தமாக வெடித்த இனவாத பிளவுகளைத் தீர்க்கவில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக, இந்த மோதல்கள் நாட்டின் பெரும்பகுதியை அழிவுக்குள்ளாக்கியதோடு நாட்டின் மோசமடைந்துவரும் பொருளாதார நெருக்கடியை மேலும் குவித்துள்ளது.

ஆளும் கும்பலின் சக்திவாய்ந்த பகுதினர், சர்வதேச நாணய நிதியத்தின் வயிற்றிலடிக்கும் கோரிக்கைகளை அமுல்படுத்தவும் எந்தவொரு அரசியல் எதிர்ப்பையும் நசுக்கவும் சிறந்த வழிமுறையாக பொன்சேகாவை ஆதரித்தன. இலங்கையிலான அரசியல், பெரும் வல்லரசுகளுக்கு இடையில் வளர்ச்சி கண்டுவரும் பகைமைக்குள்ளும் அகப்பட்டுக்கொள்கின்றது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவுடனான நாட்டின் பாரம்பரிய திசையமைவின் செலவில், இராஜபக்ஷ அரசாங்கம் இலங்கையை சீனாவுடன் மிகவும் நெருக்கமாக பிணைப்பது சம்பந்தமாகவும் ஆளும் வட்டாரத்துக்குள் கணிசமான கவலை காணப்படுகிறது.

தேர்தலின் பின்னர் பதட்ட நிலைமைகள் மறைவதற்கு மாறாக, கூர்மையடைகின்றன. எதிர்த் தரப்பினரை அச்சுறுத்தும் ஒரு நடவடிக்கையில், பொன்சேகாவும் அவரது குடும்பமும் மற்றும் அவரது ஆதரவாளர்களும் தங்கியிருந்த மத்திய கொழும்பில் அமைந்துள்ள சினமன் லேக்சைட் ஹோட்டலைச் சூழ நேற்று நூற்றுக்கணக்கான கன ஆயுதம் தரித்த துருப்புக்களும் பொலிசாரும் நிலைகொண்டிருந்தனர். யூ.என்.பி. தலைவர் ரணில் விக்கிரமசிங்க, ஜே.வி.பி. யின் அனுர குமார திசாநாயக்க மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ரவுப் ஹக்கீம் உட்பட ஏனைய எதிர்க் கட்சிகளின் தலைவர்களும் அங்கிருந்தனர்.

ஹோட்டலில் இராணுவத்தை விட்டோடிய 400 பேர் இருக்கின்றார்கள் என்பதை தெரிந்து கொண்ட பின்னர் "பாதுகாப்பு நடவடிக்கையை" இராணுவம் மேற்கொண்டதாக இராணுவப் பேச்சாளர் உதய நாணயக்கார ஊடகங்களுக்குத் தெரிவித்தார். "அவர்கள் 100 அறைகளை ஒதுக்கியுள்ளார்கள். அவர்கள் உயர்மட்டத்தில் பயிற்றப்பட்ட இராணுவச் சிப்பாய்கள். அவர்கள் கூடியிருந்ததைப் பற்றி நாங்கள் சந்தேகப்படுகிறோம்," என அவர் கூறினார். நுழைபவர்களையும் வெளியேறுபவர்களையும் சோதனையிட்ட படையினர் அருகில் உள்ள வீதிகளை மூடினர். "அவர் [பொன்சேகா] சதிப் புரட்சியை நோக்கிய முதல் நடவடிக்கையை" எடுப்பதை தடுப்பதற்கே அந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என ஒரு பெயர் குறிப்பிடாத அதிகாரி ராய்ட்டருக்குத் தெரிவித்தார்.

இராணுவத்தை விட்டோடியவர்கள் தன்னுடன் இருந்தனர் என்பதை மறுத்த பொன்சேகா, அரசாங்கம் தன்னை கைது செய்ய முயற்சிப்பதாக குற்றஞ்சாட்டினார். தனது பாதுகாப்பு அதிகாரிகளையும் குண்டு துளைக்காத கார்களையும் திருப்பித் தருமாறு கோருவதன் மூலம் தனது உயிருக்கு ஆபத்து ஏற்படுத்துவதாக அவர் இராஜபக்ஷ மீது குற்றஞ்சாட்டினார். "இந்த ஹோட்டல் விலை கூடியது என்பதால் என்னால் இங்கு இருக்க முடியாது. இது என்னை கொல்வதை இலக்காகக் கொண்ட ஒரு பயிற்சியாகும்" என அவர் தெரிவித்தார். பொன்சேகா கைதுசெய்யப்படுவார் என்பதை அரசாங்க அதிகாரிகள் மறுத்ததோடு அவர் நேற்றிரவு ஹோட்டலை விட்டு வெளியேறினார்.

பகை அரசியல் முகாங்களுக்கிடையில் கேட்பாரற்ற மோதல்கள் நடப்பதையே இந்த சம்பவம் முன்னறிவிக்கின்றது. நூற்றுக்கணக்கான அரசியல்வாதிகள், பத்திரிகையாளர்கள் மற்றும் தமிழர்களை கொலை செய்ய அரசாங்க-சார்பு கொலைப் படைகளை பயன்படுத்துவது உட்பட யுத்தமொன்றை முன்னெடுத்த இராஜபக்ஷவும் பொன்சேகாவும், அதிகாரத்தைப் பெற்றுக்கொள்ளவும் பற்றிக்கொள்ளவும் எந்தவொரு வழிமுறையையும் நாடக்கூடியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இராஜபக்ஷவை வெளியேற்ற, பொன்சேகாவும் எதிர்க் கட்சிகளும் இராணுவம் மற்றும் அரச இயந்திரத்தில் உள்ள ஏனைய சக்திகளையும் பயன்படுத்தக் கூடும் என்ற அரசாங்கத்தின் ஆழமான விழிப்புணர்வையே அந்த ஹோட்டலை சுற்றிவளைப்பதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பிரதிபலிக்கின்றன.

தேர்தல் முடிவுகளை எதிர்க்க வீதிப் போராட்டங்களுக்கு அழைப்பு விடுக்க எதிர்பார்க்கின்றீர்களா என டெலிகிராப் செய்தியாளர் கேட்ட போது, "நாங்கள் உடனடியாக மக்களை வீதிக்கு வருமாறு இன்னமும் கேட்கவில்லை. விடயங்களை ஏற்பாடு செய்ய வேண்டும். நான் உங்களை ஆச்சரியத்துக்குட்படுத்துவேன், பொறுத்திருந்த பாருங்கள்," என பொன்சேகா பதிலளித்தார். அதை அவர் விரிவுபடுத்தவில்லை. தற்காலிகமாகவேனும் ஜெனரல் இலங்கையை விட்டு வெளியேறலாம் என்பதற்கான சில அறிகுறிகள் காணப்படுகின்றன.

தேர்தல் மோசடி மற்றும் இராஜபக்ஷ அரசாங்கத்தின் ஜனநாயக-விரோத பண்பை வலியுறுத்தும், தேர்தல் மற்றும் முடிவுகள் பற்றிய சர்வதேச செய்தி வெளியீட்டில் ஒரு தெளிவான பக்கச்சார்பை காணக்கூடியதாக உள்ளது. உதாரணமாக, பிரித்தானியாவை தளமாகக் கொண்ட நேற்றைய டைம்ஸ் பத்திரிகையில் வெளியான ஒரு கட்டுரைக்கு, இராஜபக்ஷவுக்கு அரசுக்குச் சொந்தமான ஊடகம் வெளிப்படையாக பிரச்சாரம் செய்ததை வெளிச்சம் போட்டுக் காட்டி, "அதிகாரத் துஷ்பிரயோகம் ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்குகிறது" என தலைப்பிடப்பட்டிருந்ததோடு ஜனாதிபதி, "மேற்கத்தைய ஜனநாயக பயன்பாடு தனது நாட்டுக்குத் தேவையில்லை என நீண்டகாலமாக வாதிடுகின்றார்" என்று தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் செலவில் இலங்கையில் சீனா செல்வாக்கை வளர்த்துக்கொள்வதைப் பற்றி பைனான்சியல் டைம்சும் கவனத்தை திருப்பியுள்ளது. "யுத்தத்தின் போது, ஆயுதங்களை வழங்கி, தீவின் அரசாங்கத்தின் யுத்தக் குற்றங்கள் பற்றிய விசாரணைக்கான ஐ.நா. அழைப்பை தடுத்து பெய்ஜிங் இலங்கைக்கு முக்கிய ஆதரவாளராக இருந்துள்ளது. இலங்கை இந்து சமுத்திரத்தின் கடல் மார்க்கத்தின் மூலோபாய முக்கியத்துவத்துடன் அமைந்திருப்பதால் சீனா இலங்கையை நேசிக்கின்றது என ஆய்வாளர்கள் சந்தேகிக்கின்றனர். ஜனாதிபதியின் சொந்த நகரான அம்பாந்தோட்டையில் துறைமுகம் ஒன்றை கட்டுவதற்காக பெய்ஜிங் உதவுகின்றது," என அந்தப் பத்திரிகை பிரகடனம் செய்கின்றது.

சோசலிச சமத்துவக் கட்சியும் அதன் வேட்பாளர் விஜே டயசும், தமது தேர்தல் பிரச்சாரத்தின் போது, அடுத்த அரசாங்கம் நாட்டின் பொருளாதார பிரச்சினைகளில் இருந்து விடுபடும் முயற்சியில் உழைக்கும் மக்களின் வாழ்க்கைத் தரத்தின் மீது கொடூரமான தாக்குதலை துரிதமாக தொடுக்கும் என எச்சரிந்திருந்தனர். பொன்சேகாவுக்கும் இராஜபக்ஷவுக்கும் இடையிலான இரக்கமற்ற பகைமை, ஆபத்தை தணித்துவிடவில்லை. மாறாக, ஆளும் வர்க்கத்துக்கு பணயமாக வைக்கப்பட்டுள்ளது என்ன என்பதைப் பற்றிய ஒரு கூர்மையான அறிகுறியாகும். இரு அரசியல் முகாங்களும் பொருளாதார நெருக்கடியின் சுமைகளை தொழிலாளர்கள் மீது சுமத்த உறுதிபூண்டுள்ளன.

முன்னாள் இடதுசாரிகளான ஐக்கிய சோசலிச கட்சி மற்றும் நவசமசமாஜக் கட்சிக்கும் எதிராக, சோசலிச வேலைத்திட்டம் ஒன்றை அமுல்படுத்துவதன் பேரில், தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்துக்கான போராட்டத்தில் சகல முதலாளித்துவ கும்பல்களுக்கும் எதிராக சுயாதீனமாக அணிதிரள்வதன் மூலம் மட்டுமே தொழிலாளர்களால் தமது அடிப்படை ஜனநாயக உரிமைகளை காக்க முடியும் என சோசலிச சமத்துவக் கட்சி வலியுறுத்தியது. கொழும்பில் அரசியல் நெருக்கடி ஆழமடைகின்ற நிலையில், அத்தகைய போராட்டத்துக்கான தேவை மேலும் இன்றியமையாததாகியுள்ளது.

சோசலிச சமத்துவக் கட்சியின் வேட்பாளர் விஜே டயசுக்கு ஒரு சிறிய ஆனால் முக்கியத்துவம் வாய்ந்த வாக்குகள் கிடைத்துள்ளன. 2005 ஜனாதிபதி தேர்தலில் கிடைத்ததை விட இம்முறை கூடுதலாக 4,195 வாக்குகள் கிடைத்துள்ளன. கட்சி நாட்டின் 22 தேர்தல் மாவட்டங்களிலும் மற்றும் தேர்தல் தொகுதிகளில் அனைத்திலும் வாக்குகளைப் பெற்றுள்ளது. குறிப்பிடத்தக்க வகையில், பிரதானமாக தமிழ் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் முக்கியமான தட்டினரிடம் இருந்து வடக்கில் யாழ்ப்பாண மாவட்டத்தில் சோசலிச சமத்துவக் கட்சி 657 வாக்குகளை பெற்றுள்ளது. தொழிற்சங்கங்களின் காட்டிக்கொடுப்பு மீதான சோசலிச சமத்துவக் கட்சியின் இடையராத எதிர்ப்பின் காரணமாக பெருமளவான பெருந்தோட்ட தொழிலாளர்கள் வாழும் நுவரெலியா மாவட்டத்தில் 310 வாக்குகளைப் பெற்றுள்ளது.

மாறுபட்ட விதத்தில், முன்னாள் தீவிரவாதிகளின் ஆதரவு பெருமளவில் சரிந்து போயுள்ளது. யூ.என்.பி. யின் "சுதந்திரத்துக்கான மேடையில்" அதனுடன் சந்தர்ப்பவாத கூட்டணியை வைத்திருந்த ஐக்கிய சோசலிச கட்சி, 8,352 வாக்குகளையே பெற்றுள்ளது. இது 2005ல் பெற்ற 35,425 வாக்குகளோடு பார்க்கும் போது பெரும் வீழ்ச்சியாகும். தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து பிரிந்த எம்.கே. சிவாஜிலிங்கத்துடன் தேர்தல் கூட்டை ஏற்படுத்திக்கொண்ட நவசமசமாஜக் கட்சி, 2005 தேர்தலில் பெற்ற 9,296 வாக்குகளை விட இம்முறை 7,055 வாக்குகளையே பெற்றுள்ளது. பொன்சேகா மற்றும் இராஜபக்ஷ மீது தமிழ் மக்கள் மத்தியில் இருந்த அதிருப்திக்கு அழைப்புவிடுக்க முயற்சித்த சிவாஜிலிங்கம், 9,662 வாக்குகளையே பெற்றார்.

இந்த சந்தர்ப்பவாத போக்குகளைப் போல், அடிநிலையில் உள்ள அரசியல் முன்னெடுப்புகளின் திரிபுபடுத்தப்பட்ட வெளிப்பாடாக தோன்றும் உத்தியோகபூர்வ தேர்தலில் பெறும் வாக்குகளின் எண்ணிக்கையில் தனது வெற்றியையோ அல்லது தனது முன்நோக்கின் மதிப்பையோ சோசலிச சமத்துவக் கட்சி மதிப்பிடுவதில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக, சோசலிச சமத்துவக் கட்சி பெற்ற வாக்குகள், இந்த சந்தர்ப்பத்தில் மட்டுப்படுத்தப்பட்ட, ஒரு நிச்சயமான புள்ளியை, அதாவது தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் தட்டினர் மத்தியிலான தீவிரமயமாதலை சுட்டிக்காட்டுகிறது. சோசலிச சமத்துவக் கட்சிக்கு வாக்களித்தவர்கள் செய்யவேண்டிய மிக முக்கியமான நடவடிக்கை எதுவெனில், எமது வேலைத்திட்டத்தையும் முன்நோக்கையும் கவனமாக படிப்பதோடு அடுத்து வரவுள்ள வர்க்க யுத்தத்திற்கு தேவையான தலைமைத்துவமாக கட்சியை கட்டியெழுப்ப அதில் இணைந்துகொள்ள விண்ணப்பிப்பதுமாகும்.

Read more...

லங்கா இரிதா பத்திரிகை அலுவலகம் சீல் வைக்கப்பட்டுள்ளது.

லுங்கா இரிதா பத்திரிகை சீல் வைக்கப்பட்டுள்ளது. இவ்விடத்தினை உறுதிப்படுத்தியுள்ள பொலிஸ் பேச்சாளர் எஸ்எஸ்பி கருணாரட்ண நீதிமன்ற உத்தரவுக்கமைய குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நுகேகொடையில் உள்ள மேற்படி பத்திரிகையின் அலுவலகம் சீல் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இப்பத்திரிகையின் பிரதம ஆசிரியர் சந்தண சிறிமல்வந்த நேற்று குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் விடுக்கப்பட்டிருந்த அழைப்பாணையை ஏற்று குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு சென்றிருந்தபோது 2 மணித்தியாலயங்களுக்கு மேலாக இடம்பெற்ற விசாரணைகளின் பின்னர் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அவரது சட்டத்தரணிக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.

கைது செய்யப்பட்டுள்ள பத்திரிகை ஆசிரியருடன் நேற்று பிற்பகல் அவ் அலுவலகத்திற்கு சென்றிருந்த குற்றப் புலனாய்வு பிரிவினர் அங்கு சல்லடை போட்டு தேடுதல் நாடாத்தியிருந்தனர்.

Read more...

11 மகளை துஸ்பிரயோகம் செய்த காமுகன் கைது.

பலப்பிட்டிய பிரதேசத்தில் தனது 11 வயது மகளை கடந்த ஒருவருட காலமாக பாலியல் துஸ்பிரயோகம் செய்துவந்த காமுகன் ஒருவனை பொலிஸார் கைது செய்துள்ளனர். 41 வயதுடைய இவனது மனைவி மத்திய கிழக்கு நாடொன்றில் உள்ள நிலையிலேயே இவன் இப்பாதக செயலை செய்து வந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Read more...

இராணுவத்தின் பிரதான அதிகாரியாக மேஜர் ஜெனரல் தயா ரத்தநாயக்க.

மேஜர் ஜெனரல் தயா ரத்நாயக்க இராணுத்தின் பிரதம அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் புலிகளுக்கான புனர்வாழ்வு வேலைத்திட்டங்களுக்கான இயக்குனர் நாயகமாக செயற்பட்டுவந்த அவருக்கு உடனடியாக அமுலுக்கு வரும்படியாக இவ்நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இராணுவத்தினர் கிழக்கை விடுவிக்க மேற்கொண்ட போரின் கட்டளைத் தளபதியாக செயற்பட்ட அவர் ஈழம் போர் நான்கு ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் இராணுவப்பேச்சாளரவும் அவர் செயற்பட்டு வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Read more...

Friday, January 29, 2010

சுவிஸ் ஊடகவியலாளரை வெளியேற இலங்கை உத்தரவு.

சுவிஸ் DRS எனப்படும் வானொலியின் தென்கிழக்காசிய நாடுகளுக்கான விசேட நிருபர் Karin Wenger க்கு வழங்கப்பட்டிருந்த வீசாவை ரத்து செய்த இலங்கை அரசாங்கம் அவரை எதிர்வரும் திங்கட் கிழமை அல்லது அதற்கு முன்னர் நாட்டை விட்டு வெளியேறவேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இலங்கையில் உள்ளூர் ஊடகவியலாளர்களின் சுதந்திரமான நடமாட்டத்திற்கு இலங்கை அரசினால் பங்கம் ஏற்படுத்தப்படுவதாக பல தரப்பாலும் குற்றச்சாட்டப்பட்டுள்ள நிலையில் இவ் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இவரது வீசா ரத்துச் செய்யப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தியுள்ள குடிவரவு-குடியகல்வு பிரதான கட்டுப்பாட்டாளர் பி.வி. ஆபயகோன், வீசா ரத்துச் செய்யப்பட்டதற்கான காரணம் தனக்கு தெரியாது எனவும் அரச தகவல் திணைக்களத்தின் இயக்குனரிடமிருந்து கிடைக்கப்பெற்ற அறிவுறுத்தலுக்கமைய வீசா ரத்துச் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

அத்துடன், இலங்கையில் ஊடகவியலாளர் மாநாடுகளில் கலந்து கொள்வதற்கும் , சுந்திரமான செய்தி சேகரிப்புக்கும் Karin Wenger க்கு வழங்கப்பட்டிருந்த அனுமதிப்பத்திரம் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 17ம் திகதி வரை செல்லுபடியானதாக இருந்தபோதிலும், அது உடனடியாக ரத்துச் செய்யப்பட்டு செல்லுபடியற்றதாக்கப்பட்டுள்ளது.

தற்போது டெல்லியில் நிலைகொண்டுள்ள Karin Wenger, தான் கடைசியாக கலந்து கொண்ட அரச உடகவியலாளர் மாநாடொன்றில் தொடுத்த சௌகரியமில்லாத கேள்விகளே தன்னை வெளியே தள்ளுவதற்கு காரணமாக அமைந்திருக்கும் என தெரிவித்துள்ளார். 30 வயதுடைய Karin Wenger தென்கிழக்காசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் ஊடகத் துறையில் குறிப்பிடத்தக்க அனுபவம் கொண்டவராவார்.

குறிப்பிட்ட ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்ட அவர், நடைபெற்று முடிந்துள்ள தேர்தலில் இடம்பெற்றதாக பேசப்படும் மோசடிகள் தொடர்பாக குடைந்தபோது, அமைச்சர் ஒருவரால் வெளிப்படையாகவே விமர்சிக்கப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றது. இவ்வாறே இலங்கையில் தற்போது ஊடகவியலாளர் ஒருவர் காணாமல் போயும், சிலர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டும் உள்ளதுடன் , சில இணையத்தளங்களை ரெலிகொம் பாவனையாளர்கள் உபயோகிக்க முடியாதவாறு தடுத்தும் வைத்துள்ளனர்.



Read more...

தற்காலிக அரசியல் தஞ்சம் கோரவுள்ளேன் : அரசு தடுத்து நிறுத்துகின்றது. பொன்சேகா.

முன்னாள் இராணுவத் தளபதியும் நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலின் வேட்பாளருமான ஜெனரல் சரத் பொன்சேகா தனக்கு உயிராபத்து அதிகரித்து வருவதாகவும் வெளிநாடொன்றில் தற்காலிக அரசியல் தஞ்சம்கோர திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதன் பொருட்டு அவர் அமெரிக்கா , பிரித்தானியா ஆகிய நாடுகளின் தூதுவர்களை தொடர்பு கொண்டு பேசியதாக அவுஸ்திரேலிய பத்திரிகை ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவிற்குச் செல்வதற்கு நாட்டம் உண்டா என பத்திரிகையாளர் வினவியபோது அவுஸ்திரேலியா வாழ்வதற்கு சிறந்ததோர் இடம் எனவும் அந்நாட்டுக்கான உயரிஸ்தானிகரை தொடர்பு கொள்ளவுள்ளதாகவும் கூறியதுடன் அவர்கள் தனக்கு வீசா வழங்குவார்கள் என்ற நம்பிக்கை உண்டு, ஆனால் தன்மீது எவ்வித குற்றஞ்சாட்டுக்களும் பதிவு செய்யப்படாத நிலையில் அரசாங்கம் தன்னை நாட்டை விட்டு வெளியேறாதவாறு தடுத்து வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவில் பொன்சேகாவின் அரசியல் தஞ்சம் தொடர்பாக அந்நாட்டின் வெளிவிகார அமைச்சரிடம் கேட்கப்பட்டபோது, அப்படி ஒரு கோரிக்கை இதுவரை உரிய முறைப்படி தமக்கு கிடைக்கவில்லை எனக் கூறியுள்ள வெளிவிவகார அமைச்சர், இரண்டு விஷயங்கள் முக்கியமானவை ஒன்று பொன்சேகா சுதந்திரமாக நடமாட அனுமதிக்கப்பட வேண்டும். இரண்டாவது அவருக்குரிய பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

பொன்சேகா கைது செய்யப்படுவது தொடர்பாக முன்னுக்கு பின் முரணான கருத்துக்கள் அரசின் உயர் மட்டத்திலிருந்து வந்து கொண்டிருக்கின்றது. ஜனாதிபதி ராஜபக்ச வை குடும்பத்துடன் தீர்த்துக்கட்ட பொன்சேகா முயன்றதாக அரசினால் குற்றஞ்சுமத்தப்படுகின்றது.

இக்குற்றச்சாட்டு தொடர்பாக கருத்து தெரிவித்த தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலைத்தின் இயக்குனர் லக்ஸ்மன் குலுகல்ல கொழும்பு நகரில் அதிபர் ராஜபக்சேயையும், அவரது குடும்பத்தினரையும் தீர்த்துக்கட்ட சதித்திட்டம் தீட்டப்பட்டு இருந்துள்ளது. இவ்விடயம் ஜெனரல் பொன்சேகா தங்கியிருந்த ஹோட்டல் முன் வைத்து கைது செய்யப்பட்டுள்ள இராணுவத்திலிருந்து தப்பியோடிய 9 பேரிடமும் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளிலிலிருந்து வெளிவந்துள்ளதாகவும், அவர்கள் ஜனாதிபதியை கொழும்பு-காலி வீதியில் அல்லது லேக்கவுஸ் சுற்று வட்டத்தில் வைத்து கொல்ல திட்டமிட்டிருந்தாகவும் தெரிவித்துள்ளதுடன் இச்சதியில் பொன்சேகாவும் சம்பந்தப்பட்டிருப்பதாக ஆதாரங்கள் உள்ளதாகவும் அவர் கைது செய்யப்படலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

ஜெனரல் பொன்சேகா மீதான மேற்படி குற்றச்சாட்டுக்கள் அரசினால் முன்வைக்கப்பட்ட மறுபுறத்தில் அவரது பாதுகாப்பிற்காக வழங்கப்பட்டிருந்த 20 கொமாண்டோக்கள் அடங்கிய 70 இராணுவ வீரர்களும் குண்டு துளைக்காத வாகனங்களும் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஜெனரல் பொன்சேகாவின் பாதுகாப்புக் குறித்து நாட்டின் ஜனாதிபதியிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியபோது, 'பொன்சேகா எனது முன்னாள் இராணுவத் தளபதி அவருக்கு என்ன பிரச்சினை?, பாதுகாப்பு தொடர்பான என்ன பிரச்சினை என்றாலும் அவர் எப்போதும் என்னை தொடர்பு கொண்டு பேசலாம்'' என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அதேநேரம் , இலங்கையில் சட்டம்-ஒழுங்கு கிடையாது. நான் விமான நிலையத்துக்கு செல்வதும் தடுக்கப்பட்டு உள்ளது. நாட்டை விட்டு வெளியே செல்ல எனக்கு அனுமதியளிக்கக் கூடாது என்று விமான நிலைய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு இருக்கிறது. இலங்கையில் எனது உயிருக்கு ஆபத்து இருக்கிறது. என்னையும், எனது பாதுகாவலர்களையும் கைது செய்யவும், பின்னர் என்னை கொலை செய்யவும் திட்டமிட்டு உள்ளனர் என பொன்சேகா தெரிவித்துள்ள கருத்து தொடர்பாக ஜனாதிபதியின் சகோதரரும் அவரது சிரேஸ்ட ஆலோசகருமான பசில் ராஜபக்ச விடம் ஊடகவியலாளர்கள் வினவியபோது, பொன்சேகா மீது ஏராளமான புகார்கள் இருப்பதாகவும், அதற்கு அவர் பதில் சொல்லித்தான் ஆக வேண்டும் என்றும், எனவே இலங்கையை விட்டு வெளியேறக்கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஆனால் அந்த புகார்கள் என்ன என்பதை அவர் தெரிவிக்கவில்லை. அத்துடன் தமிழர் பகுதிகளில் பொன்சேகாவுக்கு அதிக வாக்குகள் கிடைத்தது எப்படி? என்பது பற்றியும் அரசு ஆய்வு செய்யும் என்றும் கூறியுள்ளார்.

இந்நிலையில் நான் நாட்டை விட்டு வெளியேறப்போகிறேன். நான் மக்களை மறக்க மாட்டேன். ஆனால் நான் உயிர்வாழ சில பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கவேண்டி இருக்கிறது. எந்த நாட்டுக்குப் போகப் போகிறேன் என்பது பற்றி நான் கூற முடியாது. எனினும், இலங்கை மக்களுடன் தொடர்பில் இருப்பேன் எனவும் எதிர்வரும் பொது தேர்தலில் அன்னம் சின்னத்தில் போட்டியிடுவேன் எனவும் ஜெனரல் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, சட்ட விரோத செயல்களில் ஈடுபட்ட எவரும் நாட்டை விட்டு வெளியேறிச் செல்ல அனுமதிக்கக்கூடாது என்று விமான நிலைய அதிகாரிகளுக்கு பாதுகாப்பு படையினர் உத்தரவிட்டு உள்ளனர். மேலும் நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் செயல்பட்டதாக நபர்கள் சிலர் பற்றிய தகவல்கள் புலனாய்வுத் துறையினருக்கு வழங்கப்பட்டு உள்ளன.

தேர்தலில் ராணுவத்தின் முன்னாள் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் சட்டவிரோதமான செயல்களில் ஈடுபட்டதாகவும், வெளிநாடுகளில் இருந்து வந்த இலங்கை முன்னாள் ராணுவ அதிகாரிகள் இந்த சதித்திட்டங்களில் ஈடுபட்டதாகவும் அரசின் அதிகாரப்பூர்வ பத்திரிகையில் செய்தி வெளியாகி உள்ளது.

தேர்தல் முடிவடைந்து மூன்று நாட்களில் ஜெனரலுடன் நெருங்கியிருந்த சுமார் 50 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளனர். மேற்படி உயர் மட்டத்தினரின் கருத்துக்களின் அடிப்படையில் ஜெனரல் கைது செய்யப்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் காணப்படுகின்றது. பௌத்த விகாரை ஒன்றில் வைத்து மீட்க்கப்பட்ட ஆயுதங்களுடன் அவருக்கு தொடர்பிருப்பதாக அன்றில் கைது செய்யப்பட்டுள்ள இராணுவத்தினரின் வாக்குமூலங்களை கொண்டு இவர் கைது செய்யப்படலாம் என்றே பெரிதும் நம்பப்படுகின்றது.

Read more...

பொன்சேகாவின் அலுவலகத்திலிருந்த 13 இராணுவத்தினர் கைது.

கணனிகளும் எடுத்துச் செல்லப்பட்டன.
விசேட அதிரடிப்படை மற்றும் சிஐடி யினரால் ஜெனரல் பொன்சேகாவின் அலுவலகம் சோதனைக்குட் படுத்தப்பட்டிருந்தது. அலுவலகத்தை சோதனையிட்ட அதிகாரிகள் பொன்சேகாவின் அலுவலகத்தில் வேலை செய்த 13 இராணுவத்தினரை கைது செய்து விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர்.

சோதனை இடம்பெற்றபோது சுமார் 30 ஓய்வு பெற்ற இராணுவத்தினர் அங்கிருந்துள்ளர். ஓய்வு பெற்ற இராணுத்தினர் எனும்போது, அரச சேவையில் 20 வருடங்கள் சேவை முடிந்தவுடன் ஒருவர் ஓய்வு பெற முடியும். அவ்வாறு ஒய்வு பெறுபவர்கள் தமது 55 வயது வரும் வரை ஓய்வூதியப் பணத்திற்காக காத்திருக்கவேண்டும். அச்சமயத்தில் அவர்கள் வெளிநாடுகளில் அல்லது தனியார் நிறுவனங்களில் தொழில்களை புரிவது இலங்கையில் இன்று நடைமுறையில் உள்ளதென்பது குறிப்பிடத்தக்கதாகும்.

அத்துடன் அலுவலகத்தில் பாவனையில் இருந்த கணனிகள், டிஸ்கட்டுகள் சீல் செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக சிஐடி யினரால் எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினரும் சட்டத்தரணியுமனா சிறிலால் லக்திலக தெரிவித்துள்ளார்.

அலுவலகத்தில் சோதனை இடம்பெற்றுக் கொண்டிருந்தபோது அங்கு ஊடகவியலாளர்கள் சகிதம் சென்றிருந்த பாராளுமன்ற உறுப்பினர்களான மனோ கணேசன், றவுப் ஹக்கீம் , கரு ஜெயசூரியா ஆகியோரை விசேட அதிரடிப் படையினர் அலுவலகத்தினுள் அனுமதித்திருக்க வில்லை என்பது குறிப்பிடத்தாகும்.

Read more...

மகின்த சகோதரயாவுக்கு ஒரு அவசர மடல். - யஹியா வாஸித் –

ஆச்சரியம் - 1 26ம் திகதி காலை எட்டுமணிவரை மக்கள் அமைதியாகவே இருந்தனர். யார், யாருக்கு வோட்டு போடுவது, யார் யாருக்கு வேட்டு வைப்பது என்பது சம்பந்தமாக யாரும் யாரிடமும் பேசிக் கொள்ளவே இல்லை. அரசியல் வாதிகளும், அரசியல் பேச்சாளர்களும், அரசியல் ஆய்வாளர்களும்தான் தொண்டை கிழியவும், பத்திரிகைகள் கிழியவும் கத்திக் கொண்டிருந்தனர். ரோட்டெல்லாம் மகிந்த சகோதரர்களின் கட்டவுட்டுகளும், தோரணங்களும். ஆனால் குசு குசுப்புகளெல்லாம் ஜெனரல்பற்றித்தான். பச்சைக்கட்சியினர் எப்போதும் குசு குசுப்புகளை பரவவிடுவதில் கெட்டிக்காரர்களாச்சே. அதனால் மக்களெல்லாம் கப்சிப். வந்தாலும் வந்து விடுவார்களோ என்ற பயத்தில் மக்கள் அடக்கியே வாசித்தார்கள். ரொம்ப அவதானமாகவும் வாசித்தார்கள். மக்கள் என்ன முட்டாள்களா, தங்கள் பிள்ளைகளை மீண்டும் ஒரு முறை களுவிலேற்ற. அதனால் மொத்த போட்டையும் கண்ணை மூடிக்கொண்டு உங்களுக்கு போட்டுள்ளனர். ஆம் அவர்கள் நாட்டில் அமைதியும்இ சமாதானமும் தொடரவேண்டுமென முடிவெடுத்துள்ளனர்.

ஆச்சரியம் - 2 ஆம் சிங்கள பாமர மக்கள் ரொம்ப கவனமாகவே தங்கள் வாக்குகளை பாவித்தார்கள். 20 வருடங்களாக வடக்கில் இருந்து சவப்பெட்டிகளில் தினமும் பொணம் வருவதும், இந்த சிங்களத்திகளெல்லாம் அழுது சாவதும், புருஸனைத் தொலைத்தவள், பிள்ளையை தொலைத்தவள், அப்பனையே காணத பிள்ளைகள், பிள்ளைகளே என்ன நிறம் எனத்தெரியாமல் செத்த சிங்களவன், என செத்து செத்து மடிந்து உருகிய சிங்கள சமூகத்துக்கு, டோன்ட்வொறி, இனி நீங்கள் மூச்சு விடலாம் என வழிகாட்டிய மவராசனுக்கு வோட்டு போடாமல், வேறு எந்த நாய்க்கு போடுவது என மனதுக்குள் திட்டி விட்டு, தங்கள் வாக்குகளை போட்டுள்ளார்கள். சீனி விலை 110 ரூபா, தேங்காய் விலை 38 ரூபா, வெங்காயம் கிலோ 140 ரூபா, அரிசி விலை 95 ரூபா, மாவு விலை 70 ரூபா, லாம்பெண்ணை போத்தல் 52 ரூபா என்பதில் தொடங்கி, குடும்ப ஆட்சி நடக்கின்றது என்பது வரை நம்ம தொப்பி மாத்திகள் ( சம்பந்தன், மனோ கணேசன், செல்லச்சாமி தொடக்கம் ஜேவிபி, றவுப் ஹக்கிம் வரை ) எவ்வளவோ மந்திரங்கள் ஓதிப்பார்த்தார்கள். யாரும் கேட்கல. அல்லது யாருக்கும் அது ஒரு பொருட்டா தெரியல. அப்பாவி மக்களுக்கு நிம்மதி தேவைப்பட்டது. அதனால்தான் உங்களுக்கு வாக்களித்துள்ளனர்.

ஆச்சரியம் - 3 கட்டுக்கதைகளோ ஏராளம்இ ஏராளம். மே 2009 முள்ளிவாய்க்கால் சமயத்தில் பல கற்பனை மன்னர்கள் சொன்னார்கள். தலைவர் கிட்டத்தட்ட ஒரு ரெண்டாயிரம் பேரோட காட்டுக்குள்ள எறங்கிட்டார். ஒரு 500 பேர் ஓள்றெடி கிழக்குக்கு போயிட்டாங்க, நாளை மறுதினம் இருக்கிது சிங்களத்துக்கு ஆப்பு என்ற அதே கற்பனை மன்னர்கள்இ ஜனவரி 20 களிலும் கதைகளை உலவ விட்டார்கள். ஜெனரல் கிட்டத்தட்ட ருவண்டி லக்சால வெல்லுவார் என. பாவம் பிடித்த முயலையே இன்னும் பிடித்துக் கொண்டிருக்கும் ஆய்வாளர்கள். ஆனால் மக்கள், அப்பாவி மக்கள் ஆணித்தரமாக முடிவெடுத்து உங்களுக்கு வோட்டளித்துள்ளனர். ஆம் அவர்களது கனவுகள் கலையக் கூடாது.

ஆச்சரியம் - 4 26ம் திகதி நள்ளிரவு ( 27 அதிகாலை ) 1.30க்கே ஒரு செய்தி காதைக்கடித்தது. வாட்டசாட்டமான அந்த உயர்ந்த மனிதர், தப்பித்தவறி தான் தோற்றுவிட்டால்இ நாட்டை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரஇ றான்ஸ் ஏசியா ஹோட்டலில் இருந்து கொண்டு திட்டம் தீட்டியதாகவும், ஹோட்டல் சுற்றி வளைக்கப்பட்டுள்ளதாகவும். பின்னர் 27இ 28ம் திகதிகளில் வேறு வேறு செய்திகள் வந்து, கட்டுக்கதைகள் றெக்கைகட்டிப் பறக்க, ஜெனரல் அறிக்கை விட, றவுப் ஹக்கீம் அவர்கள் தேர்தல் ஆணையாளரைக் காணவில்லை என சக்தி ரிவியில் பேட்டி கொடுக்க, 27ம் திகதி பி.ப. 6.30 க்கு தேர்தல் ஆணையாளர் ரிவியில் தோன்றி, அனைத்தும் முடிந்ததுஇ ஒப்பரேஷன் சக்ஸஸ், நோயாளிகளும் நலம். மகிந்த ராஜபக்க்ஷ அவர்கள் ஜனாதிபதியானார் என சொல்லிவிட்டுப் போனார். ஆம் நாடு அமைதியாகவே இருக்கிறது. மக்களும் மிகத் தெளிவாகவே இருக்கின்றனர். ஆம் எங்களுக்கு அமைதி வேண்டும். அத்துடன் ஆரோக்கியமான தலைவன் வேண்டும்.

ஆச்சரியம் – 5 ஆம் மீண்டும் ஒருமுறை, ஆனால் ரொம்ப வித்தியாசமாக முழுக்க முழுக்க சிங்கள பாமர மக்களும், அரச உத்தியோகத்தர்களும் மட்டும் சேர்ந்து, கைகோர்த்து உங்களை ஜனாதிபதி ஆக்கியுள்ளனர். இந்த வெற்றியில் ஒரு கிள்ளுக் கீரையளவுக்கு கூட எங்களுக்கு சம்பந்தமில்லை என்பதை வட, கிழக்கு மக்கள் தெளிவு படுத்தியுள்ளனர். வடக்கில் வசந்தம். கிழக்கில் பாந்தம் என எவ்வளவோ திட்டங்களை மகிந்த ராஜபக்க்ஷ அவர்கள் கொண்டு வந்தும், அது எங்களை வந்து சேரல அல்லது அது எங்களுக்கு தெரியல என்பதுபோல் மக்கள் எதிர்தரப்புக்கு வாக்களித்துள்ளனர். அவர்களுக்கு அரைச்ச மாவையே திரும்ப, திரும்ப அரைத்துக் கொண்டிருக்க பிடிக்கல என்பதை வோட்டு மூலம் தெளிவு படுத்தியுள்ளனர். நான் வடக்கில் இருந்து புதிய தலைவர்கள், புதிய இரத்தங்கள் உருவாகி என்னுடன் பேசவருவதை விரும்புகின்றேன் என திரு.மகின்த ராஜபக்க்ஷ அவர்கள் மேடைகளில் பேசியதை அப்படியே உள்வாங்கி, அதை வெளியே சொன்னால் தங்களையும் தூக்கிவிடுவார்களோ என்ற பயத்தில், வோட்டு மூலம் அம்மக்கள் தெரியப்படுத்தியுள்ளனர். அதனால் அவர்களை, அந்த மக்களை பழிவாங்கவோ, தண்டிக்கவோ முயற்சிக்காமல், தேர்தல் மேடைகளில் நீங்கள் கொடுத்த வாக்குகளை நிறைவேற்றி, இன்னா செய்தாரை ஒறுத்தல், அவர் நாண நன்னயம் செய்துவிடல் என்ற அஸ்திரத்தை பாவிக்க வேண்டும். இனம் என்பது முகம், மொழி என்பது முகவரி என்பதை தெளிவுபட வட-கிழக்கு மக்கள் தெளிவுபடுத்தியுள்ளனர். அது கவனிக்கப்பட வேண்டும். அங்கு புதிய இரத்தங்கள் பாய்ச்சப்பட வேண்டும்.

ஆச்சரியம் - 6 தேர்தல் மேடைகளில் ஏட்டிக்கு போட்டியாக வாக்குறுதிகள் தரப்படுள்ளன. கடந்த 26ம் திகதிவரை மக்களே இன்னாட்டின் மன்னர்களாக இருந்தனர். யாரிடமும் பேச முடியல. எல்லோரும் நெஞ்சை நிமிர்த்தி நடந்து கொண்டிருந்தார்கள். தலைவர்களெல்லாம் மக்களை கும்புடு போட்டுக்கொண்டிருந்தார்கள். 27ம் திகதி உங்களை மவராசனாக்கி, வாக்குறுதிகளை எப்போ நிறைவேற்றப் போகின்றீர்கள் என கண்கொத்திப்பாம்பாக இனி இருக்கப் போகின்றார்கள். ஆம் அடுத்த பாராளுமன்றத் தேர்தலுக்கிடையில் வாக்குறுதிகளில் கணிசமான அளவு நிறைவேற்றப்பட வேண்டும். எங்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் குறைந்த விலைக்கும், எங்கள் நாட்டிலேயே உற்பத்தியாகவும் வசதி செய்து தரப்பட வேண்டும் என, வாக்குகள் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

ஆச்சரியம் – 7 மலையக மக்கள், மலையகத் தலைவர்களுடன் ரொம்ப கோபமாக இருப்பது இத்தேர்தல் மூலம் தெரிகின்றது. சம்பள உயர்வு இழுத்தடிப்பு, மலசல கூட வசதிகள், ஆங்கில பாட நெறி, உயர்பாடசாலைகள், தொழில்கல்வி என்பன இன்னுமே எங்கள் லயன் பிள்ளைகளுக்கு கிடைக்கல என்பதை தொண்டமான்களுக்கு சொல்லியுள்ளனர். அது பாராளுமன்றத் தேர்தல்களுக்கிடையில் நிறைவேற்றப்பட வேண்டும்.

ஆச்சரியம் – 8 குடும்ப ஆட்சி, முதலீட்டாளர்களிடம் பாரிய கொமிஷன் பறிக்கப்படுகின்றது, இந்தியாவுக்கும், சீனாவுக்கும் சிறிலங்காவை விற்கப் போகின்றார்கள் என ஆயிரத்தெட்டு குற்றச் சாட்டுகள் வைக்கப்பட்டும்இ அனைத்தையும் தூக்கி கடாசிவிட்டு, அமெரிக்காவுக்கு எங்களை விற்காதே தலைவா என உங்களை தூக்கி நிறுத்தியுள்ளார்கள். அதனால் அடுத்த நிகழ்வுகளும், நிகழ்ச்சிகளும் பாமர மக்களின் மூன்று வேளை கஞ்சிக்கு வழிவகுக்கப் படவேண்டும்.


ஆச்சரியம் – 9 நாட்டில் பெரிய கலவரம் வரப்போகின்றது, ஜெனரல் குறுப் வென்றாலும், தோத்தாலும் உண்டு இல்லை என பண்ணி விடுவார்கள். அன்றாட தேவைக்குரிய பொருட்களை இப்போதே வாங்கி வைத்துக் கொள்ளுங்கள் என்ற ஒரு வதந்தியும் பரவியது. மக்கள் கண்டுகொள்ளவே இல்லை. அட போங்கப்பா என வதந்திகளை தூக்கிவிசீவிட்டு ஆசுவாசமாக நாடுமுழுக்க திரிகின்றார்கள். அது தொடர வழி செய்யப்பட வேண்டும்.

இத்தேர்தலில் என்றுமில்லாதவாறு உங்களால், பொருளாதார முன்னேற்றம்தான் எனது குறி, தலாவீத வருமானத்தை 2500 யுஎஸ் டொலராக மாற்றுவேன், வெளிநாடுகளுக்கு 2 இலட்சம் பேரை அனுப்புவேன். குறிப்பாக கொரியாவுக்கு ஒரு லட்சம் பேர் அனுப்பப்படுவார்கள், 5 லட்சம் பேருக்கு அரச, தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு வழங்குவேன், வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு அழைப்பு, வெளிநாட்டிலுள்ள எம்மவரை முதலிட அழைப்பு என பாரிய பட்டியலே தந்துள்ளீர்கள். மக்கள் எல்லாம் இனி உங்கள் செயல்பாடுகளை நோக்கப் போகின்றார்கள். ஆம் மிக கவனமாக இனி நோக்குவார்கள்.

ஆம் நாளைய பொழுது எங்களுக்காக உதிக்க வேண்டும், இனி உதிக்கின்ற சூரியன் எங்களுக்காக உதிக்க வேண்டும், அப்படி நீங்கள் உதிக்க வைத்தால்தான் வருகின்ற சந்ததியினர் உங்கள் புகழ் பாடுவார்கள். பாட வைப்பீர்களா ?

( சபாஷ் சரியான போட்டி என்ற தலைப்பில் தேர்தலுக்கு 25 நாட்களுக்கு முன் 01-01-2010ல் நாம் வெளியிட்ட கட்டுரையின் ஒரு பகுதி இங்கே பிரசுரிக்கப்படுகின்றது : இப்படி நாடு பூராவும் ஏட்டிக்குப் போட்டியாகவே மேடைகள் களை கட்டுகின்றது. ஆனால் மக்கள் அடக்கியே வாசிக்கின்றார்கள். ஒன்று ஓடர் போட்டது. மற்றது ஓடரை கெரியவுட் பண்ணியது. ஓடர் போட்டவர் நல்லவரா ? ஓடரை கெரியவுட் பண்ணியவர் வல்லவரா ? மக்களுக்கு மூச்சு முட்டுகின்றது. முடிவுகள் எடுக்க சிரமப்படுகின்றாரகள். ஹோட்டல்கள்இ சலூன்களில் 'இங்கு அரசியல் பேசவேண்டாம் பிளீஸ்' என அட்டைகள் தமிழிலும், சிங்களத்திலும் தொங்குகின்றது.

ஆனால் நிறையப்படித்த, விடயம் புரிந்த பலரும் ஆளும் கட்சிஇ மீண்டும் ஒரு தரம்தான் ஆளட்டுமே என மனம் திறக்கின்றார்கள். குடும்ப ஆட்சிதான் என்றாலும், எப்படி, எப்படி, எங்கெங்கு ஆப்பு வைக்க வேண்டுமோஇ ஆப்பு வைத்துஇ 30 வருட பொருளாதார சீரழிவை நிவிர்த்தி செய்தவர்களாச்சே. நாட்டையும் ஒரு சிங்கப்பூராகவோ, ஹொங்கொங் ஆகவோ மாற்றுவார்கள் அது நிச்சயம் என அடித்துச் சொல்கின்றார்கள்.

இப்போது பிரச்சனைகள் எல்லாம் அரசியல் ஆய்வாளர்களுக்கும்இ சிறுபான்மை கட்சிக்காறர்களுக்கும்தான். ஆம் எப்போதும் பந்து அரசிடம்தான் இருக்கும். நீ முதலில் வீசு பந்தை நாங்கள் முடிவு எடுப்போம் என, புலிகளை மனதில் வைத்துக் கொண்டு அரசை மிரட்டுவார்கள். ஆனால் இம்முறை பந்தை மே 17ல்இ ஆய்வாளர்களையும், சிறுபான்மைக் கட்சிக்காறர்களையும் நோக்கி ஆளும் கட்சி வீசிவிட்டது.

இப்போது பந்தை, விக்கட் கீப்பரை நோக்கி வீசுவதா அல்லது அம்பயரின் மூஞ்சை நோக்கி வீசுவதா எனத் தெரியாமல் மொத்த போளர்களும் முழி முழி என முழித்துக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால் கிட்டத்தட்ட 65 வீதமான மக்கள் மிக மிக தெளிவாகவே இருக்கின்றார்கள். கொழும்பில் இருந்து ஓடர் போடப்பட்டதால்தான்இ முள்ளி வாய்க்காலில்இ அது கெரியவுட் பண்ணப்பட்டது. ஓடர் போடப்படவில்லையானால்இ அது அங்கு கெரியவுட் பண்ணப்பட்டிருக்காது. எனவே ஓடர் போட்டவர்தான் பெஸ்ட், அதை கெரியவுட் பண்ணியவர் ஒரு வேஸ்ட் என அளகாகவே விளக்கம் சொல்கின்றார்கள் )


30-01-2010

Read more...

இலங்கையில் தேர்தல் விதிமுறைகள் மீறலா? விசாரணை நடத்த அமெரிக்கா வலியுறுத்தல்.

"இலங்கையில் தேர்தல் விதிமுறைகள் மீறப்பட்டதாக கூறப்படுவது குறித்து, முழு அளவிலான விசாரணை நடத்த வேண்டும்' என, அமெரிக்கா தெரிவித்துள்ளது. இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையில் அதிபர் தேர்தல் வெற்றிகரமாக நடத்தப்பட்டதற்கும், ராஜபக்ஷே வெற்றி பெற்றதற்கும் அமெரிக்கா சார்பில் வாழ்த்து தெரிவிக்கப்படுகிறது.

அதே நேரத்தில், தேர்தலின்போது வன்முறைகள் நடந்ததாகவும், தேர்தல் விதிமுறைகள் மீறப்பட்டதாகவும் புகார்கள் வெளியாகியுள்ளது, கவலை அளிப்பதாக உள்ளது. குறிப்பாக பிரசாரம், ஓட்டுப் பதிவு, ஓட்டு எண்ணிக்கை ஆகியவற்றின்போது விதிமுறைகள் மீறப்பட்டதாக சில தரப்பினர் புகார் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து, இலங்கை அரசியல் அமைப்பு சட்ட விதிகளுக்கு உட்பட்டு, முழு அளவிலான விசாரணை நடத்த வேண்டும். பிரசாரத்தில் ஈடுபட்டவர்களுக்கும், தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கும் போதிய பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டியது அதிகாரிகளின் கடமை.இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Read more...

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான ஆய்வுக் கூட்டம்.

2010 ஜனாதிபதித் தேர்தலும் அது விட்டுச் செல்லும் பாடங்களும் என்னும் கருப்பொருளில் ஆய்வுக் கூட்டமும் கலந்துரையாடலும் யாழ்பாணத்தில் நடைபெறவுள்ளது. நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தல் இலங்கையின் அரசியலில் ஏற்படுத்தப்போகும் தாக்கங்கள் என்ன? அது சிறுபான்மை மக்களின் அரசியல், சமூக மற்றும் பொருளாதார வாழ்வில் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தலாம்? வடக்கு கிழக்கு உட்பட தமிழ் மக்கள் இந்தத் தேர்தலில் வாக்களித்த விதம் எத்தகைய செய்தியை பறைசாற்றி நிற்கின்றது? இது தென்னிலங்கையில் எத்தகைய மனத் தாக்கங்களை உருவாக்கும்? இத்தேர்தல் வெற்றியின் பின்னர் பெரும்பான்மை சமூகத்தினரின் மனோநிலை எவ்வாறுள்ளது போன்ற பல விடயங்கள் இக்கூட்டத்தில் விவாதத்திற்கு உட்படுத்தப்படவுள்ளன.

ஜனவரி 31ம் திகதி ஞாயிற்றுக் கிழமை மாலை 3 மணிக்கு யாழ். பலநோக்கு கூட்டுறவு சங்க மண்டபத்தில் நடைபெறவுள்ள இக்கூட்டத்தில் இலங்கை ரூபவாகினி கூட்டுத்தாபன நிறைவேற்றதிகாரியும் தென்னிலங்கையில் பிரபல அரசியல் விமர்சகருமாகிய திரு. கருணாரத்ன பரணவிதாரண இங்கு சிறப்புரையாற்றவுள்ளார். மற்றும் யாழ். பல்கலைக்கழக பேரவை உறுப்பினரும் ஹாட்லிக் கல்லுரியின் முன்னாள் அதிபருமான முருகுப்பிள்ளை ஸ்ரீபதி, சட்டத்தரணி செல்வி கோசலை மனோகரன், ஊடகவியலாளர் மனோரஞ்சன், சட்டத்தரணி சஞ்சய் விக்னராஜா ஆகியோரும் உரையாற்றவுள்ளனர்.

குடிமக்கள் குரலுக்கான மேடை என்னும் அமைப்பினர் இக்கூட்டத்தை ஒழுங்கு செய்திருப்பதோடு விஞ்ஞான தொழில்நுட்ப அமைச்சின் யாழ். மாவட்ட இணைப்பாளர். ந. தமிழ் அழகன் இந்நிகழ்விற்குத் தலைமை தாங்குவார்.


Read more...

கூகுளுக்குப் போட்டியாக சீனாவில் 'கூஜி'!

கூகுள் இணையதளம் மற்றும் அதன் நிர்வாகத்தின் கீழ் உள்ள யூடியூப் ஆகியவற்றின் போலியான இணையதளங்கள் சீனாவில் வெளியாகியுள்ளது. கூகுளின் போலி தளத்திற்கு கூஜி என பெயரிடப்பட்டுள்ளது. யூடியூப் இணையதளத்தின் போலிக்கு யூடியூப்சிஎன் என்று பெயரிட்டுள்ளனர்.

யூடியூப் இணையதளம் சீனாவில் கடந்த 2008ம் ஆண்டு தடை செய்யப்பட்டது நினைவிருக்கலாம். கூஜி இணையதளத்தில் கூகுள் நிறுவனம் சீனாவை விட்டு வெளியேறக் கூடாது என்ற கோரிக்கையையும் வைத்துள்ளனர்.

கூஜி என்றால் சீன மொழியில் சகோதரி என்று பொருளாம். கூஜி இணையதளத்தின் லோகோவுக்கு கீழ் இடம் பெற்றுள்ள 'பன்ச் டயலாக்'கில், 'சகோதரிக்காகத்தான் சகோதரன். சகோதரியை இன்னும் நேசிக்கும் சகோதரன்' என்று குத்தலாக குறிப்பிட்டுள்ளனர்.

அதாவது கூகுள் என்பதை சகோதரனாகவும், அவனால் நேசிக்கப்படும் சகோதரியாக கூஜியையும் காட்டுகிறார்களாம். சமீபத்தில் கூகுள் நிறுவனம் சீனாவில் பெரும் சிக்கலை சந்தித்தது. கூகுள் தளத்தை உளவு பார்க்கத் தொடங்கியது சீன அரசு. மேலும், கூகுள் இணையதளத்திற்கு சென்சாரும் விதித்தது. கூகுள் இணையதளத்திற்குள் வைரஸ்களையும் அனுப்பியதால் கடுப்பாகிப் போன கூகுள், தனது அலுவலகங்களை சீனாவிலிருந்து இடம் மாற்றப் போவதாக எச்சரித்தது.

இதையடுத்து சீன அரசு சற்று இறங்கி வந்தது.

இந் நிலையில், தற்போது கூகுளை அப்படியே காப்பி அடித்து போலி சர்ச் என்ஜின் சீனாவில் தொடங்கப்பட்டுள்ளது. கூகுள் இணையதளத்தின் லோகோ மற்றும் பக்கங்கள் அப்படியே டிட்டோவாக கூஜி தளத்தில் உள்ளன.

இதேபோல யூடியூபில் உள்ளதைப் போலவே அப்படியே காப்பி அடித்து, YouTubecn.com இணையதளம் உள்ளது. ஒரிஜினல் யூடியூபில் உள்ள அத்தனையும் அப்படியே இதிலும் இடம் பெறுகிறது. அதேசமயம், சீனாவில் தடை செய்யப்பட்ட யூடியூப் வீடியோக்கள் இதில் கிடைக்கின்றனவாம்.

இந்த இரண்டு இணையதளங்களுமே ஒரே நாளில் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து கலிபோர்னியா- பெர்க்லி பல்கலைக்கழகத்தின் பெர்க்லி சீனா இன்டர்நெட் திட்ட இயக்குநர் ஜியாவோ குயிங் கூறுகையில், இது கூகுள் நிறுவனத்தின் சொத்துரிமைப் பிரச்சனை மற்றும் சீன தணிக்கை பிரசசினை சம்பந்தப்பட்டதாகும்.

இந்த இரண்டு சவால்களையும் புதிதாக தொடங்கப்பட்டுள்ள கூஜி மற்றும் யூடியூப்சிஎன் ஆகியவை சந்தித்தாக வேண்டும். இதிலிருந்து அவர்கள் மீண்டு வருவார்கள் என்று உறுதியாக கூற முடியாது. எனவே இந்த இரு தளங்களும் நீண்ட நாள் நீடிக்கும் என்பதையும் சொல்ல முடியாது என்றார்.

இந்த இரு இணையதளங்களும் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன. இதுவரை இவற்றை தடை செய்யவோ, முடக்கவோ சீன அரசு நடவடிக்கை எதையும் எடுக்காமல் உள்ளது.

சட்டவிரோதமாக செயல்பட்டு வரும் இணையதளங்கள் மீது சீனாவின் தேசிய காப்புரிமை நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆனால் அப்படியே அப்பட்டமாக கூகுள் மற்றும் யூடியூபின் இணையதளங்களை காப்பி அடித்து வெளியாகியுள்ள கூஜி மற்றும் யூடியூப் சிஎன் ஆகியவை குறித்து அது மெளனமாக இருப்பது சர்ச்சையை எழுப்பியுள்ளது.

இதுகுறித்து கூகுள் நிறுவனம் சுருக்கமான கருத்தைத் தெரிவித்துள்ளது. அதன் செய்தித் தொடர்பாளர் ஜெசிகா பவல் கூறுகையில், அந்த இணையதளங்களுக்கும் எங்களுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்பதை மட்டும் சொல்லிக் கொள்கிறோம் என்பதுதான் அந்தக் கருத்து.

சீனாவைச் சேர்ந்த டார்வின் மார்க்கெட்டிங் நிறுவனத்தின் தலைமை செயலதிகாரி ஹாரிங்டன் கூறுகையில், அமெரிக்காவின் சட்டப்படி இதுபோன்ற செயல்களுக்கு வழக்குகள் பாயும். ஆனால் சீனாவில் அப்படி செய்ய வழியில்லை. நமது பிராண்டுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டால் மட்டுமே வழக்குக்குப் போக முடியும் என்றார்.

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹில்லாரி கிளிண்டன் இந்த போலி இணையதளங்கள் குறித்து கவலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், சீனாவின் நடவடிக்கை கவலை தருகிறது. இன்டர்நெட் சுதந்திரத்திற்கு இது பாதிப்பை ஏற்படுத்தும்.

கூகுள் மீதான சீனாவின் கட்டுப்பாடுகள், நெருக்குதல்கள் குறித்து சீன வெளியுறவு அமைச்சருடன் பேசியுள்ளேன். பேச்சுவார்த்தை சுமூகமாக இருந்தது. பிரச்சினை விரைவில் தீரும் என நம்புகிறேன் என்றார்.

போலி பொருட்களை படு அப்பட்டமாக வெளியிட்டு காசு பார்ப்பதில் சீனா பெரிய கில்லாடியாகும். ஏற்கனவே இந்தியாவின் 'பல்சர்' பைக்கை காப்பி அடித்து அப்படியே அதே மாடலில் வெளியிட்டு அதற்கு 'குல்சர்' என்று பெயரிட்டு விற்றவர்கள்தான் சீனாக்காரர்கள்.

ஆனால் உலக அளவில் முன்னோடியாக உள்ள கூகுளை அப்படியே காப்பி அடித்துள்ள அவர்களின் செயல் பலருக்கும்
அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்து அனேகமாக பேஸ்புக்கைக் காப்பி அடித்து ஒரு தளம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது

Read more...

லங்கா இரிதா பத்திரிகை ஆசிரியர் கைது.

லங்கா இரிதா பத்திரிகையின் ஆசிரியர் சந்தன சிறிமல்வத்த கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் அவருக்கு விடுக்கப்பட்டிருந்த அழைப்பாணையை ஏற்று இன்று காலை குற்றப் புலனாய்வுப் பிரிவின் தலைமையகத்திற்கு சென்ற அவரிடம் இரண்டு மணித்தியாலயங்களுக்கு மேலாக விசாரணை மேற்கொண்ட சிஐடி யினர் அவரை தொடர்ந்தும் விசாரிக்கும் பொருட்டு கைது செய்வதாக அவரது சட்டத்தரணிக்கு அறிவித்துள்ளனர்.

Read more...

வன்செயல்களால் அனுராதபுரத்தில் பதட்டநிலை தொடர்கின்றது. .

தேர்தல் வெற்றியை தொடர்ந்து அரச ஆதரவாளர்களால் நாடு பூராக எதிர்கட்சி ஆதரவாளர்கள் மீது வன்செயல்கள் பிரயோகிக்கப்பட்டு வருவதாக செய்திகள் வெளிவந்தவண்ணமுள்ளன. அனுராதபுர மாவட்டத்தில் தம்புட்டுக்கம, ராஜங்கணய பிரதேசங்களில் எதிர்கட்சி ஆதரவாளர்களுக்கு சொந்தமான கடைகள், வீடுகள் பல தேசமாக்கப்பட்டும் , தீவைக்கப்பட்டும் உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றது.

சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மையத்தின் அதிகாரி கீர்த்தி தென்னக்கோன், கடந்த 48 மணிநேரத்தில் நாடுபூராகவும் 50 - 75 வன்செயல்கள் தொடர்பான செய்திகள் தமக்கு கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்:

கலவௌ பிரதேச சபையின் எதிர்கட்சி உறுப்பினர் சுனில் மென்டிஸ், தனது பிரதேச சபைக்குட்பட்ட தமது ஆதரவாளர்களது 30 கடைகளும் வீடுகளும் உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளதுடன், அவர்கள் பீதி காரணமாக ஊர்களை விட்டு ஓடி வெளியிடங்களில் வாழும் நண்பர்கள் , உறவினர்கள் வீடுகளில் தஞ்சம் கோரியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேற்படி குற்றச்சாட்டுக்களை தேர்தல் விடயங்களுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் காமினி நவரட்ண நிராகரித்துள்ளதுடன் , ஒரு சில சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் அவற்றுக்கு எதிரான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார்.

Read more...

அவுட்சோர்சிங் செய்தால் வரிச்சலுகை ரத்து : ஒபாமா எச்சரிக்கையால் இந்தியாவுக்கு பாதகம்.

பயங்கரவாதத்தின் மீதான போர் முடிந்தது... இனி பொருளாதார மந்தத்துக்கு எதிரான போர் ஆரம்பம் என்ற முழக்கத்துடன் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதுதான் பிபிஓ பணிகளை மேற்கொள்ளும் நிறுவனங்களுக்கான வரிச்சலுகை ரத்து.

இதனைக் கேட்ட மாத்திரத்தில், 'இது பொருளாதார மந்தத்துக்கு எதிரான போரல்ல... இந்திய ஐடி துறைக்கு எதிரான போர்தான்' என அலற ஆரம்பித்துள்ளனர்.
பெருமளவு அவுட் ஸோர்ஸிங் பணி ஆர்டர்களை மட்டுமே நம்பியுள்ள இந்திய ஐடி துறைக்கு ஒபாமாவின் இந்த புதிய அறிவிப்பு, சாதாரண அடியல்ல... பேரிடி.

சர்வதேச தேக்க நிலை காரணமாக பல தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் ஆள்குறைப்பு மற்றும் சம்பள குறைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டன. இந்த நிலையே இன்னும் சீராகவில்லை. இப்போதுதான் சில ஐடி நிறுவனங்கள் புதிய பணியாளர்களை சேர்க்கலாமா என்ற யோசனையில் இறங்கியிருந்தன.

இந்நிலையில் அதிபர் பராக் ஒபாமா தனது ஓராண்டு பதவி நிறைவை ஒட்டி, அமெரிக்க நாடாளுமன்றக் கூட்டுக் கூட்டதில் நிகழ்த்திய உரையில் பிபிஓ பணிகளை மேற்கொள்ளும் நிறுவனங்களுக்கு வரிச் சலுகை அடியோடு ரத்து செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.

அமெரிக்க நிறுவனங்களுக்காக பிபிஓ பணிகளை மேற்கொள்ளும் இந்திய நிறுவனங்கள் இதனால் பாதிக்கப்படும். காப்பீடு, வங்கித் துறை, மெடிக்கல் டிரான்ஸ்கிரிப்ஷன் போன்ற பணிகளை பிபிஓ முறையில் நிறைவேற்றும் நிறுவனங்களுக்கு வேலை வாய்ப்புகள் பெருமளவு குறையும்.

அமெரிக்காவில் உள்ள இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை அளிக்க வேண்டும் என்பதற்காகவே வரிச் சலுகை ரத்து செய்யப்படுகிறது என்று ஒபாமா தெரிவித்துள்ளார். தனது உரையில் ஒபாமா மேலும் கூறியுள்ளதாவது:

"அமெரிக்காவில் வேலையின்றி தவிப்பவர்களுக்கு உதவ வேண்டியது அரசின் கடமை. எனவே வேலைவாய்ப்பு மசோதா மூலம் இளைஞர்களுக்கு வேலை கிடைக்க அரசு தீவிரமாக உள்ளது. இதைப் போல மேலும் சில பரிந்துரைகளை செனட் சபை அளிக்கலாம்.

2010ம் ஆண்டில் அரசின் முன்னுள்ள பிரதான பிரச்னைகளில் முக்கியமானது வேலை வாய்ப்பை உருவாக்குவதே ஆகும்.

புதிய வேலைவாய்ப்பு மசோதா மூலம் வால் ஸ்டிரீட்டில் உள்ள வங்கிகள் திரும்பச் செலுத்திய 3,000 கோடி டாலர் தொகையைக் கொண்டு சமுதாய வங்கிகள் உருவாக்கப்பட்டு சிறு வணிகத்துக்கு கடன் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் வர்த்தகத்தை பிரதானமாகக் கொண்டே புதிய மசோதா அமையும். அத்துடன் அரசும் வர்த்தகம் பெறுக தேவையான உதவிகளை அளிக்கும். இதன் மூலம் ஏராளமானோர்க்கு வேலை வாய்ப்புக் கிடைக்கும்.

மனித வள மேம்பாடு மற்றும் கல்வியில் அதிக முதலீடு செய்ய அரசு தீவிரமாக உள்ளது.
தற்போது வழங்கப்படும் உயர்நிலைப் பள்ளி கல்வியானது வேலை வாய்ப்பைப் பெறுவதற்கானதாக அமையவில்லை. அனைவரும் கல்லூரி படிப்பைத் தொடரும் வகையில் அளிக்க அரசு முயன்றுள்ளது. மக்கள் செலுத்தும் வரிப் பணம் வங்கிகளுக்கு மானியமாக அளிக்கப்பட்டு அது மாணவர்களுக்கு கல்விக் கடனாக வழங்கப்பட உள்ளது.
அடுத்த 5 ஆண்டுகளில் அமெரிக்காவின் ஏற்றுமதியை இரட்டிப்பாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

போட்டியாக மாறும் இந்தியாவும், சீனாவும்...

நமது வேலைகள் பிற நாடுகளுக்குச் செல்வதால் நமது இளைஞர்கள் வேலையில்லாமல் உட்கார்ந்திருக்கிறார்கள். இது அவர்களைப் பாதித்துள்ளது. அரசையும் இது பாதிக்கிறது. நமது உதவியை அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

அரசு எடுத்து வந்த தொடர்ச்சியான நடவடிக்கைகள் காரணமாக இன்று 20 லட்சம் அமெரிக்கர்கள் வேலையில் அமர்ந்துள்ளனர். இல்லாவிட்டால் இவர்கள் அனைவரும் வேலையில்லாதோர் பட்டியிலேயே நீடித்திருப்பார்கள்.

பொருளாதார மறு சீரமைப்பில் நமக்கு கடும் போட்டியாக மாறி வருகின்றன இந்தியாவும், சீனாவும். இன்னும் சொல்லப் போனால் நம்மை விட வேகமாக அவை இரண்டும் முன்னேறி வருகின்றன. நமக்கு ஒரு படி மேலான வேகத்தில் அவை முன்னேறிக் கொண்டிருக்கின்றன.

பொருளாதார சக்தியாக முதலிடத்தில் நாம் இன்று இருக்கிறோம். ஆனால் சீனா, இந்தியா ரூபத்தில் இதற்கு மிரட்டல் வந்து கொண்டுள்ளது. இரண்டாவது இடத்திற்கு தள்ளப்படுவதை அமெரிக்கா விரும்பவில்லை.

எனது நமது பிரச்சினைகளை சற்று கவனத்துடன் கருத்தில் கொண்டு நாம் நமது இடத்தை தக்க வைப்பதோடு மேலும் மேம்பட முயற்சிக்க வேண்டும். நம்மை ஆட்டுவித்து வந்த பொருளாதார மந்த நிலை தற்போது விலகியுள்ளது. எனவே நாம் மேலும் வேகமாக முன்னேற நடவடிக்கைகளை எடுத்தாக வேண்டும் என்றார் ஒபாமா.

ஐடி பங்களிப்பு 5.8 சதவீதம்!:

உலகிலேயே அதிக அளவில் அவுட்ஸோர்ஸிங் பணியை மேற்கொள்ளும் நாடாக இந்தியா விளங்குகிறது.

2008-09ம் ஆண்டில் இந்தியாவின் ஒட்டுமொத்த உற்பத்தியில் தகவல் தொழில்நுட்பத் துறையின் பங்கு 5.8 சதவீதமாகும். 1997-98ம் நிதியாண்டில் இது 1.2 சதவீதமாகத்தான் இருந்தது.

அமெரிக்க நிறுவனங்கள் செலவைக் குறைப்பதற்காக பணிகளை வேறு நாடுகளுக்குக் கொண்டு சென்றன. இதில் ஆங்கிலப் புலமை மிகுந்த இந்தியா உள்ளிட்ட நாடுகளில் தகவல் தொழில்நுட்பம் பெற்றவர்களின் விகிதம் அதிகமாக இருந்ததால் இங்கு அதிக அளவில் பணிகள் ஒப்படைக்கப்பட்டன.

ஏற்கெனவே பல்வேறு குடியேற்றக் கட்டுப்பாடுகளால் இந்திய தொழிலாளர்களுக்கு அமெரிக்காவில் வாய்ப்பு இல்லாத நிலை உருவாக்கப்பட்டது. இப்போது அவுட்ஸோர்ஸிங் பணிகளுக்கும் ஆபத்து வந்துள்ளது.

Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com